தோழர் ஞானி தன் வாழ்க்கைப் பயணம் பற்றியும் சிந்தனைப் பயணம் பற்றியும் ஒருசேரத் தொகுத்து அளித்துள்ள சிறப்பான குறுந்தொகுப்பு "ஞானி 79".

kovai gnaniஎண்பது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர், தம்முடைய மார்க்சிய பயணத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும், அவருக்கு விதைகளாகவும் உரமாகவும் அமைந்த சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் நினைவுகூறும் அரிய தொகுப்பு இது. குறிப்பாக, தமது மார்க்சிய ஆசான்களில் ஒருவரான தோழர் எஸ்.என்.நாகராசனின் சிந்தனைத் தடத்தை சிறப்பாக பதிவு செய்து அவருக்கு பெருமைச் சேர்த்திருக்கிறது இக்குறு நூல்!

தமிழ்/இந்தியச் சமூகம் எதிர்கொண்டுவரும் சிக்கல்கள், மார்க்சிய இயக்கம் சந்தித்துள்ள நெருக்கடிகள் ஆகியவற்றின் பின்னணியில் சமகால சமூக மாற்ற நீரோட்டத்தில் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை மார்க்சியம் வழி உள் வாங்கிக் கொள்ள வேண்டியதன் தேவையை அழுத்தமாக முன்வைக்கிறது "ஞானி 79".

வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை தமிழ் இலக்கியங்களில் காட்சியாகவும் சாட்சியாகவும் அமைந்துள்ள சமதர்ம நோக்கினூடே நமது மண்ணிக்கேற்ற மார்க்சியம் கால்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது இந்நூல்.

மார்க்சியத்தின் கோவைக் குரல் என்னும் வகையில் கோவை நகர தொழிலாளிகளின் போராட்டங்களினூடே இலக்கியவாதிகளும் சிந்தனையாளர்களும் "வானம்பாடி"களாகவும், "புதிய தலைமுறை"யினராகவும் பரிணமித்து, பலப் "பரிமாண"ங்களோடு "நிகழ்"த்திய "தமிழ் நேய" மார்க்சியப் பயணத்தை இந்நூல் அழகாக தொகுத்திருக்கிறது.

சுருங்கக் கூறின் சமதர்மத்தை நோக்கிய தமிழ் தேசியத்திற்கான ஓர் அறிக்கையாக இந்த தொகுப்பு அமைந்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

இதனை வெளியிட்ட "தமிழோசை" பதிப்பகத்தைச் சேர்ந்த தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ஜவகரை எவ்வாறு பாராட்டினாலும் தகும்.

இத்தொகுப்பில் ஞானியோடு அவரது துணைவியார் இந்திரா அவர்கள் வாஞ்சையோடு இணைந்து நிற்கும் காட்சி நெகிழவைக்கிறது.

பின் அட்டையில் சுனாமிக்கு சில நாட்களுக்கு முன் கொந்தளித்து எழுகின்ற கடலைகளை நோக்கி ஞானி நிற்கும் காட்சியை ஞானியின் மகன் பாரி மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். இது நூலைத் தாண்டிய பல செய்திகளை பறைச்சாற்றுகிறது.

நூலின் இறுதியில் தோழர் ஞானியின் நூல் பட்டியல் ஒன்றை இணைத்திருக்கலாம். இது தோழர் ஞானியுடன் ஆழமாகவும் விரிவாகவும் பயணிக்க விரும்புவர்களுக்கு ஓர் உடனடி உதவியாக இருந்திருக்கும்.

ஞானியின் விரிவான பயணத்தில் அவரோடும் அவருடைய ஆசான் எஸ்.என். நாகராசன் அவர்களோடும் இங்கும் அங்குமாக பயணித்த மாணவன் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.

- பொன்.சந்திரன்

Pin It