sappe - Lakshmanan's book

இந்நூல் லட்சுமணனின் தனித்துவமான இரண்டாவது படைப்பு. இவரின் முதல் படைப்பான ஒடியன் முதன் முறையாக இருளர் பழங்குடிகளின் மொழியில் எழுதப்பட்ட கவிதைத்தொகுப்பாகும். அந்தக் கவிதைகளில் வெளிப்பட்ட பழங்குடிஉவமைசார் அரசியல் மூலமாக தமிழ்க் கவிதை உலகின் கவனத்தை பெற்றவர்.

சப்த கொகாலு என்ற இந்த படைப்பு பழங்குடிகளின் பாடல்களைத் தொகுத்து அந்தப் பாடல்களுக்கு உயிர்ப்புமிக்க புனைவுகதைகளை படைத்துள்ளார். மலை இருளர்களின் பாடல்களைத் தொகுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. பழங்குடிகளிடம் அரிதாகவே கதை சொல்லும் மரபு உள்ளது. ஒரு நெடிய பயணத்தின் மூலமாக அம்மக்களுடன் பயணிக்காத போது அவர்களின் பாடலுலகை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால் கோவையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் இருளர்மக்களுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து செயல்படுபவர் என்ற முறையில் இம்மக்களின் பாடல்களை கடுமையான முயற்சியின் வழியாக கவிஞர் லட்சுமணனால் தொகுக்க முடிந்துள்ளது. இந்த உழைப்பு மிகுந்த மரியாதைக்குரிய ஒன்றாகும்.

பழங்குடி மக்களின் மொழிகள் ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்க்கை அனுபவங்களை சேமித்து வைத்துள்ள புதையல் போன்ற ஒன்றாக உள்ளது. இப்பாடல்களின் சுவடுகளைப் பின்பற்றி நாம் அவர்களின் கடந்தகால வரலாற்றுக்குள் நுழையமுடியும். இம்மக்களின் பாடல்கள் அவர்களின் செழுமைமிக்க பண்பாட்டுக் கூறுகளையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது.

இப்பாடல்களில் வெளிப்படும் ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொரு பழங்குடிக்கும் தனித்துவமானது. தாங்களே உருவாக்கிய இசைக்கருவிகளை இசைத்து எழுப்பும் பழங்குடிபாடலானது ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச்செல்லும் பெரும்கொடையாக உள்ளது. எந்த குருநாதனும் இன்றி சுயம்பாக எழுச்சிபெறும் கலைகள் பழங்குடிசமூகத்தில் உள்ளன.

பழங்குடி மக்களின் வாழ்வில் இந்த இசை பிரிக்கமுடியாத ஒன்று. அவர்களின் பிறப்பு கொண்டாட்டங்கள், வழிபாடுகள், திருமணம், பிள்ளைப்பேறு, இறப்பு என்று எல்லா மனிதர்களும் எதிர்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் இசையும் நடனமும் இம்மக்களை வழிநடத்துகிறது. அவர்களது நிலங்களில் வித்துகள் தூவப்படும் காலங்களிலும் தங்கள் வித்துகளை சேகரித்து பாதுகாத்து சந்ததியை வளமாக்கும் சடங்குகளிலும் கூட பாடல்கள் இசைக்கப்படுகின்றன.

இந்த முறையானது உலகின் பல்வேறு பழங்குடிகளுக்கும் பொதுவானவையாக கருதவேண்டியுள்ளது. இந்த இசைக்கு யாரும் காப்புரிமை பெறமுடியாது. இது சமூகத்தின் பொதுச்சொத்து. படைப்பாற்ற‌ல்மிக்க மனிதர்கள் தங்களின் பாடல்களை இசைக்கின்றனர். தலைமுறை அதனை கடந்து பரிமாறிக்கொள்கிறது.

இந்தப் பாடல்களின் படைப்பாளிகளான இருளர்கள் மலையின் மைந்தர்கள். இருள்போன்ற கரிய தங்களின் நிறங்களின்மீதும் நிலத்தின்மீதும் கர்வம் கொண்டவர்கள். இது ஆப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக பழங்குடிகள் அதிகம் வாழும் பூமியாகும். இந்த நாடுமுழுவதும் பழங்குடிகள் பரந்து வியாபித்துள்ள‌னர். இவர்களின் அப்பழுக்கற்ற‌ வாழ்க்கைமீது இந்த நாகரீக சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு போரினை தொடுத்துள்ளது.

அம்மக்களை அவர்களின் விளைநிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி, அம்மக்களின் பண்பாட்டுக்கூறுகளை அழித்தொழித்து அவர்களை பிச்சைக்காரர்களாக்க நிகழும் அந்த வன்முறையின் அளவானது அதிகப்படியானது. உச்சநீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் வரலாறு நெடுகிலும் இம்மக்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறியது.

lakshmananதுரோணாச்சாரியர்கள் ஏகலைவ‌ன் என்ற பழங்குடி இளைஞனின் கட்டைவிரலினை வெட்டித்தர வேண்டியதிலிருந்து அந்த அநீதி துவக்கமாகிவிட்டதாகவும், இந்தியாவின் 92 சதவீத மக்கள் வந்தேறிகளென்றும் பழங்குடிமக்களே இந்நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் என்றும் கூறியது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் விரட்டியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் மெளன சாட்சியங்களாக நின்று காண்கிறோம்.

இருளர்கள் ஆதிப்பழங்குடியின் வரையறைக்குள் அடங்கக்கூடியவர்கள். மானுடவியலாள‌ர் அகபிட் டிசியின் வரையறைப்படி இயற்கைசார்ந்த ஆன்மீக தொடர்பையும் ஞானத்தையும் பெற்ற மனிதர்கள்; தங்களின் மூதாதையர்களை போற்றுபவர்கள்; பாலின சமத்துவத்தை கடைபிடிக்கும் சமூகத்தைச் சார்ந்தவர்கள்; விருந்தோம்பல் பண்பினைக் கொண்டவர்கள்; தோழமையைப் பகிர்ந்துகொள்ளும் தன்மை உடையவர்கள்; இனம்சார்ந்த பற்றுகொண்ட மக்கள்; முடிவெடிப்பதில் சன்நாயகத்தன்மையும் பிற இனத்தவர்களை வெறுக்காத தன்மையும் கொண்ட‌வர்கள்; கடும் உழைப்பையும் படைப்பாற்றலையும் எளிய நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்கள் மற்றும் மண்ணோடும் வனத்தோடும் பிணைப்பு கொண்டவர்கள்; மூதாதையர் வழியே விடுதலை வேட்கை கொண்டவர்கள்; மேலும் தங்களது வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிற கொண்டாட்டங்களையும் எதிர்காலம் குறித்து நிறைய நம்பிக்கையும் கொண்ட மக்கள்; இவற்றை பழங்குடி சமூகத்தின் கூறுகளாக வகைப்படுத்துகின்றார். லட்சுமணனின் புனைவுகளில் படைக்கப்பட்ட மனிதர்கள் இத்தகைய பண்பு நெறிகளை பெற்றவர்கள்; கூடவே தங்களின் பாரம்பரியம் சார்ந்த மதிப்பீடுகளையும் எவருக்கும் தீங்கு நினைக்காத வாழ்க்கை நெறியினையும் கொண்டவர்கள்.

இந்த அறம்சார்ந்த பண்பாடே காட்டுமிராண்டிகள் என ஏளனப்படுத்தப்பட்டு அநாகரீக மனிதர்கள் என அடையாளப்படுத்தப்படும் நிலைக்கு பழங்குடிகளை நம் சமூகம் தள்ளியுள்ளது.

பழங்குடிகளின் நிலமும் பெண்களும் வந்தவர்களின் சுரண்டலுக்கு தேவைப்படுகிறது. நாம் தொடர்ந்து இம்மக்களின் மீது ஏதேனும் ஒரு வன்முறையை தொடுக்க காரணமாயுள்ளோம்.

இருளர் பழங்குடிகளை இலங்கையின் வேடர் பழங்குடிகளோடும் தொடர்புபடுத்தி பார்க்கின்றனர் ஆய்வாளர்கள். ஆதி திராவிட பழங்குடிகளாக மத்திய இந்தியாவின் கோண்டு பழங்குடிகளையும் சுமத்திரா தீவுகளின் பிரன் பழங்குடிகளையும் ஆஸ்திரேலியாவின் அபார்ஜீனிகளையும் வகைப்படுத்துகின்றனர். இருளர்களும் அவர்களுடன் தொடர்புடைய ஆதி திராவிட பழங்குடிகளே.

பழங்குடிகளின் ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றினையும் மொழியினையும் பாதுகாக்க அரசுகள் முன்வராத சூழலில் கவிஞர் லட்சுமணனின் இரண்டாவது படைப்பு அதுபோன்ற முயற்சியில் பனையாக உயர்ந்து நிற்கிறது. இந்த ஒற்றைப்பனையானது எல்லா அலைகளையும் தாண்டி நிற்கும் என்று நம்புவதைத் தவிர நமக்கு வேறெதும் இல்லை.

பழங்குடி மொழிகளை பாதுகாக்க முயலாத அரசுகள் தான் ஒப்புக்கொண்ட வரலாற்று அநீதியினை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றன. பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் ஆதிமக்களின் மேல் நிகழ்த்தப்படுகிற வன்மங்களை உள் வாங்க கொஞ்சம் நேர்மையும் நிறைய மனிதமும் வாசகர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த ஊமைப்பெண் எழுப்பும் குழலின் இசை நம்மால் எழுப்பமுடியாத ஆன்மீக மனத்தை எழுப்பி நம்மை உயிர்ப்பிக்கும் என நம்புகிறேன்.

Pin It