மழை, வெயில், காற்று, மிருகம், காடு, மலை என்ற இயற்கையின் கெடுபிடிகளிலிருந்து விடுதலை வழங்கியதால் ‘வீடு’ என்ற பெயர் வந்தது என்பார்கள். ஆனால் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து வீட்டை விட்டு வெளியேறுவதில்தான் நான் கவனமாக இருந்திருக்கிறேன். 65-வயது முடிந்து விட்டது. இப்போதும் கூட, ஒரு சின்ன 'நொண்டிச் சாக்கு' கிடைத்தாலும் கூட அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு கையும் பையுமாக வண்டி ஏறிவிடுவேன். பெருவெளியில் சிறு எறும்பாக உணர்கிற கணங்களுக்காக எனக்குள் எப்பொழுதும் ஒரு தாகம் இருந்துகொண்டே இருக்கிறது போலும்.

இப்படித்தான் கல்லூரி ஆசிரியனான எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம், பத்து நாளென்று மனைவி, பிள்ளை குட்டிகளை எல்லாம் விட்டுவிட்டு விடைத்தாள் திருத்தப் போகிறேன் என்ற சாக்கில் வீட்டைவிட்டு வெளியேறுகிற பொன்னான வாய்ப்பு ஆண்டுக்கொருமுறை வந்து வாய்த்தது. வீட்டிலிருந்து திருத்தி அனுப்புவது பல ஊழலுக்கும் காலதாமதத்திற்கும் இடமளிக்கிறது என்று அறிய நேர்ந்த சென்னைப் பல்கலைக்கழகம், எல்லா ஆசிரியர்களையும் “ஓரிடத்திற்கு” வரவழைத்து விடைத்தாள் திருத்தும் பணியை முதன்முதலாக எழுபதுகளில் அறிமுகப்படுத்தியது. ஊழல் ஒழிக்கப்பட்டதோ என்னமோ ஆனால் அது எனக்கு உலகிலேயே மிகச் சிறந்த முறையாகப் பட்டது; வீட்டை மறந்து இருக்கிறோம் என்பதையும் தாண்டி, அந்தப் பத்து நாட்களும் நமது சிந்தனை அலைவரிசையோடு ஒத்து வருகிற ஆசிரியர்களோடு நடந்தும், படுத்தும், அமர்ந்தும் இரவெல்லாம் விடிய விடிய அரசியல் குறித்தும், கவிதை குறித்தும், வாழ்வின் தீராத புதிர் குறித்தும் சிறிதும் மனம் சலிக்காமல் உரையாடிக் கொண்டே கிடக்கலாம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! வாய்ப்பு!!

palamalai 430இப்படி ஒரு அரிய சந்தர்ப்பத்தில்தான் பழமலய் கிடைத்தார்; அப்பொழுது எங்கள் கல்லூரியும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இருந்தது; 1985-இல்தான் இன்றைக்கு இருக்கும் இந்தப் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம் என்ற நடுவண் நிறுவனம் வந்து சேர்ந்தது.

பழமலய் எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் “நான் இருக்கிறேன்” என்று தனித்துத் தெரிவார்; அந்தக் ‘குறுந்தாடி’ மட்டுமல்ல மனிதர்களிடம் அவர் உறவாடும் பாங்கே உன்னதமாய் உள்ளத்தில் இறங்கும்; கொடுத்த விடைத்தாள்களைச் சீக்கிரம் முடித்துவிட்டு இடத்தைக் காலி பண்ணத் துடியாய்த் துடிக்கும் ஆசிரியர் கூட்டத்தின் நடுவே, இவர் மட்டும் தனக்கான விடைத்தாள் கட்டை வாங்கித் தனக்கான இடத்தில் வைத்துவிட்டு, ஒவ்வொரு ஆசிரியர் இருக்கைக்கும் போய் முடிந்த அளவு உரையாடும் பழக்கத்தை மேற்கொள்வார்; அந்த ஆள் முன்பின் தெரிந்திருக்க வேண்டும் என்பது நம்மைப் போன்றவர்களுக்குத்தான்; அவர் விசாரிப்பும் பேச்சும் தலையாட்டும் நக்கல் சிரிப்பும் அறியும் ஆவலும் யாரையும் அவரோடு கட்டிப் போட்டுவிடும்; அப்படிக் கட்டிப் போட்டவர்களுள் நானும் ஒருவன்.

இரண்டு மூன்று நாள் கிண்டலும் கேலியும் சிரிப்புமாய் உரையாடிய பிறகு, விசித்திரமான என் பெயரின் சரித்திரத்தையும் (இதைத் தன் கவிதை ஒன்றில் பதிவு செய்துள்ளார்.) கேட்டறிந்த மறுநாள், தனது தோளில் எப்பொழுதும் தொங்கும் ‘ஜோல்னா’ பையிலிருந்து ‘ஒரு தாள் கட்டை’ எடுத்து என் முன் வைத்தார்; “இதைப் படித்துப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்; எழுத்து வடிவில் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்; திருத்திக் கொள்வேன்”. சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற பழமலய், ரொம்பவும் தயங்கிக் கஷ்டப்பட்டுப் பேசுவது போலப் பேசியது வித்தியாசமாக இருந்தது; இதை என்றுதான் சொன்னாரே தவிர, “இந்தக் கவிதைகளை” என்றுகூடச் சொல்லவில்லை. இத்தகைய ஒரு புதிய எழுத்துமுறையைக் ‘கவிதை’ என்று சொல்லலாமா என்ற சந்தேகம் அவருக்குள்ளும் இருந்தது போலும். அந்த மனிதர்மேல் ஏற்பட்ட ஏகப்பட்ட ஆச்சரியம் கலந்த அன்பும் மரியாதையும் அன்று இரவே அந்த எழுத்துக்களை வாசிக்கும்படி உட்காரச் செய்துவிட்டன. பெரும்பாலான வாத்தியார்களைப் பாடப் புத்தகத்திற்கே வெளியே வாசிக்க வைப்பது என்பது அப்படியொன்றும் எளிய காரியமல்ல. பழமலய் கவிதை வாசிக்க வைத்தது.

பேசும் பொருளில் மட்டுமல்ல, சொல்லும் முறையிலும் முற்றிலும் வேறொரு உலகம். பாரதியார், பாரதிதாசன், மேத்தா, அப்துல் ரகுமான், மீரா, சிற்பி என்று பழக்கப்பட்டிருந்த என் கவிதை வாசிப்புத் தளத்திலிருந்து முற்றிலும் வேறான, வித்தியாசங்களால் நிறைந்த புதிய வார்த்தை உலகத்திற்குள் தூக்கிப் போட்டு விட்டது போல் உணர்ந்தேன். ஆனால் உண்மை என்னவென்றால், அந்த வார்த்தை உலகம் பழமலய் போலவே தாய்க் கிராமத்திலிருந்து நகரத்திற்குள் புலம்பெயர்ந்து வாழ நேர்ந்த என்னைப் போன்றவர்களுக்குள் வெளியேற வார்த்தை கிடைக்காமல் ஏற்கெனவே மௌனமாக வெந்துகொண்டு கிடக்கிற வெப்ப உலகம்தான். எனவே வாசிக்க வாசிக்க என்னையே நான் எழுதிக்கொண்டே போவதுபோல உணர்ந்தேன். வாசிப்பதையே எழுதுவதாக உணர்ந்த முதல் அனுபவம் தந்த பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. வாசிப்பு நிகழும்போது, நமக்குள் தேடலும் கூடவே நிகழ்கிறது; எதைத் தேடுகிறோம் என்று பார்த்தால் நம்மைத்தான் நாம் தேடுகிறோம்; நமக்குள் இல்லாததை நாம் எங்கும் தேடிப் பெற முடியாது; பெறுவது என்பது நமக்குள் இருப்பதைப் பெறுவதுதான்; பழமலய் கவிதையில் என்னை நானே பெற்றுக்கொண்டேன்;

“அம்மா, உன் வறுமை
வாழைப்பழத்தின்
தோலும் நாங்கள் எறிந்தால்தான்”

என்று தொடங்கும் ‘அம்மா’ பற்றிய அந்த முதல் கவிதையே, எனது உள்ளத்தில் மண்டி, வார்த்தை கிடைக்காமல் தவித்துக் கிடந்த பல நினைவுகளுக்கு வார்த்தை வழங்கி வெளியே இழுத்துப் போட்டு ஏங்கி ஏங்கித் தனிமையில் அழ வைத்தது.

“அன்னை உன் தாலாட்டும்
அழுகையால் முடியும்
ஊரில், இழவு என்றால்
ஒப்பாரி வைக்க ஓடுவாய்”

அப்படியே எனது அம்மா! விவரம் தெரிந்த நாளிலிருந்தே அம்மாவை மேலாடை அணியாத வெள்ளைச்சீலைக்காரியாகத்தான் பார்த்திருக்கிறேன். தந்தைக்கு எனது வாழ்வு வெளியில் ஒரு சிறிதும் இடமில்லை; எல்லாம் அம்மாதான்; படிப்பு உயர உயர, அம்மாவிற்கு நினைவுகளால் வண்ணச்சேலை உடுத்திப் பார்த்திருக்கிறேன். அம்மா மட்டுமா? அம்மாவுடைய அம்மாவும் இளமையிலேயே வெள்ளைச் சேலை உடுத்தியவர்தான். அம்மா கைப்பிள்ளையாக இருக்கும்போதே அம்மாவின் ‘ஐயா’ பனைமரத்தின் உச்சியிலிருந்து விழுந்து, இடையில் செருகி இருந்த பாளை அரிவாள் இடுப்பில் இறங்கி அந்த இடத்திலேயே ‘துள்ளத் துடிக்க’ இறந்து போனாராம். ஆச்சி எனக்குத் தெரிந்த அந்த வயசிலேயும் அழகாய் இருப்பார். என் வீட்டுச் சூழலே இப்படித் துக்கம் காக்கிற சூழல்; எனவேதான்,

“கீழைக்காட்டு வேம்பு கசந்தது
அம்மா சோகம் கேட்டுக் கேட்டுதான்”
என்ற பழமலய்யின் வரிகள், நான் எழுதிய வரிகளாய் அழுகையைக் கொண்டு வந்து சேர்த்தன. பொதுவாக அம்மா என்கிற பிம்பம் எளிதாக இதயத்தை உருக்கக் கூடியது; தமிழ்ச்சமூகத்தில் அம்மாமார்களின் தியாகம் செறிந்த வாழ்வு தீயாய்ச் சுடக் கூடியது; 70 விழுக்காட்டுக் குடும்பங்களைக் கிராம வாழ்வில் சுமப்பவர்கள் இந்தத் தாய்மார்கள்தாம்; தாயைக் குறித்துக் கட்டிவிடப்பட்டுள்ள கலை இலக்கியப் புனைவுகளும் நமக்குள் ஏற்கெனவே இறங்கி உயிராய் இருப்புக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தாயைக் குறித்த எந்தவொரு மொழியும் நம்மை உணர்ச்சிக்குள் எளிதாய்த் தள்ளி விடுகின்றன.

“பழமல இருக்கானா...
பாத்துட்டுப் போவ வந்தேன்
இந்தக்
குரலை எரிப்பதற்கு நெருப்பால் முடியாது”

அப்படியே எனது ஆச்சியின் விசாரிப்பு; பழமலயின் அம்மா-ஆயி எனது ஆச்சி. ஆச்சியின் நினைவுகள் திரண்டு நீராய் உருண்டன.

“தேங்காய் எண்ணெ தேய்ச்சி
தெருவழியா போவாதே
இழவு வீடு பாத்து
இருந்தழுது வா”

என்று விதவை வாழ்வின் கொடூர முகத்தைச் சிறுவயதிலிருந்து அனுபவித்து வளர்ந்தவன் என்பதால், சோக பாவமே எனக்குப் பிடித்த பாவம். எனவே ஒரே மூச்சில் கவிதைகளை வாசித்து முடித்தேன். மறுநாள் விடைத்தாள் திருத்தும் மையத்தில் “வாசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று இன்னும் முடிக்காதது போல் காட்டிக் கொண்டேன்; “எப்படி இருக்கு? ஒன்றிரண்டாவது தேருமா?” இது பழமலயின் பாணி! “எல்லாம் புதுசா இருக்கு! நீங்க கவிதை எழுதினா மட்டும் போதாது. இதுக்கு வாசகர்களைப் பழக்கப்படுத்துகிற முயற்சியையும் எடுக்க வேண்டியது வரும்” என்று மட்டும் சொல்லி வைத்தேன். இரண்டு நாள் வைத்திருந்து மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களும் போட்டு வைத்தேன். அதை ஏற்றுக் கொண்டாரா என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. என்னைப் போல் பலரிடம் காட்டிக் கருத்துக் கேட்டார் என்பது மட்டும் தெரியும். ஆனால் அன்று தொடங்கிய கவிதைப் பயணத்தைத் தொடர்பு அறாமல் இன்றுவரை நிகழ்த்திக் கொண்டு வருகிறார். இடையில் எத்தனையோ பிரச்சினைகள். விமர்சனங்கள். அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்கள். ஆனாலும் அவரைப் போலவே எழுதுகிற ஒரு பெரிய பட்டாளத்தையே தமிழ்க்கவிதை உலகம் கண்டுவிட்டது. அப்படியொரு பாணியைத் தொடங்கி வைத்தவராகப் பழமலய் தமிழ்க் கவிதை வரலாற்றில் நிற்கிறார். அவர் கவிதைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகத் தொகுத்து 828 பக்க அளவில் “பழமலய் கவிதைகள்” என்று பெருந்தொகுப்பாகக் காவ்யா சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார். வழக்கம்போல் பழமலய் பின்பற்றும் கவிதை எழுதிய நாள், சூழல் முதலிய குறிப்புக்களோடு வந்துள்ளது சிறப்பு.

தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் பேராசிரியர்களின் படைப்பைப் பார்த்தவுடன் முகஞ்சுழித்துப் புறக்கணிக்கிற ஒரு போக்கு தொடர்ந்து நிலவுவதை அவதானிக்க முடிகிறது. பிரபஞ்சன் போன்ற ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் போலவே பாதுகாப்பான வாழ்விற்கு வேறொரு தொழிலைப் பிடித்து வைத்துக் கொண்டுதான் இயங்கி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது பேராசிரியர்கள் மேல் மட்டும் என்ன கோபமென்று தெரியவில்லை? மேலை உலகில் உம்பர்ட்டோ ஈகோ போன்ற பல பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் படைப்புலகில் சாதனை புரிந்துள்ளனர். தமிழிலும் பழமலய், சிற்பி, தமிழவன், பிரேம் போனறவர்கள் இருக்கிறார்கள்.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி - 8. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It