ஓரினச்சேர்க்கை என்பது உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமானது; இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உலகளவில் பல நாடுகளில் உள்ள பல ஓரினச்சேர்க்கையாளர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்ட போது இது நம் கலாச்சாரத்துக்குப் புறம்பானது என்று எதிர்வினைகளும் இதற்கு வந்தது. பொதுவில் ஆணும் பெண்ணும்தான் சேர்ந்து வாழ வேண்டும் என்பது உலக நியதி. காந்தத்தில் கூட வட துருவமும் தென் துருவமும்தான் ஒட்டும், வட துருவமும் வடதுருவமும் ஒட்டவே ஒட்டாது. அது போலவேதான் இயற்கை மற்றும் கலாச்சாரம் மனித இனத்தைக் கட்டமைத்திருக்கிறது.

marapalli_400இயற்கையை மீறியும் இயற்கையான நிகழ்வுகள் நடந்தேறுவதுண்டு. வேற்று பால் இனத்தின் மீதான ஈர்ப்பு பொதுவானது. ஆனால் ஒரே பால் இனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அதனை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதும் இயற்கையை மீறிய ஒரு இயற்கை நிகழ்வுதான். ஓரினச்சேர்க்கையை பலரும் ஆதரிக்கக் காரணமும் அதுதான். அவரவரது விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்குள் இது அடங்குகிறது. ஓரினச்சேர்க்கை குறித்து தமிழில் முதல் முதலாக கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்தான் பேசியது. கணேசன் என்னும் பாத்திரம் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கையாளனாய் இருந்தது என்று மேலோட்டமாய் மட்டுமே பேசியது. இதையும் தாண்டி அழுத்தமாய் ஓரினச்சேர்க்கை குறித்து பேசியிருக்கிறது மரப்பல்லி.

பாலியல் எழுத்தாளர் என்று முத்திரை குத்தப்பட்ட வா.மு.கோமுவின் படைப்புதான் இந்த மரப்பல்லி. ஓரினச்சேர்க்கை புரியும் உயிரினங்களில் மனிதன் மட்டுமல்லாது மரப்பல்லியும் ஒன்று. அதனால்தான் இந்நாவலுக்கு இது காரணப்பெயராக வைக்கப் பெற்றிருக்கிறது. கதை மணிபாரதியிடமிருந்து துவங்குகிறது. மணிபாரதி என்பவன் பல பெண்களை தன் வசீகர மற்றும் ஆறுதல் பேச்சுகளாலேயே கவர்ந்து அவர்களோடு சம்பாஷணைகள் புரிபவன் என்று இவரது முந்தைய நாவலான மங்கலத்து தேவதைகள் நாவலிலேயே விளக்கப்பட்டு விட்டது. மங்கலத்து தேவதைகளின் தொடர்ச்சி என்று எழுதினாரோ என்னவோ இதிலும் மணிபாரதி என்கிற கதாப்பாத்திரம் அதே குணாம்சங்களோடு தோன்றுகிறது.

ரம்யா என்கிற மகளை தாரை வார்த்து விட்டு ஒரு விபத்தில் மணிபாரதியின் மனைவி சாந்தி செத்துப்போனதாக தொடங்கும் நாவலில் மணிபாரதியோ வேறு எந்த பெண்ணையும் மணக்காமல் தன் மகளுக்காகவே வாழ்ந்து வருகிறான். அப்போது அவனது வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகின்றனர். ஒன்று பக்கத்து வீட்டுக்காரி வசந்தி; இன்னொன்று ரம்யாவின் வகுப்பாசிரியை சந்திரிகா. இருவரது வருகையும் மணிபாரதியை பழைய நிலைக்கு திரும்ப வைப்பது போலான நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்க, வசந்தியின் தங்கை ப்ரியா பணி புரியும் பனியன் கம்பெனியின் மேனேஜர் ஜெனி என்னும் பெண்ணுடன் நெருக்கம் கொண்டு ஓரினம் என்பதை பொருட்டில் கொள்ளாது அவளைக் காதலிக்கிறாள். சாதகம் விளைவித்த பாதகத்தால் இன்னும் திருமணமாகமலிருக்கும் ப்ரியாவை மனைவியை இழந்து தவிக்கும் மணிபாரதிக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுக்கிறார்கள். ப்ரியாவோ ஜெனியின் காதலில் இருந்து மீளாமலும் மணிபாரதியையும் நிராகரிக்காமலும் இரண்டுக்கும் இடையிலான ஒரு வாழ்க்கையை வாழ்கிறாள். இறுதியில் ஓரினக்காதல் வென்றதா இல்லை ப்ரியாவிடம் வீசிய மணிபாரதியின் ஆண் வாசனை வென்றதா என்பதே கதை.

ஓரினச்சேர்க்கை பற்றி மையமாக பேச வேண்டிய கதையோ சிறிதளவு மட்டுமே அதைப் பற்றி பேசி விட்டு தனது முந்தைய நாவலான மங்கலத்து தேவதைகள் போல் மணிபாரதியின் காமக்களியாட்டங்களைப் பேசத் துவங்கி விடுகிறது. ஆம், கதையின் மையக் கதாப்பாத்திரமான ப்ரியாவின் அக்கா வசந்தி மற்றும் மணிபாரதி மகளின் வகுப்பாசிரியை சந்திரிகா இருவரிடமும் மணிபாரதி நிகழ்த்தும் காம வேட்டை குறித்து நாவல் பேசுகிறது. வசந்திக்கு காங்கேயத்தில் கட்டிக்கொடுத்த கணவனோ உடலுறவு கொள்வதற்கு லாயக்கற்றவன். சந்திரிகா டீச்சரின் கணவனோ முழு நேரக்குடிகாரன். இந்த இரு பாத்திரங்களுமே கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள். அதாவது கதைப்படி காமத்திற்கு ஏங்குபவர்கள்.

பொதுவாகவே இவரது படைப்புகளில் தெரியும் எதார்த்தம் இதுதான். இவர் படைக்கும் பெண் பாத்திரங்கள் ஏதேனும் ஒரு சூழலில் கணவனைப் பிரிந்தோ, கணவனின் கொடுமை தாளாமல் ஓடி வந்தோ, கணவனுக்கு ஆண்மை இல்லை எனவோ, கணவன் இறந்து விட்டான் எனவோ எப்படியேனும் அந்த பெண் பாத்திரம் காமத்தை தனது தேவையாக கொண்டிருத்தலின்படியே படைக்கப்படுகிறது. அந்தக் காமத்தேவையை இவரது கதை நாயகர்கள் பழனிச்சாமியோ, மணிபாரதியோதான் வந்து தீர்த்து வைக்கிறார்கள். இந்நாவலிலும் அதுதான் நிகழ்ந்தேறியிருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றழைக்கும் வசந்தியோ மணிபாரதி தன்னை காமத்திளைப்பில் மூழ்கடிக்க வேண்டும் என நினைக்கிறாள். முக்கியமான கதாப்பாத்திரத்தின் தங்கையோ அக்காவோ நாயகனிடம் அத்து மீறி நடப்பதும் இவரது கதைகளில் தொடர்கதை. குடிகாரக் கணவனின் தர்ம அடியிலிருந்து தப்பி ஓடி வந்த சந்திரிகா தன் வீட்டு உரிமையாளரின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க நினைப்பவள் மணிபாரதியின் கழுகுப்பார்வைக்கு இரையாகிறாள். இப்படியாக இது வரை இவரது நாவல்களில் வழக்கமாக தென்படுபவைகளாகவே கதை நகர்கையில் திடீரென ஒரு அதிர்ச்சி.

ப்ரியாவை காதலிப்பதாகக் கூறிக்கொண்டிருந்தவன் திடீரென அவள் மீது மூர்க்க வெறி கொண்டு  அவளை கடித்துத் தின்பவன் போல பலாத்கார முயற்சியில் இறங்கிய போது ஒன்று புரியாமல் கிறக்கத்தோடு நின்றிருக்கையில் அவனைத் தாக்கி விட்டு ப்ரியாவைக் காப்பாற்றுகிறாள் ஜெனி. அவன் நடத்திய மூர்க்கத்தனமான காமவெறித்தாக்குதாலால் ஆண் சமூகம் மீதே வெறுப்புறுகிறாள் ப்ரியா. அச்சமயத்தில் ஆறுதல் தரும் ஜெனி, ப்ரியாவுக்கு முத்தங்களைப் பரிசளிக்கிறாள். அவளின் அந்தரங்கத்தோடு தனது அந்தரங்கத்தை ஒட்டி உறவாடுகிறாள். இதெல்லாம் தப்பில்லையா என ப்ரியா வினவும்போது உனக்கு நல்லாருக்கல்ல அப்ப எதுவும் தப்பில்லை என அவளை ஆறுதல் படுத்துகிறாள். அப்போது துவங்குகிறது ப்ரியாவுக்கும் ஜெனிக்குமான காதல். ஒரு பெண் இன்னொரு பெண்ணை எப்படிக் காதலிக்க முடியும்? இது நல்ல கேள்விதான். இதற்குப் பின் வரும் அத்தியாங்களில் விளக்கமான பதிலும் இருக்கிறது. ஜெனியின் வாழ்க்கை என்பது அவளது தந்தை தந்த ஊக்கத்தால் எதற்கு பயந்திராதவளாகவும், எதற்கும் துணிந்தவளாகவும் தன்னை ஒரு ஆண் என்றே கருதிக்கொண்டு ஜீன்ஸ் பேண்ட் அணிவதும் இரவில் லுங்கி கட்டிக் கொள்வதுமாக இருக்கிறாள். ப்ரியாவை காதல் என்கிற வார்த்தைக்குள் ஆட்படுத்தி அவளிடம் உறவு கொள்ள திருவிழா இரவில் அழைத்துச் சென்றவனோ தன் காரியம் முடிந்ததும் எக்கேடோ கெட்டுப்போ என விட்டுச் சென்று விட்டான். ஒரு பெண்ணின் காமத்தை மட்டுமே ஆண் சமூகம் எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்து ப்ரியா வெறுப்புறுகிறாள். இப்படியாக ஆண் சமூகத்தின்பால் வெறுப்புற்ற இரண்டு பேரும் ஒன்றிணைகிறார்கள்.

ஓரினத்தின் பால் ஈர்ப்பு கொள்ள ஹார்மோன் மட்டுமல்ல சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்பதை இந்நாவல் தெளிவாக விளக்குகிறது. இவர்களுள் ஜெனி தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு ப்ரியாவை தன் மனைவியாக நினைத்துக் கொள்கிறாள். இந்த ஆண் மனோபாவம்தான் அவளை ஆட்டுவிக்கிறது. யாருக்கும் தான் அடிமையாக மாட்டேன் என சொல்லும் ஜெனியோ தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தாண்டியும் காதலிக்கிறேன் என்று சொல்லி வந்த கதிர்வேலிடம் மூர்க்கமாக நடந்து கொள்கிறாள். ஜெனியின் குற்றங்களை கதிர்வேல் சாடிவிட்டு விடை பெறுகிறான். ப்ரியாவை மணிபாரதிக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவான போது கூட ஜெனி மணிபாரதியை அழைத்து அதே ஆணாதிக்க மனோபாவத்துடனே பேசுகிறாள்... அதாவது ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமே அல்ல...

ப்ரியாவைப் பற்றித்தான் முக்கியமாக பேச வேண்டும். கையறு நிலையில் தனக்கு தோளுக்கு தோளாய் நின்று எவருக்கும் அடிமையாகி விடக்கூடாது என்று சொல்லும் ஜெனியின் உண்மையான காதலோடு வாழ வேண்டும் என ஆசைதான் இருந்தாலும் ஊர் மட்டுமல்ல பெற்ற தாயும் உடன் பிறந்த சகோதரியும் கூட அதை ஏற்றுக்கொள்ள  மறுக்கிறார்கள்... மணிபாரதிக்கு திருமணம் செய்து வைக்கத் துடிக்கிறார்கள்... மணிபாரதியோடு ப்ரியா பழகிய போது அவனையும் வேண்டாம் என நிராகரிக்க முடியவில்லை... ஜெனியையும் வேண்டாம் என தூக்கி எறிய முடியவில்லை என இரண்டுக்கும் இடையில் நின்று தத்தளிக்கிறாள்... ஜெனி மனம் முழுவதும் பரவிக்கிடக்கிறாள் அவள் எப்படியும் தன்னை வந்து கூட்டிச் செல்வாள் என நம்பும் ப்ரியாவோ, ஜெனி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டதும் எவ்வித வருத்தமுமின்றி வருகிறாள். ஒரு உண்மை ப்ரியாவுக்கு புரிகிறது ஜெனியிடமும் தான் ஆண் என்கிற நினைப்பும் ப்ரியா தன்னைத் தேடி வர வேண்டும் என்கிற கர்வமும் ஏகத்துக்கும் பரவிக்கிடந்ததால்தான் இந்த வினை என நினைத்து மணிபாரதியுடன் வாழ சம்மதம் தெரிவிக்கிறாள்.

அந்த 7 நாட்கள் படம் திரைக்கதை அளவில் பெரிதும் பேசப்பட்ட படம். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக பிரியும் பாக்கியராஜ்- அம்பிகா ஜோடியை, அம்பிகாவை மணந்து கொண்ட ராஜேஷ் மீண்டும் சேர்த்து வைப்பார். அப்போது தாலி கட்டியவனே கணவனாக உடன் வாழ வேண்டும் என அம்பிகாவை பாக்கியராஜ் விட்டுக் கொடுத்து விடுவது போல கதை முடியும். எதேர்ச்சையில் இது பிற்போக்குத்தனம்தான் என்றால் வணிக சமரசத்துக்காக இப்படியொரு காட்சியை பாக்கியராஜ் வைத்திருந்தார். அது போலத்தான் எனக்கு ஜெனியின் மரணமும் படுகிறது. ஓரினச்சேர்க்கையாளர்களாகவே தங்களது தோளுக்குத் தோளாக ப்ரியாவையும்- ஜெனியையும் வாழ்நாள் இறுதி வரை உலவ விட்டிருக்கலாம்தான்... ஓரினச்சேர்க்கையை ஊர் உலகம் ஏற்பதில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்நாவல் ஆசிரியரும் கூட அதை ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டதால்தான் ஜெனியைக் கொன்று மணிபாரதிக்கே ப்ரியாவை வாக்கப்பட வைத்து விட்டார் எனத் தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்தில் ஓரினச்சேர்க்கை குறித்து இது போன்று இதுவரையிலும் எந்த நாவலும் இவ்வளவு அழுத்தமாக பேசியதில்லை என்ற விதத்தில் மரப்பல்லி ஒரு குறிப்பிடத்தகுந்த ஒரு நாவலாகிறது.

- கி.ச.திலீபன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It