அணிந்துரை

 I

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி, இவர் தமிழகத்தின் எட்டாம் வள்ளல் என்று போற்றப்படுபவர். இவர் பிறந்து வளர்ந்த ஊர் கீழைக்கரை. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் செய்கு அப்துல் காதிறு மரைக்காயர் என்பதாகும். இவரின் தந்தையார் மவ்லா சாகிப் என்ற பெரியதம்பி மரைக்காயர், தாயார் சய்யிது அகமது நாச்சியார். இராமநாத புரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்றழைக்கப்படும் விசய ரகுநாதத் தேவர் இவரின் நெருங்கிய நண்பர். சேதுமன்னர் -சீதக்காதி இருவருக்கும் இடையிலான தோழமை சமய நல்லிணக்கத்திற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக அந்நாளில் திகழ்ந்தது. கிழவன் சேதுபதிக்குச் சீதக்காதி அமைச்சர் போன்று விளங்கினார். சேதுமன்னர் கட்டிய இராமநாதபுரக் கோட்டை மற்றும் அரண்மனைக்கான செலவில் பெரும்பகுதிச் சீதக்காதியே தந்து உதவினார் என்பது வரலாறு.

பதினேழாம் நூற்றாண்டில் தென்தமிழகத்தின் தலைசிறந்த கடல் வாணிபக் குடும்பமாகவும் செல்வாக்கு மிக்க செல்வக் குடும்பமாகவும் சீதக்காதியின் மரைக்காயர் குடும்பமே விளங்கியது. கடல் வாணிபத்தில் தாம் ஈட்டிய பெருமளவிலான செல்வத்தை வள்ளன்மைத் தன்மையோடு வரையாது வாரிக் கொடுத்த செந்தமிழ் வள்ளலாகச் சீதக்காதி திகழ்ந்தார். தலைமலைக் கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான் முதலான தமிழ்ப் புலவர் பெருமக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் அவர் விளங்கினார். அண்ணல் நபியின் புகழ்பாடும் சீறாப்புராணக் காப்பியத்தை உமறுப்புலவர் இயற்ற ஆதரவும் உதவியும் நல்கியவர் சீதக்காதியே என்றதோர் குறிப்பும் உண்டு.

சீதக்காதியின் மறைவுக்குப் பின்னர் செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்றதோர் சொல்வழக்கு தமிழகத்திலே இன்றும் நின்று நிலவுகின்றமையே அவரின் வள்ளல் தன்மைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.

மறந்தா கிலும்அரைக் காசும் கொடாத மாந்தர் மண்மேல்

இறந்தா வதென்ன! இருந்தா வதென்ன! இறந்து விண்போய்ச்

சிறந்தா ளுங்கா யல்துரை சீதக்காதி திரும்பி வந்து

பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில் லையே

என்ற படிக்காசுத் தம்பிரானின் இரங்கற்பா புலவர்களுக்கும் சீதக்காதியாருக்கும் இருந்த தோழமையினை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்தும்.

சீதக்காதியார் புகழ்பாடும் இவ்வகை இரங்கல் பாக்கள் மட்டுமல்லாமல் 1.செய்தக்காதி நொண்டி நாடகம். 2.செய்தக்காதி மரைக்காயர் திருமண வாழ்த்து என்ற இரண்டு இசுலாமியச் சிற்றிலக்கியங்கள் இன்றைக்கும் சீதக்காதியின் புகழ் பாடுவனவாக நமக்குக் கிடைக்கின்றன.

சீதக்காதியின் வள்ளல் தன்மையினையும், மத நல்லிணக்கத்தினையும், நிர்வாகத் திறமையினையும் அவரின் ஒட்டு மொத்தமான முழுப் புகழினையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலத்தின் கட்டாயத்தினை உணர்ந்து உணர்வுப் பாவலர் உசேன் அவர்களால் படைக்கப்பட்ட ஓர் அற்புதச் சிற்றிலக்கியமே செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை.

II

தமிழகத்திலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அயல்நாடுகளிலும் வாழும் இசுலாமியத் தமிழர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் படைத்துள்ள தமிழ் இலக்கியங்களின் எண்ணிக்கை சற்றேறக் குறைய ஏழாயிரத்தைத் தொடும் என்பார் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர். (இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள், ப.8) எனவே இந்த 16 முதல் 19 வரையிலான நான்கு நூற்றாண்டுகளைத் தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் இசுலாமியர் காலம் என்றே குறிப்பிடலாம் என்பார் அவர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் இசுலாமியர்கள் படைத்துள்ள தமிழ் இலக்கியங்கள் எண்ணற்றவை. இசுலாமியத் தமிழர்களின் இவ்வகையிலான பாரிய இலக்கியப் பணியினைத் தமிழுலகம் உரிய வகையில் போற்றிப் பாராட்டாதது பெருங்குறை என்றே எண்ணத் தோன்றுகிறது.

காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதை, உரைநடை இலக்கியங்கள் என இலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் இசுலாமியத் தமிழர்கள் தம் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் போன்ற மரபிலக்கியங்களைப் படைப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் மிகப்பெரியது. தமிழில் பாடப்பட்டுள்ள காப்பியம் என்ற இலக்கிய வகையில் மிக அதிக எண்ணிக்கையிலான காப்பியங்கள் இசுலாமியக் காப்பியங்களே என்பது ஒரு வியப்பான செய்தி. சிற்றிலக்கியங்களிலும் இசுலாமியத் தமிழர்கள் தமிழுக்கே உரிய கும்மி, பிள்ளைத்தமிழ், அம்மானை, அந்தாதி, ஆற்றுப்படை, மாலை, கலம்பகம், கோவை, பாவை முதலான பலவகைச் சிற்றிலக்கியங்களை ஆயிரக்கணக்கில் பாடியதோடு மட்டுமல்லாமல் போர்க்களக் காட்சிகளைச் சித்திரிக்கும் ‘படைப்போர்’, கதை கூறும் ‘கிஸ்ஸா’, வரலாற்றை விளக்கும் ‘நாமா’, போற்றிப் புகழும் ‘முனாஜாத்து’, வினா விடையில் அமையும் ‘மசலா’ போன்ற புதிய சிற்றிலக்கிய வகைகளையும் தமிழுக்குத் தந்து தமிழிலக்கியங்களை வளப்படுத்தி உள்ளனர்.

பாவலர் உசேனின் செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை என்ற இச்சிற்றிலக்கியம் தமிழ் இசுலாமிய இலக்கிய வரிசையில் ஒரு முக்கியமான படைப்பாகும். சீதக்காதியாரின் புகழ்பாடும் பணியோடு தமிழுக்கே உரிய அகப்பொருள் மரபின் வளத்தோடு அமைவது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

III

உணர்வுப் பாவலர் உசேன், பழந்தமிழ்ப் புலவர் மரபின் தொடர்ச்சியாக இந்த நூற்றாண்டில் புதுவைக்குக் கிடைத்திருக்கும் தனிச்சிறப்பாளர். இடையறாது படைப்புத் தாகத்தோடு பல்வகை இலக்கியப் படைப்புகளையும் படைத்துவரும் அவர், புதுவை மாநிலத்தின் தனித்த அடையாளமாகத் திகழ்வதற்கு காரணம் அவரின் குழந்தைகள் கலை இலக்கியக் கழகத்தின் தன்னலமற்ற பணிகளே என்றால் அதுமிகையன்று. அவரின் குழந்தைகள் கலை இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் தகுதிவாய்ந்த படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் கலைவித்தகச் சிறுவர்களையும் அடையாளம் கண்டு விருதளித்துப் போற்றிப் பாராட்டுகின்றது. கவிஞரின் இந்த அமைப்பால் அடையாளம் காணப்பட்டவர்கள் பலர் பின்னாளில் மத்திய மாநில அரசுகளின் தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்றிருக்கின்றனர் என்பது அவரின் அடையாளப் படுத்துதலுக்கு இருக்கும் தனித்தகுதியாகும்.

பாவலர் உசேனின் ஐம்பதாவது படைப்பாக வெளிவந்த புரட்சிப் படைப்பான வீராயி காப்பியம் இரண்டாயிரத்து அறுநூறு (2600) நேரிசை வெண்பாக்களால் ஆனது. அடுத்து ஐம்பத்தோராம் படைப்பாக இவர் எழுதிவெளியிட்ட கலைக் காப்பியமான தாய்நாட்டுக்கே வா! என்ற காப்பியமோ எண்ணூற்றுப் பதினெட்டு (818) கட்டளைக் கலித்துறைப் பாக்களால் ஆனது. கட்டளைக் கலித்துறையால் ஒரு காப்பியம் உருவாக்க முடியும் என்ற புதிய மரபைத் தமிழுக்குத் தந்தவர் இவர். அவரின் படைப்பு வேகத்திற்கு ஏற்ற இலக்குகளைச் சுட்டிக்காட்டி அவரின் பயணம் தங்குதடையின்றி விரையத் துணைநிற்பதில் எனக்கும் பங்குண்டு. அந்த வகையில் அவரின் அகப்பொருள் கோவை இலக்கியப் படைப்புகளுக்கு நானும் ஒரு காரணம். செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை என்ற இந்நூல் உணர்வுப் பாலவரின் அறுபத்தாறாம் படைப்பாகும். இரண்டாவது அகப்பொருள் கோவை நூலாகும்.

கோவை என்ற சிற்றிலக்கியம் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்த இலக்கிய வகையாகும். தலைவனும் தலைவியும் தாமே கண்டு காதலின்பம் அனுபவிக்கும் களவொழுக்கம் முதல் ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் தனித்தனித் துறைகளாக அமைத்துப் பாடுவது கோவை என்ற சிற்றிலக்கியத்தின் அமைப்பாகும். கோவை நானூறு பாடல்களால் பாடப்படும் என்பது பொது இலக்கணம். அகப்பொருள் கோவை இலக்கியங்களில் பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடம் உண்டு. கிளவித் தலைவன் என்போன் அகப்பொருள் தலைவன். அதாவது கவிஞரால் புனைந்து சொல்லப்படும் பாத்திரம், கற்பனைப் பாத்திரம். பாட்டுடைத் தலைவன் என்போன் அந்தக் கோவை இலக்கியத்தில் புகழப்படும் தலைவன். இத்தலைவனின் ஊரும் பேரும் விரிவாகப் பேசப்படும். இத்தலைவன் நடைமுறைப் பாத்திரம். கோவை நூல்களின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் பாட்டுடைத் தலைவனைப் பாடுதல் என்ற நோக்கமே காரணமாய் அமைந்துள்ளது. இந்தப் பாட்டுடைத் தலைவர்கள் கடவுளர்களாகவோ, அரசர்களாகவோ, வள்ளல்களாகவோ அமைவதுண்டு. சிறப்பித்துப் புகழ்பாடவோ பரிசில் பெறவோ, அருளைப் பெறவோ பாட்டுடைத் தலைவர்களின் புகழ்பாடும் கோவை இலக்கியங்களில் கிளவித் தலைவனும் தலைவியும் அகப்பொருள் நிகழ்ச்சிகளைச் சித்தரித்துப் பாடுவதற்கு மட்டுமே பயன்படுவர்.

பாவலர் உசேனின் செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை புத்திலக்கியமாயினும் பழைய அகப்பொருள் மரபைப் பேணும் ஓர் அரிய படைப்பு. நானூறு பாடல்களால் பாடப்படும் கோவை மரபைச் சற்றே தளர்த்தி நூற்று இருபது (120) பாடல்களால் இக்கோவையைப் பாவலர் உசேன் யாத்துள்ளார். அடுத்து முழுமையாக நானூறு பாடல்களில் இக்கோவையை எழுதி முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்பது மகிழ்வான செய்தி.

கோவை இலக்கியம் என்றாலே காதல் இலக்கியம்தான். காதல் இலக்கியங்களுக்கே உரிய உறவும் பிரிவும், இன்பமும் துன்பமும் இவ்விலக்கியங்களில் விரவிக் கிடக்கும். கோவை இலக்கியம் பாடுவது அத்துணை எளிய செயலன்று. நான்குவரிக் கட்டளைக் கலித்துறைப் பாடலில் ஓர் அகப்பொருள் துறையின் உரிப்பொருள் பாடுபொருளாகிக் கிளவித் தலைவர்களின் அகவாழ்க்கை பேசப்பட வேண்டும், அதேசமயம் அந்தப் பாடலுக்குள்ளேயே பாட்டுடைத் தலைவரின் சிறப்பியல்புகளில் ஏதேனும் ஒன்றனை விவரித்துச் சொல்லவும் வேண்டும். இடையில் ஓரடிக்குப் பதினாறு, பதினேழு என எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறையின் யாப்பும் பேணப்பட வேண்டும். இத்துணை சிக்கலானதோர் சிற்றிலக்கிய வகையினைத் தேர்ந்தெடுத்து இன்றைய அவசர யுகத்தில் இப்படியோர் இலக்கியத்தைப் படைப்பதென்பது ஓர் அரிய முயற்சி. பாவலர் உசேனின் இத்தகு அரிய முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் நமது பாராட்டுதல்கள் உரித்தாகட்டும்.

சீதக்காதி அகப்பொருள் கோவை என்கின்ற இந்நூல் ஓர் அகப்பொருள் சிற்றிலக்கிய மாயினும் பாவலர் உசேன் இதனை ஒரு வரலாற்று இலக்கியமாகவே படைத்துள்ளார். கோவையின் ஒவ்வொரு பாடலும் வள்ளல் சீதக்காதி வாழ்க்கை வரலாற்றின் ஏதேனும் ஒருபகுதியைப் பேசுகின்றது. பாட்டுடைத் தலைவரின் புகழ்போற்றும் அதே வேளையில் இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஆக்கித் தந்த நூலாசிரியரின் பணி போற்றத்தக்கது.


பஞ்சத்தில் சேதுமண் பட்டினி நோயில் பரிதவிக்க
அஞ்சற்க என்றே கரத்தால் படியை அளந்த வள்ளல்  பா. ? ப.16


அண்ணல் பொருள்வழி யும்சதக் கத்துல்லா அன்புவழி
எண்ணும் எழுத்தும் இணைந்தார்ப் போல்   பா. ? ப. 56


தம்பி மரைக்காயர் மைந்தர்சீ தக்காதி தங்கமவர்
தம்பிசே கிப்ராகீம் மாமு நயினார் தகையர்வழி
செம்மையர் லப்பை நயினார் அபூபக்கர் சீர்வழிபோல்  பா. ? ப.70


போகலூர் விட்டு முகவைக்குச் சேது புதுத் தலைமை
ஆகும் படிசெய்ய தம்பி மரைக்காயர் அச்செயற்கு
ஏகும் பொருளீந்த தெண்ணி கடல்முத் தெடுவுரிமை
ஏகச்செய் மண்ணில் .. ..      பா. ? ப.72


கீழைநா டெல்லாம் முதன்முதல் கப்பலைக் கேண்மையுடன்
வேழமாய் ஓட்டிய ஒப்பில் தமிழன் வியன்குளத்தில்  பா. ? ப.90


மேற்காட்டப்பட்ட பாடல்வரிகள் நூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்கான சில சான்றுகள். நூலின் அகத்தே வரலாற்றுக் குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன.

மேலும், சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய மற்றுமொரு செய்தி, பாவலர் உசேன் இந்நூலை ஓர் இசுலாமியச் சிற்றிலக்கியமாகவே வார்த்தெடுத்துள்ள முறைமை. நூலில் இடம்பெற்றுள்ள உவமைகள், வருணனைகள், வரலாற்றுக் குறிப்புகள் என அனைத்திலும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இசுலாமிய மார்க்க வாழ்வியலைப் பதிவு செய்கின்றார். சான்றாகப் பின்வரும் பாடலைக் காண்போம்.

மதரசா தன்னில் மறைஓதும் தேன்மொழி தேர்ந்தெழுதி

கதிர்தொடும் பச்சைக் கொடிபிறை நெற்றியைக் கண்டெழுதி

முதிர்முத்தால் செய்ஜெப மாலையால் வாய்ப்பல்லை முன்னெழுதி

புதுக்கொடி ஏந்தி மடலேறி வாரும்எம் பொன்னகர்க்கே! பா.? ப.101

கீழைக்கரையில் இசுலாமியச் சிறுவர்கள் குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்கின்ற மதரசா பள்ளியில் அவர்கள் அரபி மொழியில் ஓதுகின்ற இனிய குரலொலி போல் இனிமையாகப் பேசுகின்ற தலைவியினுடைய மொழியையும் இசுலாமியத் தெருக்களில் ஆங்காங்கே கதிரவனைத் தொடுவதுபோல் பறக்கின்ற தீன்கொடியில் உள்ள பிறையைப் போன்ற தலைவியின் நெற்றியழகையும் முதிர்ந்த முத்துக்களால் செய்த ஜெபமாலை (தஸ்பி மணி) யில் உள்ள முத்தினை ஒத்த தலைவியின் பல்வரிசையையும் படமாக வரைந்தெழுதிய புதுக்கொடியை ஏந்திக் கொண்டு மடலேறி எங்கள் பொன்னகர்க்கு வருவாயாக என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள். இப்பாடலில் இடம்பெற்றுள்ள தலைவியின் வனப்பு குறித்த வருணனைகள் அனைத்துமே இசுலாமிய வாழ்வியலோடு தொடர்புடையவை. நூலின் உள்ளே பல பாடல்களில் இத்தகைய சிறப்பியல்புகளை நாம் காண முடியும்.

நூலில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் அழகுகளைக் குறித்து விரிவாகப் பேசவேண்டும். விரிவஞ்சி அவற்றை விடுத்துவிட்டேன்.

காலத்தால் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர் வள்ளல் சீதக்காதியின் வாழ்க்கையும் சேது மன்னர், சீதக்காதி தோழமையும் இருவரும் இணைந்து பணியாற்றிய பல முக்கியத்துவம் வாய்ந்த மதநல்லிணக்கச் செயற்பாடுகளும் காலத்தால் கரைந்துபோகக் கூடாத அரிய வரலாற்று நிகழ்வுகள். இடர்வரும் போதெல்லாம் இன்முகத்தோடு மக்களின் துயர்தீர்த்த வள்ளலாகவும் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் அளப்பரிய அரும்பணிகளை ஆற்றிய கொடையாளியாகவும் திகழ்ந்த செய்கு அப்துல் காதிறு மரைக்காயர் என்ற சீதக்காதியின் புகழ்போற்றும் இந்த அரிய நூலை இயற்றிய உணர்வுப் பாவலர் உசேன் தம் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியுள்ளார். அவர்பணி சிறக்கவும் தொடர்ந்து அவர் தமிழ்ப்பணியாற்றவும் அகங்கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டும்!

- முனைவர் நா.இளங்கோ

Pin It