I

 கடலெனக் கிடக்கும் மனமெனும் பிரமாண்டத்திற்குள்ளும் காடெனப் புதர்களாய் மண்டிக் கிடக்கும் சமூகமெனும் புறவெளிக்குள்ளும் கணந்தோறும் குமிழ்விட்டு மறையும் எண்ணிமாளாத நிகழ்வுகளையெல்லாம் மொழியில் பிடித்து விளையாடுவதற்கேற்ற அரிய ஒரு வடிவமாக நாவலைப் போன்று இன்னொரு வடிவம் எந்த மொழியிலும் இருக்க முடியாதென்றே சொல்லிவிடலாம் போல் தோன்றுகிறது. கடந்த ஒரு நூற்றாண்டில் தமிழில் மட்டும் எத்தனை விதமான நாவல்கள்; எத்தனை விதமான மனஉலகப் பதிவுகள். தமிழவன் இத்தகைய இந்த நாவல் வடிவம் வழங்கும் அத்தனை சாத்தியப்பாடுகளையும் கூடியவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார்.

 இந்த நாவல் எழுத்தில் பிற உலக இலக்கியங்களின் தாக்கம் இருக்கலாமென்று தமிழவன் சொல்லிக் கொண்டாலும், எடுத்துரைக்கும் முறையில் வேண்டுமென்றால் அது நடந்திருக்கலாம். ஆனால் எடுத்துரைக்கப்பட்டுள்ள அனைத்தும் ஏறத்தாழ அறுபது ஆண்டு காலம் இந்த உடலோடு வாழ நேர்ந்த ஒரு மனித ஜீவன் தான் உணர்ந்ததை, சிந்தித்ததை, தன் மனமெனும் பிரபஞ்சத்திற்குள்ளும் தன் புற உலகத்திற்குள்ளும் காரண காரியத்திற்கு அடங்காமல் புரிதலுக்கு அப்பாற்பட்ட தளத்தில் நிகழ்ந்த அரூபமான நிகழ்வுகளை எல்லாம் மொழிப்படுத்திப் பார்க்க முயலுகின்ற முயற்சியின் விளையாட்டாகத்தான் ஒட்டுமொத்த நாவலும் உருக்கொண்டுள்ளது. கூடவே இனிமேல் முடிகிறதோ என்னமோ இதிலேயே இந்த வாழ்வு தந்த அனைத்தையும் மொழியாடிப் பார்த்திட வேண்டும் என்கிற பெரு விருப்பமும் (றுடைட) கதைசொல்லிக்குள் வினைபுரிவதை ஒரு வாசகன் என்ற முறையில் உணர முடிகிறது. மேலும் இவைகள், எடுத்துரைக்கின்ற கதைசொல்லிக்கு நிகழ்ந்த தனிப்பட்ட நிகழ்வுகளாக மட்டும் இல்லை; தன்னையும் தன் சூழலையும் புறப்பொருட்கள் போலப் பார்ப்பதற்குத் தகுந்தவாறு தன்னிலிருந்து வெளியேறி ஒரு பார்வையாளனாகத் தன்னைப் பாவிக்கப் பழகிக் கொண்ட எந்த ஒருவர்க்குள்ளும் நிகழ்கின்றவைகள்தான். ‘எனக்குள்ளும் இவைகள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன’ என்று நாவலை வாசித்துக் கொண்டு போகும் போதே பலதடவை என் மனம் சொல்லிக் கொண்டது. ஓர் எழுத்தின் அதிகபட்ச வெற்றி என்பது இதுதான். வாசகனுக்குள் அவனுக்குப் பிடிபடாமல் கிடப்பவற்றைப் பிடித்துக் கையில் கொடுப்பதுதான் அழகியல் கலையின் இரகசியமாக விளங்குகிறது.

 மற்றொன்றையும் சொல்ல வேண்டும்; எந்த ஒன்றிற்கும் ஏதாவதொரு தத்துவத்தைப் பயன்படுத்தி ஏதாவதொரு கோணத்தில் பெரிதாக வியாக்கியானம் எதுவும் செய்யாமலும் ‘இப்படித்தான் இது’ என்று முடிவுகளுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளாமலும் “இப்படி இப்படி நிகழ்கின்றன் ஒரு பயணி என்கின்ற முறையில் அவைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டே போகிறேன்” என்ற விதத்தில் மொழியாடல் இந்த நாவலில் நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளது. இந்த விதம் என் போன்ற அறுபது வயதைத் தாண்டிய வாசகனுக்குப் பெரிதும் இதமாக இருக்கிறது. இருபது, முப்பது வயதுகளில் எதிலும் படார் படாரென்று முடிவுகளை முன்மொழிந்த மனத்திற்கு அறுபது வயதுகளுக்குப் பிறகு எதிலும் முடிவுகளை மேற்கொள்வது அருவருப்பாகப் படுகின்றது. இந்த விசித்திரமான ஒரு உணர்வுச் சுழி எனக்குள் வினையாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நாவல் வாசிப்பு எனும் நான்கு நாள் பயணத்தில் கண்டு கொண்டேன்.

II
 தன் திறனாய்வின் மூலம் தொல்படிவங்களையும் தொன்மங்களையும் இலக்கியத்தின் முதலிடத்தில் நிறுத்திய நார்த்தராப் ஃப்ரை சொல்லுகிறார்:- “ஒரு எழுத்தை விளக்கிக் கொண்டிருப்பது அல்ல திறனாய்வாளனின் வேலை; திறனாய்வு என்ற பேரில் நடந்திருப்பவைகளைக் கவனித்தால், பொதுவாகக் கூறுதலெனும் சேறு; புத்திசாலித்தனம் மிகுந்த அதிகாரத்தனமான அறிவிப்புகள்; அழகு அழகான கருத்துரைகள்; நாநலம் மிக்க சொற்பொழிவுகள் - இவைகளுக்கிடையே அதிர்;ச்சியோடு நாம் அலைந்து திரிய வேண்டிய நிலை வருகிறது” என்கிறார் அவர்; அவருடைய அணுகுமுறையில் திறனாயும் வேலைப்பாடு என்பது ‘ஒரு படைப்பு எந்தெந்தத் தொன்மங்களின் மேல்- தொல்படிவங்களின் மேல் - எழுப்பப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டடைவதுதான். இன்று - இந்தக் கணத்தில் - எழுதப்படும் எந்தவொரு எழுத்திற்கும் கூடப் பழைய தொன்மங்கள்தான், தொல்படிவங்கள்தான் அடிப்படை அமைத்துக் கொடுக்கின்றன என்பது அவரது வாதம். இந்த அடிப்படையில் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற இந்த நாவலுக்குள் பயணிக்க விரும்புகிறேன்.

III

 மனித உயிர்களின் இரைக்கான போராட்டம் என்பது மற்ற உயிர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மற்ற உயிர்கள் இயற்கையை மட்டும் சார்ந்திருக்கின்றன. ஆனால் மனிதர்கள் தங்கள் மூளை, உடல் மூலம் இயற்கையின் மேல் நிகழ்த்திய உழைப்பின் காரணமாக இயற்கையை மறு உற்பத்திக்கு உட்படுத்திய முறைமையின் விளைவாகச் சமூகமெனும் இரண்டாவது பெருவெளிக்குள்ளும் இரையின் பொருட்டுச் சிக்கியுள்ளார்கள்; எனவே இவர்களது இரை தேடல் வயிற்றுக்கானது என்பதிலிருந்து கடந்து பல்வேறு சிக்கலான பரிணாமங்கள் பெற்றுப் பல்வேறு நுண்ணிய கிளைகளாகப் பரந்து கிடக்கின்றது. எனவே வேட்டைச் சமூகம் தொட்டு அல்லது மேய்ச்சல் சமூகம் தொட்டு இரைக்காகப் புலம் பெயரும் மற்ற உயிர்களைவிட, மனித உயிர்களின் புலம்பெயர்தல் என்பது பன்மடங்கு சிக்கலாகவும் பரவசம் மிக்கதாகவும் ஆகிறது. கூடவே மனிதர்களுக்கு வேளாண் தொழில் காரணமாக நிலமென்பது இடமாக, வீடாக, தெருவாக, ஊராக, நகரமாக, நாடாகப் பரிணாமம் பெற்று விடும் போது அந்த ‘நிலம்;’, தொடர்ந்து அவர்களது உடலின் மேலும் உள்ளத்தின் மேலும் வினைபுரிகிற மற்றொரு ‘சக்தி’யாக மாறி விடுகிறது. எனவே புலம்பெயர்தல் என்பது மனிதர்களின் வாழ்வியலில் ஆதிகாலம் தொட்டுத் தவிர்க்க முடியாததாக ஆனது போலவே அது தரும் மன வலியும் பரவசமும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது. இத்தகைய ஆதிகால மன வலியும் பரவசமும்தான் இராமாயணம், மகாபாரதம், ஒடிசி, இலியத், சிலப்பதிகாரம் முதலிய காவியங்களாக மாற்று வடிவம் எடுத்து மனிதர்களின் மனத்தில் நிலையாக இருப்புக் கொண்டிருக்கின்றன. ஆதிகாலக் காவியங்கள் அனைத்திலும் மனிதர்கள் நிலப்பரப்பு முழுவதும் புலம்பெயர்ந்து அலைதலின் நீள்வலிகள்தான் அழகியலாக வடிவம் பெற்றுள்ளன. எனவே புலம்பெயர்ந்து வாழ்தலும் அதன் வலியும் தொல்படிவங்களாக நமக்குள் உறைந்து கிடக்கின்றன. தமிழவன் அந்தத் தொல்படிவத்தைதான் தனது எடுத்துரைப்பிற்கான அடித்தளமாக இந்த நாவலில் அமைத்துக் கொண்டுள்ளார்.

 நெருக்கடி வேளையில் வட்டவடிவச் சூரியனையும் விஸ்கியையும் தேடும் சந்திரன் எனப்படும் கம்ப்யுட்டர் இன்ஜினியர் தன் இரை தேடி போலந்தின் தலைநகரான வார்ஸாவிற்குப் புலம்பெயர்கிறார்; போலந்தில் இந்தியா போல் கம்ப்யுட்டர் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை; இந்தியாவில் இதனுடைய அமோக வளர்ச்சியை நாவலில் ஒரு கதையாடல் மூலம் கதைசொல்லி பதிவு செய்கிறார்.

 “தற்கால இந்தியர்கள் ஏன் கம்ப்யுட்டருக்குப் போகிறார்கள்?” என்ற பியோத்தரின் கேள்விக்கு சந்திரன் “சாப்பாட்டுக்கு” என்று பதில் சொல்லுகிறான்.

 “கம்ப்யுட்டரைச் சாப்பிடுவார்களா?” என்று எல்லோரும் சிரிக்கிறார்கள்; அப்பொழுது அன்னா சொல்வதாகக் கதை சொல்லி இப்படி எழுதுகிறார்:-

‘தெரியாதா பியோத்தர் உனக்கு? சீனாவில் பாம்பு, தவளை சாப்பிடுவது போல இந்தியாவில் இப்போது பிரதான உணவு கம்ப்யுட்டர். விவசாயிகள் எல்லாம் அரிசி, கோதுமை என்று பயிரிடாமல் கம்ப்யுட்டர்தான் பயிர் செய்கிறார்கள்’ (ப.266)

இந்த மொழியாடல் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடந்தேறிக் கொண்டிருக்கும் கம்ப்யுட்டர் கல்வி நிறுவனங்களின் குப்பை போன்ற பெருக்கம், விவசாய நிலங்கள் அதற்காகப் பறிபோகும் கொடுமை எல்லாம் நமது காட்சிக்கு வந்து போகின்றன. இவ்வாறு “சாப்பாட்டிற்குப்” புலம்பெயரும் சந்திரன் உலகம் வார்ஸாவில் என்னவாக இருக்கிறது? இதுதான் மிகவும் ஆர்வம் தரத்தக்க வி~யமாகும்; புலம்பெயரும் உள்ளங்களின் இயற்கைப்படி அவன் மன உலகம் முழுவதும் தான் புறப்பட்டு வந்த தாய் மண்ணின் நினைவுகளால்தான் நிரப்பப்பட்டுக் கிடக்கிறது; புலம்பெயர்ந்தவர்களின் மனஅமைப்புப்படிச் சந்திரனின் மனத்திற்குள்ளும் அங்கே, இங்கே என்ற இடம் சார்ந்த உணர்வுகள் ஆழமாக ஓடிய வண்ணமாகவே இருக்கின்றன் நாவலின் பெரும் பகுதியை நிரப்புவது இந்த உணர்வும் இந்த உணர்வினால் விளைந்த எண்ண ஓட்டங்களே ஆகும்.

 இவ்வாறு சட்டப்படிப் புலம்பெயரும் சந்திரன் மட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக நாடுகளின் எல்லைகளைக் கடந்து புலம்பெயரும் காட்சிகளை இந்த நாவல் அக்காட்சிகளுக்குத் தேவையான பதட்;டத்தோடும் பரிதாபத்தோடும் சித்திரித்துள்ளது. சோவியத் ய+னியன் உடையாமல் இருந்த காலத்தில் இந்தியாவிலுள்ள கம்ய+னிஸ்ட் கட்சியின் உதவியினால் ஒரு பேங் ய+னியன் தலைவரின் மகன் மாஸ்கோவில் படிக்க வந்து சோவியத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் விளைவாகப் படிப்பைத் தொடர முடியாமல் எல்லைகளில் ஆட்களைக் கடத்தும், கோடிக்கணக்கான முதலீடுகளோடு செயல்படும் ஏஜெண்டுகளோடு சேர்ந்து வேலை பார்க்கிறான்; அந்தத் திருநெல்வேலிக்காரன் தன் பெயரை ‘விளாடிமிர்’ என்று சொல்வது மிகப்பெரிய இடதுசாரி இயக்கம், வரலாற்றில் எப்படி முடிந்து போய் விட்டது என்பதைச் சுட்டுகின்ற நகைமுரணாக இருக்கிறது.
 
 ஈழப்போரினால் அக்காவின் நகைகளை விற்றுத் தந்த அம்மாவின் பாசத்தைச் சுமந்தபடி எல்லைகளைக் கடந்து வாழப் புறப்பட்ட மதன் என்கிற குலசிங்கம், ஆப்பிரிக்கா நாடான சோமாலி நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போரினால் நாடு கடந்து வாழ்வைத் தேடும் ஹ_ஸைன், ஏஜெண்டுகள் மூலம் ‘மாஸ்கோ’ வந்து இறங்கும் கும்மாங்குத்து ஆகிய மூவரைப் பற்றியும் விவரிக்கும் பகுதிகள் சட்டத்திற்குப் புறம்பாகப் புலம்பெயர்ந்து வாழ முனைவதிலுள்ள வலியையும் மனித வாழ்வின் அபத்தத்தையும் சித்திரிக்கும் அற்புதமான பகுதிகளாகும். இந்த மூவரில் பின்னால் சிவநேசன் என்று அறியப்படும் ‘கும்மாங்குத்து’ மட்டுமே தப்பித்து வார்ஸாவில் ‘ஒரு கடவுளாக’ வாழ்வை நிலைநிறுத்திக் கொண்டவனாகக் காட்டப்படுகிறான்; இலங்கைத் தமிழன் இரவோடு இரவாகப் பனியாற்றில் இறங்கிக் கடக்க முயலும் போது இறந்து போகிறான்; ஆப்பிரிக்கா இளைஞன் போலீஸ் சோதனையின் போது லாரிக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த பெட்டியில் சுருண்டு கிடந்தவன் போலீஸ் செலுத்திய மின்சாரத்தால் தாக்கப்பட்டுக் கருகிச் சாகிறான்; தமிழவன், உலகம் முழுவதும் ஈவு இரக்கமற்ற எல்லை காப்புப் படையினரையும் ஏமாற்றி நடக்கும் இந்த ‘அண்டர்கிரவுண்ட்’ தொழிலைச் சித்திரிப்பதன் மூலம் புலம்பெயரும் தொல்படிவத்திற்குள் உறைந்து கிடக்கும் நீள் வலிகளைப் புதிய சூழலில் புதிய முறையில் புதிய அழகியலாகப் புதுப்பித்துத் தருகிறார். இதை இன்னும் ஆழமாக உணர்வதற்கு வாசகர்கள் படைப்பிற்குள் போக வேண்டும்; பன்முகத் தளத்தில் பல்வேறு அடுக்குகளாக இந்தக் காட்சிகள் பின்னப்பட்டுள்ளன் சொல்லப்பட்டவைகளைக் கொண்டு சொல்லாதவைகளை வாசிக்கப் பழக்கப்பட்ட வாசகர்களைக் கோரி நிற்கிறது இந்தப் பிரதி.

IV

 இந்த நாவலுக்குள் விரிவாக வினைபுரியும் மற்றொரு தொல்படிவம் ‘தந்தையைக் கொல்லுதல்’ என்கிற படிவமாகும்; தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மாமன் என்றெல்லாம் உறவுகள் ஏதும் இல்லாத ஒரு மனித சமூகம் வாழ்ந்தது என்பதையே இன்று நம்மால் கிஞ்சித்தும் உணர முடியாத ஒரு வாழ்நிலைக்கு வந்துள்ளோம்; உண்மையில் எல்லாவிதமான அதிகார உருவாக்கங்களுக்கும் ஊற்றுக் கண்ணாக அமைந்தது ஆண்-பெண் பாலியல் உறவில் வந்து சேர்ந்த ‘தந்தைத்தனத்தின்’ தோற்றம்தான்; அதிகாரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ‘லிங்கமையவாதம்’ என்பது இந்தத் தந்தைத் தனத்தின் குறியீடுதான். விதையின் மூலமாகப் பயிரிடுதலை அறிந்து கொண்ட ஒரு ஆதிகாலச் சமூகத்தின் பழக்க வழக்கத்தில் இருந்து தோன்றிய சிந்தனை மூலமாகக் குழந்தை உற்பத்தியில் பெண் ஈடுபடுவதற்கு ஓர் ஆண் தேவை என்பது உணரப்பட்ட அந்தக் கணத்தில் இருந்தே ‘தந்தைத்தனம்’ உருக்கொள்ளத் தொடங்கி விடுகிறது. தாய், சேய் என்கிற முதல் இரட்டையர்களுக்கு நடுவில் இப்பொழுது மூன்றாவதாக தந்தை
நுழைந்து முக்கோணம் உருவாகிறது; அதிகாரத்தின் அடையாளமாக வளர்த்துக் கொள்வதன் மூலம் தந்தை, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுகிறான். ஆண் மேலாண்மைச் சமூகம் இறுகும் போது, மதத்தின் துணையோடு பெண் வெளியே நிறுத்தப்பட்டுத் தந்தை-மகன்-புனித ஆவி என்ற வடிவம் புனையப்பட்டுப் ‘புனிதக் குடும்பம்’ கட்டமைக்கப்படுகிறது. தந்தை, புனிதத் தந்தை ஆகிறான். தாய், தீட்டின் அடையாளமாக்கப்பட்டு வெளியே நிறுத்தப்படுகிறாள். இவ்வாறு ‘அதிகாரம்’ நிலைநிறுத்தப்பட்ட சூழலில், அதிகாரத்திற்கு எதிரான கலகக் கூறுகள் நனவிலி மனத்திற்குள் படிமங்களாக இறுகுகின்றன. அந்த நனவிலி மனத்தின் செயல்பாடாகவே தொடர்ந்து ‘தந்தையைக் கொல்லுதல்’ என்கின்ற தொல்படிவம் மனித சமூகத்திலும் இலக்கிய வெளியிலும் வினைபுரிந்து வருகிறது. தமிழவனின் இந்தப் பிரதியிலும் அந்தத் தொல்படிவம் பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது; மருத்துவக் கல்வி படிக்கப் போன சந்திரனின் மனைவி விஜயா-வின் தம்பி ‘பிரதாப்’இ ஆதிவாசிகளின் ப+மி கேட்கும் இயக்கத்தின் தலைவராகப் - போராளியாக – மாறி வளர்ச்சி அடைகிறான்; (இந்த மாதிரி ஆதிவாசிகளின் ப+மிப் பேராட்டம் குறித்து வரும் இடங்களில் இன்று இந்தியாவில் வட மாநிலங்களில் ஆதிவாசிகள் நிலத்தை ஆக்ரமிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும் மாவோஸ்டுகளை அழித்தொழிக்க இந்திய இராணுவம் உள்நாட்டுக்குள்ளேயே தன் குடிமக்களுக்கு எதிராகப் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரசு பயங்கரவாதத்தை வாசகன் அறிந்திருக்க வேண்டுமெனப் பிரதி எதிர்பார்க்கிறது) அவனைக் காதலித்த வகுப்புத் தோழி அஸ்வினி, என்கவுண்;டரில் அவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு மூலகாரணமாகத் தான் கருதுகிற தன் தந்தையான போலீஸ் கமி~னர் கோதண்டராமனைச் சுட்டுக் கொலைகாரியாக மாறுகிறாள். அதிகாரத்தின் அடையாளமான தன் தந்தையைக் கொன்ற அஸ்வினியை மையமாக வைத்து நாவலில் பல பக்கங்கள் அழகு மொழிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. “தந்தையைக் கொன்றவள் என்ற” இந்தத் தொல்படிவத்தின் மேல் நின்று கொண்டு அவளது வார்ஸா வருகையையும், சிறை வாழ்வையும், அன்பழகன் எனும் அரசியல்வாதியோடு அதே ஆதிவாசி மலைக்குச் செல்லும் காட்சிகளையும், அவள் சந்திரனுக்கு அனுப்பும் இ-மெயில் வழியிலான மடல்களையும் வாசிக்கும் போது அந்த மொழிக்கும் வாசிப்பிற்கும் கனம் தானாகக் கூடி விடுகிறது; கனக்க வைப்பதுதானே நல்ல எழுத்தின் அடையாளம். ‘தந்தையைக் கொல்லுதல்’ என்ற தொல்படிவம்தானே சேக்ஸ்பியரின் ஹேம்லெட்டை உலக வாசகர்களின் இதயத்திற்குள் எடுத்துச் சென்றது.

V

 மனித சரித்திரத்தை மார்க்சுக்கு முன்பிருந்த சமூகம், பின்பிருக்கும் சமூகமென இரண்டாகப் பிரித்தறிய பெரிய களம் இருப்பது போல ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப அமைப்பு உருவாவதற்கு முன்பிருந்த சமூகம், பின்பிருக்கும் சமூகமெனப் பிரித்து ஆராயவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அளவிற்கு ஆண் நலம் சார்ந்த குடும்ப அமைப்பு, மனிதர்களின் வாழ்வை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது; இப்படி ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப அமைப்பு உருவான கணத்திலிருந்தே ஆணுக்குள் உருவான ஓர் உளவியல் நோய்தான் பெண்ணைச் சந்தேகப்பட்டு அவஸ்தைக்குள் மாட்டிக் கொள்வது. இந்த நாவலிலும் நீண்ட காலம் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த ஆசிரியை சந்திரனின் மனைவி, விஜயா கருவுற்றிருந்த ஒரு கட்டத்தில் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக் கொள்ளுகிறாள். தன் ஆசை நிறைவேறி விடும் அற்புதக் கணத்தில் அவள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? தன் கதையாடலுக்கான மர்ம முடிச்சுகளை எடுத்துரைக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் கதைசொல்லி, இந்த மர்ம முடிச்சையும் மிக மேன்மையான முறையில் நாவலை வடிவமைப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சந்தேகங்களின் பல்வேறு திசைகளையும் நாவல் சித்திரித்துக் கொண்டே போகிறது; தன்னால் தன் மனைவி கருவுருவதற்கு வாய்ப்பு இருந்ததா? என்ற சந்தேகம் வரும் போது அதிர்விற்குள்ளாகும் சந்திரன் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருந்தும் தவிர்க்கிறான்; தள்ளிப் போடுகிறான்; இந்தச் சந்தேக முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே ஆனால் இதோ அவிழ்க்கப்படப் போகிறது என்கிற மாதிரி பல பாவனையான சித்திரிப்புகளைச் சித்திரிப்பதோடு நாவல் நிறுத்திக் கொள்கிறது. தன் மனைவிகளின் மேலான ஆண்களின் சந்தேகம் அதிகார ஆண் மேலாண்மையினால் மட்டுமா? அல்லது ஆண்-பெண் பாலியல் விளையாட்டில் ஆணின் இயலாமையினால் இது மேல் எழுகிறதா? இந்தப் பிரதிக்குள் ‘சந்திரனுக்குள்’ அப்படியொரு பாலியல் இயலாமை வினைபுரிகிறதோ எனத் தோண்டி அறிவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அவன் தன்னைச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வதையும், பிள்ளையில்லாக் காலங்களில் டாக்டரிடம் காட்டிச் சோதனை செய்து கொண்ட சீட்டுக்கள் கையில் கிடைத்தும் அவற்றைப் பார்த்துத் தெளிவதையும் தவிர்க்கிறான்; மேலும் பெரும்பாலும் வார்ஸாவில் பல பெண்களோடு பழக வாய்ப்புக் கிடைத்தும், அவர்கள் அழகில், அவர்கள் தொடுதலில், அவர்களுடனான உரையாடலில் சுகம் காணும் சந்திரன் அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகராமல் நின்று கொள்கிறான்; இதுபோலவேதான் தற்கொலை செய்து கொண்ட தன் மனைவியோடு பணியாற்றிய பெண் (உடலைத் தன் அதிகாரத்திற்குப் பயன்படுத்தும் பெண்) மேலும் கவர்ச்சி கொள்ளும் சந்திரன் அதற்கு மேல் நகர்வதில்லை; மேலும் அவனுக்கான உடலுறவுக் காட்சிகள் எல்லாம் கனவுகளிலேயே நிறைவேறுகின்றன. (ஒரு சான்று - இயல் -4 இப்படிப் பல இடங்கள்) ‘ஆணின் சந்தேகம்’ என்கின்ற இந்தத் தொல்படிவத்தை முன்னிறுத்தி நாற்பதுகளிலேயே கு.ப.ரா தனது “யார் மேல் பிசகு” என்ற கதையில் வரும் ‘ராஜம்’ என்ற பெண் தன்னைச் சந்தேகப்படும் கணவனைப் பார்த்து இப்படி வெடிப்பதாகப் படைத்துக் காட்டியிருப்பார்:-

“வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா? சொல்கிறேன். என் மேல் எதற்காகச் சந்தேகம் கொண்டீர்கள்? என் நடத்தை கெடாதபடி என்னை முற்றும் உடையவளாக ஆக்கிக் கொண்டதாக உங்களுக்கு உங்களிடத்திலேயே நம்பிக்கை இல்லை; ஆமாம்; அதுதான் அர்த்தம். என் மனத்தைக் கவரவில்லை என்று உங்களுக்கே சந்தேகம்”.

இவ்வாறு நெருப்பு எங்கேயோ பற்றப் போகிறது என்பதை முன்கூட்டியே சொல்லத் தெரிந்த ஒரு பர்மியப் பெண்ணுக்கும், நிலத்தில் எந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறது என்பதை ஒரு குச்சியை வைத்துக் கொண்டே கணித்துச் சொல்லிவிடும் செல்லமுத்து என்ற தமிழனுக்கும் பிறந்த சந்திரனின் “சந்தேகம்” என்கின்ற ஒரு தொல்படிவத்தின் மேல்தான் இந்த நாவல் பல்வேறு காட்சிகளை விரிவாகக் கட்டமைத்துள்ளது.

VI

தொன்மத்தின் சிறப்பே காரண காரியத்திற்கு அப்பாற்பட்ட புலன்கடந்த ஒரு தளத்திற்கு வாசகனை அழைத்துச் செல்வதுதான்; இந்த நாவல் இத்தகைய தொன்மக் கூறுகளின் மேல் குறி வைத்து இயங்குவது போலவே தென்படுகிறது. சந்திரன் வார்ஸாவில் தன்னை வரவேற்பதற்காக அமைத்துக் கொண்ட ‘சிவநேசத்தின் கதை’ ஒரு தொன்மப் படைப்பு போலவே அமைந்துள்ளது; மாஸ்கோ வரை பாஸ்போட்டில் வந்து பிறகு நாடுகளின் எல்லைக்குள் கடத்தும் ஏஜெண்டுகள் மூலமாகக் குடியேறி இன்றைக்கு வார்ஸாவில் “கடவுள் என்னோடு பேசுகிறார்” என்று சொல்லிக் கொண்டு ஒரு கடவுள் போல பிரபலமாகியிருக்கும் கும்மாங்குத்து என்ற ‘சிவநேசம்’ இலங்கைத் தமிழன் போல, ஆப்பிரிக்க மனிதன் போல நாடு தாண்டும் முயற்சியில் செத்துவிடாமல் தப்பித்து வாழ்வதே ஒரு புதிராகப் படைக்கப்பட்டுள்ளது. “நடக்கப் போவதை முன் கூட்டியே சொல்லும்” கடவுளாக வாழ்கிறார். இது மாதிரி நாவல் முழுக்கப் பல காட்சிகள் காட்டப்படுகின்றன. ‘சிவநேசன்’ என்ற இந்தத் தொன்மத்தின் மூலம் கதைசொல்லி சொல்ல வருவது மிக நுட்பமான ஓர் அரசியல் சொல்லாடலாக எனக்குப்படுகிறது. சிவநேசத்தை ‘ஒரு பிராமணன்’ என்று அறிமுகப்படுத்துகிறார் (ப.292) “ஐரோப்பிய நீதிபதி ஒருவரை வியப்பில் ஆழ்த்தும் சக்தி என் அழுக்குப் படிந்த ப+ணூலுக்கு இருப்பது அறிந்து ஆச்சரியம் ஏற்பட்டது” எனச் சிவநேசம் சொல்வதாகக் காட்;டுகிறார்; நாவலின் இறுதியிலும் தன்னை யாரென்றே அறிமுகப்படுத்தாமல் சந்திரனைப் பேட்டி கண்டு வார்ஸாவில் இருந்து வரும் பத்திரிக்கையில் ஒரு கதை போல வடித்துக் கொடுத்துத் தொடர்ந்து தோழமையாகப் பழகி வந்த அன்னா மாலினோவ்ஸ்காவும் அவளது தோழன் பியோத்தரும், பியோத்தரின் ஓவியப் பேராசிரியர் காட்டிய வழியில் அதீத மனிதரான சிவநேசத்தின் பக்தர்களாக மாறி விட்டார்கள் எனக் கதைசொல்லி படைத்துக் காட்டுகிறார்; இந்த அதீத மனிதர்க்கு வார்ஸாவில் நூற்றுக்கணக்கான சி~;யர்கள் என்றும் பதிவு செய்கிறார்; மேலும் லிடியா மற்றும் சாத்தான் வழிபாட்டை முன்னிறுத்தி ஒரு விபத்தில் இறந்து போன அவளது அண்ணன் கதைகள் மூலமாகவும் இந்தியக் கலாச்சாரத்தின் மேன்மைகளாகக் கிழக்கு ஐரோப்பியப் ப+மியில் பரவிக் கிடக்கும் காட்சிகளை விவரித்துள்ளார்.

சந்திரனும்தான் போனான்; ஆனால் அவன் கலாச்சாரத்தைக் கொண்டு போகவில்லை; ஆனால் ஒரு பிராமணன் கள்ளத்தனமாகக் குடியேறினாலும் அவனோடு கலாச்சாரமும் குடியேறுகிறது; இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் இங்கிலாந்திலும் இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யுட்டர் தொழில் காரணமாகக் குடியேறியுள்ளார்கள்; அங்கே எல்லாம் கிழக்குத் தேசக் கலாச்சாரமென ஒன்று கட்டமைக்கப்படுகிறது. அந்தக் கலாச்சாரம் யாருடைய கலாச்சாரம்? மிகவும் சிறுபான்மையினரான பிராமணர்களின் வைதீகக் கலாச்சாரம்தான் அங்கே தமிழ்க் கலாச்சாரமென்று நிலைநிறுத்தப்படுகிறது; விளிம்புநிலையிலிருந்து போன மற்ற தமிழர்களும் இந்தக் கலாச்சாரம் செழிக்கத்தான் ‘சந்தா’ கட்டிக் கொண்டிருக்கிறார்கள்; பெருவாரி மக்களாக இருக்கும் விளிம்புநிலை மக்களின் கலாச்சாரத்திற்கு விமோசனமே இல்லையா? இந்தக் கேள்வியைத்தான் “வார்ஸாவில் ஒரு கடவுள்” என்ற நாவல் முன்வைப்பதாக எனக்குப் படுகிறது. சிவநேசத்தைப் ‘பிராமணன்’ என்று அறிமுகப்படுத்தும் ஒற்றை வார்த்தையில்தான் நாவலின் ஒட்டுமொத்தமும் அடங்கி உள்ளது. இப்படிப் பொருள் கொள்வதன் மூலமாகவேதான் இந்த நாவல் நாம் வாழ்கின்ற இந்த யுகத்தின் நாவலாகப் பரிணமிக்கிறது என நம்புகிறேன்.

தொல்படிவம் என்ற ஒரு கோணத்திலேயே இந்த நாவலைக் குறித்து இவ்வளவு பேச முடிந்துள்ளது; இன்னும் பல்வேறு கோணங்களில் பன்முகமாக அணுகும் போது இந்த நாவலின் முழுப் பரிமாணமும் வெளிப்படலாம்; அதற்கான பல்வேறு அடுக்குகளையும் இடைவெளிகளையும் இது கொண்டிருக்கிறது என்பதையும் ஒரு தீவிரமான வாசகன் என்ற முறையில் என்னால் உணர முடிகிறது.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி – 605008 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9003037904)

Pin It