I   
பழந்தமிழர் புலவர் மரபின் நீட்சியாக இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் புதுவைக்குக் கிடைத்திருப்பவர் புதுவைப் பாவலர் உசேன் அவர்கள். கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், காப்பியம், வில்லுப்பாட்டு, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு என்ற படைப்பிலக்கியத் துறையின் அனைத்துக் களங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் புதுமைப் புலவர் அவர். அவரின் படைப்பு வேகத்திற்கு ஏற்ற இலக்குகளைச் சுட்டிக்காட்டி அவரின் பயணம் தங்குதடையின்றி விரையத் துணைநிற்பதில் எனக்கும் பங்குண்டு. மரபுக் கவிதைகளில் தமது இறுக்கமான வடிவக் கட்மைப்பால் என்றைக்கும் பாவலர்களுக்குச் சவாலாய் விளங்கும் வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் இவரின் செல்லப் பிள்ளைகள். பாவலர் உசேனின் ஐம்பதாவது படைப்பாக வெளிவந்த வீராயி காப்பியம் இரண்டாயிரத்து அறுநூறு (2600) நேரிசை வெண்பாக்களால் ஆனது. அடுத்து ஐம்பத்தோராம் படைப்பாக இவர் எழுதிவெளியிட்ட தாய்நாட்டுக்கே வா! என்ற காப்பியமோ எண்ணூற்றுப் பதினெட்டு (818) கட்டளைக் கலித்துறைப் பாக்களால் ஆனது. கட்டளைக் கலித்துறையால் ஒரு காப்பியம் உருவாக்க முடியும் என்ற புதிய மரபைத் தமிழுக்குத் தந்தவர் இவர்.

பாவலர் உசேனின் புதிய படைப்பு முகவை மா.அ. சுந்தரராசன் அகப்பொருள் கோவை. இதுவரை இவர் தொடாத அகப்பொருள் துறையும் இந்தப் படைப்பின் வழி இவர் வசமாகிறது. இந்நூல் இவரின் அறுபத்தைந்தாம் படைப்பு.

அரிமா மா.அ. சுந்தரராசன். இவர் இராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர், தமிழ்ச் செம்மல், முகவைக் கம்பன், அருட்செல்வர் முதலான  பலசிறப்புப் பட்டங்களைப் பெற்றவர். முகவை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆடிட்டர். எல்லாவற்றுக்கும் மேலாக மிகச் சிறந்த மனிதநேயர். முகவைக் கம்பன் என்று பலராலும் பாராட்டப்படும் சுந்தரராசன் என்னுடைய பார்வையில் ஓர் உண்மையான ஆன்மநேயர். மதங்களைக் கடந்த மனிதநேயமே அவரது ஆன்மீகம். போலி மதவாதிகளை, சடங்கு சம்பிரதாயங்களை வெளிவேசப் பகட்டுகளை அவர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை. சமூகப்பணியே அவரின் சமயப்பணி. அவரின் தனித்தன்மைகளே அவரின் முழுமை. எதிலும் முழுமைகாண நினைப்பதே அவரின் தனித்தன்மை. கம்பன் கழகத் தலைவராக, மிகச் சிறந்த ஆடிட்டராக, அழகர்சாமி வைரமுத்தம்மாள் அறக்கட்டளை நிறுவனராக, அரிமா சங்கத் தலைவராக எனப் பலநிலைகளிலும் அவர் திறம்படச் செயலாற்றி வெற்றி காண்பதன் பின்னுள்ள ரகசியம் அந்த முழுமை நாட்டம்தான். எதிலும் அவர் அரைகுறைகளை விரும்புவதில்லை.

முகவை மா.அ. சுந்தரராசன் அகப்பொருள் கோவை, பாவலர் உசேன் அவர்களால் முகவைக் கம்பன் அவர்களுக்குச் சூட்டும் ஒரு பாமாலை. காலத்தால் அழியாத கவிப்பெட்டகம். மனிதநேய மாமனிதருக்கு அன்புக் காணிக்கை. ஓர் அகப்பொருள் இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவனாகப் புகழப்படும் வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. அரிமா மா.அ.சுந்தரராசனுக்குக் இத்தகைய சிறப்பு கிடைத்திருப்பதற்குக் காரணம் அவரின் உண்மை, உழைப்பு, தொண்டு.

II
கோவை என்ற சிற்றிலக்கியம் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்த இலக்கிய வகையாகும். அகப்பொருள் பல சிற்றிலக்கியங்களில் பேசப்பட்டாலும், கோவை இலக்கியத்தில் அது கிளவித் தொகைகளாக அமைக்கப் பெற்றுத் துறைகளாக விரித்துக் கோவைப்படக் கூறப்படுதலின் கோவை என்றும் அகப்பொருள் கோவை என்றும் ஐந்திணைக் கோவை என்றும் பெயர் பெறுவதாயிற்று.

இறையனார் அகப்பொருள், நம்பி அகப்பொருள், இலக்கண விளக்க அகத்திணையியல் போன்ற நூல்களில் சொல்லப் பட்டிருப்பதைப் போல் தொல்காப்பியத்தில் அகப்பொருள் இலக்கணம் அகப்பொருள் நிகழ்ச்சிகளைத் தொடர்புபடக் கூறவில்லை. இறையனார் அகப்பொருள் உரையில் அகப்பொருள் நிகழ்ச்சித் தொடர்பும் ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற உதாரணச் செய்யுள்களும் கூறப்பட்டுள்ளன. இம்முயற்சியே பிற்காலத்தில் கோவை நூல்கள் உருவாக அடிப்படையாய் அமைந்தது.
பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் நூல்,

கோவை என்பது கூறுங் காலை
மேவிய களவு கற்பெனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப.

என்று கோவையிலக்கணம் கூறுகிறது. எனவே அகப்பொருள் கோவைகள் அகப்பொருள் தொடர் நிகழ்ச்சிகளைத் துறையாய்ப் பெற்று நானூறு கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது என்பது பெறப்படும்.

தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் மிகுந்து கிடைக்கும் அகப்பொருள் கருத்துக்களை இடைக்காலங்களில் பரப்பத் தமிழ்ப்புலவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவே கோவை இலக்கியமாகும். தொல்காப்பியக் கருத்தும் சங்கத் தொகைநூல் செய்திகளும் கோவை நூல்களில் மறுபிறவி எடுத்து உலவுகின்றன. அகத்திணை மாந்தர்களுக்குப் பெயரிடுதல் கூடாது என்னும் தொல்காப்பிய நெறியை எல்லாக் கோவை நூல்களும் புறநடையின்றிப் பின்பற்றுகின்றன.

தலைவனும் தலைவியும் தாமே கண்டு தோழியின் துணைகொண்டு காதலின்பம் அனுபவிக்கும் களவொழுக்கம் முதல் ஊரறிய மணந்து விருந்தோம்பி மகப்பெற்று வாழும் கற்பொழுக்கம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நிரல்பட எல்லா நிகழ்ச்சிகளையும் தனித்தனித் துறைகளாக அமைத்து ஒருங்கே அமைவது கோவை என்ற சிற்றிலக்கியத்தின் அமைப்பாகும். கோவை நானூறு பாடல்களால் பாடப்படும் என்பது பொது இலக்கணமாயினும் நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கோவைகளோ மிகப்பல.

அகப்பொருள் கோவை இலக்கியங்களில் பாடல்களில் பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவகைத் தலைவர்களுக்கு இடம் உண்டு. கிளவித் தலைவன் என்போன் அகப்பொருள் தலைவன். அதாவது புனைவுப் பாத்திரம். பாட்டுடைத் தலைவன் என்போன்  புகழப்படும் தலைவன். இத்தலைவனின் ஊரும் பேரும் விரிவாகப் பேசப்படும். இத்தலைவன் நடைமுறைப் பாத்திரம். கோவை நூல்களின் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் பாட்டுடைத் தலைவனைப் பாடுதல் என்ற நோக்கமே காரணமாய் அமைந்துள்ளது. இந்தப் பாட்டுடைத் தலைவர்கள் கடவுளர்களாகவோ, அரசர்களாகவோ, வள்ளல்களாகவோ அமைவதுண்டு. சிறப்பித்துப் புகழ்பாடவோ பரிசில் பெறவோ, அருளைப் பெறவோ பாட்டுடைத் தலைவர்களின் புகழ்பாடும் கோவை இலக்கியங்களில் கிளவித் தலைவனும் தலைவியும் அத்துணை முக்கியத்துவம் பெறுவதில்லை.

சங்க இலக்கிய அகத்திணைத் துறைகள் திருக்கோவையார் காலம்வரை படிப்படியான வளர்ச்சியைப் பெற்றன. நம்பியகப்பொருள் காலம் தொட்டு இலக்கணத்திற்கு இலக்கியம் காணுதல் எனும் புதியநிலை கோவை நூல்களுக்கு ஏற்பட்டது. காலப்போக்கில் அகப்பொருளைப் பாடும் நோக்கம் குறைந்து புலவர்கள் தம்மை ஆதரித்த வள்ளல்களின் புகழ்பாடும் புதிய உத்தியாக அகப்பொருள் கோவையைப் பாடும் மரபு உருவாயிற்று. நோக்கம் பாட்டுடைத் தலைவர்களின் புகழ்பாடுதல் என்றாலும் தமிழின் தனிப்பெரும் செல்வமாம் அகப்பொருள் இலக்கிய மரபைக் காலந்தோறும் கட்டிக்காக்கும் முயற்சிக்கு இவ்வகைக் கோவை நூல்கள் பயன்பட்டன என்பதே உண்மை.

III
பாவலர் உசேனின் முகவை மா.அ.சுந்தரராசன் அகப்பொருள் கோவை, இருபத்தோராம் நூற்றாண்டின் புத்திலக்கியம். பழைய மரபைப் பேணும் ஓர் அரிய படைப்பு. நானூறு பாடல்களால் பாடப்படும் கோவை மரபைச் சற்றே தளர்த்தி 113 (நூற்றுப் பதின்மூன்று) பாடல்களால் இக்கோவையைப் பாவலர் உசேன் யாத்துள்ளார். கோவை இலக்கியம் என்றாலே காதல் இலக்கியம்தான். காதல் இலக்கியங்களுக்கே உரிய உறவும் பிரிவும், இன்பமும் துன்பமும் இவ்விலக்கியங்களில் விரவிக் கிடக்கும். கோவை இலக்கியம் பாடுவது அத்துணை எளிய செயலன்று. நான்குவரிக் கட்டளைக் கலித்துறைப் பாடலில் ஓர் அகப்பொருள் துறையின் உரிப்பொருள் பாடுபொருளாகி கிளவித் தலைவர்களின் ஒழுக்கம் பேசப்பட வேண்டும், அதேசமயம் அந்தப் பாடலுக்குள்ளேயே பாட்டுடைத் தலைவரின் சிறப்பியல்புகளில் ஏதேனும் ஒன்றனை விவரித்துச் சொல்லவும் வேண்டும். இடையில்  ஓரடிக்குப் பதினாறு, பதினேழு என எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறையின் யாப்பும் பேணப்பட வேண்டும். அன்றைக்குப் புலவர்கள் எப்படித்தான் பாடினார்களோ? ஆனால் இன்றைக்கு இப்படி ஓர் இலக்கியம் படைக்க உண்மையிலேயே பெரிய துணிவு வேண்டும். பாவலர் உசேனின் அந்தத் துணிவு பாராட்டத்தக்கது.

நிறைவாக, அணிந்துரையை முடிக்குமுன் ஏதாவது ஒரு பாடலை எடுத்துக்காட்டி முடிக்கலாமென்றால், நூலின் 113 பாடல்களில் எந்தப்பாடலை எடுத்துரைத்துப் பாவலரைப் பாராட்டுவது என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு சுவை, ஒன்றையொன்று மிஞ்சும் சுவை. எதைச்சொல்ல.. எதைவிடுக்க..
சரி, நூலின் நிறைவுப் பாடலையே சொல்லி முடிக்கிறேன்.

விடத்தைத் தலைவி தரினும் தலைவன் வியனமுதாய்
உடனுண்பான் அன்புற ராசன்வாழ் வெற்பின் உயர்வுபெற்றாய்
கடலினும் ஆழம் மலையின் உயரமாம் காதலர்கள்
இடையில் இடைவெளி இல்லையாம் பேரன்பிற் கீடிலையே!

இப்பாடல் கற்பியல் பகுதியில் இடம்பெறும் செவிலிக் கூற்றுப் பாடல், அதாவது திருமணத்திற்குப் பின்னர், தலைவன் தலைவி இருவரும் மனமொத்த வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதனை நேரில் பார்த்து மகிழ்ந்த செவிலி நற்றாய்க்கு அவர்கள் அன்பின் மிகுதியைக் கூறும் பாடல்.

தலைவி, தலைவன் உடனான காதலன்பு கடலைவிட ஆழமானது, மலையைவிட உயரமானது. அவர்கள் இடையே மனத்தளவிலோ, உடலளவிலோ இடைவெளியே இல்லை. அவர்கள் உள்ளமொத்த வாழ்வு நடத்துகின்றனர். தலைவி விடமே தந்தாலும் தலைவன் அதனை அன்போடு அமுதம் என மதித்து உண்பான் என்கிறார் கவிஞர். இது அவர்களின் உள்ளப் பிணைப்பினைக் காட்டுகிறது. செவிலி நற்றாயிடம் சொல்கிறாள் இத்தகைய பெருவாழ்க்கை வாழ்க்கை வாழும் தலைவியை நீ பெற்றதனால் சுந்தரராசனார் வாழும் மலையின் உயர்வையும் பெருமையையும் நீ பெற்றுவிட்டாய் என்று. ஆக இப்பாடல் தலைமக்களது அன்பின் மிகுதியைக் குறுந்;தொகை பாடலொன்றை (நிலத்தினும் பெரிதே..) நினைவு படுத்தும் விதத்தில் சொல்வதோடு பாட்டுடைத் தலைவர், கிளவித் தலைவர்களது பெருமையினையும் பேசுகின்றது. ஓசையினிமை பெற்ற கட்டளைக் கலித்துறையின் இலக்கணங்கள் முற்றும் பொருந்திய இவ்வகைப் பாடல்கள் 113 இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு சுவை, ஒவ்வொரு நயம்.

இந்நூல் முகவை மா.அ.சுந்தரராசன் பெருமையை மட்டும் பேசவில்லை. இராமநாதபுரத்தின் வரலாற்றுப் பெருமைகள் பலவற்றையும் விரிவாகப் பேசுகிறது. மாவீரன் சேதுபதி, தியாகச் செம்மல் முத்துராமலிங்க சேதுபதி, வள்ளல் சீதக்காதி முதலான வரலாற்று நாயகர்களின் பெருமைகளையும், விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பியது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் இந்நூல் பதிவுசெய்கிறது. இராமநாதபுரச் சீமையின் வீர வரலாற்றை, காலத்தால் கரைந்து போகாத பல உண்மைகளையும் பேசும் இக்கோவை நூல் அனைவராலும் மதித்துப் போற்றிப் பாதுகாக்கத் தக்க அரிய இலக்கியம் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியா. நல்ல நூல்களை ஏற்றுப் போற்றும் தமிழ்கூறு நல்லுலகம் பாவலர் உசேனின் முகவை மா.அ.சுந்தரராசன் அகப்பொருள் கோவையையும் வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன் பாவலரை வாழ்த்தி முடிக்கிறேன்.

முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-8

Pin It