மாநகரங்கள் கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கின்றன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கிராமங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. மூன்றும் முன்னொரு காலத்தில் காடுகளாக இருந்தன. தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருகின்றன.காடுகளின் அளவு குறைவு கேடுகளின் அளவை அதிகரிக்கிறது. காட்டை மட்டுமல்ல இயற்கையின் அனைத்து செல்வங்களையும் மனிதன் அழித்து வருகிறான். அசுத்தப் படுத்துகிறான். அழுக்கு ஆக்குகிறான். இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையாக மனிதருக்கு எதிராக அமைகின்றன. இயற்கையை  அழிக்கும் முயற்சியில் மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். காட்டைக் காக்க வேண்டும் என்னும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் செயலில் இறங்கியுள்ளனர். சிலர் எழுத்தில் இயங்குகின்றனர். இரண்டிலுமே தன்னை அர்ப்பணித்து முன்னுதாரணமாய் இருப்பவர் கோவை சதாசிவம். மண், மயிலு, சிட்டு என்னும் ஆவணப்படங்களின் மூலம் தன்னுணர்வை வெளிப்படுத்தியவர் 'உயிர்ப் புதையல்' என்னும் தொகுப்பை அளித்துள்ளார்.

"காடும்
காடு சார்ந்த உலகமும்
பரந்து கிடக்கின்றன
வாருங்கள்
பயணிப்போம் " என வாசிப்பவரையும்  'காட்டுக்குள்' அழைத்துச் செல்கிறார். காடு குறித்த ஒவ்வொரு கட்டுரையும் காடாகவே விரிகிறது.

'மேற்குமலைத் தொடர்களைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் அடிவயிற்றுச் சுருக்கங்கள் நினைவிற்கு வருகிறது' என 'அம்மாவின் அம்மா' வில் குறிப்பிட்டுள்ளார். மலைக்குச் செல்ல அமைத்த சாலைகளே 'மழையழிவின் முதல் தொடக்கப்புள்ளி' என்கிறார். இம்மலைத் தொடரே மருத நிலங்களைச் செழிப்பாக்குகிறது என்று அறியச் செய்துள்ளார். மலையை சுற்றுலாவிற்காக பயன்படுத்திக் கொள்வோரைச் சாடியுள்ளார்.

மலையை அம்மா என்றவர் ஆலமரத்தை தாய்மடி என்கிறார். 'மரமென்னும் தாய்மடி' யில் மரங்களின் அவசியத்தைக் கூறுகிறார். எவ்வாறு பயன்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார். ஆலமரங்களை அழித்ததால் வெப்பம் அதிகரித்துள்ளன என்பது அனுபவிக்கும் ஒன்று. ஆலமரம் இல்லாது போனதையும் இருப்பதைக் காத்து குழந்தைகளுக்கு நேரில் காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்றறிவுறுத்தியுமுள்ளார்.

'மாமழை போற்றுதும்' என்பது இரண்டாம் பகுதி. இந்தியாவில் அதிகம் மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி போல் தமிழகத்தில் நீலகிரி கூடலூரில் உள்ள 'தேவாலா' என அறியச் செய்கிறார். ஆண்டுக்கு 120 நாள்கள் மழை பெய்த நிலை மாறி தற்போது 30 நாள்களே பெய்கிறது என வருந்தியுள்ளார். மக்கள் குடியேற்றமே மழை குறைவிற்கு காரணம் என்கிறார். காட்டை ஆக்கிரமிப்பவர்களை காலி செய்யாமல் மலைவாழ் மக்களை நெருக்கும் அரசைக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மக்களை 'காட்டின் குழந்தைகள்' என்பது ஏற்புடையதே. மலையுடன் மலைவாழ் மக்களையும் காக்க குரல் கொடுத்துள்ளார்.

'நாடு நாடாக இருக்க வேண்டுமெனில் காடு காடாக இருக்க வேண்டும்' என்று 'படிக்க வேண்டிய பாடம்' மூலம் உணர்த்தியுள்ளார். வழிபாட்டு உரிமை என்னும் பெயரில் காட்டை இரத்த சேறாக்குவது கூடாது என்கிறார். காட்டிலிருந்து நகரத்திற்கு பெயர்ந்து விழாவன்று காடு வந்து கொண்டாடுபவர்களையே சாடியுள்ளார். ஜார்கண்ட் மாநில ராஞ்சி  மாவட்ட பழங்குடியினரை வைத்து எழுதப்பட்டுள்ளது.'கானகம் ஒரு கருவூலம்'  கட்டுரையில் அதன் சிறப்பை விரிவாகக் கூறியுள்ளார். பயணமாக சென்று அனுபவித்து எழுதியுள்ளார்.'இன்னும் மனித குலம் இனம் கண்டறியாத உயிர்களின் இருத்தலை அடைக் காத்துக் கொண்டிருக்கும் அரிய பெட்டகம்' என்பதும் குறிப்பிடத்தக்கது.

'விதைநெல்' முக்கியமானது. மரபனு மாற்றுப் பயிர்களை எதிர்க்கிறது. வேண்டாம் என்கிறது. தற்சார்ப்மிக்க இயற்கை வேளாண்மையே நல்லது என்கிறது. மரபனுவால் விளைந்த தீமைகளையும் விளையப்போகும் ஆபத்துகளையும் கூறியுள்ளது. மரபனு மாற்று பயரிகளைத் தடுத்திட பசித்துச் சாப்பிடும் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நதிகளைப் பற்றி எழுதிய பகுதி 'நீரலானது உலகு' . தமிழகத்தில் 33 நதிகள் உள்ளன எனத் தொடங்கி ஒவ்வொன்றும் எவ்வளவு தூரம் பயணிக்கின்றன.,எத்தனை ஏக்கர்களுக்கு பாய்கின்றன என ஏராளமான புள்ளி விவரங்களைத் தந்துள்ளார். குறுக்கே எத்தனை அணைகள் உள்ளன என்பதையும் அறியச் செய்கிறார். நகரங்களும் தொழிற்சாலைகளும் பெருகுவதே நதிகளின் சிதைவிற்குக் காரணம் என்கிறார். நதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். இறுதியில் மனத்துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். நதிகளுக்காக பலர் குரல் எழுப்பி இருப்பினும் 'நொய்யல்' நதிக்கே ஏராளமானோர் ஆதரவு தந்துள்ளனர். குறிப்பாக படைப்பாளிகள் கதை, கவிதை, ஆவணப்படம், கட்டுரை என எல்லா வகைகளிலும் 'நொயய்ல்' பாய்ந்துள்ளது. கவிஞராக கோவை சதாசிவமும் கவிதை இயற்றியுள்ளார். 'நொய்யல் உயிரு்ட்ட வேண்டிய நதி' என தலைப்பிலேயே நொய்யல மீதான அக்கறையைக் காட்டியுள்ளார். நதியின் வரலாறு தொடங்கி அதன் அழிவு வரை முழுமையாக எழுதி மீட்டெடுக்க வேண்டியுள்ளார்.

பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்ததில் மனிதருக்கு உதவுகின்றன. இயற்கையை வளர்க்கின்றன. அதிலொன்று 'இருவாச்சி'. 'அருகி வரும் இருவாச்சிகள்'க்காக வருந்தியுள்ளார். ஒரு சிறுகதையை , ஒரு கவிதையை வாசித்த உணர்வை இப்பறவைகளின் வாழ்வை விவரிக்கையில் ஏற்படுகிறது என்று பரவசிக்கிறார். அதன் பண்புகளை, செயல்களை அழகாய்க் கூறி இறைச்சிக்கும் சிறகுக்கும் வேட்டையாடுதல் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பறவைகளைக் கொல்வது முட்டாள் தனம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரம் , மழை,மலை, காடு,நதி என இயற்கையை நேசிக்க வலியுறுத்தியவர் 'உயிர்களிடத்தில்'உம்  அன்பு செலுத்த வேண்டும் என்கிறார். குரங்கைப் பற்றி பேசியுள்ளார். குறிப்பாக சிம்பன்ஸி .மனிதர்கள் சிம்பன்ஸியை துன்புறுத்த மாறாக அது மனிதர்களையே துரத்தியது என்னும் ஓர் உண்மை நிகழ்வை எடுத்துக்காட்டாக்கித் தந்துள்ளார். 'உலகில் சுமார் 400 வகையான குரங்குகள் வாழ்கின்றன' என்னும் தகவலும் உள்ளது. அடுத்து 'வரையாடுகள்' பற்றியது. கட்டுரைத் தலைப்பு 'புவி மீது வரையாடுகள'. ஆனால் ஆடுகள் குறித்து பேசவேயில்லை.மலைகளைச் சுற்றுலா தலமாக்கக் வேண்டாம் என்பதே முதன்மையாக உள்ளது.தாய் வழிச் சமூகத்தின் கூட்டு வாழக்கையை இன்றளவும் தொடரும் காட்டு விலங்குதான் யானை என யானையை அறியச் செய்யும் பகுதி 'யானைகள் என்பது காட்டின் ஆதார உயிர்'. யானைகளின் செயல்களைக் கூறியதுடன் அவைகள் காட்டுக்கு எவ்வாறு பயனுள்ளதாக விளங்குகின்றன என கூறியுள்ளார். காட்டு வழிகளை உருவாக்குவதும் ஊற்றுப் பறிப்பதும் யானைகளே என்பன போன்ற செய்திகள் வியப்பளிக்கின்றன. மனிதர்கள் காட்டை ஆக்கிரமித்ததால் நகரத்துககு வந்த யானைகைள காட்டுக்கு திருப்பும் முயற்சியில் தொடர் வண்டியில் சிக்கி பலியானதை விவரித்த விதம் கனக்கச் செய்கிறது.எதிர் காலத்தின் இயற்கைக் காட்சி. இறந்து கிடக்கும் யானைகளின் இரத்தச் சாட்சி் என்னும் வரிகள் இரத்தத்தை உறையச் செய்தது.யானையைத் தொடர்நது 'புலி வளமையின் குறியீடு' என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.புலிகள் வாழும் காடே வளமையானது எனப்தற்கான ஆதாரங்களைத் திரட்டித் தந்துள்ளார். புலியைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் புலி வாழும் என்னும் நம்பிக்கையும் ஏற்படுகிறது என்பது சுட்டத்தக்கது.

'இராகுலஜியின் நூல் ஒரு மீள்பார்வை' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை. இது ஒரு விமரிசனம். 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் நூல் குறித்தானது. ஒரு நல்ல விமர்சனம் எனினும் பூமியில் வாழும் உயிர்கள் இயற்கையை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என தொகுப்பு உணர்த்துவதாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆற்றின் கரைகளை அழகுப்படுத்துவது மணல். நீரை தன்னுள் சேமித்து வைத்திருக்கும் தன்மையுடையது. மனிதர்கள் வீடு கட்டுவதற்காக ஆறு சிதைக்கப்படுகிறது. மணல்  கொள்ளையடிக்கப் படுகிறது.மணல் திருட்டை எதிர்க்கும் கட்டுரையாக அமைந்துள்ளது 'மணல்.பூமியின் மேலாடை'. மணல் கொள்ளையடிப்பவர்களையும தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசையும் கண்டித்துள்ளார்.கடல் மணலுக்கும கை கொடுத்துள்ளார். மணல் திருட்டு ஊற்றுக்கு வழி வகுக்காது என்கிறார்.

கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர். இது முது மொழி. கட்டுரையாளர் 'கையளவு கடல் கடலளவு நஞ்சு' என்று ஒரு புது மொழியை உருவாக்கியுள்ளார். பூமியைப் போலவே கடலிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.அவை அற்புதமானவை . சிலவற்றை சொற்களால் காட்டியுள்ளார். பூமியை நாசம் செய்யும் ஞெகிழி கடலையும் விடவில்லை என்பதே  சாராம்சம். உயிரின் சுழற்சிக்கு இடையூறாய் அமைந்துள்ளன கடலில் கலக்கும் மாசுகள் என்கிறார்.

அணு பேராற்றல் மிக்கது. பேராபத்தானது. இந்தியாவில் பல அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உடலை, க்ட்டடங்களை , புவியைத் துளைத்து அலையும் நியூட்ரினோ என்னும் துணை அணுவை கையகப்படுத்தி ஆய்வு மேற்கொள்ள மேற்கு மலைத் தொடரின்  தமிழக எல்லையில் உள்ள 'சிங்காரா'  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமைந்தால் ஆபத்தே .அனுமதியளிக்கக் கூடாது என்று அரசுக்கும் வேறு இடம் தேர்வு செய்ய விஞ்ஞானிக்களுக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவ்வாறு நடந்தால் 'எல்லா உயிர்களும் தொழும்' என்பது உருக்கமானது.

உலகை உருக்குலைப்பதில் வெப்பத்திறகும் ஒரு முக்கியமுண்டு. அந்த வெப்பத்தையும் உண்டாக்குபவன் மனிதனே. தொழிற்சாலைகள், எரிசக்தி ஆலைகள், வாகனங்கள் மூலம் வெளியாகும் புகையே வாயு மண்டலத்தை வெப்பமாக்குகின்றன.  பூமியை வெப்பப் படுத்துகின்றனது. இதனால் பனி உருகி கடல் மட்டம் உயர்வதால் கடலோராப் பகுதிகளில் வாழும் மக்கள பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பனி உருகலால் ஆறுகளும் வற்றிப்போகும், அணைகளும் ஒரு காரணம் என்பது எண்ணிப் பார்க்க வேண்டியதாகும்.

ஒரு கவிஞராக கலைப்பயணத்தில் தன்னை ஈடுபடுத்தி ஓர் ஆவணப்பட இயக்குநராக நிலை பெற்று ஒரு சூழலியராக தன்னை 'உயிர்ப் புதையல்' மூல்ம் அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் 'இயற்கை'யைக் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாக களத்திற்குச் சென்று அரிய தகவல்களுடனும் ஆதாரத்துடனும் அனுபவத்துடனும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆசையைக் காட்டியுள்ளார். மலைகள், காடுகள், பறவைகள்.,விலங்குகள், நதிகள், கடல் என ஒவ்வொன்றைக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கட்டுரைகளை அமைத்துள்ளார். மக்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளார். இயற்கையைக் காக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக இருந்தாலும் மக்கள வாழவே  இதை உணர வேண்டும் என்பதே இத்தொகுப்பு விடுக்கும் கோரிக்கை. 'பகுத்துண்ணும் பொதுப் புத்தி உருவாக்குவோம்' என்பதன் மூலம் தன் பொதுவுடைமைக் கொள்கைiயும் பரப்பியுள்ளார். இனிமையான சொற்களும் இடையிடையே கையாண்ட கவிதைகளும் கோவை சதாசிவத்தை ஒரு கவிஞர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அழகாக அச்சமைத்து அருமையாக வடிவமைத்து தரமான தாளில் வண்ணப்படங்களுடன் வெளியிட்டு கட்டுரையாளரின் சூழல் காக்கும் ஆர்வத்தை வெளிச்சப்படுத்தியுள்ளது 'வெளிச்சம்'. 'உயிர்ப் புதையல்' ஐ இயற்கையேயளித்த ஒரு விண்ணப்பமாக ஏற்று செயல்படுத்துவதே 'சூழலியியலார் கோவை சதாசிவம்' அவர்களுக்கு அரசு செய்யும் சிறப்பாகும். அவரின் முயற்சி அத்தகையது.

வெளியீடு
வெளிச்சம் வெளியீட்டகம்  
147 அவிநாசி சாலை பீளமேடு கோவை  641 004

Pin It