தோழர் ஜியென்பி அவர்களுக்கு,

வணக்கம். பூங்குயில் பதிப்பக வெளியீடாக ‘அணுசக்தி அறிவியல் – ஆக்கம் –அழிவு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். சமீபத்தில் அந்நூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அணுசக்தி தொடர்பான இக்கட்டுரையின் வழியாக உங்களின் ஆளுமையையும் மார்க்சியத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடும் வெளிப்படுகிறது. மார்க்சீயத்தின் அடித்தளத்தில் நின்றுகொண்டு உங்களுக்கே உரிய உங்கள் பாணியில் கண்களுக்கே புலனாகாத அணுசக்தி என்ற மிகப்பெரிய பூதத்தை அப்பூதத்தின் மறுபக்கம் நிகழ்த்தப்போகும் சமூகஇன்னல்களை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். நீங்கள் சுட்டிய அணுசக்தி பூதத்தின் மறுபக்கம் தற்பொழுது கூடங்குள விளக்கில் இருந்து வெளியேறி நாட்டு மக்களை அதிர்ச்சியூட்டி வருகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

தொழில் பொருள் எந்திரமாக நிறம்மாறி வரும் நம் நாடு தற்சமயம் கூடங்குளம் என்ற ஒற்றைத் தலைவலியால் சபிக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் ஓர் ஆக்க சக்தி என்று அதிகார ஆட்சியாளர்களும், கூடங்குளம் ஓர் அழிவு சக்தி என்று அப்பாவிகள் சிலஆயிரம் பேரும் முறையே ஓசைப்படாமலும் ஆரவாரத்துடனும் எரிந்து கொண்டிருக்கிறோம். கூடங்குளத்துல ஏதோ பிரச்னை போல என்று போகிறபோக்கில் கதைத்துவிட்டு ஏழை விவசாயிகளோ நெற்பயிரை கனவில் கண்டு உறங்குகிறார்கள். அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை நியாயமாகப் பட்டாலும் நிகழ்வு தொடர்பான கூர்ந்த பார்வையாளராக உங்களை இந்நூலில் பார்க்க முடிகிறது.

வாழ்பனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் அணுசக்தி என்ற இக்கட்டுரையினை எளிய மொழிநடையால் கூர்ந்து நோக்கியுள்ளீர்கள்.ஆரம்பக் கல்வியை மட்டும் தாண்டிய பட்டிக்காட்டானும்கூட இப்புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால் அணுசக்தியைப் பற்றியும் அதனால் விளையும் நன்மை, தீமைகள் குறித்தும் அலச ஆரம்பித்து விடுவான். இன்றைய சூழ்நிலைக்கு கூடங்குளம் அவசியமா, அவசியமற்றதா என்ற விவாதத்திலும் பங்கேற்பான். போராளியான, இலக்கியப் படைப்பாளியான தங்களுக்கு யதார்த்த மொழிநடையில் நன்றாக இயங்கத் தெரிந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய பலம்.

இத்தொகுப்பின் அட்டையில் இருந்து முடிவு வரை அணுசக்தி அறிவியலை வெளிப்படையாக நீங்கள் பேசியிருந்தாலும் உங்களது அகக்கண் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் விளையும் சமூகக் கொடுமைகளையும் கண்டு ஆதங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதன் என்ற வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உணர்வு இருந்துவிட்டால் உரிய இலக்கை எட்டி எல்லோரும் பாரதியாக ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று கூத்தாடலாம்.

"நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

என்ற குறளின் வழியில் மனித குல இன்னல்களுக்கு அணுசக்தி எவ்வாறெல்லாம் காரணமாகிறது என்று எடுத்துரைக்கும் கருத்தாளராகவும், உழைப்பாளி மக்களின் கலாச்சாரத்திற்கு புரியும் வகையில் பிரகடனம் செய்யும் செயலாளராகவும் உங்கள் ஆளுமை மேலும் சிறப்படைகிறது. மார்க்சீயப் பார்வை உங்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்ப்பார்க்கலாம். அணு என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து கூடுதல் அக்கறை செலுத்தி எழுதியமைக்காகவும், கனவுகள் யாவும் மெய்படவேண்டும் காரியங்கள் யாவும் கைகூடவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளோடும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
கி.மூர்த்தி

Pin It