பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கவிப்பித்தனின் ஊர்ப்பிடாரி என்ற சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக இடம் பிடித்துள்ள 'அத்திப்பூ செண்பகம்' என்ற சிறுகதையை முன்வைத்து எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.

படைத்த ஆசிரியனுக்கும் அதைப் படிக்கும் வாசகனுக்கும் இடையே ஓர் அனுபவ பரிமாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பே எழுதியவனைத் தாண்டி வாசிப்பவன் மனதில் சிறகடித்து நீண்ட நாட்களுக்கு ஒரு பறவையைப் போல சஞ்சரிக்கும்.

அடர்த்தி மிகுந்த அழகான ஒர் படைப்பே வாசகன் மனதிற்குள் முழுமையாகப் புகுந்து கூடுகட்டிக் கொள்கிறது. கூட்டைச் சுமந்த வாசக மனம் படைப்பு வழங்கிய சுகத்தை, வலியை சில காலம் தன்னுடைய நினைவிலும் கனவிலும் அசைபோட்டு துய்த்த அனுபவத்தை சிலரோடு வியக்கிறது, சிலரோடு விமர்சிக்கிறது. இவ்வாறான வியப்பும் விமர்சனமும் வாசகன் வழியாக வெள்ளமெனப் பாய்ந்து அவன்சார்ந்த நண்பர்களுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் ஊற்றாக மெல்ல மெல்ல நிரம்புகிறது. பின்னர் உரிய நேரத்தில் கலையாக வடிவு கொண்டு படைப்புலகில் உலாவி பதிவு செய்யப்படுகிறது.

இவ்வடிவங்கள் உள்ளங்களைப் பண்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தனவாக திகழ்ந்தால், ஆசிரியன் சமூகப் பொறுப்புள்ள ஒரு கவிஞனாக, கதாசிரியனாக, புனைக்கதையாளனாக, ஓவியனாக அடையாளம் பெறுகிறான். வாழும் அவன் படைப்பின் மீது பாராட்டுகளும் பரிசுகளும் புகழ் மழையாகப் பொழிகின்றன.

ஊர்ப்பிடாரி என்ற சிறுகதைத் தொகுப்பில் 'அத்திப்பூ செண்பகம்' என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள முதல் சிறுகதை, கவிப்பித்தனை ஒரு சிறுகதையாசிரியனாக எப்படி அடையாளப் படுத்துகிறது என்பதற்கான தேடல்தான் என் வாசிப்பு அனுபவம். கதைக்குள் தேடி உணர்ந்த கவிப்பித்தனை சொற்களாக்கி, சிறிது நேரம் இக்கூடாரத்தின் கீழுள்ள தூளியில் உட்கார வைத்து ஊஞ்சலாட்ட முயன்றிருக்கிறேன்.

படைப்பவனுக்கு உள்ள உரிமை வாசிப்பவனுக்கும் உண்டு என்ற நம்பிக்கையின் துணையோடு ஊர்ப்பிடாரியை உதடுகளால் அசைபோட்டு, கவிப்பித்தன் தன் சிறுகதையின் வழியாக எனக்கு அறிமுகப்படுத்திய செண்பகம் என்ற ஆளுமையை, பிம்பத்தை மற்றவர்களுக்கும் சுட்டிக்காட்டுவது கவிப்பித்தனை மேலும் வலுவூட்டும் என நம்புகிறேன்.

அத்திப்பூ என்ற பூவைப் பறித்து கவிப்பித்தன் அவர்கள் தன் சிறுகதைக்கான தலைப்பில் சூட்டி அலங்கரித்திருப்பது நாம் சிறுகதையை ஆவலுடன் படிக்க ஓர் அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது.

அத்திப்பூ பூத்தாற் போல, பூக்காத பூ என்றெல்லாம் நாம் அத்திப்பூவைப்பற்றி பலவாறாக அறிந்திருக்கிறோம். செண்பகம் அத்திப்பூவைப் போல அபூர்வமானவள் என்ற குறிப்பால் நம் ஆவலைத் தூண்டி அத்திப்பூவின் நறுமணத்தோடு கதையை ஆசிரியர் துவக்கியிருக்கிறார்.

செண்பகம் எந்த வகையில் அத்திப்பூவைப் போல அபூர்வமானவள் என்ற தேடலுடன் தொடங்கி நமது வாசிப்பு பயணப்படுகிறது.

மொட்டச்சிமகள் செண்பகம் ஒட்டந்தழையை அரைச்சுக் குடிச்சுட்டு செத்துப்போகிறாள். செய்தியைக் கேள்விப்பட்டு கேழ்வரகு நடவு நட்டுக்கொண்டிருந்த மொட்டச்சி தன் மகளைப் பார்க்க ஓடிவருகிறாள். இந்த இருவரிகள்தான் கதை. இதுவே 'அத்திப்பூ செண்பகம்' என்ற கதையின் சாவித் துவாராம். இச்சாவித் துவாரத்துக்குள் நம் பார்வையைச் செலுத்தினால் நமக்கு விசாலமாகத் தெரிவது மொட்டச்சி மகள் செண்பகத்தின் எட்டுப் பக்க வாழ்க்கைக் கதை.

நான் குறிப்பிட்டுச் சொல்லிய இரண்டாவது வரியைத்தான் கவிப்பித்தன் தன்னுடைய கதையின் முதல் வரியாக ஆரம்பிக்கிறார். என்னுடைய மனதில் நிலைத்து நின்ற முதல் வரிதான் அவருடைய கதையின் கடைசி வரியாக முடிகிறது. இந்த இரண்டு வரிகளுக்குள் இவர் தன் சொற்களால் படமாக்கியிருப்பது நான்கு முத்தான காட்சிகள். இக்காட்சிகள் கதாசிரியன் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன. கிராமிய வாசம் உடுத்திய இவரது கதைப் பாத்திரங்களின் மொழி நாம் பேசும் மொழியாக இருக்கிறது. எனவே சொற்களோடும் நிகழ்வுகளோடும் நெருக்கமாக கைகோர்த்து பயணிப்பது நமக்கு எளிதாக இருக்கிறது.

வடவாண்டை மேட்டு வெள்ளச்சி நிலத்திலிருந்து செண்பகத்தினுடைய வீட்டு முற்றம் வரை வயல் வரப்பில் மொட்டச்சி விழுந்தடித்து கண்மண் தெரியாமல் ஓடிவர நாமும் கதையுடன் ஓடத் தொடங்குகிறோம்.

வீட்டு முற்றத்தில் நுரை தள்ளிய வாயோடு, கண்கள் நிலைகுத்தி செண்பகம் அலங்கோலமாக விழுந்து கிடக்கிறாள். செண்பகத்தைச் சுற்றியுள்ள கதை மாந்தர்கள் ஒட்டந்தழை அரைத்துக் குடித்த செண்பகத்திற்கு முதல் உதவியாக சோப்புத் தண்ணீர், மலக் கரைசல் என்ற மருத்துவச் சிகிச்சையில் கதை வேகம் பிடித்து செண்பகத்தை பிழைக்க வைக்கும் கதை வளர்ச்சியில் நம் மனசும் மெனக்கெடுகிறது.

மருத்துவமணை சிகிச்சையில் செண்பகம் கண்விழித்து அழும்போது அவளது தற்கொலை முடிவுக்கான காரணம் செண்பகம் மொட்டச்சி உரையாடல் வாயிலாக நமக்குச் சொல்லப்படுகிறது. செண்பகம் செத்துப் போகிறாள். ஒரு பெண்ணின் வாழ்க்கை முடிந்து போகிறது. அறுவை சிகிச்சையின் போது ஓர் ஆண் மருத்துவர் தன் உடலை அம்மணமாகப் பார்த்து விட்டார் என்ற காரணத்திற்காகவா ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வாள் என்ற கேள்வி கதையைப் படித்து முடிக்கும் வாசகர் நெஞ்சத்தில் ஓங்கி ஒலிக்கிறது.

கவிப்பித்தன் என்ற ஆளுமையின் மண் சார்ந்த பண்பாடும் கலாச்சாரமும் நாம் சார்ந்த மண்ணுக்கு கைமாற்றப்படுகிறது. எளிய கதைப் பாத்திரங்கள் பரிசளித்துள்ள கிராமத்து பழகுதமிழ் சொற்களின் துணையோடு சிறுகதையின் வெற்றி பயணிக்க தொடங்குகிறது. கவிப்பித்தனை வரவேற்க சாலை நீளத்திற்கும் மலர்தூவி காத்திருக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

Pin It