ஒரு நல்ல படைப்பாளி எவ்விதத்திலாவது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பான். கு.கணேசன் ஒரு நல்ல படைப்பாளி, மரபின் விழுதுகள். முகவரி இல்லா முகங்கள். விழி வாசல் தேடி, தாலாட்டும் தென்றல், உயிரின் ஓசை, இன்னும் இனிக்கிறது, வார்ப்புகள் என்னும் கவிதைத் தொகுப்புகளையும் குழந்தைப் பாடல்களையும் கவிதை கவிதையே என்னும் கட்டுரைத் தொகுப்பையும் சுப்பிரமணிய சிவா என்னும் வரலாற்று நூலையும் சாயல் என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். படைத்தும் வருகிறார், கவிஞர்கள் தொகுப்புகளில் இருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மொத்த தொகுப்பாக வெளியிடும் காலம். கணேசனும் தன் கவிதைத் தொகுப்புகளில் இருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'கு.கணேசன் கவிதைகள்' என்னும் தலைப்பில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்,

திருவிழாக்கள் கிராமத்தின் அடையாளம். திருவிழாவின் போது மக்கள் கூடுவர். மனம் மகிழ்வர். ஆயினும் எல்லோருக்கும் ஒரே விதமாக அமைந்து விடுவதில்லை. வசதிக்கு ஏற்ப மாறுபடும்.

எத்தனையோ
திருவிழாக்கள் வந்தாலும்
எட்டணாவோடு
அப்பா தந்த
திருவிழா இன்னும்
இனிக்கிறது

கவிஞர் இளமைக் கால திருவிழாவை நினைவுக் கூர்ந்துள்ளார். நிலையையும் தெரிவித்துள்ளார். திருவிழாவுடனான அனுபவத்தைக் கூறியுள்ளார். 'இன்னும் இனிக்கிறது' என்னும் இக்கவிதை ஒரு கிராமத்துத் திருவிழாவையே காட்சிப்படுத்தியுள்ளது. திருவிழாக்களை பதிவு செய்வது அவசியம், கணேசன் செய்துள்ளார்.

மாதா பிதா குரு தெய்வம் என்பர். மாதாவைப் பாடுபவர் உண்டு, பிதாவையும் பாடுவது உண்டு. தெய்வத்தைப் பாடுவோர் மிகுதி, குருவைப் பாடுவோர் குறைவு. 'அப்பு வாத்தியார்' என்னும் தன் குருவைப் பாடிய ஒரு 'குரு' கணேசன்.

'அ'கர விதை
ஆலமரமாய்க் கிளைக்க
''அப்பு வாத்தியார்''
எனது எழுத்து வடிவில்
நானெழுதும் தமிழுக்குள்

அப்பு வாத்தியாரை தமிழுக்குள் கண்டுள்ளார். ஆசிரியரைப் பெருமைப் படுத்தியுள்ளார்.

ஆசிரியர் அமைவதைப் பொறுத்தே மாணவரின் வாழ்வு அமையும். கணேசனுக்கு அப்பு குருவாக இருந்ததாலே இன்று ஒரு நல்ல கவிஞராக வலம் வருகிறார்,

பள்ளி நாட்களில்
மரவள்ளிக் கிழங்கை
அமுதமாக்கி
உயிர் வளர்க்கச் செய்ததை
மறக்க முடியுமா? என அம்மாவையும் நினைவுக் கூர்ந்துள்ளார். அப்பா அம்மாவிற்குத் தொகுப்பைச் சமர்ப்பித்துள்ளார். மகளையும் ஒரு கவிதையில் பாடியுள்ளார்.

மாற்றம் என்பது தொடர்ந்து நிகழ்வது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே உள்ளது. மாற்றத்தைத் தவிர்க்க இயலாது. மாற்றத்தைக் குறித்து எழுதியவர் மாற்றத்தால் பழமையை இழந்து வருவதற்கு வருந்தியுள்ளார். மாற்றத்தைத் தவிர்க்க முடியாதது எனினும் மாற்றம் மனித நேயத்துடன் வர வேண்டும் என்கிறார். இதுவும் ஒரு 'மாற்றமா?' என்று வினா எழுப்பியுள்ளார்.

'உலகத்தின் உன்னதங்கள்' என குழந்தைக் குறித்தான கவிதையில்

மௌன மொழியில்
கவிதை சொல்லும்
காலக் கவிகள் என்று வருந்தியுள்ளார். மென்மையான மொழியில்-கவிதை சொல்லும்-காலக் கவியாக கணேசனும் பரிமாணித்துள்ளார்.

படைப்பாளர்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருப்பர். கவிஞர் கணேசனின் நாட்டுப் பற்று வித்தியாசமானது,

சாதிச் சாக்கடையைக் கொண்டு
மூடி வைத்த
சந்தனக் கிணறுகள்

'நம் நாடு' என்று எழுதப் பட்ட இக்கவிதையில் நாட்டு மக்கள் சாதியில் இருந்து மீண்டு வர முயற்சிப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சாதி சாக்கடையால் சந்தணக் கிணறுகளும் நாற்றமடிக்கின்றன என்கிறார். படிமத்தைக் கையாண்டுள்ளார். சாதி இல்லாமல் இருந்தால் சமத்துவமாக நாடு விளங்கும் என்கிறார், ஊர்ப் பற்றும் மிக்கவர் என்பதற்குச் சான்று 'ஏக்கம்'. ஊரைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

கவிதை என்றால் என்ன என்று ஒரு வரியில் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். விளக்கம் கூறி வருகின்றனர். கவிதை என்பது எவருக்காக என்று ஒரு விவாதமும் நடந்து வருகிறது.

மூளையின்
வியர்வைத் துளிகளால்
சிந்தனையில்
முகிழ்த்து
தேடலுக்குத்
தீர்வகம் சொல்வது
கவிதை

என கவிதைக்கு விளக்கம் தந்துள்ளார். வானம் பாடியர் பக்கம் நின்று கவிதை மக்களுக்காக என்கிறார். கவிதை என்பது மக்களுக்கே தீர்வு சொல்ல வேண்டும் என்கிறார். 'கவிதையோடு' தன் நிலையைத் தெரிவித்துள்ளார்.

கவி்ஞரின் கவிதைகள் மனித நேயத்தை முன்னிறுத்தியுள்ளன. பெண்ணியம் பேசியுள்ளன. 'பெண் விடுதலையின் விலை மாதச் சம்பளத்தில் அல்ல' என்பது கவனத்திற்குரியது. பொதுவுடைமையை வலியுறுத்தியுள்ளன. இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளன. மனித முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளன. வறுமைப்பிடியில் இருப்பவர்களைக் 'கவிதை' கொடுத்துத் தூக்கி விட முயன்றுள்ளார். சாதியை மறுத்து சமத்துவம் வேண்டியுள்ளார், குழந்தை சிசு கொலையைக் கண்டித்துள்ளார். மூடநம்பிக்கையை விடுத்து முற்போக்கிற்கு வித்திட்டுள்ளார்.

புதுக் கவிதை எழுதுவது ஒரு கலை. புதுக் கவிதை எழுதுபவர்கள் மரபை மீறியவர்கள். மரபை மறுத்தவர்கள். ஆனாலும் மரபு தெரிந்தவர்கள். மரபில் எழுதியவர்கள். மரபு தெரிந்த புதுக்கவிதையாளர்களே புதுக்கவிதையில் கோலோச்ச முடிகிறது. கவிஞர் கணேசனும் மரபில் மரபின் விழுதுகள், விழி வாசல் தேடி, வாரப்புகள் எனறு மூன்று தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். மரபிலும் திறனாளர் என்று பறை சாற்றுகின்றன கவிதைகள்.

எத்தனை யாட்சி இங்கு மாறினும்
எங்கும் எதிலும் லஞ்சம்
சொத்தைத் தத்துவம் சுகமாய்த் தூங்கிட
சோம்பலில் உறங்குது பஞ்சம்
வித்தாய் விதைத்த வேதமெல்லாம்
விடையே யில்லா மஞ்சம்
நித்தம் நித்தம் நேர்மை அழுதிட
நிலைத்து விட்டது லஞ்சம்

பழைய மரபில் 'புதிய முரசு' கொட்டியுள்ளார். லஞ்சமே ஆட்சிச் செய்கிறது என்கிறார். 'விழி வாசல் தேடி' கவிதை நெடியதாக உள்ளது. சிறுகதையை கவிதையாக்கியுள்ளார்,

குறையின்றி பொருளறிந்து கவிதை பாட
குறையாத உழைப்பொன்றே மூல மாகும்

'கவிதையென்ப' கவிதையில் அறிவுறுத்தியுள்ளார். கவிஞரின் 'உழைப்பு'தெரிகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என்று ஐவகை பூதங்களையும் தனித் தனியாக மரபில் பாடி இருப்பது சிறப்புகளில் ஒன்று,

பெரியவர்களுக்கு பாடியவர் பெரியவற்றைப் பாடிவயர் குழந்தைகளுக்கும் பாடியுள்ளார். 'குழந்தைப் பாடல்கள்' தந்துள்ளார். குழந்தைகளை படி என்கிறார். எழுது என்கிறார்.

படி படி பாடம் படி
பலரும் உன்னைப் புகழப் படி
இனிய தமிழை என்றும் படி
எண்ணும் எழுத்தும் ஏற்கப் படி
படி என்னும் இப் பாடல் பாரதிதாசனின் படிப் பாடலை நினைவூட்டியது,.

படித்து எழுது பாடத்தை எழுது
படித்த பாடத்தைப் பலமுறை எழுது

படிப்பதை விட எழுதுவது சிறந்தது. படிப்பவன் பாதி மனிதன் என்றால் எழுதுபவன் முழுமனிதன். கவி்ஞரும் எழுது என்றே எழுதியுள்ளார். கடிதம் எழுதவும் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகளுக்கு பலவற்றைப் பாடல் மூலம் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு ஏற்ப எளிமையாக. இனிமையாக பாடியுள்ளார்.

கவிஞர் கு. கணேசன் மரபு, புதிது தொடரந்து ஹைக்கூ முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு சான்றாக இரண்டு ஹைக்கூக்கள்,

பாறைகள்
மோதினாலும் உடைவதில்லை
நீர்த் துளி

வயல்களில்
சின்ன சின்ன நிலாக்கள்
காளான்கள்

ஹைக்கூ அமைப்பு இருப்பினும் விடுகதைப் பாணியிலேயே அமைந்துள்ளன. தொடர்ந்து ஈடுபடாது நிறுத்தி விட்டார். தொடர்ந்தாலே அவரின் வெற்றியைக் கணிக்க முடியும்.

தொகுப்புகள் வெளியிடுவது எளிதானதல்ல. வெளியான தொகுப்புகளை வாசிப்பவர் குறைவு. வாசித்தாலும் விமரிசிப்பதும் கருத்துரைப்பதும் அரிது. கவிஞர் கணேசனின் தொகுப்புகள் மீதான எதிர்வினைகளையும் தேர்வித்து தொகுத்து 'கவிதையும் கருத்தும்' தலைப்பில் இத் தொகுப்பில் இணைத்துள்ளார்.

'எதிர் காலத்திற்கான நிலங்களைப் பண்படுத்திக் கொண்டும் நிகழ் காலத்திற்காக விதைத்துக் கொண்டும் கவிதைகள் தொடர்ந்து நடை போட வேண்டும்' என்று கருத்துரைத்ததற்கு ஏற்ப கவிஞரின் கவிதைப் பயணம் தொடர்ந்துள்ளதை அறிய முடிகிறது. 'மக்கட் சமுதாயத்தின் உயிரோட்டங்கள் எழுத்துக்களால் அழகொழுக எழுதிப் பார்க்கின்ற முனைப்பினை அவர் (கணேசன்) படைப்பில் காண முடிகிறது' என்று பேராசிரியர் மா. கோதண்ட ராமன் தெரிவித்துள்ளது உண்மையாகவே உள்ளது. கவிதைகளும் சான்றாகவே உள்ளன. 'கவிதைக்குள் சமுதாயத்தைத் தேடுபவர் தொலைவதே இல்லை' என்று கவிஞரை சமுதாயத்தைத் தேடுபவராக அடையாளப் படுத்தியுள்ளார் கவிவேந்தர் கா. வேழ வேந்தன்.

மரபின் விழுதுகள் மாந்தரின் மாற்று
காப்புறையாம் காலவழிக் காட்டும் முரசு
ஒலியதாய் வூர்ந்து உயிருயிராய்ச் சார்ந்தும்
கலிங்கக் கடையாகுங் காண்

'மரபின் விழுதுகள் ' என்னும் மரபுத் தொகுதி குறித்து கவிஞர் பி. கே. முத்து சாமி எழுதிய வெண்பா. பாவலர் எழுஞாயிறு தமிழ் அல்லாத பிற சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். "இலக்குகள் சிகரங்கள் அவற்றை வெல்ல உறுதியோடு. கடின உழைப்போடு. இடையறா முயற்சியோடு முன்னேற வேண்டும்" என்று கவிஞர் சிற்பி கூறிய அறிவுரையையும் ஏற்றுக் கொண்டுள்ளார். "சில கவிதைகளில் உடல் அருமையாக உருவாகியிருக்கிறது. எல்லா சேர்மானங்களும் சரியாக உள்ளன. ஆனால் கவிதையின் கண் திறப்பது என்பது மிக முக்கியமான காரியம்" என்று பொன்னீலன் விமரிசித்துள்ளதையும் ஏற்றுள்ளார். சிலையைச் செய்யும் சிற்பி இறுதியிலேயே கண்ணைத் திறக்க முயற்சிப்பான். கண்ணிலேயே சிலையின் உயிர்ப்பு இருக்கும். அதே போல கவிதையின் உயிர்ப்பும் அதன் வெளிப்பாட்டிலேயே உள்ளது என்பதை உணர்த்தியுள்ளார் பொன்னீலன்,

மண்ணில் பிறந்து வளர்ந்து
ஈசலாக உதிர்ந்து போக வேண்டாம்
கொஞ்சம் சிந்தித்தால்
மானுடம் செழிக்கும்
மானுடம் உயர வேண்டும் உயர்த்தப் பட வேண்டும் என்னும் அடிப்படையில் ஏராளமான கவிதைகளைக் கவிஞர் எழுதியுள்ளார். மனித நேயமே கவிஞரின் படைப்புகளில் முதன்மையாக, முக்கியமாக உள்ளது. கவிஞர் அ. கார்த்திகேயனும் கவிஞரை 'மனித நேயப் படைப்பாளி' என்று போற்றியுள்ளார். 'மனித நேயத்துக்குத் தூதராக. . . ' செயல் படுகிறார் என்று கருத்துரைத்துள்ளார் பட்டியார். 'மனித நேயமே' நிற்கும் நிலைக்கும் என்பதிலும் கவிஞர் உறுதியாக உள்ளார்.

கவிஞரின் கவிதை உலகம் மக்களை நோக்கியே இயங்கியுள்ளது. மக்களுக்காக மக்களில் ஒருவராக இருந்து பாடியுள்ளார். பெரியாரிய கருத்துக்களையும் மார்க்ஸ் தத்துவங்களையும் உள்வாங்கி கவிதைகளில் வெளிப் படுத்தியுள்ளார். மரபுக் கவிதைகளில் பாவேந்தரின் பாதிப்பும் புதுக் கவிதைகளில் வானம்பாடியின் தொடர்ச்சியும் காண முடிகிறது. கவிதை மீதான நேயத்தோடு கவிஞர் மற்றும் படைப்பாளியன் மீதான அன்பையும் கொண்டவர் என விளங்க முடிகிறது. பாரதி முதல் சிற்பி வரை பாடியுள்ளார். கவிதைகளை வாசிக்கும் வாசகருக்கு எழும் உணர்வுகளை ஒப்பிட்டுக் கொள்ள விமரிசனங்கள் உதவுகின்றன. கவிதையையும் விமரிசனத்தையும் ஒரு சேர தந்து ஒரு புதிய முயற்சிக்கு வழிவகுத்துள்ளார். காவ்யாவும் உதவியுள்ளது. எட்டுத் தொகுப்புகளில் இருந்து தேர்வு செய்யப் பட்டு ஒரு மொத்தத் தொகுப்பாக வெளி வந்த கவிதைகள் எனினும் கவிஞர் கணேசனின் கவிதை அலை ஓயாது என்பதையே தொகுப்பு காட்டுகிறது,

காலமெல்லாம் வாழு கின்ற
கவிதைகளை வடித்த சிற்பி என
பாரதியைப் போற்றியுள்ளார். கவிஞர் கணேசனுக்கும் இப் போற்றுதல் பொருந்தும்.

Pin It