சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய ஹைக்கூ வரை தமிழ்க் கவிதைகளின் பயணம் நெடியது. உள்ளடக்கங்கள், வடிவங்கள், உத்திகள் இவைகளில் தமிழ்க் கவிதைகள் சந்தித்த மாற்றங்கள் எத்தனை எத்தனையோ! ஆனாலும் மாற்றங்களின் ஊடாக இழையோடும் ஒருவகை மரபுத் தொடர்ச்சி தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு. இந்த மரபுத் தொடர்ச்சிதான் தமிழ்க் கவிதைகளின் ஜீவ சக்தி. உள்ளார்ந்த ஆற்றல்.

பெரும்பாலும் தனிப்பாடல்களாகத் தொடங்கிய சங்க இலக்கியக் கவிதை மரபு, அடுத்தடுத்;த கட்டங்களில் காப்பியங்கள், பிரபந்தங்கள் என மாற்றம் பெற்றது. சற்றேறக் குறைய கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் தொடங்கிய இந்த மாற்றம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. குறிப்பாக மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களோடு புராண, காப்பிய, பிரபந்தக் கவிதை மரபு ஒரு முடிவுக்கு வருகின்றது. அவருக்குப் பின்னே, காப்பியங்கள், பிரபந்தங்கள் பாடுவோர் இன்றும் விதிவிலக்காக ஒருசிலர் உண்டு என்றாலும் இடைக்காலத் தமிழ்க் கவிதை மரபு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களோடு முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான் உண்மை. இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதை மரபு தனிக் கவிதைகளாலான தன்னுணர்ச்சிக் கவிதைகளைக் கொண்டது. இத்தகு புதிய தமிழ்க்கவிதை மரபு பரிதிமாற்கலைஞர் என்றறியப்பட்ட சூரியநாராயண சாஸ்திரியிலிருந்து தொடங்குகின்றது. பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்த இப்புதிய மரபினைச் செழுமைப் படுத்தியவர் மகாகவி பாரதி.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே தமிழ்க் கவிதைகள் நவீனம் என்ற புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. எளியநடை, எளிய பதங்கள், எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு.. ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோரும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவது என்று பாரதி சொன்னதுபோல், பண்டிதத் திரிசொல் நடை, முரட்டுச் சொற்பயன்பாடு, வலிந்து புகுத்தப்பட்ட அலங்காரங்கள் என எத்தகைய செயற்கைத்தனமும் இல்லாத நவீனக் கவிதைகள். எழுதப்படும் இலக்கியங்கள் யாவும் மக்களுக்கானது என்ற நவீன இலக்கியக் கோட்பாட்டினை ஒட்டி மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதாகத் தமிழ்க் கவிதை மாற்றம்பெற்றது. மக்கள் பிரச்சனை எனும்போது தனிமனிதப் பிரச்சனைகள் தொடங்கி, சமூகம், மொழி, இனம், தேசியம், சர்வதேசியம் என மக்களோடு தொடர்புடைய பிரச்சனைகள் அனைத்தும் கடந்த நூற்றாண்டுக் கவிதையின் பாடுபொருள் வட்டத்துக்குள் வந்தன. தன்னுணர்ச்சிக் கவிதையாக கவிஞன் வாசகனிடம் நேரடியாகப் பேசும் பாணியிலான விதப்புமுறையில் கவிதைகள் உருவாகத் தொடங்கின. இத்தகு விதப்புமுறையைப் பழைய செய்யுட்களில் காண்பது அரிது. கடந்த நூற்றாண்டுக் கவிதைகளின் இத்தகு நவீனம்தான் இன்றைக்கும் தமிழ்க் கவிதைகளை உயிரோட்டத்துடன் உயர்வாழ வைத்திருக்கின்றது.

கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய தமிழ் மரபுக் கவிதைகள் இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் துணிச்சலோடு முகம்காட்டத் தொடங்கின. அண்மைக் காலங்களில் பழுதடைந்துள்ள தமது சிம்மாசனத்தில் மரபுக் கவிதைகள் மீண்டும் இடம் பிடித்துவிட்டன. காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே என்ற பழைய வேதனைக் குரல் மாறி காரிகை கற்றுக் கவி பாடுவோம் எனப் பேரிகை கொட்டி முழங்கத் தொடங்கி விட்டார்கள் தமிழ்க் கவிஞர்கள். அந்த வரிசையில் பேரிகை கொட்டிவரும் கவிஞர் குழாத்தில் ஒருவராகப் புதுவையின் தமிழ் மேடைகளில் வலம் வருபவர்தாம் வடுகை. கு.கண்ணன்.

கவிஞர் வடுகை. கு.கண்ணன் எழுபத்திரண்டு வயது நிரம்பிய இளைஞர். தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையில் உதவிப் பதிவுத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர். எதையும் வெளிப்படையாகப் பேசும் வெள்ளை மனத்தர். குடும்பம், சுற்றம், நட்பு மூன்றையும் சமமாய்ப் பேணிக் காப்பவர். இதற்குமுன் நான்கு உரைநடை நூல்கள், ஐந்து கவிதை நூல்களைப் படைத்துத் தமிழ் எழுத்துத்துறையில் ஆழங்கால் பதித்தவர். மரபு வழியில் ஒரு பயணம் என்ற இக்கவிதை நூல் இவரின் பத்தாவது படைப்பு. இயல்பான கவிதைப் படைப்பில் நிறைவு காணாமல் முறைப்படி யாப்பு பயின்று மரபுப் பா எழுதவேண்டும் என முனைந்து முயற்சித் திருவினை ஆக்க, முழுமை பெற்ற படைப்பு இந்நூல். தமிழின் வெண்பா, அகவல், கலி, வஞ்சி என்ற நால்வகைப் பாக்களாலும் அவற்றின் தாழிசை, துறை, விருத்தம் முதலான பாவினங்களாலும் கதம்பமாய் உருவான படைப்பு இந்நூல்.

மரபு வழியில் ஒரு பயணம் என்ற நூலின் தலைப்பு மிகப் பொருத்தமானது. மரபு வழியில் என்பது மரபுக்குச் செல்லும் வழி என்று பொருள்படும். அதாவது வழியே மரபு அன்று, அது ஒரு பாதைதான். செல்ல வேண்டிய இலக்குதான் மரபு. அதைநோக்கிய பயணம்தான் இந்நூல் என்று இத்தலைப்பினை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மரபுப்பா இலக்கணம் பயின்ற புதிதில் அனைத்து வகையான பாவகைகளிலும் பாஇனங்களிலும் கவிதை எழுதிவிடவேண்டும் என்று நினைப்பது ஒருவகையில் குழந்தைகள் சொப்புவைத்து விளையாடுவது போலத்தான். அகவலோ, வெண்பாவோ, கலியோ, வஞ்சியோ, விருத்தங்களோ, பிறவோ கவிதைக்கான வடிவத்தை உள்ளடக்கங்கள்தாம் தீர்மானிக்க வேண்டும். வடுகை. கு.கண்ணன் அவர்களின் இந்நூற் பாடுபொருள் பொதுவில் அகவலுக்கும், விருத்தத்திற்குமானது. எனவேதான் இந்நூலில் இடம்பெற்றுள்ள அகவல், விருத்தக் கவிதைகளில் இயல்பான கவிதை ஓட்டமும், சொல்லழகும் பொருளழகும் பொருந்திப் போகின்றன. மரபிலக்கணம் கற்பதற்கு முன்பே இவர் படைத்துள்ள முந்தைய தொகுதிகளிலும் இவ்வகைக் கவிதைகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம் இதுவே.

ஒரு படைப்பாளியாக வடுகை. கு.கண்ணன் இந்நூலின் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாகச் சமூகம், மொழி, இனம், அரசியல் குறித்த கவிஞரின் கவிதைகளில் உண்மையும், நேர்மையும், துணிச்சலும் பளிச்சிடுகின்றன. நெஞ்சுறுதியோடு இன்றைய அரசியல், ஆன்மீகப் போலிகளைச் சாடும் கவிதைகளில் கவிஞரின் கோபம் சத்திய ஆவேசத்துடன் உள்ளது.

இறைவன் இல்லை, இறைவன் இல்லை
இரைந்து சொல்வேன் இறைவன் இல்லை
இறைவன் ஒருவன் இருப்பா னென்றால்
இத்தனை தீமைகள் உலகில் நடக்குமா?
அத்தனை யுமவன் ஆட்சியில் நடப்பதால்
அவனே அனைத்தின் காரணம் என்பதால்
அவன்என் கையில் கிடைப்பா னாகில்
அவனது தலையை அறுப்பேன் உடனே!

இறைவன் இல்லை என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதியுள்ள கவிதையின் ஒரு பகுதி இது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அவனது தலையை அறுப்பேன் உடனே! என்ற வரியைப் படிக்கும்போது இரந்தும் உயர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (குறள்: 1062) என்ற திருவள்ளுவரின் ஆவேசக் குரல் நம் நினைவுக்கு வருகின்றது. மேலே சான்று காட்டியுள்ள அகவல் பாடலை ஒருமுறை வாசிக்கும்போதே அப்பாடலின் அகவல் ஓசையும், மோனையழகும் நம்மைக் கவர்வது நிச்சயம். அடுத்தடுத்த தொகுதிகளில் கவிஞர் எதுகைத் தொடை குறித்துக் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மரபு வழியில் ஒரு பயணம் என்ற இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளில், 1.சிறகடிக்கும் சிந்தனைகள், 2.புத்துலகம் படைப்போம், 3.உரிமை மீட்போம், 4.தமிழ்நாடு-தனிநாடு, 5.இழிந்த இந்தியர், 6.புதுவைச் சுற்றுலா, 7.தானே புயல், 8.போர்க்குற்றவாளி, 9.என் வீடு, 10.மே தினம் போன்ற படைப்புகளை இத்தொகுதியின் சிறந்த படைப்புகள் என்று என்னால் பட்டியலிட்டுக் காட்டமுடியும்.

தானே புயல் என்ற தலைப்பில் கவிஞர் எழுதியள்ள கவிதையின் ஒரு பகுதியை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பூவும் பிஞசுமாய்ப் பாவிய முருங்கையைக்
காவு கொண்டஇக் காற்றை என்சொல?
எலுமிச்சை கூடத் தப்ப வில்லை
துகிலுரிந் தாற்போல் தோன்றும் கிளைகள்
கொய்ய மரத்தின் கொய்யாக் காய்கள்
அய்யோ வெனவே அனைத்தும் உதிர்ந்தன
அரளிச் செடியும் அடியோடு சாய்ந்தது,
அடுத்தே இருந்த முல்லை வீழ்ந்தது,
பிச்சிக் கொடியும் மிச்சம் இல்லை
நச்சிய சம்பங்கி நலிந்தே சரிந்தது,
தென்னையில் படர்ந்த மிளகுக் கொடியும்
தன்பிடி இழந்து தரையில் கிடந்தது,
மதில்மேல் தொட்டியில் மலர்ந்தே இருந்த
மல்லிகைச் செடியும் மலர்ந்த ரோசாவும்
கனகாம் பரமும் கண்கவர் ஆர்கிட்சும்
எல்லாம் வீழ்ந்தே இரைந்து கிடந்தன
காக்கையின் கூடுகள் காற்றில் பறந்தன

கவிதையின் ஓட்டமும் நடையும் ஓசையும் இணைந்து நம் மனக்கண்முன்னே சொல்லோவியமாய் விரிவதை வாசகர்கள் நிச்சயம் உணர்வர். கவிஞரின் என்வீடு எனும் கவிதையும் இதே தரத்திலானது.

மேலும், இத்தொகுதியில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது கவிஞரின் கலிப்பா முயற்சிகள். நல்ல இலக்கியப் பயிற்சி உடையவர்களே எழுதத் தயங்கும் கலிப்பாக்களைக் கவிஞர் துணிச்சலோடு முயன்று படைத்திருப்பது பாராட்டத்தக்கது. தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்ற கலிப்பாவின் கட்டமைப்பிற்குள் கவிதையைக் கொண்டுவரும் முயற்சியில் கவிஞர் வெற்றிபெற்றுள்ளார். கலிப்பாவுக்கான துள்ளல் ஓசைஅமைதி பயிற்சியால் மட்டுமே சாத்தியமாகும். கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது (குறள்: 772) என்பார் திருவள்ளுவர். யானை பிழைத்த வேலை ஏந்தியிருக்கும் நூலாசிரியர் நிச்சயம் பாராட்டுக்குரியவரே.

படைப்பு என்பது படைப்பவனுக்கு மட்டும் நிறைவைத் தந்தால் போதாது, படிப்பவனுக்கும் நிறைவளிக்க வேண்டும். படிப்பவன் சிந்தனையை ஒருபடியேனும் மேலே உயர்த்த வேண்டும். இந்த இரண்டையும் செய்யும் இலக்கியங்களே நல்ல இலக்கியங்கள். வடுகை. கு.கண்ணனின் மரபு வழியில் ஒரு பயணம் என்ற இந்நூல் இந்த இரண்டு பணிகளையும் செய்கிறது. இன்றைய இந்தியனின், தமிழனின் இழிநிலையைப் படம்பிடிப்பதோடு மாற்றத்திற்கான சிந்தனையையும் விதைக்கிறது. மொழி, இன உணர்வின் இன்றியமையாமையைப் பேசுகிறது. அரசின், அரசியலின் அவலத்தைத் தோலுரிக்கிறது. போராட்ட உணர்வினைத் தூண்டுகிறது. கவிஞனால் ஆகக் கூடியது இதுதான். எழுத்தால் சாத்தியப்படுவதும் இதுதான். மரபு வடிவங்களை எழுதிப் பார்க்க விரும்பிய கவிஞர் காலத்தின் தேவை உணர்ந்து உள்ளடக்கங்களில் உண்மையோடு செயல்பட்டிருக்கிறார். போலித்தனமில்லாத இத்தகைய படைப்புகள் பாராட்டப்பட வேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும். காலத்தின் தேவையும் அதுவே. வடுகை. கு.கண்ணனின் மரபு வழியில் ஒரு பயணம் என்ற இந்நூலைத் தமிழுலகம் ஏற்றுப் போற்ற வேண்டும். போற்றும் என நான் நம்புகிறேன்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப்பேராசிரியர், புதுச்சேரி-8.

Pin It