மரம், செடி, கொடிகள், கட்டடங்கள் எதுவுமே தெரியாத, கரைகூடத் தெரியாத அளவுக்கு, சுற்றிலும் நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு இடத்தை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா? அப்படி ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக எனது விருப்பம். சென்னை காசிமேட்டில் சொந்தமாக மீன்பிடி படகு வைத்து உள்ள எனது நண்பர் இராயபுரம் இராமநாதனிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்.

andhamanil_arunagiri_4502000 ஆம் ஆண்டில், பொங்கல் திருநாளையொட்டி, என் மனைவியோடு, 1 வயது கைக்குழந்தையாக இருந்த மகளையும் எடுத்துக்கொண்டு, காசிமேடு துறைமுகம் சென்றேன். அங்கிருந்து, படகில் கடலுக்கு அழைத்துக்கொண்டு போனார். நண்பர் பிச்சையா மற்றும் சில தோழர்கள் உடன் வந்தார்கள். ‘கரையே தெரியாத இடத்துக்குச் செல்லுங்கள்’ என்றேன். மூன்று மணி அளவில் புறப்பட்டு, நீண்ட தொலைவு சென்றும், கரை மறையவில்லை. மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இருட்டுவதற்குள் கரைக்கு வரவேண்டும் என்பதற்காக, அத்துடன் திரும்பி வந்து விட்டோம்.

அந்தமான் சுற்றுலா

விவரம்அறிந்த நாள்முதலே, ‘விமானத்தில் பறக்க வேண்டும், கப்பலில் கடல் கடந்து செல்ல வேண்டும், உலகின் பல நாடுகளைப் பார்க்க வேண்டும்’ என்ற அவா என்னுள் எழுந்தது. பள்ளியில் படிக்கும்போதே, கப்பல் பயணத்தைப் பற்றிச் சிந்தித்து இருக்கிறேன். நாளிதழ்களிலும், நூல்களிலும் அந்தமானைப் பற்றிய செய்திகளைப் படித்ததன் விளைவாக, 29 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு, நான் கல்லுhரியில் படிக்கும்போதே, அந்தமான் தீவுகளைப் பார்க்கத் தீர்மானித்தேன்.

தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சென்றேன். அங்கே, பிரமாண்டமான அமெரிக்கச் சரக்குக் கப்பல் ஒன்று நின்று கொண்டு இருந்தது. காவலர்களிடம் கேட்டேன். தாராளமாக உள்ளே ஏறி, சுற்றிப் பார்க்கலாம் என்றார்கள். கப்பலுக்குள் கால் வைத்தேன். சுமார் 400 அடி நீளம் இருந்தது. உள்ளே கொட்டி வைக்கப்பட்டு இருந்த கோதுமையை, கிரேன் ஒரு கையால் அள்ளி, வெளியே நின்று கொண்டு இருந்த லாரியில் போட்டது. ஒரே கையில் பாதி லாரி நிரம்பி விட்டது. அடுத்த ஒரு அள்ளலில் லாரி முழுமையாக நிரம்பி விட்டது. அந்தக் காலத்தில், இவ்வளவு பயங்கரவாத ஆபத்துகள், திருட்டுகள் இல்லை என்பதால், கேள்வி கேட்பார் இல்லை. என் விருப்பம்போல, சுமார் இரண்டு மணி நேரம் பொறுமையாகச் சுற்றிப் பார்த்தேன். பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

அடுத்து, பயணிகள் கப்பல் எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதற்காகவும், அந்தமான் பயணத்துக்கான விவரங்களைத் திரட்டுவதற்காகவும், கோடை விடுமுறையில், சென்னைக்கு வந்தேன். துறைமுகத்துக்குச் சென்று, அந்தமான் செல்லும் பயணிகள் நன்கௌரி கப்பலுக்கு உள்ளே ஏறி சுற்றிப் பார்த்தேன். கட்டணங்கள் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டேன். அப்போது, சென்னையில் இருந்து அந்தமானுக்குக் கப்பல் கட்டணம் 200 ரூபாய்க்கும் குறைவுதான்.

அடுத்த கட்டம். அந்தமானில் நமக்கு யாரையும் தெரியாது? அங்கே சென்றால் எங்கே தங்குவது?

உலகம் முழுவதும் ‘Youth Hostel’ என்ற அமைப்பு உள்ளது. அதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்து இருந்தேன். அந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டால், உலகப் பயணங்களை மேற்கொள்கின்ற இளைஞர்கள், ஆங்காங்கே உள்ள இந்த விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம்.

போர்ட் பிளேரில் உள்ள இளைஞர் விடுதியில் தங்க வேண்டும் என்பதற்காகவே, மதுரை ரேஸ்கோர்ஸ் பந்தயத் திடல் அருகே அமைந்து உள்ள, இளைஞர் விடுதிக்குச் சென்று பார்த்து, விண்ணப்பப் படிவத்தை வாங்கி, அதில் உறுப்பினராகவும் சேர்ந்தேன்.

ஒருவழியாக விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, அந்தமான் சுற்றுப்பயணம் செல்வதற்காக, ஒரு சுற்றுலாத் திட்டத்தை வகுத்தேன். எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலில், ‘திருச்செந்துhர்-திருவனந்தபுரம்- பெங்களூரு பக்திச் சுற்றுலா’ என்று விளம்பரங்கள் செய்து கொண்டு இருந்த வேளையில், ‘அந்தமான் சுற்றுலா’ என்று ஒரு விளம்பரத் தட்டி எழுதி வைத்தேன்.

இருபது பேர்களைச் சேர்த்துக்கொண்டு போவதாகத் திட்டம். நண்பர்கள், நகரில் உள்ள வணிகர்கள் என பலரைச் சந்தித்துப் பேசினேன். பலமுறை நீண்ட விளக்கங்களை எடுத்துக்கூறியபோதும், அந்தமான் வருவதற்கு ரொம்பவே யோசித்தார்கள். எத்தனை நாள்கள் ஆகும்? என்று கேட்டார்கள். சங்கரன்கோவிலில் இருந்து சென்னை. அங்கிருந்து கப்பலில் மூன்று நாள்கள் போவதற்கு, வருவதற்கு மூன்று நாள்கள், அங்கே தங்க மூன்று முதல் ஐந்துநாள்கள் என எப்படியும், 12 முதல் 15 நாள்கள் ஆகும்’ என்றேன். அதைக் கேட்டவுடன், பலர் பின்வாங்கி விட்டார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை திருச்செந்துhர் கோவிலுக்கும், குற்றாலத்துக்கும் போய் வருவதுதான், அன்றைக்கு அவர்களது சுற்றுலாவாக இருந்தது. இப்போதாகவது பரவாயில்லை. வட இந்திய பக்திச் சுற்றுலா கூடச் செல்கிறார்கள். அன்றைக்கு, நான்கு பேர்கள் மட்டுமே, அந்தமான் வருவதற்கு முன்வந்தார்கள். அவர்களும், முழுமனதாகச் சம்மதிக்கவில்லை. எனது எண்ணம் நிறைவேறவில்லை. அந்தமான் பயணத்தைத் தள்ளி வைத்தேன்.

அந்தமான் காதலி

1980 க்கு முன்னால், ‘அந்தமான் காதலி’ என்று ஒரு திரைப்படம் வந்தது. நடிகர் திலகம் சிவாஜி, சுஜாதா நடித்து இருந்தனர். ‘அந்தமானைப் பாருங்கள் அழகு, இளம்பாவை என்னோடு உறவு; ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன்’ போன்ற ஜேசுதாஸ், வாணி ஜெயராம் குரலில் இனிமையான பாடல்கள் நிறைந்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், அந்தமானின் இயற்கை எழிலை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும். அந்தப் பாடல்கள், அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றன. இப்போது இணையத்திலும் பார்க்கலாம். ஆனால், தெளிவாக இல்லை.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வரலாறைப் படிக்கும்போதெல்லாம் எல்லாம், அந்தமான் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்.

1990 க்கு முன்பு வரையிலும், சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே, ‘எம்.வி.சிதம்பரம்’ என்ற பயணிகள் கப்பல் இயங்கிக் கொண்டு இருந்தது. ஒருமுறை, சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தபோது, அந்தமான் தீவுகளைத் தாண்டி வருகையில், நடுக்கடலில் கப்பலில் தீப்பற்றிக் கொண்டது. சுமார் 30 பயணிகள், தீயில் கருகி இறந்து விட்டார்கள். அப்போதைய நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக, விரிவாக பல நாள்கள் வந்தன. அதைப் படித்தவுடன், கப்பல் பயணத்தைப் பற்றிய பயம் நெஞ்சைக் கவ்வினாலும், அந்தமான் ஆசை அடங்கவில்லை.

‘சிரஞ்சீவி’ என்று ஒரு படம் வந்தது. நடிகர் திலகம் சிவாஜி, கப்பல் தொழிலாளியாக வருவார். அந்தப் படத்தின் காட்சிகள், முழுமையும், சென்னை-சிங்கப்பூர் பயணிகள் கப்பலிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்ட படம்’ என்று அப்போது விளம்பரம் செய்தார்கள். ஆயிரத்தில் ஒருவன், வஞ்சிக் கோட்டை வாலிபன், இயற்கை, உள்ளிட்ட மேலும் பல தமிழ்த் திரைப்படங்களில் கப்பலின் காட்சிகளும், அந்தமான் தீவுகளில் பாடல் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டு உள்ளன. மனோகர் நடித்து, ‘அந்தமான் கைதி’ என்ற பெயரில் வந்த படத்தை நான் பார்த்தது இல்லை.

‘டைட்டானிக்’ படம் வெளிவந்தபோது, கப்பல் பயணத்தைப் பற்றிய பயம் ஒருபக்கம் இருந்தாலும், கண்டிப்பாகக் கப்பலில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கிளர்ந்து எழுந்தது. அந்தமான் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டே இருந்தேன்.

அந்தமானில் தமிழ் அறிஞர்கள்

வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம், 1995 ஆம் ஆண்டு, வி.ஜி.பி. உலகத் தமிழ் 2 ஆவது மாநாட்டை, அந்தமான் தீவுகளில் கூட்டினார். அதற்காக, சென்னையில் இருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 300 பேர்களை, அந்தமானுக்கு அழைத்துச் சென்றார்.

2004 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், கலைமாமணி வாசவன் தலைமையிலான, ‘உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க’த்தின் ஏற்பாட்டின் பேரில், தமிழ் அறிஞர்கள் குடும்பத்தினருடன் அந்தமான் பயணம் சென்று வர ஏற்பாடாயிற்று. நானும், அதில் பெயர் கொடுத்து இருந்தேன். ஆவலோடு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வேறு பணிகள் வந்து சேர்ந்ததால், எனது அந்தமான் பயணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. பல எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு, நழுவிப் போயிற்று. தமிழ் அறிஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 67 பேர் அந்தக் குழுவில் இடம் பெற்று, அந்தமான் சென்று வந்தனர்.

இரண்டு பயணங்களின்போதும், கப்பலில் உள்ள அரங்கத்தில், கவி அரங்கம், கருத்து அரங்கம், சொற்பொழிவுகள், பட்டிமன்றம், இசை அரங்கம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். கப்பலிலேயே பல நூல்களையும் வெளியிட்டார்கள். திரும்பி வந்தபின்பு, அந்தமான் பயணத்தைப் பற்றி, கட்டுரைகளும், நூல்களும் எழுதினார்கள். அதையெல்லாம் படித்தேன்.

இவ்வாறு, அந்தமான் குறித்த செய்திகளைப் படிக்கும்போதெல்லாம், நாம் எப்போது அந்தமான் போவோம்? என்ற ஏக்கம் கூடிக்கொண்டே வந்தது.

நான் ஏற்கனவே உறுப்பினராக இருக்கின்ற சூயவiடியேட லுடிரவா ஞசடிதநஉவ என்ற அமைப்பின் சார்பில், 2009 பிப்ரவரி மாதம் அந்தமானில் ஒரு வார கால முகாம் நடைபெற இருக்கின்ற தகவல் கிடைத்தது. இந்தியா முழுமையும் இருந்து வருகின்ற 400 தோழர்கள், தோழியர்களுடன் கப்பலில் பயணிக்கின்ற வாய்ப்பு. இதை விட்டால், இனி வேறு வாய்ப்பு கிடைக்காது. தனியாக நாம் ஒருபோதும் அந்தமான் செல்லப் போவது இல்லை. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தேன். தில்லி அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்பினேன். அந்தமான் பயணக்குழுவில் எங்களை இணைத்துக் கொண்டதாகக் கடிதம் வந்தது. எங்களைத் தவிர, தமிழ்நாட்டில் இருந்து மேலும் 12 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்று இருந்தார்கள். பாதி கட்டணச் சலுகையில் பயணம். சாப்பாடு, தங்கும் இடம் எல்லாம் இலவசம். 2008 நவம்பர் மாதம் முதற் கொண்டே பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன்.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு, எம்.வி. நன்கௌரி, எம்.வி. ஸ்வராஜ்தீப் ஆகிய இரண்டு பயணி கள் கப்பல்கள் செல்கின்றன. கொல்கத்தாவில் இருந்து, ஹர்ஷவர்த்தன் என்ற கப்பலும், விசாகப்பட்டினத்தில் இருந்து மாதத்துக்கு ஒரு கப்பலும் செல்லுகிறது. ஸ்வராஜ்தீப் கப்பலில் எங்கள் பயணம். 

பிப்ரவரி 18, 2009

என் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க ஒரு நாள், இனிமையான நாள். இன்றுதான், எனது முப்பது ஆண்டுகள் கனவு நனவானது. ஆம்; கப்பலில் பயணிக்கிறேன், கடலில் மிதக்கிறேன்!

கப்பல் புறப்படும்போது, இரவு 7 மணி. எனவே, உணவுக்குப் பின் படுக்கைக்குச் சென்று விட்டோம். மறுநாள் காலையில் எழுந்ததும், மேல்தட்டுக்கு வந்தோம். கடலைப் பார்த்தோம். அப்படி ஒரு காட்சியை என் வாழ்நாளில் முதன்முறையாகப் பார்க்கிறேன். கடல்; எவ்வளவு பிரமாண்டம். எங்கு திரும்பினாலும், தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க, எனக்குச் சொற்களே கிடைக்கவில்லை.

தமிழர்களாகிய நம் முன்னோர்கள், கடல் கடந்து சென்று பல நாடுகளை வென்று, தங்கள் அரசை, தமிழ் அரசை நிறுவினார்கள். மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகளில் அவர்கள் ஆண்டதற்கான தடயங்களை, இன்றைக்கும் காண முடிகிறது. ‘இந்தியத் துணைக்கண்டத்திலேயே, கடல் கடந்து படை நடத்திச் சென்றவர்கள் தமிழர்கள்தாம்; அவர்கள், பிரமாண்டமான மரக்கலங்களில், யானைகளையும் ஏற்றிச் சென்றார்கள். அந்த அளவுக்கு, மிகப்பெரிய கடற்படையைச் சோழ மன்னர்கள் கட்டி இருந்தார்கள்’ என்று, பண்டித நேரு அவர்கள், தாம் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

அத்தகைய திறமை, பெருமை எங்கே போயிற்று? இன்று தமிழகத்தில் கப்பல் கட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்கள், படகுகளில்கூட பயணிப்பது இல்லையே? ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு, தமிழகத்தில் கடல் இருக்கிறது. ஆனால், தமிழகக் கடலிலேயே ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குப் போவது இல்லையே? கடல் வழிப் பயணம், போக்குவரத்து நெரிசல் இல்லாத, விபத்துகளுக்கு அதிக வாய்ப்பு இல்லாத, பாதுகாப்பான பயணம். எந்த அளவுக்கு நாம் அதைப் பயன்படுத்துகிறோம்?

நீங்களும் கடல் பயண அனுபவத்தைப் பெற வேண்டாமா?

புறப்படுங்கள் அந்தமானுக்கு...

ஒருமுறையேனும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்;

உங்கள் வாழ்க்கையை புத்தகமாக எழுதுங்கள்!

(அந்தமானில் அருணகிரி நூலின் முன்னுரையில் எழுதியது) 

- அருணகிரி 9444 39 39 03

e-mail :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It