நாகரிகத்தின் தொட்டில் எனப் போற்றப்படுவது ‘கிரேக்கம்’. அங்கே தோன்றிய ஹோமரே, ‘ஆதிகவி’ என்று அழைக்கப்படுகின்றார். அவர் எழுதியவை, ‘இலியது', ‘ஒதிசிய’' என்ற இரு பெருங்காவியங்கள். ட்ராய் நகரை முற்றுகையிட்ட கிரேக்கத் தலைவர்களுள் ஒருவனான ஒதிசியஸ் என்பவன், தன்னுடைய நாடான இதாகா தீவுக்குத் திரும்ப முற்பட்டு, பத்து ஆண்டுகளாகக் கடல் வெளியெல்லாம் அலைந்து, பற்பல இன்னல்களுக்கு ஆளாகி, கடைசியில் தன் தாய்நாடு சேர்ந்த கதையை, ‘ஒதிசிய' கூறுகிறது. ஆகவே, ஒருவகையில் இதை, காப்பியப் பாங்கில் அமைந்த புராதன காலப் பயண இலக்கியம் என்று உலக இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் போற்றுகின்றார்கள்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

1835ல் தான், இந்தியர்கள் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டுக் கொள்ள வெள்ளையர்கள் அனுமதி அளித்தார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாட்டில் அதற்கு முன் வந்த புத்தகங்கள் அனைத்தும், கிருத்துவ மதப் பாதிரியார்கள் வெளியிட்டவையே. ஆகவே, தமிழின் சங்க இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எல்லாமே 1840 முதல் 1980க்குள் வெளிவந்தவைகளே.

புரட்சிக்கவிஞர்களுள் முதல் கவியாகிய பாரதியின் காலத்திற்குப் பிறகே, நவீன இலக்கியங்களின் வகையான சிறுகதை, நாவல், புதுக்கவிதை, கட்டுரை இலக்கியம், பயண இலக்கியம் எல்லாம் முழு வீச்சுடன் வெளிவரத் தொடங்கின. முதல் நாவல், 1878ல் வெளி வந்திருந்தாலும், அவை முழுமையான உள்ளடக்கம், உருவத்தோடு வரத் தொடங்கியது சென்ற நூற்றாண்டில்தான்.

"பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; அவற்றை வெளிநாட்டார் வணக்கஞ்செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை நனவாக்க முயற்சித்தவர்கள், மணிக்கொடி எழுத்தாளர்கள். மணிக்கொடி இதழில் புதுக்கவிதை, ஏராளமான சிறுகதைகள், பல்வேறு நாட்டு இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள், கட்டுரை இலக்கியங்கள் எல்லாம் வந்தன. ஆனால் பயண இலக்கியக் கட்டுரைகள் வரவில்லை. காரணம், ‘பயணக் கட்டுரைகள் இலக்கியமாகா’ என்பதே மணிக் கொடிக்காரரான சி.சு.செல்லப்பா போன்றோரின் கருத்து.

175 ஆண்டுகாலமாகத் தமிழ்ப் புத்தக வெளியீட்டு வரலாற்றில், பயண இலக்கியங்கள் உண்டா? என்ற கேள்வியைப் பலர் எழுப்புகின்றார்கள்.

‘பயண இலக்கியத்தின் தந்தை' எனவும், ‘உலகம் சுற்றிய தமிழன்' எனவும் போற்றப்படும் ஏ.கே. செட்டியார் அவர்கள், 1968 ஆம் ஆண்டு, தான் வெளியிட்ட ‘தமிழ்நாடு - பயணக் கட்டுரைகள்' என்ற நூலின் முகவுரையில், 'தமிழில் பயண இலக்கியமே இல்லை என்று மற்றவர்களைப் போல் எண்ணியிருந்தேன். அது முற்றிலும் தவறு என்பதை, இந்நூலைத் தொகுக்கும் அரியதொரு பணியில் ஈடுபட்டபொழுது உணர்ந்தேன்' என்கிறார். 1850 முதல் 1965 வரை வெளியான பயணக் கட்டுரைகளின் தொகுப்பே ஏ.கே. செட்டியாரின் ‘தமிழ்நாடு'.

உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியாரின் முதல் நூல் ‘ஜப்பான்'. 1936ல் இரங்கூனில் வெளியிட்டார். அந்நூலின் முன்னுரையில், ‘ஒரு நாட்டைப் பற்றி எழுதுவதென்றால், அந்த நாட்டில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் தங்கி, அந்நாட்டு மொழியை நன்கு பயின்று, அந்நாட்டு மக்களோடு நெருங்கிப் பழகுதல் வேண்டும். நான் ஜப்பானில் தங்கியிருந்தது, சுமார் ஒரு மாதந்தான். நுனிப்புல்லை மேய்வது போன்ற இந்நிலையில், நான் அதிகம் எழுத முடியாது என்றாலும், ஜப்பானைப் பற்றித் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே இந்நூலை எழுத முன் வந்தேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார். மதுரையில் பிறந்தவர்கள், மீனாட்சி அம்மன் கோயிலையும், நாயக்கர் மகாலையும் பார்க்காமல் இருக்கின்றார்கள். தென்காசிக்காரர்களுள், குற்றாலம் செல்லாமல் இருப்பவர்களும் உண்டு. தமிழகத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளையும் காணாமல் வாழ்பவர்களும் உண்டு.

இதைப்பற்றி மிகுதியாகக் கவலைப்படுகின்ற தோழர் அருணகிரி அவர்கள், இந்த நூலின் முன்னுரையில், ‘இப்படி எத்தனையோ பேர் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற பகுதியைப் பற்றிக்கூட முழுமையாக அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்த வேண்டும், பயணம் செய்யத்தூண்ட வேண்டும் என்பதே எனது எழுத்தின் நோக்கம்' என்கிறார்.

பாரதியில் இருந்து சுஜாதா வரை எல்லோரும் வார, மாத இதழ்களில் தொடராக எழுதி பின்னர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்கள். 'உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே.செட்டியாரின் 18 நூல்களுள், ஒன்றிரண்டு நூல்களைத் தவிர, மற்ற அனைத்து நூல்களுமே நேரிடையாக வெளியிடப்பட்டவையாகும். அவரை அடுத்து தோழர் அருணகிரி அவர்கள்தான், தன் பயண அனுபவங்களை நேரிடையாக நூலாகவே வெளியிடுகின்றார். இது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது. உண்மையிலேயே இது மிகப்பெரும் சாதனையாகும்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ‘இந்திய திவ்ய தேச யாத்திரை’ (A Travellers Companion) என்ற தலைப்பில், தமிழின் முதல் பயண நூலை வெளியிட்டவர், சேலம் பகடலு நரசிம்ம நாயுடு. பன்மொழிப் புலவர். இவர், கோவையில் ‘கலாநிதி’ என்ற இதழை நடத்தி வந்தார். 1889 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மேற்கண்ட நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். அதே நூலை, 1913 ஆம் ஆண்டு ஒரே பதிப்பாக ஆக்கி வெளியிட்டார்.

இன்றைக்கு 73 ஆண்டுகளுக்கு முன்னர், ‘மரகதத் தீவு' என்று வர்ணிக்கப்படும் இலங்கைக்குப் பயணம் செய்து, தன் அனுபவங்களை ‘ஆனந்த விகடன்' இதழ்களில் 05.06.1938 முதல் 02.10.1938 வரை சுவைபட எழுதினார் அமரர் கல்கி. கல்கியை அடுத்து ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த தேவன், ‘ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்' என்ற தொடரை எழுதினார்.

கல்வித்துறையில் பணியாற்றிய சு.காந்திமதி, ‘அமெரிக்கா அழைக்கிறது' என்ற தலைப்பில், ஏறத்தாழ ஓராண்டுக் காலம் ஆனந்த விகடனில் தொடராக எழுதினார்.

அறுபதுகளில், ‘அக்கரைச் சீமையில் ஆறு மாதம்' என்ற தலைப்பில், இங்கிலாந்து பயண அனுபவங்களை, மீ.ப. சோமு கல்கியில் தொடராக எழுதினார். பின்னர் அது புத்தகமாகவும் வந்தது.

எழுபதுகளில் கி.வா. ஜகந்நாதன், ‘கண்டறியாதன கண்டேன்' என கலைமகள் மாத இதழில் தன் மேல்நாட்டுப் பயண அனுபவங்களைத் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். அதுவும் நூலாக வெளிவந்துள்ளது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க, மு.வ, கல்கி, கி.வா.ஜ, பகீரதன் முதலானோர் தங்களது இலங்கைப் பயணம் பற்றி கட்டுரைகளாகவும், நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள்.

‘இதயம் பேசுகிறது’ என்ற தலைப்பில், மணியன், ஆனந்த விகடனில் பல அயல்நாட்டுப் பயணக் கட்டுரைகளை, தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுதி வந்தார். பரணீதரன் ஆன்மிகப் பயணங்களை எழுதினார். கடந்த 30 ஆண்டுகளாக, எந்த வார, மாத இதழ்களிலும் பயணத் தொடர்கள் வருவதில்லை.

ஏ.கே. செட்டியாருக்குப் பின் அருணகிரி

உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே. செட்டியார், அவரை அடுத்து சோமலெ, இவர்கள் இருவரையும் தவிர்த்து, திட்டமிட்டுப் பயணங்களை மேற்கொண்டு, அவற்றைத் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நூலாக வெளியிட்டுக்கொண்டு இருப்பவர்களுள், இன்று தோழர் அருணகிரியைத் தவிர வேறு யாரும் இல்லை.

Alps_arunagiri_400இந்த நாட்களில் பலர் பல்வேறு தேசங்களில் பிரயாணம் செய்து விட்டு வருகின்றார்கள். ஆனால் எமர்சன் சொன்னதுபோல, ‘யார் எங்கே போனால்தான் என்ன? தங்களையும் சுமந்து கொண்டுதானே போகிறார்கள், தங்களை மீறி நகர்ந்து விட முடிவதில்லையே?'

இப்படிப்பட்டவர்கள் பிரயாணம் செய்வதால், அவர்களுக்கு ஒரே ஒரு லாபம்தான். நான் அங்கே போனபோது' என்று ஆரம்பித்து, 'வேண்டாம் விடுமையா' என்று சொன்னாலும், ஓடுபவனையும் துரத்திப் போய்த் தங்கள் பேச்சை முடிப்பார்கள்.

அப்படி இல்லாமல், ‘தன் பிரயாணங்களைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியுள்ள ஒரே ஆசிரியர் நம்முடைய அருணகிரி' என்று, க.நா.சு பாணியில் சொல்லத் தோன்றுகின்றது.

பயணம் தொடங்கும்போது ஏற்பட்ட கஷ்டங்களையும், திரும்பும்போது தமிழகம் வரப் போராடியதையும், மிகவும் சிறப்பாக தனக்கே உரிய பாணியில் எழுதி உள்ளார். பயணம் மேற்கொள்பவர்கள், குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், என்னென்ன ஆவணங்களைக் கொண்டு போக வேண்டும்? அவற்றை எவ்வாறு, எங்கே பெற வேண்டும்? என்பதையெல்லாம் விவரமாகச் சொல்வதோடு, ‘குறைந்த சுமை, நிரம்ப இன்பம்' என்பதை நினைவூட்டி, எடுத்துச் செல்லும் பெட்டியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பது நல்லது; குளிர்நாடுகளில் அந்நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உடைகளை எடுத்துச் செல்வது எவ்வளவு பயன் உடையது என்பதையும், விளக்கமாக நமக்கு அறிவுறுத்துகின்றார்.

‘ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி' என்ற இந்த நூலில், நோர்வே, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டதை விவரிக்கின்றார். நேரில் சென்று பார்க்கின்ற அனுபவத்தின் நன்மையையும், மகிழ்ச்சியையும், அருணகிரி எழுதும்போது, இன்னும் கொஞ்சம் எழுத மாட்டாரா? என்று நம்மை நினைக்கச் செய்கிறது.

எங்கு சென்றாலும், எதைப் பார்த்தாலும் அவருக்கு உடனே தமிழ்நாடு, தமிழர்கள் நினைவுக்கு வந்து விடுகின்றார்கள். யான் பெற்ற இன்பத்தை, என் தமிழ் நாட்டு மக்கள் பெற வேண்டாமா என ஏக்கப் பெருமூச்சு விடுவதை பல பக்கங்களில் கேட்க முடிகிறது.

‘நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு

நண்பகலில் சூரியன் மறையும் நாடு’

என்ற தலைப்பில், நோர்வேயைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே படிப்பவர் உள்ளத்தைத் தன் பக்கம் ஈர்த்து, நாம் படித்திராத, கேள்விப்பட்டிராத பல்வேறு விஷயங்களை நமக்குத் தருகிறார் ஆசிரியர்.

‘நோர்வே நாட்டில், சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமம்', பிரதமரும் அப்படித்தான். அவரும் வரிசையில் நிற்பதைக் காண முடியும். ஒரு முறை பிரதமரின் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத கார் ஒன்று வாங்கத் தீர்மானித்தார்கள். 'அவருக்கு மட்டும் என்ன அப்படி ஒரு பாதுகாப்பு? அவரது உயிர் மட்டும் உயர்ந்ததா? வாங்கினால், எல்லோருக்கும் குண்டு துளைக்காத கார் கொடுங்கள்' என்று மக்கள் சொல்லவும் அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்களாம். நோர்வேயில் தனிமனித பாதுகாப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை என்கிறார் அருணகிரி.

அவர் சார்ந்த இயக்கம், அவரது தலைவர் வைகோ வழியில், எங்கு சென்றாலும் ஈழத் தமிழர்களின் நல்லன்பையும், விருந்தோம்பலையும், அவர்களின் கடின முயற்சி, அயராத உழைப்பு இவற்றையெல்லாம் மிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.

"நோர்வீஜியர்கள், தங்கள் நாட்டின் உயர்வுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர்கள், புகழ் சேர்த்தவர்களை மதித்துப் போற்றுகின்றார்கள்; அதனால்தான், விமானங்களில் வால் பகுதியில் அவர்களுடைய படங்களை வரைந்து இருக்கின்றார்கள். நோர்வீஜியர்கள் அதிகம் வாசிக்கின்றார்கள்; வாசிப்பதையும் ஊக்குவிக்கின்றார்கள். 'நொர்லி' என்ற புத்தகக் கடையின் முகப்பில், நோர்வேயின் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படங்கள் அலங்கரித்துக் கொண்டு இருந்தன. அதற்கு முன்பாக நின்று படங்கள் எடுத்துக் கொண்டேன். பத்து விரல்களையும் பயன்படுத்துங்கள்" எனக் கூறும் அருணகிரிக்குப் படிப்பதில் உள்ள ஆர்வம் அவரோடு பழகிய அனைவரும் அறிந்த ஒன்று என்றாலும், வாசகர்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள உதவுகிறது மேலே உள்ள செய்தி.

‘நோர்வேயில் தமிழர்கள்' என்பதை விரிவாக விளக்கமாக எழுதி இருக்கின்றார். தான் சென்ற ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை என்ன? அங்கு வாழும் ஈழத் தமிழர்கள் தொகை என்ன? அவர்களுள் எவ்வளவு பேர் குடி உரிமை பெற்றவர்கள்? அவர்கள் அங்கு எந்த ஆண்டு முதல் குடியேறத் தொடங்கினார்கள் என்பதையெல்லாம் ஒன்று விடாமல் புள்ளி விவரங்களை எல்லாம் தரும்போது, எப்படி இத்தனைத் தகவல்களையும் இவர் திரட்டினார் என ஆச்சரியமாக இருக்கின்றது.

‘ஒரு நாட்டை ஒரு பருவத்தில் மட்டும் பார்த்துவிட்டு எழுதுவது முழுமை பெறாது. ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் ஓராண்டு தங்கி இருந்து எழுதுவதே முழுமை பெறும்' என்று அருணகிரி எழுதும்போது, ஏ.கே. செட்டியார் சொன்ன, ‘ஒரு நாட்டைப் பற்றி எழுத, அந்நாட்டில் இரண்டு ஆண்டுகளாவது இருக்க வேண்டும்’ என்பது நினைவுக்கு வருகிறது.

‘இனி பயண நூல்களை எழுதுபவர்கள், அதைப் பார்த்தேன் இதைப்பார்த்தேன் என்று இயற்கைக் காட்சிகளை விவரிப்பதோடு நின்று விடாமல், அந்த நாடுகளின் மக்கள் மனநிலை என்ன? வாழ்க்கைத்தரம் என்ன? எவ்வளவு செலவு ஆகின்றது? என்பதையும் குறிப்பிட்டு எழுதினால்தான், அது முழுமையான பயண நூலாகவும், அதைப் படித்துவிட்டுப் பயணிப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் அமையும்' என அருணகிரி வலியுறுத்துவதை யாரும் மறுக்க முடியாது.

ஜெர்மனி நாட்டுப் பயணத்தில் அவர் பார்த்ததை எழுதுகிறார்.

'ஜெர்மனியிலேயே பவேரியா, ரைன்லாண்ட், பிரஷ்யா என ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி உண்டு. ஆனால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கூடத் தனிக்கொடி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தேன்'

'இந்தியாவில் மாநிலங்கள் கூடத் தனிக்கொடி அமைக்கின்ற வழக்கம் இல்லை. ஆனால் காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும் அரசியல் சட்டப்படியே தனிக்கொடி உண்டு. கர்நாடக மாநிலத்திலும் கன்னடக் கொடி ஏற்றுகின்ற வழக்கம் இருக்கின்றது. அதுபோல, புலி, வில், கயல் பொறித்த கொடியை வடிவமைத்து, தமிழ்நாட்டின் அரசுக் கொடியாக அறிவித்து நாமும் ஊர்தோறும் ஏற்ற வேண்டும்' என்கிறார் அருணகிரி.

சென்னை ரிப்பன் கட்டிடத்தில் புலி, வில், கயல் பொறித்த கொடி ஏற்றி இருந்தார்கள். அறுபதுகளில் நான் பார்த்திருக்கின்றேன். அருணகிரியின் கோரிக்கை நியாயமானது. நிறைவேற தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்.

அருணகிரியின் சுவிட்சர்லாந்து பயணத்தின் நோக்கமே, ஆல்ப்ஸ் மலையின் உயர்ந்த சிகரங்களில் ஏறிப் பார்ப்பதே. அவரின் நோக்கம் எவ்வாறு நிறைவேறியது என்பதை மிகவும் புளகாங்கிதத்தோடு விவரிக்கின்றார்.

பாரீஸ் பட்டணத்தின் ரயில்வே ஸ்டேஷன், அருணகிரிக்குச் சென்னையை நினைவுபடுத்துகிறது. ஈஃபெல் இரும்புக் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபோது, உலகின் உயர்ந்த கட்டுமானங்களைப் பற்றி அவர் அறிந்த செய்திகளையும் நினைவுக்குக் கொண்டு வந்து நமக்குக் காட்டுகிறார். மோனாலிசா ஓவியத்தை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தை, அவர் தன் கட்டுரை மூலம் போக்கி விடுகின்றார்.

பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதையெடுத்தாலும் போட்டிதான். கூடுமானவரையில் ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்து வந்த பிரெஞ்சுக்காரர்கள், இப்போது ஆங்கிலம் பேசப் பயில்கிறார்கள் என்று ஒரு புதிய செய்தியைக் கூறுகிறார் அருணகிரி. ஐரோப்பியப் பிச்சைக்காரர்களைப் பற்றி அருணகிரி தெரிவிக்கின்ற செய்திகளைப் படிக்கும்போது, நாம் வியப்பில் ஆழ்கிறோம்.

பயண நூல்களில் படங்கள் மிகவும் முக்கியம். 50 படங்களுக்கும் மேல் இடம் பெற்று இருப்பது, ஆசிரியரின் தாராள மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு.

நான் இந்த ஊரில்தான் பிறந்தேன், வளர்ந்தேன், படித்தேன், வேலை பார்க்கிறேன், வீடுண்டு, ஆபிஸ் உண்டு என்று பெருமையடித்துக் கொள்பவர்களும் நமது நாட்டில் இருக்கின்றார்கள். தமிழர், தமிழ்நாட்டையாவது ஒருமுறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும். இந்நூலைப் படிப்பவர்கள் அவ்வாறு செய்வார்களேயானால், ஆசிரியர் அருணகிரியின் நோக்கம் நிச்சயம் நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்பதை, ஆசிரியர் அருணகிரி நமக்கு நினைவுபடுத்துகின்றார், ஒவ்வோர் பயணத்திலும். வாழ்க அருணகிரி! வளர்க அவரது தமிழ்த் தொண்டு!!

- புதுக்கோட்டை ‘ஞானாலயா’ பா. கிருஷ்ணமூர்த்தி

நிறுவனர், ஞானாலயா ஆய்வு நூலகம் (85,000 நூல்கள் தொகுப்பு)

Pin It