ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. அழகிய அட்டைப் படத்தோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியாக கரைதேடும் அலை என்ற கவிதைத் தொகுதியை புவிலக்ஷி வெளியிட்டிருக்கிறார். உள்ளக்கிடக்கைகள் என்ற கவிதைத் தொகுதியை இவர் ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Puvi_370பல கவிஞர்களை உருவாக்கிய கிழக்கு மண்ணில் இவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர். டிசைன் லப் வெளியீடாக, 57 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 55 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல கவிதைத் துளிகளும் உள்ளடங்குகின்றன.

நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து, யாரும் இல்லையே, சுனாமியே, காதல் தேவதை, கலங்காதே, சவால், தூரத்துறவு, புரியாத புதிர், வேதனை,  கரை தேடும் அலை, என் அழகே, வாழ்த்துக்கள், உறவு தேடும் உள்ளம், துயரம், அம்மாவே, அழியாத நினைவுகள், ஏழைப் போராளி, நான் இயேசு அல்ல, பலமேது?, இறுதி வரை, நீயும் பறந்திடுவாய், உனக்காக, கவிஞனின் காதலி, சாயம், பிரிவுத் துயர், சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு, இடைவெளி, சுவை, கனவு,  கேட்க யாருண்டு, உயர்வு, பிரசவம், கிடைக்குமா?, நிழல் இல்லாத நினைவு, உணர்வாய், துன்பமில்லை,  தரிசனம், வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், எதற்காக?, ப்ரார்த்தனை, காத்திருப்பு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

திமிலைத் துமிலன் அவர்கள் கவிதையும் இந்தத் தொகுதியும் என்ற தலையங்கத்தில் கருத்துரையொன்ரை வழங்கியுள்ளார். அம்பிளாந்துறையூர் அரியம் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் கவிதைகள் என தனது வாழ்த்துரையை வழங்கியுள்ளார்.  ம. புவிலக்ஷி தனதுரையில் ``இரண்டாவது தொகுப்பாய் வெளியாகும் கரை தேடும் அலையில் என் உணர்வுகள் மட்டுமல்ல சில உண்மைகளும் அலைகளாய்...'' வெளிப்படுகின்றன என்கிறார். 

சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவாக எல்லா கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். இத்தனை வருடங்களாகியும் சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் எச்சங்களாகவே இருக்கின்றன. சொத்திழந்து சொந்தமிழந்து வாடும் பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டபடியும், நிரந்தரமான சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த தனயனின் சோகம் நினைவலைகள் என்ற கவிதையில் (பக்கம் 01) இவ்வாறாக கவியாக்கப்பட்டிருக்கிறது.

கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உன்
கரங்களால்
அள்ளிக்கொண்டதும்
நான் நிர்வாணமாய்
நின்றதும்...
மாறாத ரணமாய்...


அலைச் சப்தங்களில்
என் உறவுகளின்
அலறல் கேட்பதால்
கடலுக்குச் செல்வதையே
தவிர்த்துவிட்டேன்
இப்போதெல்லாம்...

ஒரு தந்தையின் பரிவோடு வடிக்கப்பட்டிருக்கும் கவலை என்ற கவிதையில் (பக்கம் 05) ஒரு அழகிய சிறுமியின் படம் கவிதைக்கு உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

என் பிஞ்சு நிலாவின்
உறக்கம் கலைந்ததில்
என் உள் நெஞ்சம்
வேதனையில் வெதும்புகிறது..

காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிப்பது போல் காதல் (பக்கம் 07) என்ற கவிதையினூடாக புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். காதலியின் குரல் ஓசை தன் தலையணைக்குள் கேட்கும் என்பதை கவிநயத்தோடு கூறும் அவரது மொழிநடை இதோ...

தலையணைக்குள்
ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய்
விழியுறக்கம் மறந்து
விழித்துக் கிடக்கிறேன்...

காலம் எதையும் மாற்றக் கூடியது. அது மனித மனங்களையும் மாற்றவல்லது. இன்றைய நண்பர்களை எண்ணி உன் இரகசியங்களைச் சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரியாக மாறலாம் என்றொரு மூத்தொர் வாக்கு உண்டு. அதற்கிணங்க பகைவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் என்ற தத்துவத்தை விளக்குவதாக சவால் என்ற கவிதை (பக்கம் 14) அமைந்திருக்கிறது.

எந்த மனிதனையும் ஓரிரு நாளில் நல்லவர் என நம்பிவிடாதே! அந்த நம்பிக்கையே உன்னை ஏமாளியாக மாற்றலாம்.. கெட்டவர்கள் கூட நல்லவர் தான். கெட்டவர் என்பது நிரூபனமாகும் வரை..

காதலியின் பிரிவு எத்தகைய கொடுமை என்பதையே உணர்வு என்ற கவிதை (பக்கம் 43) சுட்டி நிற்கிறது. உலகத்தில் சந்தோஷம் தரும் அத்தனை விடயங்களும் காதலியின் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கும்போது காதலியின் பிரிவு மாத்திரம் வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

புல் சிரித்தது
பூ சிரித்தது..
புல்லின் மீது
பனித்துளி சிரித்தது..

காற்று இனித்தது..
காதல் இனித்தது..
ஏனோ...
அவளுடைய பிரிவு மட்டும் கசத்தது...

உள்ளக்கிடக்கைகள், கரை தேடும் அலை என்ற இரு கவிதைத் தொகுதிகளைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்பதே எமது அவா. அவரது முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கரை தேடும் அலை (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ம. புவிலக்ஷி
வெளியீடு - டிசைன் லப்
முகவரி - 190, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 15.
விலை - 200/=

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It