சமூக மாற்றத்தை விரும்பும் சிலர் தங்களை எழுத்துப்பணியில் ஈடுபடுத்திக்கொள்வர். எழுத்துக்கு அவ்வளவு பெரிய ஆளுமை உண்டு என்பதையும் நாம் நன்கு அறிவோம். எழுத்தாளர் புதியமாதவி தொடர்ச்சியாக இலக்கியப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்பவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தளங்களிலும் தம் முத்திரையைப் பதித்தவர். சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறையில் ஆராய்ச்சி மாணவர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்ட தலித் இலக்கியம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு (வெட்சி, தலித் ஆக்கங்கள்) நூலில் சில சாதி இந்து மாணவர்களால் வேண்மென்றே திட்டமிடப்பட்ட நிலையில் தலித் எழுத்தாளர்கள் மீது குற்றக்கற்கள் வீசப்பட்டன. அதை கண்டித்து தன்னுடைய விமர்சனத்தை எழுதியவர் புதியமாதவி. இது ஒரு மிகப்பெரும் வீச்சை உருவாக்கியது. இது புதியமாதவி சமூகம் பற்றி கொண்டிருக்கிற அவருடைய எண்ணத்தையே காட்டுகிறது.

சமூக மாறுதலை விரும்பும் புதியமாதவி ஐந்திணை என்னும் கவியிலக்கிய நூலை இந்த ஆண்டில் (2011) எழுதிவெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் சமூகம், அரசியல் பற்றி கொண்டிருக்கிற சிந்தனையை கவிவரித் தன்மையோடு பதிவு செய்திருக்கிறார். பெண் ஒடுக்குமுறை குடும்ப அமைப்புக்குள் நிகழ்வதை இவருடைய கவிதைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆண், பெண் சமமற்று நடத்தப்படும் வித்தியாசத்தை எல்லா கணங்களிலும் காணமுடியும். நடக்கும்போது, சாப்பிடும்போது, பேசும்போது, சிரிக்கும்போது என எல்லா செயல்பாடுகளிலும் பெண்ணுக்குள்ள கட்டுப்பாட்டு ஒடுக்குமுறை சமூகத்தில் மிக இறுக்கமானது. ஒரு பெண் குழந்தை வளர்ந்து ஆளாகி ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு வந்துவிட்டால் பெற்றோர்கள் ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது’ போல உணர்கிறார்கள். அவளை எங்கேயாவது தள்ளிவிட்டால்தான் நிம்மதி என்று நினைக்கிறார்கள். ஆணாக இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் மேயலாம் என்பது அவர்களின் எண்ணம். இதுபோன்ற சமமற்ற போக்குதான் பெண்களின் வாழ்வியலை ஒடுக்கி ஒடுக்கி குறுகிய எல்லைக்குள் வைத்துவிடுகிறது. ‘சமூக ஒழுங்கை’ காப்பாற்றுவதாக நினைத்து நடந்துகொள்பவர்கள் சமத்துவத்திற்கு குந்தகம் விளைவித்துவிடுகிறார்கள். ஆண், பெண் சமமற்று நடத்தப்படுவதுதான் சமூக ஒழுங்கு என்றால், அது ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளபோது, அது சமூக ஒழுங்கு கோட்பாடாக இருக்க தகுதியற்றது, லாயக்கற்றது. “அம்மாவுக்கு எத்தனை முகங்கள்” என்று மகளின் பார்வையில்

  “நள்ளிரவில்
தம்பி வருவது தெரியாமல்
தூங்கிக்கொண்டிருக்கும்
என் அம்மா  
கலக்கத்துடன் கதவைத் திறக்கிறாள்
அரைமணி நேரம்
நான்
தாமதமாய் வந்ததற்காய்”

என்று புதியமாதவி குடும்பச்சூழலில் பெண்ணின் நிலை குறித்து கவிமொழியில் விவரிப்பது நெத்தியில் கொட்டுவது போன்று இருக்கிறது. கொட்டு வாங்கியும் அதை உணர மறுக்கிற சொரணை கெட்ட உடல்கள் இருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் என்றே கருதுகிறேன். பழஞ்சிந்தனைகளில் பெண் இருப்பதாய் கௌரவப்பட்டுக்கொள்ளும் தந்தையிடமே கேட்கப்படும் கவிதை கேள்வியாகிறது. எதிர்த்து கேள்வி கேட்டல் மரபுமீறல்,

“தந்தையே
பனிமலைகளை
உடைத்து எடுத்து
துண்டுகளாக்கி
சூடேற்றிய நீ
சூட்டில்
பனிக்கட்டிகள்
உருகாமலிருக்கும்
சூத்திரத்தை
எப்போது எழுதப் போகிறாய்?”

மீறுகிறது வரிகள், பழங்குப்பைகளை தூக்கி எறிந்துவிட்டு, நகர்கிறது அதன் புதியதிசையை நோக்கி. இதுபோன்ற சில கவிதைகள் ஐந்திணை தொகுப்பில் பெண்ணியம் சார்ந்தவையாகும். பெண்ணியம் பேசுபவர்கள் தலித்தியம் பற்றி பேசுகையில் மனுவாதியாகவும், தலித்தியம் பேசுபவர்கள் பெண்ணியம் பற்றி பேசுகையில் மனுவாதியாகவும் மாறிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் ப. சிவகாமி அவர்கள் குறிப்பிடுவது இங்கு நினைவுகூரத்தக்கதாகும். பெண்ணியம் பற்றி பேசுகிற சாதி - இந்துப் பெண்கள் தலித்தியம் பற்றி பேசுவதில்லை. தலித் பெண்கள் அவ்வாறில்லாமல் பெண்ணியம் பற்றியும் தலித்தியம் பற்றியும் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அதற்கு எழுத்தாளர் சிவகாமி அவர்களே ஓர் உதாரணம். இங்கு குறிப்பிட வேண்டியது ஐந்திணை தொகுப்பில் புதியமாதவி பெண்ணியம் பற்றி மட்டும் அல்லாமல் தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் எழுதியுள்ளார் என்பதுதான். இத்தொகுப்பில் மராட்டிய மாநில கயர்லாஞ்சி சம்பவத்தைப் பற்றிய கவிதை, சாதி – இந்துப் பெண்களிடம் கேள்வி கேட்கிற தொனியில் அமைந்துள்ளது.

“செத்த யோனியிலும்
நுழையும் அங்குசமாய்
உங்கள் ஆண்களின்
ராட்சதக் குறிகள்
உங்கள் வீதிகளில்
எங்கள் சடலங்கள்
தடுக்கவில்லையே நீங்களும்!
இனி என்ன செய்யப்போகிறீர்கள்
உங்கள் படுக்கையில்
தொடரும்
எங்கள் யோனிகளை?”

நிகழ்ந்த வன்முறைக்கு ‘இனி என்ன செய்யப்போகிறீர்கள் உங்கள் படுக்கையில் தொடரும் எங்கள் யோனிகளை?’ என்று சாதி இந்து பெண்களிடம் ஞாயம் கேட்பது போல் இருந்தால், அவர்களிடமிருந்து நாம் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவ்வரிகளில் இடம்பெற்றுள்ள சொற்களை அடிப்படையாக வைத்துக்கொண்டுப் பார்த்தால் அதில் வசைபாடும் தன்மையும் அடங்கியுள்ளது. இது மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டியது, இது கவிதைமொழி தரும் பொருள்கள்.

 பெண் ஒடுக்குமுறை அவளின் கருப்பையை எடுத்துவிட்டால் தீர்ந்துவிடும் என்கிற கருத்தியல் காலாவதியாகி, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வலிமை பெற்றவர்கள், ஆண்களிடம் இல்லாத வலிமை பெண்களுக்கு உண்டு, பெண்கள் குழந்தை பெறும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்கிற கருத்தியல் சிந்தனை வளர்ந்து வருகிற காலம் இது. ஆண்களை விடவும் பெண்கள் வலிமை பெற்றவர்கள் என்று பேசிவருகிற இச்சூழலில் ‘ஆனையின்பலத்தை’ விட பெண்ணின் பலம் அதிகம் என்பதைப் பற்றி பேசுகிறார், கவிஞர் புதியமாதவி.

“ஆனைகளின் பலம்
பலவிதம்
பாசம், காதல், குடும்பம்
உறவுகள், பிரிவுகள்
எதிலும் கண்ணீருடன்
கலங்குவதில்
பெண்களைப் போலவே
ஆனைகளும் இருப்பதாக
அறிந்தவர்கள் சொல்கிறார்கள்
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை
கால்களைப் பரப்பி
மல்லாக்க விழுந்த ஆனைகள்
பெண்களைப் போல
தானே எழுந்து நடப்பதில்லை என்பதை”

புதியமாதவியின் கவிதைகள் கதம்ப மாலையாக இத்தொகுப்பில் அமைந்துள்ளன. பல பாடுபொருள்கள் பற்றியும் பேசுகின்றன. ‘ஒற்றைப் பனைமரம்’, ‘மொட்டைப் பனைமரம்’ என பனைமரங்களின் தன்மையை அடிப்படையாக கொண்டு நுணுக்கமாக அரசியல் அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறார், கவிஞர். இக்கவிதைகளில் நிறவெறி எதிர்ப்பினை காணமுடிகிறது. ஒரு எல்லைக்குள் நின்று கவிதையின் பாடுபொருளை அமைத்துக்கொள்ளாமல், ஒடுக்குமுறையின் வடிவங்கள் எங்கே இருந்தாலும் அதை எதிர்ப்பது என்ற உணர்வு கவிஞரிடத்தில் காணமுடிகிறது. ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் வரும்

“ ‘உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டும் விழவேண்டும்’
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்…”

என்ற வரிகள் ஒருவகையில் கவிக்கோ அப்துல்ரகுமானின்

தோட்டத்திற்கு
வெளியே நீளும்
எனது கிளைகளை
வெட்டிவிடும் தோட்டக்காரனே
வேலிக்கு அடியில் நழுவும்
என் வேர்களை என்ன செய்வாய்? - என்ற கவிதை வரிகளை நினைவுறுத்துகிறது.

 திருப்பதி கோவில், பௌத்த கோவில் என்று சொல்லப்பட்டு வருகிறது. இது இந்துத்துவ சக்திகளிடம் அகப்பட்டுக்கொண்டு அல்லோலப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலில் உண்டியலின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதையும் ஊர்க்காவல் தெய்வம் உண்டியல் இல்லாமல் இருப்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறார், கவிஞர். ஊர்க்காவல் தெய்வங்களின் உண்டியல், பொருளாதார வளர்ச்சி பெருகி வருமேயானால் அதை கைப்பற்றுவதற்கு பட்டைகளும், இராமங்களும் இங்கே தயாராக இருக்கின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்துள்ளன. கோவில் உண்டியல் பற்றி பேசும் கவிஞரின் வரிகளில் எள்ளி நகையாடும் தன்மை, கோவிலின் பெயரால் ஏமாற்றும் திருடர்களை (கவிஞரின் வரிகளிலிருந்து கோவில் தேவஸ்தானக் கமிட்டி என்றும் வைத்துக்கொள்ளலாம்) வெளிச்சப்படுத்துகிறது.

 இப்பொழுதெல்லாம் அதிகார ஆணவம் படைத்த அரசியல் கட்சிகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளும், டீவிகளும், கிரைண்டர்களும், மிக்சிகளும், இன்ன பிறவும் ரொட்டித்துண்டுகளுமாய் எலும்புகளுமாய் ஆகிவிட்டன. தொலைக்காட்சி என்ற கவிதை தலைப்பு அளவிலேயே… ஒரு குறியீட்டுத் தன்மையோடு அமைந்துள்ளது. யாரை யார் எப்பொழுது கேள்விகேட்கிறார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒருவரை அப்பொழுதே எதிர்ப்பது அதிகாரமற்ற குடிமக(ளின்)னின் நேர்மையான சிந்தனையைக் காட்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவரின் அதிகாரம் இல்லாத காலத்தில் அவர் செய்த குற்றங்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பது காலம் தாழ்த்தி செய்கின்ற செயலாக மாறிவிடுகிறது. இந்த வகையில் புதியமாதவி காலம் தாழ்த்தாமல் தன்னுடைய விமர்சனங்களை வைப்பவராவார்.

 ஐந்திணை தொகுப்பில் உள்ள “அண்ணா நூற்றாண்டு திருவிழாக்கள்” என்ற கவிதை கவிஞருக்கு மிக முக்கியமான கவிதையாக கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த தொகுப்பில் கவனப்படுத்தப்பட வேண்டிய கவிதைகளில் இதுவும் ஒன்றே என்று கருதுகிறேன். இக்கவிதையில் கவிஞர் அண்ணாதுரையின் மீதுள்ள பற்றினை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் திராவிட அல்லது சூத்திர இயக்கங்களுக்கு முன்னாலிருந்தே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களாலேயே நடந்து வந்ததும், இவர்கள் தங்களுக்கான விடுதலையை வென்றெடுப்பதில் தாங்களே போராடி வெல்கிற ஆற்றல் வல்லமை கொண்டிருந்தார்கள் என்றும் நாம் வரலாற்றின் ஊடே அறிகிறோம்.

திராவிட இயக்கப் பரம்பரையில் வளர்ந்த அண்ணாதுரையின் அரசியல் வாழ்க்கைமுறை சூத்திரியம் சார்ந்ததே ஆகும். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மண்ணில் சூத்திரர்களின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. பாப்பாத்திக்கு ஆட்சி போனது கூட திராவிட இயக்கங்களில் ஏற்பட்ட கொளறுபடி. தமிழ் மண்ணில் பார்ப்பனியம், சூத்திரியம், தலித்தியம் வேறு வேறானவை. பார்ப்பனிய எதிர்ப்பில் சூத்திரர்களும் தலித்துகளும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துவிடவில்லை. இதில் அண்ணாதுரையை சூத்திரிய அரசியலிலிருந்து பிரித்து எடுக்கமுடியாது. சாதி ஒழிப்பு பற்றி பேசியிருக்கலாம் எழுதியிருக்கலாம், ஆனால் சாதி சார்ந்த பிரச்சனை வருகிறபோது அண்ணாதுரை போன்ற சூத்திரர்கள் தாழ்த்தப்பட்டவர்களைக் குறித்து கவலைப்படுவதில்லை. ஆரியமாயை போன்ற சூத்திர மாயை இருப்பதை நாம் உணர வேண்டும்.

பரமகுடியில் செப்டம்பர் 11ஆம் தேதி தலித் மக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட படுகொலையில் 7பேர் உயிர் நீத்தனர். அண்ணாவின் வாரிசுகள் அண்ணா செய்ததையே பின்பற்றி வாய்மூடி மௌனமாக கிடக்கின்றனர். 1956-ல் இம்மானுவேல் சேகரன் படுகொலை முத்துராமலிங்கனால் சாதிவெறி தூண்டிவிடப்பட்டு நிகழ்ந்துமுடிந்தது. பிரச்சனை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது அண்ணாதுரையின் பேச்சு சாதி- இந்துகளுக்கு சார்பானதாய் அமைந்தது. அன்றைக்கு ஏவிவிடப்பட்ட சாதிவெறி இன்றும் தலித் மக்களின் உயிரையும், இரத்தத்தையும் உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. இதை ஒருபொழுதும் தலித் மக்கள் மறக்கவேமாட்டார்கள். தலித் மக்களுக்கு சாதிய வன்கொடுமை நிகழ்கிறபோது ஆதரவுச்சொல்லுக்குக் கூட அண்ணாதுரைகள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு பக்கம் கயர்லாஞ்சியின் படுகொலையை எதிர்க்கும் கவிஞர் மறுபுறம் அண்ணாதுரையின் வாரிசுகளை (அரசியல் வாரிசுகள்) கண்டிக்கும் போர்வையில் அண்ணாதுரையின் புகழாரம் நடத்தியுள்ளார்.

எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அவற்றை கண்டித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரலெழுப்புவதும் அதற்காக செயல்படுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைகு வழிவகுக்கும். இந்த வகையில் புதியமாதவியின் ஐந்திணை ஒடுக்குமுறையிலிருந்து விடுபட துடிக்கும் இலக்கியப் பாசறை.

- ஜெயப்பிரகாஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It