ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான் அவர்கள் தந்திருக்கும் மிதுஹாவின் நந்தவனம் என்ற நூல் சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது. அருள் வெளியீட்டகத்தினால் 72 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 16 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பாலர் பாடல், சின்னக்குயில் பாட்டு, பிரியமான சிநேகிதி, கட்டுரை எழுதுவோம் என்ற நூல்களுடன் இந்தத் தொகுப்பையும் தந்திருக்கும் ஜெனீரா அவர்கள் கிண்ணியாவை வதிவிடமாகக் கொண்டவர்.
 
janeeraஏளனஞ் செய்யாதே, தன் வினை தன்னைச் சுடும், ஏமாற்றுபவர் ஏமாறுவார், முயற்சி வெல்லும், தாய் சொல்லைத் தட்டாதே, கேடு நினைத்தால், அடாது செய்பவன், அடி உதவுவது போல, வாயால் வந்த வினை, ஒற்றுமையே பலம், ஆசையின் விபரீதம், சுற்றுலா, மிதுஹாவின் நந்தவனம், திருந்திய உள்ளம், அருண்டவன் கண்ணுக்கு, கர்வம் கொள்ளாதே ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் பிரசுரம் பெற்றிருக்கின்றன.
 
திருமலை நவம் அவர்கள் தனது அணிந்துரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'குழுந்தைகளுக்காக எழுதி வரும் ஜெனீராவின் கதைகளில் தர்மம், ஒழுக்கம், நீதி, அன்பு, பாசம், பற்று என்றெல்லாம் போதிக்கப்படுகின்றது. சொல்லப்போனால் வாசிப்பு அருகிவிட்ட இந்தக் காலத்தில் பெரியவர்களும் புரிந்துகொள்ள வேண்டிய கதைகளாக அவை இருக்கின்றன'.
 
உண்மையில் சொல்வதென்றால் சிறுவர்களுக்காக என்று தலைப்பிட்டு இந்நூல் வெளிவந்தாலும் இதை அனைவரும் படிக்கத்தான் வேண்டும். போட்டியும், பொறாமையும் தலை விரித்தாடும் இன்றைய சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தான் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக பிறரை கஷ்டத்தில் வீழ்த்திவிடும் எத்தனையோ பேர் இன்று நம் சமுதாயத்தில் வாழ்கின்றார்கள் என்று கூறுவது வெட்கப்பட வேண்டிய விடயம், தொழிலிலும் சரி, நட்பிலும் சரி வஞ்சகங்கள் தான் வலைபின்னி அடுத்தவனை குழிக்குள் தள்ளிவிடும் துரதிஷ்டங்கள் நிலவி வருகின்றன. எங்கு பார்த்தாலும் சண்டைகளும், சச்சரவுகளும் நம் கண்முன் காணக்கிடைக்கிறது. சொத்துக்காக பெற்றவர்களையே அவமானப்படுத்தி காவல் நிலையம் வரை கூட்டிச்சென்ற எத்தனை சம்பவங்கள் இன்று சரித்திரங்களாகி விட்டன? இவை எல்லாவற்றுக்குமான தீர்வுகள் இந்தச் சிறிய கதைகளில் மிகத் துல்லியமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றமை ஜெனீரா அவர்களின் திறமைக்கு சான்றாகும். 
 
மற்றவரை ஏளனஞ்செய்து தாம்செய்வதே சரி என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள். உடலின் எல்லா பாகங்களும் சரிவர அமைந்தவர்கள் அதற்காக இறைவனுக்கு நன்றி கூறாமல், ஊனமாக பிறந்தவர்களை கேலி செய்து மகிழ்வதை தம் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றார்கள். வேலைவெட்டியின்றி இருக்கும் பலர் செயற்கைக் காலுடன் இருப்பவர்களைப் பார்த்து ரொபோ என்று கூறி அவர்களை மானபங்கப்படுத்துகிறார்கள். ரொபோ போல அவர்கள் இருந்தாலும் உழைத்துச் சாப்பிடும் அவர்களை மதிப்பதில்லை. மானம் பற்றி யோசிக்காத இவர்கள் ஊனம்பற்றி யோசித்தல் சரியா என்பதை யோசித்திருக்கவேண்டும்.
 
மேலுள்ள கருத்தை உடையதாகத்தான் ஏளனஞ்செய்யாதே என்ற முதல் கதையானது கொக்கையும், காகத்தையும் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. கொக்கும் தான் வெள்ளை நிறமாக இருப்பதால் கருப்புக் காக்கை என காகத்தை ஏளனஞ்செய்கிறது. இயற்கை அழகு நிறைந்த பூவுலகில் காக்கை மாத்திரம் கருப்பாக இருப்பதாக நக்கலடிக்கிறது. எனினும் காகம் அதனால் மனமுடையவில்லை. அது தன் பக்க நியாயங்களை கொக்கிடம் எடுத்துரைக்கிறது. அதாவது கொக்கு வெள்ளையாக இருந்தாலும் அதன் மனதை கறுப்பென்கிறது. காகங்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக உணவு உண்பதை நாமும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். காகத்திடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒற்றுமையிணை வேறு எதனிடமும் கற்க முடியாது என்பது உண்மை. வேறு பறவை, மிருக  இனங்களில் மாத்திரமன்றி மனித இனத்திடம் கூட இத்தகைய பண்பு இருக்கிறதா என்று காக்கை கேள்வி கேட்பது எம்மத்தியில் கேட்கப்படும் கேள்வியாகவே கருதலாம். குப்பைகளையும் உணவாகக்கொண்டு வாழும் காகத்தால்தான் நமது சூழலும் சுத்தமாக இருக்கிறது. இல்லாவிட்டால் மக்கள் தொற்றுநோய்களாலும், மரண அச்சுறுத்தலாலும் அல்லல்படுவார்கள் என்று சொல்கிறது ஆகாயத்தொட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படும் காக்கை. காக்கை கூறிய அறிவுரைகளைக்கேட்டு கொக்கு தலைகுனிவதாக கதை முடிந்திருக்கிறது.
 
இரண்டாவது கதையான தன்வினை தன்னைச் சுடும் என்பது பிறரை நோவினைப்படுத்தினால் தாமும் தண்டிக்கப்படுவோம் என்ற கருத்தை வலியுறுத்தி நிற்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்பது போல தம்பாட்டுக்கு இருந்த தேனீக்களின் கூட்டை கல்லெறிந்து உடைத்து விடுகிறான் றிப்தி என்ற குறும்புக்கார மாணவன். அதனால் கோபமடைந்த தேனீக்கள் அவ்வழியால் வருவோர் போவோர் எல்லோரையும் தாக்குவதுடன் றிப்தியையும் தாக்குகிறது. இதை அறிந்த ஆசிரியர் மாணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.
 
'பார்த்தீர்களா பிள்ளைகளே! நாம் உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டும். தேனீ எமக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. அதை உணராமல் கல்லெறிந்து கலைத்தால் என்ன செய்யும்? முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்' என்று விளக்கமளிக்கிறார்.
 
ஏமாற்றுபவர் ஏமாறுவார் என்ற கதை மிகவும் சிறப்பானது. நாம் ஒருவரை காரணமின்றி வஞ்சகமாக ஏமாற்ற நினைத்தால் அதே போல நாமும் ஒருநாள் நிச்சயம் ஏமாறியே தீருவோம். இது இறைவன் வகுத்த நியதி என்பதை இக்கதையினூடாக யதார்த்தபூர்வமாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியை ஜெனீரா அவர்கள். அரசமரத்தின் உச்சிக் கிளையில் வாழ்ந்து வந்த நாரைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைக்கிறது காகம். நாரைகள் தம் இருப்பிடம் குறித்த நியாயத்தை விசாரிக்கையில் காகம் கரைந்து தன் இனத்தாரை அழைத்து நாரைகளை துன்புறுத்துகிறது. தப்பினோம் பிழைத்தோம் என்றவாறு போன நாரைகள் மறந்தும் அப்பக்கம் தலைகாட்டவில்லை. காகம் ஏமாறும் சந்தர்ப்பம் இப்போது ஆரம்பிக்கிறது. ஆம் குயில் தன் முட்டைகளை காக்கையின் கூட்டில் இடுகிறது. அதை அறியாத காகம் அடைக்காத்து குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் வளர வளரத்தான் அவற்றின் குரலுக்கிடையே இருந்த வித்தியாசத்தை உணர்கிறது தாய்க்காகம். 'நானே தந்திரமான பறவை. எனக்கே யார் காதில் பூ சுற்றுகிறார்கள்?' என்று எண்ணுகிறபோது, வந்துசேர்கிறது குயில்கள். நீ ஏமாற்றியதால் இன்று நீயே ஏமாந்துவிட்டாய் என்று சொல்லுகையில்தான் காக்கைக்கு பொறி தட்டுகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற ஆழ்ந்த கருத்து பொதிந்த பழமொழியை அள்ளித்தெளித்திருக்கிறார் கதாசிரியர்.
 
தாய்சொல்லைத்தட்டாதே என்ற கருத்துள்ள பல கதைகளை வாசித்திருக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்றாக இக்கதையும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் மாணவன் மிகவும் துடிதுடிப்பானவன். அவனுக்கு கடலில் இறங்கி விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.  நண்பர்கள் வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவார்கள் எண்று எண்ணியதால் பல நாட்கள் தன் ஆசைகளை அடக்கி வைக்கிறான். ஒருநாள் அவன் எதிர்பார்த்தது போலவே நண்பர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஒரு நாளில் பாடசாலைவிட்டு வரும்போது மெதுவாக கடலில் காலடி எடுத்து வைப்பதற்காய் பாறைகளில் நடக்கிறான். எதிர்பாராதவாறு கால் சறுக்கிவிட சிப்பியும் பாறைக்கற்களும் கைகளையும், கால்களையும் உராய்ந்து பதம்பார்த்து விடுகின்றன. சீருடைகள் பாசியை அரவணைத்து பச்சையாகிப் போயின. இதே காயங்களோடு கடலில் விழுந்திருந்தால் நிச்சயம் அவன் கரை சேர்ந்திருக்கமாட்டான். அதை எண்ணியவன் அப்போது முதல்  இனி தாய் சொல்லைத் தட்டவே கூடாது என்று உணர்கிறான்.
 
அடாது செய்பவன் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கதை கேடு நினைத்தால் கேடே விளையும் என்ற கருத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கானகத்தில் நடுவில் அழகியதொரு பொய்கை. அதில் நீரருந்தவரும் பிராணிகளை கொன்று சாப்பிட்டு வயிறு புடைக்கிறது சிங்கம். தானே ராஜா தானே மந்திரி என்ற கர்வத்துடன் வாழ்ந்துவந்த சிங்கம் அன்று யானை ஒன்றை வேட்டையாட வேண்டும் என்று எண்ணி யானையின் அருகே செல்கிறது. தனது நண்பர்களை சிங்கத்துக்கு பலிகொடுத்த வேதனையில் இந்த யானை சிங்கத்தின் ஆட்டத்தை அடக்க நினைத்து தன் தும்பிக்கையால் சுழற்றி சிங்கத்தை பாறைநோக்கி வீசியது. வலிதாங்க முடியாமல் அவலக்குரல் எழுப்பும் சிங்கத்தை ஆறுதல் படுத்த அங்கே ஒரு ஈ கூட இல்லை. எல்லாமே சிங்கம் அடிபட்டதைப் பார்த்து குதூகலிக்கின்றன. மகிழ்ச்சியுடன் நீரருந்துகின்றன.
 
 இந்தக் கதை வெறுமனே விலங்குகளை வைத்து எழுதப்படவில்லை. எம்முடன் பழகி எம்மையே விலைபேசும் பலர் இருக்கிறார்கள். பசுத்தோல் போர்த்திய புலிகளாக இருந்துகொண்டு எத்தனை பிரச்சனைகளை விளைவிக்கிறார்கள். அடுத்தவன் நல்லாயிருப்பதை  கண்டு பொருமி, அவர்களின் மகிழ்ச்சியை நிரந்தரமாக அழித்துவிடும் யோசனைகளுடன் வாழ்ந்து வரும் இவர்களுக்காகவும் தான் இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. அநியாயம் செய்பவன் அநியாயமாகவே அழிந்து போவான் என்று உறுதியாயக் கூறும் இந்தக் கதை சுவாரஷ்யமாக இருக்கிறது.
 
ஆசைகள் இருந்தால்தான் அவன் மனிதன். ஆனால் பேராசை என்பது மனிதனுக்கு எமன். அந்த பேராசைதான் வாழ்வின் அந்தம்வரை எமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. ஆசையின் விபரீதம் என்ற கதையாடலும் இதனைத்தான் உணர்த்திச்செல்கிறது. தன்னிடம் நகை இல்லை என்பதற்காக எதிர்வீட்டுப் பெண்ணிடம் நகையை வாங்கிப்போகிறாள் பவ்யாவின் தாய். நகை காணாமல் போகிறது. பக்கத்து வீட்டுக்காரி அதை இரண்டு பவுண் நகை என்கிறாள். வாங்கிய அவசரத்தில் தங்கமா, இமிட்டேஷனா என்று கூட பார்க்காததால் அநியாயமாக அகப்பட்டுக்கொண்ட பவ்யாவின் தாய் அமைதியை இழக்கிறாள். புன்னகை இருக்க பொன்னகை எதற்கு என்று அவளைப் பார்த்து மகள் பவ்யா கேட்கும் கேள்வி ஆடம்பர ஆசை கொண்ட அனைவருக்கும் பொதுவானது.
 
புத்தகத்தின் தலைப்பான மிதுஹாவின் நந்தவனம் என்ற கதை ஆசிரியரின் சொந்தக்கதை என்பது புலப்படுகிறது. பிரபல சிறுகதை எழுத்தாளர்களான நிஸ்வான் ஆசிரியரின் வீட்டுக்கும், நயீமா டீச்சரின் வீட்டுக்கும் சென்றதாக இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. பூ மரங்களை நடுவதில் அதிக ஆர்வம்கொண்ட மிதுஹாவைப் பற்றியதுதான் இந்தக் கதை. எங்கு போனாலும் பூ மரங்களை ரசிக்கும் பழக்கமுடைய மிதுஹா பேருவலை ஜாமியா நளீமிய்யா வளாகத்தையும் விட்டுவைக்கவில்லை. அவரது இயற்கை ரசனைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. மிதுஹாவுக்கு ஜோடியாக இருக்கிறார் பஸ்மியா. அவரும் மிதுஹாவைப் போன்று பூ மரங்களை வளர்ப்பதில் அதிக விருப்பம் கொண்டவர் என்பது புலனாகின்றது.
 
அதுபோல மாகாத் பெரியப்பா என்ற ஒருவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.  மிதுஹாவின் பூமர ஆசை அறிந்த பெரியப்பா அவளுக்கு பூமரக் கன்றுகளைக் கொடுத்தாலும் வில்வம் கன்றை வாங்க மறுக்கிறாள் மிதுஹா. எப்படியோ பெரியப்பாவின் ஆசைக்காக வில்வம் கன்றை எடுத்துவந்து நாட்டுகின்றாள். கதாசிரியரான ஜெனீரா அவர்கள் இக்கதையின் இறுதியில் எம்மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ சோகத்தை இழையோட விடுகிறார். அந்த வரிகள் கீழுள்ளவாறு அமைந்திருக்கின்றன.
 
'இன்று மாகாத் பெரியப்பாவுமில்லை. அவர் தந்த பூமரங்களும் இல்லை. அவர் ஆசையோடு தந்த வில்வம் மட்டும் பூத்துக் காய்க்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றைக் காணும் போதெல்லாம் மிதுஹாவின் உள்ளத்தில் மாகாத் பெரியப்பாவின் நினைவுகள் அலைமோதிக்கொண்டிருக்கும்.'
 
அன்புப் பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கும் இவ்வாறான அறிவுரை சொல்லக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள் என்று கூறுவதுடன், ஆசிரியத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கதாசிரியரான ஜெனீரா அவர்கள் மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தக்கூடிய இவ்வாறான பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்!!!
 
நூலின் பெயர் - மிதுஹாவின் நந்தவனம்
நூலாசிரியர் - ஜெனீரா தௌபீக் ஹைருள் அமான்
முகவரி - எகுத்தார் ஹாஜியார் வீதி, கிண்ணியா.
தொலைபேசி - 026 2236487
வெளியீடு - அருள் வெளியீட்டகம்
விலை - 150/=
 
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It