சமூக விடுதலைக்காக, சமுதாய பிரச்சனைகளை முன்னிருத்தி, தமிழரின் வாழ்வியல் பண்பாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்தக் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகையில் தம்முடைய பங்களிப்பைச் செய்து வருகின்றது.  ஒவ்வொர் ஆண்டும் மக்கள் கலை விழா நடத்தப்படுவது நாமெல்லாம் அறிந்ததே, கலைவிழாவில் தப்பாட்டம், தமிழரின் பாரம்பரிய நடனங்கள், சிறப்பு விருந்தினர்களின் உரை வீச்சு, நாடகங்கள் போன்றவை எல்லாம் அரங்கேறுவதை நாம் காண்கிறோம்.  இந்த ஆண்டு மன்னார்குடி கிளையில் ஒரு புது நிகழ்வாக மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு நூல்வெளியீடு இடம் பெற்றது.

            கலை இலக்கியப் பெருமன்றத்தின் பாசறையில் இருந்து வெளிவருகின்ற தோழர்கள் சமூகப் போராளிகளாக இருப்பார்கள் என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் இன்றைய காலச் சூழலில் படைப்பாளர்களை உருவாக்கி அவர்களைப் பாராட்டி மேம்படுத்துகின்ற பணியிலும், களம் அமைத்து கொடுப்பதிலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பெரும் பங்காற்றி வருகிறது.

            இந்த சிறுகதைத் தொகுப்பில் சிறுகதை எழுதியவர்களில் பெரும்பாலனோர் கலை இலக்கியப் பெருமன்ற பாசறையில் வளர்ந்தவர்கள்.  முக்கியமான பொறுப்பிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்.  குறிப்பாகச் சொன்னால் முனைவர் இரா.காமராசு அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொது செயலாளராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.  முனைவர் அ.குணசேகரன் அவர்கள் கலை இலக்கியப் பெருமன்றப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ்ப்பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.  கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எழுத்தாளர் மணி.கணேசன் மற்றும் மன்னார்குடி கிளையின் செயலாளர் எழுத்தாளர் மீனா.சுந்தர், கவிஞர் க.தங்கபாபு, கவிஞர் பரிதிபாண்டியன் போன்றோர் அமைப்பிலே சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள்.  இவர்களின் சிறுகதையோடு சிறுகதை இலக்கியத் தளத்தில் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற உத்தமச்சோழன், பட்டுக்கோட்டை ராஜேஸ், மன்னை ராஜன், பொன். கண்ணகி, இரா.மோகன்ராஜன், மணிவண்ணன், போன்றோரது சிறுகதைகளும் இடம் பெற்றிருப்பது தொகுப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் உள்ளது. 

            சிறுசிறு நிகழ்வுகள் கூட கதையின் கருவாக அமைந்து விடுவதைப் பல கதைகளில் காண்கிறோம்.  இங்கே குணசேகரன் அவர்கள் எழுதியுள்ள ஒணக்கைச் சிறுகதையில் கிராமங்களில் சிறுவர்கள் நண்டு பிடிப்பதை கதையின் கருவாக எடுத்துக் கொண்டு நண்டு பிடிப்பதில் உள்ள நுட்பத்தை விளக்கியுள்ள விதம் வயதானவர்களைக் கூட சிறுவர்களாக்கி நண்டு பிடிக்கத் தூண்டுகிறது.  மேலும் மண்ணின் மனம் மாறாத கிராமியச் சூழலுக்கு நம்மை இழுத்துச் செல்கிறது.  ஆச்சியின் பாசமும் பேத்தியின் எதிர்பார்ப்பும் நம்மை குடும்பத்தின் பாச வலைக்குள் சிக்கிக் கொள்ளச் செய்கிறது.

            வறுமையின் உச்சமாகக் குடை சிறுகதை அமைந்துள்ளது.  குழந்தையின் சிறிய ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத ஒரு தந்தையின் ஆதங்கத்தையும் ஆசையைவிட பிறர் நலம் பேணுதலே சிறப்பு என உணர்ந்த குழந்தையின் நல்ல மனதும் மனதை நெகிழவைக்கிறது.

            குழந்தை இல்லை என்ற ஏக்கமும் அதைவிட அதைக் குத்திக் காட்டுகின்ற போக்கும் யாராக இருந்தாலும் மனநோயாளியாக ஆக்கிவிடும் என்பதையும்,  சகிப்பு தன்மையும் பொறுமையும் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதையும் இரு குழந்தைகள் கதை வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை.

            மாமியார்களில் ஒரு சிலர் வாழவந்தப்பெண்ணைப் படுத்தும் பாடு தற்கொலை என்கிற உச்சத்திற்கே கொண்டு சேர்த்துவிடுகிறது.  பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாய் சமூகத்தில் பரிணாமம் எடுக்கும் போது பெண் விடுதலை இங்கே மௌனித்துதான் போகிறது என்பதை திருப்புமுனை கதைச் சுட்டிக்காட்டுகிறது.  பெண்களுக்கே உள்ள பொறாமை குணம் அதனால் ஏற்படுகின்ற கோபம் எல்லாம் சாலச்சியிடம் இருந்தாலும் அஞ்சலிக்கு ஒரு அவமானம் ஏற்படும் பொழுது பார்த்துக்கொண்டு இருக்காமல் ஆவேசமாகப் பொங்கி எழுகின்ற அவளது மனசு இவையெல்லாம் அவளை ஒரு சராசரி மனுஷியாக நிரூபித்துவிட்டன.

            சமுதாயத்தில் காதல் வலையில் சிக்கி வாழ்வதற்கு வழியில்லாமல் வாடுகின்ற இளம் பெண்களுக்கு வாழ்வளிப்பது என்பது மிகப்பெரிய தியாகம்.  அத்தகைய தியாகத்தை செய்த இராகவன் போன்ற நல்ல உள்ளங்களும் இன்றைக்கும் இருக்கின்றனர் என்பதை தங்கபாபுவின் குயில் கூடு வெளிப்படுத்தியுள்ளது.

            இயற்கை மாசடைதல் மண் மாசடைதல், போன்றவற்றை இன்றையச் சமூகம் கண்டு கொள்ளாத நிலைபாட்டினால் ஏற்படப்போகின்ற விளைவுகளை மின்மினியும் சில வண்ணத்துப் பூச்சிகளும் என்ற சிறுகதையில் கூறியுள்ள விதம் நம்மை மண்ணைக் காத்து இயற்கையை நேசிப்போம் என்று சபதம் எடுக்க வைக்கிறது. 

            காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு நகரங்களாகக் காட்சியளிக்கின்ற இக்காலத்தில் பூமி வெப்படைதல் என்ற பிரச்சனையும் நமக்கு தலைக்கு மேல் தொங்குகின்றக் கத்தியாக உள்ளது.  அதனை தடுக்கின்ற வகையில் மரங்களை நட்டு இயற்கையைக் காத்தலே முக்கியமான பணியாகும்.

            மரத்தைத் தன் குழந்தையாகவே நினைத்த மாரிமுத்துப்பிள்ளை, அப்பா வைத்த மரத்தை அப்பா இறந்த பிறகு அப்பாவாகவே நினைக்கும் சாந்தமூர்த்தி இவற்றைப்பார்க்கும் போது மரத்தை நேசிக்கின்ற மனித உள்ளங்கள் புலப்படுகிறது.  சுற்றுச்சூழல் தூய்மைக்கு மரம் வளர்த்தல் அவசியம் என்பதை அப்பா வாசம் கதையில் மீனாசுந்தர் குறிப்பிடும் போக்கு நம்மை இன்றே மரக்கன்றுகளை நட்டு வளர்க்கச் சொல்கிறது.

            இன்றைக்கு இரக்ககுணமும் மனித நேயமும் மனிதர்களிடம் மறைந்து கிடக்கும் சூழலில் மூக்காயி குருவிகள் மீதும் குருவிக் குஞ்சுகள் மீதும் கொள்கிற இரக்கம் அவளது மனித நேயப்பண்பை உயர்த்திக் காட்டுகிறது குருவிமரம்.

            சம்பிரதாயச் சடங்குகள், நம்பிக்கைகள் என்ற பெயரில் இன்றைக்கும் வீரனுக்கும் முனியனுக்கும் ஆடு கோழி பலி கொடுக்கும் நிகழ்வை சாடியிருப்பதோடு மட்டுமில்லாமல் அவைகளும் உயிருள்ள ஒரு ஜீவன் அவற்றின் மீதும் பாசம் கொள்ள வேண்டும் என்பதை கருப்பூ உண்மையிலேயே உணர்த்திவிட்டது.

            பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்று சொல்வார்கள் இன்றைக்கு இருக்கின்ற இளைய தலைமுறைகள் பெற்றோரை ஒரு சுமையாக கருதுவதன் விளைவே முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிவதற்கு காரணம் சீனிக்கிழவி பிள்ளைகள் மீது கொண்ட பாசமும் அவர்களை வளர்ப்பதற்கு அவள் பட்ட கஷ்டமும் சொல்லி மாளாதது.  இன்றையச் சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் பெரும்பாலோனோர் பிள்ளைகாளல் வஞ்சிக்ப்பட்டடோராக இருக்கின்றனர் இந்த நிலை மாறவேண்டும் என்ற சமூக அக்கறையோடு இரா.காமராசு அவர்கள் சீனிக் கிழவி கதையில் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

            இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான சிறுகதைகள் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்னிருத்துகின்றன. வாழ்வியலை மையமிட்டச் சிறுகதைகள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் இருக்கின்றது.  பொதுவாக சிறுகதையின் அழுத்தமான போக்கும் நடையும் எதிர்பார்ப்பைத் தருகின்ற வேகத்தைத் தருவதால் சிறுகதைகள் மிளிர்கின்றன.  இந்தத் தொகுப்பு உருவாகக் காரணமாக விளங்கிய தொகுப்பாசிரியர் மணி.கணேசன் பாராட்டிற்குரியவர் ஏனென்றால் கலை இலக்கியப் பெருமன்ற வெளியீடாக, ஆவணப்படுத்துகின்ற வகையில் மின்மினியும் சில வண்ணத்துப்பூச்சிகளும் வலம் வரும் என்பது உறுதி.

Pin It