முகில் பூக்கள். பி.கு.சரவணன்.

தகிதா பதிப்பகம்
முதல் பதிப்பு நவ.2010.

.......................................................................................

பொதுவாகவே கவிதைகளை வகைப்படுத்துதல் தேவையற்றது. கவிதை அ-கவிதை என்று வேண்டுமானால் பகுக்கலாம். கவிதைகள் துக்கத்தை தனிமையை அகாலத்தை மரணத்தை சொல்பவையாக இருந்துவரும் அதே நேரத்தில் மேற்சொன்னதற்கெல்லாமும் மாற்றாக சந்தோஷத்தை, இயற்கையின் பேரன்பை, நேசத்தை காதலை, நல்லதொரு நம்பிக்கையை அழகியலை கையாள்வதிலும் கவிஞன் தவறுவதே இல்லை. சரவணன் இரண்டாவது பட்டியலில் தன் கவிதைகளைப் படைக்கிறார்.

உவமைகள்,உவமைகள் திகட்டாத உவமைகளின் துணைகொண்டு தனது மென்மையான கவிதைகளை தனக்கு பேசுவதற்கு மாற்றாய்க்கிடைத்த வாய்ப்பாக கைக்கொள்ளுகிறார் சரவணன். அவர் கையாளும் பொருள்களனைத்தையும் அவர் எந்த வித சிரமுமின்றி இயற்கையினின்றும் எடுத்துக்கொள்கிறார். தனது பொதுப்பொருளாக காலங்களை ஊடுருவும் மழையை முன்வைக்கிறார் சரவணன்.

"செவ்விதழ் அசைத்து
நாணம் கொண்டது
பாதிரிப் பூ
மேகப் புற்றிலிருந்து
பறக்கத் தொட்டங்கின
மழை ஈசல்கள்.

நேரடியாக காட்சிப்படுத்துகையில் மழையின் ஈரத்தை பத்திரம் செய்து தனக்கு முக்கியமானவர்களின் கைகளில் தந்து அதனை ஏந்தச்செய்யும் கவிஞன்,அதன் அசாதாரணங்களை விடவும் அனுபவங்களுக்கே முக்கியத்துவம் தருவதை உணர முடிகிறது.

சிணிங்கிப் பூக்கும் அன்பு

"மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்

என்னும் சிக்கனக் கவிதையில் தொட்டாற்சிணுங்கியாக மாறிவிடவே முடிவது சிறப்பு. மழையை அதன் போக்கில் விட்டுப்பிடிக்கிற மனப்பான்மை சரவணனின் பல கவிதைகளில் நமக்கு புரியநேர்கிறது

"மேகம் மழைத்தூரிகை பிடித்து வரைந்த ஓவியத்தில் நான் நனைந்து கொண்டிருந்தேன்" என்னும் ஒன்றில்

"ஈரம் பொழிந்து நிலமெங்கும்
தவழ்ந்து கிடந்த
பிச்சிக்கொடிகளில்
மலர்ந்து கொண்டிருந்தது
நெகிழும் பேரன்பு"

எனச்சொல்கையில் நமக்கும் இடமாற்றம் செய்யப்படுகிறது ஓர் அதிகாலை மழைபடர்ந்த ஈர நில அனுபவம்.

"மழையில் நனைந்து
வெடவெடத்துப் போய் தன்
சிறகுகளை அடித்து
வெப்பம் தேடும்
அந்தச் சிறுகுருவிக்காக
எனக்குப் பிடித்த
மழையை
பெய்தது போதும் என்று
சொல்வாயா..?
"

என்னும் சொல்வாயா என்ற கவிதை உற்றுப்பார்த்தால் நாம் இது வரை பாரபட்சமின்றி செலுத்தி வந்திருக்கிற சிற்றுயிர்கள் மீதான கரிசனம், மழை என்னும் பொதுமையைத் தனது சுயநலமாக்கிக்கொள்ளும் லாவகத்தின் முன் இரண்டு விரல்களை நீட்டும் குழந்தை போல் இந்தக் கவிதையை முன்வைக்கிறார் சரவணன். குருவிக்காக நடுவிரல் தொட விரும்பும் ஒவ்வொருவரையும் மழைக்காக ஆட்க்காட்டி விரல் ஒன்றும் நீண்டிருப்பதை ஞாபகப்படுத்துகிறார் சரவணன். எதையும் தான் விரும்பும் வடிவத்துக்குள் அடக்கிவிடுகிற முனைப்பும் உழைப்பும் இருக்கின்றன இவரிடத்தில்.

"என் மேசை நாட்காட்டியில்
சிரித்துக் கொண்டிருந்த குழந்தைகளின்
சிரிப்பை கேட்டு அடம்பிடித்தன
என் தோட்டத்தில் இருந்த
பசுஞ்செடிகள்.
அடம்பிடிக்கும் செடிகளுக்கு
நீரூற்றத் தொடங்கிய
சில நாட்களுக்குப் பின்
வந்த ஒரு காலை நேரத்தில்
செடியெங்கும் பூத்துக் கிடந்தன
குழந்தைகளின் சிரிப்பு."

காலை நேரத்தில் பூத்துக்குலுங்கும் பள்ளி செல்லத் தயாரான பிள்ளைகள் நம் அகக்கண்ணில் வந்து செல்வது கவிஞரின் சொல்வன்மையே.மழை பொழியத்தொடங்கும் அந்த ஒரு நொடி நேரத்தை மிக அலாதியான அமைதியான சொற்களால் விளக்கும் அது நிகழ்ந்த பொழுது இந்த தொகுப்பின் மிக முக்கியமான கவிதை.

"மகிழ்ச்சி வெறுப்பு கோபம்
என ஒவ்வொருவரும்
எதாவது ஒன்றை
அங்கே விட்டு சென்றனர்" என்கிறார்.

ஒரு சிறுகதைக்குண்டான ஆச்சர்யங்களையும் செய்திகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது "அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்த ஹார்மோனிகா" என்னும் கவிதை.அதன் முற்று வரியான "அப்பா மட்டும் எதுவும் சொல்லவே  இல்லை" என்னும் வரியில் அப்பாவின் தோழி வாங்கிக் கொடுத்தது என்னும் தலைப்பிலிருக்கும் செய்தியை முடிச்சிடுகிறார் சரவணன்.அது நமக்கு சொல்லப்படுகிறதே அன்றி யார் வாங்கிக்கொடுத்தது என்பது அப்பாவை தவிர வேறு யாருக்கும் வீட்டில் தெரியாது எனக் கொண்டால் இதன் நீட்சி மிகப் பெரியது.

"சட்டென்று அணைத்து
முத்தமிட்ட மழையிடம்
சொன்னேன்
உனக்கும் எனக்கும் மழையை
மிகவும் பிடிக்குமென்று"

காதல் அந்த மழையில் தொடங்கி படிக்கிற விழிகள் வரை ததும்புகிறதல்லவா....?

நான் தொலைத்தவைகளை
மீட்டுத் தருகிறது மழை
என் யாழின் நரம்புகளில் இருந்து

என்னும் யாழ் மீட்டிய மழையின் இசை என்னும் கவிதை நமக்குள் உண்டுபண்ணுகிற அதிர்வுகள் அமைதியானவை, அதே நேரத்தில் அபூர்வமானவையும் கூட. நினைவு மழை என்னும் கவிதையில் மனசெங்கும் நினைவு மழை என்னும் சரவணன் அடுத்த கவிதையிலேயே மழையாய் எழுகின்றன நினைவுகள் என்கிறார்.திகட்ட திகட்ட மழையை புகட்டி விடுவதென்ற எத்தனம் தற்செயலாய் அமைந்திருப்பது தான் இக்கவிதைகளின் அழகு.

எப்பொழுதும் நனைந்து கொண்டே இருத்தலை மிகவும் நேசிக்கிற மனிதராக இருக்கிறார் சரவணன். அதே நேரத்தில் மழையைப் பிணைத்து அவர் நினைவுகளை, மென்மையை, தொலைந்த பால்யத்தை, நேசத்தை, காதலை, முத்தத்தை, தனிமையை, வனத்தை, பூக்களை, தோட்டத்தை என இயற்கையின் சகல முடுக்குகளிலும் மழையொன்றைப் பெய்ய செய்து  அதனூடாக அவ்வவற்றை தரிசிக்கிறார்.

மிகவும் எளிமையான,படிக்கிறவர்களைக் கிறங்கச் செய்யும்,மென்மையின் வாய்த்திருத்தலை உட்கொண்டு மழை மழையைத் தவிர வேறொன்றுமில்லை என அணுகியிருக்கும் சரவணனின் முகில் பூக்கள், மனங்களை மழை கொண்டு கழுவும் கவிதைகள்.

Pin It