ஈழத்தில் பெண்கள் நாவல் படைக்கும் வீதம் நாளுக்கு நாள் விருத்தியாகிக்கொண்டு வருகிறது. வெறுமனே பொழுது போக்கு நாவல்களை விடுத்து சமூகநோக்கோடு எழுதப்படும் நாவல்கள் என்றும் காலத்தால் அழிவதில்லை. அந்த விதமான நாவல்களை வாசிக்கும்போது மனதில் ஓர் உணர்வு தோன்ற வேண்டும். அந்த நாவல்களுக்கூடாக இதயத்தை தொடுகின்ற ஒரு வலி ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகர் மனதில் நின்று நிலைத்து பெயர் சொல்லக்கூடிய நாவல்களாக அவை மாறும். நாவல்கள் மகிழ்வூட்டக்கூடியதாக இருக்கின்றனவோ இல்லையோ நெகிழ்வூட்டக்கூடியனவாக இருந்தால் மிகச்சிறப்பாக இருப்பது நிதர்சனம்.

sumaira_bookஅந்த வகையில் குருணாகலை, தெளியாகொண்ணை ஹிஸ்புள்ளாஹ் நவோதய பாடசாலையில் தமிழ்பாடம் கற்பிக்கும் கலைப்பட்டதாரி ஆசிரியரான எம். ஏ சுமைரா அவர்களின் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலை வாசித்த போது எனக்குள் ஒரு வலி ஊடுறுவியது. அந்த சுகமான அனுபவத்தை இந்நாவலை வாசித்தால் மாத்திரமே உணர முடியும். புரவலர் புத்தகப்பூங்காவின் 21வது வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவல் 13 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே இவர் 2003 ஆம் ஆண்டில் சிந்தனை வட்டத்தின் 174வது வெளியீடாக எண்ணச்சிதறல்கள் என்ற கவிதைத்தொகுதியை தனது கன்னி நூலாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விடியலில் ஓர் அஸ்மனம் என்ற இந்த தொகுதி, அவரது நாவல் முயற்சியின் முதல் பிரசவமாகும். அந்த முதல் பிரசவத்திலேயே அழகியதொரு குழந்தையாக இந்நாவல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி, சுபைர் இளங்கீரன், செங்கை ஆழியான், தெணியான், கே. டானியல் போன்ற படைப்பாளிகளினதும், ஜனரஞ்சக எழுத்தாளர்களான லஷ்மி, ரமணிச் சந்திரன், ராஜேஸ்குமார் போன்றவர்களினதும் வித்தியாசமான அனுபவங்களே இவரது விரல்களுக்கு வீரியம் அளித்துள்ளது என நூலாசிரியர் பற்றிய குறிப்பில் கலைஞர் கலைச்செல்வன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

நாவலின் கரு மாமி மருமகள் பற்றிய பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலம் வரை இலக்கியத்திலும், சினிமாவிலும் யதார்த்தமாக பேசப்பட்டு வரும் பிரச்சனை என்றால் அதற்கு சிறந்த முன் உதாரணம் தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை. அதனால் சீர்குலைந்து போன குடும்பங்கள் ஏராளம்.

ப. ஆப்தீன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டிருப்பது போல் ஒன்று மாமியார் நல்லவராக இருந்து மருமகள் எதிரும் புதிருமாக கூட்டுக்குடும்பத்தை நரகலோகமாக மாற்றிவிடுவாள். அல்லது மருமகள் குணசாலியாக இருந்து, மாமியார் கொடூரமாக நடந்து இல்லற வாழ்க்கையைக் கெடுத்துவிடுவாள். அதனால் அந்த வீட்டு ஆண்மகன் படும் அவஸ்தைகளை வார்த்தைகளால் அளவிட முடியாது. வருடங்கள் பல தனக்காக வாழ்ந்த தாயில் கோபம் கொள்வதா அல்லது வாழ்நாள் முழுவதும் தன்னை நம்பி வந்திருக்கும் மனைவி மீது கோபம் கொள்வதா என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாக தவிப்பார்கள்.

தாய், தாரம் என்ற இருவேறுபட்ட உறவுகளும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலுவதே கண்கூடு. எங்கே தன் மகன் தன்னைவிட்டுவிட்டு நேற்று வந்த மருமகளே கதி என்றாகி விடுவானோ என்ற கவலையில் தாயும், தன் கணவன் தன்;னைப்பற்றி சிந்திக்காமல் சதாவும் அம்மா பிள்ளையாக இருக்கிறாரே என தாரமும் சிந்திக்கத் தொடங்கினால் மகனின் இல்வாழ்வு  எந்தளவு பாதிக்கப்படும்? அந்த வகையான ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சமுதாயத்துக்கு எடுத்துக்கூறும் படிப்பினைகள் பல.

இந்நாவலில் வரும் ஆகாஷ், தாயும் சகோதரியுமே தன் உலகம் என்று நினைத்து வாழ்ந்தவன் வாழ்பவன். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட அவர்களை வளர்த்தெடுக்க, தன் தாய் பட்ட வேதனைகளைப் பார்த்து வளர்ந்தவனுக்கு தாய் மீது அலாதி பற்று. தன் உயிரையும் விட தாயை நேசிக்கிறான் ஆகாஷ். தாயும் கூட மகன் ஆகாஷின் அன்பும் உபசரிப்பும் தன் வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற நல்லவள். எனினும் மருமகள் விடயத்தில் தான் பொல்லாத பாத்திரமாக மாற்றப்படுகிறாள். ஆகாஷின் சகோதரி தான்தோன்றித்தனமான பாத்திரம். தன் சுயநலத்துக்காக தனயனின் இன்பங்களைப் பற்றி யோசிக்கத் தெரியாதவள். அவளது பிடிவாதத்தால் தங்கமான கணவரையும் பிரிந்து வந்து ஆகாஷின் சீவியத்தில் வாழ்க்கையை கழிக்கிறாள். ஆகாஷின் மனைவி பிருந்தா வாயில்லாத பூச்சி. எது நடந்தாலும் கணவனுக்காக வேண்டி பொறுத்துக்கொண்டு, நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்து தொலைப்பவள்.

மகன் வேலைவிட்டு வரும்போதே தாய் மருமகள் பற்றிய புராணத்தை இப்படி பாடுகிறாள்.

'ஆ.. வா... ப்.. பா! நல்ல நேரம் வந்தே. உன் சுந்தரிக்கு காய்ச்சலாம். போத்திப்படுக்குறா. வேலைக் கள்ளிக்கு புள்ள சாட்டாம். தெனம் தெனம் அவவுக்கு மட்டும் அப்படி என்ன காய்ச்சலோ? நாம என்ன வேலய வாங்குறோம்?'

அது போல மனைவி பிருந்தா மீது ஆகாஷ் கொண்டுள்ள வெறுப்பு கீழுள்ள வரிகளில் நன்கு புலப்படுகிறது.

'சதாவும் அழுது வடியும் முகமும், எதையோ பறிகொடுத்தது போன்ற பார்வையும் எனக்குள் இன்னும் எரிச்சலைத் தந்தது. அம்மா சொல்வது சரி தான் என்று எண்ணத் தோன்றியது. கணவன் அலுவலகத்திலிருந்து வரும்போது, மனைவி லெட்சணமா வாயில் வரை வந்து வரவேற்காது வருடத்தில் பாதி நாள் நோய் . அது போதாதென்று 'வேலைக்காரி' போல் எந்த அலங்காரங்களுமின்றி தூங்கு மூஞ்சாக உம் என்றிருப்பது எனக்கு மேலும் வெறுப்பை ஏற்றியது..'

திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும் ஆகாஷ் - பிருந்தா தம்பதியினருக்குள் ஒற்றுமையில்லை. அந்நியோன்னியமில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் மனப்போராட்டங்களுடன் விடியும் இரவுகள் ஆகாஷூக்கு சொந்தமாகிக் கொண்டிருந்தன. பிருந்தாவும் தனக்கெதிராக வீட்டில் அரங்கேறும் அநியாயங்களை கணவனுக்குக் கூறாமல் தானும் தன் குழந்தையும் என்று வாழ்வதால் உண்மை நிலவரம் தெரியாமல் தன் வாழ்க்கையே வெறுத்திருக்கிறான் ஆகாஷ்.

ஒரு நாள் அலுவலகத்துக்கு சென்ற போது அவனது உயிர் நன்பணான தேவ் அங்கு வீற்றிருக்கிறான். அவர்கள் பால்ய காலம் முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாக படித்தவர்கள். வறுமையின் கொடுமையால் ஒன்றாக வெளிநாட்டுக்கு பறந்தவர்கள். இனம்புரியாத மகிழ்ச்சியுடன் தேவ் ஐ வரவேற்கிறான் ஆகாஷ். தன் மனைவி மூன்றாவது தடiவாக கர்ப்பமாக இருப்பதாகவும், நாளைக்கு ஆகாஷ் குடும்பத்தினரை விருந்துக்கு வரும்படியும் அறிவித்துவிட்டு தேவ் சென்றுவிடுகிறான்.

இந்த சந்தோஷத்துடனேயே அன்றைய அலுவல்களை முடித்து உற்சாகமாக வீடு வந்தபோது அம்மா மாத்திரம் அவனை எதிர்பார்த்து காத்திருக்க பிருந்தாவை அவன் கண்கள் தேடுகிறது. அதை புரிந்த தாய் மீண்டும் மருமகள் பற்றி மகனிடம் வத்தி வைக்கிறாள்.

'வா.. ப்.. பா! உன் சுந்தரிய தேடுறியா? அம்மாவும், புள்ளயும் கொஞ்சி குலாவிக்கிட்டிருக்காங்க. நீ பாட்டுக்கு ஒழச்சி.. களைச்சி... கஷ்டப்பட்டுட்டு வர்றே.. இங்க இவளுக்கு சொகுசு மெத்திப்போச்சி. களைச்சி வர்ற புருஷன ஆசுவாசப்படுத்தவாவது பொழுதில்ல.. வேல கள்ளிக்கு புள்ள சாட்டு.. கழுதய விடு.. நீ உள்ள வாப்பா. சாப்பாடு வைக்கிறன்..'

ஆகாஷ் அறைக்கு சென்று பார்க்கிறபோது பிருந்தா தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவனுக்கு கோபம் கோபமாக வருகிறது. குடும்பப் பாரத்தை உணர்த்தி தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாய், தனக்காக இன்னும் கஷ்டப்படுகிறாளே என்று எண்ணியெண்ணி மனசுக்குள் குமைந்தான் ஆகாஷ்.

இரண்டு வருடங்களுக்கு முதல் தான் திருமணம் புரிய சம்மதித்த நினைவுகள் ஆகாஷின் மனக்கண் முன் தோன்றுகிறது. முப்பத்தாறு வயதில் அம்மா அக்காவின் விருப்பத்துக்காக திருமணம் செய்ய விருப்பம் கொள்கிறான். மேலும் பிருந்தாவின் அழகு, அவளது கண்களில் வீசும் காந்த ஒளி, சாந்த முறுவல் யாவும் ஆகாஷை சந்நியாசி வாழ்விலிருந்து சம்சார வாழ்விற்கு இட்டுச்செல்கிறது. அப்படி ஆசை ஆசையாக திருமணம் முடித்தும், இன்று அந்த பிருந்தாவால் தனக்கும், தன் தாய்க்கும் கஷ்டம் தானே என்று எண்ணி தன் தந்தை காலமான போது அழுததற்கு பிறகு அன்றைய இரவில் அழுது தீர்க்கிறான் ஆகாஷ்.

அடுத்த நாள் அலுவலகம் விட்டு தேவ் இன் வீட்டுக்குப்போய் விருந்துண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான் ஆகாஷ்.  தேவ் உம் அவனது மனைவி திவியும் காதலில் கசிந்துருகி வாழ்பவர்கள். வாழ்வை இன்பமாக்கும் கலையை  கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்களை பார்க்கும் போது ஆகாஷின் மனதை வெறுமை ஆட்கொள்கிறது. அவனது வாழ்க்கை, எதிர்காலத்தை காட்டி பயமுறுத்துகிறது. மீண்டும் நாளைக்கு பிருந்தாவுடன் வருமாறு தேவ் திவி தம்பதி ஆகாஷூக்கு கட்டளையிட, மறுக்க முடியாமல் சரி என்கிறான் ஆகாஷ். அடுத்த நாள் காலையில் அலுவலகம் போன போது ஆகாஷூக்கு தொல்லையாக இருக்கும் ரோசி என்பவள் எதிர்படுகிறாள். அவள் ஆகாஷின் கம்பீரத்துக்கு வசியப்பட்டவள். எனினும் ஆகாஷ் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ரோசி  - ஆகாஷின் ஊரையாடல் பின்வருமாறு அமைகிறது.

'என்ன சேர் கடமைக்காக தேங்ஸ் சொல்றீங்க? மலர்ந்த முகத்தோட புன்முறுவலோட சொல்லுங்களேன். என்ன கொறஞ்சா போயிடும்? உங்க சிரிப்பு இருக்கே. அப்பப்பா என்ன ஒரு மின்சக்தி...'

'ஸ்டொப் ரோசி. திஸ் இஸ் டூ மச். மைன்ட் யுவர் லேங்குவேஜ். ஐ எம் மெரீட். நான்ஸன்ஸ். ப்ளீஸ் கோ அவுட்' (நிறுத்து ரோசி. அளவுக்கதிகமா பேசுற. வார்த்தைகளை அளந்து பேசு. நான் திருமணம் முடித்தவன். வெளியே போ)

'ஓ கே. நான் போயிடுறேன் சேர். ஆனா ஒன்டு சொல்லட்டுமா? கோபத்திலேயும் உங்க மீசை துடிக்கும் போது அலாதியான அழகு தான். உங்க வைஃப் லக்கி லேடி. பாய் சேர்'

ஒரு பெண்ணின் பார்வை ஒன்றையை வேதமாக ஏற்று வாழும் பல ஆண்களுக்கு மத்தியில் தேடி வரும் பெண்ணையும் ஒதுக்கிவிடும் ஆகாஷ் போன்ற நல்லவர்கள் இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒரு ஜென்டில் மேனாகவே நடந்து கொள்ளும் ஆகாஷ்,  ஏன் தன் மனைவி குழந்தைகள் மீது மட்டும் இவ்வாறு வேறுபாடு காட்டுகிறான்? ஏன் அவனால் தன் தாயும் சகோதரியும் நடாத்தும் நாடகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்று என்னில் பல எண்ணங்கள் உருவெடுத்தது. அதற்குக்காரணம் வீட்டார்கள் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பும், நம்பிக்கையும் தான் என்பது வாசிக்கும் போது புரிந்தது.

மீண்டும் அடுத்த நாள் ஆகாஷ் பிருந்தாவுடன் தேவ் வீட்டுக்கு சென்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். தன் குடும்பப் பிரச்சனைகளை தேவ் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக மனைவி பிருந்தாவிடம் எதையும் சொல்லிடாதே என ஆகாஷ் எச்சரிக்கிறான். அவளும் அதே போல நடந்துகொள்கிறாள்.

அவனது அலுவலகத்தின் புதிய கிளை திறந்து வைக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக ஆகாஷை அந்த நிறுவனத்தின் தலைவராக்குகிறார் மேலதிகாரி. இவற்றையெல்லாம் பார்க்க தன் தந்தை இல்லையே என்றும் தாய் கண்டால் மிகவும் சந்தோஷப்படுவார் என்றும் நினைத்து கண்ணீர் சிந்துகிறான் ஆகாஷ்.

எதிர்பாராத இந்த வெற்றியைக் கொண்டாட தாய்க்கும், சகோதரிக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தவன் மனைவி பிள்ளைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிடுகிறான். ஒரு ஓரமாக இருந்து இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிக்கும் பிருந்தாவைக் கண்டதும் ஆகாஷூக்கு சுருக் என்கிறது. எனினும் அதைப்பற்றி கவலைப்படாமல் வேறு பக்கமாக திரும்பி அம்மாவினதும் அக்காவினதும் சந்தோசத்தை பார்த்து மகிழ்கிறான். அத்தியாயம் நான்கு வரைக்கும் இவ்வாறான கதையாடல் தான் விரிந்து செல்கிறது. ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து தான் இந்நாவலின் தலைப்புக்கேற்ற கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

அதாவது இரண்டு மாதங்களுக்குப்பின் ஒரு நாள் தேவ் வீட்டுக்கு சென்ற ஆகாஷ் மொட்டை மாடிக்கு செல்கிறான். அங்கிருந்து பார்த்தால் ஆகாஷின் வீடு நன்கு தெரியும். எதேச்சையாக எதையோ கண்டு அவன் மனம் புழுவாய் துடிக்கிறது. ஆம்! தன் தாயும் சகோதரியும் மனைவி பிருந்தாவுக்கு செய்யும் கொடுமைகளை காண்கிறான் ஆகாஷ். அம்மா பிருந்தாவை கீழே தள்ளிவிட அவள் தலை எதிலோ மோதுகிறது. பின் ஆடைகளைக் கழுவுகிறாள். இடையிடையே அழுகிற குழந்தையை ஆசுவாசப்படுத்துகிறாள். ஆகாஷூக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. கருணைக்கு பெயரான அம்மா ஏன் இப்படி மூர்க்கத்தனமாக நடக்கிறாள்? ஆயிரம் வினாக்கள் மனதில் விரிய, அவன் தோள்களை இரண்டு கைகள் பற்றுகிறது.

ஆகாஷ் பார்த்த அந்த காட்சியை தாம் இரண்டு மாதங்களாக பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், பிருந்தாவில் எந்த தப்புமில்லை என தேவும், திவியும் கூறுகிறார்கள். திருமணம் செய்வதற்கு முதலேயே தனக்கென பணம் சேமித்து, வீடும் கட்டியதால் இன்று தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக விளக்குகிறான் தேவ். ஆனால் ஆகாஷோ அவ்வாறான எண்ணமில்லாதபடியால் தன் சொந்த வாழ்வை விடுத்து வீட்டார்களின் நலவைப்பற்றி மாத்திரமே சிந்தித்ததால் தற்போது அவன் படும் வேதனை பற்றியும் விளக்கினார்கள். இனிமேல் நடக்க வேண்டிதை மூவருமாக ஆலோசிக்கிறார்கள். தன் தவறை உணர்ந்த படியாலும், பிருந்தா மீது எந்தவிதமான தப்பும் இல்லாத படியாலும் தன் மனைவி மீது ஆகாஷிற்கு அளவு கடந்த காதல் பிறக்கிறது. எனினும் அதை உடனே வெளிக்காட்டுவது ஆபத்து என்பதால் மெதுமெதுவாக அவளை தன்வயப்படுத்துவது என்று முடிவெடுக்கிறான் ஆகாஷ்.

அதே வேகத்தில் அக்காவின் கணவரான ஹரி அத்தானை சந்தித்த போது அவரில் எந்த விதமான பிழையுமில்லை என்பதை உணர்கிறான் ஆகாஷ். அதை ஒருநாள் அக்காவிடம் கூறிய போதும் அவளது பிடிவாதத்தால் ஹரியுடன் வாழ மறுக்கிறாள். செய்யாத குற்றத்துக்காக கணவனை குறை சொல்லும் பெண்தான் தனது சகோதரி என்பது ஆகாஷூக்கு புரிகிறது. 

இத்தனை நாளும் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பிருந்தாவில் குறை கண்டவன், தற்போது சிந்தனை தெளிந்தவனானபடியால் எல்லா கோணங்களில் இருந்தும் யோசிக்கத் தொடங்கினான்.

அன்று நேரகாலத்துடன் வீட்டுக்குப் போனபோது நிகழ்ந்த உரையாடலில் அம்மாவினதும் அக்காவினதும் சுயருபம் தெரிகிறது.

என்னடி.. இன்னும் சமையல் பண்ணல? எத்தின மணிக்கடியம்மா நாம சாப்பிடறது? என்ற தாய்க்கு சாதகமாக 'இரு.. இரு.. ஆகாஷ் வரட்டும். இன்று பிட்டுப்பிட்டு வைக்கிறேன்' என அக்காவும் கூறுவது, ஆகாஷூக்கு உண்மையை உணரச்செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது வீட்டில் நுழைகிறான். அவனது வரவை அந்நேரத்தில் எதிர்பார்க்காத தாய் முதலில் அதிர்ந்துபோகிறாள்.

அப்போது அடுக்களையிலிருந்து வெளியே வந்த மனைவியின் கோலம் அவள்மீது கழிவிரக்கம் கொள்ளச்செய்கிறது. அந்த வேதனையை ஆகாஷின் மனதில் கீழுள்ளவாறான எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஷநெற்றியில் துணியால் கட்டுப்போட்டிருக்கிறாள். தோளில் குழந்தை. துணியெல்லாம் துவைத்து.. இப்போ சமைக்கிறாள். ஓ.. இங்கே இவள் வேலைக்காரி. இவர்கள் வேலை வாங்குகிறார்கள். கவனித்துக்கொள்கிறேன் என மனதுக்குள் பொருமினேன்.

மனைவிக்கு ஓய்வு கொடுப்பதற்காக அம்மாவிடம் சமைத்துக்கேட்பதும், பிருந்தா தன்னருகே இருக்க வேண்டும் என்பதற்காக சுத்தமாக இருக்கிற தன் அறையை இழுத்துப்போட்டு சுத்தம் செய்யும் படி ஏவுவதும், தைலம் தடவி விடச் சொல்வதும், அவனது அலுவலக வேலைகளில் அவளை இணைத்துக்கொள்வதுமாக பிருந்தாவை தன் அருகே இருத்திக்கொள்ள அதிகம் பிரயச்சித்தப்படுகிறான் ஆகாஷ். ஆகாஷின் இந்த மாற்றம் அம்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவினதும் ஆகாஷினதும் நெருக்கம் அம்மா மருமகள் மீது கொண்ட பொறாமையால் மெதுமெதுவாக சீர்குலைகிறது. 

தேவ் திவியின் வழிகாட்டுதலாலும் ஆகாஷ் பிருந்தாவைப் புரிந்து கொண்டதாலும் அவர்கள் இன்பமாக வாழ்வதற்காய் தனிக்குடித்தனம் போகிறார்கள்.

இடையிடையே அம்மாவின் நினைவுகள் எழுந்து மனதை வதைத்தாலும் பிருந்தாவின் அருகாமையால் கவலைகள் மறக்கிறான் ஆகாஷ். இதுவரை ஒட்டாதிருந்த மகள் துஷாக்குட்டியும் தந்தையுடன் ஐக்கியமாகிறாள். அன்பான மனைவி, அழகான குடும்பம் என்று ஆகாஷின் வாழ்க்கை அழகாக செல்கிறது. 'உன் சுந்தரிக்கு காய்ச்சலாம்' என்று தன் அம்மா அடிக்கடி கூறும்போது விளங்காத ஆகாஷூக்கு, பின்பொருநாள் அவளது நெற்றியில் எதேச்சையாக கை பட்டபொழுது பாரதூரம் விளங்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. கதையின் இறுதியில் பிருந்தா இரத்த புற்று நோயால் இறக்கிறாள். மனதை நெகிழ்வடையச் செய்யக்கூடிய வரிகள் இறுதியில் இவ்வாறு அமைந்திருக்கிறது.

'என்னுயிர் பிருந்தா.. அவதிப்பட்டு.. துடிதுடித்து.. அலங்கோலமாகி... ஆறாவது நாள் அடங்கியே போனாள்'

'என் இதயம் ஸ்தம்பித்தது.. என் விடியல் அஸ்தமனமாவது கண்டு நான் சிலையானேன்'

அவதிப்பட்ட ஒரு குடும்பத்தை அருகிலிருந்து பார்த்த உணர்வில் நாவல் முழுவதும் நான் ஒன்றித்தேன். மிக அருமையாகவும், வசன இடர்பாடுகள் அற்றதாகவும் சீரான போக்கில் அமைந்திருக்கிறது இந்த நாவல். இது போல இன்னும் பல படைப்புக்களைத்தந்து சுமைரா அவர்களின் இலக்கிய வளர்ச்சி இமயமாய் வளர வாழ்த்துகிறேன்!

இந்நாவலை நீங்களும் பெற விரும்பினால் கீழுள்ள விலாசத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்!!!

பெயர் - விடியலில் ஒர் அஸ்தமனம் (நாவல்)

நூலாசிரியர் - எம். ஏ. சுமைரா

முகவரி - K.K.M. Garden,
                   Thakkiya Road,
                   Mallawapitiya,
                   Kurunegala,
                   Sri Lanka.
தொலைபேசி - 00 94 72 3670515
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150/=

Pin It