கணவன் மனைவி ஆகிய இருவர்க்கிடையே ஏற்படும் மணமுறிவு முதலிய சிக்கல்களால் முதன்மைப் பாதிப்படைவது என்னவோ குழந்தைகள் தாம்!  தாயும் தந்தையும் பிரிந்து வாழும் சூழலில், தாய் தந்தை ஆகிய இருவரும் இருந்தாலும் அவ்விருவரில் ஒருவரிடம் அக்குழந்தைகள் தனித்து வளரும் சூழல் அமைவது இயல்பானது.  அச்சூழலில் தாயிடம் வளரும் பெரும்பாலான குழந்தைகளையும் அவர்களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்களையும் இந்நூல் ஆராய்கிறது. 

 

 ‘குழந்தைகளுக்கு ‘அம்மா-அப்பா’ என்பது வெறும் உயிரியல் குறியீடு மட்டுமன்று;   சமூக அடையாளத்தின் குறியீடுமாகும்’ (பன்னிரண்டாம் பக்கம்) என்று கூறும் இந்நூல், இக்குழந்தைகள் எப்படிப்பட்ட தனிமையை உணர்வார்கள் என்பதை, ‘அப்பா பற்றிய கேள்வியுடன் வளரும் குழந்தை, இயல்பான வாழ்க்கை முறையை விடுத்துத் தனிமையில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கும் என்பதல்ல பொருள்.  இங்கே தனிமை என்பது, அப்பா இன்றி வாழும் வாழ்நிலை உண்டாக்கும் சிந்தனைக்கும் அப்பா என்ற கருத்தியல் உண்டாக்கும் சிந்தனைக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளும் அதன் விளைவுகளும் ஆகும்’ (பதின்மூன்றாம் பக்கம்) என்று விளக்குகிறது. 

 

பெற்றோர் இல்லாக் குழந்தைகள் (‘அனாதை’க் குழந்தைகள்), ஏதிலிக் (‘அகதி’) குழந்தைகள் ஆகியோருக்கு ஏற்படும் மன உளைச்சலை விட அதிக உளைச்சலுக்கு ஒரு பெற்றோர்க் குழந்தைகள் (தந்தையிடமோ தாயிடமோ தனித்து வளரும் குழந்தைகள் – ‘Single Parent Child’) ஆளாகிறார்கள்.  தாய்க்கு மோசமான கணவனாகவும் அதே நேரம் தனக்கு நல்ல அப்பாவாகவும் இருக்கும் ஒருவரைத் தாய் பிரிந்து வாழும் சூழலில் தாயிடம் வளரும் குழந்தைகளுக்குத் தோன்றும் விடை காணமுடியாக் கேள்விகள், அவற்றால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் ஆகியன நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.

 

தாய்க்குழந்தை (தாயிடம் வளரும் குழந்தை – ‘Mother Child’)களைப் பற்றி மிகுதியாகக் கூறும் இந்நூல், ‘தாயின் பொருளியல் நிலையை அடிப்படையாக வைத்துத் தாய்க் குழந்தையின் பிரச்சினைகளை – தனிமைத் துயரங்களை ஆராய்வதும் வேண்டியதாகிறது’ (இருபத்தாறாம் பக்கம்) என்கிறது.  பொருளியலுக்காக யாரையும் சாராத நிலையில் தாய் அமைவது இக்குழந்தைகளின் உளவியல் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும்’ எனக் கூறும் நூல், ‘மரபு வழிப்பட்ட குடும்பத்தின் உறுப்புகளில் இருந்து விலகிய பின்னால், தான் சிதைந்து போனதாகவோ தனக்கு இனிக் ‘குடும்பம்’ என்ற நிறுவன வாய்ப்பு இல்லையென்றோ எண்ணாமல், தானும் தன் குழந்தையும் தனித்த புதிய குடும்பம் என்ற உண்மையை மனத்தில் பதித்து அதற்கேற்ப வாழ்வு முறை, உறவுச் சுற்றம், நட்பு வட்டம் முதலியனவற்றைப் புதியனவாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்’ (நாற்பதாம் பக்கம்) என்று வலியுறுத்துகிறது.  ‘மரபுகளின் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் மாற்றத்தை நோக்கிய நெருப்பில் குதித்துத் தயாராகி விட வேண்டும்’ என்று கணவனைப் பிரிந்த நிலையில் குழந்தைகளுடன் வாழும் பெண்ணுக்கு நூலாசிரியர் தரும் அறிவுரை மிகச் சிறப்பான ஒன்றாகும். 

 

நூலில் நிறைவுப் பகுதியில் தாய்க்குழந்தை வளர்ப்பில் தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய தீர்வுகள் பேசப்படுகின்றன.  ‘இளங்காளைப் பருவம் வரை, தாய்க் குழந்தை, ஒவ்வொரு நிலையிலும் தன் தாயின் அரவணைப்பில் புதிய புதிய சுகத்தையும் நம்பிக்கையையும் பெறுகிறது.  தவழும் குழந்தை வீட்டில் எங்கு விளையாடினாலும் குறிப்பிட்ட இடைவெளியில் அம்மாவை வந்து பார்த்து விட்டுச் செல்கிறது’ (நாற்பத்தேழாம் பக்கம்) என்று உளவியல் பேசும் இந்நூல், ‘அப்பா என்ற அடையாளப் பிரச்சினையை ஈடுகட்ட அல்லது ஒத்திவைக்க, தன் குழந்தையைப் புதிய அடையாளங்களுக்கு (‘New identities’) அறிமுகப்படுத்தி விட வேண்டும்.  தாய்க்குழந்தை, பொதுக் கல்விக்கு அப்பாற்பட்டுப் பிற ஏதேனும் கலை, விளையாட்டு, அறிவுத் துறைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்’ (நாற்பத்தெட்டாம் பக்கம்) என்றும் ‘தாய்க்குழந்தை வெளியில் அனுபவிக்கும் துன்பங்களை ஈடுகட்டும் அளவில் தாய் தன் குழந்தையின் மனத்தின் ஆழத்திற்குச் சென்று பேசுதல் வேண்டும்; தங்களுக்கிடையே தனித்த இரகசியங்கள் இல்லை என்ற நம்பிக்கை உணர்ச்சியைத் தாய்க்குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்’ (நாற்பத்தொன்பதாம் பக்கம்) என்றும் பல தீர்வுகளை முன்வைக்கிறது.  இவை தவிரப் பள்ளிநிலை, சமுதாய நிலை, தந்தை நிலை ஆகிய நிலைகளில் காணப்பட வேண்டிய தீர்வுகளும் கூறப்பட்டுள்ளன.  குழந்தைகளில் உளவியலைப் படம் பிடித்துக் காட்டும் இந்நூல் தமிழில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.  பெற்றோர் இல்லாக் குழந்தைகள், ஏதிலிக் குழந்தைகள்  ஆகியோரின் உளவியல் பற்றியும் முதல் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடுவது போல் நூலாசிரியர்  எழுதுவாராயின் போர்ச்சூழலால் பெற்றோர் இன்றி வாழும் தமிழ்க்குழந்தைகள், ஏதிலிகளாக வாழும் தமிழ்க் குழந்தைகள் ஆகியோர் பற்றிச் சமூகம் அறிந்துகொள்ள மிகுந்த உதவியாக இருக்கும். 

 

நூல்: தனிமையில் தவிக்கும் குழந்தைகள்
நூலாசிரியர்: முனைவர் து. மூர்த்தி

இரண்டாம் பதிப்பு: 2010  விலை: உரூ. நாற்பது

வெளியீடு:     தமிழ்நிலா பதிப்பகம், 16/4, 48ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை – 600061. பேசி: 09444880992. 

Pin It