நவீன இலக்கியச் சூழலில் மிகப் பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். குறுகிய காலத்தில் பேசப்பட்டவர். புகழப்பட்டவர். 2003ல் ‘எஞ்சோட்டுப் பெண்’ என்னும் முதல் கவிதைத் தொகுப்பும் 2007ல் ‘வனப்பேச்சி’ என்னும் கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது. 2007,2008 ம் ஆண்டுகளில் இவரின் நேர்காணல்கள் ஏராளமான ஊடகங்களில் பதிவாகியுள்ளன. பத்துக்கும் மேற்பட்டவை 2008ம் ஆண்டிலே வெளியானவை.

‘தமிழச்சி’ என்னும் பெயருக்கான காரணத்தைக் கேட்பதான வழக்கமான தொனியிலேயே நேர்காணல் தொடங்குகிறது. 2001ம் ஆண்டு கலைஞர் கைது செய்யப்பட்ட போது ‘எழுது கோலை எடு தலைவா’ என்னும் தலைப்பில் முரசொலியில் தமிழச்சி என்னும் பெயரில் முதலில் வெளியானது என்றும் பொருத்தமானதாக இருந்ததால் இலக்கியப் பரப்பிற்கு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ‘சுமதி’ பெயரில் கவிதை எழுதி இருந்தாலும் எழுத்தை அடையானப்படுத்தும் கிராமத்து வாசனையை உணர வைக்கவும் ஒரு காரணம் என்கிறார். சுமதி மணிமுடி என்று ஒருவர் இலக்கியத்தில் இருந்ததாலும் ‘சுமதி’ என்னும் தன் இயற்பெயரைப் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

கலைஞரைப் பற்றியே தொடக்கத்தில் கவிதை எழுதியுள்ளார். கலைஞர் மீது அளவற்ற மரியாதை வைத்துள்ளார். கழகத் தலைவர் என்பதை விட ஒரு குடும்பத் தலைவராகவே எண்ணுகிறார். தி.மு.க. மாநாட்டில் கலைஞர் கொடியேற்ற வாய்ப்பளித்ததைப் பெருமிதமாக கருதுகிறார். “அன்றாடம் என் வாழ்க்கையில் கலந்து விட்ட ஒரு உணர்வு பூர்வமான ஒரு சொல்தான் கலைஞர்” என பிரமிக்கிறார். கலைஞரின் நினைவாற்றலையும் செய்ய வேண்டியவர்களுக்கு செய்ய வேண்டிய நேரத்தில் தவறாமல் செய்யும் பன்பையும் போற்றுகிறார். கலைஞரைப் பாராட்ட கலைஞரிடமே சொற்களை இரவலாக கேட்க வேண்டும் என்று கலைஞரின் மொழியாற்றலைக் கண்டு பரவசிக்கிறார். கவிதையை சிலாகிக்கிறார். பேராசிரியர் பணியை விட்டு விலகிக் கலைஞர் உத்தரவு படி அரசியல் தளத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியே என்கிறார். எனினும் மாணவர்களுடான அனுபவம் அலாதியானது என்கிறார் . கவிஞரின் குடும்பமே ஆசிரியப் பணியில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது. களப்பணியும் மகிழ்வானதே என்கிறார்.

தி.மு.க.வே பெண் முன்னேற்றத்துக்கு போராடியுள்ளது, வாய்ப்பளித்துள்ளது என போதுமான ஆதாரங்களுடன் கூறியுயள்ளார். மூவலூர் இராமாமிர்தம் அம்மாள், சத்தியவாணி முத்து, பூங்கோதை, ஜோன்ஸ் ரூசோ போன்றோருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார்.

1996ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைக்கபட்ட போதே உள்ளளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்பட்டது என்றும் பாராளுமன்றத்தில் மசோதா முன்வரைவு பெற்றதற்கும் தி.மு.க. ஒரு காரணம் என்கிறார். மேலும் சமூக மாற்றத்துக்கு, முன்னேற்றதிக்கு தி.மு.க ஓர் இயக்கமாகவே இயங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். பெண்முன்னேற்றம் குறித்தும் பேசியுள்ளார். பெண்ணியம் அவசியம் என்றவர் பெண் விடுதலை என்பது ஆண் விடுதலையையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று தன் பார்வையை, கருத்தைத் தெரிவித்துள்ளார். திருநங்கையர்களுக்குக் கலைஞர் ஒரு வாரியம் அமைத்துள்ளதையும் நன்றியுடன் கூறியுள்ளார். திராவிட இயக்கக் காலத்தில்தான் நாடகங்கள் ஒரு சிறந்த கருவியாக இருந்தது என்றும் மிகச் சிறந்த நாடகங்களை எழுதியவர் கலைஞர் என்றும் கூறியுள்ளார். நாடகத்துடனான தன் அனுபவத்தையும் தன் பங்கேற்பையும் குறிப்பிட்டுள்ளார். நாடகம் பற்றிய தன் அறிவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மொழியின் துணையோடு சுயம் கெடாமல் முன்னேற்றப் பாதையில் போக முடியும் என்பதையே தன் கவிதைகள் காட்டுகின்றன என்கிறார். புதுக்கவிதை, நவீன கவிதை குறித்து விரிவாகவே அலசியுள்ளார். “ஒரு படைப்பு என்பது தேக்கநிலை இல்லாமல் அடுத்த நிலைக்குப் போய்க் கொண்டு இருக்கணும்” என்று படைப்பு குறித்து பேசியவர் தன்னை ஒரு நவீனக் கவிஞர் என்றே அடையாளப் படுத்தியுள்ளார். “ஒரு கவிதையை எங்க நிறத்தனும்னு ஒரு கவிஞனுக்குத் தெரியனும்” என கலாப்பிரியாவின் கூற்றை எடுத்துக்காட்டி தனக்கு பிடித்த கவிஞர்களையும் கவிதைகளையும் வரிசைப்படுத்தியுள்ளார். மேல் நாட்டுக் கவிதைகளையும் கவிஞர்களையும் அடையாளப்படுத்தியுள்ளார். கவிதையே மொழியின் உச்சமென்றும் கவிதை வெளிப்பாடே வித்தியாசப் படுத்திக் காட்டுமென்றும் தெரிவித்து கவிதையைத் தேர்தெடுத்ததற்கான காரணத்தையும் சொல்லியுள்ளார். தன் இலக்கியப் பிரவேசத்திற்குக் காரணகர்த்தவாக இருந்தவர் பேராசிரியர் அப்பா ராவே என நன்றியுடன் நினைவுக் கூர்ந்துள்ளார். அவரின் கவிதைகள் யாரைக் காட்டுகிறது, எதைப் பிரதிபலிக்கிறது என்று ஒரு சுயவி[மரிசனத்தையும் வைத்துள்ளார்.

“பெரியார் பெரிய படைப்பாளி என்று எழுத்து பூர்வமாக இல்லையென்றாலும் அவர் இதயத்தளவிலே மிகச் சிறந்த படைப்பாளியாகத்தான் இருந்தார்’ என்று கூறியுள்ளது கவனிப்பிற்குரியது.

கவிஞர் தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் தீவிர தி.மு.க.காரர். கலைஞ்ரைத் தலைவராக ஏற்று அவர் அமைச்சரைவையில் செயபல்பட்டவர். அவரின் மறைவு ஒரு பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை நேர்காணலின் பல்வேறு இடங்களில் நெகிழ்ச்சியுடன் நினைவுக் கூர்ந்துள்ளார். புத்தி சொல்லும், பகிர்ந்து கொள்ளும் ஒரு தோழனாகவே தந்தை இருந்தார் என்கிறார். தந்தைக்குப் பிறகு அமைச்சாரன தம்பி தங்கம் தென்னரசு அப்பாவின் வெற்றிடத்தை நிரப்பியவர் என்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்குக் கணவரின் புரிதலே காரணம் என்று அவரையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு கவிஞரானாலும் ஓர் அரசியல்வாதியானாலும் பரபரப்பாக இயங்கினாலும் ஒரு சராசரி தாயாக இரண்டு மகள்களுக்கு இருப்பதை பெருமையாக கூறியுள்ளார்.

கவிஞர் கனிமொழியை ஓர் ஆளுமையாளர் என்று மதிப்பிட்டு அவரைத் தன் தோழி என்றும் தன்னால் மதிக்கிற கலைஞனின் மகள் என்பதும் முக்கியமானவை என்கிறார். தமிழ்ப் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் பாராட்டுகிறார்.

தமிழ்ப் பெண்கள் அழகுணர்வு மிக்கவர்கள் என்றவர் எடுத்துக்காட்டாக சங்கப் பெண்களைக் கூறுகிறார். அழகாக இருக்க விரும்புவதையும் தெரிவித்து இயற்கைக் கைவினைப் பொருள்கள் அணியவே பிடிக்கும் என்கிறார். தங்கம் அணிய பிடிக்காது என்கிறார். . அழகுணர்ச்சியே உற்சாகமாக வைத்துக் கொள்ளும் என்று உற்சாகம் ஊட்டுகிறார்.

ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஓர் இலக்கு இருக்கும். கவிஞர் தமிழச்சியோ இலக்கு இல்லை என்பதுடன் இலக்கை விட பயணமே முக்கியம் என்கிறார். இலக்கை அடைவதற்காக பயணத்தை இழக்கக் கூடாது என்பதும் கவனிப்பிற்குரியது. 

ஒரு நேர்காணல் சிறப்புப் பெறுவது என்பது கேள்விகளைப் பொறுத்தே அமையும். இத்தொகுப்பில் பெரும்பாலானவை அவ்வாறே அமைந்துள்ளது. ஒவ்வொரு கேள்விக்குமான பதிலைக் கூறும் போதும் கவனமாவும் விரிவாகவும் கூறியுள்ளார். அரசியல், இலக்கியம் என எது தொடர்பாக இருந்தாலும் ஆதாரத்துடனும் வெளிப்படுத்தியுள்ளார். ஓரே கேள்வியை பலரும் திரும்பத் திரும்ப கோரியிருந்தாலும் அனைவருக்கும் சலிப்பில்லாமல் பதிலளித்துள்ளார். குறுகிய காலத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட நேர்காணல்கள் அளித்திருப்பது வியக்கச் செய்கிறது. ஒவ்வொன்றிலும் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வும் ஆர்வமும் வெளிப்பட்டுள்ளதை உணர முடிகிறது. நேர்காணலுக்காக அவர் கையாண்ட சொற்கள் ஓர் இலக்கியத் தரத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நேர்காணலுக்கான தலைப்பும் ஈர்க்கிறது.

ஒருவர் கண்ட நேர்காணல்கள், ஓரிதழில் வெளியான நேர்காணல்கள் தொகுப்பாக வருவது வாடிக்கை. ஒருவரே அளித்த நேர்காணல்கள் தொகுப்பாக வருவது அரிது. அரிதுகளில் புதிது ‘பேச்சரவம் கேட்டிலையோ’.

கவிஞர் தமிழச்சியை முழுமையாக அறிந்து கொள்ள இத்தொகுப்பு ஒரு வாய்ப்பாக உள்ளது. நேர்காணல்கள் மூலம் நெஞ்சம் திறந்து பேசியிருந்தாலும் தன் கொள்கை, கோட்பாடுகளில் இருந்து ஒரு சிறிதும் இறங்க வில்லை. ஒரு கவிஞராக வெகுவாக அறியப்பட்டவர் இத்தொகுப்பின் மூலம் தன் பன்முகத்தையும் காட்டி தன்னை ஒரு ‘தி.மு.க’ காரராக நிறுவியுள்ளார். அவருக்குள் அழியாமல் வாழ்ந்து வரும் கிராமத்தையும் விட்டு கொடுக்கவில்லை. வாசிப்பின் போது காணப்படும் எழுத்துப் பிழைகள் வாசிப்பைத் தடைப்படுத்துகின்றன. கவிஞர் தமிழச்சிக்கு ‘இலக்கு’ இல்லை எனினும் அவர் ‘இலக்கியப் பயணம்’ தொடங்குவது இலக்கியத்திற்கு அவசியம். தொடர வாழத்துக்கள்.

 வெளியீடு:  உயிர்மை பதிப்பகம் 11-29 சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம் சென்னை 600018.

Pin It