அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. மானிடராய் பிறந்தாலும் ஊனமின்றி பிறத்தல் அரிது. ஊனமாய் ஜனித்தாலும் ஊக்கமுடன் வாழ்தல் அரிது. ஊனமில்லாமல் பிறந்தவர்களில் பலர் வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்து வெறுப்புடனே, விரக்தியுடனே வாழ்வைக் கடத்துகின்றனர். ஊனமுற்றவர்களாய் பிறந்தவ்கள் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறன் கொண்டு வாழந்து வருகின்றனர். வரலாறும் படைத்து வருகின்றனர். பிறயவிலேயே பார்வையற்ற ஒருவன் பனையேறி வாழக்கை நடத்தும் அற்புதத்தை ‘அகவிழி’ என்னும் பெயரில் ஓர் ஆவணப் படமாக்கித் தந்துள்ளார் பிஎன்எஸ் பாண்டியன்.

தமிழகத்தின் கடைகோடியில் இருக்கும் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கிராமம் வெள்ளரி ஓடை. பனைமரங்களே நிறைந்த ஊர். பனையை நம்பியே பொதுமக்களின் பிழைப்பு. பார்வையற்றவராக பிறந்த முருகாண்டிக்கும் பனைமரமே பிழைப்புக்கு வழி. சிறு வயதிலேயே பெருமுயற்சியில் பனையேற கற்றுக் கொண்டு வாழ்வை நடத்துகிறார். இவர் வாழ்வையே ஆவணப்படுத்தபட்டுள்ளது.

முருகாண்டி தன் வரலாறு கூறுவதாகவே படம் தொடங்குகிறது. தன் வாழ்வை சுருக்கமானவே கூறுகிறாரர். குடும்ப பிண்ணனியையும் விளக்குகிறார். வீட்டிலிருந்து தேனீர் கடைக்குச் செல்கிறார். சக மனிதர்களோடு தேனீர் அருந்துகிறார். உள்ள{ர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசுகிறார். பின் தோப்புக்குச் சென்று பனை மரம் எறுகிறார். ஓலைகளை வெட்டுகிறார். சீவுகிறார். இவையெல்லாம் வெகு இயல்பாகவே ஒரு பார்வையுள்ளவன் செய்வது போலவே செய்கிறார். பார்வையுள்ளவர்களை பிரமிக்கச் செய்கிறார். ஒரு குடும்பத் தலைவனாகவும் விளங்குகிறார்.

முருகாண்டியைத் தொடர்ந்தே கேமிரா செல்கிறது. கேமிராவை அழகாகக் கையாண்டிருப்பவர் புதுவை இளவேனில். ‘இடைசெவல்’ என்னும் ஆவணப் படத்தை இயக்கியவர். பிஎன்எஸ் பாண்டியனின் எண்ணத்தை, எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளார். படத்தைத் திறம்பட தொகுத்தளித்தவர் ச. மணிகண்ட பிரபு. சிற்பி ஜெயராமனின் குரலில் முருகாண்டியின் பின்புலத்தை அறிய முடிகிறது.

இயக்குனர் பிஎன்எஸ் பாண்டியன் ஒரு பத்திரிக்கையாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவரின் முதல் ஆவணப்படம் இது. முதல் படம் எனினும் ஒரு தேர்ந்த அனுபவத்தைப் படம் மூலம் காட்டியுள்ளார். ஒரு செய்தித்தாளின் வழியே வெளியான செய்தியே ‘முருகாண்டி’யை ஆவணப்படுத்தத் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பனையேறியின் வாழ்வை மட்டுமே ஆவணப்படுத்தவில்லை. பார்வையற்ற ஒருவரின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. பார்வையற்றவர்ளுக்கும் பிறருக்கும் தன்னம்பிக்கையையும் ஏற்படச் செய்துளார்.

‘அகவிழி’ என்னும இப்படம் ஆங்கிலம்,ஜெர்மன், பிரான்ச் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் உலக திரைப்பட விழாவிலும் ‘அகவிழி’ பங்கேற்க உள்ளது.

‘அகவிழி’ என்னும் ஆவணப்படம் மூலம் பார்வையற்றவரகளின் ‘அகவிழி’ யை திறந்து காட்டியுள்ளார். பார்வையுள்ளவர்களின் ‘அகவிழி’ யையும் திறக்க முயற்சித்துள்ளார். பிஎன்எஸ் பாண்டியனுக்கு பாராட்டுக்கள். பார்வையுள்ளவர், பார்வையற்றவர் என்னும் இரு பிரிவினருக்குமே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ‘அகவிழி’.

வெளியீடு: பிஎன்எஸ் பாண்டியன் 3 கிழக்கு பிரதான சாலை வெங்கடேஸ்வரா நகர் புதுச்சேரி-13. கைப்பேசி: 9894660669

- பொன்.குமார்

Pin It