நேரம்: 10:00 நிமிடங்கள்
( விழி. பா. இதயவேந்தனின் சிறுகதையைத் தழுவியது )
திரைக்கதை: மதியழகன் சுப்பையா
காட்சி-1(அ)
வெளிப்புறம். மதியப் பொழுது. கடுமையான வெயில்.
மண் சாலையில் முன்னால் ஜீப்பும் பின்னால் காரும் சென்று கொண்டிருக்கிறது. புழுதி பறக்கிறது.
வாகனத்தின் முன் காட்சி. பின் காட்சி. தொலைவு காட்சி. வெட்ட வெளிப் பகுதியில் வாகனம் விரைந்து செல்கிறது. வாகனத்தின் பார்வையாயில் காட்சிகளின் ஓட்டம்.
வாகனத்தை வேடிக்கைப் பார்க்கும் சிறுவர்கள்/ மனிதர்கள்.
(வாகனத்திலிருந்து/ வேடிக்கைப் பார்ப்பவர்களிடமிருந்து காட்சி)
கண்களுக்கு நிழல் கொடுத்து பார்க்கும் பெரியவர்கள். குழப்பமாகவும் வாகனத்தை கண்ட பூரிப்பும் முகத்தில் காட்டுதல்.
வாகனத்தை பார்த்ததும் சாலையயோரம் உள்ள சிறார்கள் வாகனத்தின் பின் ஓடி நிற்கிறார்கள். வண்டி வேகமாகச் செல்கிறது.
திடீரென கார் நிற்கிறது. கார் ஓட்டுனர் இறங்குகிறார். ஜீப் சற்று முன் சென்று நிற்கிறது. ஜீப் ஓட்டுனரும் இறங்கி வருகிறான். இருவரு நெருங்கி வந்து பேசுகின்றனர்.
கார் ஓட்டுனர்
இன்னும் எவ்ளோ தூரம் போகனும்?
ஜீப் ஓட்டுனர்
இன்னும் ரெண்டு மூனு கிராமம் தான் போயிடலாம்.
கார் ஓட்டுனர்
ஐய்யாதான் கேட்கச் சொன்னாரு
ஜீப் ஓட்டுனர்
சரி சரி கெளம்பு. சூடு தாங்கல.
இருவரும் வண்டியில் ஏறிக் கொள்கின்றனர். (பக்கக் காட்சி) வண்டிகள் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.
பாதையெங்கும் இரு பக்கங்களிலும் பொட்டல் காடாய் கிடக்கிறது. வரப்புகள் சிதைந்து கோடாய் கிடக்கிறது. ஆங்காங்கே மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
பயிரிடப் பட்ட சில நிலங்கள்.
டீசல் என்ஜின் ஓடும் சத்தம் வளர்ந்து குறைகிறது. குட்டையில் சிறுவர்கள் விழுந்து குளிக்கிறார்கள்.
பாரம் சுமக்கும் மனிதர்கள்.
விறகு வெட்டும் ஆண்கள் பெண்கள்.
எங்கோ பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறது.
காட்சி-1(ஆ)
கிராமத்தின் நிலைக் காட்சி. வாகனம் வருவதைக் கண்டு பாதையில் போவோர் விலகிப் போகின்றனர்.
ஒதுங்கிய இருவரின் உரையாடல்.
நபர்-1
யாரு வீட்டுக்குய்யா கார் வருது?
நபர்-2
இந்த ஊர்ல எவன் வீட்டுக்கு பிளசர் கார் வருது?
நபர்-1
எலெக்ஷன் வந்தாலும் வரும்?
நபர்-2
சும்மா இருய்யா. போன மாசம்தானே எலெக்ஷன் வந்துச்சு இந்தா பாரு கையில மைய.
நபர்-1
இடைத் தேர்தலா இருக்கலாம். வுடு வேலையைப் பார்ப்போம்
காரும் ஜீப்பும் ஒரு மரத்தடியில் மூச்சு வாங்கி நிற்கிறது. காரிலிருந்து ஓட்டுனர் இறங்கி கார் கதவை திறக்கிறார். இறங்கிய அதிகாரி தனது கைக்குட்டையால் முகத்தின் வேர்வையை துடைத்துக் கொண்டு வாயால் ஊதி கைக்குட்டையால் காற்று விசிரிக் கொள்கிறார்.
(பக்கக் காட்சி) மூன்று பேர் தாழ்மையுடன் கும்பிட்டபடி கோரஷாக
மக்கள் கூட்டம்
ஐயா, வணக்கமுங்க.......... ஐயா, வணக்கமுங்க
அதிகாரி
ரொம்ப சூடா இருக்குல. சரி எங்க உட்காரலாம்.
கும்பளில் ஒருவர்
வாங்கையா. அதோ அங்க நிழல்ல சேர் போட்டு வச்சிருக்கோம்.
( அவர்கள் கையைக் காட்டிச் சொன்ன திசையில் செல்கிறார் அதிகாரி)
காட்சி-2
ஊர்க் கோயில். கோயில் அருகில் உள்ள காட்சிகள். மரத்தடி. மரத்தின் உச்சியிலிருந்து காட்சி. மரத்தடியில் மக்கள் கூட்டமாய் அமர்ந்துள்ளனர்.
அதிகாரி சேரில் அமர்ந்துள்ளார். தனது கைக்குட்டையால் முகத்தை அடிக்கடி துடைத்தபடியும். விசிரிக் கொண்டபடியும் ஒரு நிலையில் இல்லாமல் அசவுகரியப் பட்டு உட்கார்ந்துள்ளார். மக்கள் அமைதியாக உள்ளனர்.
மாலை வரவேற்பு
சில மனுக்கள் கொடுக்கப் படுகின்றன. மனுக்களை புரட்டியபடி அவர் குடிக்க தண்ணீர் கேட்கிறார்.
பெப்சி மற்றும் கோக்காகோலா பாட்டில்கள் அவர் முன் கொண்டு வரப் படுகின்றன.
அதிகாரி
ஐய்யோ இதெல்லாம் எதுக்கு?
நபர்-1
இங்க தண்ணிக்குத்தான் சாமி தட்டுப்பாடு இதுக்கெல்லாம் இல்லை. சில்லுன்னு இருக்காது கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோங்க.
அதிகாரி
தண்ணீர் இருந்தா நல்லா இருக்கும்?
நபர்-1
நல்ல தண்ணீர் கிடைக்காதுங்களே சாமி.
( கார் ஓட்டுனர் காருக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து தருகிறார்)
தண்ணீரைக் குடித்துவிட்டு அதிகாரி மீண்டும் முகம் துடைத்துக் கொள்கிறார்.
அதிகாரி
சரி. உங்க குறைகளையெல்லாம் எழுதிக் கொடுங்க சீக்கிரமா நடவடிக்கை எடுக்கிறேன்.
ஒருவர் கும்பிட்டு விட்டு கத்தையாக மனுக்களைக் கொடுத்தார்.
அதிகாரி அவற்றை வாங்கி ஒவ்வொன்றாய் பார்க்கிறார்.
அதிகாரி
குடி தண்ணீர் இல்லையா?
பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் பணிவுடன் பதில் சொல்கிறார்
பெரியவர்
ஆமாங்க! சேரியில குடிக்க தண்ணீ பைப்பு இல்ல!
அதிகாரி
ஊர்ல இருக்கா?
பெரியவர்
ஊர்லயும்தான்
அதிகாரி
பொதுக்குடிநீர் குழாயே இல்லையா?
பெரியவர்
ம்க்கும். போடுறோம் போடுறோம்முன்னு சொல்றாங்க. என்னத்த போட்டாங்க
மற்றொருவர்
நாங்க நிறைய மனு கொடுத்திட்டோங்க ஒன்ன்ன்னும் நடக்கிறதில்லை. சனம் கிடந்து சாவுது
( அவன் சொன்னதற்கு அதிகாரி ஆர்வம் காட்டமல் இருக்கிறார்)
அதிகாரி
இங்க எவ்வளவு பேர் இருக்கீங்க?
படித்த இளைஞன் ஒருவன்
சேரியில எழநூறு தலகட்டு ஊர்ல எப்படியும் ஐநூறு தலகட்டு இருக்கும்
அதிகாரி
அப்ப எப்படி தண்ணீர் குடிக்கிறீங்க?
பெண்மணி
தோ இந்தப்பக்கம் பெரியக்கோணார் வூட்டுக் கிணத்து பம்புசெட்டு அந்தப்பக்கம் ரெட்டியார்வூட்டு பம்ப்பு செட். இப்போதைக்கு இதுதாங்க. கிணத்துல தண்ணீ வத்திச்சுன்னா சாக வேண்டியதுதான்.
அதிகாரி
ஏரி, குளம் அப்படின்னு எதுவும் இல்லையா?
பெரியவருடன் பலர்
இல்லீங்க
அதிகாரி
அரசு டேங்க் வைக்கலியா?
பெரியவருடன் பலர்
இல்லீங்க
பெண்மணி
இந்த தண்ணீ பிடிக்கவே நாங்க நாளுக்கு ஐஞ்சு மணி நேரம் அவஸ்த்த பட வேண்டி கிடக்குங்க சாமி.
அதிகாரியுடன் வந்தவன் மனுக்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்தான்.
அதிகாரி
ரோடுயெல்லாம் சரியில்லையே. ரோடு போடலியா?
பெரியவர்
இல்லீங்க
அதிகாரி
உங்களுக்கெல்லாம் வீட்டுப் பட்டா காலனி வீடு கட்டிக் கொடுத்திருகில்ல
பெரியவர்
இல்லீங்க
இன்னும் சிலர் கூடவே
தண்ணீக்கே வழியில்லையாம் இதில வூடு என்னத்த, நிலம் என்னத்த?
அதிகாரி
(வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார்)
பட்ட வரலியா?
பெரியவர்
பட்டாவுக்கு எழுதிக் கொடுத்து பல வருஷம் ஆச்சு இன்னும் வரலை.
அதிகாரி
ஹாஸ்பிடல் இருக்கா?
பெரியவர்
இல்லீங்க.
மற்றொருவர்
நோய் நொடியின்னு வந்தா நாலு கிராமம் தள்ளித்தான் போவணும்
அதிகாரி
அங்கிருந்து யாரும் வர்றதில்லையா
பெரியவர்
எப்பவாச்சும் வருவாங்க
அதிகாரி
(மனுக்களைப் புரட்டியபடி)
என்னது பள்ளிக்கூடம் இல்லையா?
பெரியவர்
சுத்து வட்டாரம் பூரா நாலு கிராமம் தள்ளித்தான் போவனும்.
படித்த இளைஞன்
ஹை ஸ்கூலுக்கு டவுனுக்குத்தான் போவனும். எல்லாரும் ஏழாம் வகுப்போட சரி.
அதிகாரியின் முகத்தில் கொஞ்சம் வருத்தம் படர்கிறது
நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் கேட்கிறார்.
அதிகாரி
ரேஷன் கார்டு கொடுத்திருப்பாங்களே
பெரியவர்
இல்லீங்க
படித்த இளைஞர்
கார்டும் இல்ல கடையும் இல்லை
அதிகாரி
அப்படின்னா அரிசி மண்ணெண்ணெய்க்கு என்ன பண்றீங்க?
பெரியவர்
ஏதோ பொளைப்பு நடக்குதுங்க.
(அதிகாரி கடுப்பாகி மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மீண்டும் போட்டுக் கொண்டு கேட்கிறார்.)
என்னையா எதைக் கேட்டாலும் இல்ல இல்லன்னு சொல்றீங்க அப்ப என்னதான் இருக்கு உங்கக்கிட்ட?
பெரியவர்
கொஞ்சம் பொறுங்க சாமி. இல்லை இல்லையின்னு சொல்ல எங்க உயிரும். இதுவும் தான் சாமி இருக்கு எங்கக் கிட்ட
(கையில் வாக்காளர் அட்டையைக் காட்டுகிறார். காட்சி வாக்காளர் அட்டையில் குவிகிறது.) மரத்திலிருந்து காட்சி வெளியே போய்க் கொண்டே மங்கலாகிறது.
- மதியழகன் சுப்பையா (