எனது மேசையின் மீது எப்போதும் ஒரு மீன் தொட்டி இருக்கும். வேலைகளுக்கு இடையில், எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் இடையில், எப்போதாவது நிமிர்ந்து பார்க்கும்போது அதற்குள் ஏதாவது ஓர் உயிர் நீந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமானது. அந்தத் தொட்டியில் பெரும்பாலும் பைட்டர் மீன்களையே வளர்ப்பேன்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மீனை வாங்கி வரும்போது அதற்கென்று ஒரு சிறிய உலகத்தை உருவாக்குவேன். தெளிந்த நீர், சில நீர்ச்செடிகள், அடியில் வண்ணக் கற்கள். அந்த உலகத்திற்குள் அது நுழைந்ததும் முதலில் எல்லா மூலைகளையும் சுற்றிப் பார்க்கும். பிறகு மெல்லத் தனது இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
ஆண் பைட்டர் மீன்கள் அழகானவை. அவற்றின் அழகை மீன்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியாது. நீண்ட பட்டுத் துணிகளை நீருக்குள் விரித்துவிட்டது போல அவற்றின் துடுப்புகள் அசையும். சிவப்பு, நீலம், ஊதா, மஞ்சள் என நிறங்கள் ஒன்றோடொன்று கலந்து, ஒளி விழும்போதெல்லாம் வேறொரு நிறத்தைப் பிறப்பிக்கும். அதன் வால் ஒரு விசிறியைப் போல விரியும்போது, அது நீருக்குள் நீந்துவதாகத் தெரியாது; ஏதோ ஒரு அரசன் தனது ஆடையை விரித்துக் கொண்டு மிதப்பது போல இருக்கும்.
ஆனால் அந்த அழகுக்குள் ஒரு விசித்திரமான தனிமை இருக்கிறது.
நான் வாங்கி வந்த ஒவ்வொரு ஆண் பைட்டரும் குறிப்பிட்ட காலம் வரைதான் உயிரோடு இருந்திருக்கிறது. சில நாட்கள் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும். உணவைக் கண்டதும் வேகமாக மேலே வரும். தொட்டியின் கண்ணாடி ஓரங்களில் தனது பிம்பத்தைக் கண்டால் துடுப்புகளை விரித்துக் கொண்டு எதிர்த்து நிற்கும். பிறகு திடீரென்று ஒரு நாள் அதன் நீச்சல் குறையும். தொட்டியின் ஓரத்தில் அமைதியாக நிற்கும். சில நேரங்களில் நீரின் மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும்.
முதலில் அது இறந்துவிட்டதாக நினைப்பேன். அருகில் சென்று பார்த்தால் செவுள்கள் மட்டும் மெல்ல அசைந்து கொண்டிருக்கும்.
அடுத்த சில நாட்களில் அந்த அசைவும் நின்றுவிடும்.
அதற்குப் பிறகு சில காலம் அந்தத் தொட்டி காலியாக இருக்கும். ஒருநாள் மீண்டும் ஒரு பைட்டர் மீனை வாங்கி வந்து அதே தொட்டியில் விடுவேன்.
ஏன் இப்படி நடக்கிறது என்று ஒருமுறை மீன் கடைக்காரரிடம் கேட்டேன்.
"ஆண் பைட்டர்தானே? தனியாகத்தான் வளர்க்கணும். இன்னொரு ஆணை விட்டால் சண்டை போடும். பெண்ணைக்கூட எப்போதும் சேர்த்து வைக்க முடியாது. அதுக்கும் தனி இடம் வேணும்."
"அப்படியானால் தனிமையிலேயே இருக்க வேண்டியதுதானா?"
"அதுதான் அதோட குணம்."
அவர் அதைச் சாதாரணமாகச் சொன்னார். ஆனால் அந்தப் பதில் எனக்குள் ஏதோ ஒரு கேள்வியை விட்டுச் சென்றது.
மீன் கடையில் பல வண்ண மீன்கள் பெரிய பெரிய தொட்டிகளில் கூட்டமாக நீந்திக் கொண்டிருந்தன. ஒன்றையொன்று உரசிக் கொண்டும் துரத்திக் கொண்டும் அவை தங்களுக்குள் ஒரு உலகத்தை உருவாக்கியிருந்தன. ஆனால் ஆண் பைட்டர் மீன்கள் மட்டும் தனித்தனியாகச் சிறிய கண்ணாடிக் குடுவைகளில் அடைக்கப்பட்டிருந்தன.
அவற்றுக்கிடையே கண்ணாடிச் சுவர்கள் இருந்தன. ஒன்றை ஒன்று பார்க்க முடியும். ஆனால் நெருங்க முடியாது.
ஒவ்வொரு குடுவைக்குள்ளும் ஒரு பேரழகு தனியாக நீந்திக் கொண்டிருந்தது.
பெண் பைட்டர் மீன்கள் அப்படியில்லை. அவற்றில் சிலவற்றை ஒரே தொட்டியில் கூட்டமாக வைத்திருந்தார்கள். அவை ஒன்றையொன்று கடந்து, துரத்தி, சில நேரங்களில் ஒன்றாக நீந்திக் கொண்டிருந்தன. ஆண் மீன்களின் நீண்ட துடுப்புகளும் வண்ணங்களும் இல்லாததால் அவை அவ்வளவு கவனத்தை ஈர்க்கவில்லை.
ஆனால் அந்த ஆண் மீன்களின் தனிமை என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
ஒரு நாள் கடைக்குச் சென்றபோது, குடுவைக்குள் இருந்த ஓர் ஆண் பைட்டர் மீனை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் உடல் நீல நிறத்திலும், துடுப்புகள் சிவப்பும் ஊதாவும் கலந்த நிறத்திலும் இருந்தன. அது நீந்தும்போது அதன் வால் விரிந்து சுருங்கியது. ஒவ்வொரு அசைவிலும் நீர் ஒரு புதிய நிறத்தைப் பெற்றது.
அதற்குப் பக்கத்தில் பெண் பைட்டர் மீன்கள் இருந்தன.
"இதற்கு ஒரு பெண் மீன் கொடுங்கள்" என்றேன்.
கடைக்காரர் என்னைப் பார்த்தார்.
"இரண்டையும் ஒரே தொட்டியில் விடக்கூடாது. ஆண் பெண்ணை விரட்டும். சில சமயம் கொன்றுவிடும்."
"அப்படியானால் பக்கத்தில் வைத்துப் பார்க்கலாமா?"
அவர் ஒரு சிறிய பெண் மீனைப் பிடித்துக் கொடுத்தார்.
வீட்டுக்கு வந்து, அதற்கென்று ஒரு சிறிய கண்ணாடிக் குடுவையில் நீர் நிரப்பி விட்டேன். அதை ஆண் மீன் இருந்த பெரிய தொட்டியின் அருகில் வைத்தேன்.
இரண்டு கண்ணாடிகளுக்கு இடையில் இரண்டு உயிர்கள்.
முதலில் ஆண் மீன் அதைக் கவனிக்கவில்லை. தனது தொட்டியின் ஓரத்தில் நின்று கொண்டு நீரின் மேற்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பெண் மீன் அதன் பார்வைக்குள் வந்தது.
அது மெதுவாகத் திரும்பியது.
துடுப்புகளை விரித்தது.
பெண் மீனும் அதை நோக்கி நீந்தி வந்தது.
இரண்டு கண்ணாடிகளுக்கு இடையில் அவை சந்தித்துக் கொண்டன. கண்ணாடி ஒரு தடையாக இருந்தது. ஆனால் அந்தத் தடையின் இருபுறமும் இரண்டு உயிர்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தன.
சில நேரங்களில் ஆண் மீன் கண்ணாடியை ஒட்டியே நீந்தியது. பெண் மீனும் அதைப் பின்தொடர்ந்தது. அவை என்ன பேசிக் கொண்டன என்று எனக்குத் தெரியாது. அவற்றுக்கிடையில் ஏதாவது மொழி இருந்ததா என்பதும்கூடத் தெரியாது.
ஆனால் நீண்ட காலமாகத் தனியாக இருந்த ஓர் உயிர், தனது தொட்டிக்கு வெளியே இன்னொரு உயிர் இருப்பதை அன்றுதான் உணர்ந்திருக்கக் கூடும் என்று நினைத்தேன்.
சில நாட்கள் அவற்றை அப்படியே வைத்திருந்தேன்.
பிறகு, சரியான சூழலை ஏற்படுத்தியபின், பெண் மீனை ஆண் மீன் இருந்த தொட்டிக்குள் விட்டேன்.
ஆரம்பத்தில் இரண்டும் தனித்தனியாக இருந்தன. ஆண் மீன் தனது பழைய இடங்களிலேயே நீந்தியது. பெண் மீன் புதிய இடத்தைப் புரிந்து கொள்ள முயன்றது. சில நேரங்களில் ஆண் மீன் அதைத் துரத்தியது. பெண் மீன் நீர்ச்செடிகளுக்குள் ஒளிந்து கொண்டது.
அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவிதப் பதற்றம் ஏற்பட்டது. ஒருவேளை நான் தவறு செய்துவிட்டேனோ என்று தோன்றியது.
பைட்டர் மீன்களின் உலகத்தில் ஆண் மீன்கள் தங்கள் எல்லையைத் தீவிரமாகக் காக்கும். அவற்றின் அழகான துடுப்புகளுக்குள் ஒரு போர்க்குணமும் இருக்கிறது. இனப்பெருக்கத்திற்கான காலத்தில் கூட அவற்றின் நெருக்கம் எளிதானதல்ல. பெண் மீனை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ஆண் மீன் அதை விரட்டவும் தாக்கவும் செய்யலாம். அதனால்தான் கடைகளில் அவற்றைத் தனித்தனி குடுவைகளில் வைத்திருக்கிறார்கள். ஒரே இடத்தில் விட்டால் ஒன்றையொன்று காயப்படுத்திவிடும் என்பதால்.
ஆனால் மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் தனித்தனி குணங்கள் இருக்கின்றன. எல்லா மீன்களும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை.
நாட்கள் கடந்தன.
இப்போது அவை ஒன்றையொன்று துரத்துவதில்லை. ஒரே நீர்ப்பரப்பில் அருகருகே நீந்துகின்றன. சில நேரங்களில் பெண் மீன் ஆண் மீனின் அருகில் வந்து நிற்கிறது. ஆண் மீன் தனது நீண்ட துடுப்புகளை விரித்துக் கொண்டு அதனைச் சுற்றி நீந்துகிறது. அவை ஒன்றையொன்று உரசிக் கொண்டு கடந்து செல்லும்போது தொட்டிக்குள் நீர் இன்னும் அழகாகத் தெரிகிறது.
அவற்றைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுவது ஒன்றுதான்.
தனிமை என்பது எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரியானதல்ல. சில உயிர்களுக்கு அது இயல்பு என்று சொல்லப்படுகிறது. சில உயிர்களுக்கு அது விதிக்கப்படுகிறது. இன்னும் சில உயிர்கள் தங்களுக்கான துணையைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் தனிமைப்படுத்தப்படுகின்றன.
ஆண் பைட்டர் மீன்களின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல நீர்நிலைகள். அங்கிருந்து அவற்றின் வண்ணங்களுக்காகவும் அழகுக்காகவும் உலகின் பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. செயற்கையாக வளர்க்கப்பட்டு, விற்பனைக்காகப் பயணிக்கின்றன. அவை பிறந்த நீர்நிலைகள் வேறு. வளர்க்கப்படும் இடம் வேறு. விற்கப்படும் நாடு வேறு.
ஒரு நாட்டின் நீரிலிருந்து இன்னொரு நாட்டின் கண்ணாடித் தொட்டிக்குள் வந்து சேரும் அந்த மீனுக்கு, தான் எங்கே இருக்கிறோம் என்பது தெரியுமா?
தனது பிறந்த இடத்தின் நீரின் வாசனையை அது நினைவில் வைத்திருக்குமா?
அதன் நிறங்கள் மாறாமல் இருக்கலாம். அதன் துடுப்புகள் இன்னும் அழகாக விரியலாம். கடைக்காரர் அதற்கு விலையும் நிர்ணயிக்கலாம். வாங்குபவர் அதற்கொரு தொட்டியை அமைத்துத் தரலாம். ஆனாலும் அது பிறந்த நீர்நிலைக்குத் திரும்ப முடியாது.
அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் வாழ்க்கையின் சில பகுதிகள் நினைவுக்கு வருகின்றன.
ஒரு மண்ணில் பிறந்து, இன்னொரு மண்ணில் வளர்ந்து, மூன்றாவது மண்ணில் வாழ்வதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கும் மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் பல அடையாளங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அகதி, வெளிநாட்டவன், அனுமதியற்றவன் என்று. அவர்கள் வாழும் இடம் அவர்களுடையதாக இருப்பதில்லை. அவர்கள் கடந்து செல்லும் எல்லைகள் அவர்களுடைய விருப்பத்தால் உருவானவையுமில்லை.
ஒரு மனிதன் தனது நாட்டை இழந்துவிட்டால் அவனுக்குள் இருக்கும் நாடும் அழிந்துவிடுமா?
அவன் பேசும் மொழி, அவன் சாப்பிடும் உணவு, அவன் நினைவில் வைத்திருக்கும் வீடு, அவன் சிறுவயதில் ஓடிய தெரு, அவனுக்காகக் காத்திருக்கும் உறவுகள் — இவை எல்லாவற்றையும் கடவுச்சீட்டில் முத்திரையிட்டு எடுத்துச் செல்ல முடியுமா?
எனது மேசையின் மீது இருக்கும் அந்த மீன் தொட்டிக்குள் இப்போது இரண்டு உயிர்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன.
அந்த ஆண் மீன் இன்னும் அதே அழகுடன் இருக்கிறது. அதன் நீல உடலின் மீது வெளிச்சம் விழும்போது ஒரு கணம் கடலின் ஆழத்தைப் பார்க்கிறேன். அதன் சிவப்பும் ஊதாவும் கலந்த வால் விரியும்போது, ஏதோ ஒரு தொலைதூர நாட்டின் கொடி நீருக்குள் அசைவது போல தோன்றுகிறது.
சில நேரங்களில் அது தொட்டியின் ஓரத்தில் தனியாக நிற்கிறது. அப்போது பெண் மீன் அதன் அருகில் வந்து நிற்கிறது. இரண்டும் சிறிது நேரம் அப்படியே இருக்கின்றன. பிறகு ஒன்றாக நீந்தத் தொடங்குகின்றன.
அவற்றுக்கு வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது. அந்த உலகத்தில் அவற்றுக்கான இடம் எவ்வளவு சிறியது என்பதை அவை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனக்கும் அந்தக் கண்ணாடித் தொட்டிக்கும் இடையில் எந்தத் தடையும் இல்லை. நினைத்தால் கையை நீட்டி அதைத் தொடலாம். நீரை மாற்றலாம். உணவு கொடுக்கலாம். அவற்றின் வாழ்வை இன்னும் கொஞ்சம் நீட்டிக்கலாம்.
ஆனால் அவை பிறந்த நீர்நிலையைத் திருப்பிக் கொடுக்க முடியாது.
அந்த மீன்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு கேள்வி மட்டும் என்னுள் எழுகிறது.
ஒரு உயிருக்கு வாழ்வதற்கான இடத்தைக் கொடுத்துவிட்டு, அது வாழ விரும்பிய இடத்தை மறுப்பது எத்தகைய முரண் அல்லவா?
- கமலக்கண்ணன் முத்து