தளபதி விஜய் படமாயிற்றே! பார்க்காமல் இருக்க முடியுமா? துணிந்து முதலாட்டத்திற்குச் சென்று விட்டான் பெருமாள். அவன் வசிக்கும் கிராமம் மெயில் ரோட்டில் அமைந்திருக்கவில்லை. இராஜக்காபட்டியிலிருத்து கிழக்கு நோக்கிப் பிரிந்து செல்லும் கிளைச் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவனது ஊர் அமைந்திருக்கிறது. மினி பஸ் மட்டுமே அங்கு செல்லும். வேறு பஸ்கள் அங்கு செல்லாது. பெருமாள் கடை ஜாமான் வாங்குவதற்காக இந்நகரத்திற்கு வந்திருக்கிறான். இந்த நகரத்திலிருந்து இரவு எட்டுமணிக்கு மேல் அவனது ஊருக்கு மினி பஸ் இல்லை. மெயின் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள்தான் உண்டு

எட்டுமணிக்கு மேற்பட்டு விட்டால் பேருந்தில் சென்று இராஜக்காபட்டியில் இறங்கி பெருமாள் வசிக்கும் ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்.

பெருமாள் ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறான். அக்கடைக்கு சில ஜாமான்களை வாங்க நகரத்திற்கு வந்தவனுக்குத்தான் சினிமாவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்து விட்டது. வாங்கிய ஜாமான்களை சினிமா முடிந்ததும் எடுத்துக் கொள்ளத் தோதாக ஒரு கடையில் அவற்றை வைத்து விட்டு முதலாட்டத்திற்குச் சென்று விட்டான். சினிமா விடுவதற்கு எப்படியும் ஒன்பதரை மணி ஆகிவிடும். ஊருக்குள் செல்லும் மினி பஸ்ஸைப் பிடிக்க முடியாது. பேருந்தில் சென்று இராஜக்காபட்டியில் இறங்கி ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்.

ஊர்க்காரர்கள் யாராவது அந்தப் பேருந்தில் வருவார்கள், அவர்களுடன் துணைக்குத் துணையாக ஊர் சென்று சேர்ந்துவிடலாம் என்று நம்பினான்.

ஆறு வருடங்களுக்கு முன்பு அந்த துர்நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இரவில் தனியாகக் கூட நடந்து வருவதில் பெருமாளுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. அதாவது இராஜக்காபட்டியிலிருந்து ஊருக்குப் போகும் வழியில், சரியாகப் பாதித் தூரத்தில் சாலையை ஒட்டி இடதுபுறம் ஒரு கிணறு இருக்கிறது. கணவன் மனைவி தகராறில் மனம் வெறுத்துப் போன காத்தம்மாள் என்ற பெண் ஆறு வருடங்களுக்கு முன்பு அடைமழை பெய்து கொண்டிருந்த ஐப்பசி மாத இரவொன்றில் அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

அன்றிலிருந்து அவ்வழியே அகால நேரங்களில் செல்வதை ஊர்மக்கள் தவிர்த்து வந்தனர். அவ்வாறு நேரம் கெட்ட நேரத்தில் அவ்வழியில் வந்தவர்கள் சிலர் காத்தம்மாளைப் பேயாகக் கண்டதாகச் சொல்லித் திரிந்தனர். கொஞ்சம் பலஹீனமான ஆண்களையும் பெண்களையும் காத்தம்மாள் பிடித்தும் விட்டாள். பக்கத்து ஊரிலிருக்கும் பேயோட்டிக் கோடாங்கியை வரவழைத்து உடுக்கடித்துப் பேயை விரட்டி வந்தனர். பேய் சாமானியமாகப் போவதில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து உடுக்டித்தபடி சவுக்கால் பேயடித்தவரை அடித்துத் துன்புறுத்தி வலி தாங்க முடியாத நிலையை ஏற்படுத்தி, பேயை அகன்று செல்ல ஒப்புக் கொள்ள வைத்தார்கள். இதனால் பேய்பிடித்தவர்கள் உடல்ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அந்தக் கோடாங்கி ஒருநாள் இறந்து போனார். அந்த நேரத்தில் ஒரு சிறுமியை காத்தம்மாள் பேய் பிடித்துக் கொண்டது. குடும்பத்தார் பேயோட்ட வழியின்றித் தவித்தனர். இதை அறிந்த காத்தம்மாளின் கணவர் தங்கராசு ஏதோ ஒரு வேகத்தில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று,

“ஏலா காத்தம்மா! நீ நல்ல தாய் தகப்னுக்குப் பெறந்தவளா இருந்தா, என்னோட பத்தினியா வாழ்ந்தவளா இருந்தா, ஓம் புருசன் சொல்றேன், ஒரு சொல்லுல இந்தச் சின்ன பிள்ளைய விட்டுட்டு ஓடிப்போ” என்று ஓங்கிக் கத்தி சிறுமிக்குத் திருநீறு பூசி விட்டான்.

“ஐயோ! எம் புருசன் சொல்லிட்டாக. நான் போயிர்றேன், போயிர்றேன்…” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிறுமி மயங்கி விழுந்தாள்.

அதன்பின் பேய் பிடித்தவர்களை தங்கராசு எளிதில் குணப்படுத்தினான். அவன் சொல்லும் ஒரே சொல்லில் அகன்று விடுவதால் நாளடைவில் காத்தம்மாள் “ஒருசொல் காத்தம்மாள்” என்று அழைக்கப் பட்டார். இது இப்படி இருக்க கடந்த வருடம் ஒருநாள் அதிகாலை நெற்பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு தோட்டத்திலிருந்து காத்தம்மாள் கிணற்று வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்த வீரணன், ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தான். பேய் அறைந்ததுபோல் காணப்பட்ட அவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து போனான்.

வீரணனின் சாவுக்கு காத்தம்மாள்தான் காரணம் என்று ஊர்மக்கள் நம்பினர். யாரைப் பிடித்தாலும் தன் கணவன் வந்து விரட்டி விடுவான் என்பதைப் புரிந்து கொண்டாள் காத்தம்மாள், எனவே சிக்கியவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கொல்லத் தொடங்கி விட்டாள் என்று ஊருக்குள் பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.

பெருமாள் கதைக்கு வருவோம்! முதலாட்டம் சினிமா முடிந்து விட்டது. ஒரு கடையில் வைத்துவிட்டுப் போன ஜாமான்களை எடுத்துக் கொண்டான். மளிகை ஜாமான்களை ஒரு பெரிய பையில் போட்டு ஒரு கையில் எடுத்துக் கொண்டான். ஐந்து கிலோ தக்காளியை மட்டும் தனியாக ஒரு உரச்சாக்கில் கட்டி வைத்திருந்தான். அதன் இழைகள் ஓரிடத்தில் நைந்து போயிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அந்தத் தக்காளிச் சாக்கை இன்னொரு கையில் எடுத்து தோள் வழியாக முதுகில் தொங்கவிட்டுக் கொண்டு லாவகமாப் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றான். பேருந்தில் ஏறி சுற்றுமுற்றும் பார்த்தான் ஊர்க்காரர்கள் யாரும் தென்படவில்லை. ஒரு சிறு பதற்றம் அவனைத் தொற்றிக் கொண்டது. சிறிது நேரத்தில் பேருந்து இராஜக்காபட்டியை அடைந்தது. பஸ்ஸை விட்டு இறங்கிய பெருமாளுக்குத் தலை சுற்றியது.

தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. இது கிருஷ்ண பக்ஷம் ஆகையால் வானத்தில் நிலவு இல்லை. கும் இருட்டு. வயல்வெளிகளிலிருந்து வந்து கொண்டிருந்த பூச்சிகளின் இரைச்சலும் தவளைகளின் சத்தமும் இவன் மனதில் ஏற்பட்டிருந்த பயத்திற்குப் பக்கவாத்தியம் வாசித்தாற் போன்றிருந்தன. மனதை தைரியப்படுத்தி நடந்தான். நடக்க நடக்க சற்று பயம் தெளிந்தாற் போன்றிருந்தது. காத்தம்மாள் கிணறு நெருங்க நெருங்க கால்கள் தடுமாறின. இதோ கிணறு வந்துவிட்டது. இன்னும் அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் வீடு இருக்கிறது. அவனுக்கு அது அறுபது கிலோமீட்டர் போல் தோன்றியது.

என்ன துரதிர்ஷ்டம்! கிணற்றிற்கு அருகில் வந்தவுடன் அவனது வலதுகால் சாலையில் எத்திக் கொண்டிருந்த ஒரு கல்லில் இடறி பெருவிரல் நகம் பிய்ந்து விட்டது. அந்த இடறலில் அதிர்வுற்ற, முதுகில் தொங்க விடப்பட்ட தக்காளி சாக்கில் சில நைந்து போயிருந்த இழைகள் அறுந்து விட்டன. அறுந்த இடத்தில் ஒரு சிறு துளை உண்டாகி அதன் வழியே ஒரு தக்காளி வெளியே வந்து அவனது இடது குதிக்காலில் விழுந்தது. காத்தம்மாள் தான் தன்னைப் பின்தொடர்ந்து வந்து தனது குதியை மிதிக்கிறாள் என்று நினைத்த பெருமாள் ஓட்டமெடுக்க ஆரம்பித்து விட்டான்.

அவன் ஓட ஓட ஒவ்வொரு தக்காளியாக அவனது குதிமேல் விழுந்து கொண்டே இருந்தது. அந்த ஊரைச் சுற்றி இருக்கும் அனைத்து சாமிகளையும் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டான். சாமி எதுவும் வரவில்லை. ஆனால் தக்காளி மட்டும் விழுந்து கொண்டே இருந்தது. மூச்சிரைக்க வீடு வந்து சேர்ந்தான்.

“காத்தம்மா தொடுத்துவாரா, காத்தம்மா தொடுத்துவாரா…” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்தான். நல்ல வேளை சாகவில்லை. எனவே தங்கராசுவை அழைத்து வந்து காத்தம்மளை விரட்டி விட்டார்கள்.

மறுநாள் காலையில் கடையில் வைத்து தக்காளியை எடைபோட்டுப் பார்த்ததில் ஒரு கிலோ தக்காளி குறைவாக இருந்தது.

- மனோந்திரா

Pin It