ஆடு பகை குட்டி உறவு கதையெல்லாம் சிங்கத்திடம் இல்லை. பகை என்றால் பகை. உறவென்றால் உறவு. குகைக்குள் இருக்கும் சிங்கத்துக்கு பகைக்குள் இருப்பது கூட பிடித்தமான ஒன்று. பகைக்குள் இருப்பதே குகைக்குள் இருப்பது போன்ற இறுக்கம் தான். இறுக்கம் தளர்த்தும் போது சிங்கம் கிச்சு கிச்சு மூட்டப்படும். ஏன் கேலிக்கே உள்ளாக்கப்படும். ராஜாவாக இருப்பது பற்றி அல்ல சிங்கத்தின் கர்ஜனை. அடிமையாக ஆகி விட கூடாது என்ற எச்சரிக்கை அது. உம்மனாமூஞ்சி சிங்கத்தின் சிக்னேச்சர்.

பார்த்தாலே ஏன் பாக்கற என்று கேட்ட காலம் சிங்கத்துக்கு உண்டு. கண்ணில் கோப கணைகளைக் கொண்டே அலைந்த தருணங்கள் உண்டு. வேட்டையாட கிளம்புகையில்... வெட்டி கூட்டத்தை வெச்சு செய்த காலமும் உண்டு. அதே நேரம் எல்லாரிடமும் பேசி கலகலப்பாக கதை சொல்லும் இரவுகளை அது இப்போது தொலைத்து விட்டது. அதற்கான வருத்தம் சிங்கத்திடம் இருக்கிறது. வருந்துவது மூலமாக தான் ஒரு வாழ்வை நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று வியாக்கியானம் பேசும் சிங்கத்துக்கு துக்கமும் துயரமும் இரு பிடிகள். தூக்கமற்ற இரவுகளை தோளில் சுமந்தபடியே அலையும் சிங்கத்தின் காடு பொயட்டிக் தன்மையால் ஆனது. பிடில் வாசித்துக் கொண்டே பிய்த்து எறிந்து விடும் அதன் இயல்பை யாரும் சீண்டி விடக் கூடாது.

மிக மிக தாமதமான காலத்தில் கன்னம் வைத்து படுத்திருப்பது ஒருவகை சோம்பேறித்தனம் என்று தெரியும் சிங்கத்துக்கு.. துக்கத்தின் முழுமை சோம்பேறித்தனத்தில் தானே இருக்கிறது என்பதும் எப்படியோ தெரிந்து கொண்டிருக்கிறது. காட்டின் நுட்பங்களை துல்லியமாய் அறிந்த சிங்கத்துக்கு பல நேரங்களில் பேச ஏதும் இல்லை. சிந்தனையின் வழியே வாழ பழகின சிங்கம் பேச்சுக்கு வழி விட்டு விட்டது. இன்னொன்று பேரமைதி சிங்கத்தின் சிம்பாலிஸம்.

உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லை என்று அடிக்கடி முணுமுணுக்கும் சிங்கத்தின் முன் ஒரு சிறு முயல் வந்து வந்து எட்டி பார்க்க... எத்தனை நேரம் தான் பார்க்காத மாதிரியே இருப்பது. சிங்கம் கொஞ்சம் தடுமாற்றம் கொண்டது. உதவியாளரிடம் என்ன என்று கேட்டது. இந்த மாதிரி முயலுக்கு ஆட தெரியுமாம். உங்களிடம் ஆடி காட்ட விரும்புகிறது என்று சொல்ல... இந்த இக்கட்டான சூழலை கடப்பது எப்படி என்று தெரியவில்லை. யார்கிட்ட வந்து இந்த முயல் என்ன பேசிக்கொண்டிருக்கிறது. முயல் தன்னை முயல் என்றே உணராத வயதில் இருப்பதால் சிங்கத்தை சிங்கம் என்றும் உணர வாய்ப்பில்லை தானே. என்னடா இது... காட்டு ராஜாவுக்கு வந்த சோதனை.

ஞானம் பிடிபட பிடிபட காலம் நழுவும். காலத்தின் நேர்த்திக்கு சிங்கங்கள் பலிகடா. இறுக்கமும் தளர வேண்டும். இதயமும் முழுதாக திறந்து விடக் கூடாது. சிங்கத்தின் பாடு... சில நேரங்களில் ஆரண்ய சுமை.

நரை கூடிய சிங்கத்தின் தனிமை... விரும்பி ஏற்றுக் கொண்டதும் இல்லை. வேண்டா வெறுப்பாய் வீற்றுக் கொண்டதும் இல்லை. அப்படியாக அது அமைந்து விட்டது. அதில் குழப்பம் இல்லை. அப்படியாகவே அது தொடர்கிறது. அதில் சுகம் கண்டு கொண்ட சிங்கத்துக்கு சீரியஸ் முகம் தானே சிக்கென இருக்கிறது. சிக்கனமாக வாழும் சிங்கத்தின் குரூரம் பசித்த பொழுதுகளில் மட்டுமே. மற்றபடி ஒதுங்கி இருக்கவே விரும்புகிறது. உடன்படாத எது ஒன்றுக்கும் இப்போதெல்லாம் மறுப்பு கூட சொல்வதில்லை. மாற்றி யோசித்ததன் விளைவு மௌனம் சாதிக்கிறது.

குகைக்குள்ளேயே வந்து விட்ட முயலிடம் உதவியாளர் இது யார் என்று கேட்க... கட்டை குரலில் துரு துரு கண்களின் பார்வையோடு 'மாமா' என்றதே. தூக்கி வாரி போட்டது சிங்கத்துக்கு. முயலின் உயரம் என்ன.. அத்தாம் பெரிய சிங்கத்தின் முன் தைரியமாக நின்று மிக இயல்பாக மாமா என்றது... மண்டைக்குள் மணி அடித்தது. இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது. சிங்கம் முயலை கவனிக்காதது போல இருந்தாலும்.. முயல் சிங்கத்தை கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறது. எதிரிகளிடம் எதிர்த்து நிற்கும் சிங்கம் அன்பர்களிடம் தடுமாறி போவது காலத்துக்குமான கர்ஜனை பலவீனம்.

பழக்கப்பட்ட முகத்தில் இருந்த முயல் பழைய நினைவையெல்லாம் கிளறி விட்டது. அம்மாவின் முகத்தையே கொண்டிருக்கும் முயலின் முகம் சிங்கத்தை அச்சுறுத்தியது. உறவுகளிடம் இருந்து விலகி ஓடி விட தவிக்கும் சிங்கத்துக்கு இந்த சங்கடமான நிலையை எப்படி எதிர் கொள்வது என்று தெரியவில்லை.

ஆடு பகை.. குட்டி உறவா என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்ட சிங்கம் சற்று நேரம் சிந்தனையை நிறுத்திக் கொண்டது.

உதவியாளர்... சரி நீ சூப்பரா ஆடுவியே அத ஆடி காட்டிரு என்று சொன்ன அடுத்த கணம் 'ஆங்... ஆடறேன்' என்று சொல்லிக் கொண்டே பட்டென கையை காலை உதறி.. கழுத்தை ஆட்டி.. பாடிக்கொண்டே ஆட ஆரம்பித்தது.

இந்த ஸ்டெப்க்கு பிறகு இது.. இதற்கு பிறகு இது என்று அடுத்தடுத்து... மெல்லிய நடனத்தை முயல் சொல்லிக் கொண்டே செய்கையில்... அட என்றிருந்தது. ஒருவர் முன் ஆடுவதற்கு எந்த தயக்கமும் முயலுக்கு இல்லாதது சிறு வயதில் தன்னை பார்த்தது போலவே இருக்க... உள்ளே நடன நதி சலசலத்தது. மற்றவர் என்ன சொல்வார்கள் என்ற எந்த பதற்றமும் இல்லாமல் உடம்பை நெளித்து நெளித்து முயல் ஆடியது ரசிக்கும் படியாக இருந்தது. வெள்ளந்தி குணத்தில் குட்டி முயலின் பார்வை அத்தனை தூய்மையானது.

சிங்கம் சிங்கமாக இருக்க எத்தனை இறுக்கத்தில் இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு முயலுக்கு அது அப்படி இல்லை. தான் முயல் என்று கூட தெரியாத அதற்கு எப்படியும் இருக்க முடிகிறது. கள்ளம் கபடம் அற்ற... உறவு பகை அற்ற உன்னதம் அந்த ஆட்டத்தில் தெரிந்தது. பாடிக்கொண்டே பாட்டுக்கு தகுந்த மூச்சு வாங்கலோடு... நெளிந்து ஆட்டமே கவனமாய் பாட்டே பரவசமாய் ஆடி முடித்து... எனக்கு இன்னொரு டேன்ஸ் தெரியும். அதையும் ஆடவா என்றது. அது சீரியஸாக கேட்டது. சிங்கத்துக்கு சிரிப்பு வந்து விட்டது.

புன்னகை முகத்தில் கனிவும் கருணையும் நிரம்பிய முயலை தூக்கி உதவியாளர் மடியிலேயே அமர வைத்து விட சிறைக்குள் சிக்கிக் கொண்ட சிங்கம்... சிலை போல அமர்ந்து விட்டது. முயலின் சிற்றுடல் சொல்லும் செய்தி.. தான் பாறை அல்ல... பூவும் தான் என்பதாக உணர்ந்தது.

சிங்கம் தன் குணத்துக்குள் இருந்தபடியே கர்ஜித்தது. சத்தம் வெளி வராத கர்ஜனை. சட்டென உள்ளே ஆன தடுமாற்றத்தை யாரிடமும் சொல்ல முடியாமல்... கண்களில் சிறு கலக்கம். முயலை அழைத்துக் கொண்டு கிளம்புமாறு சொன்ன சிங்கம்... தன்னளவில் வீக் ஆனதை நீர் கொண்ட கண்ணாடியில் கண்டு கொண்டது. முயலை தூக்கிக் கொள்ள கூடாது என்ற பதற்றம் வெகு ஜாக்கிரதையாக சிங்கத்தை சுற்றி மாய கயிற்றை வீசிக் கொண்டது. சிங்கம் ஆகாமல் ஒரு சிறு முயலாகவே இருந்திருந்தால்.. ஆடிக்கொண்டு பாடிக்கொண்டு எத்தனை அற்புதமாக ஓட்டைப்பல் சிரிப்பில் காடு முழுக்க நடை போட்டிருக்கலாம். சிங்கம் ஆனாலும் ஆகி... ஒரு வளையம் செய்து கொண்டு ஒரு குகைக்குள் யாவருக்குமான அச்சுறுத்தலாக ஆக வேண்டியதாகி விட்டது.

சிங்கத்தின் நினைவுகள் பல பல அடுக்குகளாக ஆனவை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவி தாவி தாவு தீர்ந்து விடுகிறது. அழுகையை மறக்கும் உள்ளம் சிரிப்பையும் மறக்கிறது. பிடரி உண்மை முகத்தை மறைக்கிறது.

என்ன சோதனை இது. அதை விட குட்டி முயலை தூக்கி வந்து காட்டும் உதவியாளர்... தான் செய்வது இன்னதென தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார் போல. அந்த குட்டி முயலுக்கு பற்கள் கூட இல்லை. ஆனாலும் சிரிப்பு. சிங்கம் முன் இருக்கிறோமே என்ற எந்த பயமும் அதற்கு இல்லை. போதாதற்கு சிங்கத்திடம் கையை நீட்டி நீட்டி தாவ முயற்சிக்கிறது.

சிங்கத்தின் இதயத்திலும் ரத்தமே பாய்கிறது. குருதியின் சலசலப்பு... உடல் முழுக்க கேட்டது. தலையை ஆட்டி முயல்களை கூட்டி போக சொல்லி விட்டு ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்து விட்டது.

"இது மாமா" என்ற குரல் காதோரம் மிக நெருக்கமாக மீண்டும் மீண்டும் கேட்ட சிங்கத்துக்கு... கோபமும் இல்லை. கொந்தளிப்பும் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்களை சந்தித்திருக்க கூடாது என்ற சிந்தனை மட்டும் தான்.

ஆடு பகைக்கு குட்டி என்ன செய்யும் என்று அறிவுக்கு புரிந்தாலும்... குட்டிகள் தள்ளியே இருக்கட்டும். ஆடு மீது பகை தணியவில்லை என்பது மட்டும் சிங்கத்தின் பெரும் உணர்வாகவே இருக்கிறது. இருக்கட்டும். சிங்கம் என்று ஆன பிறகு குகையும் குணமும் தான் பாதுகாப்பு.

- கவிஜி

Pin It