எப்போதிருந்து இது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் எப்போதிருந்தோ இப்படித்தான் என்பதாக தான் வரதனுக்கு தோன்றுகிறது. போடா கருவாயா என்று ஊர் பசங்க சொன்னதில் இருந்து கூட ஆரம்பித்திருக்கலாம்.

ஒளிந்து பார்ப்பதில் சாமர்த்தியன். ஓயாமல் பார்ப்பதில் ஒளிவட்டம். இயலாமை அவனை இப்படி ஆக்கி விட்டதென்று சொல்லும் அவன் நிலைக்கண்ணாடியிடம் மிக தெளிவாக சொல்வான். அவர் ரோல் மாடல். அவர் மாதிரியே நிற்பது பேசுவது நடப்பது பார்ப்பது என்று செய்து பார்க்கையில் கண்ணாடி உள்ளார உடைந்து நொறுங்கும். கண்டுகொள்ள மாட்டான். நிலைக்கண்ணாடி உடையலாம். நிஜ கண்ணாடி அவர்டா என்பான்.

திலீப் எங்கு போனாலும் நிழல் போல பின் தொடர்ந்தான். அவர் நிழலுக்கும் மரியாதையை அள்ளி அள்ளி தீட்டுவான். சட்டென திலீப்பை ஓவியமாக்கி உயரமாக்கி வணங்குவான்.

எதிர் எதிர் வீட்டுக்காரர்கள் ஆனாலும் நேர் கொண்ட பார்வையோ.. எதிர் எதிர் முட்டிக்கொண்டதோ கிடையாது. அப்படி ஒரு வழியே அங்கு இல்லை. எல்லாமே இலை மறைவு ஒளிவு மறைவு தான். காம்பவுண்ட் கல்லறைகள் அவ்வாறாக அவர்களை பிரித்து வைத்திருக்கிறது.

காத்திருந்த வாக்கிங் நேரம். என்ன நடை இது. திலீப் நடந்து சென்று மறையும் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்த வரதன்... பிறகு வீடு வரை அவர் போலவே தான் நடந்து வந்தான். அவர் போல நடப்பது கூட அவரோடு பறப்பது போல தான் இருக்கிறது.

குறுக்கே வந்த பூனையாக வீதி நெடுக வந்த ஊர் பூசாரி... "அப்டியே ஸ்டன் ஆகிட்டேன்... ஒரு நிமிஷம் திலீப் சார்னு நினைச்சிட்டேன்.." என்றாரே... பாக்கெட்டில் இருந்த இருவது ரூபாயை அப்படியே அள்ளி கொடுத்து விட்டு... காற்றில் கையைத் தூக்கி ஆசீர்வாதமும் கொடுத்தபடியே ராஜநடை... இல்லையில்லை திலீபநடை நடந்தான் வரதன். அவர் மாதிரி ஆனதுக்கே இப்படி என்றால்... அவராகவே ஆகி விட்டால்... எப்படி இருக்கும். நினைத்தாலே நெஞ்சில் பணக்கார புழுக்கம்.

"தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா திலீபா..." குரலை கூட திலீப் குரலாக மாற்றும் வேலையை செய்ய ஆரம்பித்து விட்டான். மரபணு கூட மாறிக்கொண்டு தான் இருக்கிறது என்று தான் நம்ப வேண்டும். மண்டை முழுக்க திலீப் முளைத்து அசைகிறது. திலீப் திரும்புவது போல...சட்டென திரும்புவதில் இருக்கும் சிக்கலை சமீபமாக பயிற்சி எடுத்து சரி செய்து கொண்டிருக்கிறான்.

நெருக்கமான நண்பர்களுக்கு கூட சிறு குழப்பம் தான். இவன் என்ன... என்னவோ மாதிரி நடந்துக்கறான்.. வர வர ஹேர் ஸ்டைல் மாறிடுச்சு.. ட்ரெஸ்ஸிங் கூட மாறிடுச்சு. வர்றது ஓட்ட பைக்ல. ஆனால் பி எம் ரெண்டு யூ ல வர்ற மாதிரி ஒரு உடல்மொழி. பெரிதாக அலட்டிக்கொள்ளாத முக பாவனை. மூச்சு விடுவதில் கூட ஒரு வித ஸ்டைல். என்ன கருமம் இது. முனங்கிய நண்பர்களுக்கு முறுக்கு வாங்கி கொடுத்து சியர்ஸ் சொன்னான். சியர்ஸ் சொல்லும் ஸ்டைல் கூட திலீப் மாதிரி தான்.

தெரு முக்கில் திலீபின் கார் போவதையே வெறிக்க பார்த்தான். வேர் வரை சென்று வியப்பை வியர்த்தி வேகத்தை நகர்த்தி தன்னுள் தானே திலீப்பாக ஆவதை உணர்கையில்.... கலவி இல்லாமலே ஆர்கஸம் வந்தது போல அப்படி ஒரு அடிவயிற்று ஆலாபனை. அந்தரத்தில் அடியாத்தாடி... மனம் றெக்கை கட்டி பறக்குது...பாரதிராஜா பிரேம்.

திலீப் போலவே வலது கையில் வாட்ச் கட்டி கொண்டான். ஐநூறு ரூபாய் வாட்ச் தான். ஆனாலும் திலீப் மாதிரி கட்டிக்கொண்டு கண் சிமிட்டுவதில் ஒரு திருப்தி. ஒருவர் இன்னொருவர் போல நடந்து கொள்வது ஒருவகை மனநிலை பிரச்சனை என்று கூட அவன் கண்ணாடி சொன்னது.

"ஓங்கி ஒதைச்சேன்னு வெய்யி... நூறு மூஞ்சியா உடைஞ்சு போயிருவ. யாருக்கு பைத்தியம்... நான் திலீப். ரெம்ப நாளா என்ன பார்த்து பார்த்து உனக்கு வரதன் மாதிரி தெரியுது.. எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...." என்று சொல்லி... வந்த கோபத்தை கண்ணாடி மூஞ்சி தொட்டு முத்தமிட்டு சமாதானப் படுத்தினான். இரவானால்... பால்கனியில் அமர்ந்து ஸ்காட்ச் அடித்துக் கொண்டிருக்கும் திலீப்... ஒரு பிக்காஸோ ஓவியம் போலவே தெரிவான். 190 ரூபாய் ரம்மை வாங்கி வைத்துக் கொண்டு திலீப் போலவே சரிந்து ஓர் உள்ளூர் ஓவியத்தை சமன் படுத்த பார்க்கையில்... என்னடா நடக்குது என்று நிலவு மேகத்துள் ஒளியும். செவலை நாய் வீதிக்குள் பதுங்கும்.

ஒன்று கால்களை பிளந்தபடி நடப்பான். இல்லை என்றால்... பிராக்கட் போல வளைத்து மடக்கி மடக்கி நடப்பான். திலீப்பை பார்த்த பிறகு தான்.. நேராக சீராக நடக்க கற்றான். முன்பெல்லாம் டக் செய்ய தெரியாது. அதில் விருப்பமும் இல்லை. இப்போது கறி வாங்க போகும் போதும் டக் செய்து தான் போகிறான். காலுக்கு தகுந்த செருப்பு போடுவது இரு கலை. அதை... திலீப் தான் மானசீகமாக கற்று தந்தான். ஷூக்களில் இத்தனை விதமா... அத்தனையும் வாங்க ஆசைப்பட்டான். நீந்த தெரியாதவன் மூழ்குவது கடமை என்றாகி விட்டது வரதனின் வாழ்வாதாரம். திலீப் கண்களில் இந்த உலகம் எத்தனை பிரமாண்டம். திலீப் காதுகளில் கேட்பதெல்லாம் இசை தான். திலீப் சுவாசிக்கும் வெளி எங்கும் என்ன ஒரு மிதப்பு. திலீப்பின் ஒரு நாள் அத்தனை அழகாக விடிகிறது.

தனித்த இரவுகளில் திலீப் போலவே நின்று நட்சத்திரம் பார்ப்பது... தானாக ரசித்துக் கொண்டான். என்ன ஒரு கம்பீர கால்கள். அதே போல நின்றான். அன்றிலிருந்து அப்படியாகவே நின்றான். இன்னைக்கு என்ன வண்ணத்தில் அவர் ஆடை இருக்கிறதோ அதே வண்ணத்தில் அவனும் உடுத்துவான். மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் துணியின் தரத்தில் இருந்தாலும்... துக்கம் இல்லை. அவர் மஞ்சளில் தானும் மினுங்குவது மின்னல் வழி மனதின் ஆட்டம்.

ஊட்டிக்கு போன போது.. பைக்கில் பின் தொடர்ந்த நாட்கள் பித்து தான் என்று முடிவுக்கு வர வைக்கும். ஆனாலும் இல்லை என்று அடித்து கூறுவான். திலீப் ஆகி விட்ட பிறகு ஊட்டி என்ன குலுமணாலி என்ன. குளிர் தேச திலீப்பை பார்த்தாலே பரவசம் தான். குளிருக்கான ஆடையில்... கண்ணாடி குளுமையில்... முன்னாடி ஒரு தானாக இருப்பதை ஒளிந்து ஒளிந்து பார்க்க... ஒளி பிறந்த கண்ணாடி ஆகி நிற்பது... தித்திக்கும் திறன்பேசி செய்தது அல்ல. திரவியம் கூடிய உள்மனது உணர்ந்தது. திலீப்பை தொடர்வது... ரசிப்பது என்று உணர்வில் கூட திலீப் தான். திலீப் மீசையை வளர்த்தெடுக்கையில்... மிடில் கிளாஸ் வடும்பு தாண்டி விட்டதாக நம்பினான்.

திலீப் மனைவி பால்கனியில் திலீப்போடு அமர்ந்திருந்தாள். அவள் தன்னோடும் அமர்ந்திருப்பது போல தான் உள்ளே கோப்பை வழிந்தது. வனப்பின் உடல்கள் மிதப்பின் திறவுகளாக வெண்ணிற இரவில் வெண்சாமரம் வீச கண்டான். பார்க்கவே எத்தனை அற்புதம். எவ்ளோ பெரிய வீடு. எத்தனை அழகான மனைவி. கையில் ஸ்காட்ச். கண்களில் ஒளி. நறுமணம் வீசும் கட்டட வேலைப்பாடுகள். கவலை அற்ற முகத்தின் தேஜஸ். ஒளிந்திருந்த வரதனுக்கு உள்ளே வெக்கை. இரவு பகல் வெயில் மழை பனி குளிர் என்று எல்லா நேரமும் அவன் திலீபாக தான் பின் தொடர்ந்தான்.

திகைக்க கண்ட நெருங்கிய நண்பனுக்கு விளங்க முடியவில்லை. விபரீதம் உண்டென்றான். உண்மையில் தான் தான் திலீப் என்ற போது கதை தலைக்கு மேலே போயிருந்தது.

காம்பவுண்ட்டுள் சுற்றி இருக்கும் தோட்டத்துக்கு தொடை அளவு ட்ரவுசர் போட்டுக்கொண்டு நீர் பாய்ச்சும் திலீப் ஓர் அசையும் ஆசையென தெரிவார். ஆசையாய் வழக்கம் போலான ஓட்டை வழியே உணர் கண் திறந்து பார்க்கும் வரதனுக்கு... வயிறு நிறைந்து மனம் உறையும். தன்னைத் தானே பார்க்கும் இந்த காட்சியின் வனப்பு... ஒரு வகை மினுக்கும் பூச்சிகளால் சூழ்ந்திருப்பதை உணர்வான். திடும்மென அவனை சூழும் மெட்டை வரைய ஒற்றைக்காதோடு வான்கா தான் வர வேண்டும்.

திலீப் மாளிகையில் ஊருக்கே விருந்து என்ற போது அது அவனுக்கும் தானே. வேலி ஊர்ந்த பாம்பின் தலை... மாளிகைக்குள் நுழைகையில் ஒருவகை ஆறுதல். மனதின் பெரும்பள்ளம் மேவிட்ட மூச்சு பயிற்சி... தானாக புன்னகைக்க செய்தது. தன் வீட்டுக்குள் நடப்பதாகவே ஓர் எண்ணம். நீண்ட நெடிய துயர தூரங்களுக்கு பிறகு இப்போது மாளிகையெல்லாம் மலர்ந்தான். வகை வகையான கட்டட கூடுகள். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வடிவம். வண்ண வண்ண அலங்காரங்களால் மாடப்புறா மயங்கும் கோபுர வீடு. பொருளும் பொன்னும் அள்ளி இரைக்கப் பட்டிருக்கிறது. ஆகாயம் அருகே இருக்கும் வீடு. இறைவன் இங்கு தானே சட்டென கீழிறங்க முடியும். இறைவன் இதயத்தில் இருந்து எழும்பிய இந்த திலீப் தானன்று வேற யார்.

ஊர்காரர்களிடம் திலீப் சார் மாதிரியே பேசினான். அவர் பேசி.... விட்ட இடங்களை இவன் தொடர்ந்தான். திலீப்பாக இருந்த வரதனின் கையில் இருந்த கோப்பை வேகமாய் காலி ஆனது. திலீப் சார் என்று யாராவது அழைக்க... திலீப்புக்கு முந்திக் கொண்டு வரதன் திரும்பினான். வாய் முனகியது. வார்த்தையில் சூடு. கழுத்தினில் அழுத்தம். எஸ்...எஸ்.... நான் தான் திலீப்.

எதிரே சரிந்து அமர்ந்திருந்த திலீப்... தன்னைப் போலவே அமர்ந்திருப்பதாக தோன்றியது வரதனுக்கு. அப்படியே தன்னை போலவே தான் உடல்மொழி. முக வெட்டு கூட தன்னை போலவே தான் தெரிகிறது. தலை முடி.... மீசை.... தாடியற்ற வளமை என்று நெற்றி சுருக்கம் வரை... நீண்ட முழுக்கை சட்டை முதல்.. தோள் பலம்.... கால் முழம் என்று நேர்த்தியாய் நகல் ஆக்கப்பட்ட அசல் போலவே தெரிந்தது.

கனத்த மவுனம் அங்கே கரகாட்டம் ஆடியது. கலைக்க தான் வேண்டும்.

"கோயில் திருவிழாவுக்கு எவ்ளோ வேணும்.. கூச்சப்படாம கேளுங்க,....?" கேட்ட குரல் திலீபினுடையது.

குரல் கூட அப்படியே இருந்தது. ஒரு குருவியைப் போல அவனை நோட்டமிட்ட நாட்களின் குரல் ஒவ்வொன்றாக சிறகடித்து பறக்க தொடங்கியது.

"வரதனா இருக்க கஷ்டமா இருக்கு திலீப். நான் கொஞ்ச நாள் திலீபா இருக்கேன்... உங்கள மாதிரி இருக்கறது நல்லா இருக்கு. நீங்க எப்பவுமே ஒரு மிணுங்கலோட எப்பிடி இருக்கிங்க... அதை மட்டும் கொண்டு வர முடியல..." தன் உடலை தானே கிளறி கொண்டான். மனம் கொண்ட வாய்களின் தொடர் புலம்பல் தொடர்ந்தது.

"கொஞ்ச நாள் உன்ன மாதிரி இருக்கேன்.. திலீப். நீ தான் வாழற மாதிரி இருக்கு. நான் சாகற மாதிரி தான் இருக்கேன். உன் கார்ல நான் ஒரு நாள் போனா என்ன... உன் வீட்ல ஒரு நாள் நான் இருந்தா என்ன. 36 வயசு ஆச்சு. எனக்கு கல்யாணம் ஆகல. பண்ணிக்கவும் ஆள் இல்ல. பண்ணி வைக்கவும் ஆள் இல்ல. உனக்கு மட்டும் எப்பிடி இவ்ளோ அழகா ஒரு பொண்டாட்டி. பொறாமையா இருக்கு. நீ நடந்து போனாவே அப்படி மணக்குதே எப்பிடி. எனக்கு மரியாதை இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. உனக்கு பாரு எல்லாமே இருக்கு. எல்லாமே உனக்கு மட்டும் தான் இருக்கணுமா. எனக்கும் கொஞ்ச நாள் இருக்கட்டும்..."

"அன்னைக்கு கூட உனக்கு விழா எடுத்தாங்களே. என்னவோ சாதிச்சட்டனு. எத்தனை மாலை விழுந்துச்சு. அப்டியே பொறாமை அடி வயித்துல பத்தி எரிஞ்சுது..."

"எல்லாரும் நல்லா சாப்பிடுங்க... ஒரு கால்... இப்ப வந்தறேன்..." என்ற திலீப்... உயர்மிகு திறன் பேசியை தூக்கியபடி உள் அறைக்கு சென்றான். அவனையே சொட்டு விடாமல் பார்த்துக் கொண்டிருந்த வரதனின் கையில் விருந்து ஸ்காட்ச் வழிந்து கொண்டிருந்தது. விரிந்த நெற்றியில் தொடர் புலம்பல்.

எப்போது எப்படி பால்கனிக்கு போனான் தெரியவில்லை. பால்கனியில் நின்று பார்த்தான். ஊரே பால்கனியை பார்ப்பது போல ஒரு பிளிறல்.

எதிரே இருந்த தன் வீடு... ஒரு சென்ட்டில் கவர்ன்மென்ட் கட்டிக் கொடுத்த குட்டி வீடு. ஓர் இருளடைந்த சோகம் போல தெரிந்தது. அப்படியே திரும்பி திலீப் மாளிகையைப் பார்த்தான். ஊரை அடித்து உலையில் போட்ட பூதம் போல மின்னியது. ஒரு பக்கம் அரசு கட்டி தந்த குடியிருப்பு வரிசை. இன்னொரு பக்கம் மாட மாளிகை காம்பவுண்டு. இடையே வந்த இருத்தல் பிரச்சனை தான் இப்படி எமனாக வந்திருக்கிறது. வீதிக்கு இந்தப்பக்கம் மாளிகை. வீதிக்கு அந்த அந்தப்பக்கம் இயலாமை. இங்கிருந்து அங்க பாக்கறதுக்கும் அங்க இருந்து இங்க பாக்கறதுக்கும் இருக்கற வித்தியாசம்... அங்க இருந்து இங்க பாக்கறவனுக்கும்.. இங்க இருந்து அங்க பாக்கறவனுக்கும் மாறுபடும்.

வரதன் மண்டைக்குள் திலீப் சிரித்தான். உடலில் இனம் புரியாத உலுக்கல். எல்லாவற்றுக்கும் தீர்வு எப்போதுமே இருந்ததில்லை. வழி முடிந்தால் பூமி முடிந்ததாகுமா. கண்களில் சிவப்பும் கருமையும்... வெண்மைக்கு மன்றாடியது. குடிக்க குடிக்க தீருமா இந்த போதனை.

வரதனின் தலைக்குள் இருந்த கிணற்றுக்குள் திலீப் தத்தளித்துக் கொண்டே இருந்தான். அது ஒரு புனிதப் போராக தோன்றியது.

விருந்து முடிந்து டாடா காட்டப்பட்டது. வயிறு நிறைந்திருந்தாலும்... மனதில் வெற்றிடம் வேர் விட்டுக்கொண்டே இருந்தது.

எல்லாரும் கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறி கலைந்தார்கள். ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் குறையாத வரதன் தன் வீட்டை பார்த்து காற்றில் துப்பினான். காற்றும் துப்பியது.

இத்தனை தீர்க்கமா ஒருத்தன் இன்னொருத்தனா தன்னை நம்ப முடியுமா. தன்கிட்ட இல்லாததெல்லாம் அவன்கிட்ட இருக்கறதா வரதன் நம்பினான்.

மெல்ல தன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் வீட்டுக்குள் இருந்த சூனியம் அவனை வா வா என்று அழைத்தது. வீட்டை சுற்றி அடர்ந்திருக்கும் புதர்களும்... இருட்டும்... அந்த நகரை இந்த நகரில் இருந்து எப்படி பிரித்திருக்கிறது. இது வீதி இல்லை. மிடில்கிளாஸ் பாலம். பாலத்துக்கு அந்த பக்கம் விதவிதமான வெளிச்சங்கள். பாலத்துக்கு இந்த பக்கம் குண்டு பல்பு புளிச்சுகள். பொருளாதார சிக்கல் மட்டும் தான் இல்லாதவனை இருக்கறவன் மாதிரி ஆக சொல்லுதா. ம்ஹும்... அதெல்லாம் தாண்டி வேற இருக்கு. வழக்கம் போல வாகான இடத்தில் அமர்ந்து கொண்டு திலீப்பின் மாளிகையை ஆசையாய் பார்க்க ஆரம்பித்தான்.

வரதனின் ஓட்ட பைக் வழியாக அந்த கண்கள் நீண்டு முடிந்த இடம்... திலீப் வீட்டு சொகுசு கார். மேல கீழ... அது இது... நான் நீ என்ற எதிர் எதிர் ஈர்ப்பின் விளைவு இது என்று சொல்லலாமா. வயித்தெரிச்சல் கை மீறும் போது எதிர் வீட்டு புது காரில் கீறுகிறான். யுத்தசாமிகள் சொன்னது. வரதன் கண்களில் வறுமையும் வெறுமையும் தாண்டவமாடின. அடையாளத்துக்கு ஏங்கும் மனநிலை அவனை சிதறியது. அதிகாரத்துக்கு ஏங்கும் படிநிலை அவனை அலைக்கழித்தது. வாழ்வின் அர்த்தம் வசதி படைத்தலைய... வசதியற்ற அசல் நகலுக்கு தாவி தாவி அலைவதை உணர முடிந்தது.

அதே நேரம்... வரதன் வீட்டுக்கு பக்கவாட்டில் ஓடும் சாக்கடை ஒட்டிய குடிசை வீட்டில் இருந்து சாமியப்பன்... ஓலை நகர்த்திய ஓட்டை வழியாக குறுகுறுவென... வரதன் வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.

"வாழ்ந்தா வரதன் சார் மாதிரி வாழனும். எத்தினி அட்டகாசமான பைக்கி. கெவருமென்ட் வீடு. ஜம்முனு ஒண்டிக்கட்ட வாழ்க்கை... நாமளும் தான் இருக்கமே... இத்துனூண்டு குடிசைக்குள்ள ஒரு சொறி புடிச்ச நாய் பொழப்பு. இதுல முசுடு புடிச்ச பொண்டாட்டியும் மூணு புள்ளைங்களும்..." தலையில் அடித்துக் கொண்டான். புலம்பல் தத்தளித்தது.

மனசு கடாசினாலும்... கொசு கடித்து குதறினாலும்... சாமியப்பன் கண்களில் வரதன் வீட்டு குண்டு பல்பின் அத்தனை வெளிச்சமும்.

கோட்டுக்கு அந்த பக்கம் அழகழகான வரிசை வீடுங்க. கோட்டுக்கு இந்த பக்கம் குடிசையும் சாக்கடையும். இரவு இரக்கமின்றி வறுமை கோட்டை காட்டிக் கொண்டிருக்க....பின்னாலிருக்கும் ரசம் போன விகார கண்ணாடியில் மங்கலாக தெரிந்து கொண்டிருக்கிறது... குனிந்து வளைந்த ஒரு தலைமுறை முதுகு.

- கவிஜி

Pin It