Worried man காசு சம்பாதிப்பது கழுதைக் கொம்பாக இருக்கிறது என்று மணிமாறன் எல்லோரும் புலம்புவதைப் போல சத்தமில்லாமல் சுமாராகத்தான் புலம்பினான். அதற்கே வாசுதேவனுக்கு மிகக் கோபம் வந்து விட்டது. சுமாராக காது கேட்கும் அவருக்கு எப்படி கேட்டதோ அது. உலகத்து மொத்த சோம்பேறிகளையும் மொத்தமாகத் திட்டித் தீர்த்தார் அவர். மணிமாறன் வேலைக்குப் போகாமல் சோம்பேறியாக இருப்பதாக வாசுதேவன் குற்றம் சொல்கிறார். அதற்கு மணிமாறன் “எந்த வாலுள்ள நாலுகால் ஜீவன் எனக்கு வேலை தந்தது” என்று கேட்கிறான். இது வாசுதேவன் எனும் தகப்பனுக்கும் மணிமாறன் எனும் மகனுக்கும் இடையே நடந்த பொருளாதாரத் தெளிவு முயற்சிக்கான சண்டை.

நன்றாகப் படித்தேன், ஆனால் வேலை கிடைக்காமல் இருக்கிறேன். என்று சும்மாயிருப்பதில் சுகம்கண்ட நவீன சும்மாரப்பன் யாராவது சொன்னால் அதற்காக எல்லோருக்கும் கடும் கோபம் வரவேண்டுமே ஒழிய பரிதாபம் மட்டும் வரவே கூடாது என்று கறாராக சொல்வார் வாசுதேவன். காரணம் உலகமெல்லாம் சுபிட்சமாய் கொட்டிக் கிடக்கும் வேலை மகத்துவங்களை மதியற்று நழுவவிடும் சுகச் சோம்பேறிகள் அவர்கள் என்பது அவர் அபிப்பராயம்.

மணிமாறனுக்கு சொல்லிக்கொடுத்த தமிழாசானிடம் வாசுதேவன் வந்து புலம்பி, “நீங்களாவது என் மகனுக்கு புத்திச் சொல்லக்கூடாதா!” என்று முறையிட்டார். அதற்கு பிரைவேட் ஸ்கூலில் மாங்கு மாங்காயென்று சொல்லிக் கொடுத்துவிட்டு தற்போது ஓய்வில் இருக்கும் தமிழாசான், “அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பெரும்பாணாற்றுப் படையில் ஏதாவது பாடல் இருக்கிறதா என்று தேடி, அதை மேற்கோள் காட்டி அறிவுறை சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. வேலை இருக்கிறது, தேடச் சொல்லுங்கள்.” என்றார்.

மணிமாறனோடு ஒன்றாகப் படித்தவன் கோக்குமாத்துகுமரேசன். ஒன்றாம் வகுப்பில் இருந்தே அவனுக்கு சரியாக படிப்பு வராததால் கண்டபோன வாத்தியார்களிடமெல்லாம் சகட்டு மேனிக்கு தலையில் அடி வாங்கியவன்;. அப்படி வாங்கிய அடியில் மொட்டை மண்டை ரெட்டை மண்டையாகி சீத்தலைச் சாத்தனார் என்றே பெயரெடுத்து பத்தாவதில் ஒற்றை மதிப்பெண்ணில் பெயிலானான். அதன் பிறகு சூப்பர் சைட் மாலாவை கரெக்ட் செய்வதற்க்காக டுட்டோரியல் காலேஜ் போன கோக்குமாத்து குமரேசனுக்கு என்ன காரணத்தாலோ மூளை குழம்பிப்போய் தொன்னூறு, நூறு என்று பத்தாவதில் மார்க் எடுத்து, பிறகு பெரிய பெரிய படிப்பாக படித்தான். இப்பொழுது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியில் சேர்ந்து ஏகத்திற்கும் சம்பாதித்து காசு வைக்க இடமில்லாமல் வாக்கிங் போவதென்றால்கூட காரில்தான் போகிறான். ஆனால் நன்றாகப் படித்த மணிமாறனோ தகப்பனோட மல்யுத்தம் செய்கிறான். இத்தனைக்கும் அவருக்கு மல்யுத்தத்தின் சட்டதிட்டங்கள்வேறு சரிவரத் தெரியாது.

நன்றாக படிக்காத உதவாக்கரைகள்கூட பத்தாயிரக்கணக்கில் ஓடியாடி சம்பாதிப்பது எப்படி? இந்த கேள்வியை தினமும் தன் மகனிடம் கேட்டு அவனுக்கு வயிற்றுக் கடுப்பு கொடுத்துக் கொண்டிருந்தார் வாசுதேவன். “உதவாக்கரைங்க அந்தஸ்த்தோட இருக்கிறதுக்கு காரணம் அவங்க வலது கால்மேல எடது காலப் போட்டு ஆட்டிகிட்டு, எவனாவது கூப்பிட்டு வேலை தருவான்னு மல்லாந்து படுத்திருந்ததினாலயா? கால்காசு உத்யோகம்னாலும் அவங்களா தேடித்தானே சேந்தாங்க? இப்பயாவது அந்த சோம்பேறி (தன் மகனைத்தான்) ஒண்ண புரிஞ்சிக்கிடனும் நம்முடைய காலாவே இருந்தாலும் அதை ஆட்டினாதான் ஆடும்.” இப்படி வாசுதேவன் தனிந்த குரலில் ஈஸியாய் சொன்னாலும் உள்ளுக்குள் கனன்ற அவர் கோபத்தின் அனலில் வேகாத கறியும் வெந்திருக்கும். பாவம் அவர் மகன் கறிதான் வேகவேயில்லை.

இன்று வாசுதேவன் பத்திரிக்கையில் ஒரு விளம்பரத்தை பார்த்துவிட்டார். ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒரு திறமை வாய்ந்த சேல்ஸ் எக்ஸிகூடிவ் வேண்டும். தன் மகன் அதை பார்த்தானோ இல்லையோ என்று குழம்பினார். அவனைச் சொல்லி குற்றமில்லை சின்ன விளம்பரத்தின் பக்கத்திலேயே, முழுசும் நனைந்த நடிகை கவர்ச்சிக் குண்டு குப்பம்மாஸ்ரீயின் டாப் கிளாஸ் டாலில் வேறெதுவும் தெரிந்திருக்காது அவனுக்கு. அவரே விளம்பரத்தை கட் செய்து (கட் செய்து கொடுக்காவிட்டால் அவன் முதலில் பக்கத்து குப்பம்மாஸ்ரீயைத்தான் பார்ப்பான்) மகனுக்கு கொடுத்து “இதிலாவது உன் திறமையைக் காண்பி” என்றார்.

“இல்லப்பா, நான் விளம்பரத்தைப் பாத்தேன். ஆனா, வேலைக்கு தகுதி மட்டும் போதாது. அது முக்கியமுமில்ல! காசு, சிபாரிசு கேப்பாங்கன்னு தெரிஞ்சவன் சொன்னான்.” என்றான் மணிமாறன். “கொக்குமாத்து குமரேசன் எப்படிடா வேலையில சேந்தான். சிபாரிசு செய்ய அவனுக்கு அப்பனே கிடையாது. அவன் முன்னேறல. அப்பனோட தோள்மேல ஏறி முன்னேறிடலான்றது முட்டாள்தனம். இப்ப நீ போற வேலைக்கு சிபாரிசே தேவையில்லைன்னு எனக்குத் தெரிஞ்சவன் சொன்னான். அங்க உன் திறமைய காட்டு. அப்ப ஒத்துக்கிறேன் நீ திறமை சாலின்னு. அங்க ஒருத்தன் சிபாரிசிலதான் சேந்தான் அதனாலதான் என்னால சேர முடியலென்னு எங்கிட்ட வா. அப்ப நான் என் மளிகைக் கடை கல்லாவை காலி பண்ணிகிட்டு போயிடறேன். உன்னை உட்கார வைக்கிறேன்” என்று சவால் விட்டார்.

அப்பா சொல்வதும் உண்மைதானா? அந்த நிறுவனத்தில் திறமைக்கு மதிப்பு உண்டு என்று கேள்விப் பட்டிருப்பாரா? மணிமாறனும் புது உத்வேகத்துடன் நேர்முகத் தேர்வுக்குப் போனான். எப்படியும் இன்று வேலை கிடைக்கப் போகிறது அல்லது தன் அப்பனின் மளிகைக் கடையாவது கெட்டி. விளம்பரம் கொடுத்த அந்த நிறுவனத்தின் முன்பாக எட்டு இளைஞர்கள் வேலைக்காக நின்றார்கள். ஓன்பது மணி நேர்முகத் தேர்விற்காக எட்டு மணிக்கே வந்து, நுனி இருக்கையில் அமர்ந்து, திகில் படம் பார்ப்பவர்கள் போல படபடப்புடன்; தங்கள் எதிர்கால அதிர்ஷ்டத்திற்காக தவமிருந்தார்கள். நகமிருப்பவர்கள் நகத்தைக் கடித்தார்கள், நகமில்லாதவர்கள் பாவம் விரலையே கடித்தார்கள்.

இந்த வேலை மட்டும் கிடைத்துவிட்டால் கத்தையாக சம்பாத்தியமும் கவுரவமும் உண்டு என்பதற்கு நிறுவனத்தின் கீர்த்தி கேரண்டி. எண்ணி பத்து வருடத்தில் சொந்தமாக கார், தனி வீடு, கனிசமான பேங்க் பேலன்ஸ் என்று கவுரவமான பிரஜையாகிவிடலாம். படபடப்பு இருக்காதா நகம் கடிக்கும் பையன்களுக்கு? இந்த நிறுவனத்திற்கு சுத்துப்பட்டு எட்டு ஸ்டேட்டிலும் கிளைகள் இருக்கிறது, ஓஹோ என்ற பேர் இருக்கிறது. நேர்முகத் தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஒன்றை மட்டும் எல்லொரும் புரிந்துகொள்ள வேண்டும். குதிரைக் கொம்பு, நரிக்கொம்பு கிடைப்பது சுலபமாய் இருந்தாலும் இந்த நிறுவனத்தல் வேலை கிடைப்பது அத்தனை சுலபமல்ல. தங்கத் தூளை இரும்புச் சல்லடையில் சலித்து எடுப்பது போல பொறுக்கி எடுப்பார்கள் திறமைசாலிகளை.

மணிமாறன் அங்கிருந்தவர்களின் தகுதி தராதரங்களை மெல்ல வேவு பார்த்தான். அவர்களுக்கு நடுவே இவன் சற்றே தகுதி மிக்கவனாய் அவனுக்கே தெரிந்தது. படிப்பு, தோற்றம் எல்லாம் அவர்களைவிட அதிகத்திலும் அதிகமிருப்பதாய் அவன் நம்பினான். முதல் இளைஞன் அறைக்குள் அழைக்கப்பட்டான். போன வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டான். அவனுக்கு அதிர்ஷ்டத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டதாக வெளியே வந்து சொன்னான். ஒவ்வொருவராக அங்கே தெரிவிக்கப்பட்ட அதிர்ஷ்டத்தின் ஆழ்ந்த அனுதாபங்களைச் சுமந்தபடி வெளியே போக இவன் கடைசி ஆளாக நின்றான். ஒரு ஆள் தானே வேண்டும். அது நான்தான்! வேலை கெட்டி. சாதிச்சிட்டடா மணிமாறா!

வந்த இளைஞர்களை எல்லாம் உதடு பிதுக்கி வெளியே அனுப்பிக்கொண்டிருந்தவர் விஸ்வா எனப்படும் விஸ்வநாதன். அவர் மிடுக்கான கம்பீரத்துடன் காதோர நரையும், எடுப்பான கண்ணாடியுமாக உட்கார்ந்திருந்தார். அவருக்கு போன மாதம்தான் பழுத்த பதவி உயர்வும் கனிசமான சம்பள உயர்வும் தந்திருக்கிறார்கள். முதலாளிக்கு அவர் திறமை மற்றும் அறிவு மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. விஸ்வா கொஞ்சம் தடாலடி ரகம். பெயர், ஊர் கேட்டு, படிப்பு பர்சனாலிட்டி பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பவரல்ல. இவன் இதற்குத்தான் உதவுவான் என்பதை பார்க்காமலேயே சொல்வதில் கில்லாடி. நிறுவனத்தில் அவர் வேலை நேர்முகத் தேர்வு நடத்துவது அல்ல. அவருக்கு மார்கெட்டிங்கில் வேறு வேலை இருக்கிறது. ஆனாலும் முதலாளி இந்த பணியை திரும்பவும் ஒப்படைத்தார்.

விஸ்வா அதை லேசில் ஒப்புக்கொள்ளவில்லை காரணம் அவர் மேல் பொறாமை கொண்டவர்கள் அந்த நிறுவனத்தில் உண்டு. அவரைவிட தகுதியானவர்கள் இருந்தும் அவருக்குப் பதவி உயர்வும் தகுதிக்கு மிஞ்சிய சம்பளமும் இருப்பதாய் ஒரு பேச்சு உண்டு. விஸ்வாவின் மறுப்புக்கு முதலாளி வெகு இயல்பாக சிரித்தபடி மிஸ்டர் விஸ்வா, உங்களோட திறமை, நேர்மை மேல் எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு. நீங்க எதைச் செய்தாலும் இந்த நிறுவனத்தோட நன்மைக்காகத்தான் செய்வீங்கன்னு நான் நம்பறேன், அது பொய்யா?

“போய்யில்ல சார். ஆனா, இங்க சில பேருக்கு என் மேல கொஞ்சம் ஜெலஸ் இருக்கு. நான் சரியான ஆளை செலக்ட் செய்தாலும் என் மதனி பையனுக்கு வேலை தந்ததா லஞ்ச் டயத்துல பேசிப்பாங்க”

“ஊங்க மதனிக்கு பையன் இருக்கானா?”

“மதனியே கிடையாது, சார்!”

“தென், டோண்ட் வொரி, அப்படியே நீங்க மதனியோட பையனை செலக்ட் செய்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. பாருங்க விஸ்வா, எனக்குத் தேவை ஒரு திறமையான யெங் பாய். உங்களோட மனைவி இருபத்தி ஐந்து வயசு பையனா இருந்து, அவங்களையே நீங்க செலக்ட் செஞ்சாலும் சந்தோசப்படுவேன்;.” என்றார்.

'தேங்க் யூ சார்!"

அதன் பிறகுதான் விஸ்வா வந்து உட்கார்ந்தார். இதற்கு முன் வந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து அனுப்பினார். மணிமாறன் உள்ளே சென்றான். ஊட்காரச் சொன்னதும் நிமிர்ந்து கம்பீரமாய் அமர்ந்தான். மற்றவர்களைப் போல நுனி இருக்கையில் அமர்ந்து, கடன்பட்டு வட்டி கட்ட முடியாதவன் போல வளையவில்லை. அறையில் மிதந்த ஏர் ஃபிரஷ்னரின் மல்லிகை மணத்தை விரும்பி சுவாசித்தான். அறை முழுவதையும் கண் சுழற்சியில் அளந்தான். இதற்கு முன் வந்தவர்களை விஸ்வா ஊடுருவிப் பார்த்தார். வந்தவர்களுக்கு பிரி கேஜில் படித்ததுகூட மறந்து போனது. மாறாக மணிமாறன் விஸ்வாவையே ஊடுருவுகிறான். வெல்டன்!

“இந்த வேலையில் சேரும் அளவுக்கு தகுதி உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா?” ஏல்லோரிடமும் கெட்டதைப் போலவே இவனிடமும் கேட்டார் விஸ்வா. முன் வந்தவர்கள் திணறிப் போனார்கள். வேண்டிய மட்டும் படித்திருப்பதாகச் சொன்னார்கள், தகுதி இருப்பதாக நம்புகிறோம் என்று பணிவுடன் சொன்னார்கள். இவனோ அதற்கும் அதிகமான தகுதி இருக்கிறது என்றான். முடிந்த வரை திறமை காட்டினான் ஆனாலும் சுற்றி வளைத்து, கஷ்டத்திலும் கஷ்டமான கொக்கிகளைப் பொட்டு வளைத்து, “சாரி, சார்... எனக்கு தெரியல, புரியல” என்று மணிமாறன் சொல்லும்வரை விடவில்லை விஸ்வா. கடைசியில் விஸ்வா மணிமாறனுக்கும் உதட்டை பிதுக்கியே பிதுக்கிவிட்டார்.

அவன் தன் வாழ்க்கையில் மறுபடியும் ஒருமுறை மனம் சோர்ந்து திரும்பிக் கொண்டிருந்தான். ஏ தகப்பனே! உனக்கு பாரமாய் இருக்கக்கூடாது என்று நானும்தான் முயற்சிக்கிறேன். ஆனாலும் நான் தோற்றுப் போகிறேனே... அது ஏன்? என்ற கேள்வியோடு அவன் அறையை விட்டு வெளியேறினான். அப்பொழுது இன்னொரு இளைஞன் உள்ளே நுழைந்தான். அடக் கடவுளே! மொத்தம் ஒன்பது பேரா! நின்று உள்ளே நடந்த சம்பாசனைகளை கவனித்தான். அவனுக்காவது வேலை கிடைக்குமா இல்லை கண் துடைப்பா?

மறுநாள் காலையில் வெகு சீக்கிரமே எழுந்த மணிமாறன் குளித்துவிட்டு, அம்மாவின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, தன் அப்பா கட்டிக் காத்த மளிகைக் கடையின் சாவியை எடுத்துக்கொண்டு வந்து, கடையை திறந்து கல்லாவில் உட்கார்ந்தான். இவன் கிளம்பும் வரை அப்பா எழுந்திருக்கவேயில்லை. கடை சிப்பந்திகள் ஒவ்வொருவராய் வந்து மணிமாறனைப் பார்த்து திகைத்து “வணக்கம் மொதலாளி!” என்றார்கள். சின்னவனாய் இருந்தாலும் கல்லாவில் இருப்பவன் முதலாளிதான். அவர்களிடம் அவன் பேர் கேட்டான்.

இந்த கடைக்கு அப்பாவிடம் காசு வாங்குவதற்குத் தவிர வேறு விசயங்களுக்கு அவன் வந்ததேயில்லை. யார் யார் என்னென்ன வேலை செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான். இந்த சீட்டில் உட்கார்ந்திருக்கும் என் அப்பாவின் வேலை என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டான். பிறகு ஊதுவத்தி காட்டி, வந்த முதல் கஷ்டமரிடம் காசு வாங்கிக்கொண்டு மீதி சில்லரையைக் கொடுத்தான். அவன் அப்பா கோபத்துடன் வந்து கண் சிவக்க நின்றார்.

இவன் சாதுவாக அவரிடம் “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். கடையில் இருக்கும் ஒருத்தனைக் கூப்பிட்டு “சாருக்கு என்ன வேணும்னு கேட்டு, சரக்கு போட்டுக் குடு.” என்றான். உள்ளே இருந்த கடையாட்கள் மறைவாய் சிரித்துக்கொண்டார்கள். “உன்ன யாருடா இங்க வரச் சொன்னது! இந்த கடை கழிசடையெல்லாம் வேணான்னு தானே உன்னை இத்தனை கஷ்டப்பட்டு படிக்க வெச்சேன். வேலைக்கு போக துப்பில்ல இப்படி கல்லாவுல வந்து உட்காந்துட்டியா? இந்த மளிகைக் கடை அழுக்கு என்னோடையே ஒழியட்டும் உனக்கு ஏன்டா இதெல்லாம்.”

மணிமாறன் முகத்தை பாவனை இன்றி வைத்துக்கொண்டு “சார், உங்களுக்கு என்ன வயசாகுது?” என்று கேட்டான்.

“டேய்... கோபத்தை கௌப்பாதே! நேத்து போன இன்டர்வ்யூ என்னாச்சி?”

“வயசு என்னன்னு கேட்டேனே.” அவன் தீர்மானமாகக் கேட்டான்.

“அறுபதுடா... இந்த வயசில எனக்கு இந்த தலைவலி தேவையாடா?”

“பாருங்க... இந்த மளிகைக் கடையில 58 வயசுக்கு மேல எல்லோருக்குமே ரிட்டயர்மெண்ட். உங்களோட கணக்கு வழக்கை பைசல் பண்ணி சேர வேண்டிய தொகை உங்க வீடு தேடிவரும். இப்ப நீங்க போகலாம். உங்களுக்கு இந்த மளிகைக்கடையோட ஓய்வுகால நல்வாழ்த்துக்கள்.” கௌரவமாக சிரித்தான்.

“டேய், சொன்னா கேளுடா! இந்த அசிங்கத் தொழில் வேணாண்டா... உன்னால இதை சமாளிக்க முடியாது...”

“இதுல என்னப்பா அசிங்கமும் கஷ்டமும்! உங்களையும் என்னையும் வளத்தது இந்த அழுக்கு மூட்டை மளிகைதான். நான் அடுத்தவன்கிட்ட சேல்ஸ் எக்ஸிகூடிவ்வா இருக்கலாம்... சொந்த மளிகை நடத்த முடியாதா? பயப்படாதிங்கப்பா... நானே ஒரு பெரிய நிறுவனமா வளர்ந்து காம்பிக்கிறேன்.”

“இன்டர்வ்யூ என்னடா ஆச்சி?”

“என்னோட திறமையில அவங்களுக்கு நம்பிக்கை இல்லை. என்னை இன்டர்வ்யூ பண்ணாரே அவரு ர்ரொம்ப நல்லவருப்பா” மணிமாறன் வெளியே வரும்போது உள்ளே போனானே ஒருத்தன் அவனுக்கு எப்படி வேலை கிடைத்தது என்பதை காட்சியாக விவரித்தான். உள்ளே கடைசியாக போன இளைஞனை புன்சிரிப்போடு பார்த்தார் விஸ்வா. மணிமாறனிடம் கேட்டது போலவே அவனிடமும் உனக்கு என்ன தகுதி இருக்கு இந்த நிறுவனத்தில சேர.. என்று கேட்டார்.

அந்த இளைஞன் சீலிங் ஃபேனை பார்த்தபடியே “ஏகமாக படித்திருக்கிறேன்” என்றான்.

அவர், “போதாது... உன்னைவிட படித்தவர்கள் ஏராளம் இந்த தேசத்தில்.” என்றார்

“என் அம்மாவுக்கு, ஐந்து நட்சத்திர ஓட்டலில் செய்வது பொல விதவிதமான சேன்ட்விச் செய்யத்தெரியும்” என்று அந்த இளைஞன் சொன்னதும் விஸ்வா மெல்ல சிரித்தார்.

“லுக் மை டியர் பாய்! நாங்கள் ஒரு திறமை மிக்க இளமையான சேல்ஸ் எக்ஸிகூடிவ் வெண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஓட்டலில் ஊத்தாப்பம் போடும் சரக்கு மாஸ்டரை அல்ல. உன் அம்மா சேண்ட்விச் செய்வதைப்பற்றி நான் கேட்கவில்லை. உனக்கு தகுதி இருக்கிறதா,? உன் அம்மா தகுதியை பிறகு சொல்.”

“பணம் மற்றும் பணம் சார்ந்த விசயங்கள், விற்பது மற்றும் வாங்குவது குறித்த நுணுக்கங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். எல்லோருக்கும் நுகர்வோரின் வாங்கும் திறன் பற்றித்தான் தெரியும். ஆனால் நுவர்வோரின் பொய்ப் பொருளாதாரம் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.”

“அதென்ன பொய்ப் பொருளாதாரம்?”

“நுகர்வோர் தங்களின் பணபலத்தை தப்பாக எடை போட்ட வைத்திருப்பது பொய்ப் பொருளாதாரம். அது நம் விற்பனைக்கு உதவாது. உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோம்... இப்பொழுது உங்கள் பாக்கெட்டில் இரண்டு ஜநூறு ரூபாய், நான்கு நூறு ரூபாய் சேர்ந்து மொத்தம் 1400 ரூபாய் இருக்கிறது என்று நினைத்திருக்கிறீர்கள், உண்மையா?”

விஸ்வா ஆச்சர்யமாக “ஆமா. எப்படி தெரியும்!” என்றார். அவர் காலையில்தான் ஒரு செலவுக்காக மனைவியிடம் வாங்கி வந்தார்.

“ஆனால் இப்பொழுது உண்மையில் உங்கள் பாக்கெட்டில் வெறும் 1300 ரூபாய் மட்டுமே இருக்கிறது” என்றான்.

விஸ்வா பாக்கெட்டில் கை விட்டபடியே “இருக்காதே! நான் காலையில் இருந்து எந்த செலவும் செய்யவில்லையே...” என்றார்.

“அதைத்தான் நான் நுகர்வோர் பொய்ப் பொருளாதாரம் என்று சொல்கிறேன். எடுத்துப் பாருங்கள் நான் சொன்ன தொகைதான் இருக்கும்.”

விஸ்வா எடுத்துப் பார்த்தார் 100 குறைவாக இருந்தது.

“டேய், எங்கடா போச்சி... நீ எடுத்தியா?”

“நீங்க விஞ்ஞானியா?”

“இல்ல...”

“பெட்ரோல் ஊத்தாமயே ஓடும் வண்டி கண்டு பிடிச்சிருக்கிங்களா?”

“இல்ல...”

“பிறகு எப்படி நான் இண்ட்டர்வ்யூக்கு வரமுடியும்... அதான் உங்க பாக்கெட்ல இருந்து எடுத்தேன்...”

விஸ்வா மெல்ல புன்னகைத்தார். கையில் பேனா எடுத்துக்கொண்டே “மகனே...!” என்றார்.

அவன் “எஸ் பாஸ்!” என்றான்.

“யூ ஆர் அப்பாயிண்ட்டெட்!” என்றார் விஸ்வா.


- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It