Lust காயீன் அடர்ந்த கானகத்தின் ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருந்தான். கடவுள் சொன்னதைக் கேட்காமல் ஆதாம் ஆப்பிளை சாப்பிட்டு தன் நிம்மதியைk குலைத்துவிட்டதாக தோன்றியது காயீனுக்கு. தன் உணர்வுகள் ஏதோ ஒரு மாயையில் மோதி திரும்பி வருவதாக உணர்ந்தான். ஏவாளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளோடு பேசிக்கொண்டிருக்கும்போதும், அவளின் வாசனை தன்னை நெகிழ்த்தும்போதும் பாழ்வெளியில் உணர்வுகள் சிதறி மிதந்து செல்வதைக் காணமுடிந்தது. ஆனால் எந்நேரமும் அவளருகில் இருக்கும் ஆதாமைக் கண்டால் எரிச்சல் வந்தது.

ஆதாமைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். இந்த ஆபேல் ஏவாளை கொஞ்சித் திரிவதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எத்தனையோ முறை ஏவாளிடம் அணுகிப் பார்த்தும், அவள் தன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனப் புரிந்தபோது வழியும் வேதனைகள் வேறொரு கானகத்தின் மூலையில் பிதுங்கி சேகரமாயின. நாள்தோறும் ஆபேலின் புணர்ச்சிக் கதைகள் இவனை தவிப்பிலும், விரக்தியிலும் ஆழ்த்தின. தான் இன்னொரு உலகத்தில் சஞ்சரிப்பதாகவும், இன்பம் என்ற எல்லையைக் கடந்து தானே ஒரு கடவுளாகி விடுவதைப் பார்த்தாகவும் இன்னும் என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தான். அவனது முகம் கர்வத்திலும், நாணத்திலும் சிவந்து ஒளிர்ந்தது.

"உன்னுடைய ஜம்பத்தை இத்துடன் நிறுத்திகொள்" என்று கூறிவிட்டு வேதனைகள் சேகரமாயிருந்த வேறொரு கானகத்தைத் தேடிப் புறப்பட்டான். பல்வேறு உணர்வலைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கிடந்த அவனது மனதைப் பிடுங்கி எடுத்து அந்த கானகத்தின் ஒலிவ மரக்கிளையில் மாட்டியிருந்தான்.

மூன்றாம் ஜாமம் ஆரம்பித்தபோது ஏவாளின் வாசனையை வீசியபடி ஆடிக்கொண்டிருந்தன வெற்றிலைக்கொடிகள். எழுந்து நடக்க ஆரம்பித்து ஆதாமின் கானகத்தை அடைந்த போது ஆதாம் தென்படவில்லை. கடவுளிடம் பேசப் போயிருக்கலாம் என்று நினைத்தான். ஏவாள் ஏனோ தனியாகப் படுத்திருந்தாள். ஏவாளின் முகம் நிலவொளியில் ஜொலித்திருந்தது. அத்திமர இலைகளைக் கோர்த்து அவள் அணிந்திருந்த ஆடை காற்றில் சலசலத்தது. மெல்லிய பயத்துடன் ஏவாளின் அருகில் சென்று அவளின் வாசனையை முகர்ந்தான்.

காற்று வேகமாய் அடிக்க இலைகள் விலகி மறைந்தன. மேலும் நெருங்கி, தானும் கடவுளாக மாறுவதைப் பார்த்துவிட வேண்டுமென்ற சஞ்ஞலத்தில் மெல்லியதாய் ஏவாளின் கண்களில் முத்தமிட்டான். திடுக்கிட்டு விழித்த ஏவாள் காயீனைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். இனி அவள் முகத்தில் விழிக்கக் கூடாதென்றும், தனக்கு எந்த வித அருகதையும் இல்லையென்றும் சொல்லிய ஏவாளின் வார்த்தைகள் அவன் கண்களில் இருந்து நீராய் வழிந்தது. அது அவனுக்கு ஆச்சரியத்தையும் கொடுத்தது.

அந்த முதல் துயரத்தின் பிம்பங்களைத் தாங்கிக்கொண்டு பாம்புகள் சூழ்ந்த வேறொறு கானகத்தை சென்றடைந்தான். நரம்புகளைப் பிய்த்துத் தின்னும் அளவுக்கு தன்னிடத்தில் தோன்றும் உணர்வுகள் எல்லாம் குறிகளாய் மாறி தொங்குவதாய் உணர்ந்தான். சட்டென தனது இடையுரியை அவிழ்த்தான். காற்று வேகமாய் வீசியது. பாம்புகள் மேலும் கீழும் நகர்ந்து மரத்தின் உச்சியைத் தொட முனைந்தன. லேசான மயக்கத்தில் தன்னிலிருந்து இன்னொரு திரவ பிம்பம் வெளியேறி கானகம் எங்கும் சிதறுவதைக் கண்டான். மனசிலிருந்து பாரம் ஓரளவு நீங்கியதை அறிய முடிந்தது. அந்த கானகம் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. நாட்கள் நகர்ந்தன. சீக்கிரத்திலேயே அதிருப்தியும் அடைந்தான். ஆபேல் சொன்ன எந்த இன்பத்தையும் தான் பெறவில்லையென்பது விரைவில் புரிந்து போனது.

ஆதாம் ஒருநாள் தன்னைத் தேடிவந்து நல்ல இறைச்சி ஒன்று கிடைத்துள்ளதாகவும், இரவு வந்து தங்கி உண்ணுமாறும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கினான். ஏவாளை மீண்டும் காணப் போகிறோம் என்று மனம் உற்சாகமடைந்தாலும் அவள் ஏசிய வார்த்தைகளை மறக்கமுடியவில்லை. இரவு ஆதாமின் கானகம் சென்றடைந்த போது ஆதாம் கடவுளிடம் பேசப் போயிருந்தார். இப்போது எல்லாம் ஆதாம் கடவுளிடம் அடிக்கடி பேசப் போய்விடுவதாகத் தோன்றியது. ஏவாள் அவனை அன்புடன் வரவேற்று இறைச்சி தந்து இத்தனை நாள் இருந்த இடம் குறித்து விசாரித்தாள். சிறிது நேரம் கழித்து ஆபேலும் ஏவாளும் அந்த கானகத்தின் அடர்ந்த இருள் பகுதிக்கு செல்வதை காயீன் மறைந்திருந்து பார்த்தான்.

ஆபேலை அவனுக்கு பிடிக்காமல் போய்விட்டது. வன்மம் மனதிற்குள் சூழ்ந்தது. அடுத்த நாள் விடிந்ததும் ஆபேலை "என்னோடு வயலுக்கு வா" என்று அழைத்தான். ஒலிவ மரத்தைச் சுற்றி பரவியிருந்த வயலில் தானியங்கள் முற்றிச் சாய்ந்திருந்தன.

காயீன் மட்டும் வீட்டுக்கு தனியாக திரும்பியபோது தானியங்களிலும், கதிர்களிலுமிருந்து ரத்தம் சொட்டத் தொடங்கியது. அவன் வீட்டைச் சேரும்போது ரத்தம் படிந்த ஒலிவ கிளையைப் பற்றியபடி புறா கடவுளிடம் பேசிக்கொண்டிருந்தது.

- சரவணன்.பெ
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It