man அப்போது எனக்கு முன் இரண்டே இரண்டு வழிகள்தான் மிஞ்சியிருந்தன. கம்யூனிஸ்ட் ஆகி புரட்சியின் மூலம் மனிதகுலத்திற்கு சுபீட்சத்தைக் கொண்டுவருவது, முடியவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வது. இதில் சமரசத்திற்கு இடமே இல்லை. இந்த பூமியின் மேல் அனாதரவாக விடப்பட்டிருக்கிற மனிதனுக்கு அறிவு ஒன்றுதான் துணை; அதுதான் அவனைக் காப்பாற்றப் போகிறது என்பதில் திடமான நம்பிக்கை எனக்கு.

சென்னை நகரில் கடற்கரைக்கு இட்டுச்செல்லும் ஒரு சாலையில் விடுதி ஒன்றில் அப்போது நான் தங்கியிருந்தேன். ஒரு நாள் அந்த மனிதன் என்னோடு அறையைப் பகிர்ந்துகொள்ள வந்து சேர்ந்தான். வட தமிழ்நாட்டில் ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்திலிருந்து வந்து, ஒரு வியாபாரியின் மூலமாக வாழை மண்டி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். பேச்சும், உடைகளை அணியும் விதமும் நகர நாகரீகத்திலிருந்து அவனைப் பிரித்தே காட்டியது. அறையிலிருந்த என்னுடைய புத்தகங்கள், இசை ஆல்பங்கள், டேப்ரிக்கார்டர், மற்ற அலங்காரங்களெல்லாம் அவனை மலைக்கச் செய்தன என்றாலும் என்னுடன் சகஜமாகவே பழகத் தொடங்கினான்.

அவனுடைய தேர்வுகள் எல்லாம் எளிமையாக இருந்தன. எதைக்குறித்தும் அவனுக்கு வருத்தமோ, துக்கமோ தோன்றவில்லை. எப்போதும் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தான். அந்தப் பெரிய நகரத்தை ஒரு குழந்தையைப் போல ஆர்வத்துடன் பார்த்தான். மாலையில் கடற்கரைக்குப் போய் இரவு வெகுநேரம் கழித்துதான் திரும்புவான். விடிந்ததும் மீண்டும் போய்விடுவான். கடலில் எதையோ தேடவே இந்த நகரத்திற்கு வந்தவன்போல இருந்தது அவன் போக்கு. இதுவரை நான் பார்த்திராத, என் கற்பனைக்கப்பாற்பட்ட ஒரு தன்மை அவனிடம் வெளிப்பட்டது. நானும் கிராமத்திலிருந்து வந்தவன்தான் என்றாலும் இவனை இப்படி வடிவமைத்திருக்கும் ஒரு சூழலை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. ஒரு புதிரைப் போல அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.

அவனுடைய கிராமத்தைப் பற்றியும், தாய் தந்தையைப் பற்றியும், சகோதரர்கள் பற்றியும், ஊரில் நடக்கும் விசேஷங்கள் பற்றியும் அவ்வப்போது அவன் சொல்வதுண்டு என்றாலும் இதெல்லாம் மிக சாதாரணத் தகவல்களாகவே எனக்குத் தோன்றின. ஏதோ ஒன்றைப் பற்றிச் சொல்லாமல் நழுவுகிறான் என்பது மட்டும் புரிந்தது.

ஒரு நாள் இரவு தன் மௌனத்தைக் கலைந்து, நம்ப முடியாத இந்தக் கதையை எனக்குச் சொன்னான். நான் தொடர்ச்சியாகச் சொல்லும் இந்தக் கதை, ஒரு கனவை விவரிப்பது போல தெளிவற்றும் முன்பின்னாகவும் அவனால் எனக்குச் சொல்லப் பட்டதுதான். இந்த வினோதம் நடந்தபோது அவனுக்கு ஐந்தாறு வயதுதான் இருக்கும். இரண்டு மலைத்தொடருக்கு மத்தியில் நீண்டு செல்லும் ஒரு நிலப்பகுதியில் ஒரு நதிக்கரையில் அவனுடைய கிராமம் இருந்தது. முன்னொரு காலத்தில் வானவர்கள் இந்தப் பாதை வழியாகவே பூமியைக் கடந்து சென்றார்களாம். எப்போதும் காணாத பெரும் வறட்சி தோன்றி அந்நிலப்பகுதியைச் சருகாக்கிக் கொண்டிருந்த பல மாதங்களுக்குப் பின் ஒரு மதியப் பொழுதில் திடீரென்று வானத்தில் கருமேகங்கள் கூடி பூமியை இருளச் செய்தன. மிருகங்களையும் குழந்தைகளையும் மிரளச் செய்த இடி முழக்கத்திற்குப் பின் பெருமழை ஒன்று பெய்தது.

காற்றின் பெரும் வீச்சில் தலை கலைத்து பேயாடின தென்னை மரங்கள். தொடர்ந்து பெய்த மழையின் தணிவு நேரங்களில் அவனுடைய தந்தை தென்னங்கீற்றுகளைக் கொண்டுவந்து கூரையை பலப்படுத்தினார். வாசலில் வந்து தெறித்து விழுந்த ஆலங்கட்டிகளைச் சகோதரர்கள் இருவரும் ஓடிச் சென்று பொறுக்கி எடுத்தனர். அவனுடைய அம்மா அடுப்பை மூட்டி வேர்க்கடலையை வறுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு முன் கொட்டினாள். நதியில் நீரின் சத்தத்தை மாலையில் அவர்கள் கேட்டார்கள். முன்னிரவையும் தாண்டிப் பெய்த மழை எப்போது நின்றதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அச்சத்துடன் போர்வைக்குள் முடங்கியபடி அவர்கள் உறங்கிப் போயிருந்தார்கள்.

மறுநாள் காலையில் வெளியே வந்தபோது மழை நின்றிருந்தது. மலையிலிருந்து இரைச்சலுடன் ஓடைகள் இறங்கின. நதி பிரவாகமெடுத்திருந்தது. நதியில் அன்று தொடங்கிய நீரோட்டம் இன்றுவரை வற்றவேயில்லை என்று அவன் எனக்குச் சொன்னான். செந்நிறத்தில் ஓடிய நதியின் இரண்டு கரைகளிலும் மனிதர்கள் வந்து நின்று வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஒன்றைக் காண்பதுபோல் கண்டார்கள். மரங்களையும், கிளைகளையும் பெயர்த்துக்கொண்டு வந்தது வெள்ளம். மலைப் பாம்புகள் கரை ஒதுங்கின. மாடுகள் மிதந்து போயின. எங்கிருந்தோ வீடுகளையும் சேர்த்துப் பெயர்த்துக்கொண்டு வந்திருந்தது நதி. உறி பிணைக்கப்பட்டிருந்த வீட்டுதூளம் ஒன்று மிதந்து கரை ஒதுங்கியதை அவன் அப்பா தூக்கி வந்தார். தென்னை மரங்களும், வாழை மரங்களும் குலைகளுடன் பெயர்ந்து வந்தன. இரண்டு மூன்று மனிதர்களையும் அடித்துக் கொண்டு போனதாகச் சொன்னார்கள்.

பிற்பகலில் மெல்ல வடியத் தொடங்கிய வெள்ளத்தை அதன் போக்கில் விட்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள் எல்லோரும். அப்போது கைவிடப்பட்ட ஒரு பழைய பள்ளிக்கூடக் கட்டிடத்தில் யாரோ ஒரு புதியவன் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சிறுவர்கள் செய்தி கொண்டுவந்தனர். நனைந்த ஆடைகளை வெளியே செடிகளின்மேல் உலர்த்திவிட்டு இடுப்பில் கட்டிய சிறு முண்டுடன் அங்கே அவன் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.

அவன் எங்கிருந்து எப்போது வந்து சேர்ந்தான் என்பதைப் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்றாலும் வெள்ளத்தில் நீந்திக் கரையேறி வந்தவன் என்பதான யூகமே எல்லோருக்கும் இருந்தது. இதை உறுதிப்படுத்துவதாக இருந்தன அவனுடைய பளிச்சிடும் தேகமும், குளிர்ந்த கண்களும். தங்களுக்கு அவன் ஒரு அபூர்வ விருந்தினன் என்பதை விரைவிலேயே உணர்ந்தார்கள். இளமையை மீறிய முதிர்ச்சியுடன் தென்பட்டான். அவன் பேசினான் என்றாலும் அது ஒருவருக்குமே விளங்கவில்லை. ஏதோ விலங்குகளின் மொழிபோல இருந்தது அது. சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியாதபொழுது ஒரு பறவையைப் போல அவன் கிறீச்சிட்டான். மற்றபடி சிறுவர்களுக்கும், அவனைப் பார்க்க வந்த ஆண்களும் பெண்களும் அவனுடைய இன்முகத்தையே தரிசித்தனர். உணவு கொண்டு வந்து கொடுத்தனர். களங்கமற்ற குழந்தையினுடையது போன்ற அவன் கண்களைக் கண்டு தாயின் உபசரணையைப் பொழிந்தனர் பெண்கள். வறண்டு கிடந்த பூமிக்கு நீரைக் கொண்டுவந்தவன் என்று நம்பியதால் அவனுடைய வருகை ஒரு அற்புத நிகழ்வாக உணரப்பட்டது.

விழித்தெழுந்ததும் நதியை நோக்கி நடப்பான். காலை சூரியனின் கிரணங்கள் பட்டுத் தெறித்த அவன் தேகம், ஆற்றிலிருந்து கரையில் வந்து குதித்த மீனினுடையது போல மின்னியதைக் கண்டனர். சிலர் அவனுடைய உடலில் மீனின் வாசனை வீசுவதாகக் கூடச் சொன்னார்கள்.

நதியில் நீரோட்டத்திற்கு எதிர்த் திசையில் நீந்திப் போய் அக்கரையை அடைந்து மேற்குதிசை காட்டிற்குப் போவான். பகல் முழுக்கத் திரிந்துவிட்டு மாலையில் மீண்டும் நதியைக் கடந்து நீர் சொட்டக் கரையேறுவான். வரும்போது பழங்களோ, கிழங்குகளோ, மலர்ச்செடிகளோ கொண்டுவருவான். சிறுவர்களுக்குப் பகிர்ந்தளிப்பான். எல்லாப் பருவங்களுக்கும் உரிய பழங்களையும், காய்களையும் கொண்டு வந்ததுதான் அவர்களை வியக்க வைத்தது. நெல்லிக்காய்களும், களாக்காய்களும், சூரைப்பழங்களும் ஒரே பருவத்தில் கிடைத்தன. கார்த்திகை மாசத்தில் கிடைக்கக்கூடிய காட்டு வள்ளிக்கிழங்கு புரட்டாசியிலேயே அவனுக்குக் கிடைத்தது. புற்களும் பூண்டுகளும் மண்டிக்கிடந்த பள்ளிக்கூடத் தோட்டத்தில் அவன் கொண்டுவந்து நட்டு வைத்த ஒரு மலர்ச்செடியில் பூத்த பூக்கள், நீரைப்போல வானத்தின் நிறத்தைப் பிரதிபலித்தன. காலைமுதல் மாலைவரை அவைகளின் நிறம் மாறிக்கொண்டே இருந்தது. ஒவ்வொருவரும் அவனைக் கனவில் கண்டனர்; அவனோடு நதியில் நீந்துவது போலவும், காடுகளில் திரிவது போலவும், தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினன் போலவும். இளம் பெண்களின் கனவுகளில் அவர்களுடன் அவன் படுத்துறங்கினான். வீட்டுப் பெண்களோ பெரும் சீதனத்தைக் கொண்டுவந்திருக்கும் ஒரு சகோதரன் போலவும் அவனைக் கண்டார்கள். குடியானவர்களுக்கு வறண்ட பாறைக் கிணறுகளில் நீரூற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தான்.

சிறுவர்கள் எல்லோருக்கும் அவன் நண்பனாக இருந்தான்; டவுசர் ஜோபிகள் நிறையும் அளவுக்குப் பழங்களைப் பரிசளித்தான். பறவைகளைக் கொண்டுவந்து அவைகளோடு பேசி அவர்களை மகிழ்வித்தான். பொன்வண்டுகளைப் பிடித்துக் கொடுத்தான். காடுகளுக்குக் கூட்டிச்சென்று ஓடைகளைக் காண்பித்தான். குரல் கொடுத்து மிருகங்களை வரவழைத்தான். நதியில் நீந்தப் பழக்கினான். மீன் குஞ்சுகளைப் போல அவனோடு வெகுதூரம் அவர்களும் நீந்திச் சென்றார்கள். பெற்றோர்கள் யாரும் அவனோடு சேர்வது பற்றியும் சுற்றித்திரிவது பற்றியும் கண்டிக்கவேயில்லை என்பதுதான் இன்னும் அவர்களைக் குதூகலப்படுத்தியது.

இப்படிக் கனவிலும், நிஜத்திலுமாக அவர்களோடு வாழ்ந்தான். அவனுடைய வருகையைப் பற்றி வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல், ரகசியமாகத் தங்களுடனேயே அவனை வைத்துக்கொள்ள விரும்பினார்கள். இந்த அற்புதத்தை யாரும் பெயர்த்துக்கொண்டு போய்விடக் கூடாதே என்று கவலைப்பட்டார்கள். இந்த மகிழ்ச்சியையும், செழுமையையும், குதூகலத்தையும் எல்லா காலத்திற்குமாகக் கடத்திப் போக ஆசைப்பட்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு அவனுக்கு ஒரு பெயர் தேவைப்பட்டதை உணர்ந்த அவர்கள், அற்புதப்பெயர் ஒன்றால் அவனை அழைக்க விரும்பினார்கள்; கூடிப் பேசினார்கள். அது தோல்வியிலேயே முடிந்தது. மனிதர்களுக்கோ, தெய்வங்களுக்கோ வழங்கும் எந்தப் பெயரும் அவனுக்குப் பொருந்தவேயில்லை. அந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு தன்மைக்குள் அவனைச் சிறைபடுத்துவது போலவே அவர்களுக்குத் தோன்றியது. நதிகள், மலர்கள், மரங்கள், பறவைகள், மீன்கள்... எதனுடைய பெயரும் அவனுக்குப் பொருந்தவில்லை. இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

அவனுக்குப் பெயரிடும் எண்ணமே வடிந்துபோன சில நாட்களுக்குப் பின் ஓர் இரவு எல்லோருடைய கனவிலும் தோன்றி தன் ரகசியப் பெயரை அவன் சொன்னான்.

“அதுதான் அவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பாகவே அந்தப் பெயரால் அவனை அழைக்க ஒவ்வொரும் அங்கே ஓடினோம். ஆனால் அவன் அங்கே இல்லை; போய்விட்டிருந்தான்.

“நதியில்தான் அவன் நீந்திச் சென்றிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவன் திரும்பி வரவேயில்லை. எங்களை மகிழ்ச்சியான மனிதர்களாக்கிய அந்தப் பெயரை ஒவ்வொருவரும் ரகசியமாகப் பாதுகாத்தோம். தெரிந்தவர்களுக்குள்கூட அதைச் சொல்லிக் கொள்வதில்லை நாங்கள். ஒரு மூலிகைச் செடியின் பெயர்போல பகிர்ந்துகொள்ளப்படாததாலேயே அதன் மகத்துவம் காப்பாற்றப்பட்டு வருவதாக நாங்கள் நம்புகிறோம்’’ என்றான் அந்த இளைஞன்.

“அந்தப் பெயர் தெரிந்துவிட்டால் உலகத்தில் உள்ள மனிதர்கள் யாவரும் மகிழ்ச்சியானவர்களாக மாறிவிடுவார்கள் இல்லையா?’’ என்று கேட்டேன் நான்.

“ஆமாம்’’ என்றான் அவன்.

“நீயும் சொல்லவில்லையென்றால் அந்தப் பெயரை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வது, யாரிடம் போய்க் கேட்பது?’’ என்றேன் உருக்கமான பாவத்துடன்.

“அந்த நதியைக் கேட்டால் சொல்லும். இந்தக் கடலுக்குக் கூட அவன் பெயர் தெரிந்திருக்கலாம்’’ என்று பதிலளித்தான் அவன்.

- ஜீ.முருகன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It