பைக் பரமேஸ்வரன் முன்ன மாதிரி இல்லை. வீடுண்டு வாசல் உண்டு என்று தான் இருக்கிறான். பைக் சத்தம் கேட்டாலே உள்ளே ஒரு பதற்றம் வருவதைத் தடுக்க முடிவதில்லை. பாவம் அவனுக்கு என்னமோ நடக்கிறது. கை மீறிய செயல் அவனை சூழ்ந்திருக்கிறது. சாமி குத்தம் என்கிறது ஒரு கூட்டம். பாவத்தின் சம்பளம் என்கிறது ஒரு கூட்டம். அதெல்லாம் இல்லைங்க.. எல்லாமே தற்செயல் தான் என்கிறது ஒரு கூட்டம். ஆனால் அவன் முக்கோணத்தில் சிக்கிக் கொண்டவன் போல முழித்துக் கொண்டிருக்கிறான். முறுக்கவும் முடியாத முடங்கவும் முடியாத வாழ்வு தான் இந்த இரண்டு வருடங்களில்.

பைக் எடுத்தாலே பறக்கிறவன்... இப்போது மருத்துவமனை போவதற்குக் கூட நண்பர்கள் உதவி தேவைப்படுகிறது.

அவனை நினைத்து அனுதாபப்படும் கூட்டம் இருந்தாலும்... அவனைப் பார்த்தாலே சிரிக்கும் கூட்டமும் இருக்கிறது.

பின்ன சிரிக்காமல் என்ன தான் செய்வார்கள். இந்த இரண்டு வருடங்களில்... சனி அவனைப் போட்டு வாங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும். அல்லது அவன் சனியைக் கேட்டு வாங்குகிறானா... தெரியவில்லை.

படு வேகமாய் வந்தவனை ஏதோ ஒரு வண்டி தட்டி விட்டுப் போக... முதல் முறை பைக்கில் இருந்து விழுந்து அடிபட்டு கால் உடைந்தது. நண்பர்கள் உறவுகள் என்று எல்லாருமே பதறி அடித்து வீடு வந்து பார்த்து ஆறுதல் சொன்னார்கள். பட்ட காலிலே படும்... கெட்ட குடியே கெடும் என்பது போல கால் சரி ஆகி ஒரே மாசத்துல அதே கால்ல மறுபடியும் அடி. ஒரு பைக்காரன் வந்து மோதிட்டான். பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு வந்த நண்பர்கள் தான் அதிகம். என்ன பண்ணி தொலைய. மீம்ஸ் மைண்ட் கெக்கே பிக்கேன்னு தான் மாறிக் கிடக்கு. திரும்பவும் கங்கா ஆஸ்பத்திரில போல்ட் போட்டு வீட்டுக்கு வந்து சரியா நாலு மாசம். காயம் ஆறிக்கிட்டு வர்ற நேரம்... ஒரு ஆட்டோகாரன் கரப்பான் பூச்சி மாதிரி தலைகீழா சறுக்கிட்டு வந்து.... வாசல்ல காத்தாட சேர் போட்டு உக்கார்ந்திருந்த பையன் மேல செராய்ச்சிட்டுப் போய்ட்டான்.

வீட்டில் எல்லாருக்கும் வியர்த்து ஒழுகியது. என்ன நடக்குது என்று யாருக்கும் புரியவில்லை. கையில் அடி பட்டிருந்தாலும்.. அதே காலில் முறிவு.

பெரியவர்கள் எல்லாரும் புத்தி சொன்னார்கள்.

"நான் தான் வண்டி ஓட்றதே இல்லையே...!" என்று சொல்ல சொல்லவே அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. அவனுக்கே குழப்பம் தான். நம்மை சுற்றி என்ன நடக்கிறது.

முட்டிக்கொண்டு வந்த அழுகை குட்டி போட்ட பூனையாக கத்தவே தொடங்கி விட்டது.

ஒரு விஷயம் மட்டும் புரிகிறது. காயம் ஆறி வரும் சமயத்தில் தான் மறுபடியும் விபத்து நடக்கிறது. அது என்ன கணக்கு. வீடும் குழம்பியது. ஊரும் குழம்பியது.

ஏன் இப்பிடி.... என்னதான் ஜாதகத்தில் இருக்கிறது என்று ஜோசியம் பார்த்தாயிற்று. பிராயச்சித்தமாக.. குலசாமி கோயிலுக்கு கெடா வெட்டுவதாக வேண்டியாயிற்று.

வேண்டி செல்லும் ஐந்தாவது முறை இது. முதல் மூன்று முறையுமே... டெம்போ மோதி தலையில் கீறி... லாரி மோதி கால் உடைந்து... மாட்டு வண்டி மோதி முதுகெலும்பு நகர... அடுத்த முறை டிவிஎஸ் மோதி கழுத்தெலும்பு உடைந்து... ஒருவழியாக எல்லாம் சரியாக ஒரு வருடம் ஆகி விட்டது.

அப்படி இப்படி என்று பலத்த முயற்சி கொண்டு இந்த முறை பலத்த பாதுகாப்போடு வந்து... கோயில் சேர்ந்தாயிற்று.

"அதே கால் இனி முறிஞ்சா வெட்டி எடுத்திட வேண்டியது தான்" - மருத்துவர் சொன்னது நினைவுக்கு வர... மரித்தவன் போலவே குலசாமியை பார்த்துக் கொண்டிருந்தான்.

குலசாமியும் குறுகுறுவென பார்த்தது.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உடைந்த கையை கடினப்பட்டு சேர்த்து கும்பிட்டபடி..."சாமி... எனக்கு இப்பிடி ஆகறதுக்கு எல்லாரும் என்னென்னவோ காரணம் சொல்றாங்க. எனக்கென்னவோ நான் பண்ணின தப்பு தான் காரணமா இருக்குமோன்னு தோணுது..." என்று ஒரு திருப்புக்காட்சியை சொன்னான்.

"சரக்கு போட்ட ஒரு நாள் பைக்கை தாறுமாறா ஓட்டி... எதிரே சிறு டெம்போவில் வந்த ஒரு கோயில் கூட்டத்தை கவுத்துட்டு... நின்னு என்ன ஏதுன்னு கூட பாக்காம அங்கிருந்து தப்பிச்சிட்டேன். அந்த வண்டிக்கு என்ன ஆச்சுன்னு கூட தெரியல. தப்பு தான். அந்த தப்பு தான் என்னை தொரத்துதோனு தோணுது. என்னை மன்னிச்சுடு. போதும் சாமி. ரொம்ப பட்டுடேன்... " சற்று இடைவெளியில் யோசித்தவன்.. "மன்னிக்க முடியாதுனா என்ன இங்கயே கொன்னு போட்ரு....இனி என்னால முடியாது... வருசக்கணக்கா தொடர்ந்து கட்டு போட்டுக்கிட்டே கிடைக்கறதுக்கு செத்தே போய்டலாம்.." விசும்பினான். பாவத்தை கண்ணீரால் தழுவியது போல இருந்தது அந்தக் காட்சி.

கண்களில் நீர் வழிய உள்ளம் உருக அவன் வேண்டியது... சாமிக்கு கேட்டுச்சா என்று தெரியவில்லை. ஆனால்... அவனை விரட்டி விரட்டி ஒவ்வொரு முறையும் வேறு வேறு வாகனத்தில் வந்து விபத்தேற்படுத்தி... இன்று அவன் இங்கு வருவான் என்று தெரிந்து... இன்றும் விபத்து ஏற்படுத்த புல்லட்டில் பதுங்கி இருந்த.... அன்றொரு நாள் கவிழ்ந்த டெம்போவின் ஹீரோவுக்குக் கேட்டது.

உடைந்து உடைந்து கட்டு போட்டு கட்டு போட்டு மாவு கட்டாகவே மாறி இருந்த பரமேஸ்வரனைப் பார்க்க பாவமாகக் கூட இருந்தது. போதும்.. ரெண்டு வருசமா ஒருத்தனை வெச்சு செஞ்சது. தப்புக்கான தண்டனை கொடுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்து... பொழைச்சு போ என்று மனம் மாறி ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

என்னவோ திருப்தி. இனி வீடு திரும்பலாம் என்று... மனதில் இருந்த பாரம் இறங்கிய பைக்கான் பரமேஸ்வரன்... நிம்மதியாக நின்று சாலையோரத்தில் கடினப்பட்டு உச்சா போய்க் கொண்டிருந்தான். அதே நேரம் அங்கே கண் முன்னால் பரந்து விரிந்து கிடந்த ஏரியைப் பார்த்து ரசித்தான். நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகான மன அமைதி.

சட்டென சூரிய ஒளியை மேகம் மறைத்து நகர்ந்தது. திக்கென அவனுள் இனம் புரியாத இருள்.

என்ன ஏதென்று யோசிப்பதற்குள்...எங்கிருந்தோ வந்த ஆம்னி வேன்... சாலையோரம் நின்றிருந்த பைக்கானை பட்டும் படாமல் முட்டி சரித்தபடி நகர்ந்தது. ஐயோ அம்மாவென கீழே விழுந்து உருண்டவன்... மிக்சருக்கு அழும் ஒரு சிறுவனைப் போல அழுதான்.

"இதுக்கு முடிவே இல்லையா...?" ஏரியில் எதிரொலித்த அவன் குரல் அழுது கொண்டே சிரிப்பதாகத் தோன்றியது.

ஆம்னி வேன் உள்ளே டிரைவர் சீட்டில் வெறி கொண்டு இருந்தவன் கண்களில் ஒரு சிறு திருப்புக்காட்சி.

ஒரு நாள் படு வேகமாக வீடியோ எடுத்துக் கொண்டே தாறுமாறாக பைக் ஒட்டிய பரமேஸ்வரன் எதிரே வந்த தன் ஆட்டோவை கவிழ்த்து விட்டு சிட்டாகப் பறந்து மறைந்த காட்சி மீண்டும் மீண்டும் கண்களில் தெறித்தது.

கோயிலில்..... குலசாமியின் கண்கள் இன்னும் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தது.

- கவிஜி

Pin It