சிக்கலான பிரச்சனையில் சிக்கிய பின் எதிர்கொண்டு அதனோடு மோதாமல் தப்பி ஓடுவதை கோழைத்தனம் என்று நான் கருதவில்லை; வீரமென்றே நினைக்கிறேன். உருண்டு வருவது பாறை என்று தெரிந்தும் கொம்பு உடைந்து ரத்தம் சொட்ட மோதிப் பார்ப்பது காட்டெருமைக்கு அழகல்ல. அதன் வீரம் சிங்கத்தின் வயிற்றில் இருக்கும் குடலை வெளியெடுப்பதில் இருக்கிறது.

- சிங்கம் பார்க்காத ஒருத்தன்.

man ஜாலாற்றின் கரைகளில் காடு போல வளர்ந்திருக்கும் நாணல் புதர்களுக்கு நடுவே தன் குழந்தை பருவத்தை கழித்தவன் பாபு. ஜாலாறு என்பது வற்றாத பெரிய ஆறு கிடையாது. மழைக் காலத்தில் நுங்கும் நுரையுமாக பெருக்கெடுத்து சிவப்பாய் பீறிடும் ஒரு பெரிய ஓடை. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு முகடாய் இருந்து ஆகாசப் பெருமாள் கோயிலை உச்சியில் கொண்ட ஒரு மலை மீது திரளும் கிழக்கு கருமேகங்கள் பொழியும் பெரு மழை ஆதாரத்தில் ஜாலாறு ஆரம்பிக்கிறது. பிறகு மாதேமங்களம் ஏரியில் அது முடிகிறது. மழைக்காலதில் காட்டுப் பன்றிகளையும் சிலபோது மான்களையும் (இப்பொழுது மான் கிடையாது) அடித்து இழுத்து வந்துவிடும் அந்த ஆறு மழை நாள் தவிர்த்து வருசமெல்லாம் காய்ந்தே கிடக்கும்.

பாபுவின் நான்காம் வயதில் ஒரு முறை ஜாலாற்றில் பெரிய காட்டுப் பன்றி ஒன்று அப்படி மிதந்து வந்திருக்கிறது. பனைமரத்தின் வேரில் ஒதுங்கிய அதை அசுர சுழிப்பில் இழுத்தது காட்டு வெள்ளம். ஆள் தின்னும் வேகத்தில் ஜோவெனப் பெருகி ஓடிய நீரில் குதித்து அதை இழுத்து வந்தவன் பாபுவின் அப்பன்தான். அதை நாணல் புதருக்கு நடுவிலேயே வைத்து பனை ஓலை நெருப்பில் வாட்டி துண்டாக்கி சமைத்து சில குடும்பமாய் ருசித்தார்கள் எல்லோரும்.

ஜாலான்றின் கரை நெடுகிலும் காடு போல் வளர்ந்திருந்த நாணல் புதர் சாராயம் காய்ச்சுவதற்கான உலைக்களமாக இருந்தது. பாபுவின் அப்பன் வேலையும் அப்பனின் அப்பன் வேலையும் சாராயம் காய்ச்சுவதாகவே இருந்தது. அப்பன்கள் சாராயம் காய்ச்ச, அம்மாக்கள் அடுப்பெரிக்க, பிள்ளைகள் சாராய அடுப்பிற்கு அருகே விளையாடிக்கொண்டிருப்பார்கள். இதுதான் ஜாலாற்று நாணல் புதருக்குள் பதுங்குபவர்கள் வாழ்க்கை.

வெறும் உடம்பும் இடுப்புக்கு கீழ் அழுக்கு லுங்கியுமாய் அப்பன் சாராயம் காய்ச்சியதை பாபு விளையாட்டுக்கு நடுநடுவே பார்த்திருக்கிறான். அவன் என்ன காய்ச்சினான் என்பது அன்றைக்கு தெரியாது அவனுக்கு. வீட்டில் அம்மா காய்ச்சுவது போல கூழாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்;கொண்டு பசிக்கிறபோது அது எனக்கு வேணும் என்று அடம்பிடித்து அழுதிருக்கிறான் பாபு. அம்மா கோபமாய் தடுக்க, அப்பன், ‘விடுடி, ஒரு வாய் குடிக்கட்டும் புள்ள’ என்று எக்காளமிட்டு பெரும் போதையோடு சிரித்திருக்கிறான்.

சாராயப் பானையைவிடவும் பெரிய கறுத்த உடம்பு பாபு அப்பனுக்கு. அடுப்பில் வெந்து கருகிப்போன அந்த முரட்டு உடம்பில் திமிரும் ஆங்காரமும் நிறைய உண்டு. சாராயம் காய்ச்சிய நாள் போக ஊரில் இருக்கும் மற்ற நாளில் அந்த ஆங்கார உடம்புக்கு தினவெடுத்து அண்டை அசல் உள்ளுர் வெளியூர் என்று எவர் வந்தாலும் சண்டை செய்து உடம்பில் புழுதி படராமல் சாப்பிட பிடிக்காது பாபு அப்பனுக்கு. சண்டையில் கிழிந்த உடைகள் பாபுவின் அப்பனிடம் ஏராளம் உண்டு.

கட்சிக்காரன்கள் வந்து ‘இன்னைக்கு பந்த்தாம்டா டேய்...’ என்று குரல் கொடுத்தால் பஸ் கண்ணாடி உடைப்பதற்கும், மரம் வெட்டி சாய்ப்பதற்கும் முதல் ஆளாய் நிற்கும் மூர்க்கனாக பாபு அப்பன் இருந்தான். நல்லம்பள்ளி ஹைவேஸில் ஒரு அகன்ற பெரிய புளிய மரத்தை வெற்று ஆளாக கோடாரி இல்லாமல் சாய்க்க பாபு அப்பன் மல்லுக்கட்டியதைப் பார்த்து கட்சிக்காரன்களே பதைபதைத்துப் போனார்கள்.

அன்று அப்பனின் முரடு பாபுவுக்கு சந்தோசமாய் இருந்தது. அப்பன் பயத்தால் பாபுவிடம் எவனும் வலாட்டியது கிடையாது; அவன் நாயாகவே இருந்தாலும் சரி. நல்லம்பள்ளி பள்ளிக்கு படிக்க போனபோது பாபுவிடம் வம்புக்கு வந்த சில பையன்கள் பாபுவின் அப்பன் பேரை கேட்டதும் அரண்டு போய் பேசுவதைக்கூட நிறுத்திக்கொண்டார்கள். சில பையன்களின் அப்பாக்கள் எதற்கு வம்பென்று பள்ளியை மாற்றி பிள்ளையைச் சேர்த்தார்கள்.

நல்லம்பள்ளி வரையிலும் பாபு அப்பனைப் பார்த்து பையன்களின் அப்பன்கள் பயப்படுவதற்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு. பாபு சரியாக படிக்கவில்லை என்று வெறும் வார்த்தையில் மிரட்டிய வாத்தியார்களை வெறும் வாயில் மிரட்டிக்கொண்டிருந்த பாபு அப்பனை ஒருமுறை தகிறியமாகத் தட்டிக் கேட்டார் தலைமை வாத்தியார். தட்டிக் கேட்க வந்த ஒரே காரணத்திற்காக தலைமை வாத்தியாரின் நிமிர்ந்த மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளியவன் பாபு அப்பன்.

அதன் பின் போலீசு பிடித்துக்கொண்டு போய் ஜெயிலில் போட்டு தலைமுடி தவிற உடம்பின் அத்தனை பாகங்களும் வலிக்கும்படி அடித்ததற்கெல்லாம் அச்சப்படவில்லை அப்பன். உண்மையில் பயப்பட்டது அந்த தலைமை வாத்தியார்தான். நெஞ்சில் உதை வாங்கிய பின் ஒரு மாத விடுப்பில் இருந்த தலைமை வாத்தியார், ஜெயிலுக்குப் போனவன் திரும்ப வந்து நெஞ்சில் உதைத்தால் பரவாயில்லை, உயிர்போக வேறு எங்காவது உதைத்தால் என்ன செய்வதென்று பயந்து மறுமாதம் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிப் போய்விட்டார்.

“சாராயம் காய்ச்சறது, குடிக்கிறது, அடிக்கிறது, கட்டிப்பிடிச்சி சண்டையுடறது, மண்டைய ஒடைச்சிகிறது, வருசம் ஒருக்கா கோயிலாட்டம் ஜெயிலுக்கு போவறதுதான் வாழ்க்கைன்னு ஆயிட்ட பெறகு போலீஸ் ஸ்டேசன் நம்ம வீட்டு கூரை மாதிரிதானே... விருந்தாளி வீட்டுக்கு போயிட்டு வந்தவன் தூக்கு போட்டா சாகிறான்? இதுல என்ன அசிங்கம்? போலீஸைப் பாத்து ஓடறதுதான்டா நாண்டுகிட்டு சாகற அளவுக்கு மானங்கெட்ட பொழைப்பு” என்று அப்பன் மான ரோசமிக்க பேச்சு பேசுவான்.

பாபுவின் அப்பன் மட்டுமல்ல விவசாய வேலைக்கு போகப் பிடிக்காத அந்த ஊரின் மற்ற அப்பன்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். அவர்களின் பெண்டாட்டி பிள்ளைகளும் அதற்கு ஆமென்கிறார்கள். ஈன மானத்திற்கு வேறு அர்த்தம் வைத்திருப்பவர்களிடம் யார் வந்து மோதமுடியும். ஆக, அக்கம் பக்கம் யாரும் நெருங்க முடியாத ஒரு காட்டு சிங்கத்தின் காலடியில் வளர்ந்தான் பாபு.

பள்ளிக்கூடத்தில் தனக்கு முன் பெஞ்சில் உட்கார்ந்து நன்றாக படித்துக்கொண்டிருந்த பவானியை பார்க்கும்வரைதான் இந்த அழுக்கு லுங்கி கட்டிய காட்டுச் சிங்கத்தின் காவலுக்காக சந்தோசப்பட்டான் பாபு. அவளைப் பார்த்த பிறகு அவனுக்கு மீசை வளர முயற்சிகள் நடந்துகொண்டிருந்தது. அவன் கண்ணாடி பார்க்க ஆரம்பித்தான். தலை சீவிக்கொண்டான். அப்பனிடம் நல்ல துணி வேண்டும் என்று கேட்டான். அம்மாவிடம் அதை கண்டிப்பாக துவைத்துத் தர வேண்டும் என்றான். எல்லாம் பவானிக்காகத்தான்.

ஆனால், பவானி சரவணனிடம் பேசுவது போல தன்னிடம் பேசாத பெருங்குறை பாபுவுக்கு இருந்தது. பவானியிடம் துக்கத்தோடு இது குறித்து பாபு கேட்டபோது, “நான் காட்டுப் பசங்க கிட்ட பேசறதில்ல. உங்க அப்பா ஜெயிலுக்கு போவாராமே... சாராயம் காய்ச்சுவாராமே! ஒரு வம்புக்காரனாமே.” என்று சொல்லி தள்ளிப் போனாள். அப்பனின் வாழ்க்கை மேல் ஒரு காரசாரமான நியாய தர்க்கம் அவனுக்குள் அப்பொழுது ஏற்பட்டுவிட்டது. ஆக மொத்தத்தில் அப்பன் தப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறான், தறுதலை என்ற தீர்ப்புக்கும் வந்தான் பாபு.

இந்த தீர்ப்புக்கு வந்துவிட்டதால், அவன் ஏதோ அந்த அப்பனாத்தாவுக்கு பிறக்காதவன் போலவும், சொந்த ஊரே தன் ஊர் இல்லை என்பது போலவும், வீடு வேறு எங்கோ அசலூரில் இருப்பது போலவும் பாவித்து வீட்டுக்கு ஒரு நாகரீக விருந்தாளி போல முகம் சுளித்து போய் வர ஆரம்பித்தான்.

ஒரு நல்ல பையனாக, ஒழுக்கமான குடும்பப் பையனாக எப்படி வாழ்வது என்பதற்கு சரவணனை முன்பற்றி அவனைப் போல உடுத்தி அவனைப் போல நடக்க ஆரம்பித்தான். அவனைப் போல மெதுவாக பேசினான். நகம் கடித்தான். கட்டிப்பிடித்து நடுத்தெருவில் சண்டை போடாமல் இருந்தான். திருடாமல் இருந்தான். பொய் பேசாமல் மெய் பேசி மாட்டிக்கொண்டான். அதட்டினால் அழுதான். உட்காரென்றால் உட்கார்ந்தான் எழச்சொல்லும்வரை எழாமல் இருந்தான். சரவணனைப் போல எல்லாம்தான் செய்தான். ஆனால் சரவணன் பத்தாவது பாஸ் செய்தபோது இவன் பெயிலாகிவிட்டான்.

மனசு உடைந்து போகவில்லை பாபு. வீட்டில் இருந்தபடியே படித்து பத்தாவது பாஸாகி காலேஜ் வரையிலும் அப்பன் சாராயம் விற்றுத் தந்த காசிலேயே கற்றுத் தேர்ந்தான். படிப்பும் வெளியுலக அனுபவமும் சேரச் சேர அவன் வீட்டிலிருந்து நாகரீக மனிதனாக விலக ஆரம்பித்தான்.

பிரயோஜனம் என்ன? அவன் மட்டும்தான் நாகரீகப் பிள்ளையாக இருக்கிறான். இன்றைக்கும் அந்த சாராயச் சிங்கம் டீக்கடை முன்பாக தன் முண்டா பனியன் கிழிந்து தொங்க ஏதாவது ஒரு வெளியூர்க்காரனை சுழன்று சுழன்று அடித்தபடி மானத்தை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் அவமானம் அதிகமாகி எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று வெளியூர் வேலைக்குப் போய் நல்லவனாக நாலு காசு சம்பாதித்து தன் காலில் நிற்க ஆசைப்பட்டான்.

அதற்காக தன் ஊர்க்காரன் பரமசிவத்திடம் கெஞ்சி ஒரு வேலை கண்டுபிடித்து ஓசூருக்கு பஸ் ஏறிவிட்டான். வாழ்வின் அளவுக்கு அல்ல, வார்த்தை அளவுக்குக் கூட தன் மேல் ஒரு அசிங்கம் வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்தான்.

ஒசூரில் இருந்து அத்திப்பள்ளிக்கு பெட்டி பெட்டியாக தக்காளி அனுப்பி வியாபாரம் செய்யும் பரமசிவத்தின் அதி முக்கியமான கலெக்டராக பாபு வேலைக்கு சேர்ந்தான். இந்த சீசனுக்கு தக்காளி. சீசன் மாறினால் மாம்பழம், தேங்காய், வேறு காய் என்று பொருள் மாற்றுவான் பரமசிவம். ஆனால் பாபு என்ற கலெக்டரை மாற்ற மாட்டான். பாபு வேலை காசு கலெக்சனுக்கு போவது. பரமசிவத்திடம் வேலைக்கு இருப்பவர்கள் பதினெட்டு ஆட்கள். ஆனால் கலெக்டர் வேலைக்கு மட்டும் பாபுதான். காரணம், அடித்தாலும் ‘ஐயோ’ என்று கத்த ஆரம்பித்து ஒரு கெட்டவார்த்தை பேசி காரியத்தை கெடுக்காமல் பொறுமையாக நின்று மன்னிப்பு கேட்டு காசு வச+லித்து வரும் பொறுமைசாலி பாபு. சாந்த முகத்தோடு பொருத்திருந்து காசு வாங்கி பூமி ஆள்பவன்.

பாபு ஒரு இரண்டாம் உலகத்திற்கு வந்துவிட்டான். உத்தமமான பையன், நல்ல திறமை, வம்பு தும்புக்கு போகாதவன், நாணயமானவன் என்ற பெயர் இரண்டாம் உலகத்தில் இருந்தது பாபுவுக்கு. ‘சகிக்கமுடியாத துர்நாற்றம் பிடித்த ஜந்துக்களால் பெற்றெடுக்கப்பட்ட நான் ஒரு உயர்தர மனிதனாய் உருமாற்றம் அடைந்துவிட்டேன்’ என்று தனக்குத் தானே மெச்சிக்கொள்ளுமளவுக்கு மனத் திருப்தி இருந்தது பாபுவுக்கு.

இப்படி அவன் சம்பாதித்த நல்லபெயர், மற்றும் நாணயத்தின் மேல் அவன் கட்டி வைத்த இரண்டாம் உலகத்துக் கற்கோட்டை கேவலம் ஒரு எட்டணா நாணத்தின் நீயாயத் தீர்ப்பினால் நொறுங்கி விழப்போவது பாபுவுக்கு அப்பொழுது தெரியாது. அந்த நாள் ஒரு விபரீத நாள் என்று புரியாமலே அத்திப்பள்ளிக்கு அன்று வழக்கம் போல ஒரு கலெக்டராக காசு வாங்கப் போனான் பாபு.

“வழியில சூசூவாடியில எறங்கி சம்பங்கி கிட்ட காசு வாங்கிட்டு வந்துடு இன்னைக்கி” என்று பரமசிவம் முதலாளி பாபுவிடம் சொன்னதும் சூட்சுமக் கயிறு ஒன்று பாபுவின் தலைக்கு மேலாக கண்ணுக்குத் தெரியாமல் ஆட ஆரம்பித்தது.

பாபு ஏறிய பேருந்தின் எண் எட்டு. அதன் படிக்கட்டுகள் தான் எட்டாது. ஒரு விரைவுப் பேருந்தை தரம் குறைத்து டவுன் பஸ் ஆக்கியிருந்தார்கள். தனித்து வரும் குள்ளமான பெண்கள், அவர்கள் கல்யாணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, யாராவது இடுப்பு பிடித்து உதவி செய்தால்தான் ஏற முடியும் என்கிற ஸ்திதியில் வண்டி இருந்தது. இருதய சுகமற்ற பிராணிகள் (நோய் வந்துவிட்டால் பேருந்தில் போனாலும் சரி, டாக்டர் உட்பட மனிதர்களை பிராணிகளாகத்தானே மதிக்கிறார்கள்) இந்த பேருந்தில் ஏறுவதை தவிற்பதன் மூலம் கொஞ்சம் மருத்துவ செலவை குறைத்துக்கொள்ளலாம்.

கூட்டமாக இருந்த அந்தப் பேருந்தில் ஏறாமல் பாபு வேறு பேருந்தில் போயிருக்கலாம்; சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் மாயக் கயிறு சூட்சுமமாய் ஆட்டுகிறது. படியில் தொற்றிக்கொண்டான். கலகலத்தப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு உத்ரவாதம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் கிடையாது. எதிரே வரும் லாரி மற்றும் உள்ளே இருக்கும் பேருந்து சாரதிகளிடம் அது இருக்கிறது. போகிற எட்டாம் எண் பேருந்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் கீழே விழப்போகிறான் பாபு.

“படியில தொங்காதீங்க உள்ள ஏறி வாங்க...” என்கிறார் நடத்துனர். எல்லா நடத்துனர்களுக்கும் பேருந்தின் நடுவில் விளையாட்டு மைதானமளவுக்கு இடமிருப்பதாக நினைப்பு. படியில் தொங்கும் எல்லா பயணிகளுக்கும் உள்ளே ஒரு காட்;டுப் புலி கடிக்க காத்திருப்பதாக நினைப்பு.

பிதுங்கி வழியும் விதவித மனிதர்களின் காலை வெயில் துர்நாற்றம், அல்லது மல்லிகை மணம், அல்லது செயற்கை பாட்டில்களின் திரவ வாசம், அல்லது பான்பராக் சிகரெட் வீச்சம், பல் துலக்கா பிரயாணிகளின் செம்பவள வாய் வாசம், குளித்த சோப்பின் புத்துணர்ச்சி நறுமணம், துவைக்காத துணியின் தலை சுற்றும் நாறும் மணம் என்று எல்லாவற்றையும் அனுபவித்து தலைசுற்றி புத்தி பேதலித்துப் போகாமல் சரியான டிக்கெட் கொடுத்து சரியான காசை திருப்பித்தரும் இந்த எட்டாம் எண் பேருந்து நடத்துனருக்கு ஒரு வாழ்க சொல்ல வேண்டும்.

கதை முடிவதற்குள்ளாக அதே நடத்துனருக்கு ஒழிக சொல்லும் சந்தர்ப்பமும் வரத்தான் செய்கிறது. ஆனாலும் வாழ்க சொன்னது வாழ்கதான். நாளைய தரித்திரத்திற்காக இன்றைய சரித்திரத்தை நிராகரிக்கக்கூடாது. தொங்கியபடி இருந்தாலும் பத்து ரூபாய் தாளை விரல் இடுக்கில் வைக்க வசதியாக மடித்து நடத்துனரிடம் எட்டிக் கொடுத்து “ஒரு சூசூவாடி.” என்றான் பாபு. காசு கொடுக்கும்போது பாபுவுக்கு கால் கொஞ்சமாக வழுக்கியது உண்மைதான். பாபு கதை முடிவதற்குள் கீழே விழப்போவதும் உண்மைதான். எதிர்பார்ப்பதுபோல இப்பொழுது பேருந்தில் இருந்து விழமாட்டான். நான் சொல்லும் கதை முடிவதற்குள்ளேயே பாபு கதை முடிந்துபோக பாபுவுக்கு காலம் எழுத நினைத்திருக்கும் சரித்திரம் சின்னது கிடையாது.

சூசூவாடிக்கு மூணு ரூபாய் ஐம்பது காசு டிக்கெட். மூணு ரூபாயில் எந்த பிரச்சினையும் கிடையாது. இந்த ஐம்பது பைசா நாணயத்தினால்தான் பிரச்சனையே வரப்போகிறது.

“ஐம்பது காசு இருந்தா குடுங்க சார்...” என்றார் நடத்துனர்.

தொங்கிக்கொண்டிருந்தாலும் கஷ்டப்பட்டு இருக்கிற எல்லா பாக்கெட்டுகளையும் சலித்துப் பார்த்துவிட்டு “இல்லீங்களே, சார்” என்றான் பாபு.

“சில்லறை இருந்தா மட்டும் ஏறுங்கன்னு சொன்னனே... காதுல விழலையா ஏறி கழுத்தறுக்கறீங்க”

பாபுவுக்கு கோபம் வந்தது. வழக்கமாக இப்படி ஒரு வார்த்தை பாபு அப்பன் கேட்டிருந்தால் கோபமெல்லாம் வந்திருக்காது. நடத்துனருக்குத்தான் எங்காவது ரத்தம் வந்திருக்கும். பாபு அந்த மிராண்டி வாழ்க்கை வெறுத்து வந்தவன். ஆனாலும் கோபம் வரத்தான் செய்கிறது. என்றாலும் பொறுத்துக்கொண்டான்.

இந்த இடத்தில் ஒரு தத்துவ தரிசனத்தை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. வாழ்க்கை எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் இரண்டு சந்தர்ப்பங்களை வைத்திருக்கும். எந்த சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுப்பதும் சத்தியமாய் நம் கையில். சிலவேளையில் சந்தர்ப்பத்தின் பாதைகள் இரண்டிரண்டாய், ஒன்றைத் தொடர்ந்து அடுத்ததாய், கிளை கிளையாகப் பிரிந்தும் போகும். இலக்கு நோக்கி பயணப்படும் நாம் ஒவ்வொரு கிளையிலும் சரியான பாதையை தெரிந்தெடுக்க வேண்டும். நல்ல சந்தர்ப்பத்தை தேர்ந்தெடுப்பவன் நினைத்த இலக்கை அடைகிறான், வெற்றி பெருகிறான். பெண்டாட்டி பிள்ளைகளுக்கு வயிறாற சோறு போட்டு, நகை நட்டு உடை வடை தங்கம் தளவாடமென்று வாங்கிக்கொடுத்து சந்தோசமாய் இருக்கிறான்.

மீண்டும் மீண்டும் தவறான சந்தர்ப்பங்களை தேர்ந்தெடுப்பவன் நொண்டி நடக்கிறான். பரமபத பாம்பு கடிபடுகிறான். முதுகில் புண் சுமக்கிறான். தேய்த்துக் குளிக்க சோப்பை கடன் கேட்கிறான். குடும்பத்தோடு காரில் வந்து நடுத்தெருவில் பொறித்த மீன் தின்பவர்கள் குறித்து பொறாமைப்படுகிறான்.

இத்தனை இழுத்தி நீட்டி தத்துவ தரிசனம் சொல்லவேண்டியதற்கு அவசியம் இருக்கிறது. நடத்துனர் உலகத்து டவுன் பஸ்களில் சில்லறை இல்லாமல் ஏறிக்கொள்ளும் எல்லாரைப்பற்றியும் ஒரு பொது அபிப்ராயத்தை சொன்னார், இல்லையா? இப்பொழுது பாபு அவன் எவனையோ திட்டுகிறான் என்று ஒரு தேர்ந்த புத்தன் போல முகத்தை வைத்துக்கொண்டு சும்மா இருக்கலாம். இது ஒரு சந்தர்ப்பம். அல்லது என்னயா பேசின? என்று கோபப்பட்டு நடத்துனரிடம் சண்டைக்கும் போகலாம். இது இரண்டாவது சந்தர்ப்பம். பாபு நல்லவன்தான். அவன் கனவு கண்ட யோக்கிய வாழ்க்கை;கு முதல் சந்தர்ப்பத்தை தெரிவு செய்வதுதான் உத்தமம். ஆனால் சூட்சுமக் கயிறு பாபுவின் வாயைத் திறந்து வார்தையை பேச வைத்தது. “ஒரு நாள் சில்லறை இல்லாம வந்தா பெரிய தப்பா?”

முன்பே சொன்னதுபோல நடத்துனர் நர மாமிசத்தின் நடுக் கடலில் நின்று தவம் செய்யும் பயித்தியம் பிடிக்காத கடவுள். சிறு பயல் பொறுப்போம் என்று டிக்கெட் தரவும், காசு எடுத்தார துப்பில்ல வாயப் பாரு என்று பேசவும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருந்தது நடத்துனருக்கு. அவர் கோபத்தோடு “சில்லறை இல்லேன்னா மொத எறங்கு” என்றார்.

நகைச்சுவை என்பது பொதுவாக ஓய்வான நேரங்களில்தான் எடுபடும் என்பது எல்லா மன ஆரோக்கியமுள்ளவர்களுக்கும் தெரியும். அப்படி இருக்க பாபு பிசகான நேரத்தில் நகைச்சுவையாக பேசினான். “என்கிட்ட சில்லறை இல்ல, நானும் இறங்கிக்கிறேன். உங்ககிட்ட சில்லறை இல்ல நீங்களும் இறங்கிக்கங்க”

பாபு பத்து பேர் சேர்ந்து முயற்சித்தாலும் சிரிக்காத ரகம். அவன் இப்படி பேச காரணமிருந்தது. தொங்கியபடி இருக்கும் பாபுவின் கண்களுக்கு ஜன்னல் வழியே தெரிந்த குளித்துப் பிரகாசிக்கும் ஒரு பெண்ணின் முகம் நல்லம்பள்ளி பவானியின் சாயலில் தோன்றியது. புற்றுக்குள் இருந்த முதிர்ந்த முட்டைகள் ஈசலின் றெக்கை முளைத்து வருவது பொல பாபுவுக்கு பவானிமேல் இருந்த காதல் ஈசலாக வெளிவரத் துவங்கியது. வாழ்வு ஒருத்தனை குழிக்குள் தள்ள பேருந்தின் நடுவே பெண் வடிவில் சில சாத்தான்களை நிறுத்தும் என்பது பாபுவுக்கு தெரியாது.

“சரி, நான் இறங்கிக்கிறேன். நீ வந்து டிக்கெட் குடு.”

“குடுக்கிறேன் சார். இதுக்கென்ன பெரிய கம்யூட்டர் படிப்பு படிச்சிட்டு வரணுமா?”

“நீ கம்ப்யூட்டர் படிச்சவன்தானே... சரியான சில்லறை கொடுக்கவும்னு பஸ்ஸில எழுதியிருக்கே படிக்கத் தெரியாதா?”

“நான் குடுத்தது சரியான காசுதான். அதுல கவர்னர் கையெழுத்து இருக்கும் பாரு”

“இந்தா கவர்னர் போட்ட கையெழுத்த நீயே பாரு. காசை பிடி. பஸ்சை விட்டு கீழ எறங்கு”

“ஹலோ டிக்கெட் குடுக்கிறது மட்டும்தான் உங்க உத்தியோகம். என்ன இறக்கிவிட உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.”

மேற்படி நாடகபாணி பேச்சை பாபுவும் நடத்துனரும் பேசுகிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். அதற்கு நடுவே, மரத்தடி நிழலில் சொல்லப்பட வேண்டிய, ஓடும் பேருந்தில் சொல்லமுடியாத ஒரு விசயம் இங்கே பாபுவுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது. அவன் பேச்சு மும்முறத்தில் இருப்பதால் அவனிடம் சொல்ல முடியாது. உஷ்ணம், துர்நாற்றம், உழைப்பின் சோர்வோடு இருக்கும்போது மனைவியிடமே எவனாலும் காதல் வார்த்தை பேசமுடியாது. ரத்த சொந்தமானாலும் ஒரு வாய், ஒரு சொல் மதம்பிடித்த யானை போல - இல்லை நாய் போல குரைக்கத்தான் செய்வான் ஒருத்தன். அப்படி இருக்க மனிதப் பெருங்கடலை தினம் நீந்திக் கடக்கும் ஒரு அறிமுகமற்ற டவுன் பஸ் நடத்துனரிடம்; காசு கொடுத்து டிக்கெட் எதிர்பார்க்கலாம். இறங்குமிடத்திற்கு ஒரு இனிய விசில் எதிர்பார்க்கலாம். அன்பு வார்த்தை எதிர்பார்க்கலாமா?

நடத்துனரிடம் சொல்லவும் ஒரு வார்த்தை இருக்கிறது. பயணிகள் மட்டுமென்ன சொர்கத்து குளுகுளு தைலம் பூசி பெருமகிழ்வோடா பேருந்து ஏறுகிறார்கள்? அவர்கள் கல்யாணத்திற்கு போகலாம், கருமாதிக்கும் போகலாம். சாகக்கிடக்கும் மனிதனைப் பார்க்க பதறியபடியும் போகலாம். எப்படி இருந்தால் எனக்கென்ன சாவுக்கு போகிறவனும் சரியான சில்லறையோடு வரவேண்டும் என்று ஒரு நடத்துனர் நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்?

இரண்டு பேருமே மரநிழல் தத்துவம் சொல்கிறதை கேட்கும் நிலையில் இல்லை. அதனால் எதிர்பட்டவர்களிடம் சொல்லிப் புலம்பும் பாக்கியம் எனக்கு. எனக்கு நானே சொல்லிக்கொள்ளவும் ஒரு சங்கதி உண்டு. இரண்டு ஆடு முட்டிக்கொள்ளும்போது நடுவில் தலைகொடுத்து நாட்டாமை செய்தால்... இந்த தக்காளி இல்லை, தக்காளி... அது காலில் போட்டு மிதித்தது போல ஆகிவிடும், ஜாக்கிரதை!

மனிதர்களின் ஆங்காரமும் கோபமும் எத்தனை பெரியதோ அதைவிட பெரியது ஒரு டவுன் பஸ்ஸின் சக்கரங்கள். அது வேகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது. பாபு படியில் தொங்கிக்கொண்டு வருகிறான். கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு கையை உதறினால் பெரிய சக்கரங்கள் அவன் விழுந்ததுமே காவு வாங்கிவிடும். இங்கே பேருந்தின் சக்கரத்திற்கு கூட இரு சந்தர்ப்பங்கள் உண்டு. ஒன்று விழுந்த பாபுவை சட்டினியாக்கி இட்லி கடை முன்பாக போய் நிற்பது. இல்லையென்றால் பையன் மேல் ஏறுவதற்கு ஒரு அங்குலம் முன்பாகவே நின்றுவிடுவது. சக்கரம் என்ன செய்யும் என்பது காலம் சுற்றும் வேகத்தையும் டிரைவர் அடிக்கும் பிரேக்கையும் பொறுத்தது. பார்ப்போம்.

ஆக இப்பொழுதுதான் கதைக்குள் படியில் தொங்கும் சில பயணிகள் வருகிறார்கள். இப்பொழுதாவது வந்தார்களே...! நடத்துனர் ஒரு பையனை இறங்கு என்று சொல்லிவிட்டார். பேருந்தெல்லாம் நீக்கமர நிறைந்திருக்கும் இந்த பயணிகள் இப்பொழுது ஒரு இறுதித் தீர்ப்பு கடவுளைவிடவும் அதி முக்கியமானவர்கள். அவர்கள் யார் பக்கம் பல்டி அடிக்கிறார்களோ அவர்கள்தான் ஜெயித்தவர்கள். இரண்டு குட்டி மிருகங்கள் சண்டையிடும்போது ஒரு ராட்சச மிருகம் எந்த மிருகத்தை காப்பாற்ற நினைக்கிறதோ அதுதான் தப்பிக்கும். இன்னொரு மிருகத்தை ராட்சச மிருகம் கொன்றுபோடும்.

முதல் பயணி வாய் திறந்தான். “ஏம்பா சில்லறை இல்லேன்னா சும்மா வாயேன் எதுக்கு துடுக்கா பேசறே.”

“கண்டக்டரு இங்கென்னா காசா அச்சடிக்கிறாரு. அத்தினி பேருக்கும் சில்லறை கொடுக்க அவரு எங்க போவாரு?” இன்னொருத்தன்.

“பஸ்சுக்கு போறோம்னு தெரியுது... காசு கரெக்டா எடுத்துட்டு வரவேணாமா? மாமியா வீட்டுக்கா போறோம்.” முகம் தெரியாத மறைவில் ஒருத்தன்.

பாபு பேசாமல் இருக்க வேண்டும். ஒரு பெரிய வலுவான காட்டு மிருகம் உறுமுகிறது... வாய் விடக்கூடாது. அதன் பலமும் ஆதரவும் பாபுவுக்கு தேவை.

பாபு தன்னை அறியாமல் பேசினான், “யோவ்... நான் மாமியா ஊட்டுக்கு போறேன் வேற எங்கியோ போறேன். உனக்கென்ன. மூடிகிட்டு வா?”

காட்டு மிருகத்தின் பாதுகாப்பு கை நழுவிப் போயிற்று. ஆளாலுக்கு சத்தம் போட்டார்கள். திமிர் என்றார்கள். பொறுக்கி என்றார்கள். கெட்டக் குடும்பத்து வமிசம் என்றார்கள். பாபு கட்டிவைத்த அந்த நல்ல நாணயமான பெயர் ஒரு நாணயத்தால் சிதிலமாகிவிட்டது.

பெரும் கூச்சலால் பேருந்து நின்றுவிட்டது. தன்னை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் உரிமை நடத்துனருக்கே இல்லை என்று கர்ஜித்த பாபுவை பயணிகள் மொத்தப்பேரும் ‘இறங்குடா, இறங்குடா...டேய்ன்னா... ’என்று அதட்டி மிரட்டி உருட்டியது.

பாபு இறங்கமாட்டேன் என்று ரெண்டு காலிலும் தொங்கினான்.

இறங்காவிட்டால் பஸ் நகராது என்று நடத்துனர் சொல்ல வினாடி கணக்குப் போட்டு வேலைக்கு போகிற பயணிகள் பதறிப்போனார்கள். பவானிபோன்ற தோற்றம் கொண்ட பெண்கூட முகம் சுளித்தாள். பயணிகளே அவனை வழுக்கட்டாயமாக உடைபிடித்து இழுத்து இறக்கி விட்டார்கள்.

பேருந்தின் நடுவழியில் இறக்கிவிடப்படுவது கௌரவப் பிரஜைகளுக்கு அவமானமான விசயம்தான். அதனால் என்ன? பேருந்துதான் கிளம்பிவிட்டதே. யார் காதுக்கும் கேட்காது என்று கெட்டவார்த்தை ஒன்றை திரும்பி நின்று சொல்லிவிட்டு தன் பாட்டுக்கு தன் வேலை உண்டென்று சொல்லி வேறு பேருந்தில் போக பாபுவுக்கு சந்தர்ப்பம் இருந்தது. மாறாக பாபு ஓடிப்போய் பேருந்தில் திரும்பவும் தொற்றிக்கொண்டான்.

படியில் நின்ற பலமான ஒருத்தன் கோபத்தோடு அவன் கையை தட்டிவிட, பேருந்திலிருந்து நழுவிய பாபு ஓடி நடந்து கொஞ்சமாய் சுதாரித்து எப்படியோ பாதுகாப்பாக கீழே விழுந்தான். பாபு கீழே விழுவான் எப்படியும் செத்துப்போவான் என்று எதிர்பார்த்த எனக்கு அவன் சக்கரத்திலிருந்து தப்பித்தது சங்கடமாகப் போயிற்று. உயிர் போவதைவிடவும் மோசமான ஒன்று பாபுவுக்கு எதிர்நோக்கி இருந்தது.

கீழே விழுந்த பாபுவுக்கு பெரிய அடி கிடையாது. முட்டியில்தான் கொஞ்சம் சிராய்ப்பு. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று இப்பொழுதுகூட அவன் பாட்டுக்கு போய்விட சந்தர்ப்பம் இருக்கிறது. இல்லை என்றால் அந்த நடத்துனர் மேல் பொலீசு கேஸ் கொடுக்க இன்னொரு சந்தர்ப்பமும் கூட பாபுவுக்கு இருக்கிறது.

ஆனால் பாபு துரதிர்ஷ்ட வசமாக மூன்றாவதாக ஒரு காரியத்தை செய்தான். ஒரு பெரிய கல் எடுத்து நகர்ந்த பேருந்தின் பின் கண்ணாடியை ஜலீர் என்று உடைத்துவிட்டான். பேருந்து பின்னாலேயே வந்து அவனை அள்ளிப் போட்டுக்கொண்டு போலீசு ஸ்டேசனுக்கு முன்பாக போய் நின்றது எட்டாம் எண்.

கதை இத்துடன் முடிகிறது என்றே நான் கருதுகிறேன். “பேருந்தின் முன் சக்கரம் கழன்று ஓடியது...” என்று யாராவது கதை சொன்னால் அடுத்து என்ன ஆனது என்று அறியும் ஆர்வம் என்னைப்போலவே எல்லோருக்கும் இருக்கும் என்று நான் அறிவேன். அதற்காக பாபுவுக்கு அடுத்து என்ன ஆனது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதை சொல்ல ஆரம்பித்தால் சில விபரீத ரகசியங்களை நான் வாய்தவறி சொன்னாலும் சொல்லிவிடுவேன்.

‘பாபுவுக்கு அடுத்து என்ன ஆச்சின்னு சொன்னாத்தான் சாப்பிடுவேன்’ என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் என்னால் ஒரு யோசனை சொல்ல முடியும். அதை தெரிந்து கொள்ள ஒரு எளிய வழி, ஒரு பேருந்தின் பின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துவிடுவதுதான். கண்ணாடி உடைத்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கு என்ன நடக்குமோ அதுவேதான் பாபுவுக்கும் நடந்திருக்கும்.

பேருந்தின் மேல் கல் எறிய பயப்படுபவர்களுக்கு மட்டும் பின்கதையாக சில:

சிக்கிக்கொண்ட பாபு போலீசு ஸ்டேசன் முன்பாகவே பட்டப் பகலில் பலபேர் முந்நிலையில் தப்பி தன் கிராமத்துக்கே ஓடிவிட்டான். ஊர் வேண்டாம் என்று ஒய்யாரமாய்ப் போனவன் திரும்பி வந்த ரகசியம் அறிந்து ஊரே சிரித்தது என்றாலும் அதிகம் சிரித்தது பாபு அப்பன்தான்.

அதுமட்டுமில்லாமல் பரமசிவம் வந்து காசு திருடிக்கொண்டு வந்துவிட்டதாய் ஊரில் புகார் சொல்லி காசை திருப்பிக்கொண்டு போனான். ஊரிலேயே ஒரே ஒழுக்கமானவன் என்ற பாபுவின் பெயர் அத்தோடு முடிந்தது. இது பெரிய அவமானமாய் இருந்தாலும் இனி தான் வாழுமிடம் இங்குதான் என்று தெரிந்ததும் சுத்தமான இடத்திற்கு ஆசைப்பட்டுப் போய் அசுத்தமாக ஆவதைவிட அசுத்தமான இருக்குமிடத்தை சுத்தப்படுத்துவது நல்லது என்று நினைத்தான் பாபு.

அப்பனுக்கு தான் இதுவரை கற்றுத் தெரிந்த அத்தனை நல்ல வார்த்தைகளையும் சொல்லி ஒழுக்கமான மனிதனாக ஆக்க முயற்சித்தான். குடித்து விழுவதையும், அடித்து விழுவதையும் விடமுடியவில்லை அந்த கிழச் சிங்கத்தால். ஒருநாள் பனைமரத்தில் கள் இறக்க ஏறிய அப்பன் பனைமரத்தில் இருக்கும்போதே அடிமரத்தில் மண்ணென்னை ஊற்றி நெருப்பு வைத்துவிட்டான் பாபு. தடுக்க வந்த அத்தனை பேரையும் கிடைக்கிற கல்கொண்டு அடித்து விரட்டினான். நெருப்பு வைத்த பனைமரத்தில் மாட்டிக்கொண்டு சாகக்கிடந்த பாபு அப்பன் உயிர் பயத்தில் ஓங்கி அழுதான். இனி சாராய அடுப்பை மறந்தால்தான் உயிரோடு இறங்க விடுவேன் என்று பாபு உக்கரமான கோபத்தோடு நின்றான். ஒப்புக்கொண்டு இறங்கிய பாபு அப்பன் அதன்பிறகு சத்தியமாக திருந்திவிட்டான். சாராயம் காய்ச்சுவதை மட்டுமல்ல குடிப்பதையே தன் பாசமான கௌரவமான மகனுக்காக தியாகம் செய்தான்.

சாராயம் காய்ச்சியதால் வருசமானால் ஜெயிலுக்கு போன அந்த நாட்களை அசைபோட்டபடி வயோதிக ஓய்வில் இருந்தான் பாபு அப்பன். அப்பனுக்கு விளையாட்டுப் பொருளாக பாபு பெற்றுத் தந்த பெண் குழந்தை இருந்தது. ஆமாம் பாபுவுக்கு பாபுவின் தோற்றத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே கல்யாணமாகியிருந்தது. இதிலென்ன அதிசயம் கல்யாணமாகித்தானே அநேகருக்கு குழந்தை பிறக்கிறது என்று கேள்வி வரும்.

அதிசயம் இருக்கிறது. பலமுறை பாபு அப்பன் கொயிலுக்கு போவது பொல ஜெயிலுக்கு போயிருக்கிறான் என்றாலும் ஒருமுறை பாபு அப்பன் ஜெயிலுக்கு போன மறுநாளே பாபு அம்மாவும் ஜெயிலுக்கு போனாள். ஜெயிலுக்கு போன பாபு அம்மா ரெண்டு நாளில் திரும்பி வந்துவிட்டாள். பாபு அப்பன்தான் பதிமூன்று மாதம் கழித்து வெளியே வந்தான்.

பாபு அப்பன் வந்தபோது பதிமூன்று மாசம் புருசனில்லாமல் இருந்த பாபு அம்மா நான்கு மாதப் பிள்ளையாக பாபுவை பெற்று வைத்திருந்தாள். பாபுவின் பெண் குழந்தை பாபுவைப்போல இருக்கிறதில்லையா? ஆனால் பாபு அப்பனைப் போலவும் இல்லை அம்மாவைப் போலவும் இல்லை. வமிசத்திலேயே இல்லாத சுருள்முடியோடு பாபு இருப்பதன் ரகசியம் பாபு அம்மா கருத்தரித்த அந்த ஜெயில் கம்பிகளுக்கு மட்டும்தான் தெரியும். அது ஊருக்கும் தெரியும்.

‘கௌரவமாக வாழ நினைக்கும் பாபுவுக்கு இந்த அவமானகரமான விசயம் தெரியாது, பாவம் சொல்லாதீர்கள்’ என்று நான் கதை தெரிந்துகொண்டவர்களிடம் சொல்லமாட்டேன். கள்ளுண்ட வாய் பல கொண்ட ஊர் அது. சண்டை வராத நாளென்று அந்த ஊரில் ஒருநாள் இருந்திருந்தால் ஒருவேளை அது பாபுவுக்குத் தெரியாமல் ரகசியமாகவே இருந்திருக்கும். அப்பனோடு ஒருத்திக்கு இழுபறிச் சண்டை வந்ததால் தன் பிறப்பின் ரகசியத்தை எட்டாம் வயதிலேயே தெரிந்துகொண்டான் பாபு. அப்படி சகதிச் சேற்றில் நின்றிருக்கிறோம் என்று தெரிந்த மனப் புழுக்கத்தோடுதான் தான் கட்டிக்காப்பாற்றும் கௌரவமான கோட்டைக்கு வண்ணமடித்துக் கொண்டிருக்கிறான் பாபு.

‘அழுக்கை தேய்த்து குளிக்கலாம். மச்சத்தை தேய்த்துக் குளிக்க ஏது சோப்பு’
- அழுக்கை மச்சமாய் சுமப்பவன்

- எழில் வரதன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It