முதல் காதல் கொடுத்த தோல்வியில் விரக்தி அடைந்து, விரக்தியின் உச்சத்தில் வெறித்தனமாக போராட, வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராகவன், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள ஆரம்பித்திருந்தான். கிட்டத்தட்ட 7 வருடங்கள் வாழ்க்கையில் வீணாய் கழிந்திருந்தது.

loveproposal மீண்டும் அதே போன்றதொரு சூழ்நிலை, பழைய நியாபகங்களை கிளறிவிடும் விதமாக அந்த பெண் ராகவனை துரத்திக் கொண்டிருந்தாள். காதலிப்பதாக கூறினாள். இரண்டு முறை அறை வாங்கியும் அவளுக்கு உறைக்கவில்லை. அவள் தன் காதலை நிருபிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அன்று ரெஸ்டாரெண்டில் காபி குடித்துக் கொண்டிருந்தான். பாதி காபியை அப்படியே வைத்துவிட்டு எழுந்து ஓட ஆரம்பித்தான். காரணம் சந்தியா சுற்றி வளைத்து மடக்கிவிட்டாள். அவர்களுக்குள் காரசாரமான விவாதம். தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கும் நமக்கு ஒன்றுமே கேட்கவில்லை. உற்றுப் பார்த்தால் சந்தியாவின் கண்களில் இருந்து வழிந்த அந்த சொட்டு கண்ணீர் தெளிவாக தெரிந்தது. சிறிது அருகில் செல்வோம். இருவரும் கிட்டத்தட்ட ஓய்ந்து விட்டார்கள். கடைசி டயலாக்கையாவது கேட்டுவிடுவோம்,

ராகவன் : என்ன காதலிக்கறதுக்கு உருப்படியா ஏதாவது ரெண்டு காரணம் சொல்ல முடியுமா உன்னால?........ ம், உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் காதலிக்கிறது ஒரு ஹாபியா போச்சு.

சந்தியா மூஞ்சூறு பார்ப்பது போல் உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தாள். பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் சந்தியாவைப் பார்க்கப் பிடிக்காமல், திரும்பி நடக்கப் போனான். தாவிச் சென்று அவன் சட்டையை பிடித்து திருப்பி அவன் முகத்தை நேருக்கு நேராக நோக்கி,

சந்தியா : என்ன ரெண்டு காரணம் தெரியணுமா உங்கள காதலிக்கிறதுக்கு? ம், கேட்டுக்கோங்க முதல் காரணம் எனக்குத் தெரியாது. ரெண்டாவது காரணம் எனக்கு சுத்தமா தெரியாது. நான் உங்கள காதலிக்கிறேன் அவ்வளவுதான். போதுமா?

அழுது கொண்டே ஓடி விட்டாள். கோபத்தில் சுருங்கிப் போயிருந்த ராகவனின் முகத்தில் பூ மலர்ந்தது போல் மெதுமெதுவாக புன்னகை மலர்ந்தது.

ராகவன் : (மனதிற்குள்) குழந்தைத்தனத்தை ரசிக்காமல் இருக்க முடியல.

-சூர்யா
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It