நச நசவென்று மழை விடாது பெய்துகொண்டிருந்தது. அடைமழையில்லை, பெருமழையுமில்லை. காற்று வீசவில்லை, இடி இடிக்கவுமில்லை. எந்தவிதமான ஆர்பாட்டமுமில்லாமல் நின்று நிதானமாக அலட்டிக்கொள்ளாமல் கடமை உணர்ச்சியோடு பெய்துகொண்டிருக்கிறது. இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழையினால் எல்லா சாலைகளும் சேறும் சகதியும் குண்டும் குழியுமாகிவிட்டன. வழக்கமான பருவ மழையில்லை, புயலின் பக்கவிளைவாகப் பெய்யும் மழையிது. இந்தப் புயலுக்கு ’மேண்டூஸ்’ என்று பெயர் வேறு சூட்டியிருக்கிறார்கள். திரும்பத் திரும்ப செய்திகளில் மேண்டூஸ் பற்றி எச்சரிக்கைகள் சொன்னபோதிலும் வெளியே வரவேண்டிய வேலைகளுக்கு வந்துதானே தீர வேண்டும். நத்தையைவிட மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது அந்த ஏஸி பஸ். ஏறும்போது கோவையில் மழையில்லை. ‘எத்தனை மணிக்கு திருச்சி போய்ச்சேரும்’ என்று அவன் கேட்டதற்கு ‘நாலரை மணிக்கு’ என்று பதில் சொன்னார் நடத்துநர். இப்போது மணி ஐந்து முப்பது...

“சத்திரம் ஸ்டாப் வந்தா கொஞ்சம் சொல்லுங்க...”

“அடுத்த ஸ்டாப்புதான்...”

அடுத்த ஐந்தாவது நிமிஷம் பஸ் நின்றதும் அவசரமாக அவன் இறங்கினான். அதுவரையில் மெதுவாகப் பெய்துகொண்டிருந்த மழை இப்போது அவன் இறங்கி நடக்கத் தொடங்கினதும் வலுக்க ஆரம்பித்தது. அவசர அவசரமாக ஓடிப் போய் தெருவோரமாக தார்ப்பாய் கட்டியிருந்த ஒரு பெட்டிக்கடையில் தஞ்சம் புகுந்தான். கடையை ஒட்டி கட்டப்பட்டிருந்த தார்ப்பாயின் அடியில், இரவு பலகாரத்திற்காக ஒரு பெண்ணும், மூதாட்டியும் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தனர். கடைக்குள் இருந்த ஸ்டூலில் கால்களை மடக்கி சம்மணம் போட்டு உட்கர்ந்திருந்தான் ஒரு ஆண். அங்கே ஒரு செல்லச்சண்டை நடந்துகொண்டிருந்தது. அவனது கண்கள் சாலையிலும் காதுகள் கடைக்குள்ளும் இருந்தன.

“கல்யாணம் கட்டிகிட்டு வரும்போது ஒரு டம்ப்ளர் காப்பி வெக்கக் கூட தெரியாது இவளுக்கு, எல்லாம் நான் சொல்லிக் கொடுத்தேன். ஆனா, இப்ப வாயைப்பாரு? காது வரைக்கும் கிழியுது!”

“ஆமாம் உன்னக்கட்டிகிட்டு வரும்போது நான் வாயில வெரல் போட்டு சூப்பிகிட்டிருந்தேன், நீதான் வேப்பெண்ணை தடவி நான் வெரல் சூப்பினதை நிப்பாட்ன... மூடீட்டு வியாபாரத்தைப் பாரு.. எனக்கு ஒன்னும் தெர்யாதாம்? இவுருதான் அல்ல்லாம் சொல்லிக் கொடுத்தாராம். அப்ப நீ வந்து டிபன் பண்ணு வா.” என்று சொல்லி சிரித்தாள்.

“இல்லியா பின்ன? அம்மாச்சி! இந்த கூத்தக் கேளு, எங்களுக்கு கல்யாணம் ஆயி ஒரு மாசம் வரைக்கும் பயந்துகிட்டு இவ என் பக்கித்திலயே படுக்க மாட்டான்னுட்டா. அப்பறம் நான் என் ஃப்ரண்ட் குமார்கிட்ட சொல்லி அழுவ, அவன் சம்சாரம்கிட்ட சொல்லி....அது இவளுக்கு புத்திசொல்லி, அதுக்கப்பறந்தான் எங்க ஃபர்ஸ்ட் நைட்டே நடந்துச்சுன்னா பாரேன்....”

“ச்சீ! சன்யன் புடிச்சவனே கடைல ஒக்காந்துட்டு ஒனக்கு என்னா பேசறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?” என்று வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே கீழேயிருந்த ஒரு வெங்காயத்தை எடுத்து கணவன் மீது வீசினாள். அவன் கெக்கேபிக்கேயென்று சிரித்துக்கொண்டு ஒதுங்கிக் கொண்டான்.

இதையெல்லாம் கவனிக்காததுபோல அவன் தெருவைப் பார்த்தபடி நின்றான். எதிரே தெருவில் கீரை, பழங்கள் விற்பவர்கள் கவலை தோய்ந்த முகங்களுடன் தள்ளு வண்டிகளிலுள்ள பொருட்கள் நனையாமலிருக்க மழைக் காகிதங்களுடன் போராடிக் கொண்டிருந்தனர். பழம் விற்கும் ஒரு பாட்டி கையில் குடையுடன் அமர்ந்தபடி கீரைக்காரனை துக்கம் விசாரித்தாள்.

 “இன்னிக்கு வியாபாரம் அவ்ளோதானா? இந்த மழையில எப்டி விப்ப?”

“இன்னா பண்ண சொல்ற? இன்னிக்கு மழைன்னு சொல்லி சரக்கு கொஞ்சமா குடுண்ணு கேட்டா, நாளைக்கு வெய்யிலடிக்கும்போ சரக்கு இல்ல போய்யான்றுவான். விக்கலேண்ணா காலம்பற ஏதாவது ஓட்டலுக்கு வாங்குன வெலைக்காவது தள்ளி உடணும். எழவு பிடிச்ச மழை ரெண்டு நாளா பொழப்பக் கெடுக்குது.”

அலுவலகம் விட்டு வீடு திரும்பும் பெண்கள் அந்த மழையிலும் நனைந்துகொண்டே தள்ளுவண்டிகளில் காய்கறிகள், கீரைக்கட்டுகள் வாங்கி பையில் திணித்துக் கொண்டு போனார்கள். ஆண்கள் சிலர் தெருவோர டீக்கடைகளில் நின்று குளிருக்கு இதமாக டீ குடித்துக்கொண்டும், பெட்டிக்கடை வாசல்களில் நின்று புகைத்துக் கொண்டுமிருந்தனர். பள்ளிப் பையன்களும் பெண்களும், கல்லூரி மாணவ மாணவிகளுமாக புத்தகப்பைகளைச் சுமந்தபடி நனைந்து கொண்டே சாரி சாரியாக, ஓட்டமும் நடையுமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்பாக்கள், பள்ளியிலிருந்து பிள்ளைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வீடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். வேறுசிலர், அவனைப்போல அருகிலுள்ள கடை வாசல்களில் ஒண்டிக்கொண்டும்...... அவன் தனது நண்பருக்கு போன் பண்ணினபோது அவன் நிற்குமிடத்தின் அடையாளம் கேட்டுவிட்டு பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவதாகச் சொன்னார்.

அதற்குள் சூடாக ஒரு தேநீர் குடிக்கலாமென்று எண்ணி அருகிலுள்ள பெரிய பேக்கரியொன்றிற்குச் சென்று அங்கு பாய்லர் முன்னால் நின்றவரிடம் ‘ஒரு டீ’ என்றபோது.. அவர் கண்களால் கல்லாவை நோக்கிக் காண்பித்து ‘டோக்கன்’ என்று சிக்கனமாகச் சொன்னார். அங்கு சென்றபோது கல்லாவில்.... நடுத்தர வயது மனிதர் ஒருவர் தாடியும், மீசையுமாக நெற்றி நிறைய சந்தனமும் குங்குமமும் பூசிக்கொண்டு, கழுத்தில் துளசி மாலையும் காவித்துண்டும் அணிந்துகொண்டு பக்திப் பழமாக நின்று கொண்டிருந்தார். சபரிமலையாக இருக்க வேண்டும். கார்த்திகை சீசனாச்சே. அவருக்கு எதிரே தொப்பலாக நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவியொருத்தி மழையில் நனைந்த கோழிக்குஞ்சுபோல பாவமாக நின்று கொண்டிருந்தாள். அந்தச் சிறுமிக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். மேசையில் கசங்கின இரண்டு மூன்று பத்து ரூபாய்த் தாள்களும், ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களாக நிறைய சில்லரைக் காசுகளும் பரவிக் கிடந்தன. கடைக்காரர் சலிப்போடு சில்லரைகளை எண்ணிவிட்டு

“நூத்தம்பது ரூபாதான் இருக்கு. நேத்திக்கு வந்து நீ கேட்டப்பவே கேக்கு இரநூறு ரூபான்னு சொன்னேன்ல பாப்பா? இன்னம் அம்பது ரூபா வேணும். ஃபுல் அமவ்ன்ட்டும் குடுத்தாதான் ஆர்டர் எடுப்போம். பத்தாத காசை குடுத்துட்டுப் போயிட்டு, நாளைக்கு சாயங்காலம் நீ வந்து வாங்குலேன்னு வெச்சுக்கோ அதை வெச்சுகிட்டு நாங்க இன்னா பன்றது?”

“கையில அவ்ளோதான் காசு இருக்கு நாளைக்கு கேக்கு வாங்கும்போது கண்டிப்பா மீதி பணம் குடுத்திருவேன்“

இடையில் குறுக்கிட்டு ‘ஒரு டீ’ என்று சொல்லிக்கொண்டு இருபது ரூபாய் நோட்டை நீட்டிக்கொண்டே நின்றிருந்த அவனை, அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மேசையில் கிடந்த ரூபாய் தாள்கள் அழுக்காகவும் சுருண்டும் இருந்தன. சில்லரைக்காசுகளும் மண்ணில் புரட்டியதுபோல இருந்தன. மண் உண்டியலை உடைத்து எடுத்துவந்த காசு போலத் தெரிந்தது.

கடைக்குள் பார்வையை ஓட்டினான். ஏராளமான சாமி படங்களும் அதற்கு பெரிய பெரிய மாலைகளுமாக தெய்வீகமாகக் காட்சியளித்தன.

“இல்லேன்னா நூத்தம்பது ரூபாக்கு எவ்ளோ வருமோ அது மாதிரி சின்னதா செஞ்சு குடுங்க போதும்.” என்றாள் சிறுமி.

“இப்ப செய்யறதே சின்னதுதான், பர்த் டே கேக் மினிமம் சைசே எரநூறுதான் நீ வீட்டுக்குப் போயி காசு வாங்கிட்டு வாம்மா...”

“வீட்டுக்கு தூரமாப் போகணும், மழை வேற பேயுது”

அந்தச்சிறுமி அழுதுவிடுவாள்போல இருந்தது. அவனுக்கு மனசு கேட்கவில்லை. இரண்டு சிகரெட் வாங்கும் காசு. தயக்கமாக இருந்தபோதும், என்ன நினைத்துக் கொண்டாலும் சரியென்று முடிவு செய்து....

“சார் இந்தாங்க அம்பது ரூபா.. இதை எடுத்துக்கோங்க” என்று அவன் சொன்னதை கடைக்காரர் காது கொடுத்துக்கூட கேட்கவேயில்லை. அந்தச்சிறுமி மட்டும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து அவசர அவசரமாக அச்சம் கலந்த மிரட்சியுடன் ‘ஐயோ வேண்டாம்...வேண்டாம்’ என்று தலையை வேகமாக ஆட்டினாள்.

கடைக்காரர் அவனை, ‘நீ என்னடா பெரிய மனுசனாக நினைப்பது?’ என்று நினைத்து அலட்சியப் படுத்தினாரோ என்னவோ? என்ன செய்ய, யாரையும் யாரும் நம்ப முடியாதபடி மனிதர்கள் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்.

“செரி, நாளைக்கு சாய்ந்தரம் மீதி அம்பது ரூபா குடுத்துட்டு கேக்கை வாங்கிக்கோ. நாளைக்கு வந்து மீதிப்பணம் கெடைக்கல, ‘எனக்கு கேக் வேண்டாம், பணத்தை திருப்பிக் குடுங்கோ’ன்னு கேட்டா பணம் திருப்பித் தரமாட்டோம் தெரிஞ்சுதா?” என்று சொல்லிவிட்டு பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த இளைஞனிடம் “இந்தாப்பா அந்தப் புள்ளைகிட்ட போன் நெம்பர் வாங்கிட்டு ஒரு சீட்டு எழுதிக் கொடுத்திரு...” என்றார்.

 சொல்லிவிட்டு டீ டோக்கனையும் மீதி ஐந்து ரூபாய் சில்லரையையும் லொட்டென பாட்டில் மூடியின் மீது வைத்ததிலிருந்தே அவனது அக்கறையை கடைக்காரர் துளியும் ரசிக்கவில்லையென்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தேநீருக்கு ‘டோக்கனை’ கொடுத்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது கடையிலிருந்து இறங்கிய அந்தச்சிறுமி மழையில் நனைந்துகொண்டே ஒட்டமும் நடையுமாக அந்தச் சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களின் நடுவே புகுந்து நொடி நேரத்தில் மறைந்து போனாள்.

 *** *** ***

வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தைவிட இன்று சற்று தாமதமானதால் புத்தகப் பையையும் சுமந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள் குட்டி. அடுத்தநாள் வரப்போகும் தம்பியின் ‘பர்த் டேக்’கு ‘கேக்’ வாங்கிக் கொண்டுபோய் அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதை எண்ணி இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும், குதூகலமும் அவளுக்குள் என்னவோ செய்தது. அதே நேரத்தில் மீதி ஐம்பது ரூபாயை அம்மாவிடம் கேட்டால் என்ன சொல்லுவாளோ என்று யோசித்துபோது ‘திக்’ கென்று இருந்தது.

சென்ற வருடம் தம்பியின் பிறந்தநாளன்று அப்பா, வேலை முடிந்து ஆட்டோவை ஓனர் வீட்டில் விட்டுவிட்டு இரவு ஒம்பது மணிக்கு மேல் ‘கேக்’ வாங்கிக் கொண்டு வந்து தம்பியிடம் கொடுத்து ‘வெட்றா மகனே என் சிங்கக்குட்டி’ என்று சொன்னபோது சந்தோஷத்தால் அவன் துள்ளிக் குதித்த காட்சி அவளது நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த வாரத்தில யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அப்பா திடீரென்று ஒருநாள் அவர்கள் எல்லாரையும் தவிக்க விட்டுட்டுப் போயிடுச்சு. ஆறுதல் சொல்வதாக நினைத்துக் கொண்டு ‘வருசம்பூரா ஆட்டோ ஓட்டிகிட்டிருந்தவன், ஏதாவதொரு ஆக்சிடென்ட்ல போயிருந்தாக்கூட குடும்பத்துக்காவது கொஞ்சம் காசு பணம் கெடச்சிருக்கும்’ என்று சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது அந்தப் பிஞ்சு உள்ளம் நொந்துபோனது.

 அவளது அப்பா போன பிறகு குடும்ப வண்டி குடை சாய்ந்து குப்பற விழுந்தது. சொந்தம் என்று சொல்ல அப்பாவைப் பெத்த பாட்டி மட்டும்தான் அவர்களோடு இருந்தாள். அக்கம் பக்கம் இரண்டு நாட்களுக்கு கடையில் சோறு வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தார்கள். சுற்றி இருப்பவர்களும் அவர்களைப் போல அன்றாடம் காய்ச்சிகள்தான். இவர்களைப் போலத்தான் அவர்களும், எல்லாருக்கும் சிரமம். இரண்டு நாட்களாக பல்லில் பச்சைத் தண்ணீர்கூட படாமல் படுத்தே கிடந்த அம்மா, மூன்றாவது நாள் எழுந்து தலைமுடியைதட்டிச் சுற்றி முடிந்து, கட்டியிருந்த பழம் புடவையை உதறிக் கட்டிக்கொண்டு வெளியே போனாள். சாயந்தரம் வந்து பாட்டியிடம் சொன்னபோதுதான் இரண்டு வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்து துணி துவைத்துப் போடும் வேலை கிடைத்திருக்கிறது என்பது தெரிந்தது. அப்பாயிருந்த வரையில் பெரிய வசதி இல்லையென்றாலும் சோத்துக்கில்லாமல் யாரும் வயிறு வாடும் நிலைமை வரவில்லை. ஆனால், அதற்குப் பிறகுதான் கஷ்டம்னா என்னவென்று தெரிந்தது.

பழையதையெல்லாம் யோசனை செய்தபடியே உள்ளே நுழைந்து ஸ்கூல்பேக்கை வைத்துவிட்டு அம்மாவின் பழைய சேலையொன்றை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவளின் காதில் “ஏன்டீ லேட்டு?” என்கிற அம்மாவின் கோபமான குரல்தான் சட்டென அவளது நினைவுகளைத் திருப்பியது. தரையில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு ரேஷன் கோதுமையை சுத்தம் செய்து கொண்டிருந்த அம்மா அவளது பதிலுக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மழை வந்துடுச்சும்மா...அதான்.”

“எங்கயும் ஒதுங்கி நிக்காம தொப்பலா நனஞ்சுகிட்டுத்தான வந்திருக்க? அப்பறம் ஏன் லேட்டு?”

பேக்கரிக்குப் போய் கேக்கிற்கு பணம் அட்வான்ஸ் கொடுத்து வந்ததை இப்போதே சொல்லலாமா? இல்லை சிறிது நேரம்சென்று அம்மாவின் ‘மூடை’ப் பார்த்துவிட்டுச் சொல்லலாமா? என்று யோசித்தபடி நின்றாள் குட்டி. அம்மாவின் கோபம் கொப்பளிக்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“கேக்கற கேள்விக்கு பதில் சொல்லாமல எரும மாடு மாதிரி நின்னா என்னாடி அர்த்தம்?”

“.......................”

தம்பி அக்காவின் முகத்தையும் அம்மாவின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“ஷெல்ப்பிலிருந்த உண்டியல் எங்கடி போச்சு?”

“நாந்தான்ம்மா எடுத்தேன்...’’ சப்தம் கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல இருந்தது.

“எதுக்கு எடுத்த? அதிலிருந்த காசை என்ன பண்ணினே?”

“........................”

“எந்திரிச்சு வந்தன்னா மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துடும், பதில் சொல்லு. அதிலிருந்த காசை எடுத்து என்ன பண்ணின?”

அடி நிச்சயம் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது. சொல்லவும் பயமாக இருந்தது, சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. அதற்குள் மடியிலிருந்த முறத்தை தரையில் வைத்துவிட்டு எழுந்தாள் அம்மா.

“நான் கேட்டுகிட்டே இருக்கேன் பொட்டச்சிக்கு ஒரு நெஞ்சழுத்தம்? பதில் பேசாம நிக்கிறயா?”

இரண்டு கைகளையும் கன்னத்தின் இருபுறமும் மூடிக்கொண்டு “சொல்லிடறம்மா.... சொல்லிடறம்மா” என்றாள்.

“தம்பிக்கு நாளைக்கு பர்த் டே இல்லயா? அதான்ம்மா, உண்டியல்ல நூத்தம்பது ரூபா இருந்துச்சு, அதுல அவனுக்கு ஒரு கேக் வாங்கிக் குடுக்கலாம்னுதான் எடுத்தேன் ம்மா”

மகளின் கன்னத்தில் அடிக்க முடியாமல் அவள் தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டிருந்ததால் அவளது ஜடையைப் பிடித்து குனிய வைத்து முதுகில் ‘மடார் மடார்” என்று அடித்தாள். வலி பொறுக்க முடியாமல் ‘அம்மா...அம்மா..” என்று அழுதுகொண்டே முதுகைத் தேய்க்க கைகளை பின்புறம் கொண்டுபோக முயற்சி செய்தபோது கன்னத்தில் பளாரென்று ஒரு அறையும் விழுந்தது. வலி தாங்க முடியாமல் ஓவென்று அழுதாள் குட்டி. இதையெல்லாம் பார்த்த தம்பி மிரண்டுபோய் செய்வதறியாமல் நடுங்கியபடி சுவரோரம் ஒண்டிக்கொண்டு அழுதான். தனக்காகத்தான் அக்கா அம்மாவிடம் அடி வாங்குகிறாள் என்பதால் அவனுக்கு அழுகை இன்னும் அதிகமாக பீறிட்டுக் கொண்டு வந்தது.

கீழே உட்கார்ந்து அழுது கொண்டிருந்த மகளை கையைப் பிடித்து தூக்கி நிறுத்தி அடக்கமான குரலில் அதே நேரத்தில் அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக கோபமாகப் பேசினாள் அம்மா.

“வீட்டுக்கு தூரமாயிட்டேன் நானு, ‘பேட்’ வாங்கிக்குடுக்க எனக்கு புருஷனா இருக்கான்? காசில்லாம நாலு நாளா பழையதுணியக் கட்டிகிட்டு நடந்து நடந்து வேலைக்குப் போயி ரெண்டு தொடையும் புண்ணாயிக் கெடக்குதடி எனக்கு. அந்த உண்டியல்லிருந்து ஒரு அம்பது ரூபா எடுத்து ‘பேடு’ வாங்க எனக்கு மனசு வரலேடி. நீ யாரையும் கேக்காம உண்டியலை எடுத்து ஒடைச்சு பூராக் காசையும் குடுத்து கேக் வாங்கினேங்கறே?”

அதுவரையில், அது தன்னுடைய சேமிப்புதானே? அந்தப் பணத்தை எடுப்பதில் என்ன தப்பு ? அம்மாவிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை என்றே நினைத்திருந்தாள் அந்தச் சிறுமி. அடி விழுந்தபோதுதான் அது எவ்வளவு தவறான வேலை என்பது அவளுக்கு உறைத்தது.

“மன்னிச்சிடும்மா... போன வருஷம் அப்பா இருந்துச்சு ஞாபகமா தம்பிக்கு ‘கேக்’ வாங்கிட்டு வந்துச்சு. இப்ப யாரிருக்கா அதான்.... தப்புதான் ம்மா...இனிமே உன்னைக் கேக்காம இது மாதிரி செய்ய மாட்டேன்ம்மா..” என்று அழுதுகொண்டே சொன்னாள்.

இதைக் கேட்டவுடன் உடைந்துபோய் ஓவென அழுதுகொண்டு சுவரோடு போய் சாய்ந்து கொண்டாள் அம்மா. பிள்ளைகளிரண்டும் அம்மாவின் மடியில் போய் படுத்துக் கொண்டு அழுதனர்.

ஒரு வார்த்தைகூடப் பேசாமல் எல்லாவற்றையும் கண்ணீர் வழியக் கதவருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த பாட்டி அமைதியாக மீண்டும் திண்ணையில் போய் உட்கார்ந்து விட்டாள். பொதுவாகவே பாட்டி அதிகம் பேசமாட்டாள். மகனின் மரணத்திற்குப் பிறகு பாட்டி வீட்டிலும், வெளியிலும் யாரோடும் கொஞ்சம் கூடப் பேசுவதில்லை. முடிந்த வேலைகளைச் செய்வாள். கொடுப்பதைச் சாப்பிடுவாள். பிறகு வெட்டவெளியை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து விடுவாள். எப்போதாவது மகனை நினைத்துக் கொண்டு அழும்போது ‘பூமிக்கு பாரமா நான் இன்னும் இருக்கனே? என்னைக்கொண்டு போகாம என் புள்ளைய அநியாயமா புடுங்கிட்டுப் போயிட்டானே! பாவி முண்டை நான் உசிரோட இருந்து என்ன சாதிக்கப் போறேன்? அந்தக் கடவுளுக்குக் கண்ணில்லையா?’ என்று சப்தமில்லாமல், வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டு தனியே உட்கார்ந்து புலம்பியழுவாள்.

பிள்ளைகளை எழுப்பிவிட்டு பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். குழம்பு எதுவுமில்லை. மதிய சாப்பாடு மீதி இருந்ததை கொஞ்சம் வெங்காயம் பச்சைமிளகாய் அரிந்து தாளித்து மூன்று தட்டுகளில் போட்டு வைத்தாள். தம்பி திண்ணையிலிருந்த பாட்டியை சாப்பிட அழைத்து வந்தான். மிச்சமிருந்த கொஞ்சம் சோற்றை வடச்சட்டியிலிருந்தே அப்படியே நாலு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு பாத்திரங்களைக் கழுவப் போனாள் அம்மா. கைகள் பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்த போதும், மனம் கடந்தகால நினைவுகளில் துயரத்தோடு இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தது. மகளுக்கு ஆசையாக நந்தினி என்று பெயர் வைத்தபோதும் அவளை ஒரு நாளும் பெயர் சொல்லி அழைத்ததேயில்லை. எப்போதும் ‘குட்டீ...குட்டீம்மாதான்’. அப்படிப்பட்டவள்தான் இன்று இப்படி அடித்து விட்டோமேயென்று வேதனையில் ரகசியமாகக் கண்ணீர் வடித்தாள். சேலை முந்தானையால் கண்களையும் மூக்கையும் சிந்திக்கொண்டே பாத்திரங்களைக் கழுவினாள்.

வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு வருவதற்குள் பாயை விரித்து படுத்திருந்த அக்காவும் தம்பியும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு உறங்கிப் போயிருந்தார்கள். அருகில் வந்து அமர்ந்தவள் குட்டியின் முகத்தைப் பார்த்தாள். குட்டி லேசாக வாயைத் திறந்து கொண்டு வாயில் மூச்சுவிட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள். இடையே ஒரு விசும்பலும் வந்தது. மகளின் இடது கன்னத்தில் அவளது முரட்டு விரல்களின் அடையாளம் அச்சாகப் பதிந்திருந்தது. அதைப் பார்த்த அந்த அம்மா உடைந்து அழத் தொடங்கினாள். சப்தம் கேட்டு பிள்ளைகள் விழித்துக் கொள்ளப் போகிறார்களேயென்று அஞ்சி முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு சப்தம் வெளியே வராமல் ரகசியமாக அழுது கொண்டே வந்து மகளின் தலைமேட்டில் உட்கார்ந்து அவளது தலையை வருடிக் கொடுத்தாள்.

கண்களை மூடி யோசனை செய்தாள். ‘யாரு எந்த ராத்திரில கூப்பிட்டாலும் சவாரி போன மனுசன். ஊரே கொரோனாவுக்கு பயந்துகிட்டிருந்த நேரத்துல கூட ‘கொரோனாக் கேசுன்னு சந்தேகம் வந்தா உங்க வண்டியில ஏத்தாதீங்கன்னு’ அவ சொல்லும்போதெல்லாம், ‘நீ என்ன பொம்பளை? ஈவு எரக்கமில்லாமப் பேசறே? ஆட்டோவில வர்றவன்லாம் பெரிய கோடீஸ்வரனா என்ன? இல்லாதப்பட்டதுகதான் வரும் அவங்களை வண்டீல ஏத்த மாட்டேன்னு சொன்னா அதுக என்ன பண்ணுங்க பாவம்’னு சொல்லிவிடுவான். அந்தக் கஷ்ட காலமெல்லாம் போயி கொஞ்சம் நிம்மதியா இருந்த நேரத்திலதான், எல்லார் மேலயும் இரக்கமும் பாசமும் வெச்சிருந்த அந்த நல்ல மனுசனுக்கு அப்படியொரு சாவு வந்தது. அந்த அன்னைக்கு முதல்நாள் ராத்திரியே ரொம்ப தலையை வலிக்கிறதென்று சொல்லி இரண்டு தலைவலி மாத்திரைகளை ஒன்றாக விழுங்கிவிட்டுப் படுத்தான். இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவன் விடியும் வரையிலும் சரியாகத் தூங்கவேயில்லை.

அடுத்தநாள் விடியற்காலையில் தாங்கமுடியாத அளவுக்கு பயங்கரமாகத் தலை வலிக்கிறதென்று சொல்லி மறுபடியும் ஒரு மாத்திரை சப்பிட்டுவிட்டு படுத்திருந்தவன் திடீரென்று எழுந்து பாத்ரூமுக்குள் ஓடினான். பயங்கரமான சத்தத்தோட வாந்தி எடுத்தான், அவள் ஓடிப்போய் முகம், வாயெல்லாம் கழுவிவிட்டு கூட்டிவந்து படுக்க வைத்துவிட்டு டாக்டரிடம் போகலாமா? என்று கேட்டப்போதுகூட அப்புறம் பாத்துக்கலாமென்று சொல்லி விட்டான். கொஞ்ச நேரத்துல வலிப்பு மாதிரி வந்து கை காலெல்லாம் வெட்டி வெட்டி இழுத்துகிச்சு, கண்ணெல்லாம் நட்டுகிச்சு. எல்லாரும் பதறியடிச்சுட்டு கொண்டு போயி ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. ஆனா, அன்னிக்கு மத்தியானமே ஆஸ்பத்திரியிலிருந்து தூக்கிகிட்டுதான் வந்தாங்க. அவர்களையெல்லாம் அனாதைகளாகத் தவிக்க விட்டுவிட்டுப் போயிடுச்சு. ‘அடிக்கடி தலைவலின்னு சொல்லுவாரா? முன்னாடியே கவனிச்சிருக்கணும், மூளைக்குப் போற ரத்தக்குழாய் வெடிச்சிருச்சுன்னு சொல்லி ஐசீயூவில வெச்சுப் பாத்தாங்க. ஆனா நாலஞ்சு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கல. எங்களால ஆன எல்லா முயற்சியும் பண்ணிப்பார்த்தோம் ஒன்னும் பண்ண முடியலே”ன்னு சொன்னதோட நாற்பதாயிரம் பணம் கட்டீட்டு ‘பாடி’யை எடுத்திட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. எந்த வழியும் தெரியாம கழுத்துல கெடந்த தாலிக் கொடிய கழட்டிக் கொடுத்து அடகுக்கடைல காசு வாங்கிகிட்டு வரச்சொல்லி.... இப்ப நெனச்சாலும் எல்லாம் நம்பமுடியாத கொடுமையான கனவு மாதிரிதான் இருந்தது அவளுக்கு.

 இந்த ஒரு வருசமா எல்லாக் கொடுமைகளையும் கஷ்டங்களையும் பார்த்தாச்சு. பத்தாவது வரைக்கும் படித்திருந்த அவளுக்கு என்ன பெரிய வேலை கிடைத்து விடப்போகிறது? திக்கற்ற பெண்களுக்கு கடைசியில் இருக்கவே இருக்கிறது வீட்டு வேலை. மூனு வீட்டில் வேலை செய்தாலும் மாசம் மொத்தமா ஏழாயிரம்தான் கிடைக்கிறது. அதில் வீட்டு வாடகை கொடுத்து நான்கு உருப்படி சாப்பிடனுமே? விலைவாசி கொஞ்சமாவா விக்குது? இவ்வளவு கோபம் கொண்டு மகளை அடித்தோமே அந்த உண்டியலிலிருக்கும் காசில் பத்துப்பைசாக் கூட தான் கொடுக்கவில்லையே, அதிலிருப்பது முழுவதும் அவங்கப்பா உசுரோட இருந்தப்ப அவளுக்குக் கொடுத்ததுதானே!. சின்னவன், காசு கையில் கிடைத்தால் அடுத்த நிமிசம் கடைக்கு ஓடிடுவான். இந்தக்கிறுக்கி அந்தக் காசில் எதுவும் வாங்கித்திங்க மாட்டாள். அப்படியே அதை உண்டியலில் போட்டு வைப்பாள் என்பதை நினைத்தபோது இன்னும் அதிகமாக அழுகை வந்தது. இரண்டு பிள்ளைகளுக்குப் பாலூட்டிய அந்தத் தாயின் மார்பு கண்ணீரால் நனைந்தது. கணவன் உயிரோடு இருந்த வரையில் அவளுக்கு இதுபோல ஒருபோதும் கோபம் வந்ததில்லை. ஆனால், இப்போதெல்லாம் பற்றாக்குறையும், ஆற்றாமையும் கையாலாகத்தனமும் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவளால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபமாக வெளிப்படுகிறது. உடலும் மனசும் ஒன்றாக சோர்ந்து போய் பிள்ளைகளை அணைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனாள்.

காலையில் எழுந்து பிள்ளைகளுக்கும் மாமியாருக்கும் சுருக்கமாக சமையல் செய்து வைத்துவிட்டு டப்பாவிலிருந்த கொஞ்சம் கோதுமை மாவை உப்பும் மிளகாய்த் தூளும் போட்டு தண்ணீர் ஊற்றிக் கலந்து வைத்துவிட்டு மாமியாரிடம் அவர்கள் மூன்றுபேருக்கும் தோசை ஊற்றிக் கொள்ளும்படி சொல்லிவிட்டு பள்ளிக்கு நேரமாகி விட்டதென பிள்ளைகளை எழுப்பி விட்டு புறப்பட்டுப் போகும்படி சொல்லிவிட்டு வேலைக்கு ஓடினாள்.

 *** *** ***

மேண்டூஸ் புயலின் தாண்டவத்தால் இன்றும் மழை பெய்து கொண்டேயிருந்தது. முதல் நாள் இரவு பழைய நண்பர்களையெல்லம் சந்தித்த சந்தோஷத்தில் வெகுநேரம் கழித்துத்தான் உறங்கச் சென்றான் அவன். காலையில் பத்து மணிக்கு வெய்யில் அடித்தது. அங்கிருந்து புறப்பட்டு நண்பரின் பைக்கில் புள்ளம்பாடி சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மதியம் கல்யாண விருந்தையும் முடித்துக் கொண்டு மீண்டும் பைக்கிலேயே அவன் தங்கியிருந்த சித்ரா லாட்ஜிற்கு திரும்பி வரும்போது மாலை நான்கு மணியாகிவிட்டது. வந்து ஒரு தூக்கம் போட்டான். நல்ல அசதி அந்த அறை வேறு நல்ல இருட்டாக இருந்ததால் நேரம்போனதே தெரியவில்லை அவனுக்கு. திடீரென்று உறக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தபோது மணி ஆறு. ஒரு குளியல் போட்டு உடைமாற்றிக் கொண்டு கலைந்து கிடந்த துணிகள், பாத்ரூமிலிருந்த பேஸ்ட் சோப் எல்லாம் எடுத்து பேகில் வைத்துக்கொண்டு கீழே வந்து அறையைக் காலி செய்யும்போது மணி ஏழு. மதியம் சாப்பிட்டதே எப்படியோ இருந்தது. சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறலாமென்று சுத்தமாகத் தோன்றவில்லை.

நேற்று மாலை வந்திறங்கிய அதே நிறுத்தத்திற்கு வந்து கோவை பஸ்சிற்காக காத்து நின்றான். நேற்று குடித்த தேநீர் நன்றாக இருந்தது. அதே கடைக்குச் சென்றவன் பதினைந்து ரூபாய் சில்லரையைக் கொடுத்து ‘ஒரு டீ’ என்று கேட்டான். கல்லாவில் நேற்றுப்பார்த்த அந்த சிடுமூஞ்சி ‘ஓனர்’ இல்லை. நடமாடும் நகைக்கடை போல கழுத்து கைகளிலெல்லாம் நிறைய நகைகள் அணிந்துகொண்டு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர்தான் உட்கார்ந்திருந்தார். முதலாளியின் மனைவியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நேற்று பத்தாத பணத்தைக் கொடுத்து ‘பர்த் டே கேக்’ ஆர்டர் கொடுத்த அந்தச் சிறுமி மீதி ஐம்பது ரூபாய் கொடுத்து அந்தக்கேக்கை வாங்கியிருக்க வேண்டுமே என்று மனம் தவித்தது. அந்த அம்மாவிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. நேற்று அந்தச் சிறுமிக்கு ரசீது கொடுத்த அதே இளைஞன் அடுத்த மேசையில் உட்கார்ந்து ஏதோ கணக்கெழுதிக் கொண்டிருந்தான். அவனிடம் சென்று கால் கிலோ ‘சால்ட் பிஸ்கட்’ என்று சொல்லிவிட்டு சன்னமான குரலில் “நேற்று மாலை ‘பர்த்டே கேக்’ ஆர்டர் கொடுத்த அந்தப் பொண்ணு வந்து ‘கேக்’கை வாங்கிட்டுப் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“இல்ல சார், பாவம் மீதி அம்பது ரூபா கிடைக்கல போல இருக்கு. நாலு மணிக்கு வந்து வங்கிக்கறேன்னு சொல்லிட்டுப்போச்சு, இப்ப மணி ஏழாச்சு. இனி எங்க வந்து வாங்கப்போகுது?”

“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, கொஞ்சம் அந்த நம்பருக்கு கூப்பிட்டுப் பாக்கறீங்களா? நான் வேணா பணம் குடுத்தர்றேன். அந்தப் பொண்ணை வந்து கேக் வாங்கிக்க சொல்லலாம்”

“மொதலாளிக்குத் தெரிஞ்சாத் திட்டுவாரு சார்!” என்று தயங்கிவிட்டு நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து நம்பர் எடுத்து அழைத்தான்.

அவசரமாக அந்த எண்ணை அழைத்தபோது ‘நீங்கள் டயல் செய்த எண்ணிற்கான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று வாய்ஸ் மெஸேஜ் வந்தது. கேட்டுக் கொண்டிருந்தவன் “அடப் பாவமே, ப்ரீப்பெய்டு நம்பரு... ரீச்சார்ஜ் பண்ணாம கட்டாயிடுச்சு போல” என்று பாவமாகச் சொன்னான்.

கண்ணாடிப் பெட்டிக்குள் அந்த ‘பர்த்டே கேக்’ பரிதாபமாக வாடிக் கிடந்தது.

ரவிச்சந்திரன் அரவிந்தன்

Pin It