அந்த ஊரில் உயரமான இடம் கோயில்தான். கோயிலில் குடியிருந்த கடவுள்கூட கழுத்தளவு தண்ணீரில்தான் நின்று கொண்டிருந்தார். பார்க்குமிடமெல்லாம் தண்ணீர்...தண்ணீர்... அந்த ஊரில் இருந்தவர்கள் எல்லோரும் கரையைத் தேடிப் போய்விட்டார்கள். சொந்தமாக படகு வைத்திருக்கிறவர்களுடைய வீடுகளில் மட்டும் காவலுக்காக ஓர் ஆளை நிறுத்தியிருந்தார்கள். கோயில் மாளிகைப்புரையில் மூன்று அறைகள் இருந்தன. 67 குழந்தைகளும், 356 ஆட்களும் அங்கே தங்கிக்கொண்டார்கள். நாய், பூனை, ஆடு, கோழி முதலான வளர்ப்பு மிருகங்களுக்கும் அங்கேதான் இடம். யாருக்கும் யாரோடும் சண்டையில்லை. வாழ்க்கை ஒற்றுமையாக போய்க்கொண்டிருந்தது.

Dog சன்னான் ஒரு ராத்திரியும் ஒரு பகலும் தண்ணீரில் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் படகு இல்லை. அவனுடைய முதலாளி மூன்னாயி தம்புரான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கரையேறிப் போய்விட்டான். குடிசைக்குள் தண்ணீர் வரத்தொடங்கியதும் பாக்கு மட்டையையும், மூங்கில் கழியையும் வைத்து சன்னான் ஒரு பரண் கட்டிக்கொண்டான். வெள்ளம் சீக்கிரம் வடிந்துபோகும் என்கிற நினைப்பிலேயே சன்னான் குடும்பம் இரண்டு நாட்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தது. நாலைந்து வாழைக்குலையும், வைக்கோல் போரும் குடிசைக்குப் பின்னால் இருந்தன. அவன் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டால் அவற்றையெல்லாம் ஆட்கள் கொண்டுபோய் விடுவார்கள்.

பரண்மீது வெள்ளம் முழங்கால்வரை ஏறிவிட்டது. மேற்கூரையின் இரண்டு வரிசை கீற்றும்கூட தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது. சன்னான் உள்ளே இருந்து குரல் எழுப்பிப் பார்த்தான். யாருக்கும் அவனுடைய குரல் கேட்கவில்லை. கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் அங்கே? அவனை நம்பி அவனுடைய பிள்ளைத்தாச்சி மனைவியும், நான்கு குழந்தைகளும், ஒரு பூனையும், ஒரு நாயும் அவனுடன் இருந்தன. இன்னும் முப்பது நாழிகைக்கெல்லாம் கூரையின் முகட்டை தண்ணீர் தொட்டுவிடுமென்றும், தனக்கும் குடும்பத்திற்கும் கடைசிக்காலம் வந்துவிட்டது என்றும் சன்னானுக்குத் தெரிந்து போயிற்று. பயங்கரமான அந்த மழை பெய்யத் தொடங்கி மூன்று நாட்களாயிற்று. ஒரு முடிவிற்கு வந்த சன்னான் கூரையின் ஒரு பாகத்தை பிய்த்தெறிந்தான். ஓட்டை வழியாக வெளியில் வந்தவன் நான்கு பக்கமும் கண்களை ஓட்டினான். வடக்கே ஒரு கட்டுத்தோணி போய்க்கொண்டிருந்தது. குரலெழுப்பி தோணிக்காரனை சன்னான் அழைத்தான். அவனுடைய குரல் தோணியில் போய்க் கொண்டிருந்தவர்களுக்குக் கேட்டது நல்லதாகப் போயிற்று.

தோணி அவனுடைய குடிசைக்கு நேராகத் திரும்பியது. கூரையின் வாரைகளுக்கிடையே இருந்த இடுக்கின் வழியாக பிள்ளைகளையும், பெண்டாட்டியையும், நாயையும், பூனையையும் ஒவ்வொருவராய் இழுத்து வெளியேற்றினான். தோணி அங்கே வந்ததும் பிள்ளைகளை தோணியில் ஏற்றினான். அப்போது மேற்கேயிருந்து ஒருகுரல் கேட்டது.

"சன்னாண்ணே! இங்கே வாயேன்!"

சன்னான் திரும்பிப் பார்த்தான்.

"இங்கே வாயேன்..."

மடியத்தறை குஞ்சேப்பனின் குரல் அது. அவனும் கூரைமேல் தவிப்போடு நின்றுகொண்டுதான் கூப்பிட்டான். சன்னான் வேகவேகமாக பெண்டாட்டியை தோணியில் ஏற்றினான். தோணியின் அற்றக்கத்தியில் பூனை தொற்றிக்கொண்டது. நாயை மட்டும் யாரும் கவனிக்கவில்லை. நாய் கூரையின் மேற்குச் சரிவில் அங்குமிங்கும் முகர்ந்து பார்த்து நடந்து கொண்டிருந்தது.

தோணி நகர்ந்தது. தூரத்தில் போய்விட்டது. நாய் கூரையின் உச்சிக்கு வந்தபோது சன்னானின் தோணி தூரத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மரணவேதனையுடன் அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. ஆதரவற்ற ஒரு மனிதன் புலம்புவதைப்போல அவனுடைய குரைப்புச் சத்ததில் ஏற்றமும் இறக்கமும் கலந்திருந்தது. அதைக்கேட்க யார் இருக்கிறார்கள் அங்கே? கூரையின் நான்கு சரிவுகளிலும் அந்த நாய் மாறிமாறி ஓடியது. சில இடங்களை முகர்ந்து பார்த்துக் குரைத்தது. சுரசுத்தமாக கத்திக்கொண்டிருந்த ஒரு தவளை நாயின் பதற்றத்தைப் பார்த்து பயந்து போனது. நாயின் முகத்துக்கெதிராக 'திடும்' என்கிற ஓசையுடன் தவளை தண்ணீரில் பாயவும், பயந்துபோன நாய் பின்னோக்கி நகர்ந்து கொண்டது. தண்ணீரில் உண்டான சலனத்தை கொஞ்சநேரம் உற்றுப்பார்த்தபடி அந்த நாய் அங்கேயே நின்று கொண்டிருந்தது.

கொஞ்சநேரம் கழிந்தது. அங்குமிங்குமாக ஓடிஓடி அந்த நாய் குரைக்கத் தொடங்கியது. அந்த ஓட்டம் ஆகாரம் தேடியதால்கூட இருக்கலாம். ஒரு தவளை நாயின் முகத்தில் மூத்திரத்தைப் பீச்சியடித்துவிட்டு தண்ணீரில் தாவிக்குதித்தது. மூத்திர நாற்றத்தை சகிக்காத நாய் செருமியது; தும்மியது; தலையை ஆட்டிக்கொண்டது; முன்னங்கால்களால் முகத்தைத் துடைத்துக்கொண்டது.

மறுபடியும் பேய்மழை பிடித்துக்கொண்டது. அந்த நாய் மழையை சகித்துக்கொண்டு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தது. இதற்கிடையில் நாயின் எஜமானன் கோயில் மண்டபத்திற்குப் போய்ச் சேர்ந்திருந்தான். பகல் கழிந்து இரவு வந்தது. கொடூரமாக வாய்பிளந்த முதலை ஒன்று அந்தக் குடிசையை மெள்ள மெள்ள உரசியபடி நகர்ந்து போனது. பயந்துபோன நாய் காலிடுக்கில் வாலை திணித்துக்கொண்டு முதலையைப் பார்த்துக் குரைத்தது. முதலை நாயை லட்சியம் செய்யாமல் கடந்து போனது.

ஆதரவற்ற அந்த மிருகம் கூரையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டது. கார்மேகங்களால் இருளடைந்து போயிருந்த வானவெளியைப்பார்த்து இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. நாயின் அபயக்குரல் வெகுதூரம் வரை கேட்டது. அவனுடைய குரலைக் கேட்ட வாயுபகவான் பாய்ந்துவந்து சுற்றிச் சுழன்றான். தொலைவில் இருந்த வீடுகளில் காவலுக்காக இருந்தவர்களுக்கு நாயின் குரைச்சல் நிச்சயம் கேட்டிருக்கும். அவர்களுள் இரக்ககுணமுள்ளவர்கள் இருந்திருக்கலாம். "அய்யோ! கூரைமேல் கிடந்து ஒருநாய் குரைத்துக்கொண்டே இருக்கிறது" என்றுகூட அவர்கள் அனுதாபப்பட்டிருக்கலாம்.

அதேநேரம் கடற்கரையில் நாயினுடைய எஜமானன் அவனுடைய இரவுச்சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பாட்டின் முடிவில் வழக்கம்போல நாய்க்காக ஒரு சோற்று உருண்டையை அவன் உருட்டிவைத்தான். ஆனால் அவனுடைய நாய் அந்த கூரையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டு இடைவிடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் குரைப்புச் சத்தம் குறைந்தது. அப்புறம் தாழ்ந்து போனது. அதற்கப்புறம் நின்று போயிற்று. வடக்கே எங்கேயோ ஒரு வீட்டில் காவலுக்கு இருந்தவனின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் உரத்த குரலில் ராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தான். ராமாயணம் கேட்கும் பாவனையில் நாயும் வடக்குத்திசையை நோக்கி அமைதியாக உட்கார்ந்திருந்தது. கொஞ்ச நேரம் தான் அந்த அமைதி. மறுபடியும் தொண்டை பிளந்து போகிறமாதிரி அந்த நாய் குரைக்கத் தொடங்கியது.

அமைதியான அந்த இரவில், இனிமையான குரலில் வாசித்த ராமாயணம் மறுபடியும் அந்த வட்டாரத்தை நிறைக்கத்தொடங்கியது. நம்முடைய நாய் மனிதக்குரலை காது கொடுத்துக் கேட்கிற பாவனையில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தது. அந்த கானம் குளுமையான காற்றைப் போலவே இனிமையாக இருந்திருக்க வேண்டும். காற்றின் ஓசையையும், அலைகளின் சலசலப்பையும் தவிர அங்கே கேட்பதற்கு வேறொன்றும் இல்லை.

கொஞ்சநேரம் கழித்து சன்னானின் நாய் கூரை முகட்டில் ஏறிக்கிடந்தது. அவ்வப்போது பெருமூச்சு விடும் சப்தம் மட்டும் அவனிடமிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. இடையிடையே நிராசையால் அவன் முணுமுணுத்துக் கொண்டான். திடீரென்று ஒரு மீனின் சலசலப்பு. அதைத்தொடர்ந்து அந்த மீன் துள்ளிக்குதித்த ஓசையும் கேட்டது. துள்ளிக் குதித்த நாய் சப்தம்வந்த திசையைப் பார்த்துக் குரைத்தது. இன்னொரு இடத்தில் ஒரு தவளை தாவிக் குதிக்கவும், பயந்துபோன நாய் முனக ஆரம்பித்தது.

பொழுது மெல்ல விடிந்தது. நாயின் குரைப்புச்சத்தம் இப்போது தாழ்ந்து போயிருந்தது. அந்த ஆலாபனம் இதயத்தைத் தொடுவதாக இருந்தது. அருகில் இருந்த தவளைகள் அந்த நாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவை தண்ணீரில் தாவிக் குதிக்கும்போது தெறித்து விழும் நீரலைகளை கண் இமைக்காமல் அந்த நாய் பார்த்துக் கொண்டே நின்றது.

தண்ணீர்ப்பரப்பிற்கு மேல் உயர்ந்து நிற்கும் ஓலைக்குடிசைகளை எல்லாம் அந்த நாய் ஆசையோடு பார்த்தது. எல்லாமே ஆள் அரவமற்ற குடிசைகள். எதிலுமே புகை இல்லை. வெய்யில் ஏற ஏற அவனுடைய உடலை ஈக்கள் கடிக்கத் தொடங்கின. ஈக்கள் அதில் சுகம் கண்டிருக்கவேண்டும். அவன் சளைக்காமல் ஈக்களைப் பிடித்துக் கொறித்துக் கொண்டிருந்தான். கால்களால் தாடையைச்சொறிந்து ஈக்களை ஓட்டினான்.

கொஞ்ச நேரம் போனதும் சூரியனின் சூடு உறைக்கத் தொடங்கியது. இளம் வெய்யில் அந்த நாய்க்கு இதமாக இருந்திருக்கவேண்டும். அவன் மயங்கிக் கிடந்தான். குடிசையின் பக்கத்தில் வாழைமரங்கள் நின்றுகொண்டிருந்தன. வாழை இலைகளின் பிம்பம் தண்ணீரில் அசைவதைப் பார்த்தவன் குதித்தெழுந்து இடைவிடாது குரைத்துக் கொண்டிருந்தான்.

மேகக்கூட்டத்தில் சூரியன் மறைந்தான். ஊரெல்லாம் இருட்டு. காற்று அலைகளைத் தாலாட்டியது. செத்துப்போன பிராணிகளின் சடலங்கள் தண்ணீர்ப்பரப்பில் மெல்ல மெல்ல நகர்ந்து போய்க்கொண்டிருந்தன. கடல் ஓதம் அவைகளை வேகமாக இழுத்துக் கொண்டுபோனது. எங்கு பார்த்தாலும் சடலங்கள். தொடர்ச்சியாக போய்க்கொண்டிருந்த சடலங்களை அந்த நாய் ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது ஒரு முனகல் மட்டும் அதனிடமிருந்து கேட்டது. சற்று தொலைவில் ஒரு சிறிய படகு போவதை நாய் பார்த்ததும் எழுந்துநின்று வாலாட்டியது. படகு அதன்போக்கில் போய் ஒரு மரக்கூட்டத்தில் மறைந்து போனது. நாய் அந்த படகு போன திசையையே பார்த்துக் கொண்டு வெகுநேரம் நின்றது.

மறுபடியும் மழை. முன்னங்கால்களை கூரையில் ஊன்றிக்கொண்டு பின்கால்களில் அவன் உட்கார்ந்திருந்தான். நான்கு திசைகளிலும் பார்வையை சுழலவிட்ட நாயின் கண்களில் பரிதாபம் கொப்புளித்தது. பார்ப்பவரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் சோகம் அதன் கண்களில் தெரிந்தது. மழை மேலும் வலுத்தது. வடக்கேயிருந்த வீட்டிலிருந்து ஒரு படகு புறப்பட்டு தென்னை மரத்தடியில் போய்நின்றது. நம்முடைய நாய் அந்தப் படகைப் பார்த்து வாலாட்டி ஊளையிட்டது. படகுக்காரன் தென்னை மரத்தின்மேலேறி இளநீர்க்குலையை வெட்டிக்கீழே கொண்டு வந்தான். படகில் உட்கார்ந்தபடியே இளநீரை பொத்துக் குடித்தான். துடுப்பை வளித்து வேறு திசையில் போய்விட்டான்.

கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் காகம் ஒன்று உட்கார்ந்திருந்தது. அது பறந்துவந்து அழுகிப்போன மாட்டின் சடலத்தின்மீது உட்கார்ந்தது. சன்னானின் நாய் ஆசையோடு குரைத்ததை லட்சியம் செய்யாத காகம், மாட்டு மாமிசத்தை கொத்தியிழுத்துத் தின்றது. திருப்தியானதும் அந்தக்காகம் பறந்துபோய்விட்டது.

குடிசைக்குப் பக்கத்தில் இருந்த வாழை மரத்தில் ஒரு பச்சைக்கிளி பறந்துவந்து உட்கார்ந்து ஊஞ்சலாடியது. நாய் அதைப் பார்த்துக் குரைத்ததும் பச்சைக்கிளி பறந்து போய்விட்டது. ஒரு எறும்புப்புற்று மழைநீரில் புரண்டு வந்து கூரையை மோதி நின்றது. எறும்புகள் தப்பித்து கூரைமேல் ஏறியதை நாய் பார்த்துக் கொண்டிருந்தது. சாப்பிடக் கிடைத்த சந்தோஷத்தில் எறும்புப் புற்றுக்கு முத்தம் கொடுத்த நாயின் மூக்கு சிவந்து தடித்துப் போனது. தும்மத் தொடங்கிய நாய் கொஞ்சநேரம் துடித்துப் போனது.

உச்சிவேளையில் ஒரு சிறிய படகில் இரண்டு பேர் அந்தக் குடிசையை நோக்கி வந்தார்கள். அந்தப் படகைப் பார்த்து நாய் வாலாட்டியது. நன்றியோடு குரைத்தது. மனிதரைப் போலவே என்னென்னவோ பேசியது. தண்ணீருக்குள் இறங்கி படகுக்குள் தாவத் தயாரானது.

"டேய்! ஒரு நாய் நிற்குதுடா!" ஒருவன் சொன்னான்.

சொன்னவனுக்கு நன்றி சொல்லுகிறார்ப்போல் நாய் வாலாட்டிக் குரைத்தது.

"அங்கேயே இரு!" அடுத்தவன் சொன்னான்.

நாய் ஏதோ சொல்லுவதைப்போல் சப்புக்கொட்டி சப்தமிட்டது.; கும்பிட்டது; இரண்டுமுறை தாவவும் தயாராகி நின்றது. அதற்குள் அந்தப்படகு தூரத்தில் போய்விட்டது. மறுபடியும் நாய் குரைத்தது. படகில் இருந்த ஒருவன் திரும்பிப் பார்த்தான்.

"அய்யோ!"

படகுக்காரனின் குரல் அல்ல அது! நாய் எழுப்பிய குரல்தான் அது! இதயத்தைப் பிளக்கும் அந்த நைந்துபோன குரல் காற்றோடு கலந்துபோனது. அலைகளின் அயராத சப்தம் மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. அதற்கப்புறம் யாரும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப்படகு மறையும்வரை நின்றநிலையிலேயே நாய் நின்றுகொண்டிருந்தது. இந்த உலகத்துடன் விடைபெற்றுக்கொள்கிற பாவனையில் ஏதேதோ முனகிக்கொண்டு இங்குமங்குமாக ஏறி இறங்கியது. இனிமேல் இந்த மனிதர்கள்மேல் அன்பு வைக்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்குமோ என்னவோ?

பச்சைத் தண்ணீரை நக்கிக்குடித்துவிட்டு ஆகாயத்தில் பறந்து போய்க்கொண்டிருந்த பறவைகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய். அலைகளில் அங்குமிங்கும் நீந்திப் போய்க்கொண்டிருந்த ஒரு தண்ணீர்ப்பாம்பு நாயை நோக்கி வேகமாக நீந்தி வரத் தொடங்கியது. பயந்துபோன நாய் கூரை முகட்டில் ஏறிக்கொண்டது. சன்னான் குடும்பத்துடன் வெளியேறுவதற்காக பிய்த்தெறிந்த கூரையிடுக்கின் வழியாக அந்தப் பாம்பு குடிசைக்குள் போனது. நாயும் அந்தத் துளை வழியாக உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதுபோல எட்டிப் பார்த்தது. பாம்பு வீட்டிற்குள் போனதில் நாய்க்கு சம்மதமில்லை போலும்! நாய் குரைக்கத் தொடங்கியது. கொஞ்சசேரம் குரைத்ததற்குப்பிறகு நாய் ஊளையிடத் தொடங்கியது. அந்தக் குரலில் நாயின் பசி தெரிந்தது; உயிர்மேல் இருந்த ஆசை தெரிந்தது; எந்த மொழிக்காரனுக்கும் புரிந்துபோகும் சப்தம் அது. செவ்வாய்கிரகத்தில் இருந்து வருகிறவனுக்குக்கூட புரிந்துபோகும் மொழி அது.

பகல்போய் இரவு வந்தது. பயங்கரமான பேய்மழையும், காற்றும் ஆரவாரத்தை தொடங்கின. அலையடித்ததினால் மேற்கூரை மெல்ல மெல்ல ஆடத்தொடங்கியது. இரண்டுமுறை நாயும் உருண்டு கீழே வீழ்ந்து எழுந்தது. ஒரு நீண்ட தலை தண்ணீருக்குள்ளிருந்து மேலே எழுந்தது. அது ஒரு முதலையின் தலை. அதைப் பார்த்துவிட்ட நாய் உயிரைப் பிடித்துக்கொண்டு குரைக்கத் தொடங்கியது.

கொஞ்சநேரத்தில் கோழிக்கூட்டத்தின் சப்தம் அருகில் நெருங்கிவருவது நாய்க்குக் கேட்டது. கூடவே மனிதர்களின் சப்தம்.

"நாய் குரைக்கிற சப்தம் கேட்குதுடா! இங்கேயிருந்த ஆள் இன்னும் போகவில்லை போலிருக்கிறது."
அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த படகில் வைக்கோல், தேங்காய், வாழைத்தார் எல்லாம் ஏற்றியிருந்தது. சன்னானின் வாழைமரத்திற்குப் பக்கமாக அந்தப்படகு போனது. நாய் படகுக்காரர்களுக்கு எதிராக திரும்பிக்கொண்டது. வாலை தூக்கிக் கொண்டு குரைக்கத் தொடங்கியது. அந்தக் குரைச்சலில் கோபம் கொப்புளித்தது. தண்ணீருக்குப் பக்கத்தில்போய் குரைத்தது. படகில் இருந்தவர்களில் ஒருவன் வாழைமரத்தின்மீது ஏறினான்.

"மாப்ளே! நாய் தாவும்போலத் தெரியுதுடா!"

நாய் முன்புறமாக ஒரு முறை தாவியது. வாழைமரத்தின் மீது ஏறியவன் பிடியை விட்டு விட்டு தண்ணீரில் உருண்டு விழுந்தான். மற்றொருவன் அவனைப் பிடித்து படகில் ஏற்றிவிட்டான். அதே சமயம் தண்ணீரில் விழுந்த நாயும் நீந்திக்கூரைமேல் ஏறிக்கொண்டது. உடம்பை வளைத்து கோபத்துடன் குரைக்கத் தொடங்கியது. திருடர்கள் எல்லா வாழைக்குலைகளையும் வெட்டி படகில் ஏற்றிக்கொண்டார்கள்.

"உனக்கு இருக்குடா... இரு வாரேன்."

தொண்டைகிழிய குரைத்துக்கொண்டிருந்த நாயிடம் ஒருவன் சொன்னான். அதற்கப்புறம் எல்லா வைக்கோலையும் படகில் ஏற்றிக்கொண்டார்கள். எல்லாம் முடிந்தபிறகு ஒருவன் கூரைமேல் ஏறினான். நாய் அவனுடைய காலை பாய்ந்து கடித்தது. ஒருவாய் நிறைய சதையை பிடுங்கியெடுத்தது அந்த நாய். "அய்யோ" என்று அலறிக்கொண்டு அவன் படகில் ஏறிக்கொண்டான். படகில் நின்றுகொண்டிருந்தவன் கையில் இருந்த துடுப்பினால் நாயின் வயிற்றில் ஓரடி கொடுத்தான்.

"மியாவ்....மியாவ்..." நாயின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் ஒரு முனகலாக முடிவடைந்தது. நாயால் கடிபட்டவன் படகில் கிடந்து அலறிக்கொண்டிருந்தான்.

"டேய்...சத்தம் போடாதேடா...யாராவது..." என்று அவனை மற்றொருவன் அடக்கினான். அப்புறம் அந்தப்படகு அங்கிருந்து போய்விட்டது. அந்தப் படகு போன திசையைப்பார்த்து அந்த நாய் ரொம்பநேரம் கோபத்துடன் குரைத்துக் கொண்டிருந்தது. நடு ராத்திரி நேரமிருக்கலாம். ஒரு பெரிய பசுவின் சடலம் ஆற்றில் மிதந்துவந்து கூரையில் மோதிநின்றது. கூரை முகட்டில் நின்றுகொண்டிருந்த நாய் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. கீழே இறங்கிவரவில்லை. அதே நேரத்தில் பசுவின் சடலம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் நாய்க்கு பரபரப்பு. ஓலையை காலால் பிறாண்டியது. வாலாட்டியது. எட்டிப் பிடிக்கமுடியாத தூரத்தில் பசுவின் சடலம் இருந்ததால் நாய் மெதுவாக கூரைமுகட்டில் இருந்து கீழே இறங்கி வந்தது. பசுவின் சடலத்தை மேல்நோக்கி இழுத்து வாய்நிறைய இறைச்சியை கடிக்கத் தொடங்கியது. அந்த நாயின் கடுமையான பசிக்கு அந்த ஆகாரம் போதுமானதாக இருந்தது.

சடாரென்ற ஒரு சப்தத்தைத் தொடர்ந்து பசுமாட்டின் சடலம் தண்ணீருக்குள் இறங்கியது. பயந்துபோன நாய் மீண்டும் கூரைமேல் ஏறிக்கொண்டது. பசுவின் சடலம் மெள்ள மெள்ள ஆற்றோடு போய்க்கொண்டிருந்தது. அதற்கப்புறம் கொடுங்காற்றின் சப்தமும், தவளைகளின் இரைச்சலும், அலைகளின் சலசலப்பும் மட்டுமே அங்கே கேட்டுக்கொண்டிருந்தன. சுற்றுவட்டாரத்தை பேரமைதி நிறைத்திருந்தது. நாயின் நிலையை நினைத்து பரிதாபப்பட்ட பக்கத்துவீட்டுக்காரனுக்கு அதற்கப்புறம் நாய் குரைக்கும் சப்தம் கேட்கவேயில்லை. அழுகிச் சிதைந்துபோன சடலங்கள் தண்ணீர்ப்பரப்பில் ஆங்காங்கே மிதந்து போய்க்கொண்டிருந்தன. சில சடலங்களின் மீது காக்கைகள் உட்கார்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தன. காகங்களை விரட்டியடிக்கும் எந்த சப்தமும் அங்கே இல்லை. திருடர்களுக்கும் அவர்களின் திருட்டுத்தனத்திற்கும் அங்கே எந்தத் தடையும் இல்லை. எல்லாம் சூன்யம்.

கொஞ்சநேரம் கழிந்ததும் அந்தக் குடிசை இடிந்து வெள்ளத்தில் மூழ்கிப்போனது. பார்க்குமிடமெல்லாம் தண்ணீராகிப் போனது. தண்ணீருக்குமேல் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் போனது. சாகும்வரைக்கும் சன்னானின் வீட்டை அந்த நன்றியுள்ள மிருகம் காவல்காத்து நின்றது. சன்னானுக்கு உதவி செய்வதற்காகவென்றே அந்தக் குடிசை அவ்வளவு நேரமும்... அந்த நாயை முதலை பிடிக்கும் வரையிலும்.. .தண்ணீரில் நின்றுகொண்டிருந்தது. இப்போது அந்தக்குடிசை முழுவதுமாக தண்ணீருக்குள் முழுகிப்போய்விட்டது.

வெள்ளம் வடியத் தொடங்கியது. சன்னான் நாயைத்தேடி குடிசை இருந்த இடத்திற்கு நீந்தி வந்தான். ஒரு தென்னை மரத்தினடியில், நாயின் சடலம் நீருக்கடியில் தங்கிப் போயிருந்தது. நாயின் சடலத்தின்மீது அலைகள் படர்ந்துகொண்டிருந்தன.

கால் பெருவிரலால் சன்னான் அந்த நாயை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்தான். அவனுடைய நாயாக இருக்குமோ என்பதில் சந்தேகம் இருந்தது. ஒரு காது இல்லாமலிருந்தது. தோல் அழுகிப்போயிருந்தது. இப்போது அந்த சடலத்தில் அவனுடைய நாயின் நிறம்கூட இல்லாமல் போயிருந்தது.

- மு.குருமூர்த்தி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It