ரெண்டாம் பிள்ளை ஊருக்கு வருகிறான் என்று தபால் வந்ததுமே விசாலாட்சி ஒரு பெரிய ஏணி வைத்து வீட்டின் கூரையில் ஏறி நின்றுகொண்டாள். பார்த்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். “யேய், விசாலாச்சி...! எதுக்கு இந்த வயசில அத்தனை ஒசரமா ஏறி நிக்கிறவளாம்?” என்று பதறினார்கள். கம்பெடுத்து நடக்காத குறையாக உடல் தளர்ந்து, தலையெல்லாம் நரைத்து ஒரு கொய்யாப்பழம் அளவுக்கு கொண்டை போட்டிருக்கும் விசாலாச்சி போன வாரம்தான் பக்கத்து ஊர் தருமாஸ்பத்திரிக்குப் போய் இரண்டு சொத்தைப் பல்லை பிடிங்கிக்கொண்டு வந்திருக்கிறாள். வயது ஐம்பதைத் தாண்டுகிறது. இந்த வயதில் விசாலாச்சிக்கு பல்லிலும் பலம் கிடையாது; உடம்பிலும் தெம்பு கிடையாது. ஆனாலும் பலமற்ற தொடை நடுங்க கூரைமீது ஏறி நின்றாள்.

கூரை ஏறி பதுங்குவதற்கு ரெண்டாம் பிள்ளை ஒன்றும் அஞ்செட்டி காட்டிலிருந்து தப்பி வந்த கரடியோ, காசு கேட்டு வரும் கந்து வட்டிக்காரனோ இல்லை. விசாலாட்சியின் சொந்த மகன்தான். விசாலாட்சிக்கும் கடன் வாங்குமளவுக்கு தரித்திரம் இல்லை. முறம் சோளத்திற்கு காசில்லாமல் வெத்தலை வியாபாரியிடம் கையேந்தி நின்றதெல்லாம் அந்தக்காலம். இப்பொழுது ரெண்டாம் பிள்ளை பெரிய உத்தியோகத்தில் கை நிறைய சம்பாதிக்கிறான். கார் வீடு என்று சொந்தத்தில் வைத்துக்கொண்டு மோட்டார் வண்டிகள் பேய் போல ஓடும் பெரிய டவுனில் இருக்கிறான். மாசா மாசம் வேண்டிய அளவுக்கு பணம் அனுப்பி வைக்கிறான்.

ஆண்டுக் கணக்கில் வராத தன் மகன் இப்பொழுதுதான், ‘ஒரு வாரம் அங்கே வந்து இருக்கேன்.’ என்று மனசு வந்து எழுதியிருக்கிறான். அதைவிட தன் பேரன் வருகிறான் என்றதும்தான் அவளுக்கு தலைகால் புரியாமல் பித்தேறிவிட்டது. பித்தேறியதால்தான் தன் தொடை பலம் அறியாமல் கூரை மேல் ஏறிக்கொண்டாள். கூரையெல்லாம் பொத்தலாக இருக்கிறது. பேரனும் மருமகளும் வசதியாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் சவுகர்யமாக இருக்க வேண்டுமே! எத்தனை ஆத்திரப்பட்டாலும் ஒரு வாரத்தில் ஒரு கூரை வீட்டை இடித்துவிட்டு மாடி வீடு கட்ட முடியாது என்று கூரையின் ஓட்டைக்கு ஒட்டுப் போட்டாள்.

இந்த இற்றுப்போன வீட்டின் யோக்கியதைக்கு வெயில் அடித்தால் வீட்டுக்குள்தான் அடிக்கிறது. மழை பெய்தால் வீட்டுக்குள்தான் பெய்கிறது. காற்றடித்தாலும் பனி பெய்தாலும் எல்லாம் வீட்டுக்குள்தான். வீட்டின் மேல் கூரை என்ற பெயரில் இருக்கும் மக்கிப்போன வைக்கோல் கூலங்களில் ஒரே மரவட்டை மயமாக இருக்கிறது. மழை பெய்தால் காளான் முளைக்கிறது. சுவரெல்லாம் மழைத் தாரையில் கரைந்துபோய் பாசி பிடித்து ஒரே பச்சை வீடாய் இருக்கிறது. போததென்று பெருச்சாளி வேறு வங்கு வங்காக சுவற்றை நோண்டி வைத்திருக்கிறது. தரையெல்லாம் பெயர்ந்து ஒரே கட்டுத்தறியாக இருக்கிறது கூரையை சரிசெய்ய ஆள்காரனுக்கு மேல் ஆள்காரனாக சொல்லி அனுப்பியாயிற்று. இதோ அதோ என்று போக்கு காட்டுகிறவர்கள் வரும் பாட்டைக் காணோம். “நாயைக் கூப்பிடற நேரம் நாமே அள்ளலாம்...” என்று வராத ங்கொப்புரான்களை திட்டியபடி அவளே தென்னை ஓலையும் வைக்கோலும்
எடுத்துப்போட்டு வேலையை ஆரம்பித்துவிட்டாள்.

பயத்தில் சிலுப்பிக்கொண்ட பூனை முடிபோல ஏறுக்கு மாறாய் வைக்கோல் போர்த்தும் விசாலாட்சியை பயத்தோடு பார்த்தான் பரமன். அவள் மட்டும் கீழே விழுந்தால் விழுந்த இடத்தில் மண்தோண்டி புதைக்க வேண்டியதுதான். இந்த வயசில வேணாம் விசாலாச்சி என்று அவன் சொன்னதும் சண்டைக்கு வந்துவிட்டாள். “வர்றது உனக்கும் மவன்தானே... நீயெல்லாம் ஆம்பளை தானே. நீ ஏறி இதை சரி பண்ணக் கூடாதா?”

பரமன் ஆம்பளைதான், ஆம்பளை என்பதால் வருவதும் அவன் பையன்தான் அதற்காக இந்த வயசில் கிறுக்குத்தனமாய் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ள வயசு வேண்டாமா? கூரைமேல் இருக்கும் விசாலாச்சியே பேச்சு கொடுப்பதால்தான் பொண்டாட்டி என்று தெரிகிறது. இல்லையென்றாள் பக்கத்துவீட்டில் இருக்கும் தன் மாமன் மகள் காளியம்மாக் கிழவி என்று நினைத்துக்கொண்டு ‘இறங்கிடியோவ்... எஞ்சமைஞ்ச பொண்ணே...!’என்று வம்புக்கிழுத்திருப்பான். இப்படி அரைக்கண் மங்கிப்போன காலத்தில் எந்தக் கூரையில் ஏறி எந்தத் தரையில் விழுவது? ஏற ஆசைப்பட்டாலும் ஏணியில் ஏற்றிவிட ஒரு ஆள், ஏற்றிய ஆளை கெட்டியாக விழாமல் பிடித்துக்கொள்ள ரெண்டு ஆள் என்று மொத்தம் மூன்று ஆள் இருந்தால்தான் பரமனால் கூரைமீது உட்கார்ந்து வேலை செய்ய முடியும். ஒரு ஆளே வராத ஊரில் மூணு ஆளுக்கு எங்கே போவது?

வீடு இந்த கதி என்றால் வீட்டுக்குள் மத்ததும் அதே கதிதான். படுக்க நல்ல பாய் கிடையாது. போர்த்திக்கொள்ள நல்ல போர்வை கிடையாது. சாப்பிட ஒழுக்கமான பாத்திரம் கிடையாது. சாய்ந்து உட்காரும் சுவரெல்லாம் எண்ணை பிசுக்கு. தரையெல்லாம் புழுதி. வரும் பையனை எங்கே உட்காரவைத்து சாப்பாடு போடுவது?

சரி வெளியே காற்றாட உட்கார வைக்கலாமென்றால் கயிற்றுக் கட்டில் செத்து ரெண்டு வருசம் ஆகிறது. தேங்காய் நார்ப்பிறி அறுந்து தொங்கிவிட்டது. கட்டிலில் உட்கார நினைத்தாலும் கட்டிலுக்கு நடுவே தரையில்தான் உட்காரவேண்டும். சரிசெய்ய அதற்கும் ஆள் சொல்லியாயிற்று அவனும் வரவில்லை. சாகிற காலத்தில் சகலத்திற்கும் அலைகிறாள் விசாலாச்சி. பரமன் மனசு கேட்காமல் கேட்டுவிட்டான், “என்ன விசாலாச்சி, கலெக்டரா வரான்? இந்த பற பறக்கிறே... பையன்தானே ஒண்ணும் நெனைக்க மாட்டான் விடு”

“கலெக்டர் வந்தாலும் கரிச்சட்டிய கமுத்துப் போட்டு, இதான் எங்க வீட்டுல இருக்கு உக்காருன்னு சொல்லிப்புடுவேன்... வரது எம் மகன்யா. அவன் சவுகரியமா இருக்கணும்... ஆமாம்” என்கிறாள் விசாலாச்சி.

டவுனில் இருக்கும் தன் மகன் வீட்டை நினைத்தால் கண்கள் விரியும் விசாலாச்சிக்கு. “எத்தன பளபளப்பா இருக்கு தரை. எவ்ளோ பெரிய பெரிய ஜன்னல், எத்தன ஒசரமான கதவு. செவுரெல்லாம் கழுவி வெச்ச பித்தளை அண்டா மாதிரி பளிச்சினு இருக்கு. மருமக எத்தனை சுத்தமா வெச்சிருக்கா வீட்ட. கண்ணாடியாட்டம் இருக்கே யம்மாடியோவ்... அப்படி ஒரு வீடு கட்டி எம் மவன் பொழைப்பான்னு நான் கனவுலையும் கண்டதில்லை.” என்பாள் விசாலாச்சி.

பரமனுக்கும் அதே ஆச்சர்யம்தான். மகன் ஊருக்குப் போனால் ஒரு நாளுக்கு மேல் அந்த வீட்டில் பரமனால் இருக்க முடிந்ததில்லை. மறுநாளே ‘நம்ம வீட்டுக்கு போவம் விசாலாச்சி...’ என்று குடைச்சல் கொடுக்க ஆரம்பிப்பான் மனுசன்.

“இதும் உன் வீடுதான்யா? இங்கயே இரேன்” என்று விசாலாச்சி சமாதானம் செய்வாள். ஆனாலும் தலையாட்டி மறுப்பான் பரமன். “இல்ல விசாலாச்சி, எதோ ஆபிசரு வீட்டுல தங்கியிருக்க மாதிரி எனக்கு பதபதப்பா இருக்கு.”

சொன்னது போல பதட்டமாய்தான் இருப்பான். தொட்டால் அழுக்காகி விடுமோ என்று பயந்து வீட்டில் உல்ல எந்தப் பொருளையும் தொடாமலே இருப்பான். தரை அழுக்காகிவிடுமோ என்று குதிங்காலிலேயே நடப்பான். அத்தனை சுத்தமான போர்வையை போர்த்திக்கொண்டு மெத்தென்ற மெத்தையில் படுத்தால் தூக்கமே வரவில்லை என்று விடியற்காலையில் புலம்புவான். நிற்க, படுக்க, நடக்க, தூங்க என்று எதிலும் பெரும் அவஸ்தைப்படுவான்.

தன் புருசனின் நொனநொனப்பு தாங்காமல் விசாலாச்சியும் கிளம்பிவிடுவாள். துணிமணி, தின்பண்டம் என்று ஏகப்பட்ட பொருட்களை பையில் திணித்து கொடுத்து கை நிறைய காசும் கொடுத்து வழியனுப்பி வைப்பான் ரெண்டாம் பிள்ளை. வருகிற வழியெல்லாம் பேரனின் நினைப்பாகவே இருக்கும். அந்த சின்ன கை, பட்டு உதடு... அது ஒரு சிவப்பு பொம்மை. “பேரனை விட்டுட்டு நான் போயி அங்க கிடந்து என்னத்தை சாதிக்கப்போறேன்...” என்று வரும் வழியெல்லாம் இமைகளுக்குள் அழுதபடி வீட்டுக்குத் திரும்புவாள்.

“இங்க வந்து சவுகரியமா இருக்கலாம் இல்ல?” என்று ரெண்டாம் பிள்ளை அடிக்கடி டவுனுக்கே வந்து இருக்கும்படி கூப்பிடத்தான் செய்கிறான். அங்கே வசதிக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. நேரத்துக்கு சாப்பாடு, பாக்கறத்துக்கு டீவிப் பொட்டி, தூங்க நல்ல எடம், தண்ணி எடுக்கத் தேவையில்ல, சமைக்க தேவையில்ல, தொவைக்கத் தேவையில்ல... சொகமாத்தான் இருக்கலாம். ஆனால் அங்கே போகலாமென்றால் இங்கே இருக்கும் ஒரு பழுத்த கிழத்தை என்ன செய்ய?

அந்த பழுத்த கிழம் விசாலாச்சியின் அம்மாதான். பேரு அம்மாக்கண்ணு. “எனக்கு எம்பத்தி ரெண்டு வயசாவது” என்று பத்து வருடமாக ஒரே வயதைச் சொல்லும் அம்மாக் கண்ணு வெளியூர் என்று இதுவரைக்கும் எங்கும் போனதில்லை.

“இந்த மண்ணுல பொறந்து வளந்து வாழ்ந்துட்டவ. இங்கதான் சாவணும். வேற மண்ணுல சாவமாட்டேன்.” என்று சொல்வாள். தன் பேரனுக்கு பிறந்த மகனைக்கூட, கொள்ளு பேரன் என்ற ஆசையோடு பார்க்கப் போகவில்லை கிழவி.

“ஆத்தா, நீ எங்கயும் போயி சாக வேணாம். இங்கயே மகராசியா சாவு. ஆனா இப்ப உன் பேரனுக்கு புள்ளை பொறந்திருக்கு அத பாக்க நாங்க போறோம். நீயும் வாயேன். பாத்துட்டு வந்து இங்கயே எல்லாரும் சந்தோசமா சாவலாம்...” என்று பரமன் அம்மாக்கண்ணை முட்டுக்கொடுத்து கூப்பிட்டுப் பார்த்தான்.

அம்மாக்கண்ணு பெரிய முன் யோசனையோடு ஒரு கேள்வி கேட்டாள்: “ஒருவேளை போற எடத்தில நான் அங்கியே செத்துட்டா? எமன் எப்ப வருவான்னு தெரியுமா உனக்கு?” இந்த உலுக்கும் கேள்வி கேட்டதும் பரமனே அழுதுவிட்டான்.

அம்மாக்கண்ணுக்கு எந்த நேரமும் சாவு வரலாம் என்று பரமனுக்கு உறைத்ததும் அவனுக்கு அழுகை வருவதற்கு காரணம் இருக்கிறது. அனாதையாகிப்போன பரமனை எடுத்து வளர்த்து ஆளாக்கி, தன் பொண்ணையும் கல்யாணம் கட்டிக்கொடுத்து பரமனை மனுசனாக்கியவள் அம்மாக்கண்ணுதான். அந்த உபகாரத்திற்காக “கடைசி வரை உனக்கு சோத்தைப் போட்டு கஷ்டமில்லாம பாத்துப்பேன்” என்று வாக்கு குடுத்திருக்கிறான் பரமன். அதற்காகத்தான் மகன் வீட்டிற்குப் போனாலும் அங்கே தனியாக கிழவி என்ன செய்கிறாளோ என்று பதறி ரெண்டு நாள் தங்காமல் ஓடி வந்துவிடுகிறான். “வயசான காலத்தில இது தனியா என்ன பண்ணும். இது உசிரோட இருக்கிற வரையில எனக்கும் இதான் மண்ணு” என்று சொல்விட்டு ரெண்டு பேரும் யார் முந்தி சொந்த மண்ணில் சாவது என்று தவமிருக்கிறார்கள்.

இப்படி அவர்கள் தவமிருக்கும் ஓட்டை குடிசை வீட்டை எப்படியோ பூனை முடிபோல ஏறுக்கு மாறாக போர்த்தி முடித்தாள் விசாலாச்சி. வீம்புக்கு ஏறிய விசாலாச்சி இப்பொழுது கிழே இறங்க முடியாமல் தவித்தாள். வழியில் போன ரெண்டு பேரை கூப்பிட்டு அவளை பத்திரமாக இறக்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு தானே மண் எடுத்து வந்து சுவற்று பொந்துகளை அடைத்தாள். சுண்ணாம்பு அடித்தாள். தரையின் பள்ளங்களை செங்கல் போட்டு அடைத்து சாணம் போட்டு மெழுகினாள். கதவைத் துடைத்தாள். பொட்டு வைத்தாள். பெருமூச்சு விட்டாள். சுருண்டு படுத்துக்கொண்டாள்.

வயசான காலத்தில் இத்தனை பாடுபடுவதற்கு காரணம் மகன் வெகுநாள் கழித்து வருகிறான் என்பது மட்டுமில்லை. ரெண்டாம் பிள்ளை ஆறு வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை. அது சாதாரண தவம் இல்லை, பெருந் தவம்.

கல்யாணமாகி வருசம் ஆகியும் விசாலாச்சிக்கு வயிற்றில் கரு தங்கவில்லை. அதற்காக விசாலாச்சி தின்னாத மருந்து கிடையாது, பண்ணாத மாயம் கிடையாது. காவிரிக் காட்டில் மாட்டு மந்தை மேய்க்கும் கொருக்கன் கொண்டு வந்து கொடுத்த பச்சிலையை தின்று தின்று வாய் கசந்ததுதான் மிச்சம். மாரியம்மன் கோயிலுக்கு போய் வாரமானால் சாட்டை அடித்ததில் புண் வந்ததுதான் மிச்சம். பேய் பிடித்திருக்குமென்று இரண்டுமுறை பேய் ஓட்டியதில் முடி உதிர்ந்ததுதான் மிச்சம். பார்க்கிற இடத்திலெல்லாம் புற்று மண் தின்று வயிறு கெட்டதுதான் மிச்சம். மரம் சுற்றி, கோயில் சுற்றி, குளம் சுற்றி கால் தேய்ந்ததுதான் மிச்சம். வயிற்றில் ஒரு உசிரைக் காணோம்.

பச்சகாளி குட்டையில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோயில் பூசாரி நன்றாக குறி சொல்வான் என்பதை யாரோ சொல்லக் கேட்டு விசாலாச்சி தன் புருசனை விடியக் காலையிலேயே கூட்டிக்கொண்டு பத்து மைலுக்கு நடந்து போனாள். அம்மாவாசை ராத்திரியில் உடம்பெல்லாம் வெடவெடத்து போகும்படி உடுக்கை அடித்து பாட்டு பாடியபடி குறி சொன்ன அந்த கோயில் பூசாரியின் உடுக்கைச் சத்தத்தைவிட சிவந்து உருட்டிய முட்டைக் கண்கள் பயமுறுத்துவதாய் இருந்தது. பயபக்தியோட ரெண்டு பேரும் பூசாரிக்கு முன் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு “எங்களுக்கு எப்ப பிள்ளை பொறக்கும் சாமி?” என்று கேட்டார்கள்.

பூசாரி பறட்டைத் தலையை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு, முட்டைக் கண்ணை உருட்டி, உடுக்கை அடித்து ஆடியபடியே ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்தான். பாடி முடித்துவிட்டு பரமனைப் பார்த்து, “சொன்னது புரிஞ்சதாடா?” என்று கேட்டான்.

“ஒண்ணும் புரியலையே, ஆத்தா.” என்று பரமன் பச்சைப் பிள்ளையாய் நின்றான். விசாலாச்சிக்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்னடா புரியலங்கற...! உன் பொண்டாட்டிக்கு முன் ஜென்மத்து தோசம் இருக்குடா. அவ வயித்தில ஒரு புழு பூச்சி பொறக்காதுடா...” என்றான் பூசாரி.

பதறிப்போன பரமன் பூசாரிக்கு முன்னால் நன்றாக விழுந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, “ஆத்தா நாங்க பூச்சி பொறக்கட்டுமுன்னு உன்னைத் தேடி வரல... ஒரு புள்ளை வேணும். பொறக்குமா சொல்லு” என்று பச்சைப் பிள்ளையாய் கேட்டான்.

அடித்த உடுக்கையை படக்கென்று நிறுத்திவிட்டு பூசாரி நெருப்பு போன்ற முட்டைக் கண்களில் எரிப்பது போல பரமனைப் பார்த்தான். “நீ எகத்தாளம் பேசிறீயா? உனக்கு புள்ளையும் பொறக்காதுடா, இப்படி நீ பேசினதால இனி ஒரு பூச்சியும் பொறக்காதுடா...” என்று சொல்லியபடி தட்டிலிருந்து ஒரு பிடி விபூதியை எடுத்து பரமன் முகத்தில் அடித்து சபிப்பதற்காக கை ஓங்கினான்.

பதறிப்போன விசாலாச்சி படக்கென்று பூசாரி காலில் விழுந்து, “ஆத்தா உம் புள்ளைங்கள சபிச்சிப்புடாத. அது பச்ச புள்ள. பேசத் தெரியாம பேசிடிச்சி. உட்டுடு” என்று கதறி விட்டாள் கதறி.

உடுக்கைச் சத்தத்தைவிட பயமுறுத்திய அவளின் கதறலுக்கு பூசாரியே பயந்து போனான். பிறகு சின்னதாக ஊடுக்கை தட்டி சன்னமாக ஒரு பாடலை பாடிக்கொண்டே யோசித்தவன், “ஒரு வழி சொல்லுவேன.; கேட்டு நடந்தா கொழந்தை பொறக்கும்.” என்றான்.

“குத்தமில்லாம நீ சொன்னபடி நடக்கறோம் சொல்லு ஆத்தா” என்றாள் விசாலாச்சி.

“நீ சும்மாயிரு. உனக்குத்தான் கொழந்தை பொறக்காதுன்னு அப்பமே சொல்லிட்டேனே,” என்று விசாலாச்சியை அடக்கிய பூசாரி, பரமனிடம், “டேய் என் பேச்சை கேட்டா உனக்கு கொழந்தை பொறக்குன்டா” என்றான்.

“அதெப்படி ஆத்தா, பொண்டாட்டி பெக்காம புருசனுக்கு புள்ளை வரும்?” என்று குழப்பத்தோடு பரமன் கேட்டான்.

“டேய் எதுத்து பேசாதடா. நாஞ் சொன்னா அது நடக்குமுடா... நான் பச்சக்காளி குட்டை மாரியாத்தாடா! மரத்தில ஒரு கெளை பட்டுப்போனா இன்னொரு கெளையில பூப்பூத்து பிஞ்சு விடறத நீ பாத்ததில்லையாடா?”

“பாத்திருக்கேன், ஆத்தா.”

“அப்படித்தான்டா இது. நீ மரம்டா. நீ விருச்சம். உன் பொண்டாட்டி ஒரு பட்டுப்போன கெளை. இன்னொரு கெளையில நாஞ்சொன்னா பூ பூக்குன்டா, காய் காய்க்குன்டா. உன் பொண்டாட்டியோட சக்களத்தி வழியா உனக்கு ஒரு சந்ததி பொறக்குமுடா.” என்று உறுமியபடி மீண்டும் உடுக்கை அடித்தான் பூசாரி.

இதைக் கேட்டு மனசுநொந்து போன விசாலாச்சிக்கு அடிவயிறு வறண்டு போனது. வெகு நேரம் பேய் பிடித்தவள் போல மிரண்டு விழித்தபடி உட்கார்ந்திருந்தாள். பாலில்லாத பட்டமரமா போச்சே நம்ம வாழ்க்கை என்று குமைந்து போனாள். கொஞ்ச நேரம் அழுதாள். பிறகு சரி நம் விதி அவ்வளவுதான் என்று முடிவுக்கு வந்தவளாக, “ஆத்தா எல்லாம் தெரிஞ்சவ நீ. என்ன செய்யணும் சொல்லு” என்றாள். அவள் கண்கள் கெட்டுக்கொண்டிருக்கும்போது அவளறியாமல் அழுதது.

விசாலாச்சி பக்கம் திரும்பிய பூசாரி, “நீ கவலைப்படாதே எம் மகளே... உனக்கு வாழ்கை போச்சின்னு ஆத்தா முன்னாடி அழுது நிக்காதே. உன் சக்களத்தி மூலமா உனக்கொரு பையனை நான் வரமா தரேன். பயப்படாத இரு” என்று சொல்லி உடுக்கையை சத்தமாக அடிக்க ஆரம்பித்தான்.

“சரி ஆத்தா சக்களத்தி வழியாத்தான் எனக்கு ஒரு புள்ளை கெடைக்குமுன்னா அப்படியே ஆவட்டும். நீயே சக்களத்தி யாருங்கிறதையும், அவ இருக்கிற திசையையும் சொல்லு” என்றாள்.

சத்தமாய் உடுக்கை அடித்து ஒரு பாட்டை பாடிவிட்டு பூசாரி சொன்னான் “சக்களத்தி இருக்கிற திக்கை சொல்லறேன் கவனமாகேட்டுக்கோ... சூரியன் உதிக்கும் முன்னால எழுந்து கிழக்கால நீ பொண்ணு தேடிப் போ”

பரமனுக்கு ரெண்டாம் கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் “நானெல்லாம் பொண்ணு தேடி போக மாட்டேன்” என்றான்.

“டேய் நீ பொண்ணு தேடிப் போனா சக்களத்தி கெடைக்கமாட்டா, சருவச்சட்டிதான் கெடைக்கும். நான் இவள போகச் சொன்னேன்” என்று விசாலாச்சி பக்கம் உடுக்கை அடித்துக் காண்பித்தான். விசாலாச்சி “அப்படியே ஆவட்டும் ஆத்தா நான் போறேன்.” என்றாள்.

“கிழக்கால நீ பொண்ணு தேடி போ.”

“சரி ஆத்தா”

“அங்க கால் இல்லாத நொண்டி உனக்கு சக்களத்தியா கெடைப்பா...”

“ஐயோ ஆத்தா எனக்கு நொண்டிச் சக்களத்தியா?” கத்தினாள் விசாலாச்சி.

முறைத்த பூசாரி தொடர்ந்தான். “பாதியில நிறுத்தாம நான் சொல்லுறதை கேளு. மேக்கால நீ பொண்ணு தேடிப் போ. அங்க புருசன் செத்தவ உனக்கு சக்களத்தியா கிடைப்பா... தெற்கால நீ பொண்ணு தேடிப் போ. அங்க ஒரு மலடி உனக்கு சக்களத்தியா கெடைப்பா...”

பூசாரி அடுக்கிக்கொண்டு போக பரமனும் விசாலாச்சியும் தலையில் கை வைத்துக் கொண்டார்கள். ஒருத்திக்கி இத்தனை சக்களத்தியா? குழந்தை வேணுமுன்னு சக்களத்தி வரம் கேட்டா மலட்டு சக்களத்தி திசையச் சொல்லுறானே பூசாரி.

அதன் பிறகு ஓங்கி சத்தமிட்ட பூசாரி “அடீ, அதனால நீ வடக்கால பொண்ணு கேட்டு போ. அங்க ஒரு வடிவழகான சக்களத்தி உனக்குக் கிடைப்பா அவ அழகான புள்ளை ஆறேழு பெத்துத் தருவா” என்று சொல்லி மலையேறிக்கொண்டான்.

எப்படியோ நல்ல வாக்கு கிடைத்ததே என்று வீட்டுக்கு கிளம்பினார்கள். வரும் வழியெல்லாம் விசாலாச்சி அழுதுகொண்டே வந்தாள். பரமன் வாய் பேசமுடியாமல் வந்தான். அன்று இரவெல்லாம் பரமன் அழுதுகொண்டே இருந்தான். விசாலாச்சி வாய்பேச முடியாமல் இருந்தாள்.

மறுநாள் விடிவதற்கு முன்பே குறுகுறுவென்று பேசிய அம்மாக்கண்ணு கிழவியும் விசாலாச்சியும் பொண்ணு பாக்க கிளம்பி விட்டார்கள். “புள்ளை இல்லாம செத்தாலும் அவளுக்கு ஒரு சக்களத்திய வீடு சேத்தமாட்டேன்” என்று எகிறி எகிறி குதித்தான் பரமன்.

“புள்ளை இல்லாத கொறைக்கு நாஞ் செத்து போறேன்” என்று அவனைவிட உயரமாக விசாலாச்சி குதித்தாள். பயந்து போன பரமன் “சரி, எந்த கழுதை கொண்டாந்து காட்டினாலும் அந்த பீடைக்கு நான் தாலி கட்டறேன். என் தலையெழுத்து.” என்று சொல்லிவிட்டு வெத்தலை கிள்ள போய்விட்டான்.

வடிவழகியை வடக்கில் தேடி போனவர்கள் சூரியன் மறைந்த பிறகும் வீட்டுக்கு வரவில்லை. வெத்தலை கிள்ளி முடித்துவிட்டு முடித்துவிட்டு வந்து மனசு குறுகுறுக்க உட்கார்ந்திருந்த பரமனுக்கு உள்ளுக்குள் ஒரு ஆசைதான். எந்த பொண்ணா இருந்தாலும் சாயிந்தரம் வீட்டுக்கு கொண்டாந்து மருநா உனக்கு கல்யாணம் என்று அம்மாக்கண்ணு திட்டமாக சொல்லிவிட்டு போயிருந்தாள். அப்படி வடக்கில் இருந்து வரும் சக்களத்தி வடிவழகாய் இருப்பாளென்று பூசாரி சொன்னானே, அந்த வடிவழகி எப்படி இருப்பாள் என்று பார்க்க நடு வீட்டில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான்.

வெளியே அம்மாக்கண்ணும் விசாலாச்சியும் பேசியபடி வரும் சத்தம் கேட்டதும் ஆசையாய் வெளியே வந்து எட்டிப் பார்த்தான். அங்கே அம்மாக்கண்ணு ஒரு கருப்பு எருமையையும் விசாலாச்சி ஒரு கிடாறிக் கன்றையும் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள். எருமையைப் பார்த்துவிட்டு பரமனுக்கு கால் வெடவெடத்தது. ஒரு பேச்சுக்குத்தான் கழுதையை காட்டினாலும் தாலி கட்டுவேன் என்று சொன்னான். இவர்கள் இப்படி எருமையை - அதுவும் கன்று போட்ட எருமையை ஓட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள் என்று பரமன் எதிர்பார்க்கவில்லை.

இதுவா பூசாரி சொன்ன வடிவழகான சக்களத்தி என்று குழம்பிய பரமன், “என்ன ஆத்தா இது? ஒரு எருமைக்கு என்ன கல்யாணம் பண்ணி வெக்க பாக்கிறியே...” என்று சொல்லி தலை சொறிந்தான்.
அந்த எருமை வந்த பிறகு பரமன் சக்களத்தி வராமலேயே தகப்பன் ஆனகதை ஒரு சந்தோசக் கதை.

2

“என்ன எருமைக்கு கல்யாணம் பண்ணிவெக்கப் பாக்கறீயே ஆத்தா” என்று பரமன் பரிதாபமாக கேட்டதும் அம்மாக்கண்ணும் விசாலாச்சியும் கையில் எருமையை பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“உனக்கு ஆசையிருந்தாலும் எம் மகளுக்கு எருமைய சக்களத்தியா வெச்சிக்க தைர்யமில்லடா பரமா” என்று சொல்லி சிரித்த அம்மாக்கண்ணு, “உனக்கு நெஜமாவே வடக்கில பொறந்த ஒரு வடிவழகான பொண்ணு பாத்துட்டு வந்திருக்கேண்டா. நீ மட்டும் அவளைப் பாத்தா சாப்பாடு தண்ணி எறங்காம கெறங்கிப் போவே. அத்தனை அழகு. கல்யாணத்துக்கு புது சோமம், புதுப்புடவை எடுக்க காசு தயார் பண்ணிக்கோ” என்றாள்.

“பிறகு எப்படி எருமை வந்தது? வடக்கு சக்களத்தி கல்யாணத்துக்கு முன்னமே சீரா தந்து விட்டாளா?” என்று எருமையை வியப்போடு பார்த்தான் பரமன்.

“ஆமான்டா... அரைக் கிழவனுக்கு பொண்ணே பிச்சை, இதுல சீரும் பிச்சையா? எதோ ஒரு பிள்ளை வாரீசா வேணுமேன்னுதான் எம் பொண்ணுக்கு நான் ஆத்தாக்காரியா இல்லாம ஒரு மாமியாக்காரி மாதிரி சக்களத்திக்கு ஏற்பாடு பண்ணி பாவத்த சம்பாதிக்கிறேன். கல்யாணத்துக்கு பெறவு இளிச்சிகிட்டு அவ பின்னாடி போயி எம் புள்ள மனசை நோகடிச்சே... தலையில அடிச்சி மண்ணுல பொதைச்சிடுவேன் சாக்கிரதை.” அம்மாக்கண்ணு கையை காட்டி மிரட்டிவிட்டு இன்னும் தொடர்ந்து சொன்னாள்,

“உனக்கு சீரா எருமை மாடு வேணுமா? ஒரு எருமை வாங்கணும், பால் கறந்து விக்கணுன்னு இத்தனை நாள் தேடிட்டு இருந்தோமே ஞாபகம் இல்லையா? பொண்ணு பாத்துட்டு திரும்பர வழியில சொல்லி வெச்சிருந்த தரகன் எதிர்ப்பட்டான். வெலை கம்மியா, கொடமா கறக்கிற எருமை ஒண்ணு இருக்கு ஓட்டிட்டு போன்னு அவன்தான் கையில கயித்தை தந்துவிட்டான். நாங்களும் புடிச்சிட்டு வந்தோம். எம் மருமகனுக்கு எருமைய பாத்ததும் எம்முட்டு கல்யாண ஆசை வந்துடுச்சி பாரு...!” என்று சொல்லிவிட்டு மீண்டும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அம்மாக்கண்ணு. விசாலாச்சியும் சிரிக்கத்தான் நினைத்தாள் அதற்குள்ளாக மயக்கம்போட்டு தொப்பென்று கீழே விழுந்தாள்.

விசாலாச்சி மயக்கம் போட்டு விழுந்ததும் பதறிப்போன பரமன் முகத்தில் தண்ணி தெளித்துப் பார்த்தான். விசாலாச்சிக்கு மயக்கம் தெளியவில்லை. சக்களத்தி வர்ற துக்கத்தில விசாலாச்சிக்கு வரக்கூடாத நோவு வந்துச்சே என்று பயந்து ஓடிப்போய் மருத்துவச்சியை கூட்டிவந்து காட்டினான்.

மருத்துவச்சி மருந்து கொடுத்து அவளை எழுப்பி கைபிடித்து பார்த்தாள். “எத்தனை மாசம்டி ஆச்சி?” என்று விசாலாச்சியை கேட்டாள்.

யோசித்த விசாலாச்சி, “தெரியலையே. போன மாசமோ அதுக்கு முந்தின மாசமோ தலைக்கு குளிச்சேன்.” என்றாள்.

“அப்ப மூணு மாசம். நாடி சுத்தமா இருக்கு. கர்ப்பம்தான்” என்று சொல்லிவிட்டு போனாள் மருத்துவச்சி.

“அடி மவளே... வயித்தில புள்ளைய வெச்சிகிட்டுத்தான் புள்ளை வரம் கேக்கப் போனியா? உனக்கு நீயே சக்களத்தியும் பாக்க வந்தியா? உன்னத்தான் அந்த பச்சகாளிக் குட்டை ஆத்தா சக்களத்தின்னு சொன்னாளா? அதனாளதான் நீ இவனுக்கு வடக்கில இருந்து சக்களத்தியா எருமை சீரோட வந்தியா? தள்ளிப் போறது தெரியாத கிறுக்கு உனக்கு எப்பப் பிடிச்சது?” என்று சந்தோசத்தில் அழுதுகொண்டே கோபத்தில் கத்தினாள் அம்மாக்கண்ணு கிழவி.

“ஆமா, எத்தினி வாட்டி இப்பிடி தள்ளி போயிருக்கு. எனக்கென்ன தெரியும் இது தங்கியிருக்குன்னு” என்று வயிற்றில் இருந்த குழந்தையை இடித்துச் சொன்னாள் விசாலாச்சி. அவள் கண் இரண்டில் படலமாய் கண்ணீர். முக்கால் கிழவனாகி அப்பாவான பரமனுக்கு வாயெல்லாம் பல். இந்த சக்களத்தியே போதும், வடக்கத்தி வடிவழகி வேண்டாம் என்று ஆள் வைத்து சொல்லி விட்டார்கள்.

அதன் பிறகு விசாலாச்சிக்கு அந்த எருமை என்றால் கொள்ளை பிரியமானது. அது வந்த நேரம்தான் வயிற்றில் ஒரு பிள்ளை தங்கியது என்று அதற்கு தீவனம் வைத்து, தண்ணீர் காட்டி, கழுவி துடைத்து, வாரமானால் பொட்டு வைத்து கற்பூரம்காட்டி, சாமியாகவே கும்பிட்டாள் அந்த எருமையை. அதற்கு ‘லெட்சுமி’ என்று பெயர் வைத்தாள். “எருமைக்கு பேரு லச்சுமியா?” என்று பேர் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

“தரித்திரத்தை போக்குற சாமிதான் லெட்சுமின்னா இந்த எருமைதான் எனக்கு லெட்சுமி” என்பாள் விசாலாச்சி. உண்மையில் அது வந்த பிறகுதான் அவ்வப்போது வந்து போகும் சாப்பாட்டுத் தரித்திரமும், பீடையும் சுத்தமாய் இல்லாமல் இருந்தது. கையில் காசும் நின்றது.

எருமை குடம் குடமாய் பால் கறக்கவில்லை என்றாலும் கையில் காசில்லாமல் ஒருநாளும் போனதில்லை. வயிற்றுப் பிள்ளைக்காரி விசாலாச்சி அழகான ஆண் குழந்தை பெற்றாள். மகனுக்கு மாரியப்பன் என்று பெயர் வைத்தாள்.

மகன் பிறந்த முதல் நாளே பச்சை உடம்போடு அந்த பிஞ்சை எடுத்துக்கொண்டு போய் எருமையிடம் காட்டி “பாருடியம்மா உம் பிள்ளையை” என்றாள். அவளுக்கு சுகம் துக்கம் எது வந்தாலும் எருமையிடம் மணிக்கணக்காக சொல்லிக்கொண்டிப்பாள். விசாலாச்சி கையிலிருந்த பச்சை மண் மகனை தன் மகனென்பது போல பார்த்தது அந்த எருமை.

தவமாய் பிறந்த மாரியப்பனை பொத்தி வளர்த்தாள் விசாலாச்சி. பையனோ மற்ற பிள்ளைகள் போல் சவலையாக இல்லாமல் துறுதுறுவென்று இருந்தான். நாலு மாதத்தில் பல் முளைத்து, ஆறு மாத்தில் எட்டு வைத்து நடந்து, ஒன்பதாம் மாத்தில் ‘அம்மா’ என்று சொல்லி, ஒரு வருடத்திலேயே ஆம்பிளைபோல நடக்க ஆரம்பித்தான்.

ரெண்டு வயசில் சின்ன மரம் ஏறுவதும், மூனாம் வருசம் சிலேட்டு வாங்கி எழுதுவதுமாய் இருந்தான். அவன் வயசுப் பிள்ளைகள் அம்மா இடுப்பை விட்டு இறங்கமாட்டேன் என்று கத்தியபோது நாலாம் வயசிலேயே பள்ளிக்கூடத்திற்கு போக ஆரம்பித்தான் மாரியப்பன்.

ஏழாம் வருசத்தில் எழுத்துக்கூட்டி படிக்கவும் முத்து முத்தாய் எழுதவும் ஆரம்பித்துவிட்ட தன் மகனைப் பார்த்து விசாலாச்சி ஆச்சரியப்பட்டாள். துப்பத்த பரமனுக்கும் ஏதுங்கெட்ட விசாலாச்சிக்கும் ஒரு அறிவுக்கொழுந்து எப்படித்தான் பொறந்துச்சோ என்று அதிசயப்பட்டாள்.

தன் கண்ணே பிள்ளைக்கு பட்டுவிடுமென்று மிளகாயும் உப்பும் சேர்த்து பிள்ளைக்கு திருஷ்டி சுற்றி அடுப்பில் போட்டு தினமும் இருமினாள். மிளகாய்க்கும் உப்புக்கும் ஏகத்திற்கும் அதனால் செலவானது.

தவமிருந்த பெற்றபிள்ளை இப்படி சந்திர சூரிய அழகோடு, அறிவு பலத்தோடு இருக்கவும் சந்தோசமாகிவிட்டது. எங்கே போனாலும் மகன் ஒட்டிக்கொண்டு கூடவே வருவான். பைனின் துடுக்குத் தனத்தினால் ஒரு பெரிய விபரீதமாகிவிட்டது ஒருநாள். அதை இன்றைக்கும் மறக்க முடியாதே. நினைத்தாலே விவாலாச்சிக்கு நெஞ்சி வெடிக்கிற மாதிரி அதிர்ச்சி இருக்குமே.

ஒருநாள் தண்ணி எடுத்துவர குடத்தோடு விசாலாச்சி போகும்போது கூடவே மாரியப்பனும் போனான். இரண்டு வீட்டு அளவுக்கு அகன்று இருக்கும் வெள்ளாமைக் கிணற்றில் உள்ளே இறங்கிதான் தண்ணீர் எடுக்க வேண்டும். ஐந்தாள் தண்ணீர் உள்ள கிணறு ரெண்டு பனைமரம் அளவுக்கு ஆழமாக இருந்தது.
கிணற்று மேட்டில் பையனை உட்காரவைத்துவிட்டு கிணற்றுக்குள் இறங்கினாள். குடத்தில் தண்ணீரை முங்கும்போது பையன் எட்டிப் பார்க்கிறானா என்று பார்த்தாள். அப்படி பார்க்கும்போது குடம் கை நழுவி தலைக்குப்புற மிதந்து நடுக்கிணற்றுக்கு படகு போல் போய்விட்டது. நீச்சல் தெரியாத விசாலாச்சி திகைத்து நிற்க மேலே இருந்து எட்டிப் பார்த்த மாரியப்பன் “என்னம்மா ஆச்சி! கொடத்தை நான் எடுத்து தரட்டுமா?” என்று கேட்டான்.

பயந்துபோன விசாலாச்சி. “கண்ணு, பக்கம் வராத... எட்டிப் பாக்காத கண்ணு! உள்ள விழுந்துட்டா உசிறு போயிடும்!”என்று கத்தினாள்.

“பிறகு கொடத்தை எப்படி எடுக்கிறது?” என்று சறுக்கி உள்ளே விழுந்துவிடும் இடத்தில் நின்று கேட்டான் மாரியப்பன்.

“ஐயோ ராசா தூர போ... உன் அப்பா வந்து எடுத்துத் தருவாரு.”

மாரியப்பன் சிரித்துக்கொண்டே “அப்பன் வரதுக்குள்ள குடம் உள்ள போயிடும் நானே எடுத்து தறேன். கொஞ்சம் தள்ளி நில்லு. மேல தண்ணி விழும்” என்று சொல்லியபடி கிணற்றுக்குள் குதித்தான்.

ஒரு தேங்காய் நெற்று போல நீச்சல் தெரியாத தன் பையன் கிணற்றுக்குள் விழுவதை பார்த்த விசாலாச்சி ஓவென்று கத்தினாள். பையனின் துறுதுறுப்புக்கும் பயமற்றத்தனத்திற்கும் சந்தோசப்பட்டதே இப்பொழுது வினையாயிற்று. பையன் பயமில்லாமல் கிணற்றில் குதித்து விட்டான். நீச்சல் தெரியாதே.

பையன் கிணற்றில் விழுந்ததும் அடித்த அலையில் நடுக்கிணற்றில் மிதந்த குடம் விவாலாச்சி காலடிக்கு வந்துவிட்டது. அதை அவள் எடுக்கவில்லை. குடத்துக்கா துணிபோட்டு சோறூட்டி வளக்க முடியும்?
விசாலாச்சி பெருஞ்சத்தத்துடன் கத்தினாள். பெத்த ஒரு பிள்ளையும் கிணறு தின்னுடுச்சே. தண்ணிக்குள் இருந்து காற்று முட்டைகள் குபுகுபுவென வருவதைப் பார்ததும் தன் பையன் தண்ணீருக்குள் மூச்சு முட்டி செத்துக்கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. அவள் எத்தனை கத்தியும் யாரும் உதவிக்கு வரவும் இல்லை.

பையன் செத்த பிறகு நாம எதுக்கு உசிரோட இருக்கணும் என்று நினைத்த விசாலாச்சி தானும் உள்ளே விழப்பார்த்தாள். அப்பொழுது குபுக்கென்று வெளியே வந்த மாரியப்பன் “எங்கம்மா கொடம்?” என்று கேட்டான். ஐயோ மகனே வெளிய வந்தியா?

கண்ணில் கண்ணீரோடு சிரித்த விசாலாச்சி “என்ன காரியம் செஞ்சடா துக்கிரிப் பயலே... எனக்கு ஊசிரே போச்சி... அய்யோ கண்ணு. நீ எப்ப கண்ணு நீச்ச கத்துகிட்ட? சீக்கிரம் மேல வா, வந்துடு” என்று பதறினாள். தனக்குப் பிறந்த மாரியப்பன் என்ற பிள்ளையை தான் வளர்ப்பதாக விசாலாச்சி நினைத்துக்கொண்டிருக்க மகனோ வளர்ப்பதையும் மீறி பெரிதாக தானே வளர்ந்திருக்கிறான். இதை புரிந்து கொண்டாள் விசாலாச்சி.

கிணற்றில் பிள்ளை விழுந்த அந்த கணத்திலேயே “மாரியாத்தா எம் புள்ளைய காப்பாத்து. பையன் உசிரோட வரட்டும். கிணத்தில விழுந்த பிள்ளை உன்னோட பிள்ளை, உசிரோட வர்ற பிள்ளை என்னோட பிள்ளை. நான் அதை ரெண்டாம் பிள்ளையா நெனைச்சி வளத்துக்கிறேன்” என்று வேண்டிக்கொண்டாள். பையன் உயிரோடு வந்ததால் அதை ரெண்டாம் பிள்ளை என்றே அவள் சொல்லிவந்தாள். மற்றபடி அவளுக்கு பொறந்ததே ஒரே ஒரு ஒற்றைப் பிள்ளைதான்.

மகனின் பெரிய அறிவுத்தனத்தில் சந்தோசம்தான் விசாலாச்சிக்கு. ஆனால் தப்பிப் பிழைத்த தவமிருந்த பிள்ளை “நான் படிக்க பக்கத்து ஊருக்கு போறேன்” என்று வளர்ந்த பின் சொன்னதும் மகனின் திறமைக்காக சந்தோசப்படுவது தப்பு என்று நினைத்துக்கொண்டாள் விசாலாச்சி.

இந்த ஊரில் யாரும் படிக்கவே ஆசைப்பட்டதில்லை. ரெண்டாம் பிள்ளை ஐந்தாவது வரை படித்துவிட்டான். இதற்கு மேல் எதற்கு ஏழு மைல் நடந்து போய் பக்கத்து ஊரில் படிக்க வேண்டும்? புள்ள கல்லு மேல முள்ளு மேல நடந்து போய் படிக்கிறதில் இஷ்டமில்லை விசாலாச்சிக்கு. ரெண்டாம் பிள்ளை படிக்க போவேன் என்று தினம் அடம் பிடித்து அழுதான். பொறுக்க முடியாத விசாலாச்சி நேராக பக்கத்து தெருவில் இருக்கும் வெங்கட்டன் வாத்தியாரை பார்க்கப் போனாள். போய் அந்த வாத்தியாரை கண்ட மேனிக்கு திட்ட ஆரம்பித்தாள்.

“எம் புள்ளைய என்னமா கெடுத்து வெச்சிருக்கே வாத்தியாரே, நீ. மேல படின்னு நீதான் சொன்னியாம். தவமிருந்து பெத்த புள்ளைய ஊருவிட்டு ஊர் அனுப்ப எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா... அது மனச கெடுத்து வெச்சிருக்கியே. உம் புள்ளையும் இப்படித்தான் உன்னைய விட்டு ஓடிப்போகும், பாத்துக்கோ” என்று பொண்ணு ஒண்ணு பெத்திருக்கும் வெங்கட்டன் வாத்தியாருக்கு சாபம் விட்டாள்.

இத்தனையும் கேட்டுவிட்டு கோபப்படாமல் சிரித்த வெங்கட்டன் வாத்தியார், “கோபப்படாத விசாலாச்சி. உனக்கு பொறந்தது ஒரு அறிவாளிப் புள்ளை. அது படிச்சா கலெக்டர் ஆகும். ஒரு டாக்டர் ஆகும். கை நெறைய சம்பாதிக்கும். அத உம் புருசனாட்டம் வெத்தலை கிள்ள அனுப்ப நினைக்காதே. அவன் படிக்கட்டும். பையன் ரொம்ப தூரம் நடக்கணுமேன்னு கவலைப்படாதே. நானே சைக்கிள்ல கொண்டு போயி ஸ்கூல்ல விட்டு, திரும்ப கூட்டியாந்து விடறேன். என் பேச்சை நம்பு. மகன் வாழ்க்கைய கெடுத்துடாதே” என்று சமாதானம் செய்தார்.

பெரிய உத்தியோகம், கை நிறைய காசு என்று வாத்தியார் சொன்னதும் விசாலாச்சிக்கு மனசு கிறங்கிப் போயிற்று. தன் மகன் கலெக்டர் ஆனால் எப்படி இருக்கும்? பிள்ளையை வெங்கட்டன் வாத்தியார் சைக்கிள் முன்பக்கம் உட்கார வைத்து பள்ளிக்கு அனுப்பினாள். பின்னால் வாத்தியாரின் பெண் உட்கார்ந்து கொண்டு படிக்கப் போனாள்.

அவன் பக்கத்து ஊரில் படிக்கிற வரையில் காசு கஷ்டம்தான் வேறு கஷ்டமில்லை. பையனும் நன்றாக படித்தான். பள்ளிக்கூடத்திலயே மொத மார்க்கு என்றான். அதன்பிறகு பக்கத்து ஊர் படிப்பு முடிந்ததும், “நான் பெரிய படிப்பு படிக்க டவுனுக்கு போகணும்” என்று ரெண்டாம் பிள்ளை சொன்னதும்தான் மனசு கஷ்டம் வந்தது.

வெங்கட்டன் வாத்தியார் மேல் ஆத்திரமான ஆத்திரம் வந்தது விசாலாச்சிக்கு. வாத்தியாரைப் போய் மானம் போக நாலு கெட்ட வார்த்தை திட்டவேண்டும் என்றுதான் விசாலாச்சி நினைத்தாள். ஆனால் முடியவில்லை. இவளுக்கு பயந்துகொண்டு அதுவரை வெறும் வாத்தியாராக இருந்த வெங்கட்டன் வாத்தியார் வேற பள்ளிக்கூடத்துக்கு ஹெட்மாஸ்டராகி ஓடிப்போய் ஒருமாதம் ஆகிப்போனது.

டவுனுக்கு படிக்க அனுப்பினால்தான் சாப்பிடுவேன் என்று பட்டினி கிடந்தான் ரெண்டாம் பிள்ளை. சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்லை படிக்க மட்டும் அனுப்ப மாட்டேன் என்று சும்மாயிருந்தாள் விசாலாச்சி. ஒருநாள்தான் சாப்பிடாமல் இருந்தான். மறுநாள் சாப்பிடாமல் இருப்பதோடு, பானையை உடைப்பது, கட்டாந்தரையில் படுப்பது என்று வேறுவிதமான வித்தை காட்டினான். பானையை உடைச்சாலும் பரவாயில்லை படிக்க அனுப்ப மாட்டேன் என்று நினைத்துக்கொண்ட விசாலாச்சி உடைக்க வசதியாக இன்னும் பத்து பானையை வாங்கி வீட்டில் வைத்தாள்.

பையன் சாப்பிடாமல் கொள்ளாமல் சட்டிபானை உடைத்துக்கொண்டு இருக்கிறானே என்று பையன் நிலை பார்த்து பரிதாபப்பட்ட பரமன் பையனுக்காக விசாலாச்சியிடம் பரிந்து பேசினான், “டவுனக்கு படிக்க போகட்டும் விடு விசாலாச்சி.”

வெங்கட்டன் வாத்தியார் மீது காட்ட நினைத்த கோபத்தையும், மகன் ரெண்டாம் பிள்ளைமேல் காட்ட முடியாத கோபத்தையும் ஒன்றாக பரமன் மேல் காட்டினாள் விசாலாச்சி. “கூறு கெட்ட மனுசா. உனக்கு புத்தி இருக்கா. ஒத்தை பிள்ளைய அனாதையாட்டம் டவுனுக்கு அனுப்பிவெக்கச் சொல்லறீயே... வாய் சோத்துக்கு வழி இல்லையா இங்க? கஷ்டமோ நஷ்டமோ, கூழோ, கஞ்சோ அம்மா புள்ளையா ஒரு இடத்தில கெடக்கணும். படிக்கப் போயி பெரிசா என்னத்தை சம்பாதிப்பான். படிக்காதவன் ஊர்ல செத்தா போயிட்டான்? நாளைக்கு வெத்தல தோட்டத்துக்கு உன்னோட கூட்டிகிட்டு போற வழியப்பாரு. வந்துட்ட பரிஞ்சி பேசிகிட்டு”

கோபத்தையெல்லாம் கொட்டி பரமனை இன்னும் நார் நாராக கிழிக்கத்தான் நினைத்திருந்தாள் விசாலாச்சி. ஆனால் அதற்குள் ஹெட்மாஸ்டராகி ஓடிப்போன வெங்கட்டன் வாத்தியார் சைக்கிள் பெல் அடித்தபடி மானம் கெடுவதற்கென்றே வந்து சேர்ந்தார்.

வாத்தியாரைப் பார்த்ததும் உள்ளே அடங்கிக் கிடந்த மொத்த கோபமும் பேயாய் அலறிக்கொண்டு வந்தது விசாலாச்சிக்கு. “வாய்யா, வெக்கங்கெட்ட வாத்தியாரே. நீதானே என் குலத்துக்கு துரோகி... எங் குடும்பத்தை கெடுத்துப்போட்டு உனக்கு எப்படியா நல்ல சாவு வரும். பத்தாவது படிக்கட்டும் அனுப்பி வையின்னே அனுப்பினேன். இப்ப டவுனுக்கு போயி படிக்கணுன்னு ஒத்த கால்ல நிக்கறானே, உன் வேலைதானே இது! உருப்படுவியா நீ.” என்று காற்று விடாமல் பேசினாள்.

அத்தனையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்த வெங்கட்டன் வாத்தியார் முகமெல்லாம் வேர்த்து வழிய “வெயில்ல வந்தது தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணி குடு விசாலாச்சி” என்றான்.

“தண்ணி குடிக்க டவுனுக்குத்தான் போகணும். இங்கெல்லாம் படிச்ச பண்ணாடைங்களுக்கு பச்சை தண்ணி குடுக்கிற வழக்கமில்ல” என்று கத்தினாள் விசாலாச்சி.

இதைக்கேட்ட அம்மாக்கண்ணு கிழவி, “அடிப்பாவி மகளே...! உனக்கேன்டி இப்படி போவுது புத்தி. தவிச்ச வாய்க்கி தண்ணி தராட்டா பாவம் சுத்திக்கும்டி” என்று சொல்லிவிட்டு ஒரு சொம்பு நிறைய தண்ணி கொண்டுவந்து வாத்தியாரிடம் கொடுத்தாள்.

வாத்தியார் அதை சந்தோசமாக வாங்கி வறண்ட நாக்கு நனைய குடிக்கும்போதே “ஆனா வாத்தியாரே, ஒண்ணு தெரிஞ்சிக்கோ... எம் பேரனை பிரிக்க நெனைச்ச உனக்கு நல்ல சாவு வராது, ஆமா” என்றாள். வாத்தியாருக்கு பாதியில் தண்ணீர் நின்று தொண்டையில் ஊசலாடிற்று.

பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து வெங்கட்டன் வாத்தியாரை ஒருபிடி பிடித்தார்கள். வெயிலில் வந்த வெங்கட்டன் வாத்தியாருக்கு நாக்கு மட்டும்தான் வறண்டிருந்தது. இப்பொழுது உடம்பே வறண்டு போனது. இத்தனையும் கேட்டுக்கொண்டு பரமன் சும்மாயிருந்தானா என்றால் சும்மாயில்லை. சுவற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டு காதில் கோழி மயிர் விட்டு ஆனந்தமாக குடைந்துகொண்டிருந்தான்.

வீடே ரெண்டு பட்டு நிற்பதைப் பார்த்த ரெண்டாம்பிள்ளை புதுசாக வாங்கி வந்திருந்த ஒரு பானையை நடு வீதியில் சத்தம் போட்டு உடைத்து ரெண்டாக்கினான். பிறகு “என்ன படிக்க அனுப்பாட்டி கிணத்தில விழுந்து செத்துப்போவேன்.” என்றான்.

பையன் சொன்ன சொல்லின் வலியில் பயித்தியம் பிடித்துவிடும்போல இருந்தது விசாலாச்சிக்கு. என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே, “விழுந்து சாவு போ. ஆனா நீச்சல் தெரிஞ்ச நீ கெணத்தில விழுந்து சாவேன்றீயே புத்தி கெட்டவனே.” என்றாள்.

“நான் தண்ணி இல்லாத கெணத்தில விழுந்து சாவேன்” என்று ரெண்டாம் பிள்ளை சொன்னதும் அதுவரை கோழி மயிற்றில் காது குடைந்த பரமன் அதிர்ச்சியோடு “என்னா சொன்னே...?” என்று எழுந்து நின்றான்.

கோழி மயிர் அடைத்ததால் காது கேட்டிருக்காது என்று நினைத்து சத்தமாக “தண்ணியில்லாத கெணத்தில விழுந்து சாவேன்” என்று திரும்ப சொன்னான் ரெண்டாம் பிள்ளை.

பரமன் வாத்தியாரைப் பார்த்து, “பாத்தியா வாத்தியாரே... படிச்சா அறிவு வரும்னியே! உன்ன மாதிரி அவனும் கூறுகெட்டவனாயிட்டான் பாத்தியா? புத்தி எப்படி போவுது பாத்தியா?” என்று கத்தினான்.

“நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன், வரேன்” என்று சொல்லிவிட்டு நழுவ ஆரம்பித்தான் அந்த வெங்கட்டன் வாத்தியார் எனப்படும் வெக்கங்கெட்ட வாத்தியார். வாத்தியார் கிளம்புவதைப் பார்த்ததும் விசாலாச்சிக்கு பதைப்பு வந்துவிட்டது. ரெண்டாம் பிள்ளை வாத்தியார் சொன்னால்தானே கேட்கிறான். ரெண்டு நாள் சாப்பிடாமல் இருப்பவனை சாப்பிட வைக்க இந்த வாத்தியாரால்தான் முடியும். கோபத்தை அடக்கிக்கொண்டு “வந்தது வந்த, ஒரு வாய் சாப்பிட்டு வந்த விசயத்தை சொல்லிட்டு போ வாத்தியாரே...” என்றாள் விசாலாச்சி.

வாத்தியாருக்கு பயமாக இருந்தது. உம் புள்ளை ஸ்கூல்லையே மொத மார்க் எடுத்திருக்கான், சர்க்கார்ல உபகார சம்பளம் தருவாங்க, மேல படிக்க வைன்னு சொல்லத்தான் வந்தார். ஆனால் இவர்கள் போட்ட போடில் தனக்கு உபகாரச் சம்பளம் கிடைத்ததாய் நினைத்துக்கொண்டு “போட்ட சாப்பாடு போதும் விசாலாச்சி” என்றான்.

“சும்மா பயப்படாம வந்த விசயத்தை சொல்லு வாத்தியாரே” என்று கோழி மயிற்றை காதிலிருந்து எடுக்காமலே தைரியம் கொடுத்தான் பரமன். வந்த விசயத்தை சொன்னால் மட்டும் குடையும் காதுக்கு கேட்டுவிடவாப் போகிறது என்று அலுத்துக்கொண்ட வெங்கட்டன் வாத்தியார், ஆனமட்டும் ஆகட்டும்... போன மானம் போகட்டுமென்று வந்த விசயத்தை சொன்னார். விசாலாச்சிக்கு பத்திக்கொண்டு வந்தது. பையன் சாப்பிட வேண்டுமே என்று “அத அப்பறம் பேசிக்கிடலாம். ஒரு வாய் சாப்பிடு”என்றாள்.

வாத்தியாரும் பையனும் சாப்பிட்டார்கள். ரெண்டு நாள் பட்டினிகிடந்த ரெண்டாம் பிள்ளை சாப்பிடுவதைப் பார்த்த சந்தோசத்தில் விசாலாச்சிக்கு தலைகால் புரியாமல் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் “சரி படிக்கப் போகட்டும் விடு வாத்தியாரே” என்றாள்.

விசாலாச்சி சொன்னதைக் கேட்ட அதிர்ச்சியில் பரமன் கோழி மயிற்றை காதில் ஆழமாக விட்டுக்கொண்டு வலியில் ஐயோ என்று கத்தினான். மகன் படிக்கப் போகட்டும் என்று சொன்னதும் பரமன் ஐயோ என்று கத்தியது அபசகுணம் என்று விசாலாச்சி நினைக்கவில்லை. ஆனால் பையன் படிக்கப் போனதால் வீட்டு மகாலெட்சுமி எருமையை விற்கவேண்டி வந்ததும் அது போட்ட ஒரு பால் கன்று செத்துப்போனதும் ஒரு சோகக் கதை.


3

பையன் படிக்க போனபிறகு நிறைய காசு செலவாக ஆரம்பித்தது. எருமை பால் விற்று காசுக்கு பஞ்சம் இல்லைதான் என்றாலும் ஆயிரக்கணக்கில் தேவைப்படும் பணத்திற்கு ஒரே நாளில் பால் கரக்கும் எருமை எந்த உலகத்தில் இருக்கிறது? ரெண்டாம் பிள்ளை ஒருமுறை கேட்ட பெருந்தொகையை புரட்ட முடியாமல் தவித்துப்போனாள் விசாலாச்சி. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டாள். மறுநாள் கண் வீங்க தன் மகனைப் போய்ப் பார்த்தாள். “காசு பெரட்ட முடியலடா கண்ணு” என்றாள்.

“என்னய எதுக்கும்மா பெத்த, இத்தனை படிச்சும் இப்ப காசு கட்டலேன்னா வீணா போயுடுமே, படிச்சி முடிச்சா பெரிய வேலை கிடைக்கும், படிக்காட்டி நானும் அப்பனை மாதிரி வீட்டுக்கு வந்து தோட்டத்தில வெத்தலை கூலிக்காரனா ஆக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதான்.

அரண்டு போன விசாலாச்சி நேராக வீட்டுக்கு வந்து எருமை முன்பாக நின்றுகொண்டு தன் துக்கத்தை சொல்லி வெகு நேரம் அழுதாள். ஒரு கன்றை ஈன்று சில மாதம்தான் ஆன அது விசாலாச்சியைப் போல வயதாகி தளர்ந்து நின்றது. மூச்சு நிற்கும்வரை பெற்ற பிள்ளையை உயிர்வாழத் தூக்கிப் பிடிக்கும் ஒரு தாயின் அழுத்தமான யோசனை அவளுக்குள் ஓடியது. எருமையை தடவிக்கொடுத்தாள்; அழுதாள்; தீனி வைத்தாள்; அது போட்ட கன்றை அவிழ்த்து விட்டு மொத்தப் பாலையும் குடிக்கவிட்டாள்; குளிர்ந்த நீர் விட்டு குளிப்பாட்டினாள்; பொட்டு வைத்தாள்; தொட்டு வணங்கினாள். பிறகு எருமையை ஓட்டிப் போய் தரகனிடம் விற்று காசை வாங்கிக்கொண்டு வந்து மகனுக்கு அனுப்பி வைத்தாள்.

எருமையின் நினைவாக அதன் கழுத்துக் கயிற்றை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.

அம்மாக்கண்ணு கிழவி வாசற்படியிலேயே காத்திருந்து விசாலாச்சியை பல்கடித்து திட்டித் தீர்த்தாள். “வீட்டு எருமைய விக்கிற அளவுக்கு என்ன உசிர் போகிற கஷ்டம் வந்துச்சி உனக்கு?” கிழவியிடம்கூட எருமை விற்கப்போகிற விசயத்தை சொல்லவில்லை.

“ஒரு மகனுக்காக ஒரு அம்மா எம்மாம் பெரிய தியாகத்தையும் செய்யலாம் ஆத்தா” எருமையின் கயிற்றை பார்த்தபடி கண்ணீர் விட்டாள் விசாலாச்சி.

“நீதானேடி உம் மகனுக்கு ஆத்தா, எருமைய எதுக்கு விக்கணும்? உம் புருசன் இருக்கானே அவனை வித்து காசாக்கறது.” என்று கத்திய அம்மாக்கண்ணை பரிதாபத்தோடு பார்த்தாள் விசாலாச்சி.

“நானா ஆத்தா எம் புள்ளைக்கு தாயி? நான் பெத்த தாயிதானே ஆத்தா... பாலூட்டி வளத்தது யாரு, சொல்லு. அவன பெத்து ஒரு சொட்டு பால் ஊராம என் நெஞ்சி வறண்டு இருந்தப்ப அவனுக்கு பால் குடுத்தது அந்த எருமைதானே ஆத்தா. தரகனோட அது வம்பு பண்ணாம ஒரு வாய் கத்தாம போனத நீ பாக்கல ஆத்தா... வித்துப்புட்டேன் ஆனா அது கடைசியில பாத்த பார்வை... ஏ ஆத்தா, நான் பாவியா பொறந்தவ ஆத்தா... அது பாத்த பார்வைய நான் எப்படி தாங்குவேன் சொல்லு...”

மகளின் துக்கத்தை கண்டு உடைந்த அம்மாக்கண்ணு “சரிடியம்மா. வித்தது வித்தே, அது போட்ட கன்னுக்குட்டியும் சேத்து விக்கிறதுக்கென்ன? அது இங்க கிடந்து கத்திகிட்டு இருக்கே...”

“நம்ம வாழவெச்ச ஜீவனோட நெனப்பா அது நம்மகிட்ட இருக்கட்டும் ஆத்தா” என்று அழுதாள். ஆனால் அந்த பால் மறக்காத கன்றுக்குட்டியை காப்பாற்ற முடியவில்லை. ஒரே மாதத்தில் சரியாக தீவனம் எடுக்காமல் எலும்பும் தோலுமாகி செத்துப்போனது.

நெருப்பை மேலே கொட்டிக்கொண்ட உடம்புபோல் வாழ்க்கையானது அன்று விசாலாச்சிக்கு. ஒரு தாயையும் பிள்ளையையும் பிரித்து ஒரு உசிரையும் கொன்று போட்டோமே... அழுதபடியே கன்றை பின்கட்டில் புதைத்துவிட்டு ஒரு நாவல் மரத்தை நட்டு வைத்தாள். இனி ஒரு எருமை வாங்கி அதை விக்கிற பாவத்துக்கு ஆளாகக் கூடாது என்று அதன்பிறகு எருமையே வாங்காமல் இருந்தாள்.

கன்று புதைத்த இடத்தின் மேல் நட்ட மரம் வளர வளர அந்த இரு ஜீவன்களின் நினைவும் அவளை கிளை உலுக்கும் காற்றாக உலுக்கியபடி இருந்தது. அந்த மரம் இப்பொழுது நல்ல திடமான மரமாக உயர்ந்து நின்றது. அந்த மரத்திடம்தான் ஒரு வார காலமாக தன் சந்தோசத்தை சொல்லி புலம்பிக்கொண்டிருக்கிறாள். ரெண்டாம் பிள்ளை வரப்போவதைப் பற்றி சந்தோசமாய் பேசிக்கொண்டிருக்கிறாள். செடியா இல்லை மரமா என்று சொல்லமுடியாத ஒரு பருவத்தில் இருந்த அந்த நாவல் மரம் இதுவரை ரெண்டாம் பிள்ளையை பார்த்தது கிடையாது. அவன்தான் படிக்கும்போதும் வரவில்லை, வேலைக்குப் போயும் வரவில்லை, கல்யாணமாகியும் வரவில்லை, பேரன் பிறந்தும் வரவில்லையே. பிறகெப்படி பார்த்திருக்கும்.

பாவம் செய்து படிக்க வைத்தாலும் ரெண்டாம் பிள்ளை வீண் போகவில்லை. படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். எத்தனை காசு சம்பாதித்தால் என்ன, அன்றைக்கு விற்ற எருமையை, செத்த கன்றுக்குட்டியை திரும்ப வாங்க முடியுமா என்ற வேதனை விசாலாச்சிக்கு அந்த நாவல் மரத்தை பார்க்கும்போதெல்லாம் வரும்.

நாளைக்கு விடியற் காலையிலேயே ரெண்டாம் பிள்ளை வந்துவிடுவான். வந்தவர்களுக்கு களியும், கூழுமா தின்னத்தர முடியும். சந்தைக்குப்போய் நல்ல அரிசி வாங்கிக்கொண்டு, கொஞ்சம் தின்பண்டமும், மருமகளுக்கு வளையல், பேரனுக்கு பொம்மை எல்லாம் வாங்கிவர காலையிலேயே நாலு கோழியை பிடித்துக்கொண்டு கிழம்பிவிட்டாள் விசாலாச்சி.

வாசல் தாண்டியதும் “எங்க விசாலாச்சி கௌம்பிட்டே, சந்தைக்கா?” என்று கேட்டபடி கரடி குட்டிபோல தன் பேரனை இடுப்பில் சுமந்தபடி எதிரில் வந்து நின்றாள் சின்னக்கா.

‘அபசகுனமாய் கேட்டாளே கேணச்சி... போனா சந்தை இருக்குமா? கோழி விக்குமா? நெனைச்ச பொருள் வாங்க முடியுமா? வந்தாளே பாவி மக...’ என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்ப வீட்டுக்குப் போய் ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு திரும்ப கிளம்பினாள். அங்கேயே நின்றிருந்த சின்னக்கா “காத்தாலே இருந்து எம் மருமகளையும் காணோம் அவனையும் காணோம்... நீ பாத்தியா விசாலாச்சி” என்று கேட்டாள்.

நல்ல காரியத்துக்கு போகும்போது ஓடிப்போனவ சேதி வருதே கருமம் கருமம் என்று தலைநொந்த விசாலாச்சி, ஓடிப்போன சின்னக்கா மருமக தன் அழகுக்கு இத்தனை நாள் குடிகாரனோட இருந்ததே பெரிய விசயம் என்று நினைத்துக்கொண்டாள். எவனோடு ஓடிப்போனாள் என்று தெரிந்து கொள்ள “உம் மருமக காணோம் சரி. இன்னும் எவனைக் காணோம்?” என்று கேட்டாள்.

முறைத்துப் பார்த்த சின்னக்கா “எவனோட போவா அவ? என் மகனத்தான் காணோங்கறேன். ராத்திரியெல்லாம் ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க. காலையில காணோம். மருந்து குடிச்சி செத்துடப் போறா அவ. இந்த புள்ள அனாதையாயிடும்” என்று இடுப்பு பிள்ளையைப் பார்த்து கண்ணீர் விட்டாள்.

“அடி போடி இவளே... புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒருத்தி மருந்து குடிச்சி செத்தா இந்த ஊர்ல ஒரு பொம்மணாட்டி இருப்பாளாடி. எங்கனா வேலையா போயிருப்பா வந்துடுவா போ” என்று அவளை அனுப்பிவிட்டு சந்தைக்கு கிளம்பினாள்.

சமாதானம் செய்தாளே ஒழிய சின்னக்காமீது கோபம்தான். அவள் துக்கத்திற்கு இவளுக்கொரு சந்தோசந்தான். அந்த சின்னக்காவுக்கு விசாலாச்சி தன் பேரனை விட்டு பிரிந்திருக்கிற சங்கதியை குத்திக்காட்டுவதில் எப்பொழுதுமே ஒரு சந்தோசந்தான். தன் கரிச்சட்டி பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு வந்து விசாலாச்சியிடம், “உன் பேரன் எப்பிடி இருப்பான்? உம் பேரன் பேரென்ன? அவன் கருப்பா சிவப்பா சொல்லு...” என்று கேள்வி கேட்டு நோகடிப்பாள். பேரனைப் பார்த்து மாசக்கணக்காகி நினைப்பெடுத்து வாடும் விசாலாச்சி அன்றிரவு அழுவாள்.

ஊரில் விசாலாச்சி வயது கிழவிகள் எல்லாம் ஆளுக்கு ஒரு குரங்குகளை இடுப்பில் சுமந்து இது எம் பேரன், இது எம் பேத்தி என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். பேரன் பேத்திகள் தரும் இம்சைகளை வேதனையென்று சந்தோசமாய் சொல்கிறார்கள். சாகும் வயசு கிழவிகளுக்கு பேரன் பெத்திகளை சுமப்பதைவிட வேறு என்ன சுகம் இருக்கப்போகிறது. அப்படி ஒரு குடுப்பினைதான் இல்லாமல் போயிற்று விசாலாச்சிக்கு.

பையன் வீட்டுக்குப் போகும்போதுதான் பேரனை பார்க்க முடியும். பேரனைப் பார்த்ததும் ஆசையாய் எடுத்து கொஞ்சுவாள். உறவோடு ஒட்டாமல் அடி வாங்கிய பிள்ளை போல அவன் அழுவான். அங்கே இருக்கிற வரை ஒட்டவே மாட்டான். ஊருக்கு திரும்பும்போதுதான் கொஞ்சம் ஒட்டுவான். ஒரு சிரிப்பு சிரித்து வைப்பான். ஊருக்கு பஸ் ஏறி வரும்போது காரணமில்லாமல் கண்ணில் கண்ணீர் வரும். நெஞ்சு பாரமாய் இருக்கும்.

“எம் பேரன் ராஜாவாட்டம் சிவப்பு. அப்பன் போல துறுதுறுப்பு. அஞ்சி வயசில இங்கிலீசு பேசுது” என்று ஊரிலிருந்து வந்து கிழவிகளிடம் தன் பேர புராணம் சொல்வாள். ஆனால் பேரை மட்டும் சரியாக சொல்லத் தெரியாது. வளவளப்பான, சொன்னால் வாய்; கிழித்து காயம் ஆகும்படி ஒரு பெயரை தன் மகனுக்கு வைத்திருந்தான் ரெண்டாம் பிள்ளை. அதனால்தான் ‘உன் பேரன் பேரென்ன?’ என்று வம்பிழுப்பாள் சின்னக்கா.

இப்படி வயிற்றெரிச்சல் கொட்டிக்கொள்ளும் சின்னக்காவுக்கு இது வேணும் என்று நினைத்தபடி பனைமரத்து ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சந்தைக்கு போனாள். கொடித் தடத்தின் தூரத்தில் எவளோ ஒருத்தியை எவனோ ஒருத்தன் துரத்தி விளையாடுவது தெரிந்தது. சேலை ஊதாப்பூ கலர் என்பதால் அது சின்னக்காவின் மருமகள் என்பது புரிந்தது. யாரோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள்? பனைமரத்தை சுற்றிவந்து அவளை துரத்தியவன் இடுப்பில் வேட்டி இல்லாமல் டவுசர் மட்டும் போட்டிருந்ததில் அடையாளம் தெரியவில்லை.

ஆஹா. அங்கே மாமியா தேடிகிட்டு இருக்கா. அவகிட்ட மகனை விட்டுட்டு வந்து வேட்டியில்லாத ஒருத்தனோடு வெக்கங் கெட்டு விளையாடறாளே மானங்கெட்டவ. நாசமாப் போறவ மறைவாப் போனா என்னா? இப்படியா எல்லாம் பாக்க எவனோடையோ சரசமாடுவா? கோபமாய் பக்கத்தில் போனாள். அது எவனோ இல்லை சின்னக்காவின் மகன்தான். புருசனோடையா இந்த வெளையாட்டு?

கல்யாணமாகி நாலு வருசமே ஆகட்டும். ஒத்தை பிள்ளைய பெத்தவளாவும் இருக்கட்டும். ராத்திரி போட்ட சண்டைக்கு படுக்கையில சமாதானமாகனுமில்ல. இப்படியா பனைமரத்தை சுத்திவந்து பல் இளிச்சி சமாதானமாகனும். தலையில் அடித்துக்கொண்டாள். ஈனங்கெட்ட மருமகள் எதுக்காக இளிச்சாலும் எதிர்ல வர்றவங்க யாருன்னு தெரியாம போவுமா? ஆள் வருவது தெரியாமல் எதிரில் இடிப்பது போல் ஓடிவந்தாள். பக்கத்தில் வரவரத்தான் தெரிந்தது அவள் இளித்துக்கொண்டு வரவில்லை உயிரை பிடித்துக்கொண்டு வருகிறாள் என்று.

ஒரு பனம் பழத்தை எடுத்துக்கொண்டு பின்னால் ஓடிவந்த சின்னக்கா மகன் பலங்கொண்ட மட்டும் அதை வீசி எறிந்தான். சின்னக்கா மருமக தள்ளிப்போய்விட அந்த பனம்பழம் விசாலாச்சியின் வயிற்றில் வந்து பொத்தென்று விழுந்தது. அவள் கோழியை போட்டுக்கொண்டு மல்லாக்க விழுந்தாள்.

பனம்பழத்தில் அடித்த சின்னக்கா மகன் குறிதப்பி ஆள்மாற்றி பனம்பழம் விழுந்ததில் பயப்படாமல் பனம்பழத்தில் அடிபட்டவள் கோழியை போட்டுக்கொண்டு விழுந்த கோலத்தைப் பார்த்து பயந்து போனான். அதனால் ஓடிப்போய் பனைமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டான். தன் மேல் விழவேண்டிய பழம் அடுத்தவள் வயிற்றை பதம் பார்த்ததில் பதறிப்போன மருமகள் “அத்தே வயித்தில பட்டுச்சா” என்று ஓடிவந்து விசாலாச்சியை எழுப்பினாள்.

விசாலாச்சிக்கு பழம் எறிந்த பரதேசி மேல் கோபமாக வந்தது. காட்டுக் கத்தல் கத்தி திட்ட நினைத்தாள். ஆனால் வயிற்று வலியில் கத்த முடியவில்லை. சின்னக்கா மருமகள் இருந்த கோலத்தை பார்த்து வயிற்றில் இருந்த வலியெல்லாம் பறந்து போயிற்று. அவள் தலையெல்லாம் மண்ணாகவும் கண்ணோரத்தில் கொஞ்சம் ரத்தக் காயத்துடணும் இருந்தாள். “அடி யம்மாடி என்னடி ஆச்சி...? ரத்தம் வருதே”

“அந்த மனுசன் காலங் காத்தால சாராயம் குடிச்சிட்டு வந்து செத்துப்போடி நாயே... நான் ரெண்டாவதா கல்யாணம் பண்ணி சந்தோசமா இருக்கேன்னு வீட்டை விட்டு தொறத்தினான். எங்கியாவது போய் சகலான்னு கௌம்பி வந்தவள இங்க வெச்சி மண்ணாம் புட்டையால மண்டைய ஒடைச்சிப்புட்டான். நான் சாகத்தான் போறேன் அத்தே. எம் பையனை இந்தாளோட கூத்தியாவா பாத்துக்குவா சொல்லு?” என்று அழுதாள்.

“ஏய் அவளப் பத்தி பேசனியா கொண்ணே போடுவேன்” என்று பனைமரத்துக்கு பின்னால் இருந்து வேட்டை நாயைப்போல ஒரு பனை மட்டையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான் அவன்.

விசாலாச்சி கோபத்தோடு எழுந்து “எங்க, அடிடா, அடிடா பாப்போம்” என்று கண்களை ஊருட்டி மிரட்டியதும் மிரண்டு போன சின்னக்கா மகன் “யம்மா உனக்கு தெரியாது இவ புத்தி. அவ சரியில்ல யம்மா. நீ சந்தைக்குதானே போற... ஒரு பேரீய மாலை வாங்கியா. நான் இவள கொண்ணு செவுத்தோரம் சாத்தி வெக்கிறேன், மாலைய அவளுக்கு போடுவே” என்றான்.

ஆத்திரமான விசாலாச்சி எட்டி அவன் கன்னத்தில் அடித்தாள். கன்னத்தை பிடித்துக்கொன்டு ரெண்டடி பின்னாள் போனான் அவன்.

ரெண்டாம் பிள்ளையை என்றைக்குமே விசாலாட்சி இப்படி அடிதத்தில்லை. இப்படி அபாண்டத்தை ரெண்டாம் பிள்ளையும் செய்தது இல்லை. இந்த குடிகார நாய் வயசுதான் ரெண்டாம் பிள்ளைக்கும். ரெண்டு பேரையும் ஒன்றாகத்தானே பள்ளிக்கூடத்தில் சேர்த்தினார்கள். இந்த ஊரில் இந்த வயசில் இருக்கும் ஊர்ப் பயல்களில் ஒன்றுகூட இப்பொழுது யோக்கியமாக இல்லை. எல்லாத்துக்கும் குடிப்பழக்கம். கிழிந்த துணி, வாயில் கெட்ட வார்த்தை, பறட்டைத் தலை, பீடி, வருமானம் இல்லாமல் கடன்காரன் தொந்தரவு. எல்லாமே தருதலைகள்.

கன்னத்தில் அடிபட்டவன் கொஞ்சம் நேரம் நின்றிருந்துவிட்டு பிறகு பனைமரத்துக்கு முட்டுக்கொடுத்து உட்கார்ந்து ‘உவ்வாக்’ என்று பெரிதாக வாந்தி எடுத்தான். ஒரு வாலிபப் பையனை வாந்தி வரும்படி அடிக்க தன் கையில் பலமிருக்கிறதா என்று அதிசயப்பட்டால் விசாலாச்சி. அதே சமயத்தில் குடிகாரன் செத்து கொலைப் பழி தன் மேல் விழப்போகிறது என்று அரண்டும் போனாள். வாந்தியில் ரத்தம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள்.

வாந்தியினால் அந்த இடம் முழுவதும் பனங்கள்ளின் வீச்சம் அடித்தது. பதுங்கியிருந்த மருமகள் “எடு மவனே, வாந்தி எடுத்து சாவு... குடிக்காதேன்னா கேட்டியா... வாந்தி எடுத்து இங்கியே சாவு” என்று அழ ஆரம்பித்தாள். முட்டிப்போட்டு உட்கார்ந்திருந்த அவன் இதைக் கேட்டு மண்டி போட்டு அழ ஆரம்பித்தான்.

“பாத்தியா யம்மா...! என்னா சொல்லறா கேளு. நான் சாவணுமாம். எங்க ஆத்தாளும் நீயும் இவளுக்குதான் பரிஞ்சி பேசுவீங்க. என்ன மட்டும் அடி, இவள ஏன்னு ஒரு வார்த்தை கேக்காத. இவ கேட்ட கேள்விய உம் மருமக உம் மகன்கிட்ட கேட்டிருந்தா நீ சும்மா இருந்திருப்பியா?”

“என்னத்தடா கேட்டுட்டா?”

“என் இடுப்பு வேட்டியும் என் சொக்காயும் எங்கேன்னு கேளு, யம்மா?”

“எங்கடி போச்சி?”
“நான் ஒண்ணும் பண்ணல அத்தே... தினத்துக்கும் சாப்பாடு இல்லாத வருமையா இருக்கே... நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? உனக்கு எதுக்கு இடுப்புல வேட்டியும் சட்டையும்னு கேட்டேன். அதுக்கு வேட்டிய அவுத்து எங்கியோ போட்டுட்டு என்னய அடிக்க வந்தா நானா பொறுப்பு”

கன்னத்தில் கைவைத்து “அட கேனப் பயலே... இதுக்காடா அவுத்து போட்டுட்டு அலையுற.. ரோசமுள்ளவன் இந்த வீரத்த சம்பாரிக்கிறதுல காமிக்கணுன்டா போ, போ” என்று அவனை துரத்தினாள்.

பிறகு கோழியை எடுத்துக்கொண்டு சின்னக்கா மருமகளையும் சந்தைக்கு கூடவே கூட்டிப்போனாள். திரும்ப அடித்தாளும் அவன் அடிப்பான். இல்லை இவள் பொய் கிணத்தில் விழுந்து செத்தாலும் செத்துத் தொலைப்பாள்.

வழியெல்லாம் ஒரே சந்தோசமாக இருந்தது விசாலாச்சிக்கு. சின்னக்கா மருமகள் மண்ணாம்புட்டையில் ரத்தம் வர அடி வாங்கியதற்கோ இல்லை அவள் மகன் கள்ளு நாத்தத்தோடு வந்தி எடுத்ததற்கோ சந்தோசப்படவில்லை. தன் ரெண்டாம் பிள்ளை இப்படி துக்கிரியாக இல்லையே காப்பாத்தின கடவுளே என்றுதான் சந்தோசப்பட்டாள்.

கடவுள் என்றாள் அது வெங்கட்டன் வாத்தியார்தான். அந்த மனுசன் மட்டும் இல்லையென்றால் ரெண்டாம் பிள்ளை எங்கே படித்திருக்கப் போகிறான் எங்கே வேலைக்கு போயிருக்கப் போகிறான். இப்பொழுது கையெடுத்து கும்பிடுமளவுக்கு யோக்கியமான பிள்ளையாக இருப்பதற்கு அந்த மனுசன்தானே காரணம்.

ரெண்டாம் பிள்ளை மட்டும் படிக்காமல் இருந்திருந்தாள் கரும்பு வெட்டவோ, வெத்தலை கிள்ளவோ, மாடு மேய்க்கவோ போய் காசில்லாமல் கடன்வாங்கி குடித்து பொண்டாட்டியை பனைமரத்துக்கு அடியில் வைத்து மண்ணாம் புட்டையில் ரத்தம் வர அடித்திருப்பான். தன் மகன் வேட்டியில்லாமல் தன் மருமகளை பனைமரத்தை சுற்றிச் சுற்றி அடித்துவிட்டு வாந்தி எடுத்திருந்தாள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்ததுமே விசாலாச்சிக்கு குமுறிக்கொண்டு சிரிப்பு வந்துவிட்டது.

பக்கத்தில வந்த சின்னக்கா மருமகள் “சிரி அத்தே, சிரி... எம் பொழப்பு ஊரே சிரிக்கிற மாதிரிதான் இருக்கு” என்று சொல்லி அழுதாள்.

“உன்ன பாத்து சிரிக்கலிடியம்மா” என்று அவளை சமாதானம் செய்துவிட்டு சந்தைக்கு போய் தேவையானதை வாங்கிக்கொண்டு திரும்பினாள்.

பையன் படிக்கட்டுன்னு வெங்கட்டன் வாத்தியார் சொன்னது உண்மைதான். ஆனா சும்மாவா சொன்னான் மனுசன். தன் பொண்ணுக்கு மாப்பிளையா இல்ல ஆக்கிப்புட்டான். சைக்கிள்ல பொண்ண பின்னாடி உட்காரவெச்சி ரெண்டாம் பிள்ளைய முன்னாடி உட்காரவெச்சி படிக்க பள்ளிக்கூடம் கூட்டிகிட்டு போன வாத்தியார் எங்கப்போயி ஒண்ணா ஒக்கார வெச்சானோ யாருக்குத் தெரியும். கடையிசில கல்யாணம் பண்ணிவெச்ச பெறகுதானே தெரியுது அந்த வெக்கங் கெட்ட வாத்தியாரு எண்ணம்.

வாத்தியார் பொண்ணு நல்ல சிவப்புதான். நல்ல படிப்பு படிச்சி வேலைக்கு போறவதான அழகுதான். அதுக்காக படியேறி சம்மந்தம் பேச எத்தினி தைர்யம் வேணும். எம் பையன் வெத்தல கிள்ளிகிட்டிருந்தா வந்து எம் பொண்ண கட்டிக்கோன்னு கேட்டிருப்பானா வாத்தியாரு. எம் புள்ளைய நான் பிரிஞ்சிருக்க வாத்தியாருதானே காரணம்

சொந்தத்தில் இத்தனை செவப்பா பொண்ணு இல்லயேன்னு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா விசாலாச்சி. சம்மதம் என்று சொல்லாவிட்டால்கூட கல்யாணம் ஆகித்தான் இருக்கும் என்பது பின்னாடிதான் தெரிந்தது விசாலாச்சிக்கு. படியேறி சம்மந்தம் பேசறதுக்கு முன்னாடியே பத்திரிக்கை அடிச்ச கொடுமைய என்ன சொல்ல...

பையனை பிரிஞ்சிருக்கிற துக்கத்தில அந்த வாத்தியாருகிட்ட, “வாத்தியாரே எம் பையன் படிக்காம இருந்து, உம் பொண்ணையும் கட்டாம இருந்திருந்தா அவன் இங்கயே என் வீட்டுல இருந்திருப்பானே... நான் தெனம் எம் பையன பாத்த சந்தோசத்தில இருந்திருப்பேனே. உன்னாலதானே நான் பையன பிரிஞ்சிருக்கேன். எனக்கு தேவைதானா”ன்னு கேட்டதும் சிரிச்சிகிட்டு ஒரு கதை சொன்னானே... அந்த வாத்தியாரு.

“விசாலாச்சி காலக் கால கட்டிகிட்டு மொகத்த மொகத்த பாத்துகிட்டு அம்மாவும் புள்ளையுமா ஒரே வீட்டுல பட்டினியா கெடந்ததெல்லாம் அந்தக் காலம். இப்ப நாடு விட்டு நாடு போறாங்க, சம்பாதிக்க. காலம் அப்படி காலம். தெனத்துக்கும் மகனப் பாக்கணும் பேரன பாக்கனுன்னா ஆகுமா? இது எலிக்கும் மீனுக்குமான உறவு மாதிரி விசாலாச்சி. ரெண்டையும் கயிறு போட்டு கட்டி வெக்க நெனைச்சா தப்பாயிடும். எலி வளையில இருக்கணும். மீனு தண்ணியில இருக்கணும். கயிறு போட்டு கட்டினா எலியோட போற மீனு வளையில சாகும். மீனோட போற எலியும் தண்ணியில சாகும். அது அது எடத்தில அது அது இருக்கணும் அதான் தருமம்.”என்கிறானே.

பெத்தவளும் பொறந்ததுவும் பிரிஞ்சி கெடக்கிறதுதான் இப்பல்லாம் தருமமா? யாரிடம் நியாயம் கேட்க. நாம் பெத்தவதான். எனக்கவன் ஒரே மவன்தான். அவனைப் பாத்து எத்தனை நாள் ஆச்சி? பேரனைப் பாத்து எத்தனை நாள் ஆச்சி? வரேன் வரேன்னு எத்தனை நாள் கடுதாசி போட்டிருப்பான் எம் மவன். ஒருநாளும் வராம ஏமாத்திப்புட்டானே. இந்த முறை சத்தியமா வரேன்னுதான் காயிதம் போட்டிருக்கான். இந்தமுறையாச்சும் வருவானா? இல்ல வழக்கமாட்டம் ஏமாத்தம்தானா?

நான் சாகறதுக்கு முன்னாடியாச்சும் ஒரு வாட்டி வந்து பாப்பானா? இல்ல நான் செத்தாதான் இந்த மண்ணை மிதிப்பானா?

விடிந்தால் மகன் வருவானா மாட்டானா என்ற குழப்பத்தோடு வழக்கம்போலவே மகனுக்காக எல்லா பொருட்களையும் வாங்கி வீட்டையும் தயார்ப்படுத்திவிட்டு காத்திருந்தாள் விவாலாச்சி.

4

பலவருசம் வராத ரெண்டாம் பிள்ளை இப்பொழுது ஏமாற்றாமல் பொறந்த மண்ணுக்கு வந்துவிட்டான். மாட்டு வண்டியில் பிரயாணம் பண்ணும் ஊருக்கு தும்பைப் பூ போன்ற வெள்ளை காரில் வந்து இறங்கினான். ஊருக்கு வந்த ஒரே முதல் கார் என்பதால் மேலுடை இல்லாமல் சிலதும், கீழுடையும் இல்லாமல் சிலதுமாய் ஊர்ப் பிள்ளைகள் காருக்குப் பின்னே ஓடி வந்தார்கள். மருமகளும் மருமகனும் இன்றைக்குத்தான் வீட்டிற்கு முதல் முறையாக வருகிறார்கள். திருஷ்டி கழிப்பதற்காக ஆலம் கரைத்து தட்டோடு வீட்டு வாசலில் நின்றாள் விசாலாச்சி.

ரெண்டாம் பிள்ளை வந்தும் வராததுமாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டை ஓடிவந்து சுற்றிச் சுற்றிப் பார்ப்பான் என்று எதிர்பார்த்த விசாலாச்சிக்கு வியப்பாக இருந்தது. காரை விட்டு இறங்கிய மகன் இப்பொழுதுதான் காரையே முதல் முறையாகப் பார்ப்பதுபோல சுற்றி சுற்றி வந்து பார்த்தான். இந்த காரை இப்படி சுற்றிப் பார்க்கவா அங்கிருந்து இங்கு வந்தான்? என்று வருத்தமாக நினைத்துக் கொண்டாள்.

அவன் அம்மாக்கண்ணு கிழவியை பார்த்து எத்தனை நாள் ஆகியிருக்கும். ஓடிப்போய் பாக்கவேணாமா இந்த ஒத்தைப் பேரன். பாவம் கிழவி “எம் பேரன் வரான், பேரன் வரான்”னு பாக்கறவங்ககிட்ட எல்லாம் பாட்டாய் பாடிக்கொண்டிருந்தாள்.

“என்ன தேடற மாரீப்பா...?” என்று கேட்டுக்கொண்டு பரமன் போனான். அப்பன் முகத்தையாவது ஏறிட்டுப் பார்த்து பேசியிருக்கலாம் ரெண்டாம் பிள்ளை. முகம் பார்க்காமலேயே “வர்ற வழியெல்லாம் கல்லு முள்ளா இருந்திச்சிப்பா. அதான் டயர் நல்லா இருக்கான்னு பாக்கறேன். பங்சர் ஆயிட்டா திரும்பி போறது கஷ்டமாயிடுமே.” பரமனுக்கு பிள்ளை பாசத்தை மட்டுமல்ல, கோபம் துக்கம் எதையுமே வெளியே காட்டிக்கொள்ளத் தெரியாது. ஆழமான கிணற்றைப்போல் உள்ளே உள்ளதை மறைத்து வாழும் ஜீவன். ஆனால் ரெண்டாம் பிள்ளை மேல் எத்தனை பாசம் என்பது சிலநாள் பரமன் இரவில் புலம்பும்போது பார்த்திருக்கிறாள். விசாலாச்சிக்கு பரமனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

காரில் இருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து கதவில் அப்பிக்கொண்ட சாக்கடையை கழுவினான். சக்கரத்தில் மாட்டிய செடி கொடிகளை அப்புறப்படுத்தினான். சக்கரத்தை தட்டிப் பார்த்தான். நான்கு சக்கரங்களோடு கார் நன்றாக இருப்பது தெரிந்தபிறகுதான் அப்பாவிடம் திரும்பி, “நீங்க நல்லா இருக்கீங்களாப்பா?” என்று கேட்டான். அதன் பிறகுதான் காருக்குள் இருந்து மருமகளும் பேரனும் கீழே இறங்கினார்கள்.

பேரனைப் பார்த்ததுமே விசாலாட்சிக்கு சந்தோசத்தில் முகம் வீங்கிப் போனது. கொழுகொழுவென்ற சிவப்பாய், நன்றாக நீர் விட்டு வளர்த்த செடியில் விளைந்த தக்காளி போல மெதுமெதுப்பாய் இருக்கும் தன் பேரன் இந்த ஊரில் வளரவேண்டிய பிள்ளையே இல்லை என்று நினைத்துக்கொண்டாள். ஓடிப்போய் அள்ளி மார்பில் போட்டுக்கொள்ள மனசு அடித்துக்கொண்டது. திருஷ்டி கழிக்காமல் எப்படி எடுப்பது என்று ஆரத்தி எடுத்தாள்.

ஆரத்தி சுற்றச் சுற்ற விசாலாச்சிக்கு சந்தோசம் ஏறிக்கொண்டே இருந்தது. அக்கம் பக்கத்து சிறுக்கிகளெல்லாம் பார்க்கிறார்கள். ‘பாருங்கடி... எம் பேரன் அழக பாருங்க, எம் மருமக அழக பாருங்கடி...’ ஆரத்தி எடுத்து முடித்து மருமகளை உள்ளே வா என்று சொல்லிவிட்டு வீதி ரெண்டு பக்கமும் தன் பேரனைப் பார்த்து அதிசயித்து நிற்கும் கிழவிகளைப் பார்த்து ஆலத் தண்ணியை ஊற்றிவிட்டு படியேறி நிமிர்ந்து வீட்டுக்கு போனாள்.

அவளுக்கு சந்தோசத் திமிர் வந்து மூக்கு நிமிர்த்தி நடந்தாள். தொட்டதற்கெல்லாம் சிரித்தாள். கருவாட்டுக் குஞ்சுபோல கருத்துக் கிடந்த தேவாங்குகளை பேத்தி என்றும் பேரன் என்றும் எடுத்துக்கொண்டு தன் முன் வந்து கடுப்பேற்றிய தன் வயசுக்காரிகள் மீதிருந்த ஆத்திரமெல்லாம் இப்பொழுதுதான் தீர்ந்தது விசாலாச்சிக்கு.

தன் பேரனை இடுப்பில் வைத்துக்கொண்டு வீதி வீதியாக சுற்ற வேண்டும், கடைக்கு போக வேண்டும், சந்தைக்கு போக வேண்டும், ஒவ்வொருத்தி வீட்டுக்கும் போக வேண்டும், பேரனோடு போய் மாரியம்மாவுக்கு ஒரு பொங்கல் வைக்க வேண்டும், தண்ணீ எடுக்க போனாலும் பேரனை இன்னொரு இடுப்பில் வைத்துக்கொண்டு போக வேண்டும் என்று ஒரே கனவு மயத்தில் கிடந்தாள் விசாலாச்சி. கனவு என்ன கனவு! ஒரு வாரம் பேரன் இங்கேதானே இருக்கப் போகிறான். செய்துவிட்டால் போகிறது.

வீட்டுக்குள் வந்தவர்களை புதுப் பாய் எடுத்துப் போட்டு உட்காரவைத்தாள். பேரனையும் மருமகளையும் அதிசயமாய் பார்த்தாள். இந்த வீட்டில் இருக்கும்போது பிடிங்கித் தின்னும் அழகில் இருக்கிறாள் மருமகள். ஊரில் இப்படி அழகான மருமகள் எவளுக்குத்தான் வாய்த்திருக்கிறது. எத்தனை அழகா புடவை கட்டி எப்படி அழகா ஒக்காந்திருக்கா...

ஒரு பிள்ளை பெத்தபிறகு ரவிக்கையை சரியாக போடாமல் தூக்கலா பொடவைய கட்டி சப்பாணி மாதிரி உட்காரும் மருமகளைப் பெத்த மகராசிங்க வந்து பாக்கட்டும் எம் மருமக அழகை. இன்னும் விசாலாச்சிக்கு சந்தோசம் ஏறிக்கொண்டே இருந்தது. வீட்டின் நடுவில் மகாலட்சுமி இன்றைக்குத்தான் வந்து உட்கார்ந்தது போன்ற பிரகாசம் தன் மருமகளைச் சுற்றி இருப்பதை கண்கூடாகக் கண்டாள்.

“விசாலாச்சி... வந்தவங்களுக்கு ஒரு வாய் தண்ணி குடு” என்று பரமன் சொன்னதும்தான் கொஞ்சமாக நினைவு பெற்றாள் விசாலாச்சி.

“அய்யோ... மறந்து போச்சி” என்று தலையில் அடித்துக்கொண்டு ஓடிப்போய் புதுக் குடத்தில் சுத்தமாய் பிடித்து வைத்திருந்த தண்ணியை, புளி போட்டு விளக்கிய சுத்தமான பித்தளைச் சொம்பில் கொண்டு வந்து கொடுத்தாள். மருமகள் வாங்கிக்கொண்டாள்.

“கெணத்து தண்ணியாம்மா இது...? வேணாம் சுதா, அத குடிக்காத. கெணத்தில பாசியும் மீனுமா இருக்கிற தண்ணி. சளி பிடிக்கப்போவுது” என்று தடுத்த ரெண்டாம் பிள்ளை காருக்குப் போய் ஒரு பெரிய வெள்ளை கேனை எடுத்து வந்து அதில் இருந்த தண்ணியை பித்தளைச் சொம்பில் பிடித்து மருமகளுக்கு கொடுத்தான், தானும் குடித்தான்.

சுத்தமான தண்ணி குடிக்கிறது தப்பில்லைதான் ஆனால் அம்மா கொடுத்த தண்ணியை பளிச்சென்று நடு வீதியில் ஊற்றிவிட்டானே ரெண்டாம் பிள்ளை! விசாலாச்சிக்கு முகம் சுண்டிப் போயிற்று.

‘புதுத் தண்ணிய குடிச்சி ஒடம்புக்கு நோவு வந்துட்டா ஒரு வாரம் தங்கப்போற பச்ச புள்ளைங்க தாங்குமா? இதான் சரி’ என்று தனக்குத் தானே சமாதானம் ஆன விசாலாச்சி, சாப்பிடுவதற்கா பாய் போட்டு, தலை வாழை இழை போட்டு, “வாங்க கண்ணு சாப்பிடுங்க” என்று கை கழுவ தண்ணீர் கொடுத்தாள். இந்த தண்ணியில் கையாவது கழுவுவார்களா என்று பயந்தாள் அவள். ஆனால் நல்லவேளை கை கழுவிக் கொண்டார்கள்.

சந்தையில் பார்த்து பார்த்து வாங்கிய அரிசியில் செய்த சோறு போட்டாள். கொழுத்த கோழி அடித்து காரம் குரைச்சலாக மணக்க மணக்க குழம்பு வைத்திருந்தாள். ருசிபார்த்துச் சொல்லச் சொல்லி பரமனையும் அம்மாக்கண்ணையும் உசிரை எடுத்துவிட்டாள். குழம்பு நன்றாக இருப்பதாகத்தான் அவர்கள் சொன்னார்கள். ஆனாலும் மகனும் மருமகளும் நன்றாக இருப்பதாகச் சொன்னாள்தானே மனசு ஆறும்.

முழுக் கரண்டி கறியை எடுத்து மருமகளுக்கு வைத்தாள். “நல்லா சாப்புடு கண்ணு. காரம் கொரைச்சிதான் வெச்சிருக்கேன். முட்டை வெக்கிற பருவத்தில இருந்த கோழி... ருசியா இருக்கும்.” என்றாள்.

மருமகள் சட்டென்று கையை பின்னால் இழுத்துக்கொண்டாள். “கோழிக்கறியா? ஐயோ அத்த எனக்கு பிடிக்காதே, அத்தை.” என்றாள்.

“ஏந் தாயி, அங்க நீ கறி திங்கறத நாம் பாத்தேனே...”

“அவ கோழி கறி திம்பாம்மா... ஆனா நாட்டுக் கோழி சாப்பிட மாட்டா. அதுங்க அரணை, பூரான், கரப்பான் பூச்சின்னு கண்டதையும் சாப்பிடுதுங்கன்னு கொமட்டிகிட்டு ஓடிப்போயிடுவா.” என்று ரெண்டாம் பிள்ளை சொன்னான்.

“கடவுளே! தெரிஞ்சிருந்தா ஆட்டுக் கறி எடுத்து கொழம்பு வெச்சிருப்பேனே பாவி. சரி நீயாவது சாப்பிடு கண்ணு.” என்று மகனுக்கு குழம்பு ஊற்றப் போனாள்.

“அவ இந்தக் கறிதான் சாப்பிட மாட்டா. நான் எந்தக் கறியும் சாப்பிடறதில்லேம்மா. அதை விட்டு ரெண்டு வருசமாச்சி.” என்றான்.

கையில் கறிக்குழம்பு சட்டியோடு பரிதாபமாக பார்த்தாள் விசாலாச்சி. “நான் வேற கொழம்பு வெக்கிலையேய்யா? அவ்ளோ தூரத்தில இருந்து வந்திருக்கீங்களே பசி எடுக்குமேய்யா? கொஞ்சம் பொறுங்க கண்ணு. நான் கத்திரிக்கா போட்டு பருப்பு கொழம்பு வெச்சிடறேன். அதுவரையில இத சாப்பிடுங்க.” என்று சந்தையில் வாங்கிவந்த இனிப்பும் காரத்தையும் எடுத்து தட்டில் வைத்தாள்.

இனிப்பின் நிறத்தைப் பார்த்து ஆசையுடன் எடுக்க கை நீட்டினான் பேரன். விசாலாச்சி ஒன்று எடுத்து கையில் கொடுத்தாள். ரெண்டாம் பிள்ளை அதை வாங்கி தட்டிலேயே வைத்துவிட்டான். “என்னா எண்ணையில செஞ்சதோ தெரியலையேம்மா. பாக்கவே பழசு மாதிரி இருக்கு. எங்கம்மா வாங்கின இதை?” என்று அம்மாவிடம் கேட்டான்.

விசாலாச்சி “சந்தையில கண்ணு...” என்றாள்.

“இன்னும் சந்தைப் பலகாரம் தின்னா ஒடம்பு தாங்குமாம்மா? நீங்களும் தின்னாதீங்க” என்றான்.

‘இத்தனை நாள் சந்தை பலகாரம் தின்னுதான் உசிரோட இருக்கோம் நாங்க’ என்று புலம்பியபடி பிஞ்சுக் கத்திரிக்காயில் குழம்பு வைத்தாள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ரெண்டாம் பிள்ளையை பார்க்க வந்தார்கள். எல்லோரையும் நினைப்பில் வைத்திருந்தான். புதிதாக கல்யாணமாகி வந்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளையும் தான் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனாலும் அவர்களிடமும் உறவுக்காரனைப் போல அன்பாக பேசினான். எல்லோருக்கும் ஒரே பெருமை. இந்த ஊர்ல பொறந்த பையன் ஆபிசரு கணக்கா இல்ல இருக்கான் என்று அதிசயப்பட்டார்கள். அவர்களுக்கு சாக்லெட்டும் தின்பண்டங்களும் குழந்தைகளுக்கு விலை குறைந்த பொம்மைகளும் தந்தான்.

பேரனை குனிந்து ஆசையாக பார்த்தாள் அம்மாக்கண்ணு. இப்பொழுதுதானே முதல் முறையாக பேரனை பார்க்கிறாள். “என் ராசா வந்துட்டியா...! இந்த கொள்ளுப் பாட்டிய பாத்துட்டு போவ வந்துட்டியா...! எங் கண்ணு இந்த கிழவிகிட்ட கதை கேக்க வந்துட்டியா...! உங்க தாத்தன் கட்டி எழுப்பின மண் கோட்டைக்கு வந்துட்டியா...! இந்த கிழவிக்கு கொள்ளிபோட வந்துட்டியா...!” அம்மாக்கண்ணு கொஞ்சுகிறாளா அழுகிறாளா என்றே தெரியவில்லை.

பேரனை கன்னம் தடவி நெட்டி முறித்தாள். ‘வா, வா’ என்று எடுக்க கை நீட்டினாள். பேரனோ தன் அம்மாவின் மார்பில் தலை புதைத்துக்கொண்டு “அம்மா வீட்டுக்கு போலாம்மா” என்றான்.

“ராசா... எங் குட்டி. இதான் உன் வீடு. நீ இனிமே இங்கதான் இருப்பே” என்று அடுப்பில் விறகு வைத்து விசாலாச்சி குரல் கொடுத்தாள். விசாலாட்சிக்கு துக்கமாக இருந்தது. பக்கத்து வீட்டுப் பிள்ளையாட்டும் ‘நம்ம வீட்டுக்கு போலான்’னு சொல்லறானே. அதுக்கு இது அந்நிய வீடு ஆயிப்போச்சே...

அவசரமாக குழம்பு வைத்து சாப்பாடு போட்டாள். அவர்கள் சரியாக சாப்பிட்ட மாதிரியே தெரியவில்லை. எதோ கை நனைத்தார்கள். இந்த வேதனை வேறு விசாலாச்சியை வாட்டியது.

வேதனையை போக்கும் விதமாக மருமகள் ஒரு பையை எடுத்து விரித்து விசாலாட்சி கையில் கொடுத்தாள். அதில் பரமனுக்கும் விசாலாச்சிக்கும் அம்மாக்கண்ணுக்கும் புதுப் புடவை வேட்டி சொக்காய் என்று நிறைய இருந்தது. சின்ன சின்ன பாத்திரங்கள், கம்பளி, சொட்டர் வாங்கி வந்திருந்தார்கள். புதுசாக செருப்புகூட வாங்கி வந்திருந்தார்கள். மணி பாக்கத் தெரியாத பரமனுக்கு கடிகாரமும் கைத்தடி பிடித்து நடப்பதை கேவலம் என்று நினைக்கும் அம்மாக்கண்ணுக்கு பூன் போட்ட கைத்தடியும் வாங்கிவந்திருந்தான் ரெண்டாம் பிள்ளை.

அதன்பிறகு வீட்டை சுற்றிவந்தான் ரெண்டாம் பிள்ளை. “என்னமா இது வீடு இத்தனை பழசா போச்சி... இதுல எப்படி குடி இருக்கீங்க. பேசாம வித்துட்டு அங்க வந்துடும்மா.” என்றான்.

“நாங்களுந்தான் கண்ணு பழசா போயிட்டோம். அதுக்கு என்ன செய்ய முடியும். உன் அப்பனும் பாட்டியும் இந்த வீட்ட விட்டு எங்கயும் வரமாட்டாங்க. பொறந்த எடத்தில சாவணுன்னு அடம் புடிக்கறாங்க. எங்களுக்கு இங்க ஒரு கொறையும் இல்ல ராசா. நாலு சுவத்துக்கு நடுவிலதான தூங்கறோம். கூரைக்கு கீழதான் உட்காந்திருக்கிறோம். சந்தோசமா இருக்கோம் கண்ணு”

பின்கட்டுக்கு வந்து நாவல் மரத்தை பார்த்த ரெண்டாம் பிள்ளை “என்னம்மா இந்த மரத்துக்கு பொட்டு பூவெல்லாம் வெக்கிருக்கே. இது வேப்பமரமில்லையே” என்றான்.

“எருமை கண்ணு செத்து பொதைச்ச எடம் கண்ணு. அது நெனப்பா நான்தான் செடி வெச்சேன்.”
“எந்த எருமை?”

பக்கத்து வீட்டுக்காரங்கள மறக்கல எம் மகன். ஆனா ஒரு புள்ளைக்காட்டம் பால் குடுத்த எருமைய மறந்துட்டானே கடவுளே. “நம்மகிட்ட ஒரு எருமை இருந்துச்சே கண்ணு. அது போட்ட கிடாரிதான் செத்துப்போச்சி...”

“அந்த எருமையா! ஆமா, அது என்னாச்சி?”

“வித்துப்புட்;டேன் கண்ணு.” எருமையை விற்றுத்தான் நீ படிக்கிறதுக்கு காசு அனுப்பினேன் என்று அன்றும் சொல்லவில்லை இன்றும் சொல்லவில்லை விசாலாட்சி.

“நல்லதா போச்சி விடும்மா. சாணி கோமியம் இல்லாம வீடு சுத்தமா இருக்கும்” என்றான்.

வயதாகி நடக்க வழியற்றுப் போனால் பெத்தவகூட சாணி கோமியம் பெய்யற எருமைதானே என்று நினைத்துக்கொண்ட விசாலாச்சி மகனோடு வேறு என்னென்னவோ கதை பேசி சந்தோசமாகத்தான் இருந்தாள். ஆனால் வெயில் தாழ ஆரம்பித்ததும் “சரிம்மா. நேரமாச்சி நாங்க கௌம்பறோம்” என்று ரெண்டாம் பிள்ளை சொன்னதும் அதிர்ந்து போனாள்.

“ஒரு வாரம் தங்கி போறேன்னு சொன்னியே கண்ணு”

“ஆமாம்மா, ஆனா லீவு கெடைக்கல. எங்க மேனேஜர் வீட்டு கல்யாணத்துக்கு சிதம்பரம் போகவேண்டிய கட்டாயம். அங்கதான் போய்கிட்டு இருந்தேன். சரி போற வழிதானே இங்கயும் பாத்துட்டு போயிடுவோமேன்னு வந்தேன்.”

விசாலாட்சி அடக்க முடியாமல் அழுதுவிட்டாள்.

“போற வழியில பாத்துட்டு போலான்னுதான் வந்தியா? எங்கள பாக்கன்னு வரல. எப்ப போன புள்ளை இப்பதானே கண்ணு வந்தே. ஒரு ராத்திரி அப்பன் ஆத்தாவோட தங்கிட்டு போகக்கூடாதா? ஒரு மத்தியானம் இருந்துட்டு போறேங்கறீயே... ஒரு வாய் சோத்தையும் ஒழுங்கா திங்கலையே... நாங் குடுத்த ஒரு வாய் தண்ணிய ஒழுங்கா குடிச்சியா நீ...?”

“என்னம்மா இது. எதுக்கு அழறே... புதுத் தண்ணி ஒடம்புக்கு ஒத்துக்காதுன்னுதான் வீட்டுல இருந்த தண்ணி எடுத்துகிட்டு வந்தேன்.”

“நீ இந்த ஊர் தண்ணி குடிச்சி வளந்தவன் தானேய்யா...”

“சரிதாம்மா அவங்களுக்கு ஒத்துக்காதே...”

“தண்ணி ஒத்துக்கலையா பெத்தவங்க கூட இருக்கிறது ஒத்துக்கலையாய்யா... வயசான காலத்தில சாகற காலத்தில பேரன் புள்ளைங்களோட இருந்துட்டு சாகணுன்னு உன் அம்மாக்காரிக்கு ஆசை இருக்காதா. நீ சொல்லு... கல்யாணத்தை எங்கியோ பண்ணிகிட்ட, புள்ளைய எங்கியோ பெத்துகிட்ட, அதுக்கு மொட்டை அடிச்சி காதையும் எங்கியோ குத்திகிட்ட... ஒரு நல்லது கெட்டது, நோம்பு நொடின்னு வீட்டுக்கு வந்தியா நீ...? ஆயிரம் காசு சம்பாதிக்கலாம் கண்ணு, ஆனா பெத்தவங்களுக்கு ஒரு மகனா நீ சிலது செய்யணும் தெரிஞ்சுக்கோ...” என்று விடாமல் அழுதாள்.

“ஒரு மகனா நான் என்னம்மா செய்யல சொல்லு? மாசா மாசம் பணம் அனுப்பறேனே...”

அது வரையில் அமைதியாக இருந்த அம்மாக்கண்ணு கிழவி, “அடப் பயலே... மாசா மாசம் காசு தர்றவன்தான் மகன்னா இவளுக்கு தபால்காரன்தானேடா புள்ளையாவான். அவன்தானே மாசா மாசம் காசு தரான்.” என்றாள்.

அதுவரை அமைதியாக இருந்த பரமன், “விசாலாச்சி, போகட்டு விடு ஆபிசரு. ஒரு கலெக்டரு வந்து போனதா நெனைச்சிப்போம். மகன் பொறக்கல அதனால வீட்டுக்கு வரலேன்னு நெனைச்சிக்குவோம்”என்றதும் ரெண்டாம் பிள்ளை அழுதுவிட்டான்.

“என்ன பேச்சிப்பா பேசறீங்க. நான் திமிர் எடுத்தா இதை செய்யறேன். சண்டை சச்சரவோடையா போறேன். என்னோட பொழைப்பு அங்க இருக்குப்பா. உங்க மேல பாசமில்லாமயா இருக்கேன். உங்க நல்லதுக்கு என்னென்னமோ செய்ய நான் ஆசைப்படறேன்பா. அங்க வாங்க சவுகரியமா இருங்கன்னு சொல்லறேனே...”

ரெண்டாம் பிள்ளை அழுவதைப் பார்த்துவிட்டு பக்கதில் நின்ற மருமகளும் அழுதுவிட்டாள். “சரி அத்தை, நாங்க ஒரு வாரம் இருந்துட்டே போறோம். விடுங்க” என்றாள்.

தன்னால் மகன் அழுவதைப் பார்த்து சங்கடப்பட்ட விசாலாச்சி கண்ணை துடைத்துக்கொண்டு சமாதானமாக சொன்னாள், “வேணாந்தாயி. மேனேஜரு வீட்டு கல்யாணமுன்னான். போகாட்டி பொல்லாப்பு வரும். எப்பவும் ஒட்டிகிட்டே இருந்தாதான் ஒறவா என்ன. பிரிஞ்சிருந்தா பெத்தவ இல்லே, புள்ளை இல்லேன்னு ஆயிடுமா? இன்னொரு முறை வந்து இருந்துட்டா போவுது. கிளம்புங்க” என்றாள்.

அவர்கள் கிழம்பிப் போய் காரில் உட்கார்ந்ததும், ஓடிப்போய் மருமகளுக்கு வாங்கிவந்த கண்ணாடி வளையலையும், பேரனுக்கு வாங்கிவந்த பிளாஸ்டிக் பொம்மையையும் எடுத்து வந்து கொடுத்தாள்.

“அம்மா...” என்று அழுத கண்ணை துடைத்துக்கொண்டு சிரித்துப் புலம்பிய ரெண்டாம் பிள்ளை, “இதை எதுக்கு வாங்கின? இவ கண்ணாடி வளையல் போட மாட்டாம்மா... இந்த பிளாஸ்டிக் பொம்மைய உம் பேரன் வாயில வெச்சி விளையாடினா புண்ணு வந்துடாதா. எதுக்கு காசை செலவு பண்ணி இந்த தேவயத்ததை வாங்கினே..” என்றான்.

வளையலோடு நீட்டிய கைய மடக்காமல் ரெண்டாம் பிள்ளையை பரிதாபமாக் பார்த்தாள் விசாலாச்சி.

மருமகள் ரெண்டாம் பிள்ளையை அடக்கினாள். “என்னங்க இது. ஆசையா வாங்கி வெச்சத வேணான்னு சொல்லிகிட்டு. குடுங்க அத்தை உங்க ஆசைக்கு நான் போட்டுக்கிறேன். உங்க பேரன் இந்த பொம்மைய வெச்சி வெளையாடுவான். வாயில வெச்சிக்காம பாத்துகிட்டா போச்சி"” என்று வாங்கி காரில் வைத்துக்கொண்டாள்.

அவர்கள் வளையலையும், பொம்மையையும் என்ன செய்வார்கள் என்று விசாலாச்சிக்குத் தெரியும். என்றாலும் சிரித்த முகமாக “போய் வா தாயி... பத்திரம் கண்ணு” என்று கைய ஆட்டி அனுப்பி வைத்தாள்.

அவர்கள் போனபின்பு விசாலாச்சிக்கு என்ன செய்வதென்று புரிவில்லை. வந்து போனது சொந்த மகனா அந்நியப் பிள்ளையா என்று விளங்கவில்லை.

ஒரு குடிகாரனாக, படிக்காதவனாக, சம்பாதிக்காத பிள்ளையாக இருந்திருந்தால்கூட தினத்திற்கும் பார்த்திருக்கலாமே என்று வருந்தினாள். பெத்தது ஒரு பக்கம், பெத்தவ இன்னொரு பக்கமா எப்பவுமே சேராம வாழற இந்த வாழ்க்கை தேவைதானா? சாகிற வரையில ஒரு விடிவே இல்லாம பிரிஞ்சே இருக்கிறது எதனால வந்த சாபம்? ஒரு எருமைக் கன்றை அதன் தாயிடமிருந்து பிரித்து சாகடித்த பாவம்தான் தன்னை சுற்றுகிறதோ என்று குழம்பித் தவித்தாள்.

தன் வமிசத்தின் கடைசிக் கொழுந்தை - தன் பேரனை வழியனுப்பும் வரை தொட்டு தூக்கி மார்பில் இறுக்கிக் கொள்ளாமலேயே இருந்ததை நினைத்து அவளுக்கு ஒரே துக்கமாக வந்தது. தனக்குள் கிளம்பிய பெரும் துக்கத்தை மறைக்க வழியற்று வயதாகி தள்ளாடிப்போன விசாலாச்சி வீட்டின் பின்கட்டிற்குப் போய் நாவல் மரத்தை உலுக்கு உலுக்கு என்று உலுக்கியபடி அழுதாள். அவளுக்கு தன் துக்கத்தை சொல்ல இப்பொழுது அந்த ஒற்றை மரத்தை தவிர வேறு நாதி கிடையாது. அவள் உலுக்கியதில் சில காய்ந்த சரகுகளை உதிர்த்து விட்டு பேசாமல் நின்றது அந்த நாவல் மரம். அந்த மரத்திடமும் சில காய்ந்த சரகுகளன்றி வேறு கிடையாது.

- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It