அன்பில் ஊறும் மகாவுக்கு,

Man ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி பிதுங்கிருச்சு.

அன்னிக்கு ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளின லாட்ஜ்ல ரூம் கிடைச்சது. பக்கத்து ரூம்ல, உடம்பு முழுக்க மாட்டிக்கிட்டு ஆட்டுற மாதிரி வளையல் கிணுகிணுப்பு. ஓயாத சிணுங்கல். விரசமான பேச்சு. கெக்கக்கேன்னு சிரிப்பு. இம்சை தாங்கலை. அருவருப்பு. இந்த ஊர்ல பொண்ணுங்களும் சிலதுகள் தண்ணி, தம்மெல்லாம் அடிக்கும் போல. நிதானம் தப்பின பேச்சு, பாட்டு, கூத்து கும்மாளம். இடையில, பாத்ரூம் போனவ, "இன்னும் தூங்கலையா சார்...லைட் எரியுதே"ன்னு விசாரிக்கிற அளவுக்கு தைரியம்.

அடுத்த வீட்டு ஆம்பளையை இவளோ, அவன் இவளையோ பாத்துடக் கூடாதுன்னு, விடிகாலைல வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வீட்டுக்குள்ள அடைஞ்சிடறபடி பொண்ணுங்களை வளர்த்த இந்த மண்ணுல, இப்ப பொண்ணுங்க எப்படி ஆயிடுச்சு பாத்தியா மகா... ஒருவேளை இப்படி வளர்த்தினது தான் அவங்கள இப்படி ஆக்கிடுச்சோ... என்ன இழவோ, விடிஞ்சாப் போதும்னு ஆயிருச்சு.

நான் டிவிசனல் ஆபீஸ்ல இருந்தப்ப, கூட தேவராஜ்னு ஒருத்தன் வேலை பார்த்தானே ஞாபகமிருக்கா... நம்ம கல்யாணத்துக்கு கூட வந்திருக்காம்மா. ஆல்பத்துல பாரு, வெளுத்த ஜீன்சும் முரட்டு ஜிப்பாவும், சொறிஞ்சு விட்டாப்ல தாடியுமாயிருப்பான். அவன் இப்ப இங்கதானிருக்கான். வந்து ஆறுவருசமாயிருச்சாம். இன்னமும் கட்டை பிரம்மச்சாரி. ரெண்டாம் நாள்லேயிருந்து அவன் ரூம்ல தான் என் வாசம்.

அவன் உன்னை ரொம்பவும் விசாரிச்சான். "அதென்னடா பையனுக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்காம அரவிந்துன்னு பேர் வச்சிருக்கே... அடுத்ததும் பையனா பொறந்துட்டா, முழுவிந்துன்னோ கால்விந்துன்னோ வச்சுத் தொலைக்காதே"ன்னு சத்தம் போட்டான். அவன் எப்பவும் இப்படித்தான். ஏடாகூடாமா ஏதாச்சும் சொல்லுவான். மெட்ராஸ் ஆபிஸ்ல வினோத்குமார்னு ஒரு லிப்ட் ஆபரேட்டர். எப்பவும் நிரோத்குமார்னு தான் இவன் கூப்பிடுவான். அவனவன் மொழி, கலாச்சாரத்துக்கு தக்கன பேரை வைக்கணும்கிறது அவன் வாதம். நமக்கெங்கே அந்த யோசனையெல்லாம்... கூப்பிட ஒரு பேரிருந்தா போதும்னு நினைக்கிறோம்.

நேத்தைக்கு பீர்குடிக்கக் கூப்பிட்டான். வேண்டாம்னேன். "என்னடா, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டியா...பரவால்ல, தங்கச்சி கெட்டிக்காரிதான். கரெக்டா லகான் மாட்டியிருக்கா"ன்னு உன்னை பாராட்டினான். எந்தப் பெண்ணும் தம்புருசன் குடிக்கிறதை விரும்பமாட்டாள்னு, நானாத்தான் நிப்பாட்டினேன். ஆனா, பாராட்டு உனக்கு... நம்ம ஜனங்களே இப்படித்தான். திட்டறதாயிருந்தாலும், பாராட்டறதாயிருந்தாலும் காரணம் யாரோ அவங்களை திட்டறதுமில்லை பாராட்டுறதுமில்லை. விரல் சப்பறது ஒருத்தன் வெல்லம் திங்கறது வேறொருத்தன்.

இங்க எல்லாமே காஸ்ட்லி மகா. முந்தா நாள் சலூன்ல ஷேவிங் பண்ணிக்கிட்டு பத்துரூபா கொடுத்தா, மிச்சம் மூணு ரூபா தந்தான். ஷேவிங் மட்டும்தான்னேன். அதுக்கு மட்டும்தாங்க எடுத்திருக்கேன்னான். வெறுத்துப் போச்சு. பேசாம, தேவராஜாட்டம் நானும் தாடி விட்டுட்டா என்னன்னு யோசனை.

பக்கத்து சந்துல ஒரு மெஸ். மூணுவேளையும் அங்கதான். தினமும் அங்கயே சாப்பிட்டாலும் எக்ஸ்ட்ராவா கறியோ மீனோ வாங்கிக்கிட்டா தனி உபசாரம். என்னவோ ஒவ்வொருத்தனுக்காகவும் ஒவ்வொருவாட்டி ஆத்துக்கோ கடலுக்கோ போய் மீன் பிடிச்சாந்து வறுத்து தர்றமாதிரி ஒரு துண்டு 12 ரூபா. நமக்கெங்கே கட்டுபடியாவும்... எக்ஸ்ட்ரா எதுவும் வாங்கிக்கிறதில்லை. மிஞ்சிப்போனா ஒரு ஆம்லெட்டோ ஆப்பாயிலோ. கடனுக்கு போடறாப்ல நெனப்போ என்னமோ டொப்பு டொப்புன்னு தலையில இடிக்கிற மாதிரிதான் ஒவ்வொன்னையும் வைப்பானுங்க. எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு அம்பது ரூபாயைத் தாண்டிடுது. அது இல்லாம மேல்செலவு வேற. பிஸ்ல தர்ற படியெல்லாம் தாங்காது. இன்னும் மூணுவாரம் பல்லைக் கடிச்சிட்டு இருந்துட்டு வரவேண்டியதுதான்.

இந்த ட்ரெயினிங்கால ஒரு பிரயோஜனமுமில்லை. என்ன பண்ணித் தொலைக்கிறது, ஒரு இன்க்ரிமென்டுக்காக இந்த கூத்துல நானும் ஆடித்தானாகணும். தமாஷா, இல்லே கொடுமையான்னு தெரியலை. எங்க செக்ஷனை குளோஸ் பண்ணி சேலம் ஆபிஸோட சேர்க்க உத்தரவு வந்திருக்கு. நான் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் முடிச்சிட்டு வந்து மோட்டுவளைய பாத்துக்கிட்டு இருக்கணும். வேலைவெட்டி இல்லாம கிடக்க எதுக்கு கம்ப்யூட்டர் ட்ரெயினிங்... தலையில கிரீடம் அடியில அம்மணம்னு நம்மூர்ல சொல்ற கதைதான் இது.

அங்க நல்ல மழைன்னு பேப்பர்ல பார்த்தேன். உங்கப்பா பொன்னேர் கட்டிட்டாரா... இந்த மழைய நம்பி எதையாவது விதைச்சிட்டு அப்புறம் காயுதே கருகுதேன்னு பொலம்பப் போறாரு. எதுக்கும் இன்னொரு மழைய பார்க்கச்சொல்லு. இல்லேன்னா போனவருச கதைதான் இப்பவும்னு ஆயிடும்.

இங்கயும் ரெண்டுநாளா மழை. தெருவுல கால்வைக்க முடியலை. நசநசன்னு சேறும் சகதியும். சாக்கடைன்னு ஒண்ணு தனியா எதுக்கு இருக்குன்னே விளங்கலை. எல்லாமே ரோட்டுலதான். "தெருக்கள் நேர்நேராகவும், அகலமாகவும், வடிகால் வசதியோடும் இருந்தன"ன்னு புதையுண்ட மொகஞ்சதாரோ ஹரப்பாவுக்கு பிறகு எந்த நகரத்திலயும் இருக்கிறதை பார்க்கவும் முடியலே. படிக்கவும் முடியலே. த்தூத்தேறி...

நம்ம வால் எப்படியிருக்கான்? மாமனுங்க ரெண்டுபேருக்கும் செமத்தியா செலவு வச்சிருப்பானே... விளையாடப் போகாதே வெளியப் போகாதேன்னு அவனை கட்டுதிட்டமா அடக்காதே. இப்ப லீவ்தானே. விடு, விளையாடட்டும். அஞ்சுல வளையலேன்னா அம்பதுல வளையாதுங்கன்னு இதைப் படிக்கிறப்பவே எனக்கு பதில் சொல்லணும்னு உன் வாய் துடிக்கும். ஒரேயடியா வளைச்சு கடைசியில நிமிரத் தெரியாம போயிடக் கூடாதில்லையா? அதுவுமில்லாம அம்பதுல எதுக்கு வளையணும்னு கூட நாம யோசிக்க வேண்டியிருக்கு.

நமக்காச்சும் மடியில கிடத்தி கதை சொல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. இப்ப இருந்தாலும் எந்த பாட்டிக்கு கதை தெரியும்? அவங்கதான் இப்ப டி.வி முன்னாடி வாய் பொளந்து கிடக்காங்களே... குழந்தைக்கு என்ன தெரியும்? அவங்க உலகமே தனி. அதுக்குள்ள நாம நுழையாம இருக்கறவரைக்கும் அதுகளுக்கு சந்தோசம். நீயும் நானும் அனுபவிச்சு இழந்து மறந்த சந்தோசம். அது அவனுக்கு விளையாட்டுல கிடைக்கும்னா நாம ஏன் தடுக்கணும்...

சரி மகா நீ எப்படியிருக்கே... உனக்கென்னடியம்மா... காலையில வந்தா சாயங்காலம் பஸ்ஸேறி பறக்கிற மகள், ஒரு மாசம் முழுசா தங்கறதுக்கு வந்திருக்காள்னு சந்தோசத்துல உங்கம்மாவுக்கு தலைகால் புரியாது. உன் தங்கச்சி சிறுவாட்டுல வளர்ற கோழியெல்லாம் உன் தட்டுலதான் இருக்கும். நல்லா சாப்புடு. எப்ப தண்ணி லாரியோட ஹாரன் சத்தம் கேட்குமோங்குற நித்ய கவலைய விட்டுட்டு நல்லா சாப்பிட்டு தூங்கி இந்த ஒரு மாசத்துலயாவது உடம்பை கொஞ்சம் தேத்து.

ரொம்ப அனிமிக்கா இருக்கேன்னு டாக்டர் தந்த டானிக் முழுசையும் நீ குடிச்சிருக்கணும். மறுத்திட்டே. அலமாரியில பாதி பாட்டில் நிறம் மாறி கிடக்கு. கேட்டா, எண்ணைய பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டறதுதாங்க ஒட்டும்னு பாட்டியாட்டம் பழமை சொல்றே. ஒவ்வொண்ணுகளும் எப்படி திண்டுக்கட்டைங்களாட்டம் திமிர்த்துக்கிட்டு ஊறுதுங்க, நீ என்னடான்னா நாளிருக்க நாளிருக்க இளைச்சுக்கிட்டே போற. போனவாரம் தைச்ச ஜாக்கெட் இந்தவாரம் லூசாயிருக்குங்கறே.

வேளாவேளைக்கு ஏதாச்சும் சாப்பிட்டாத்தானே... பசின்னா பத்தும் பறக்கும்பாங்க. உனக்கு பத்தும் பறந்து வந்து பக்கத்துல நின்னாலும் பசி மட்டும் வரமாட்டேங்குது. மனசுல தீராத கவலை உள்ளவங்களுக்கு உடம்புல எதுவும் ஒட்டாதாம். ஏன் மகா, சொல்லி ஆத்திக்க முடியாத கவலை ஏதாச்சும் உனக்குள்ள இருக்கா... வெளிப்படுத்த முடியாம மனதுக்குள்ளயே நெனச்சு நெனச்சு மருகிக்கிட்டிருக்கியா.. சொல்லு மகா...

இந்த எட்டு வருசத்துல ஒரு நாளும் உன்னைக் கேட்டதில்லை. சொல்லியும் எதுவும் கப்போறதில்லேன்னு நெனச்சோ என்னவோ நீயும் எதையும் சொன்னதில்லை. அதுவுமில்லாம, நேருக்குநேரா கேட்டா இயல்பா இருக்காது. சினிமாவுல கேட்கிற மாதிரி செயற்கையா இருக்கும். பதிலும் வெளிப்படையா இல்லாமா போலியாத் தானிருக்கும். அதனால தான் இப்ப லட்டர்ல கேட்கிறேன். இவனை விடவும் வேற ஒரு எடத்துல நமக்கு நேர்ந்திருந்தா நல்லா பொழைச்சிருப்பேன்னு உனக்கு எப்பவாச்சும் தோணியிருக்கா... அப்படி தோணுற அளவுக்கு என்னோட நடவடிக்கையில எதெது இருக்கு...

"என்னங்க இது, கல்யாணமாகி இத்தனை வருசம் கழிச்சு இப்படியெல்லாம் கேட்டுட்டு..."ன்னு சம்பிரதாயமா பதில் சொல்லாதே. அட்லீஸ்ட், இதை படிக்கிறப்பவாச்சும், உன் மனசுல இருக்கிறதை ஒருவாட்டி வாய் விட்டு சொன்னினாக்கூட ஆறுதலாயிருக்கும்.

என்னோட, கடைசிவரைக்கும் கஷ்டநஷ்டங்கள்ல (சுக துக்கம்னு நமக்கு கிடையாது. நமக்கெல்லாம் கஷ்ட நஷ்டங்கள்தான்) பங்கெடுத்துக்கிறவ நீதான்ற முறையிலயோ, உனக்கும் உணர்வுகள் இருக்குங்கிற வகையிலயோ உன்னை மதிச்சு கலந்துபேசி முடிவெடுக்கிற பக்குவம் எனக்கு இன்னமும் வரலை. முரட்டடியா "எனக்குத்தான் தெரியும்''னு சொல்லாமலே அப்படியான மனநிலையிலதான் உன்னை நடத்தியிருக்கேன். ஆனா நீ முகஞ்சுளிச்சதில்லை.

யோசிச்சுப் பார்த்தா, உனக்குன்னு எதையும் செய்யலேங்கிறது நல்லாவே படுது. உடம்பை மறைக்கத் துணியும், வயித்தை நெறைக்க சோறும்கிறதை தாண்டி, ஊர் உலகத்துல மத்த பொம்பளைகளுக்கு வாய்ச்சிருக்கிற எதுவும் உனக்கு நேரலை. கல்யாணநாள்ல புடவை எடுக்கிறது கூட, முதல் வருசத்தோட நின்னுப் போச்சில்லையா...

எப்பவெல்லாம் கோவாப்டெக்ஸ்ல நிலுவை தீருதோ அப்பத்தான் நமக்கு தீபாவளியும் திருநாளும்னு மாறிடுச்சு. என்னவோ ஒரு கலர்ல சேலை, அதுக்கு சம்பந்தமேயில்லாத ஜாக்கெட்... முந்திய கழுத்து வரைக்கும் இழுத்து விட்டுகிட்டு நீ நடக்குறப்ப பலநாள்ல எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வந்திருக்கும். தாலிக்கயிறை தவிர பொட்டிலிருந்து மெட்டி வரைக்கும் மேட்சிங்கா போட்டுக்கணும்னு கிழவிங்ககூட ஆசைப்படற இந்த காலத்துல, உனக்கு அந்த ஆசையெல்லாம் வர்றதில்லையா? ஒரு குண்டுமணி செஞ்சுப்போடலேன்னாலும், இருந்ததையாவது விட்டுவச்சேனா... எல்லாத்தையும் தொலைச்சு முடிச்சாச்சு.

என்ன பண்றது... நம்ம நெனைப்புக்கும் திட்டத்துக்கும் மீறி வந்த செலவுங்க ஒண்ணா ரெண்டா... ஒப்புதலில்லேன்னாலும் செஞ்சாக வேண்டிய செலவுகள்... மூத்தப் பையன்கிற பொறுப்பால தட்டிக்கழிக்க முடியாத செலவுகள். ஒத்தை சம்பளத்துல அதுவும் சொத்தை சம்பளத்துல அத்தனைக்கும் ஈடு கொடுத்து தாக்குபிடிச்சு நின்னேன்னா அது உன்னோட பலத்துலதான் மகா. கூட நம்ம பிரண்ட்ஸ்ங்க சிலர்.

நேத்து சர்வீஸ்ல சேர்ந்தவன்கூட வீடுவாசல் தோட்டம் தொறவு வண்டி வாகனம்னு பொண்டாட்டி புள்ளைய சுகபோகமா வச்சிருக்கிறதை பாக்குறப்ப கண்ணுக்கு தெரியாத மாயவாள் மனசை அறுத்தறுத்து ரணமாக்குது. அவங்களுக்கு சம்பளத்துல மிச்சம் பிடிக்கிற அளவுக்கு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்ப சூழ்நிலை. இல்லேன்னா ஏதாச்சும் சைடு பிஸினஸ். கொஞ்ச பேர்தான் அப்படி. பெரும்பாலானவங்க கிம்பளத்தைத்தான் நம்பியிருக்காங்க. என் சுபாவத்துக்கு அது பொருந்தலை. பத்துபேருகிட்ட கை நீட்டி உனக்கு பட்டுப்புடவை வாங்கித்தரலாம். கட்டிக்கிட்டு நீ தெருவுல நடக்குறப்ப, நாம கொடுத்த லஞ்சப்பணத்துல வாங்கினதுதான் இவ கட்டியிருக்கிற சேலைன்னு தந்தவன்ல எவனாச்சும் நெனைப்பான். அப்படி நெனைக்கிறது, நீ கட்டியிருக்கிற துணியை ஊடுருவி, உன்னோட நிர்வாணத்தை பாக்குறதுக்கு சமம்தானே... அதை எதிர்த்துக் கேட்கிற தார்மீக பலமும் உரிமையும் எனக்கும் உனக்கும் இல்லாம போயிடும்னு பயப்படறேன்.

உங்கப்பாவுக்கு கூட இதுல என்மேல ரொம்ப வருத்தம். "நீங்க மட்டும் கை நீட்டாம இருந்தா சிலையா வைக்கப்போறாங்க"ன்னார் ஒரு நாள். எல்லா காரியங்களையும் சிலையை குறிவச்சே நடத்தினா, அப்புறம் நாட்டுல மனுசங்க நடமாட இடமிருக்குமா... அவங்கவங்களுக்குன்னு மனசாட்சி எப்படி வழிகாட்டுதோ அப்படித்தான நடக்கமுடியும்..." ஊரு எப்படியிருக்கோ அப்படி நீங்களும் இருந்துட்டுப் போங்களேன்"னார் இன்னொருவாட்டி. ஊருங்கிறது எது மகா... நாமெல்லாம் இல்லாமயா... நாம போற போக்குல ஊரும் ஒரு நாளைக்கு வரும்னு நம்பி போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். அதை விட்டுட்டு, வாய் கொப்பளிக்க தண்ணியிருக்குன்னு, நரகலை அள்ளித் திங்க முடியாதில்லியா...

விடு மகா, இன்னம் ஒருவருசம். சொடக்குப் போட்டாப்ல ஓடிடும். சீட்டுக்கடனும் முடிஞ்சிட்டா, நம்மாலயும் கொஞ்சம் மூச்சுவிட முடியும்.

சரிப்பா, ரொம்ப புலம்பிட்டேன்னு நெனைக்கிறேன். ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லணும்னு மனசு முழுக்க நெறைய சேர்த்து வச்சிருந்ததாலத்தான். இதையெல்லாம் உனக்கு எழுதினதால, உன்னைப்பிரிஞ்சு இவ்வளவு தூரத்துல இருக்கேன்ற தனிமை தெரியலை. மத்தபடி இந்த லைப்பும் ஒருவகையில நல்லாத் தானிருக்கு.

சுவர் முழுக்க சினிமாக்காரங்களோட ப்ளோ அப், சிகரெட் புகை மண்டிக் கிடக்கிற ரூமுக்குள் எறைஞ்சிக் கிடக்கிற புஸ்தகங்க, காலநேரமில்லாத அரட்டை, தூக்கம், ஈரத்துணிங்களோட மக்கின வீச்சம் - இப்படியெல்லாம் வாழ்ந்த 'பேச்சிலர் லைப்' மறுபடியும் ஞாபகத்தில் வந்து வந்து போகுது. வாழ்ந்து நிறுத்திய வாழ்க்கையை மறுபடியும் தொட்டுத் தொடர ஒரு வாய்ப்புக் கிடைக்கிறதும் கூட சந்தோசம் தான் போல.

காலச்சக்கரத்தை திருப்பி சுழற்ற முடியாதுன்னு தெரிஞ்சிருந்தாலும் கூட, சுத்தற மாதிரி தெரியற கணம் - அந்த கணத்தில் வேறொரு தளத்துல இயங்குற வாழ்க்கை எல்லாமே மனசுக்கு தேவைதான். மேலேறுகிற போது போட்டுவிட்டுப் போன கைக்குட்டையை மறுசுற்றில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளும் சந்தோசமும் சாகசமும் ரங்கராட்டினத்தில் மட்டுமில்லை, வாழ்க்கையிலும் தட்டுபடத்தான் செய்கிறது. உனக்கு அங்கும் எனக்கு இங்குமாக கழிகிற அந்த வாழ்க்கையை நினைப்பூட்ட இந்த கடிதம் சாட்சியாய் இருக்கட்டுமே.




அன்போடு அன்புக்கு,

- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It