என்னுடைய மாணவர்களைப் பார்ப்பதற்கே இன்று வித்தியாசமாக இருக்கிறது. சீருடையிலேயே அவர்களைப் பார்த்துப் பழகிய எனக்கு அவரவர்க்கு பிடித்தமான உடையில் பார்ப்பது உற்சாகமாக இருந்தது. இந்த இருபத்தொன்பது மாணவர்களுக்கும் இன்று பள்ளியில் கடைசிநாள். சற்று நேரத்தில் அடையாள அட்டை வாங்கிக்கொண்டு நாளை முதல் அருகில் உள்ள நகரத்தில் தேர்வு எழுதப் போகிறவர்கள். உயரமான முருகேசனுக்கு முழுக்கைச் சட்டையும், பேண்டும் எடுப்பாக இருந்தது. கால்சட்டைப் பையில் அடிக்கடி கையைவிட்டு கைக்குட்டையை வைப்பதும் எடுப்பதுமாக இருந்தான். பத்தாம் வகுப்பு தேறிய உடனேயே அவனுக்கு வேலை காத்திருக்கிறது. அவனுடைய அப்பா பணியின்போது இறந்த போலீஸ்காரர். அவனை அதட்டி உருட்டி மனப்பாடம் செய்ய வைக்க நானும் என் ஆசிரிய நண்பர்களும் எடுத்துக் கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. எதிர்காலத்தில் பொது மக்களை அதட்டி உருட்டப் போகிறவன்.

students பள்ளியைவிட்டு போகுமுன் ஆசிரியர்களுக்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று வகுப்பாசிரியன் என்ற முறையில் என்னிடம் வந்தவன் அவன்தான். தமிழய்யாவிடம் அவனை அனுப்பி வைத்தேன். பார்ட்டிக்கு என்னென்ன வாங்குவது, அழைப்பு விடுப்பது, நிகழ்ச்சிநிரல், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, நன்றியுரை எல்லாம் அவர்தான் சொல்லிக்கொடுத்தார். எத்தனை ரூபாய் வாங்குவது, ஸ்வீட் எங்கே வாங்குவது என்பதையெல்லாம் உடற்கல்வி ஆசிரியர் உரிமையோடு அழைத்துக் கூறினார். மாணவிகளுக்கு கட்டாயம் டிவியில் காட்டும் பானம் வேண்டுமாம். அதுவும் ஐஸ்பெட்டியில் வைத்தது வேண்டுமாம்.....

ஆயிற்று...

மாணவிகள் கேட்ட குளிர்பானம் வந்து விட்டது. ரங்கசாமி அவனுடைய சைக்கிளிலேயே பக்கத்து டவுனில் இருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். அவனுக்கு ஒத்தாசை செய்யவும், பாட்டிலின் குளிர்ச்சியை தொட்டுப் பார்க்கவும் அவனைச்சுற்றி கூட்டம். பாட்டிலின் குளிர்ச்சியை இன்னும் இரண்டு மணிநேரம் பாதுகாப்பது எப்படி என்பதற்கான ஆலோசனை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ரங்கசாமி வியர்வையை கையாலேயே துடைத்துக் கொண்டிருந்தான். அவனை நான் செல்லமாக மாக்கான் என்பேன். அவனுடைய உடல்வாகு அப்படி. அவன் பரீட்சையில் எப்படியாவது பாஸ் செய்துவிட்டால் ஏதாவது ஒரு காக்கிச்சட்டைவேலையில் சேர்ந்து பிழைத்துக் கொள்வான். அவனுடைய அப்பா ஒரு கம்பி ஃபிட்டர். இங்கிலீஷ் பாடம் மட்டும்தான் அவனுக்கு கண்டம். பத்தாம் வகுப்பிற்கு தமிழைத் தவிர எல்லா பாடங்களையும் நான்தான் சொல்லிக் கொடுத்தேன்.

யார் யார் எந்த பாடத்தில் வீக் என்பது எனக்கு அத்துபடி. சமூக அறிவியல் கற்பிக்க வேண்டியவர் ரிட்டையர் ஆகும் வழியில் ப்ரமோஷன் பெற்று தலைமை ஆசிரியர் நாற்காலியை அலங்கரிப்பவர். புதிய உயர்நிலைப்பள்ளியில் முதல் பாட்ச். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டோம். எங்களுக்கு ஆசி வழங்குவதுடன் தலைமை ஆசிரியர் நிறுத்திக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. முதுமைக்கால நோய்கள் சற்று முன்பாகவே அவரை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.

ஊருக்குப் போகாத நாட்களில் பள்ளியிலேயே படுக்கையும் கோவில் குருக்கள் வீட்டிலிருந்து ஆசாரமான சமையலும் அவருக்கு கிடைத்துவிடும். கைகாட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்தால் பள்ளிக்கூடம். தினமும் எட்டரை மணிக்கு வரும் நகரப்பேருந்திற்காக காத்திருந்து ரங்கசாமிதான் என்னை சைக்கிளில் அழைத்துப் போவான். மாலை ஆறரை மணி பேருந்திற்காக காத்திருந்து என்னை ஏற்றிவிடுவான். மாலையில் பள்ளிக்கூட முன்முற்றத்தில் கிடைக்கும் இடத்தில் அமர்ந்தோ சரிந்தோ பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பதை வீட்டிற்குச் செல்லும் மற்ற மாணவர்கள் பார்த்துக் கொண்டே நகர்வது அன்றாடக் காட்சி.

ஆயிற்று......

பள்ளிக்கூடம் விட்டு மற்ற மாணவர்கள் கலைந்து கொண்டிருந்தனர். பார்ட்டி முடிந்ததும் அடையாள அட்டையை தலைமை ஆசிரியர் கொடுத்து மாணவர்களை அனுப்பி வைப்பார். நானும் எத்தனையோ பிரிவுகளை சந்தித்தவன்தான். பள்ளியில், கல்லூரியில், விடுதியில், மற்ற பள்ளிகளில், இன்னும் எத்தனையோ வகுப்பறைகளில். ஒவ்வொரு முறையும் பிரியும்போது மனம் வலிக்கும். பிற்காலத்தில் அதைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏதோ படிகளைத் தாண்டி உயரத்திற்கு வந்துவிட்டது போன்ற உணர்வில் மனதிற்குள் ஒரு சிரிப்பு. வகுப்பறையில் மாணவர்களைப் பிரிவது என்பது வித்தியாசமான வலி. பழங்களைப் பிரியும்போது செடிகளுக்கு ஏற்படும் அனுபவம்.

ஆயிற்று....

கோகிலா மேசைவிரிப்பை கொண்டுவந்து என் எதிரே வைத்துவிட்டுப்போனாள். அவளுடைய அப்பா உள்ளுரில் தச்சுத்தொழிலாளி. கோகிலா.. பெயருக்கு ஏற்றபடி குரல்வளம். அவளை எப்படியாவது பாட்டு டீச்சராக்கிவிட வேண்டும் என்பது அவளுடைய அப்பாவின் ஆசை. போனவாரம் பள்ளிக்கூட மேசை நாற்காலிகளின் உடைசல்களை சீர்செய்ய வந்த போது என்னிடம் கூறினார்.

ஆயிற்று...

மற்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவராக பார்ட்டிக்கு வர ஆரம்பித்து விட்டனர். சரவணனும், சண்முகமும் அடையாள அட்டைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு பேரும் இரட்டையர்கள். யார் சண்முகம், யார் சரவணன் என்பது எனக்கு இப்போதும் குழப்பம். இருவரில் ஒருவனுக்கு மட்டும் மூக்கில் கருப்புநிற பரு இருக்கும். அது யாருக்கு என்பதில்தான் எனக்கு குழப்பம். முதல் இரண்டு மதிப்பெண்களை சண்முகமும், சரவணனும் வாங்குவார்கள் என்பது நிச்சயம். அவர்களுடைய அப்பா சிங்கப்பூரில் இருப்பதாகவும், இந்த பள்ளிக்கூடத்திற்காக சிங்கப்பூரில் சீட்டு அடித்து வசூல் செய்வதாகவும், அதைக்கொண்டு சொந்த ஊரில் வீடுகட்டிக் கொண்டிருப்பதாகவும் போனமாதம் நடந்த பள்ளி வளர்ச்சிக்கூட்டத்தில் விடிய விடிய விவாதம் நடந்தது எனக்குத் தெரியும். சரவணனும் சண்முகமும் அடுத்த வருஷம் ராசிபுரம் பள்ளிக்கூடம் வழியாக மெடிக்கல் காலேஜ் போகப்போவதாக கேள்விப்பட்டேன். பக்கத்து நகரத்தில் ஒரு ஆஸ்பத்திரி கட்டி கல்லாப்பெட்டியில் சிங்கப்பூராரும், மருந்துக்கடையில் அவருடைய ஊதாரிமகனும், காண்டீனில் மச்சினனுமாக களம் இறக்குவது தான் அவருக்கு அடுத்த இலக்காகஇருக்கும்.

தலைமை ஆசிரியர் கைத்தாங்கலாக வந்து சேர்ந்தார். பார்ட்டி ஆரம்பமானது. ஸ்வீட் காரத்திற்கு அப்புறமாக குளிர்பானம் வந்தது. கடைசி பெஞ்சில் முருகேசனோடு இருந்த மாணவர்கள் சியர்ஸ் சொல்லிக் குடித்தனர். இதை எதிர்பார்த்திருந்த முதல்பெஞ்சு மாணவிகள் பொட்டிச்சிரித்தனர். கோகிலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, வரவேற்புரை....ஆசியுரைகள்...எல்லாம் இந்த பத்து மாதங்களாக அடித்த அதே உடுக்கையடிதான்....

ஆயிற்று....

இதோ தலைமை ஆசிரியர் அடையாள அட்டைகளை ஒவ்வொரு மாணவனிடமும் கையெழுத்து வாங்கிகொண்டு கொடுத்தும் விட்டார். நன்றியுரைகூற போதும்பொண்ணுவை தமிழாசிரியர் தயார் செய்திருந்தார். இளைத்து வெளுத்தசரீரமும் கழுத்தில் கருப்புக்கயிறுமாக அவளையும் அவளுடைய நான்கு தங்கைகளையும் ஒருசேர சத்துணவு வரிசையில் பார்க்கும்போது மனம் வலிக்கும். போதும்பொண்ணு ஆங்கிலத்தில் கெட்டிக்காரி. எனக்காக ஆங்கில கட்டுரைகளை திருத்தித் தருவாள். அவள் போட்டுத் தரும் மார்க்கின் மீது வகுப்பறையே அவளோடு போர் தொடுக்கும். வெளுத்து மெலிந்த சரீரத்தோடு பார்லிமெண்டில் சபாநாயகர்போல் வகுப்பையே அவள் எதிர்த்து நிற்கும் போது நான் மனதிற்குள் சிரித்துக் கொள்வேன். அடுத்த வருடம் அவளுக்கு ஒரு தொழிற்படிப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவளுடைய அப்பாவிடம் கூறியிருந்தேன். துருப்பிடித்த சைக்கிளில் கோலமாவு விற்கும் அவளுடைய அப்பா வேண்டும் என்றோ வேண்டாமென்றோ சொல்லமாட்டார். என்னைப் பார்த்து கும்பிடுவார். பின்னர் ஆகாயத்தைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார்.

ஆயிற்று...

வாட்ச்மேன் அறையைப் பூட்ட, மாணவர் கூட்டம் மரத்தடிக்கு நகர்ந்தது. கோவில் குருக்கள் மகள் வைதேகி தலைமை ஆசிரியரின் முன்னால் வந்து காலைத் தொட்டு வணங்கினாள். தலைமை ஆசிரியர் கை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து சில மாணவிகள் ஆசீர்வாதம் பெற்றனர். வாசல் வரை சென்ற சில மாணவர்களும் திரும்ப ஓடிவந்து தலைமை ஆசிரியரிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.

மாணவர்கூட்டம் திசைகளில் கசிந்து கொண்டிருந்தது. நான் சாப்பாட்டுப்பையுடன் வாசல் கேட்டிற்கு வந்தபோது வழக்கமாக என்னை ஏற்றிச் செல்ல ரங்கசாமி இல்லை. தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். தொலைவில் கைகாட்டி தெரிந்தது.

மு.குருமூர்த்தி, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)';document.getElementById('cloakdde865adcd76913098f064ded2c59acf').innerHTML += ''+addy_textdde865adcd76913098f064ded2c59acf+'<\/a>';
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் – 613005

Pin It