ஆடு காணாமல் போய் விட்டது. அது ஒரு குடியானவனின் ஆடு. அந்த குடியானவன் ஊர் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டான். முந்தின இரவில்தான் அது காணவில்லை. அவன் மிகவும் கலவரமும், கவலையும் அடைந்திருந்தான். தலைவர் கண்டுபிடித்து தருவதாகவும், திருடனுக்கு தக்க தண்டனை வழங்குவதாகவும் கூறினார்.

goat அந்த ஊர் குப்பனும் மிகவும் கலவரத்துடன் காணப்பட்டான். அவன் மனைவியிடமும், குழந்தைகளிடமும் சரியாக பேசவில்லை. சாப்பாட்டிற்கு மிக நீண்ட நாள்களுக்கு அப்புறம் பொருட்களை வாங்கி வந்திருந்தான். அது சம்பந்தமாக அவன் மனைவி கேட்ட கேள்விகளுக்கு, எரிச்சலும், கோபமும் அடைந்தான். மிகவும் பதட்டத்துடனே காரியங்களை செய்தான்.

ஆட்டைத் தொலைத்த குடியானவன் வருத்தமும், கோபமும் அடைந்தான். அவனும், அவன் மனைவியும். அய்யனாரிடம் போய் காசு வெட்டிப் போட்டார்கள். 'சக்தி வாய்ந்த அய்யனார்', உடனே கேட்கும் சாமி', என ஊரில் நம்பிக்கை இருந்து வந்தது. ஆடு திருடியவனுக்கு ஏதேனும் கெடுதல் நடக்கும். ஒரு வேளை செத்துக்கூடப் போகலாம். ருவெல்லாம் கத்தி,திட்டியபடியே வந்தனர். அவனின் மைத்துனன், அவ்வூர்க்காரன், விஷயம் தெரிந்ததும், வருத்தப்பட்டான். எப்படியும் திருடனைப் பிடித்து விடுவதாக, தன் அக்காளிடம் உறுதியளித்தான்.

குப்பன் அன்று எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து, மனம் கனிந்து அழ வேண்டும் போலிருந்தது. இவர்கள் எதிர்காலம் குறித்து திடீரென நினைத்தான். சாமி பார்த்துக் கொள்ளும், என தேறுதல் அடைந்தான்.

வயலுக்கு வேலைக்குப் போன, ஆடு தொலைத்தவனுக்கோ, மனம் வேலையில் ஒப்பவில்லை. ஏன் நம்முடைய ஆடு மட்டும் காணாமல் போக வேண்டும்? நான் என்ன குற்றம் செய்தேன்? கோபமும், வெறியும், சில சமயம் தலைக்கு ஏறியது. குப்பனின் மனைவிக்கு, அவனின் செயல்கள் புரியவில்லை. அவன் ஏன் குழந்தைகளைப் பார்த்து அழ வேண்டும்? அவளுக்கும் அழுகையாய்த்தான் வந்தது. வீட்டில் சில காலமாக வறுமை தாங்க முடியவில்லை. நீண்ட நாள் பட்டினி. அக்கம், பக்கம் கடன் வேறு அதிகமாய் விட்டது. யாரிடமும் கடன் கூட கேட்க முடியாத நிலை. அவனுக்கு உடல் நிலை வேறு சரியில்லை. இந்நிலையில் அவன் நேற்று இரவு அரிசி, பருப்பு கொண்டு வந்தான். அவளின் அம்மா வீட்டிற்குச் சென்று, கடன் வாங்கி வந்ததாகக் கூறினான். மற்ற விஷயங்களையும் சரியாகக் கூறவில்லை. காலையிலிருந்து சரியாகவே பேச வேறு இல்லை. அவளுக்கு பயமெல்லாம், அவளின் கனவு குறித்தே. வீட்டில், வாழை மரம் கட்டி, தோரணம் கட்டி இருப்பதாக, அதிகாலையில், கனவு கண்டிருந்தாள். அது நல்ல சகுனம் இல்லை. ஏதோ கெட்டது நடக்கப் போகிறது, என அவள் மனம் சொல்லியது. அவள், அய்யனார் கோவிலுக்குப் போக ஆயத்தமானாள்.

ஒருவனை, ஏமாற்றி, அதிக வட்டி வாங்கியிருந்தது, அந்த குடியானவனுக்கு நினைவுக்கு வந்தது. அதற்கு, அய்யனார் குடுத்த தண்டனையா இது?, என நினைத்து மருகினான். மனைவி, களை பறித்துக் கொண்டிருந்தவள், ஆடு காணாமல் போனது குறித்து விசனமடைந்திருந்தாள். ஆட்டை விற்று, ஊர் முக்கியஸ்தரிடம், விதை நெல்லுக்கு, நடவு செலவுக்கு, பிள்ளை சடங்குக்கு, வாங்கிய கடன்களையெல்லாம் அடைக்க வேண்டுமென நினைத்திருந்தாள்.

ஆடு விற்க வேண்டிய சமயத்தில் காணாமல் போய்விட்டது. நல்ல விலை போகும். குப்பன் படுத்தே கிடந்தவன், எழுந்தான். அய்யனார் கோவிலை நோக்கிச் சென்றான். சாமியிடம் முறையிட வேண்டுமென, மனம் துடித்தது. அவன் செய்தது, ஒரு வகையில் நியாயம் எனப்பட்டாலும், மனம் உறுத்தியது. மேலும் பயம் பிடித்துக் கொண்டது. குழந்தைகள் சாகக் கிடக்கிறார்கள். நோயினால், தொழில் செய்ய முடியவில்லை. கூனி, குறுகியே, வாழ்நாள் ஓடிவிட்டது. பட்டினி கிடந்து, அவமானங்களைத் தின்று, தின்று வாழ்வே இருளடைந்து போனது.

ஆகவேதான் அச்செயலைச் செய்தேன், 'காட்டி கொடுத்து விடாதே', சாமி, எனக் கதறி அழத்தான், அவன் போய்க் கொண்டிருக்கிறான். அவன் மனைவி, அவன் வருவதை, தூரத்திலேயே பார்த்து விட்டாள். அவனும், இங்குதான் வருகிறான். அவள், அவன் கண்ணில் படாமல் வேறு வழியாய் போய்விட்டள்.

அன்று மாலை 'தண்டரோ' போட்டார்கள். ஊர் கூட்டம் கூடியது. குப்பன் கூட்டத்தின் நடுவே மிகவும் கலங்கிப் போய் காணப்பட்டான். அவள் மனைவி, அவன் மேல், எந்தக் குற்றமும் வந்து விடக்கூடாது என, வேண்டாத சாமியில்லை. கூட்டத்தில், குடியானவன் ஆட்டைத் திருடியது குப்பன்தான், எனக் கூறினார்கள். குடியானவனின் மைத்துனன், மணப்பாறை வியாபாரியிடம், குப்பன் ஆட்டை விற்றதைக் கண்டுபிடித்து விட்டான். வியாபாரி பக்கத்து ஊருக்கு, ஆடு வாங்க வந்திருந்தான். அங்கு சென்ற இவனிடம், பேச்சுவாக்கில், பரியாரியிடம் ஆடு வாங்கியதை, வியாபாரி கூறியுள்ளான். பரியாரியிடம் ஆடே இல்லை, எப்படி விற்க முடியும்?

கூட்டத்தில், அவனை, வெயிலில் ஒரு நாள் முழுவதும் கட்டி போட வேண்டுமென தண்டனை கொடுத்தார்கள். 'மணப்பாறை, எமப்பாறை' என்பது சரியாகத்தான் உள்ளது, என குப்பனின் மனைவி கதறி அழுதாள்.

அரசு பள்ளிக் கூடத்தின் முன்புள்ள ஒரு பரந்த மைதானத்தில் உள்ள ஒரு கல் தூணில் அவனைக் கட்டி போட்டார்கள். நாளெல்லாம் வெயில் கரித்து எடுத்தது. அவனுக்கு யாரும் குடிக்க தண்ணீர் கூடத் தரக் கூடாது, என கட்டளை போட்டிருந்தனர். போதாதற்கு, மதியம் உச்சி வெயிலில், அவன் மேல், தலைவர் உத்தரவுப்படி, தண்ணீரை ஊற்றினர். உடல் எரிந்தது. மனம் எரிந்தது. வாழ்நாளெல்லாம், அடிமையாய்தான் வாழ்ந்து வந்தேன். அதற்கு கூட அவர்கள் கருணை காட்டவில்லை. மனைவியை, குழந்தைகளை என்ன செய்தார்களோ?

அன்று மாலை, குப்பனின் கட்டை அவிழ்த்து விட்டார்கள். மிகுந்த அவமானத்துடன், உடல் களைப்புடன், நோவுடன், அவன் தனது குடிசையை அடைந்தான். அதிகாலை, கருக்கலில், அக்குடிசையிலிருந்து சாவொலி எழுந்தது. அவனின் மனைவி, மூச்சே நின்று போகும்படி கதறினாள். அவளது அடிவயிற்றிலிருந்து எழும்பிய அவ்வொலி தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை கலங்கடித்தது.

- ம.ஜோசப்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It