கடவுள் முதலில் இந்த பூமியை நெருப்புக் கோளமாகப் படைத்தார். பூமி நெருப்புக் கோளமாக அதுவும் ஒரு குட்டிச் சூரியன் மாதிரி சூரியனைச் சுற்றி வந்துகொண்டிருந்தது.

ஒரு நாள் கடவுள்தான் புதிதாகப் படைத்த கிரகமான பூமியிடம் வந்து “என்ன பூமியே, சௌக்கியம் தானா?” என்று கேட்டார்.

கடவுளிடம் பூமி, என் பெயரை மட்டும் பூமி என்று மாற்றிவிட்டீர் மற்றபடி, நான் ஒரு சிறிய சூரியன் மாதிரிதான் இருக்கிறேன். நெருப்பாகக் கொதிக்கிறேன். என் வெப்பத்தை மாற்றித் தந்தால்தான் பூமி என்ற பெயருக்குப் பொருத்தமாக இருக்கும்” என்று பூமி கூறியது.

பூமியின் கோரிக்கையைக் கேட்ட கடவுள், “சரி, இன்று முதல் உன் வெளிப்புறத்தில் எரியும் நெருப்பை அணைத்துவிடுகிறேன்” என்று கூறினார்.

அதன்பிறகு பூமியின் மேல்புறம் மண் தோட்டாலும், மலைகளாலும் குன்றுகளாலும், பாறைகளாலும் ஆனது.

அதன்பிறகு சிறிது காலம் கழித்து கடவுள், பூமியிடம் வந்து, “எப்பா இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு பூமி, கடவுளிடம் “என் மேல் புறம் எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்து குளிர்ந்துவிட்டது. ஆனால் என் நெஞ்சுக்குள் நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே என் உடம்பின் வெளிப்புறம் எல்லாம் புழுக்கமாக இருக்கிறது, கச கசப்புத் தாங்க முடியவில்லை! என் உடம்பின் மேல்புற புழுக்கம் நீங்கவும் ஏதேனும் உதவி செய்யவும்” என்று வேண்டியது.

மீண்டும் கடவுள் பூமியின் வேண்டுகோளை ஏற்று, “சரி, நாளை முதல் உன் மேல் கடல், ஏரி, குளம், குட்டை, நதி என்று பலவிதமான நீர் நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். இனி உன் மேல்புறம் எல்லாம் குளிர்ச்சியாக இருக்கும் என்றார்.

அதுபடியே அடுத்த நாள் பூமியின் மேல் புறத்தில் கடல், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் தோன்றின.

அதனால் பூமியின் வெளிப்புற வெப்பம் வெகுவாகக் குறைந்தது. நீர் நிலைகளைச் சுற்றி புல், பூண்டுகள் போன்ற தாவரங்களும், மரஞ்செடி கொடிகளும் முளைத்து வளர ஆரம்பித்தன.

சிறிது காலம் கழித்து கடவுள் பூமியிடம் வந்து, “யப்பா, இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?” என்று கேட்டார்.

பூமி கடவுளைப் பார்த்து, கடவுளே இப்போது நிலைமை சற்று பரவாயில்லை! ஆனால் தண்ணீர், ஒரே இடத்தில் கெட்டிக் கிடப்பதால் ‘வீச்சம்’ (நாற்றம்) தாங்க முடியவில்லை. அந்தத் தண்ணீர் சுழன்று வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியது.

கடவுள், “சரி, இப்போதும் உன் வேண்டுகோளை ஏற்கிறேன். பூமியே உன் மீது மேகங்களைக் கொண்டு, மழையைப் பெய்யச் செய்கிறேன். அதன் மூலம், உன் மீது நீர்வீழ்ச்சிகளும், நதிகளும், ஆறுகளும் தோன்றும். நீர் சுழன்று வரும் என்று வரம் கொடுத்தார்”.

சிறிது காலம் கழித்துக் கடவுள். பூமியிடம் வந்து, “பூமியே இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு பூமி, “மழை வந்த பிறகு நிலைமை பரவாயில்லை. ஆனால் எப்போதும் ஒரேயடியாக மழை பெய்வதால் எனக்குச் “சளி” பிடித்துக்கொள்கிறதே!” என்று புகார் கூறியது.

உடனே, கடவுள், பூமியை நோக்கி, நாளை முதல் உன் மேல் பருவமாற்றங்களை ஏற்படுத்துகிறேன். அதற்காக உன்னைச் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கிறேன் என்று கூறி பூமியின் மேல் ஒரு ‘மிதி’ மிதித்தார் கடவுள். எனவே பூமி அன்று முதல் சற்று சாய்ந்த நிலையில் சுற்றத் தொடங்கியது. எனவே, பூமியில் பருவ மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. மழைக் காலம், பனிக்காலம், வெயில்காலம், வசந்தகாலம் என்று பல்வேறு விதமான கால மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

மீண்டும் ஒரு நாள் கடவுள் பூமியிடம் வந்து, “இப்போது எப்படி இருக்கின்றாய்? என்று கேட்டார்”.

பூமி, கடவுளிடம், ‘கடவுளே நான் கேட்ட வரத்தை எல்லாம் தந்தாய் ரொம்ப நன்றி உனக்கு. பூமியாகிய நான் இப்போது செழித்துக் காணப்படுகிறேன். என்ன லாபம் இருந்து என்ன செய்ய? அவைகளை அனுபவிக்க ஒரு நாதி கூட இல்லையே!” என்று முறையிட்டது.

பூமி சொன்னதைக் கேட்ட கடவுள் “நான் இதுவரை நான்கு வரங்களை உனக்குக் கொடுத்துள்ளேன். இனி மேல் ஐந்தாவதாக ஒரே ஒரு வரம் தருகிறேன். நன்றாக யோசித்து அந்த கடைசி வரத்தைக் கேள்!” என்று கூறினார்.

கடவுளிடம் பூமி நன்றாக யோசித்துவிட்டுக் கடையாக, ‘கடவுளே என் மீது வசிக்க மனிதர்களைப் படைத்துக் கொடுங்கள். அது போதும்!” என்று கூறியது.

அடுத்த நாளே கடவுள் பூமியில் மனித இணையைப் படைத்துக்கொடுத்தார். அதிலிருந்து தோன்றியதுதான் இந்த மனுச சமுதாயம்.

Pin It