வெளியே வெறித்துப் பார்த்தப்படி வாசல்படியில் நின்றுகொண்டிருந்தார் கருப்பையா சார். அவர்தான் தலைமை ஆசிரியர் என்றாலும் பந்தா பண்ணுவதற்கான பள்ளிக்கூடமும் இல்லையே அது.

எதிர்த்தாற்போல் பிரம்மாண்டமாய் வேப்பமரம். ஏறு வெயிலில் மெல்லிய காற்றும் சுதி சேர பசுமையின் எண்ணற்ற வண்ணங்கள் மினுமினுத்தன. அப்படி ஒரு செறிவு. அப்படி ஒரு செழிப்பு. வானத்தில், வனத்தில் யானைக்கூட்டம் அசைந்து வருவது போல் ஒரு குளிர்ந்த காற்று. காற்றின் சுகத்தை “அப்பாடி” என்று கண்ணை மூடி ரசித்தார். வைரம் பாய்ந்த மரம். பலத்த காற்று, கனத்த மழை, மின்வாரியர்களின் ஈவு இரக்கமற்ற அரிவாள் வெட்டு இத்தனைக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அந்த இடத்தின் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அது ஆச்சர்யந்தான்.

Poor boy கருப்பையா சாருக்கு பத்து நாளாக ஒரு கவலை; மனசும் சரியில்லை. ‘ஒம்ம தலையிலயாவே பள்ளிக்கூடம் ஓடுது’ என்று நண்பர் சிலர் சத்தம் போட்டார்கள். ‘இந்த சைலப்பன் பய எங்க போய்த் தொலஞ்சான்! தினசரி ஆப்செண்ட் போட வேண்டியிருக்கு. இவனையும் சேத்தா 75 பிள்ளைகளாவது தேறும். இப்ப இருக்கிற இரண்டு பேரும் இந்த வருசத்தத் தள்ளிரலாம். இல்லேன்னா வசந்தி டீச்சர எங்காயவது தூக்கி அடிச்சிருவானே’. பாவம்... கைப்பிள்ளைக்காரி என்று கவலைப்பட்டார்.

அதோடு ஒத்தயில கெடந்துசாக வேண்டியதுதான்.

சைலப்பன் மீது தனிப்பட்டு எந்த அக்கறையும் கிடையாது சாருக்கு. எந்த நேரம் பார்த்தாலும் ‘உம்’ என்றிருக்கிற அவனைப் பார்த்தால் எரிச்சல் எரிச்சலா வரும். கொஞ்சம் பாவமாத்தான் இருக்கும். ஜுன் 15க்கு மேலே சாத்தூர் பக்கம் இருந்து ஏதோ ஒரு ஹாஸ்டல்ல இருந்து இவனை இவுக அம்மா இங்கு கொண்டுவந்து சேர்த்தபோது வெற்றிலைபாக்கு வைத்து அழைக்காத குறையாக... வரவேற்றார் கருப்பையா சார். அஞ்சாம் வகுப்பு பெயில். அதாவது இடைநிறுத்தம்.

இவனைப் போல இன்னும் அஞ்சாறு பயலுவ சேந்தாப் போதும், இந்த வருசத்தை நிம்மதியாக் கடத்திரலாம் என்பதுதான் அவர் கணக்கு. அம்மாக்காரியின் முகம் காய்ந்து போயிருந்தது. அப்படி ஒரு வாட்டம். சித்தாள் வேலை பார்க்கும் போலும். தலை முடியெல்லாம் செம்பட்டை ஏறியிருந்தது. வறுமையும் கவலையும் வெயிலும் போட்டி போட்டு விளையாடிய திரேகம்! கண்டாங்கிச் சேலை.

“ரெண்டு மூணு தடவை ஹாஸ்டலை விட்டு ஓடியாந்துட்டான் சார். சுவரேறிக் குதிச்சு. ஒத்தைக்கு ஒரு பிள்ளை. இவனும் எங்கயும் கண் காணாமப்போய்ட்டான்னா... அப்புறம் நான் பூமியில் இருந்தாலும் ஒன்ணுதான் போய் சேர்ந்தாலும் ஒன்ணுதான். அவுக அப்பனும் குணம் கெட்ட மனுசன் சார்”. பயலைக் கேட்கவே வேண்டாம். மேலுகாலெல்லாம் ஒரே சொறி. ஹாஸ்டல் தந்த கொடை. மூஞ்சியில் சிரிப்பு மருந்துக்குக் கூட பார்க்க முடியாது.

அதெல்லாம் பார்த்தால் முடியுமா? இதென்ன இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலா! காமராஜர் காலத்தில் காமராஜரோடு சிறையில் இருந்த ஓரளவு வசதியும் படைத்த ‘சண்முகம் பிள்ளை’ கொடுத்த வீடுகளில் ஒன்றுதான் இந்தப் பள்ளிக்கூடம். அவர் மறைவுக்குப்பின் அவர் மறைவைப் போலவே பெயர்ப்பலகையில் சண்முகம் தொடக்கப்பள்ளியின் பெயிண்ட் தொலித்தொலியாய் உரிந்துபோயிருந்தது வெயிலில்.

“ஐயா ... நீங்கதான் உங்க பிள்ளை மாதிரி பாத்துகிடணும். எனக்கு வேற நாதி கிடையாது” கண் கசிந்தது அந்தம்மாவுக்கு.

‘எம்மா... சரி.. சரி.. கண் கலங்காதீங்க. பையனுக்கு வேண்டிய புஸ்தகம், நோட்டு, யூனிஃபார்ம் எல்லாம் இங்கேயே குடுத்திருவோம். மதியம் சத்துணவில் சாப்பிட்டுக்கிடட்டும். மத்தத நாங்க பாத்துக்கிடுதோம். நீங்க கிளம்புங்க’ என்று எழுந்தார் கருப்பையா.. சார்.

“நீங்க நல்லாயிருக்கணும் சாமி...” என்று கையெடுத்து கும்பிட்டது அந்தம்மா.

வெயிலின் ஊடாகப் பரவிய வேப்பங்காற்றின் குளிர்ச்சியிலிருந்து திசை திருப்பியது. பயல்களின் இரைச்சல். “சைலப்பன் கூடவா” என்று நடந்தார்.

ஐந்தாம் வகுப்புக்குள் எட்டிப்பார்த்தார். கப்சிப் என்று தற்காலிகமான ஒரு போலி அமைதி திரைபோல் தொங்கியது. நம் கல்வியின் சாதனையா ஆசிரியரின் திறமையா ! என்று தெரியவில்லை.

“என்னலே கூப்பாடு! ஆளு கொஞ்சம் நகண்ட்ரக் கூடாதே உங்ளுக்கு? ‘கெக்கெக்கே’ ன்னு என்னலே இளிப்பு. தங்கராசு.. ஏர்லே பெஞ்ச்லே” என்றவாறு சைலப்பன் தோளில் கையை வைத்து. “ஏய்.. எல்லாரும் நல்லா கவனிங்க. இந்தத் தம்பி பேரு சைலப்பன். எல்லாரும் பிரியமாக நடந்துக்கிடணும். எவனாவது இவன அடிச்சான் வச்சான்னு வையீ அப்புறம் பிச்சருவேன் பிச்சு... ஆமா” என்று நாடக பாணியில் வார்த்தைகளை வீசி அடித்தார். பொய்க் கோபத்துடன்தான். அதுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ‘இங்கே வா இங்க வா...’ என்று எல்லாப் பிளைகளும் அவனை அழைத்தன. பின் வரிசையில் போய் உட்கார்ந்தான் சைலப்பன்.

“மனதில் உறுதி வேண்டும்”. பாட்டை அஞ்சு தடவை எழுது. ‘இந்தா வாரேன்’ என்று வாசலுக்கு வந்தார்.

பெரும் ஆகிருதி கொண்ட அந்த வேம்பின் நிழல் கிழக்குப் பக்கமாக நீண்டு கொம்பையா டீக்கடைக் கூரையில் அசைந்து கொண்டிருந்தது ஒருவித தாளகதியில். பள்ளிக்கூடமோ பாவம். படி இறங்கினாலே புழுதி கிளம்பும். பார்த்தாலோ கண் கூசும். 30 அடி தள்ளி நடந்தால்தான் வேம்பின் அருள் நிழலை விரித்திருக்கும். வலதுகைப்பக்கமோ உடைந்து தகர்ந்து போன ஒரு குட்டிச்சுவர். ஒரு காலத்தில் விளையாட்டு மைதானத்தின் மதில் சுவர் என்று எத்தனை பேருக்குத் தெரியும். ஒத்தை ஒத்தைச் செங்கலா உருவிட்டுப் போய்ட்டான் போலுக்கு இத்தனை வருசத்திலே.

மத்தியான நேரங்களில் முன்கால் ரெண்டும் கட்டப்பட்ட கழுதை ஜோடிகள் ஏகாந்த நினைவில் நின்று கொண்டிருக்கும். “கழுதயப் பத்துலே” என்று ஒரு நாளும் சொல்லமாட்டார் கருப்பையா சார். அழகான பன்றிக் குட்டிகளுடன் ஆரோகணித்தபடி தாய்ப்பன்றியின் ராஜ்ஜியமும் நடப்பதுண்டு. ஒண்ணுக்கு கிண்ணுக்குப் போகிற பயகளை அந்தப்பக்கம் போகாதீங்களே என்று விரட்டுவார். எதிர்த்த கடையிலிருந்து கொம்பையாண்ணன் கூடை பிதுங்கி வழிகிற எச்சில் இலைகளை ‘குபீர்’ என்று பன்றிக் கூட்டத்தார் மீது கவிழ்த்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார். அவரை யார் கேள்வி கேட்கமுடியும்!

ஜுன் மாதம்தான் என்றாலும், முந்தின வருசங்கள் மாதிரி சாரல் கட்டவில்லை குற்றாலத்தில். கபினி நிறைந்துவழிகிறது. குஜராத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்ற செய்திகள் மிதந்தாலும், காலையிலேயே வெயில் மூஞ்சியில் அறைந்தது. மின் விசிறிகள் வீட்டில் சுழன்றாலும், அரசு ஆரம்பப் பள்ளிகளில் எதிர்பார்ப்பது புத்திசாலித் தனமில்லை. கருப்பையாசார் ஆஸ் பூஸ் என்று நோட்டு அட்டையை விசிறிக்கொண்டு ‘சைலப்பன்’ என்று கடைசிப்பெயரை வாசிக்க ‘ப்ரெசன்ட் சார்’ என்று முனங்கினான். சத்தமாச் சொல்லு சைலப்பன் என்று சத்தமாகப் பல தடவை கேட்டுக்கொண்டும் சத்தமாகவே சத்தம் வரவில்லை சைலப்பனிடமிருந்து. அதே முணக்கம்தான்.

கோபம் கோபமாக வந்தது சார்வாளுக்கு. ஆனால் கோபப்படப் போயி பயல் ஓடிப்போய்ட்டான்னா என்ன செய்றது. பல்லைக் கடித்துக்கொண்டிருந்தார்.

“சினிமாப் பாப்பீங்களாலே... வடிவேல்... விவேக் காமெடி எல்லாம் பாப்பீங்களா... என்று இயல்பாகப் பேசிப் பாடத்துக்குள் நுழைவதுதான் நம்ம கருப்பையா சாரின் பழக்கம்.

‘வடிவேலு’ வைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ‘வந்துட்டான்யா வந்துட்டான்’ என்று வகுப்பே சிரிப்பலையில் மோதும். இன்றும் அப்படித்தான். ஆளாளுக்கு ஒன்றொன்று சொல்ல ஒரே சத்தம். ஒரே சிரிப்பு. அமைதிப்படுத்த ரொம்பச் சிரமப்பட்டார் சார். ஆனால் அசையாமல் இறுகிய முகத்துடன் சொல்லப்போனால் பயங்கரக் கடுப்புடன் பார்த்தான் சைலப்பன். இவருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

‘எங்கும் பாரடா’ பாரதிதாசன் பாடலுக்கு வினாவிடை மற்றும் பயிற்சிகள் குறித்துக் கொடுத்து விட்டு மக்கள் தொகைக் கணக்குப் படிவங்களைச் சரிபார்க்கத் தொடங்கினார்.

இன்று காலையிலேயே மேல்வானத்தில் மேக மூட்டமாயிருந்தது. சூரியனின் உலா மந்த கதியில் அமைதியான ராகம் போல் கார்மேகங்களுக்குப் பின்னால் லோசாகத் தெரிந்தது. வேக்ஸ் க்ரயானை மெல்ல இழுத்தது போல் மேல்திசையில் வானவில் குளிர்ந்தது கண்ணில். சார்வாளுக்கு உற்சாகம். அமிர்தவர்ஷிணிபோல் இடை இடையே தூறல் விசிறியது.

‘கப்பலோட்டிய தமிழன்னா யார் தெரியுமா’

‘வ.உ.சிதம்பரம்பிள்ளை’ என்று ஒரே கோரஸ்

‘சபாஷ்... பரவாயில்லையே...’

அப்போ தாமிரவரணியில அவ்ளோ மணல் இருக்கும். ஐயாயிரம் பத்தாயிரம் பேர் உக்கார்ந்திருப்பாங்க. சிதம்பரம்பிள்ளை பேச்சக்கேட்க. சுப்பிரமண்ய சிவா அவரும் அப்படித்தான். சிவம் பேசுனா சவம் கூட எழுந்து நின்னு ‘சுதந்திரம் ... சுதந்திரம்ன்னு...’ கேட்கும் வ.உ.சியைக் கைது பண்ண உடனே எங்க பார்த்தாலும் ஒரே கலவரம் தேங்கா வாங்கிட்டுப்போன ஒங்கள மாதிரி ஒரு பய தேங்காயை ரோட்ல தவறவிட... டம்னு சத்தம் கேட்டது. வெள்ளக்கார போலீசு குண்டப்போட்டுட்டான் பொடிப்பய என்று அவனைச் சுட்டிருச்சு. ரத்தம் சொட்ட சொட்ட பய விழுந்துட்டான் என்று சார்வாள் நிறுத்தவும்...

பாதி மாணவர்கள் கண்களில் கண்ணீர் கோர்த்தது. கண்ணைத் துடைத்தார்கள். அப்பவும் சைலப்பன் கல்லைப் போல அசையாமல்தான் இருந்தான். பின் வரிசையில் இருந்ததால் அவன் கண்களும் கலங்கியதா என்று தெரியவில்லை.

மூன்று மணிக்கு மேல் வெயில் பொரிந்தது. வகுப்பறை வாசலில் கசங்கிய லுங்கியுடன் தலைமுடி எல்லாம் கலைந்து போய் அரைகுறை மீசை தாடியுடன் வந்த நடுத்தர வயதுக்காரர் வகுப்பறையை எட்டிப் பார்த்தபடி... திடீரென்று ‘எலே ... சைலப்பா இங்க வா... என்று கூப்பிட்டார். கரகரத்த குரலில் கடுமை. பயல் பதறினான்.

‘யோவ்.. நீர் யாரு’ என்று எழுந்தார் சார்.

“என்ன யோவ்ங்றீரு.. மரியாதையாப் பேசும். அவன் அப்பன்யா நானு”

“அதெல்லாம் வீட்ல.

“யார்ட்ட பேசறீர்னு தெரிஞ்தான் பேசறீரா...”

“யார்னா எனக்கு என்ன. முதல்ல எடத்தக் காலிபண்ணும்”

கருப்பையாசார் இப்படி ஓங்கிப் பேசியதை யாரும் கேட்டதில்லை. வந்தவர் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். என்ன நினைத்தாரோ விறு விறு என்று நடையைக் கட்டினார்.

“என்ன எளவைக் குடிச்சானோ... இப்படி ஒரு நாத்தமா’ என்று முணங்கியபடி வகுப்புக்குள் நடந்தார். பின் பெஞ்சுக்கு வந்தார். சைலப்பனைத் தொட்டார். அவன் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது.

மறுநாளிலிருந்து சைலப்பனைக் காணவில்லை. பயல்கள் சுற்றி அடித்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள். வேறு ஏதோ வேலைக்குப் போகிற மாதிரி சாரும் பயல்களோடு வந்து கொண்டிருந்தார். ஓட்டுச் சாய்ப்பு. ஒரே தட்டு. போனது வந்ததைக்கொண்டு செய்த கதவில் ஒன்றரையணாப் பூட்டு. எதிரில் எதிர்த்த கடை கொம்பையா வந்து கொண்டிருந்தார்.

“என்ன சார்.. இந்தப் பக்கம். ஆங்.. அந்தப் பயலைத் தேடி வந்தீகளாக்கும். புருசன் பொண்டாட்டிக்குள்ள என்ன எளவு தகராறோ. மண்வெட்டிக்கணையை வச்சு மண்டயப் பிளந்துட்டான். அவள பெரியாஸ்பத்திரியில சேர்த்திருக்கு. ஏழெட்டுத்தையல். இப்பத்தாவல” என்றபடி தன் போக்கில் நடந்தார்.

காச் பூச்சென்று ஒரே இரைச்சல். எல்லாப் பிள்ளைகளையும் ஒன்றாக வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது வசந்தி டீச்சர். “குட்மார்னிங் சார்” என்ற கோரஸ் எழுந்தது சாரைப் பார்த்தவுடன். ‘சரி சரி’ ஒழுங்கா உக்காருங்க என்று வகுப்பை ஒரு சுற்றுப் பார்த்தார். கிழக்கு பார்த்த சன்னலிலிருந்து சரிவாக இறங்கிய வெளிச்சக் கற்றைகள் படிந்திருந்த முகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார் சார்.

சைலப்பன்! ஆஹா! வந்துட்டான இந்த பய.

அவன் முகத்தில் இதுவரை காணாத ஒரு புதுமலர்ச்சி கூடி வந்திருந்தது.

‘டீச்சர், 1,2,3, ஐ நீங்க பாத்துக்கிருங்க. நாலஞ்சு புறப்படு’ என்றார்.

‘என்ன கூப்பாடு வரிசையாப் போ...’

‘எலே.. சைலப்பா இத்தனை நாள் எங்கடே போயிருந்தே..’ கோபத் தொனி வந்துவிடாது பரிவோடு கேட்டார்.

‘ஆஸ்பத்திரி சார்’

‘ஆஸ்பத்திரிக்கா...’

‘அம்மாவைச் சேத்திருந்தது சார். மண்டய ஒடச்சிருச்சு சார் எங்கப்பா. இப்ப பரவால்ல சார்’ முகத்தில் பிரகாசம் கூடியிருந்தது. கொம்பையா சொன்னது சரிதான்.

‘சரி. ஒங்கப்பா எங்கலே இப்போ...’

‘அவரை நேத்து ராத்திரியே போலீஸ் பிடுச்சுட்டுப் போயிருச்சு சார், என்று சிரித்தான். முதல் தடவையாக சந்தேகத்தோடு அவனைப் பார்த்தார். ஆயிரம் பூக்கள் பூத்தது போலிருந்தது அவன் முகம். சாருக்கும் சந்தோஷம் இருந்திருக்கவேண்டும். ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுமுன் மீண்டும் சிரித்தான் சைலப்பன்.

அது இதுவரை யாரும் கேட்காத சிரிப்பு.

வகுப்பறையை நிறைத்தது அந்த அபூர்வச் சிரிப்பு.


- கிருஷி

Pin It