1.நான் உடல் நீ சிறகு
இது கவிதை
2.வார்த்தைகளோடு மிதக்கிறது
எழுத்தாளனின் பிணம்
3.இறந்த பறவையின் ஆவி
சுற்றி வருகிறது பூமியை
4.கனவுகண்டு கொண்டிருக்கிறபோதே
தூங்கிவிட்டேன்
5.கல்லறை நிழலில்
சீட்டாடுகிறார்கள்
6.மரங்களை எனக்குப் பிடிக்கும். மர நிழலில் ஓய்வு கொள்ள முடிந்தாலும் சற்று நிமிர்ந்தால் ஆகாயபாத்யதை என்பது தனி அனுபவம். விருட்சங்களில் காலம் தங்கி ஓய்வு கொள்கிறது. நான் விருட்சங்களை நேசிக்கிறேன்.

கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் ஆசுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்.

Forest ஆனால் வழிதவறி விட்டதாக நினைத்த கணம் எல்லாம் கெட்டுப் போனது. அதிலும் சிறு குழப்பம். நான் வழி தவறிவிட்டேனா, புதிய பாதையொன்றில் புதிய அனுபவம் தேடிச் சென்று கொண்டிருக்கிறேனா என மனம் மயங்கியது. அதுகூட சரியல்ல. அந்தப் பகுதிகள் ஏற்கனவே எனக்கு எப்படியோ தெரிந்த பகுதிகளே என மனம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. சரி. தெரிந்த பகுதிகளில் வளைய வருவதில் உள்ள சந்தோஷம்... அதன் பாதுகாப்புத் தன்மை... தாய்மடி எனக்கு ஏன் வாய்க்கவில்லை? மனசின் கேள்விகளைப் பிடுங்கியெறிய முயன்றேன். அது கேள்விகளுக்கான நேரங்கூட அல்ல. சில விடைகள் எனக்குத் தரப்படக் காத்திருக்கின்றன என்கிறது சூட்சுமம். அதுவே என் ஆர்வத்தை எதிர்பார்ப்பை பயத்தைத் தூண்டுகிறது. உள்ளே ஒரு விநோதப் பூவின் வாசனை. கண்ணில் எங்கிலும் தட்டுப்படாததோர் பூவாசனை இந்திரியங்களைத் தாண்டி புலன்களில் மாத்திரம் எட்டுகிறது. எனக்குள் என்னவோ ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை உணர்கிறேன். அதை முன்கணிக்க முடியவில்லை.

கால்கள் தன் பாட்டுக்கு நடந்து செல்கின்றன. எங்கே என்கிற குறி இல்லை. அவை அறியமாட்டா. நான் அங்கே அந்நேரம் அப்படி மயங்கித் தடுமாறி நடந்து போவதேகூட எற்கனவே எப்படியோ தீர்மானிக்கப்பட்ட விஷயமாய் இருந்தது... சோறு கொதிக்கும் பானைபோல எனக்குள் குமிழிகள்... களக் புளக்கென்ற அதன் சதுப்புக்காடு போன்ற மூச்செடுப்பு. நான் எனக்குள் பார்த்தபடியே நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். வெளியே என்னுடன் துணைக்கு நடந்து வர யாருமில்லை. நானே எனக்குத் துணை. ஆகவே என்னை நானே வேடிக்கை பார்ப்பது தவிர்க்க இயலாததாகிறது. அது வேண்டியும் இருக்கிறது. வெகு அபூர்வமாகவே இத்தருணங்கள் அமைகின்றன. ஒருவன் தன்னையே வேடிக்கை பார்க்க முடியுமா? உற்று கவனிக்க முடியுமா? அப்போதுதான் உணர்ந்தேன்... அப்படி வாய்த்தால் வெளியே சப்தங்கள் எதுவும் இல்லை என்பது பொருள்... என நினைத்த கணம் பெரும் திகில் என்னைச் சூழ்ந்தது. ஆமாம். அமைதியில் மூர்ச்சையாகிக் கிடந்தது காடு.

பொட்டுச் சத்தம் இல்லை. புள்ளிச் சத்தங் கூட இல்லை. நான் சப்தங்களை கிரகிப்பதில் சமர்த்தன். கடும் பயிற்சிகள் அதற்கென மேற்கொண்டவன். நள்ளிரவில் வெளிப் பெரும் நிசப்தத்தில் இயற்கை சில பிரத்யேக சப்தங்களை அடையாளப் படுத்தும். மூச்சொலிகள் போன்ற கீச்சொலிகள். உனக்கு மாத்திரமேயான குரல் அது. இயற்கையின் இரவின் அந்தரங்கக் குரல். அது இயற்கையின் கனவு. ஏக்கமான சிறு லம்பாடிப் பாடல் போன்றது அது. கிசுகிசுப்பாகவே அது உன்னோடு - உன் அந்தரங்கத்தோடு காதோடு காதாய்ப் பரிமாறப்படும். அதன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? இயற்கையின் ரகசியத்தை?

'அது'... சரி. இது அது அல்ல. இது இரவும் அல்ல. பகல். வெளிச்சம் நெல்லடி களத்துக் கதிர்களாய்ப் பரந்து விரிந்து உலர்த்திக் கிடக்கிற உச்சிவேளை. மேலே வானம் மறைத்த உள்வெளியில் நான் நடமாடிக் கொண்டிருந்தேன். மன பெல்ட் நெகிழ்ந்து கிடக்கிறது. இந்நேரம் இப்பெரும் அமைதி... எப்படி? அதும் காட்டில்... அந்தப் பொழுதே ஒரு புதிய... விநோத... மறக்க முடியாத அனுபவத்தை எனக்குத் தருவதற்காக சில முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. சாப்பாட்டு இலையில் இடம் ஒதுக்கிக் கொண்டாற் போல. என்ன சேதி? என்ன ரகசியம்? பகலில் கூட ஒரு ரகசியம் அதன் புனிதத் தன்மை கெடாமல் பரிமாறப்படக் கூடுமா? இயற்கையின் பெரும் மெளனம்... அதுவே பெரும் செய்தியாக, அதன் கனமே தள்ளாட்டமாக இருக்கிறது. இப்படி நினைத்த கணம் கால்கள் தாமாக கனத்துப் போகின்றன. மேலே நடக்க முடியாதபடி அவை கனத்துக் கொண்டே வருவதை திடீரென உணர்ந்தேன். அதுவும் என் கட்டுப் பாட்டில் இல்லை என உணர்ந்தேன். அதுகுறித்து நான் எச்சரிக்கையடைந்தால் மனம் பேதலித்து விடும். மேலும் பலவீனப்பட்டு விடும். ஒருவேளை கால்கள் நின்றால் அந்த மகத்தான கணத்தில் இயற்கை தன் மடிபிரித்து ஒரு இரகசியக் கனியை எனக்கு ருசிக்கத் தருமாய் இருக்கும்.

நிகழ்வுகள் என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒலியற்ற காடு என்பதுதான் புரியவில்லை. அந்தப் பகலில் அத்தனை வெளிச்சப் போதில் ஒரு சிற்றொலி கூடவா இராது? இயற்கையின் வியர்வைத் துளிகளை நான் இரவில் நுகர்திறன் கொண்டவன். இக்கணங்கள் எனக்கு ஏதேனும் சவாலை உள்ளடக்கியதாய் அமையுமா? அப்படியா? மனமே மனமே... பரபரப்படையாதே. பயந்து விடாதே. பயந்து பரபரத்து இந்தக் கணங்களை அசுத்தப்படுத்தி விடாதே. என்னை மாளாத சோகத்தைப் பிற்பாடு சுமந்து திரியுமாறு ஆக்கி விடாதே.

அட ஆமாம். அந்தக் காட்டில் ஒரு பறவைகூட இல்லை. வாழ்விடம் அல்ல அது. பாழிடம். அடர்ந்த அமைதியான காடு எனினும் அங்கே பூக்களே இல்லை. பூச்சிகளே இல்லை. பறவையொலிகளே இல்லை. அங்கே வர, அங்கே வாழ ஏனோ பறவைகள் பயந்திருக்க வேண்டும்... என நினைத்த கணம் எனக்கு உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரு திகைப்பு ஓடுகிறது. பறவை என்று கூட இல்லை. ஓசையின்றி வறண்டு காய்ந்து கிடந்தது காட்டின் வெளிகள். உயிரின் வாடையே அற்ற உள்வெளி அது. இயற்கைகூட பச்சை வாசனையற்று நுகர ஏதுமற்று இரக்கமற்று ஈரமற்றிருந்தது- எனில் வியர்வை சார்ந்த வெக்கை... சூடும் இல்லை. சந்தடிகள் அற்ற, உயிர் ஊடாட்டமற்ற வெளி. சாபவெளி.

திடீரென்று நான் தனிமையில் இல்லை. நிச்சயமாக இல்லை... என்கிற உணர்வு பாறையலையாக என்னை முட்டியது. யாரோ பார்க்கிறார்கள். உற்று நோக்குகிறார்கள். நான் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டதில் கண்ணெல்லாம் எரிந்தது. ஆ கானல் நீர் போலும் தூரத்தில் அந்தக் கரியநாய். வேட்டைநாயின் வாட்டசட்டத்துடன் நாவைத் தொங்க விட்டபடி என்னையே அது உற்றுப் பார்க்கிறது. எழுந்து எந்நேரமும் அது என்னை நோக்கி ஓடிவந்து என்மீது பாயலாம்...

இப்படி நினைத்த கணம் என் பயம் அதிகரிக்கிறது. கால்களை முடிந்தவரை எட்டிப்போடு. முடிந்தவரை அந்த இடத்தை விட்டு வெளியேறு. ஓடு. ஜுட்... கால்கள் அவை எப்போதோ சொன்னபடி கேட்கும் திறத்தை இழந்திருந்தன. தாமதிக்கிற ஒவ்வொரு கணமும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்கிறது சூட்சுமம். அலற ஆரம்பித்து விட்டது அது. எனக்கு வெளியேறும் வழி தெரியாது. தாகமாய் இருந்தது எனக்கு. என் தெம்பு வற்றிக் கொண்டே வந்தாற் போல. நின்று இளைக்க இளைக்க சுற்றுமுற்றும் பார்க்கிறேன். நுரையீரல் வலிக்கிறது... கரிய நாயைக் காணவில்லை. காட்டுக்குள் ஓடியிருக்குமா?

உடனே குடிக்க ஏதாவது வேண்டியிருந்தது. காட்டில் தண்ணீர் கிடைப்பது அத்தனை சிரமமான விஷயமா என்ன? எனக்கு காடுகளைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். சிலவகை மரங்கள் நதிப்படுகை அருகிருப்பதை அறிவித்து விடும். காற்றில் தண்ணீரின் சிறு சலசலப்போசை... தண்ணீரின் குளிர்ந்த ஓசை... அதை நான் நுகர்கிற கிரகிக்கிற வல்லமை கொண்டவன். எந்த ஒலியையும் காட்டாமல், தன் ரகசியப் பெட்டகத்தை கனத்த சாவிகொண்டு பூட்டி வைத்துக் கொண்டிருந்தது காடு. வாயை மூடிக் கொண்டிருந்தது அது பிடிவாதமாய். என் தாகம் அதிகரித்தது.

அதுவரை காட்டை ஊடறுத்து செடி கொடிகளை மிதித்தபடி வழியொதுக்கிக் கொண்டே நான் முன்னே நகர்ந்தேன். கொள்கையின்றிப் போய்க் கொண்டேயிருப்பது தவிர நான் செய்யக் கூடியது எதுவும் இல்லைதான். காட்டின் எல்லையை நான் எட்ட வேண்டும். உடனே மிக உடனே நான் வெளியேறிவிட உந்தப் பட்டேன். எப்படி? அதுதான் புரிபடவில்லை. காட்டின் விரிந்த பெருவலைக்குள் நான். நான் என்ன செய்யப் போகிறேன்? என்ன செய்ய வேண்டும்?... என நினைக்கையில்தான் சிறு கதவு திறந்தாற்போல.... ஆமாம், காடு சற்று நெகிழ்ந்து கொடுத்தது. ஒரு பாதை தட்டுப்பட்டது. அந்தப் பாதை நோக்கி நான் இதுவரை... சரியாகவே நடந்து வந்திருக்கிறேன். அந்தக்காடு எப்படியோ என் சூட்சுமத்துக்குள் சிறு பரிச்சயம் கொண்டதாய் இருக்கிறது. நல்ல விஷயம் அல்லவா இது? என் மூச்சு சீரானது.

ஒற்றையடிப்பாதை. காட்டின் தலைவகிடு. யாரோ இதற்குமுன் இங்கே நடமாடியிருக்கிறார்கள். எவ்வளவு நல்ல - ஆறுதலான விஷயம். ஒருவேளை இனி பறவையொலிகள் கூட கேட்க ஆரம்பிக்கலாம். பறவையை மிருகங்களை விடு. மிருகங்கள் நடமாடி காட்டில் தரை தரிசாகி விடுவதில்லை. வகிடு பிரிவது இல்லை. அது மனிதன் நடமாடுகிற பூமியாய்த்தான் இருக்கும். இங்கே மனிதர்கள் நடமாடுகிறார்கள். மிருகங்கள் அற்ற பறவைகளும் அற்ற பூச்சிகளும் ஒழிந்த வெளியில் மனித நடமாட்டம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. நான் புரிந்துகொள்ள முயல்வேன். அதை அறிந்து கொள்ளவே இந்தப் பயணம். மனமே பயந்து விடாதே. பயந்து இந்த நிமிடத்தின் மகத்துவத்தை நீ கட்டாயம் இழந்து விடக் கூடாது. மனிதன் எவனுக்கும் இத்தருணங்கள் வாய்ப்பதில்லைதான். உனக்கு வாய்த்த இந்த இரகசியக் கணத்தை, அதன் பவித்ரத்தை நீ கலைக்காமல் எதிர்கொள்.

தொடர்ந்து ஒற்றையடிப் பாதையில் நடப்பதா, தண்ணீர் தேடுவதா என முடிவு செய்ய முடியவில்லை. மனம் பாம்புநாக்கென ரெண்டாய் பிளவுபட்டுப் பிரிந்து ஒன்று பாதையிலும் ஒன்று தனிப்பாதை தேடியும் திரிகிறது. உள்யுத்தம் துவங்கி விட்டது. அப்போது முகம் மாறினாப்போல உட்புகுந்தது வெளிச்சத்தின் சிறுதுளி. கண்களைத் சட்டென்று யாரோ திருப்பித்தந்து விட்டாற்போன்ற பிரமை. வழுக்கைமண்டை போன்ற பொட்டல்வெளியில் திடுமென நின்றுவிட்டது அப்பாதை. அதிர்ச்சியான அடுத்தடுத்த நிகழ்வுகளில் என் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. தாகத்தைத் தாண்டிய சிறு பசிபோன்றதோர் உள்ப்பிராண்டல் கண்ட கணம். நகத்துடன் யாரோ உள்வயிற்றைச் சுரண்டுகிறார்கள். அங்கே சில எலும்புகள் குவிந்து கிடந்தன. சற்று தூரத்திலேயே அவற்றைக் கண்ட மாத்திரத்தில் அவை ஒரு மகாப்பறவையின் எலும்புகளாய் இருக்கக் கூடும் என நான் அனுமானித்தேன். என் நடைவேகம் அதிகரித்தது... இதயத் துடிப்பைப் போல. இரண்டுக்கும் ஓட்டப் பந்தயத்தில் போட்டி கண்டாற்போல.

நான் பறவையின் தோள் எலும்புகளைத் தேடினேன். விரிந்து கொடுக்கிற அதன் சிறகெலும்புகள் கிடைக்குமா என்று பார்த்தேன். எப்போது அவை சதையுரி பட்டிருக்கும் என்று அறிய முடியுமா என்று பார்த்தேன். காய்ந்திருந்தன எலும்புகள். சதையோ ரத்தமோ அடையாளங்கள் இல்லை. அது பறவையின் எலும்பாய் இராது என்றே பட்டது. அவை மனித எலும்புகளா என்ன?... என யோசிக்குமுன்னே எனக்கு சில புதிய ஒலிகள் அறிமுகமாயின. யாரோ என்னைப் பார்க்கிறாற் போல ஒரு விநோத திகிலுணர்வில் கிட்டத்தட்ட நான் துள்ளிவிட்டேன். உடல் சில்லிட்டுவிட்டது. எனக்கு ஏதோ ஆபத்து. ஒருவேளை... என மேலே யூகிக்குமுன் நான் அந்த மனிதனைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்தான். சற்று தள்ளி சற்று நிழலான இடத்தில் அவன் நின்றிருந்தான். அவனை.... அவனை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்கிற முதல் உணர்வு. அவனுக்கும் அப்படியோர் தாக்கம் ஏற்பட்டதா தெரியாது. ஆனால் அவனது அந்தப் பார்வையில் - என்னை அங்கே பார்த்ததின் ஆச்சரியம் இல்லை.

ரொம்பப் பழகியவன் போல நான் அவனிடம் கேட்டேன். ''இங்கே பறவைகளே இல்லையே?'' அவன் சொன்னான். ''நானும் ஒரு பறவையைத் தேடி வந்தவன்...'' அவனை ஏனோ நம்பலாம் என்று தோன்றியது எனக்கு. ''எனக்கு தாகமாய் இருக்கிறது'' என்றேன் நான். ''பசிக்கிறது எனக்கு...'' என்றேன்.

''வா...'' என்றான் அவன்.

அவன் போய்க் கொண்டேயிருந்தான். அவனை எங்கே பார்த்திருக்கிறேன் என யூகிக்க முயன்றேன் நான். எதுவும் பேசாமல் அவன் போய்க் கொண்டிருந்தான். அது ஏனோ எனக்கு பயமாய் இல்லை. அவன் என் தாகத்துக்கும் பசிக்கும் வழி செய்து விடுவான் என்றுதான் பட்டது. சட்டென அந்தக் காற்றில் சிறு குளுமை வந்தது. ஆகா அருகே எங்கோ தண்ணீர்... தண்ணீர் கிடக்கிறது. நாங்கள் நடந்து ஒரு சிற்றோடையை எட்டியிருந்தோம் என்றாலும் அவன் தொடர்ந்து மேலே போய்க் கொண்டிருந்தான். தண்ணீரின் சலசலப்பு கேட்டது. நான் அவனைத் தொடர்ந்து போவதா தண்ணீர்ச் சத்தத்தை அனுசரித்து வழிபிரிவதா தெரியவில்லை. என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ''நில்'' என்றேன் நான்.

''வா'' என்றான் அவன் திரும்பிப் பார்க்காமல். எனக்கு ஆத்திரமாய் வந்தது. அவன் வழிதிரும்பவும் நான் அந்த ஓடையைக் கண்டேன். என் தாகம் அதைப் பார்த்ததும் அதிகரித்தாற் போலிருந்தது. ''நில்'' என்றேன் நான் அதிகாரமாய். அவன் நின்று என்னைத் திரும்பிப் பார்த்தான். ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. அந்த முகம்... அவன்... அவனை எனக்குத் தெரியும். அவன்... அது என் முகம்தான். நான் சட்டென்று தண்ணீரில் எட்டிக் குனிந்து என் முகத்தைப் பார்த்தேன். அது நான் அல்ல. என் தோளில் சிறகுகள் எப்படி வந்தன. நான் ஒரு ராஜாளிப் பறவையாய் மாறியிருந்தேன். அவனைப் பார்த்து நான் பறந்துபோனேன். ''வராதே. நில்... வராதே வராதே...'' என்று அலறி ஓடலானான் அவன். நான் துரத்திப்போக வாட்டமாய் வழி வாய்பிரிந்து விரிந்தவாறிருந்தது. நான் அவன்மீது பாய்ந்து இரத்தங் குடிக்க ஆரம்பித்தேன். நல்ல வெளிச்சமாய் இருந்தது அந்த இடம். வழுக்கை மண்டைபோல.

- எஸ். ஷங்கரநாராயணன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It