ஓரறிவு உயிர்கள், ஈரறிவு உயிர்கள், ஐந்தறிவு உயிர்கள் தெரிகிறது. நாம் ஆறறிவு உயிர்கள். ஐம்புலன்கள் தெரிகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி. ஐம்புலனால் அறியப்படுவது ஐந்தறிவு. ஆறாம் அறிவு எது பகுத்தறிவா? அதென்ன பகுத்ததறிவு அதற்கான புலன் எங்கே இருக்கிறது? அறிவா? அறிவும் புலனும் ஒன்றா? இப்படியாக ஒரு கூட்டம் கோயில் பஜனை மடத்தில் உட்கார்ந்து வெகு நேரம் வாதாடிக் கொண்டிருக்கும்.

இந்த சர்ச்சையில் அநேகமாக குட்டிப்பையனும் மணியும்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள். ஐம்புலனும் ஐந்தறிவும் ஒன்று தானென்று ஒரு மூன்றுபேர் கொண்ட படைப்பிரிவும் இல்லை வௌவெறென்று இரண்டுபேர்கொண்ட ஒரு குழுவும், எச்சில் மேல் தெரிக்க சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இதை நிதானித்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே எப்பொழுது ஆரம்பித்தது யார் உள்ளே இந்த விசயத்தை நுழைத்தார்கள் என்பதே தெரியாமல் சினிமா நடிகைகளிள் உண்மையான தற்போதைய பேரழகி யார் என்று பேச்சு வேறுவிசயமாகி சூடு பறந்து கொண்டிருக்கும். என்ன நடிகைகளின் மேதா விலாசம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்களே என்று எழுந்து போய்விட முடியாது. சற்றைக்கெல்லாம் யோகாவும் தியானமும் முட்டி மோதிக் கொள்ளும். உண்மையிலேயே உடல், மன ஆரோக்கியத்திற்கு தியானம் முக்கியமா யோகா முக்கியமா என்று லோகம் காக்க உண்மையான விசயம் எது, யார் எப்போது என்பது போல ஞானமார்கத்தின் தேடலாக கேள்விகளும்; சர்ச்சைகளில் இவர்கள் மத்தியில் வந்து மாட்டிக் கொண்டு கோயில் பஜனை மடத்தில் விழி பிதுங்குவது உண்டு.

Man நான் இந்த விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. விவாதத்தில் கலந்து கொள்ளாததால் நான் பழுத்த புத்திசாலி என்று நினைக்க முடியாது. எனக்கு சோப்பு விலை தெரியும். அரிசி தரம் பார்த்து சொல்வேன். பற்பசையோடு இலவசமாக சவரபிளேடு ஒன்று இந்த மாதம் மட்டும் தருகிறார்கள் என்பதை சொல்வேன். காப்பிப் பொடியின் விலை கூடிற்றா இல்லை குறைந்ததா தெரியும். ஆனால் இவர்கள் இரவு நேரத்து பஜனை மடத்தில் எடுத்து விளாசிக் கொண்டிருக்கும் கேள்விக்கு ஒரே சரியான திடமான நேர் பதில் தெரியாது.

புரிவது சித்தாந்தமா புரியாதது வேதாந்தமா ரகத்தில் வாய் வலிக்க அவர்கள் விவாதத்ததை மெல்லிய மலைத்தூறல் போல் சாதாரணமாக ஆரம்பித்து பின் அனல் பறக்கும் உச்ச வேலையில் பொதுச் சண்டையை சொந்த சண்டைகளாக்கி பேசிக்கொள்வார்கள். வாய்வலி மிஞ்சும். அவரவர் அடாவடி ஞான பேச்சிற்கு ஒத்த ஒரே விடை என்றைக்குமே வந்ததில்லை. நான்கு பேர் ஒரு விசயம் கத்திப் பேசினால் எட்டுவிதமான முடிவுகளும் பின் உன் யோக்யதை தெரியாதா என்று பிணக்குகளும் வந்தே அது முடிவு அடைவதால் நான் இந்த அறிவுசார்ந்த விசயங்களில் கலந்து கொள்வதில்லை.

என்னைப் போல் கலந்து கொள்ளாத, ஆனால் கூட்டத்தில் ஐக்யமாகி இந்த பக்கமும் அந்த பக்கமும் சாராமல் தலையை மட்டும் ஆட்டும் இன்னொருவன் ஜோசப். சிலசமயம் விவாதத்தில் எவனாவது உலகம் லாளிபவன் ஓட்டல் ஊத்தப்பம் போல் வட்டமானது, ஆனால் தட்டையானது என்று பேசினால் நான் குறுக்கிட்டு ‘இல்லை’ என்பதுண்டு. ஆனால் இந்த ஜோசப்போ ஒரு வேளை அப்படித்தான் உலகம் ஊத்தப்பம் போல் இருக்குமோ என்று பாதி நம்பத் தயாராகிவிடுவான்.

சில நாட்களில் இரவு பத்து பதினொன்று வரை கூட விடை காணா விவாத வரட்டு வாதக் கூட்டம் நடந்து சின்ன சண்டையில் அல்லது மகா பெரிய சந்தோசத்தில் முடியும். பிறகு வீடுகளுக்கு தூங்க சென்று விடுவோம்.

மறுநாள் காலையில் ஆளாலுக்கு ஆறு மணிவாக்கில் எழுந்து காலைக் கடன் வட்டி எல்லாம் முடித்து, அரிதாரம் பூசி பஸ் ஏறும் போது ஜோசப்,; குட்டிப்பையன், சிவராமன் வகையான திருக்கூட்டம் ஏழாம்; நம்பர் டவுன் பஸ்சில் ஆஜர்.

எனக்கு மளிகைக் கடையொன்றில் வேலை. பி.காம் முடித்துவிட்டு எந்த ஒரு அரும்பெரும் கனவுகளும் இல்லாமல் இந்த வேலையில் சேர்ந்து கொண்டேன். அறுநூறு ரூபாயும் தினப்படி பத்து ரூபாய் பேட்டாவும் என்று ஆரம்பித்து ஏழு வருடங்களுக்குப் பிறகு மூவாயிரத்துக்கு நூறு குறைச்சலும் இருபத்தி ஐந்து பேட்டாவும் தரும் என் முதலாளிக்கு நான் விசுவாசமாய் நடந்து கொள்கிறேன். என் முதலாளி கல்லாவிற்கு பின்னால் முப்பத்திஏழு வயதில் மகா பெரிய தொப்பையுடன் கால்குலேட்டரில் **அரிசி மூட்டை ஒன்று ஆயிரத்தி தொல்லாயிரத்தி பத்து பெருக்கல் நாற்பது மூட்டை சமம்* என்று விடை போட்டுக் கொண்டு ‘டேய் என்னடா வேடிக்கை. சரக்கை கட்டி குடுடா...’ என்பது போன்ற ராமநாம ஜெபங்களை சொல்லியபடி இருப்பார்.

நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் சரியாகத்தான் பில் போடுகிறேனா என்று என் சித்ததிரகுப்த ஏடுகளை அவர் குறுக்கு பரிசீலனை செய்தபடிக்கு இருந்தார். ஒரு மூட்டை பொன்னியை ஏழு ரூபாய் என்றும் கிலோ உப்பை ஆயிரத்தி என்பது ரூபாய் என்றும் தவறுதலாக எழுதிவிடுவேனோ என்று பார்பதாக அவர் காரணம் கூறினாலும் அது பொய் என்பது எனக்குத் தெரியும். என் பந்துக்கள் கடைக்கு வரும்போது பல்காட்டி குறைச்சலாக பில் போடுகிறேனா என்பதை பார்த்துக் கொள்வதே உண்மையான காரணம் என்பதை நான் அறிவேன்.

எனக்கு முன் இந்த கடையில் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் வேலை சலிப்பதாகவும் சம்பளம் புளிப்பதாகவும் போய்விட நான் சலிப்பே இல்லாமல் இந்த வேலையை ஏழு வருடமாக விடாமல் செய்வதில் ஏகப்பட்ட சந்தோசம் முதலாளிக்கு. அதற்காக சம்பளத்திற்கும் கூடுதலாக ஒரு டேன்டக்ஸ் ஜட்டிகூட அவர் எடுத்து தந்தது என்னை சந்தோசப் படுத்தியதில்லை.

என் வேலை எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது இன்று வரை எனக்கு தீர்மானமாக தெரியவில்லை. ஆனால் இதே அளவு பணம் ஈட்டித்தருகிற வேறு வேலை எனக்கு நாதியில்லை. அதனால் இங்கு ஒட்டிக் கொண்டிருக்கிறேன். காலையில் ஏழு மணிக்கு ஊரில் பஸ் பிடித்து, முக்கால் மணி நேரம் பிரயாணம் செய்து எட்டுமணிக்கு கணக்கு எழுத உட்கார்ந்தால் இரவு எட்டுமணிக்கு ‘சரி நீ கௌம்பு நான் பாத்துக்கிறேன்’ என்று என் முதலாளி மகாபெரிய தொப்பையின் மேல் பில் புக்கை வாங்கி வைத்துக் கொண்டதும் நான் எட்டரை பஸ் பிடிக்க கிளம்பிவிடுவேன்.

பஸ்சில் சிவராமன், குட்டிப்பையன், ஜோசப் கூட்டங்களோடு ஐக்யமாகி அவர்கள் செய்து கொள்ளும் அறிவுப் பூர்வமான வாயடிதடிகளை ரசித்து கேட்படி ஊர் போய் சேர்வோம். அதாவது அந்த கோயில் பஜனை மட விவாதம் என்பது பஸ்சில் துவங்கி அங்கே முடிவடைகிறது. ‘ஒருத்திக்கு ஒரே பிரசவத்தில எப்படி நாலு புள்ளை பொறக்கும்...’ என்று பேச ஆரம்பித்து வீடு வந்து சேர்ந்து, வேகமாக சாப்பிட்டு முடித்துக் கொண்டு பஜனைமடம் வந்து உட்கார்ந்து ‘நிலா நெஜமாவே வெள்ளையா...?’ என்ற கேள்விக்கு சண்டைபோட்டு பின் உறங்கப்போவோம். சலிப்பில்லாத இளைஞர் கூட்டம்.

இந்த கூட்டத்தில் குட்டிப் பையன் சொரி சிரங்குகளுக்கும், ரண மூல பவுத்திரங்களுக்கும், காய்ச்சல் சன்னிக்கும், எயிட்சுக்கும், கூடவே ஆண்மை விருத்திக்கும், குடும்ப கட்டுபாட்டிற்கும் மருந்து எடுத்து தந்து கொண்டிருக்கிறான், அவன் வேலை செய்வது ஒரு மெடிகல் ஸ்டோரில்.

சிவராமனுக்குத்தான் கொஞ்சம் அழுக்கான வேலை. டீசல் என்ஜினில் டவுசர் பேண்ட் எல்லாம் கழுற்றி கைவேறு கால்வேறாக்கி கிருஷ்ணாயிலில் முக்கி சுத்தம் செய்து திருகி கடைந்து சொருகி அடித்து அடிபட்டுக் கொண்டு கறேரென்று வருவான். அவன் பிறக்கும்போதே கருப்பு. இதில் செய்யும் வேலையின் தன்மையால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கறுப்பழகு. கூடுதல் கறுப்பழகு பெற்ற இரும்பு மெக்கானிக்.

இன்னொருத்தன் எஸ்.டி.டி பூத்தில் ‘ஹலோ...’ சொன்னால் காசு கேட்பவன். இன்னொருத்தன் எருமைக்கு இனிமா கொடுக்க உதவியாளாக வெர்ட்டினர் ஆஸ்பிடல் போகிறான்.

ஜோசப் என்னோடு என் கடையில் தான் வேலை செய்கிறான். அவன் வேலையில் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறது. நான்தான் பொட்டலம் மடிக்க முதலாளியிடம் சொல்லி சேர்த்து விட்டேன். வந்த புதிதில் ஒரு கிலோ பருப்பை வைத்து பிரமீடு கட்டுபவன் போல் அளவு ஆழ நீளமெல்லாம் பார்த்து பருப்பை காகித கூம்பு உள்ளே நிறைத்து மடித்து ஒரு கையில் பிள்ளை போல் பொட்டலத்தை மார்பில் அனைத்துக் கொண்டு கட்டுவதற்கு நூல்நுணி தேடி பொட்டலத்தை கட்டி நூலை அறுக்கும் போது பொட்டலம் சரியாக அரிசி மூட்டையில் கை தவறி விழுந்துவிட்டது. அரிசி மூட்டையில் விழுந்த பொட்டலத்தை எடுக்கும் போது அது முழுதாக பிரிந்து அரிசியில் இரண்டறக் கலந்து பருப்பரிசியாக ஆனது. முதலாளி என்னை கல்லாவில் உட்கார்ந்து கொண்டு, தொப்பை பலு}ன் போல் உப்பி அடங்க ‘துப்பு கெட்டவனை சேத்து உட்டுட்டியே...’ பார்வை பார்த்தார்.

ஆனால் ஜோசப் துப்புகெட்டவன் இல்லை. இப்பொழுது பாருங்கள். ஒரு வருட பழக்கம் அவன் கைகளில் விளையாடுகிறது. ஒரு மூட்டைஅரிசி கொடுத்து நூறு நூறு கிராமாக கட்டு என்றால் ஆயிரம் பொட்டலமாக்கி சற்றுநேரத்திலேயே சாக்கை குடோனில் மடித்து போட்டுவிடுவான். அவ்வளவு சுறு சுறுப்பு. கடையில் என் முதலாளிக்கு பிடித்த இன்னொரு வேலைக்காரன் ஜோசப்.

எனக்கு ஜோசப்பை பிடிக்கும் என்பதற்கு அவனின் பச்சைப் பிள்ளைத் தனம்தான் காரணம். அவனைப்பற்றி பேசினால் பேசிக் கொண்டேயிருப்பேன். யோசித்தால் யோசித்துக் கொண்டேயிருப்பேன். அவனொரு அப்பாவி நல்லப்பையன் என்று தோற்றமும், எளிமையும் அவனின் பார்வையும் யாருக்கும் சொல்லும். பழகினவர்கள் அவன் முகத்திற்கு நேராகவே அவனை நல்லவனென்று சொல்வார்கள். ஜோசப் ஒரு ஆடாக பிறந்திருந்தால் கசாப்புக்கடை பாய்கூட அவனை வெட்டியிருக்க மாட்டார். ஜோசப் ஒரு நல்ல ஏழை.

ஜோசப்பை எனக்கு சிறு வயது முதலே தெரியும் என்று சொல்ல முடியாது. அவனும், நரையோடிய பரட்டைத்தலையோடு அவன் அம்மாவும், மூக்கில் சளி ஏடு படிந்தபடி அவன் தங்கை ஸ்டெல்லாவும,; கொஞ்சம் சாராய போதையில் மேல்குத்தலாய் மயங்கிய கண்களோடு அவன் அப்பாவும் வேறு ஊரில் சோத்துக்கு வழியற்று இந்த ஊரில் பஞ்சம் பிழைக்க வந்தார்கள். என்றைக்கு என்று சரியாக நினைவில்லை. ஆனால் ஜோசப் இந்த ஊரில் பிறந்தவன் இல்லை.

அவன் அப்பா தன் குச்சிக் கைகளால் பிள்ளைகளை பிடித்தபடி ‘உங்களையெல்லாம் ராசா புள்ளைங்களாட்டும் வச்சிகிடுறேன் வசதி வரட்டும்...’ என்று கொஞ்சுவதை வந்த புதிதில் நான் பார்த்திருக்கிறேன். அவன் மூன்றாம் வகுப்பில் ஊர் வந்ததும் சேர்ந்தான். நான் பத்தாவது படித்தேன். பணிரெண்டாம் வகுப்பை பாஸ் செய்துவிட்டு மேலும் அவனால் படிக்க முடியவில்லை. கல்வி ஓசியில் வரும் சமாச்சாரம் இல்லை. படிப்பு நின்று போனது. ராசாவாட்டம் வச்சிகிற அப்பா சாக்கடையோடும் டிச்சில் போதையோடு விழுந்து போதை தெளியாமலே பரலோக பரமபிதா வசம் போய்ச்சேர்ந்தார். அதன்பிறகு அம்மா வருமானம் குடும்பம் நடத்த போதாது என்று அவன் உணர்ந்த பின் படிப்பு காசுள்ளவனின் சமாசாரம் என்று அறிந்து கொண்டான். பொட்டலம் கட்ட வந்துவிட்டான். அதில் அவனுக்கு வருத்தமொன்றும் இல்லை. சம்பாதிக்கிறேன் என்ற சந்தோசமிருந்தது.

அவனைவிட ஏழுவயது மூத்தவன் நான். அவன் என் தம்பியின் சிநேகிதனாக எப்போதாவது வீட்டுக்கு வருவான். ஒல்லிப்பையனாக இருந்தான். சிவப்பு உடம்பும் சாம்பல்நிற கண்களும் மென்மையான உதடும் மெல்லிய விரல்களும் நீண்ட பாதமும் கொண்ட அவன் சிரித்தால் கன்னத்தில் சுழல்போல் குழி விழும். பெண்பிள்ளையாய் பிறந்திருந்தால் எவரையும் வளைத்துப் போடும் அழுகு. கூச்ச சுபாவம் உள்ளவன். நன்றாக படிக்கக் கூடியவன். பெற்றவர் சாயலே இல்லாத புது அழகோடு இருப்பவன்.

கொஞ்சம் பேர் சந்தேகம் கொண்டு அந்த பரட்டைத் தலை கருத்ததப் பெண்ணை கேட்டே விட்டார்கள், ‘தத்துப் பிள்ளையா?’ என்று. ஊர்க்கார வம்பளக்கும் பெண்கள் ஒரு உள்நோக்கத்துடன் கேட்டபோதும் பரட்டைத் தலைக்காரி கேள்வியின் உள்நோக்கம் அறியாமலே மகன் அழகில் கர்வப் பெருமை கலந்த தொனியில் ‘என் வயித்தில பொறந்ததது தான் என்னவோ தப்பி பொறந்திடுச்சி...’ என்பாள். எத்தனை பெருமை அவளுக்கு மகனின் அழகில். ‘இந்த பையன் மட்டும் ஒரு பணக்காரி வயித்தில பொறந்திருந்தா...?’ என்று முடிக்காமல் மகனின் அழகும் தன் ஏழ்மையும் நினைத்து என்னென்னவோ வேறு கஷ்டங்களை பிதற்றியபடியே செல்வாள்.

இருந்த காலத்தில் அவன் அப்பா கொஞ்சமாய் சம்பாதித்து நிறைய குடித்து அவ்வப்பொது வீட்டிற்கும் காசு தருவார். அவன் அம்மா வயல்வேலை வீட்டுவேலை செய்வாள். தென்னையோலை குச்சி எடுத்து துடைப்பம் விற்பாள். காசுக்கு நீர் எடுத்து வீட்டிற்கு கொடுப்பாள். துவைப்பாள், கழுவுவாள். இவள் இன்ன வேலைதான் செய்வாள் என்றில்லாமல் எல்லா வேலையும் செய்தாள். அரைவயிற்றுக் கஞ்சி இரவிலும் ஒரு வேலைப் பட்டினி பகலிலுமாக பட்ட கஷ்டத்தை இன்றைக்கும் கூசாமல் சொல்லுவான் ஜோசப்.

மளிகைக் கடைக்கு பொட்டலம் கட்ட வந்தபின் மூன்று வேலை சாப்பாடும், காலையில் காபியும், கிடைக்கும் சராசரிக்கு சற்றே குறைந்த குடும்பமாக ஜோசப் குடும்பம் நிமிர்ந்து விட்டது.

ஏழ்மை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேனெ? என் குடும்பம் ஒன்றும் பெரிய வசதியானது இல்லை. அப்பா அச்சகத்தில் தடக் தடக்... என்று நோட்டீஸ், கல்யாணப் பத்திரிக்கைகளை மொடமொடவென்று அச்சடித்துக் கொடுத்துவிட்டு கசங்கிய ரூபாய்க் கந்தல்களை நிறைய பொருக்கிக் கொண்டு வருவார். போதும் அவர் வயதிற்கு. நாற்பதாவது வயதில் காலம் கடந்த திருமணம் செய்துகொண்டபோதே குடும்பம் வறுத்தெடுத்ததில் லொடலொடவென ஆடிப்போயிருந்த அவர் வந்த வருமானத்தில் என்னை பி.காம் படிக்க வைத்து, தம்பியை பி.எஸ்ஸி படிக்க வைத்து குடும்பத்தை வறுமையின் கோரப்பிடி இறுக்காமல் பார்த்துக் கொண்டார். இப்பொழுது எங்களுக்குத்தான் என்ன கவலை? நானும் இப்பொழுது சம்பாதிக்கிறேன். தம்பியும் பெண்களின் உள்ளாடையை எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் தைக்கிறான். பிறகென்ன வறுமை இல்லாமல் வயிறு நிரம்பிற்று. வயிறு நிரம்பினால் என்ன ஆசைகள் வரம்புக்குள் நிற்க சிறைபட்ட சிங்கமா?

எனக்கு பேராசை என்று ஒன்றும் கிடையாது. ஆனால் முதலாளியின் வளமான தொப்பையும், அவர் மனைவியின் உடற்கொழுமையும், அவர் பெற்றெடுத்த பெண் பதுமைகளின் கன்னச் செழுமையும், மாருதி கார் வேகமும், தரைமின்னும் வீடும், வீட்டினுள் டிவி, ஃபிரிஜ்ஜும், அதில் இருக்கும் குளிர்பானம் மற்றும் சில்லிட்டு சிவந்த பழங்கள், நகைகள், பட்டுகள், வாசனைகள், நாய்க்குட்டி, ரேடியோபெட்டி, சங்கீதம், பணம், உணவு, சந்தோக்ஷம் எல்லாம் என்னை சிலநாள் சலனப்படுத்துவது உண்டு, அந்த சலனத்தினால் ஒரு யோசனை வரும். சின்ன மளிகைக்கடை ஒன்று வைத்து கஷ்டப்பட்டால் நமக்கும் ஒரு காரும் மனைவியின் கன்னக் கொழுமையும் கிடைக்காதா,.. என்ற ஆசையும் வரும். அதனால் கொஞ்சமாய் சீட்டுகளும், சேமிப்புகளும், சிக்கனமும் செய்து வருகிறேன்.

ஜோசப்பிற்கு இப்படியெல்லாம் ஆசையிருக்குமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. அவனிடம் எப்படி ஒரு நல்ல உடையில்லையோ அப்படியே ஆசையும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவனிடமிருப்பதெல்லாம் விலை மலிவான கசங்கிய கைத்தையலிட்ட உடைகள். அவன் உள்ளத்து நேர்மைக்காகவும், கடைக்கு வரும் அவனின் அகோர உடை அலங்காரத்திற்காகவும் மனமிறங்கிய முதலாளி, தன் மளிகைக் கடை வரலாற்றிலேயே முதல் முறையாக அவனுக்கு ஒரு ஜோடி துணி எடுத்து கொடுத்து மாபெரும் புரட்சி செய்தார்.

சம்பாதனை காசாகி என் கைக்கு வந்த பின் என் கிராமம் தராத வாழ்க்கை வெளிச்சத்தை நகரத்தில் நான் கண்டேன். வேலைக்கு வந்து சேர்ந்த ஒரு வருடத்தில் டை கட்டிவந்த மெடிகல் ரெப்புகளை பார்த்து நானும் ஒரு தீபாவளிக்கு டைகட்டிக் கொண்டேன். செருப்புகளை உதரிவிட்டு ஷீக்களுக்கு மாறினேன். மடிப்பு கலையாத ஆடைகளை உடுத்தினேன். உயர்தர சவரபிளேடுகள். முற்பாடு பிற்பாடு சேவிங் சமாச்சாரங்கள் பவுடர்கள். அதிர அதிர பாட்டு. செகண்ட்கேண்ட் டு’வீலரில் சவாரி. புகை பிடிப்பது ஆண்மைக்கு அழகு என்று நான் மாறித்தான் போனேன்.

ஆனால், ஜோசப் மாறுவதாகவே தெரியவில்லை. ஒரு வருடத்திற்கு பின்னும் அதே அயர்ன் செய்யாத சட்டை, அடிபட்ட எருமையின் தோல்செருப்பு, பாக்கெட்டில் சரியான அளவிற்கு பஸ் சார்ஜ், அதே சிரிப்பு, அதே எளிமை. அவன் பழசாக பழசாக மெருகேறும் பருப்புபோல் பழமை மாறாமல் அப்படியேதான் இருந்தான்.

அவனை குட்டிப்பையனும் சிவராமனும் ஏகத்திற்கும் சீண்டுவார்கள். ‘ஏன்டா ஜோசப் உனக்குத்தான் நல்லா படிப்பு வந்துச்சே மேல படிச்சி நல்ல உத்தியோகத்துக்கு போயிருக்கலாமில்லே... ஏன் இங்க வந்து இப்படி பொண்ணுங்க **.......* மாதிரி கோபரம் கோபரமா பொட்டலம் கட்டிட்டு இருக்கே...’

‘படிச்சிருந்தா உத்யோகத்துக்கு போயிருக்கலாம். படிக்கதான் வசதி இல்லையே...’

‘சரி வசதி இல்ல அதனால வேலைக்கு போகல. அதை விடு. இப்ப என்ன கெட்டுப்போச்சி நல்லாத்தான் சம்பாதிக்கறே. ஒரு நல்ல துணி எடுத்து சார்ட் தெச்சி போட்டுகிடறது. அக்குல்ல கிழிஞ்சி முடி தெரியுது பார். அந்த அறுந்த செருப்பை தூக்கி போடறது. உன் அப்பா தந்ததா? ராஜராஜ சோழன் காலத்து மாடு போல இருக்கு, இன்னும் உன் கால்ல வந்து கஷ்டப் படுது. அதுக்கு விமோசனம் தந்துடு.’ ஒன்றாக கூடிவிட்டால் ஜோசப்தான் இவர்களுக்கு ஜோக்கர். போட்டு காய்ச்சி தாளித்துவிடுவார்கள்.

‘இப்ப முடியாதே. என் தங்கச்சிக்கு எதோ புத்தகம் இந்த மாசம் வாங்கணுமாம். அவ சொன்னா. அத இந்த மாசம் வாங்கி தந்துட்டு செருப்பு அடுத்த மாசம் பாத்துக்கலாம்.’

‘சரி போனா போகுது. அந்த செருப்பே போட்டுக்கோ. அடி செருப்பு தேஞ்சி போய் மேல் தோலை மட்டும் கால்ல போட்டுகிட்டு அலைஞ்சிக்கோ எங்களுக்கென்ன. நாங்க என்னா சொல்லறோம்னா.... இவ்வளவு அழகா இருக்கியே, பொட்ட புள்ளைன்னா எங்கள்ல ஒருத்தனே கட்டிக்கிடுவோம். ஆம்பிளையா போயிட்டே. ஒரு அழகான பெரிய எடத்து பொண்ணா பாத்து கட்டிகிட்டா வசதி வாய்பெல்லாம் வந்திடும் இல்லையா? நம்ம மொதலாளி மாதிரி...’

‘உங்களுக்கே இன்னும் கல்யாணம் ஆகலை. நான் சின்ன பையன் எனக்கு என்ன அவசரம். மொதல்ல என் அம்மாவுக்கு...’

‘அடப் பாவி... உன் அம்மாவுக்கு இன்னொரு கல்யாணமா...? வேண்டாண்டா....’ கோயில் பஜனைமடம் அதிர சிரிப்பார்கள். உள்ளே இருக்கும் சாமி திடுக்கிட்டு பள்ளியெழுந்து பின் தூங்கியிருக்கும்.

‘சும்மா இருக்கிங்களா... எத பேசினாலும் குதர்க்கம். வெளையாடாதிங்க. மொதல்ல எங்க அம்மா கஷ்டத்தையெல்லாம் தீத்துட்டு என் தங்கச்சிய நல்ல எடத்திலே கல்யாணம் கட்டி குடுத்து அப்புறம் தான் என் கல்யாணம்.’

‘டேய்...டேய்...’ இடையிடையே சிரிக்கிறார்கள். ‘ஜோசப்.. நான் சொல்லறதை கொஞ்சம் கோபப்படாம கேளு...’ நடுநடுவே சமாதானம் செய்கிறார்கள் ‘கேப்பையா...?’

‘சொல்லுங்க

‘நான் சொல்லறதை கேளு. உன் அம்மா கஷ்டமும் தீரும். உன் பாப்பாவுக்கும் கல்யாணம் ஆகும். புரிஞ்சதா? நீ ஒரு ஒசந்த நிலைக்கி வந்துடலாம். நீயும் கல்யாணம் பண்ணிகிட்டு இந்த கோயில்ல இருக்கிற சுப்ரமண்ய சுவாமிக்கும் வருசமானா ரெண்டு கல்யாணத்தை குடும்பத்தோட வந்து செஞ்சி வக்கலாம். சொல்லறத கேளு... கேப்பயா?’

‘கேக்கறேன் சொல்லுங்கண்னே. நீங்க சொல்றத கேக்காமயா...?’

குட்டிப்பையன் ஜோசப்பின் காதருகே.. குசுகுசுப்பாய் ‘உங்க மொதலாளி பொண்ணு பிரியா இல்லே பிரியா... அதாண்டா உங்க மொதலாளியோட மொத பொண்ணு.’

‘ஆமா...’

‘அதை கட்டிக்கோயேன்... உன் பிரச்சினை எல்லாம் சரியாயிடும்...’

சொல்லி எல்லோரும் இடி இடியென சிரித்தார்கள். ஜோசப் முகம் சிவந்து போயிற்று. வெட்கப்படுகிறான். முறைக்கிறான். அவர்கள் சிரிப்பை நிறுத்துவதாய் தெரியவில்லை. இவன் தகுதியும் முதலாளிப் பெண் பிரியா தகுதியும் வெவ்வேறு பால் வெளியில் உள்ள விண்மீனுக்கிடையிலான தூரமென்பதை அறிந்தவர்கள் போல் அப்படி சிரிக்கிறார்கள். ஒருவன் தன் நாக்கை இழுத்து கால் பாதத்தை தொடுவது சாத்தியமானாலும் பிரியாவை இவனோடு ஒட்டவைப்பது சாத்தியமல்ல என்பதால் சிரிக்கிறார்கள். ஆனால் ஜோசப் அவர்களில் சிரிப்பை அடக்க ஒன்று செய்தான் பாருங்கள். பல்காட்டி குரைத்தநாய், மயிர் நட்டுக்கொண்டு விரைத்த பூனை பார்த்து அதிர்ச்சியில் நிறுத்தியது போல் தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டார்கள். அவன் பாக்கெட்டில் கையை விட்டு துண்டாய் ஒரு காகித்ததை எடுத்து குட்டிப் பையனிடம் தருகிறான். அது பிரியா என்ற அந்த முதலாளியின் யௌவனப்பெண் அவனுக்கு எழுதிய காதல் கடிதம்.

அந்த காகிதத்தை படித்துப் பார்த்த குட்டிப்பையனின் முகம் பாதி சிரிப்போடு பேதிக் குடித்ததுபோல் ஆகிவிட்டது. சிவராமனிடம் தந்தான். சிவராமனும் படித்து ‘என்னடா இது... நெஜமாடா...?’ என்று உரளுகிறான். அந்த துண்டு சீட்டில் அந்த யௌவனப் பெண் ‘ஐ லவ் யூ... ஜோசப்’ என்று எழுதி ‘முத்தங்களுடன், பிரியா’ என்று முடித்திருக்கிறாள். அவளுக்கு வயது பதினைந்தும் படிப்பு பத்தாவதுமாகிறது.

ஜோசப் பேச ஆரம்பிக்கும் போது இவர்கள் எல்லோரும் தடியடிபட்ட மனிதக் குரங்குகள் போல் தளர்ந்து போய் அவனை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜோசப் தன்னையும் அறியாமல் பேசுகிறான், ‘எனக்கு எதுமே வேணாம். நீங்க சொன்ன மாதிரி பிரியா மட்டும் இருந்தா போதும். அவளை கல்யாணம் கட்டிகிட்டா நான் எங்கயோ போயிடுவேன்..’

நீயா ஜோசப்..? இந்தப் பூனை பால் குடிக்குமா என்று சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தால் கடைசியில் பால் பூனையை குடித்து விட்டிருக்கிறதே.

ஜோசப்பின் கனவு மிகச் சிறியது தான். அம்மா சந்தோசம், தங்கை கல்யாணம். பிரியா, அவ்வளவே. அதில் இருக்கிற பயங்கரம் தான் பெரியது. பிரியாவின் அப்பாவின் இன்னொரு முகமும் அவர் வைத்திருக்கும் மூட்டை தூக்கும் ஆட்களின் புஜபலத்தின் தடிமனும் இவனுக்கு தெரியாது. சுடுகாட்டுக்கு போக பயப்படறவன் பேயை கட்டிகிட்ட கதையாயிடும். அடிதடி பார்த்தாலே மயக்கமாகிறவன் தானே அடிபடப் போறான். வேண்டாம் என்றால் ஒப்புக்கொள்கிற வயசா இவன் வயசு.

இன்றைக்கு போனால் கூட இவன் அம்மா ஊரில் தென்னந் துடைப்பம் விற்றுக் கொண்டிருப்பாள். அவன் தங்கை கிழிந்துபோன மஞ்சள் பையில் எட்டாவது புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்கப் போவாள். இதில் பிரியா கனவு இவனுக்கு எங்கிருந்து வந்தது. முதலாளிக்கு இந்த விசயம் தெரிந்தால் நாளைக்கே இவன் தோலை உரித்து பைகளாய் தைத்து ‘அனுராதா ஸ்டோர்ஸ்’ என்று பிரிண்ட் செய்து கஷ்டமர்களுக்கு இனாமாக தந்துவிடுவார்.

இவன் மேல் முதலாளிக்கு பெரிய மதிப்பு உண்டு. நாணயமானவன், பத்துபைசா எடுக்காதவன், டிபன் பாக்சில் அரிசி திருடாதவன், பற்பசைகளை டவுசர் பாக்கெட்டில் மறைத்து கொண்டு போகாதவன், தெரிந்தவர்களுக்கு நூறுகிராம் சேர்த்து படியளக்காதவன் என்று அவருக்கு தெரியும். அவனை மிகவும் நல்லவன் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். நான் காதலிப்பது நல்லவனுக்கான இலக்கணமல்ல என்று சொல்லவில்லை. ஜோசப் அப்படிப்பட்டவன் இல்லை என்றுதான் பிரியாவோடு ஒன்றிரண்டு வார்த்தைகளை சிரிப்போடு அனுமதித்திருக்கிறார் முதலாளி. இந்த உள்ளு’ரும் மெய்க்காதல் தெரிந்தால் அவருக்கு இவன் துரோகம் செய்ததாய் அவர் நினைக்கக்கூடும்.

ஒரு முறை யாரோ செய்த தவறுக்கு இவனை ‘கலவானிப்பய...’ என்று அவனை அவர் திட்ட, அன்றைக்கு போன ஜோசப் மூன்று நாள் வரவேயில்லை. பிறகு உண்மையான கயவன் இவனில்லை என்று தெரிந்து அந்த மளிகைக் கடை முதலாளி தன் மளிகைக் கடை வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக கார் வைத்து அவன் வீட்டிற்கு போய் அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து சமாதானம் செய்திருக்கிறார். அவ்வளவு பிடிப்பு அவருக்கு இவன் மேல். ஒரே சொல்லுக்காக நல்ல வேலையை விட்டுவிட்டு மூன்று நாள் சைக்கிள் கடையில் பங்சர் ஒட்டிக்கொண்டு ஒருத்தன் இருந்தால் அவன் எத்தனை மானஸ்தனாகவும் எத்தனை நல்லவனாகவும் இருக்க வேண்டும். ஆனாலும் இவனுக்கு அவர் மகள் மேல் இருக்கும் ‘ஐ லவ் யூ’ சமாச்சாரம் தெரிந்தால் அனுராதா ஸ்டோர்ஸ் பைதான்.

ஜோசப்பின் நம்பிக்கைகளும் துணிவும் வேறு. வாழ்க்கையை அவன் அணுகும் விதமும் வினோதமாய் இருக்கிறது. அவன் தேவனை நம்பினான். அவனுக்கு வேண்டுமென்பது நிச்சயம் கிடைக்குமென்று திடமாக நம்பினான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொன்னாலும் அவன் வாழ்வு முழுதும்; நம்பிக்கை நிரம்பி இருந்தது.

‘நடக்காதுடா அவளை விட்டுடு. அவ சின்ன பொண்ணு பணக்கார பொண்ணு. அவ சகவாசம் வேணாம்.’ என்றால் அவன் விடுவதாய் இல்லை.

‘என்னோட மனசில எது தோணுதோ அது நடக்கும் அண்ணே. கண்டிப்பா நடக்கும்.’

‘பயித்தியம் புடிச்சவன் மாதிரி பேசாத. எனக்கு கூட லாட்ரியில ஒரு கோடி ரூபாய் விழும்னு தோணுச்சி. அதனால சீட்டு வாங்கினேன். பத்து ரூபாய்தான் போச்சி கோடி ரூபாய் விழலையே. மனசுல தோனறது நடந்துட்டா மனுசன் இப்டியாடா இருப்பான்.’

‘எல்லாருக்கும் அப்படி நடக்காது. எனக்கு அப்படி நடக்குது. எனக்கு மனசில ஒன்னு நடக்குன்னு தோணிட்டா அது நடக்கும். சிலருக்கு கனவு பலிக்குமே அப்படி.’

எந்த காலத்து ஆளுடா நீ. மொதலாளி கம்ப்யூட்டர்ல பில் போட்டுட்டு இருக்கார் தெரிஞ்சதா? ஓலைச் சுவடி வச்சி எழுதிட்டு இல்ல. இந்த காலத்தில வந்து மந்திரவாதி மாதிரி தோணினதெல்லாம் நடக்குதுன்னு டிவி. சீரியல் சாமியார் மாதிரி பேசிகிட்டுஇருக்காத.’

‘இல்ல அண்ணே... சொன்னா நம்புங்க. எனக்கு இது நாள் வரையில அப்படித்தான் நடந்திட்டு இருக்கு. என்னால பனிரெண்டாவதுக்கு மேல படிக்க முடியாதுன்னு மனசுல ஒரு நா தோணுச்சி. அதுக்கு மேல படிக்க முடியாமதான் போச்சி. படிப்பு நின்னாலும் சம்பாதிப்பேன்னு பிறகு தோணுச்சி இப்ப சம்பாதிக்கிறேன்.’

‘அப்டியா?’ இவன் சொல்வது நகைப்பாய்த்தான் இருக்கிறது. இப்படி ஆகறதுக்கு தோணணுமா? ஒவ்வொரு ஏழைக்கும் காசில்லைன்னா படிக்க முடியாதுன்னு தோனத்தான் செய்யும்.

‘என் அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியாம போயிடும்னு சில நாள் தோணும். அப்படி என் மனசுக்கு தோணிட்டா அவளுக்க ஒடம்புக்கு முடியாம தான் போயிடுது. இத நான் பலநாள் பத்துட்டேன். என் பாப்பா வயித்திலே இருக்கும் போது பாப்பாதான் வயித்தில இருப்பான்னு எனக்கு சரியா தோணுச்சி. அம்மா கிட்டே சொன்னேன். பாப்பாதான் பொறந்தா?’

‘நெஜமாவா..?’

‘நம்பிக்கை இல்லனா என் அம்மாவ கேட்டு பாருங்க. நான் சொல்லறது மெய்யா பொய்யான்னு.’

‘சரி கேட்டுகறேன். சொல்லு.’

‘என் அப்பா சாகறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே எனக்கு அவர் செத்து போயிடுவார்னு தெரியும்’

‘என்னது...?’

‘உண்மையாதான். என் அம்மாவ கேட்டுப் பாருங்க நான் அவகிட்டே சொல்லிட்டேன். அதே மாதிரி என் அப்பா செத்துப் போனாறா இல்லையா கேட்டுப் பாருங்க.’

‘எப்படிடா நடக்கும் இதெல்லாம்.’

‘அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு தோணுது அது சரியா நடக்குது. அவ்வளவுதான்.’

‘தோணுதுன்னா எங்கடா தோணுது? உனக்கு. ஒடம்புல எந்த எடத்தில உனக்கு தோணுது சொல்லு.’

‘சரியா தெரியல அண்ணே... தலையிலையா இருதயத்திலையா... மனசிலையா... எங்கன்னே தெரியல... மூளையிலதான் இருக்கும். எங்கியோ என்னவோ சட்டுன்னு அந்த நெனப்பு மனசுல ஓடுது. கரண்ட் மாதிரி. அப்படி ஒரு நெனப்பு மனசுல தானா ஊரி ஓடினா அது கண்டிப்பா நடக்கும். நான் பிரியாவ கண்டிப்பா கல்யாணம் கட்டிப்பேன் பாரேன்.’

அவன் சொன்னதும், சொன்னதை சிரித்தபடி கேட்ட நான் அதை அவன் அம்மாவிடம் கேட்டு அவளும் அதை ஆமோதித்ததால் திகைத்துப் போனேன். அப்பா சாவதும். வயிற்றில் இருப்பது பாப்பாதான் என்றும் சொல்வதும் இவன் அமானுஷ்ய சக்தியா? அவன் அம்மா அப்படி அவன் சொன்னது உண்மைதான் என்கிறாளே. இவனுக்கு சரியாகத்தான் தோன்றுகிறதா? இது பொய்யில்லையா?.

‘பிரியாவோட அப்பா உன்ன கொன்னே போட்டுடுவார் தெரியுமா? அது உனக்கு தோணவேயில்லையா, கரண்ட் மாதிரி...’

‘இல்ல கொல்லமாட்டார். எங்க கல்யாணத்தை ஏத்துக்கவும் மாட்டார் எதுக்கவும் மாட்டார். கல்யாணத்துக்குனு ஏதும் குடுக்கவும் மாட்டார்.’

‘யாரு? அவரு உங்க கல்யாணத்தை எதிர்க்கமாட்டார்... இத நம்ப சொல்லறியா என்ன?’

‘நீங்க வேணும்னா பாருங்க. நான் ஒரு கஷ்டம் இல்லாம கல்யாணம் செஞ்சிக்க போறேன். அதுக்கு பின்னாடிதான் நெறைய கஷ்டப்படுவேன். ஆனாலும் கஷ்டப்பட்டு என் மாமனாரைவிட பெரிய பணக்காரனாவேன்னு மனசு சொல்லுது.’

‘இப்பவே மாமனாரா?’

‘மனசு சொல்லிட்டா அவர் மாமனார்தான். நான் கண்டிப்பா பிரியாவ கட்டிப்பேன். இது நான் சொல்லற வார்த்தை இல்ல. உள்ள தோனினது. இது நடக்கும். ஞாயிறு தவறாம சர்சிக்கு போறேன். சர்ச் படுக்கட்டுலே உட்காந்து மணிக்கணக்கா ஆண்டவர்கிட்டே வேண்டிக்கிறேன். ஆண்டவர் கைவிட மாட்டார். ஒரு பிள்ளைக்கு என்ன வேணும்னு ஆண்டவருக்கு தெரியும். எனக்கு எல்லாம் தருவார்.

‘இதுவரையில எனக்கு தோனினது நடக்காம இருந்ததேயில்லே. இப்ப, இந்த நிமிசம் தோணுது. என் அம்மா பட்டு பொடவை சரசரக்க கார்ல போவாங்க. என் பாப்பா ரெண்டு புள்ளைங்களும் அவ புருசனுமா வசதியான இடத்தில இருப்பா.; குழந்தைகளை கொஞ்சிகிட்டு நானும் பிரியாவும் நிலா பாத்தபடி இருப்போம்.....’

பஸ்சின் ஜன்னலோர இருக்கையில் உட்காந்தது ஜோசப் இதை சொல்லும் போது அவன் கண்கள் மாயலோகத்து சிருக்ஷடிபோல் மயக்கத்தில் உருண்டுகொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டு வந்த எனக்கு ஜன்னல் வழியாக வந்த காற்றில் எங்கோ பேசி என் கதுக்குள் காற்று வாக்கில் புகுவதுபோல் இருந்தது. பஸ்சில் பிரயாணம் செய்கிறோமா... இல்லை காற்றில் கரைந்து வழுக்கிக் கொண்டிருக்கிறோமா என்பதையறியாமல் அவன் சொல்வது என் காதில் விழுந்து மூளையில் மகுடி வாசித்துக் கொண்டிருந்தது.

ஒரு குலோப் ஜாமுன் என்ன சுவையென்பதை நாக்கில் வைத்து சொல்லிவிடலாம். நெருப்பு துண்டொன்று தொட்டால் என்ன உணர்வைத் தரும் என்பதை தொட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு உயிர் இருப்பதை எப்படி அறிவதாம். உயிரை என்ன புலன் கொண்டு அறிவது. மெய், வாய், கண், காது, மூக்கு என்று ஐம்புலனும் பலனற்றுப் போய் விடுகிறதே. உயிரை அறிந்து கொள்ளும் விசயத்தில். ஆறாவது புலன் கொண்டு அறிய முடியுமா? ஆறாவது புலன் என்பது பகுத்தறிவா? ஐம்புலன்களால் பஞ்சபூதத்தைத்தான் அறிய முடியுமென்றால் ஆறாவது பூதமாய் சுழன்றிருக்கும் உயிரெனும் பூதத்தை எதைக்கொண்டு அறிவது. நான் கோயில் பஜனை மட வாக்குவாதத்தில் கலந்து கொண்டிருந்தால் இதற்கான விடை தெரிந்திருக்கமோ...

ஜோசப் தன் அப்பா இறப்பதை முன்பே அறிந்து கொண்டேன் என்கிறான். அவன் அப்பாவிற்கு அதைப்பற்றி முன்பே தெரியுமா? எனக்கு உயிர் பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. மரணம் என்றால் நிறைய பயம் இருக்கிறது. ஒரே ஓலம். ஒப்பாரி சாவு மேளம் கூக்குரல் ஊதுவத்தி வாசனை இரைச்சல். மரணம் எனக்கு நினைவுபடுத்துவதெல்லாம்; கறுமை, இருட்டு, சுடுகாட்டு பயம் இவைதான். ஜோசப்பிற்கு மரணம் பயம் இல்லை. அவன் உள்பட்சி முன்னமே சொல்கிறதாம். அதனால் அவன் அப்பா சாவிற்கு கூட அவன் அழவில்லை.

சாவதற்கு முன்பாக யாருக்காவது அந்த சாவைப் பற்றி தெரியுமா? மகா பெரிய பேத்தலாக இருக்கிறது. எனக்கு முன்பே சாவைப்பற்றியும் அது வரும் நாள் பற்றியும் தெரியும் என்பவனை எப்படி பார்பது. அப்படித்தான் ஜோசப்பை நான் பார்த்தேன். ஆனால் எனக்கு தெரியும் என்கிறான். அவனுடைய அம்மாகூட அப்படித்தான் சொல்லி நம்பும்படி நச்சரிக்கிறாள். அது கடவுள் சிலருக்கு மட்டும் தந்த வரமாம். எல்லோருக்கும் சாவைப்பற்றி தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணமிருக்கிறது கடவுளுக்கு. சிலருக்கு மட்டும் அதை முன்கூட்டியே தெரிவிப்பதற்கும் காரணமிருக்கிறது கடவுளுக்கு.

என்ன சொன்னாலும் ஜோசப் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை. ‘ஒருமாதத்திற்கு முன்பே பட்டு பாவாடை எடுத்து வைத்து காத்திருந்தான் என் அண்ணன். நான் பெரியவளாகும் விசயம் முன்கூட்டியே அவனுக்கு தெரிந்திருந்தது.’ அவன் தங்கை இப்படி சொன்னதும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

இப்படி ஒரு விசயம் சாத்தியமா என்று எல்லோரும் மலைத்து மறுக்கத்தான் செய்வார்கள். பொசுக்கென்று செத்துப் போகிறார்களே... அவர்களுக்கு ஒருநாள் முன்பு ஒரு மணிநேரம் முன்பு அல்லது ஒரு நிமிசம் முன்பு அல்லது ஒரு வினாடி முன்பாவது மரணம் தனக்கு வரும் என்று தெரியுமா? இல்லை ஒன்றுமே அறியாமல் செத்துப்போவார்களா?

எனக்கு கனவில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. கனவில் சாவதற்கு கொஞ்சம் முன்பே நாம் செத்துப்போய் விடுவோம் என்று தெரிந்து விடுகிறது. இறந்த பின்பும் நாம் இறந்த விசயம் தெரியத்தான் செய்கிறது. சாகிறோம் என்று நன்றாக தெரிந்து மெல்ல மெல்ல கனவில் செத்திருக்கிறேன். கைகால் அசைக்க முடியாமல் என் பிரேதத்தை பார்த்து நானே அழுதிருக்கிறேன். ஆனால் நிஜத்தில். இறந்து போகிறவர்களுக்கு அந்த இறப்பைபற்றி தெரிய எந்த நியாயமுமில்லையே. தெரிந்தால். வாழ்க்கை சுவாரஸ்யமற்று போய்விடுமே.

சாவுக்கு முந்தியும் பிந்தியும் என்னவென்பதை அறிந்திருக்கிறேன் என்று ஜோசப் சொன்னான். பஸ்சில் அதை அதீத நம்பிக்கையோடு சொன்னான். பீடி பிடிக்காத. நல்ல உடை உடுத்தாத சினிமாப்பாடல் கேட்பதில் மோகங்கொண்டு சொந்தமாய் பாட்டுப்பாடும் இயந்திரமில்லாத வாசனை சேவிங் லோக்ஷனில் ஆசைக்கொண்டு அரைகுறையாய் அரும்பிய மீசைகொண்ட நல்ல உணவு உண்ணாத, ஆனால் நீண்ட நாள் மெல்லிய கனவும் அதுதந்த கதகதப்பான நம்பிக்கையும் கொண்ட ஜோசப் தன் கடைசி வாயாக ‘நிலா பார்த்தபடி பிரியாவோடு...’ என்று சொல்லி சொன்ன வாய் மூடாமலே வாழ்வின் எந்தக் கனவின் சுவையையும் எப்புலன் வழியும் நுகராமலே லாரி ஒன்றின் ‘டஷ்’ என்ற மோதலில் நசுங்கி மாண்டு போனான். பக்கத்து இருக்கையில் இருந்த நான் கோமாவில் போனேன்.

மாதக்கணக்கில் மருத்துவமனையில் கிடந்து மீண்டெழுந்தேன். மரணம் பற்றி அறிந்தாய் சொன்ன ஜோசப் தன் மரணமறியமலே மறித்தான். வாழ்வின் சூட்சுமக்கயிறு மரணம்தான். எந்த கதாபத்திரமாக நடித்தாலும் சூட்சுமக்கயிறு இறுக்கினால் அவ்வளவே.

அவன் சொன்னதில் சரக்கில்லை. அவன் மரணமே அவனுக்கு தெரியவில்லை. ஊரான் மரணம் சொல்வானாம். நடக்கிறது எல்லாமே தெரியுமாம். இந்த விஞ்ஞான யுகத்தில் என் காதில் பூ சுத்திட்டானே என்று என் சகாக்கள் துக்கம் மெல்ல கரைந்து மறையும் வேலையில் பேசிக் கொள்கிறார்கள். அவன் சொன்னது தத்து பித்து விஞ்ஞானம். அதாவது மடத்தனம். அதாவது மூட நம்பிக்கை. அதாவது அறிவுகெட்டத் தனமான விசயமாகவே இருக்கட்டும். விஞ்ஞானம் சொன்னதா மரணத்தின் நேரத்தை.

இன்னும் கோடி விஞ்ஞானம் கண்டு பிடிக்கட்டும் மனிதன். மனிதனை கொல்ல இன்னும் லாரிகள், இன்னும் ரயில்கள், இன்னும் கப்பல்கள், இன்னும் அணு உலைகள், இன்னும் அணு குண்டுகள், இன்னும் துப்பாக்கிகள், ரசாயணம் கண்டுபிடிக்கட்டும் இந்த விஞ்ஞானம். சாகாதிருப்பதைக்கூட வேண்டாம். மனிதன் எப்போது சாவான் என்பதை ஏதாவதொரு விஞ்ஞானி கண்டு பிடித்து ஒரு நோபல் பரிசு வாங்கக்கூடாதா? அல்லது ஒரு அஞ்ஞானியாவது கண்டு சொல்லக்கூடாதா?

உயிர் அறிவியல், பயிர் அறிவியல், தயிர் அறிவியல் எல்லாம் கண்டுபிடித்து கொடிகட்டி கோவனத்தை பறக்கவிட்டவர்கள் ஜோசப் உயிர் பிரிவதை முன்கூட்டியே சொல்லும் ஒரு வித்தை அறிவியலை கண்டு பித்து சொல்லியிருந்தால் என்ன?

உயிர்போகும் காலமறிந்தால் வாழ்வின் நம்பிக்கை பொய்த்து சூட்சுமமவிழ்ந்து சுவாரஸ்யம் போய் வாழ்வு அசையமுடியாதொரு பாறைபோல் இறுகிப் போய்விடுமென அச்சப்படுவதில் என்ன இருக்கிறது...? பாறைபோல் போனால் போகட்டுமே... தெரிந்திருந்தால் தங்கைக்கென அம்மாவுக்கென ஒத்தை ஜதை செருப்பு வாங்காமல் கால்மீட்டர் உடுப்பு தைக்காமல் செலவழித்த காசின் ஒரு பகுதியில் ஜோசப் ஒருநாள் சொர்கத்தின் பாதியளவாவது பார்த்திருப்பானே.

உயிர் போகுமென தெரிந்திருந்தால் நாதியற்ற பரட்டைத்தலை அம்மாவுக்கென தங்கைககென தன்னுள் வளர்த்த பெரிய கனவை; ஜோசப் சுமந்து மடிந்திருக்க மாட்டானே. அவனுக்கு பிரியா என்றொரு பத்தாம் வகுப்பு கனவு தோன்றி மறைந்திருக்காதே...

போகட்டுமே வாழ்வுதான் பாறைபோல் இறுகித்தான் போகட்டுமே... இப்பொழுது மட்டும் என்னவாயிற்று. ஜோசப்பின் நம்பிக்கையும் போய்விட்டது ஜோசப்பும் போய்விட்டான். இன்றைக்கும் தோப்பில் அவன் அம்மா கொட்டைக்காக வேப்பம் பழம் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள். அவன் தங்கை படிப்பை விட்டு வீட்டோடு நின்று விட்டாள். கிழிந்த தாவணியை தைத்தபடி.

மெய்தான்...மெய்தான். அவன் மரணம் என்னை பயித்தியமாக்கியது மெய்தான். அவன் நசுங்கிய உடம்பை வினாடி நேரம் நான் பார்த்தேன். கனவுகளை சுமந்த ஜோசப்பின் கிழிந்த பை அது. அந்த சடலம் பார்த்து அவன் தங்கை அழுதாள். பரட்டைஅம்மா அழவேயில்லை. அவன் சாவு முன்பே தெரியும் என்கிறாள். இவளுமா? கஷ்டத்தை போக்க இப்படி ஒரு பதிலா? எல்லாம் எனக்கு முன்பே தெரியுமென சொல்வது. பிரியா... அவன் மரணம் கேட்டு தேம்பி அழுதிருக்கிறாள். அவள் பார்த்த முதல் மரணமாக இருக்கலாம். அதனால் அழுவதாய்கூட அவள் அப்பா நினைத்திருக்களாம். இறந்து போனது அவளுடைய முதல் கனவுமென்பதை அவருக்கு யாரும் சொல்லமாட்டார்கள்.

வாழ்க்கை தன் எல்லா ரகஷ்யங்களையும் மனிதன் முன்பாக அவிழ்த்து போட்டாலும் மனித மாயை மனிதனை அதன் ஓட்டத்திற்கு இழுத்துக் கொண்டு ஓடத்தான் செய்கிறது. மனித மாயையா? மறதியா? எதுவோ அது... தத்துவம் கடந்து போன நேரத்தில் எதிர்பார்ப்பின் மரத்தில் எட்டி எட்டி மனிதன் சந்தோக்ஷக் கனிக்கு குதிக்கிறான். நானும் மீண்டும் மீண்டும் குதித்தேன். முற்பாடு பிற்பாடு லோக்ஷன் மனக்க பில் புக்கில் ஆயிரத்தி ஐந்நூத்தி என்பது கூட்டல் அறுநூற்று இருபது சமம் இவ்வளவு என்று; எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த விடை வேறு எதும் ஒரு ஜோசப்புடையதாக இருக்கலாம்.

அந்த ஜோசப்பிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது. ‘ஜோசப் உனக்கு ஏதேதோ தோனிற்றே இந்த கடையில் சேர்வதற்கு முன்போ இல்லை சேர்ந்த பின்போ உனக்கு தோன்றியதே இல்லையா? உன்னையும் உன் உயிரையும் தான் இந்த கடைக்கு வருவோரிடமெல்லாம் சிறு சிறு பொட்டலமாக கட்டித்தந்து கொண்டிருந்தாய் என்று...’

இந்த கேள்விக்கான விடை வேப்பம் பழம் பொறுக்கும் அவன் அம்மாவிடம் ஒரு வேளை இருக்கக் கூடும். அவள் பதில் சொல்லும் நிலையிலிருந்தால் அவளிடம் கேட்கலாம். வேப்பம் பழம் அற்ற நாட்களிலும் வேப்பம் பழம் பொறுக்குவதை தவிற வேறொன்றையும் அறியாது போன அவளுக்கு இதற்கான விடை ஒரு வேளை தெரிந்திருக்கலாம்.

- எழில் வரதன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It