அறையின் வெளியே நின்று எண்ணங்கள் விரிந்து கோண்டிருக்க அவள் வரும் பாதையை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனம் மகிழ்ந்து பிடித்தக் காதல் பாடலை வாய் முணுமுணுத்தது. தொடர்ந்து சீழ்க்கையொலியை பரவ விட்டேன். எதிர் வரிசையிலிருந்த கொன்றை மரத்திலிருந்து ஊர்க்குருவிகள் இரண்டு என் பக்கம் பாரத்து திரும்பின‌. ஹோட்டலின் இரண்டாவது மாடி என்பதால் பெரிய கதவின் முன்பரப்பு நன்றாகத் தெரிந்தது. வரிசையாக இரு புறமும் அசோக மரங்கள் உயர உயரமாக நீண்டிருந்தன. அடுத்து இடப்புறத்தில் அலங்காரப் பூச்செடிகளுக்காக இரண்டடி அகலத்தில் நீளமாக மண்ணைக் கொத்திப் போட்டு செங்கற்களை சாய்த்து முக்கோணம் முக்கோணமாகத் தெரியும் படி பதித்து இருந்தார்கள். முக்கால் டிராயர் பையனொருவன் காதில் ஹெட்போனை மாட்டியபடி அந்த முக்கோணங்களை பிரஸினால் வெள்ளையாக்கிக் கொண்டிருந்தான். வலப்புறம் வாகனங்கள் நிறுத்துமிடம் தாண்டி உள்ளே வந்தால் ஒரு வித்தியாசமான அடர்ந்த மரம் கருத்திருந்தது. 

பணம் செலுத்துகையில்,

"ஏன் ஸார் இந்த மரம் இப்படி இருக்கு??”

" மேனேஜர்ங்கற முறைல முதலாளிக்கிட்ட உடனடியா சொல்லிட்டேன் ஸார் எல்லாரும் கேட்கறாங்க” அலுத்து வந்த குரலில் அதற்கு மேல் பேசாது நகர்ந்தேன். உடன் வந்த ரூம் பாய், “அது இடி உழுந்த மரம் ஸாரே என்னமோ வானார மரமாம், ராசி, நிழல் கொடுத்திச்சினு எடுக்க மனசில்லாம வச்சினுகீறார் எல்லாம் கேட்கறிங்கள்ல சட்னு தூக்கிருவார்"

வாதநாராயணம்தான் வானார மரமாகிடுச்சு எப்போதோ அப்பா கூறியது நினைவிற்கு வந்தது.

டாக்ஸியிலிருந்து வினு இறங்குகிறாள். வெளிர் நீலக்கலர் புடவையில் ஆகாயம் போல நடந்து வருகிறாள். கட்டிப் பிடித்து தட்டாமாலை சுற்றத் தோன்றியது. ஆனால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அறையின் உள்ளே வந்தவளை அப்படிச் செய்ய விடாது ஏதோ குற்ற உணர்வு பிடிக்கொண்டது. பார்வை தயங்கித் தயங்கி முகம் தொட்டுத் தாழ்ந்தது.

சிரித்துக் கொண்டே”என்ன சார் ஒரே நாள் ஒரே பார்வைல கவுந்துட்டிங்கிளா” என்றதற்கு பதிலேதும் கூறாமல் சிரித்தேன். மிஸ் யூவில் ஆரம்பித்து வேறு ஏதேதோ பேசினோம். வார இறுதிக் கொண்டாட்டம் என வர இருக்கும் நாளுக்காக நண்பர்கள் வைத்து விட்டுப் போயிருந்த ஹார்ட்ரிங்க்ஸ் பார்த்து, ‘குடிச்சுப் பாக்கறியா?’ என்ற போது வியப்பிலாழ்த்தும் விதத்தில் உடனடியாகச் சரி என்றாள். எந்த விதமான மனநிலையில் இருந்தாளோ மனம் நினைப்பதை எல்லாம் வார்த்தைகள் கொண்டு வருவதில்லையே. இந்த அன்பை எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் சொல்லப் போவதில்லை. சொல்வது நியாயமா? நியாயம் அநியாயத்தை எது தீர்மானம் செய்கிறது...

------

"நீ அப்படிச் செய்துருக்கக் கூடாது சஜூ" தோளில் சாய்ந்திருந்தவள் நான்காவது முறையாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். இந்த முறை கேவலுடன், அணைத்தபடி ம்ம் என்று மட்டுமே கூற முடிந்தது என்னால். ஐந்தாவது முறையாக அவள் சொல்லுமுன் கேவல் அழுகையானது. இத்தனைக் கண்ணீரை எங்கு சேமித்து வைத்து இருந்தாள்..”ஏன் இப்படிச் செய்த எப்படி மனசு வந்துச்சு” என்ன பதில் கூறுவது.. அவள் பதிலும் எதிர் பார்த்தவள் போல் தெரியவில்லை.உள் சென்றிருந்த விஸ்கி ஜோடனையின்றி அழ வைத்தது. தேம்பித்தேம்பி அழுதாள் கிட்டத்தட்ட என் ஒரு பக்க பனியன் நனைந்து இருநதது. வார்த்தைகளைத் தொலைத்து பதில் இல்லாமல் அமர்ந்து இருந்தேன். நெற்றியில் இறந்து கொண்டிருந்த பாட்டியின் நெற்றியில் இறுதியாக முத்தமிட்டதைப் போன்று நடுக்கத்துடன் முத்தமிட்டேன். பாட்டி நினைவிற்கு வந்தாள். முத்தமிட்ட ஐந்து நிமிடத்தில் குழிந்த கண்களில் ஒரு துளி நீர் விட்டு பாட்டி இறந்து போனாள்.

முதல் முறை பருகிய பானம் இவளின் கூடுதல் மன விழிப்பின் அழுத்தம் காரணமாக வாய்வழி வெளியேறத் தயாராக இருந்தது. ஓடிப் போய் வாஷ்பேசினில் வெளியேற்றி வந்தாள். இனி தூங்குவாள் என்று நினைத்திருந்ததைப் பொய்யாக்கினாள்.”எதுக்காகப் புரொப்பஸ் பண்ண சஜூ?” சில நொடிகளுக்குப் பிறகு

" அட்லீஸ்ட் நீ விருப்பம் சொல்லி ஒரு ஆறு மாசம் கூட இல்ல, இது எல்லாம் நான் எப்படிப் பேச முடியும். உனக்கு எதுவும் தோணல புடிச்சு இருக்குல்ல ரைட்.உன் வாழ்க்கை உன் என்சாய்மெண்ட் சஜூ"

வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"நான் ஏதேதோ கற்பனை செய்து, நீயும் நானும் மட்டும் என் உலகத்துல...ப்ச் விடு. இட்ஸ் யுவர் லைஃப், ஸா...ரி ஃபார்....” பானத்தின் வினையில் தூக்கம் இணைகிறது. அப்படியே சரிகிறாள்.

இவள் ஒரு மூலிகை அருவி எனக்கென நன்மை மட்டுமே பயக்கும் அற்புதம். தலை முதல் கால்வரை அன்பினால் முழுக்காட்டுபவள். நிறைய கேலி கிண்டல்,நிறைய, நிறைய முத்தம் என்று என்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பவள். மோர் எக்ஸ்பிரஸிவ் வுமன். மாறும் முகபாவனைகள் சலிப்பே தட்டாது. தனது சோகம், அழுகை, வருத்தம், வலியை மட்டும் என்னிடமிருந்து மறைத்து உள்ளேயே வைத்துக் கொள்ள நினைப்பவள். இன்று அப்படி இருக்க முடியாது தோற்றுப்போனாள். இப்படிப் பைத்தியக்காரத்தனமான அன்பாகும் என்று நினைக்கவே இல்லை. தூக்கத்தின் ஆரம்ப நிலையில் இருப்பவளின் இளஞ்சிவப்பு வண்ண இதழ்களில் ஏதோ முணுமுணுப்பு. அது அதே கேள்வியின் அடுத்த பிறப்பாகத்தானிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஏன் இப்படிச் செய்தேன்?.

முதலில் நெருங்கியது நான்தான். அறிவும் புத்தி சாதுர்யமும் கொண்ட அழகி. எப்படியோ ஆரம்பித்து எப்படியோ நெருங்கினோம். நான் ஏன் இப்படிச் செய்தேன்? ஆணுக்கு உண்டான சுயநலமா? எப்போதாவது சந்திக்க முடிந்த இவளைவிட எப்போதும் உடனிருக்க ஒரு பெட் மேட்...ஓஹ் ! இந்த வார்த்தையே கடுமையானதாக, ராவானதாக, இரக்கமில்லாததாக,,பசுமையில்லாததாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் எவ்வித சமரசமுமின்றி யோசித்தால் இதுதான் எனக்கு விடையாக வருகிறது. நிர்வாண நிஜம். இதற்காகக் கல்யாணம் செய்து கொண்டேன். காரணம் நீங்கள் கட்டாயப்படுத்தியதால் என்று பெற்றோரிடம் கூறிக்கொண்டிருந்தேன். பிறகு குழந்தை குடும்பம் என்று ஆசை, பொறுப்பு நீண்டது. என்றாலும், இந்த அன்பு, வினு என்னும் ஆத்மா நிகழ்த்திய மாயாஜாலப் பெருவெளி! இத்தனை வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்றும், தூய அன்பில் விளைந்த நெருக்கம்தான் பெரிது என்றும் தாமதமாகத்தான் உணர முடிந்தது. இன்மையில் பூக்கும் பூக்கள் நுகரவோ பார்க்கவோ சூட்டவோ இல்லாமல் அழியப் பிறந்தவை.

ஹார்மோன்களின் பின்னால் திரிந்து அதற்கு அடிமையாகிப் போகும் ஆண் ஜென்மங்களில் ஒருவனாகத்தான் இருந்தேன். வினு இந்த டாபிக் ஆரம்பிக்கும் முன் இது குறித்துப் பேசுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஊரிலிருந்து வந்தவுடன் சந்திக்க விரும்பி மூன்று நாட்கள் தங்க ஏற்பாடாகியிருந்த இந்த ஹோட்டலின் முகவரி அனுப்பி போனில் லொகேஷன் பகிர்ந்திருந்தேன்.

-----

விண்டு போய் துவளும் மனதை எதைக் கொண்டு தேற்றுவது. ஏதேதோ சிந்தனையினூடே தூக்கம் ஆழ்த்த அப்படியே நானும் உறங்கிப் போனேன். கனவில் கோபமான வாக்குவாதத்தின் இடையில் என்னை மாடியிலிருந்து வினு தள்ளிவிட்டாள். அடிவயிறு கலங்க கீழே விழுந்து கொண்டிருந்தவனை ஒரு கரம் தடுத்து நிறுத்தியது. யாரென்று கண்கள் திறந்து பார்த்தேன் அது வினு. அப்போ மேலிருந்து தள்ளியது வேறு யாரோ..வினுவை கட்டிக் கொண்டேன். கைகள் துழாவ பக்கத்தில் யாருமில்லை. விழிப்புத் தட்டிக் கண் விழித்துப் பார்க்கையில் ஷவர் சத்தம் கேட்டது.

உறக்கத்திற்கு முன் பேசியதை நினைவில் அழுத்தியது. என்ன சொல்வது மனது தத்தளித்து தடுமாறியது. மொபைல் எடுத்து வைத்துக் கொண்டு குனிந்து கொண்டேன். குளித்து முடித்து வந்து 'நீ போய் குளி' என்றாள். தற்காலிகத் தப்பித்தல்' ம்ம்' என்று உள் சென்று கதவடைத்தேன்.ஏறக்குறைய ஓடிவந்தேன். குளியல் முடிக்க பசி விரட்டியது. துண்டுடன் வந்து உடையணிந்து ‘சாப்பிடலாமா நல்ல பசி" என்றேன். நேரமாவதாகக் கூறி கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போ தூங்கும் முன் பேசியது எதுவும் தெரியவில்லையா! அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். “மேடம் விஸ்கி எல்லாம் குடிச்சிங்க”

"என்னமோ குடிச்சுப் பாக்கலாம்னு”

"வாந்தி கூட.."

"ஒண்ணும் நினைப்பு இல்ல கன்னம் உப்புத் தண்ணி பரவின உணர்வு தெரிஞ்சது"

மிஸ் யூவில் கலங்கியதை நினைத்திருப்பாள் போல.

"சாரி வாந்தி எடுத்து இம்ச பண்ணதுக்கு"

மலர்ந்த முகமும் வலி மறைக்கும் குணமும் இருந்தாலும் இது பொய்யில்லை என்றன கண்கள்.

பசியோடவே போகனுமா என்றேன்

"பேகில் பிஸ்கட் இருக்கு கொஞ்சம் நேரம் தாக்குப் பிடிப்பேன் சாப்பிடற நேரம் டிராவல் பண்ணா தூரத்தைக் கடக்கலாம்”

கட்டியணைத்து, “நீ இங்கயே சாப்பிட்டுடு, தள்ளிப் போடாத அப்பறம் சரியா சாப்பிட முடியாது. டிராவல் பண்ணனும்ல" என்று கூறி விட்டுப் போய்க்கொண்டிருக்கிறாள். எண்ணங்கள் சுருங்க, கண்கள் விரித்து அவள் போகும் பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இடி விழுந்து நிழலைப் பரப்பிக் கொண்டிருந்த மரத்தினைக் கடக்கிறாள். ஆட்கள் நிற்கிறார்கள்.‌ வெள்ளை அடித்து முடிக்கப் பட்ட முக்கோண செங்கல்கள், வரிசையாக அசோக மரங்கள் கடந்து பெரிய வாயில் கடந்து போகிறாள். வெளிர் நீல ஆகாயம் தெரிகிறது. அவள் போன சாலை சரேலென்று அரவம் போல் திரும்பிப் பார்க்கிறது. திடுக்கிட்டுத் திரும்பப் பார்க்கிறேன். தலை கிளம்பிய இடத்தில் வால், பார்வை விட்ட இடத்தில் உஷ்ணக் கோபம் பாதையின் பார்வையில் நெஞ்சில் திக்கென்றிருந்தது, நெற்றியைத் துடைத்துக் கொண்டேன்.

ஜன்னல் விட்டு நீலம் பாரித்தாற் போன்று நிறம் மாறி, நீலஒளி மின்னிய மொபைலை எடுத்துப் பார்க்கிறேன். வாட்ஸப் செய்தி வந்திருந்தது.”இனி நாம் எப்போதும் சந்திக்க வேண்டாம்” அலைபேசியிலிருந்த நீலம் கைகளில் ஒட்டி உடல் முழுவதும் பாரிக்கிறது,வாத நாராயணம் முறியும் ஒலியூனூடே...

அகராதி

Pin It