நெடும் பயணக்களைப்பில் அனைவரது புறத்தோற்றமும் துவண்டிருப்பது ரிமிந்தகனை வெகுவாகப் பாதிக்கா விட்டாலும், தனக்கெதிரான அதிர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுவதை உணர்ந்ததும், அரவமாக மாறி புதருக்குள் நழுவி ஒளிந்துகொள்கிறான்.

முதல் வரிசையில் தன் முன் தன் எண்ணத்தைத் தவிர வேறெதுவும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த ரிமிந்தகன், இப்போது அனைவரையும் போகவிட்டு கடைசி வரிசையும் கண்முன் மறையும் வரை, புதரிருளில் பதுங்கியபடி பச்சைக் கண்களோடு வளையாமல் நெளியாமல் கடப்பவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் அடித்தப் பறையின் முதற்கொட்டிலிருந்து தொடங்கப்பட்ட போர்ப்பயணத்தில், இதுவரையிலும் தன் மீது மக்களுக்கு இருந்த எண்ணமெல்லாம், தொடங்கிய நிலையில் இருந்ததைப் போலவே இருந்துவந்து, இப்போது தனக்கு எதிரான அலைவரிசைக்குள் புகுவதைக் கவனித்ததும், சுதாரித்துக்கொள்ள மறைவிடத்தில் ஒளிந்து கொண்டு, எல்லோரும் மறைந்ததும், சுவடுகள் பதிந்த பாதையை வெகுநேரம் பார்த்துக்கொண்டே யோசிக்கிறான் நிலைக்குத்தியக் கண்களோடு.

கால் சுவடுகள் காலச்சுவடுகளானதும், அந்தப் பதிவுகளிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு குரலையும் நடுக்கத்துடனும், உறைந்த கண்களோடும் கவனிக்கிறான். அவர்களை விட்டு புதருக்குள் அரவமாக ஆனது, அவர்கள் அவனுக்கு எதிரான மனநிலையை உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதால். ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான சம்பாசனைகளைக் கேட்கக் கேட்க, அவர்களுள் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்துகொள்கிறான். அவன் கேட்ட அந்த சம்பாசனைக் கோர்வையிலிருந்து ஒரு பகுதியாக,

Snake ’மான் வேட்டைக்குச் சென்றவர்கள்?’

‘மானைக் கொன்றார்கள்.’

‘மானைக் கொன்று?’

‘பசியாறினார்கள்.’

‘பசி?’

‘உடலுக்குத் தேவையான சக்தியைச் சேர்த்து இன்னும் கூடுதலான காலம் உடலில் உயிரைத் தங்கவைக்க.’

‘எவ்வளவு காலம் உயிரை அப்படி வைத்திருக்க முடியும்?’

‘அடுத்தப்பசி ஏற்படும்வரை.’

‘அடுத்தப்பசி எப்போது ஏற்படும்.’

‘இப்போதைய சக்தி குறைந்தவுடன்.’

‘சக்தி குறைந்தால்?’

‘மீண்டும் வேட்டை.’

‘வேட்டை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்குமா?’

‘வேட்டையாடப்படுவது வேட்டையாடுவதை எதிர்க்கும்வரை.’

‘பசிக்கும் உணவுக்குமான...’

‘பசிக்கும் உணவுக்குமான போக்குவரத்து, வேட்டை.’

‘நாம் போய்க்கொண்டிருக்கிறோம்.’

‘ஆமாம். வேட்டையாட.’

‘எதிரி நம் உணவு.’

‘ஆமாம் நாம் பசியோடிருக்கிறோம்.’

‘பசி நம்மை வாட்டுகிறதா?’

‘இது வாட்டும் பசியல்ல. வாட்டப்போவதற்கு முன்பே பசி வரும் என்று எதிர்பார்த்து அதற்கான தற்காப்பு.’

அரவம் மெல்ல அசைகிறது. வாலை சற்றே மேல்நோக்கித் தூக்கியபடி இடமும் வலமும் அசைக்கிறது, கண்களை அவர்கள் சென்று மறைந்த திசையையே குறிவைத்து, நிலைத்து நிற்கவைத்து. பார்வைக்குள் அவர்களது சம்பாசனைகளால் வந்துவந்து போன ஒலியலைகளின் அதிர்வுகள் கீறல்களாக தொடர்ந்து பதித்துவிட்டுச் சென்றன.

அவனது ஞாபகத்திரையிலிருந்து அடுத்த ஒலியலை,

“எதிரெதிரான கேள்விகளும் அதற்கொத்த பதில்களும் எங்கிருந்துதான் முளைக்கிறதோ?”

“ஏன் அப்படி நினைக்கிறாய். பதில் இருக்கத்தான் கேள்வியும் வருகிறது. கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கத்தான் செய்கிறது. பதிலற்றக் கேள்வியே இல்லை இந்த வாழ்வில். எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. “உண்டு” என்று நினைக்கவேண்டும். “உண்டு” என்று நினைத்துவிட்டால் எல்லாம் கைவசமாவது நிச்சயம். அதுதான் வேண்டும். அந்த “உண்டு” என்ற எண்ணத்தை உண்டுபண்ணிக்கொள்ள ஏதுவான அனைத்துப் பயிற்சிகளையும் உள்ளே செலுத்திக்கொள்ள வேண்டும்.”

“நீ சொல்வதைப் பார்த்தால் நாம் நம் நாட்டைவிட்டே விலகியிருக்க வேண்டிருக்காது போலிருக்கிறதே!”

“உண்மை தான். ஒருவன் நம்மை நோக்கிப் போருக்கு வருகிறான் என்றால் ‘அவன் நம்மிடம் தோற்கத்தான் வருகிறான்’, என்று நாம் தெளிவாக இருக்கவேண்டும்.”

“அதெப்படி! அவன் தன் பலத்தை அறிந்து, நம் பலத்தையும் பலவீணத்தையும் கணக்கிட்டுத்தானே போருக்கு அழைக்கிறான்.”

“அது அவன் தீர்மானிப்பது.”

“அதுதான் சொல்கிறேன். நீ சொல்வதுபோல் ‘உண்டு’ என்பதை உள்மனதில் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் கைவசமாவது சாத்தியம் என்பதை அவனும் நினைத்தானானால்....?”

“உள்ளே நினைப்பது எப்படியாகப்பட்டது என்று உண்டு. அதாவது நல்லவன் நாறிப்போவதும் கெட்டவன் அழியாமல் இருப்பதும் இந்த விதிப்படியே.”

“என்ன விதி அது? தலைவிதியா?”

“ஆமாம் தலைவிதிதான். இந்தத் தலைவிதியானது புத்திக்குள் புத்திட்டிருக்கும் அழுக்குகளைக் களைந்தபின் எழுதப்பட்டிருப்பது. எப்போதும் சரியையே செய்வது. தவறு அதற்குத் தெரியாது. அப்படியே எல்லோருடைய விதியும் இருந்திருந்தால் இந்த உலகம் போரையே சந்தித்திருக்காது. ஏனெனில் யாரும் யாரையும் எதிர்த்திருக்கமாட்டார்கள்.”

“எனக்குப் புரியவில்லை.”

“உனக்குப் புரியாததால் தான் ரிமிந்தகனோடு எந்தக் கேள்வியையும் கேட்காமல் வரிசையில் சேர்ந்து கொண்டாய்.”

“நீ மட்டும் என்னவாம்?”

“நான் சேர்ந்ததிற்குக் காரணம் இருக்கிறது. நான் உள்நோக்கத்தோடுதான் இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கிறேன். என்னை யாரும் எதுவும், செய்யமுடியாது. நான் துப்பாக்கியைச் செய்து அதனால் ஏற்பட்டத் துன்பங்களின் உச்சத்தை அனுபவித்துவிட்டு வந்தவன். எனக்கு கழுகின் பார்வைப் பட்டிருக்கிறது. கழுகின் சூத்திரம் புரியும். அதனால்தான் இந்தக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன். நான் தூங்கும்போது உளறினதாக என் தாய் நினைத்துக்கொண்டு நான் பேசினது எதையும் யாரிடமும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி நினைக்காமல் வெளியே எல்லோருக்கும் கேட்கும்படி அவள் நான் கனவில் உளறினவற்றை எல்லாம் சொல்லியிருந்தால் இப்போது நான் உயிரோடு இந்த வரிசைப் பயணத்தில் இருந்திருக்கமாட்டேன். நீயும் இந்த ரகசியத்தைக் கேட்டிருக்கமாட்டாய்.”

“அப்படியானால் நீ மனதில் “உண்டு” என்பதைத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்.”

“ஆமாம். உண்டு என்பதை தெளிவாக உள்வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். அதுவாவது, இவனை இவனது எண்ணத்திலிருந்து வெளியேற்றி, வெறும் ரிமிந்தகனகாக மாற்றி, மீண்டும் அனைவரையும் நகரம் நோக்கித் திருப்பவேண்டும் என்று.”

“எனக்கும் ஏதோ அரசல் புரசலாக புரிவது போல் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன். கழுகு என்கிறாய், சூத்திரம் என்கிறாய்... எனக்கு விளக்கேன்.”

“சொல்கிறேன் கேள். இந்த உலகம் இவனது கையில் அகப்பட்டுக் கொண்டு, என்ன பாடுபடுகிறது என்பதை இதுவரையில் யாரும் யோசித்தும் பார்க்கவில்லை. வண்ணவண்ண விளக்குகளும், யோசிக்க வைக்காத போதையும், தேவையற்ற இலவசங்களும் உங்களை ரிமிந்தகனோடு இதுவரையில் இருக்க வைத்திருக்கிறது. உங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றியான அக்கறை இல்லை. அது நாட்டை ஆளும்போது கூட இருந்ததில்லை. இப்போது எப்படி திடீரென வந்துவிடப்போகிறது? ரிமிந்தகனின் எதிரி வேறு யாருமில்லை. அவனது எதிரியானவர்கள் நாம் தான். நம்மை ஒழிக்கவே அவன் இந்த பெரும் பயணத்தைத் தொடங்கியிருக்கிறான். பயணத்தின் இப்போதைய கணத்தில் கணக்கெடுத்துப்பார். என்ன நடந்திருக்கிறது என்று? ஆரம்பித்த போதிருந்த சனக்கூட்டம் இப்போது இருக்கிறதா? எண்ணிக்கை குறையவில்லை? நடந்துகொண்டிருப்பவர்களின் உடலைக் கவனித்தாயா? என்னவாக ஆகியிருக்கிறார்கள்? யாராவது உயிரோடிருப்பவர் போல இருக்கிறார்களா?”

யோசிக்கிறான். அசந்துபோய் அவனையேப் பார்க்கிறான். அவன் என்ன சொல்கிறான் என்பது அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, உறைக்கிறது. மெல்ல அவனை நோக்கி நெருங்கி வந்து நடந்துகொண்டே,

“இப்போது நாம் என்ன செய்வது?”

“அதனைப் பின்னால் சொல்கிறேன்.”

“இப்போது.....!”

என அவன் தொடர்ந்து பேசமுடியாமல் இழுத்ததற்குக் காரணம், அவனைக் கடந்து, நீளமான ஒரு அரவம் சென்றுகொண்டிருந்ததால் பேசுவதை நிறுத்திவிடுகிறான். எந்தவித பரபரப்பையும் காட்டாமல் மெல்ல காலைத் தூக்கி பாம்பைத் தாண்டிச் செல்கிறான். புதரை நோக்கிச் செல்லும் அரவத்தையே பார்த்துக்கொண்டு நடக்கிறான்.

அரவம் மெல்ல, தலையை தூக்கி அவனை ஒரு முறை பார்க்க, உடனே அவன் சட்டெனத் திரும்பி, வேகவேகமாக நடக்கிறான். அவனைத் தொடர்ந்து வந்தவர்களும் அவனைக் கடந்து செல்கின்றனர். இறுதியாக எல்லோரும் சென்று மறைந்தபின் அரவம் மெல்ல மீண்டும் பாதையிலேறி, சென்றவர்களின் திசையையே பார்க்கிறது.

இந்த இரண்டாது உரையொலி அரவத்தை மிகவும் கலக்கமடையச் செய்தது. அதன் ஞாபகத்திரையில் அழுத்தமாக பதிவாகிவிட்ட இந்த ஒலியலைதான் ரிமிந்தகனுக்கு மிகப்பயங்கரமான ஒலியலை. அரவம் ரிமிந்தகனாக நிமிர்ந்து நின்று ஒரு நீண்டப் பெருமூச்சுவிட்டு தனியாக அந்த பாதையில் நிற்கிறது, யோசித்தபடி.

2

என்புதோல் போர்த்திய உடல்கள் அனைத்தும் நடந்துகொண்டே இருக்கிறது. எதற்கும், “இனி இதைச் செய்” என்ற கட்டளைகள் தேவையற்றதுபோல், ஏற்கனவே விடப்பட்ட கட்டளைகளுக்கு அடிமையாகி அதுவே சிந்தனையாகி, உடலுமாகி நடந்துகொண்டே இருந்தன. அவற்றில் கழுகினைக் கண்டவன் (நபர்1 என்போம்) மட்டும் மனதில் அரவத்தின் அசைவை விரட்ட முடியாமல் அதைப் பற்றியான சிந்தனையிலேயே சென்றுகொண்டிருந்தான். அவனோடு சம்பாசனை செய்தவன் (நபர்2) நபர்1ஐ அவ்வப்போது பார்த்துக்கொண்டு நடந்தவன், சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் மீது வைத்த கண்களை விலக்கிக்கொள்ள முடியாமல் பார்த்துக்கொண்டு நடந்தான். இதனால் நபர்1க்கு அடிக்கடி நடை தடைபடுகிறது. அடிக்கடி நபர்2ன் மீது தடுமாறி விழுகிறான். எத்தனை முறைதான் நபர்2 அவனைத் தாங்கலாகப் பிடித்து மீண்டும் நிற்க வைக்கமுடியும்? இந்த முறை விட்டுவிட்டான். கீழே விழுந்த நபர்1 தான் மட்டும் விழாமல், தன்னைக் காப்பாற்றாமல் கைவிட்டவனையும் இழுத்துக்கொண்டு விழுந்தான்.

கூட்டம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. கீழே விழுந்தவர்கள் தங்களைக் கடந்து செல்பவர்களைக் கவனிக்கிறார்கள். அவர்கள் யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை. அவர்களில் சிலர் இவர்களைத் தாண்டியும், எத்தித்தள்ளியபடியும், மேலேறிச் சென்றபடியும் இருக்கிறார்கள். அப்போது நபர்1, “பார்த்தாயா நம் சனத்தை. ‘இங்கே என்ன நடந்திருக்கிறது? நாம் பயணிக்கும் பாதை எத்தகையது? பதையில் ஏதாவது இருக்கிறதா...?’ என்ற எந்த பிரக்ஞையுமில்லாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள் பார்த்தாயா?”

அவனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தோணாததால் வெறுமனே தலையைத் தலையை ஆட்டிக் கொள்கிறான்.

“யாருக்கும் சுயநினைவு இல்லை. எல்லோரும் யோசிக்கும் தன்மையை இழந்துவிட்டார்கள். சொல்லப்போனால் எப்போதோ இறந்துவிட்ட இந்த மனிதர்கள் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாகிவிட்டார்கள். சாவி எந்தளவிற்குக் கொடுக்கப்பட்டதோ அந்தளவிற்கு இவர்களது பயணம் இருக்கும். நீ வேண்டுமானால் பாரேன். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் முன் பெட்டி தடம் புரண்ட ரெயிலில் பின் பெட்டிகள் ஒன்றுமேல் ஒன்று ஏறிக்கொண்டு நிற்குமே அதுபோல நிற்கப்போகிறார்கள். அப்புறமாவது இவர்கள் யோசிப்பார்களா...ம்கும்... இவர்கள் இனி தன்னிலையைப் பெறப்போவதேயில்லை.”

அப்போது அவர்களுக்குப் பின்னால் அரவம் விரைத்த நூலைப்போல் செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது.

“இவர்களில் ஒருவன், நான் சொல்கிறேன். ரிமிந்தகன், மனிதன் என்பவன் எப்படி வாழவேண்டும் என்பதைப் பற்றியான எந்த அறிவும் இல்லாதவன். அவனை நம்பி இவர்கள் ஆட்டுமந்தைகள் போல் போய்க் கொண்டிருக்கிறார்கள் பாழுங் கிணற்றிற்கு. ஒரு காலத்தில் அனைவரும் ஒவ்வொரு தேசத்திற்கு ராஜாவாக இருந்தவர்கள். இன்று ஒரு முட்டாள் மன்னனின் குசுவுக்கு அர்த்தம் கண்டு மேப்பம் பிடித்தபடி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவன் எதைச் சாப்பிட்டானோ...! இந்த நாறு நாறுகிறது.”

அரவத்தின் கண்கள் சிவக்கிறது. உடல் படபடக்கிறது. படபடப்பு அதிர்வாகி மூச்சுக்காற்று புசுபுசுவென்று வெளியேறியதும் நபர்2 அரவத்தைக் கண்டுவிடுகிறான். கண்டதும் வெடவெடத்து நடுநடுங்கிக்கொண்டு மெல்ல எழுந்து அதனை நோக்கிக் கைக்கூப்பி வணங்குகிறான். இதனைக் கண்ட நபர்1 பின்னால் திரும்பி அங்கே ஆக்ரோசமாக நிற்கும் ரிமிந்தகனைப் பார்த்ததும் உள்ளுக்குள் பயத்தின் சாயலை உணர்கிறான். மெல்ல எழுந்து அதே சமயம் ரிமிந்தகனுக்குப் பயப்படாதவன் போல் மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவனையே நேருக்கு நேராக பார்க்கிறான்.

அப்போது தொலைவிலிருந்து ஒரு பேரிரைச்சல் கேட்கிறது. அங்கே ரெயில் தடம்புரண்டிருக்கிறது. பின்னால் கண்மூடி வந்துகொண்டிருந்த பெட்டிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்றாக மோதி சரிக்கப்பட்ட சீட்டுக்கட்டாக சிதறிக்கிடந்தது.

நபர்1 ரிமிந்தகனையே பார்த்துக்கொண்டிருக்கிறான். ரிமிந்தகனும் தன் அரவத் தோற்றத்திலேயே இருந்துகொண்டு விசத்தை உமிழும் பரபரப்போடு அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். விபத்தில் சிக்கிய உடல்கள் அலறுவது கேட்கிறது. காப்பாற்ற, ஓடமுடியாமல் தவிப்பவர்கள், தம் இயலாமையை வெளிப்படுத்திக் கதறுகிறார்கள். ரிமிந்தகன் நபர்1னின் தலையைப் பிடித்து தரதரவென்று விபத்துப் பகுதிக்கு இழுத்து வருகிறான்.

அங்கே அனைவரும் விழுந்து கிடக்கின்றனர். ரிமிந்தகனைப் பார்த்ததும் அவசர அவசரமாக எழமுயற்சித்து தடுமாறித் தடுமாறி விழுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் எழுந்துவிட, ரிமிந்தகன் அவர்களை நோக்கி,

“இதோ நாம் தேடிக்கொண்டிருந்த எதிரி.”

உடனே நபர்1 மக்களை நோக்கி நடுங்கும் குரலோடு, “உங்களோடு வாழ்ந்து வருகின்ற நான்...., எதிரியா...?” எனக் கேட்டதும் மக்கள் குழம்பிப்போய் ரிமிந்தகனையும் நபர்1யும் மாறி மாறிப் பார்க்க, ரிமிந்தகன்,

“இவன் எதிரியின் ஒற்றன். நம்மை வேவு பார்த்து நம்மை தவறான திசைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கிறான். இவனை நம்மோடு பழகவிட்டு காரியத்தைச் சாதிக்க திட்டமிருந்கிறான் அந்த எதிரி. இவனது எஜமான். நம்முடைய சோற்றைத் திண்றுவிட்டு நமக்கு எதிராக, அவனுக்கு ஆதரவாக வேவு பார்க்கிறான். வேண்டுமானால் நபர்2யைக் கேளுங்கள். அவன் சொல்வான்.”

உடனே நபர்2யை பார்த்து, “நான் உன்னுடன் பேசியிருக்கிறேனா?”

“இல்லை.”

“நீங்கள் இருவரும் என்ன உறவு என்று எனக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“அப்படியானால் மக்களே இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு இவன் என்ன பதில் சொல்கிறான் என்று கவனமாக கேளுங்கள்.” நபர்2யைப் பார்த்து,

“நீ எனக்காக பொய் சொல்ல வேண்டாம். உண்மையைச் சொல். அது போதும். நான் குற்றவாளி என்பது உறுதியானால், இதோ இங்கேயே என்னை வெட்டிப் புதைத்துவிடுங்கள். அவன் குற்றவாளி என்றால், நான் எதுவும் சொல்லப்போவதில்லை. என்ன செய்யவேண்டுமோ அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.”

சூழலை மெளனம் சிறிதுநேரம் கவ்விக்கொண்டிருக்கிறது. பின் ரிமிந்தகன்.

“உன்னிடம் முகத்துக்கு நேரே கேள்வி கேட்டால், ஒருவேளை நான் மன்னன் என்பதால் நீ எனக்குச் சாதமாக பதில் சொல்ல நேரிடும். அதனால் எங்காவது ஒரு மறைவிடத்திற்குச் சென்று ஒளிந்துகொள். நான் கேட்கப் போகும் கேள்வியை இங்கே மக்கள் முன் கேட்கிறேன். அவர்களில் யாராவது ஒருவர் உன்னிடம் வந்து நான் கேட்டக் கேள்வியை கேட்பார். அதற்கு, என்ன பதில் சொல்லத் தோன்றுகிறதோ அதைச் சொல் போதும். எல்லாக் கேள்விகளும் முடிந்தபின் ஒரு ஓலக்குரல் கேட்கும் அப்போது நீ திரும்பி வரலாம். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனாக நானோ அல்லது நபர்1னாகவோ இருக்கலாம். என்ன?” என்றதும், நபர்2க்கு, பயம் கொஞ்சம் தெளிந்ததுபோல் இருந்தது.

மக்களை நபர்2ஐ ஒளிந்துகொள்ளச் சொல்கிறார்கள். ஒளிந்துகொள்கிறான். அதன்பின் ரிமிந்தகன், மக்களைப் பார்த்து நபர்1ம் நபர்2ம் பேசிக்கொண்டதை அவர்கள் பேசுவதுபோல் பேசிக்காட்டுகிறான் இப்படியாக,

“‘எதிரெதிரான கேள்விகளும் அதற்கொத்த பதில்களும் எங்கிருந்துதான் முளைக்கிறதோ?’

‘ஏன் அப்படி நினைக்கிறாய். பதில் இருக்கத்தான் கேள்வியும் வருகிறது. அதனால் கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கத்தான் செய்கிறது. பதிலற்றக் கேள்வியே இல்லை இந்த வாழ்வில். எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு. ஆனால் ‘உண்டு’ என்று மட்டும் நினைக்கவேண்டும். ‘உண்டு’ என்று நினைத்துவிட்டால் எல்லாம் கைவசமாவது நிச்சயம். அதுதான் வேண்டும். அந்த ‘உண்டு’ என்ற எண்ணத்தை உண்டுபண்ணிக்கொள்ள ஏதுவான அனைத்துப் பயிற்சிகளையும் உள்ளே செலுத்திக்கொள்ள வேண்டும். நபர்2விடம் நபர்1 இப்படிச் சொன்னானா என்று யாராவது கேட்டுவிட்டு வாருங்கள்.’

நபர்1 அதிசயத்துப்போய் ரிமிந்தகனைப் பார்க்கிறான். மக்களில் ஒருவன் ஓடிச்சென்று நபர்2விடமிருந்து பதிலைப் பெற்று வருகிறான். நபர்1ம் மக்களும் அந்தப் பதிலைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறார்கள். ரிமிந்தகன் நிதானமாக காத்திருக்கிறான். வந்தவன், ரிமிந்தகனையும் நபர்1யையும் பார்த்து,

“ஆமாம். அப்படித்தான் இருவருக்குமான சம்பாசனைத் தொடங்கியது என்று சொன்னான்”

உடனே ரிமிந்தகன் மக்களைப் பார்த்து “அந்த “உண்டு” என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்க, மக்கள் அனைவரும் “உண்டு என்றால் உண்டு. அதற்கு வேறென்ன அர்த்தம்” என்று ரிமிந்தகனையே கேட்கிறார்கள்.

“நபர்1க்கு இடப்பட்ட கட்டளையானது நம் அரசை கலைக்கவேண்டும். நம் ராஜ்ஜியத்தை சீரழிக்க வேண்டும் என்பது. அதற்காக ஒவ்வொருவரையும் தன் சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு மாற்ற இப்படியாகப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, நமது அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முயற்சிப்பது. யாருக்கு இந்த ‘உண்டு’ என்ற வார்த்தைக்கான அர்த்தம் தெரியாது? ஆனால் நீ ‘என்னால் இதைச் செய்ய முடியுமா!’ என்று யோசிக்கும் போது அதற்கு வழி உண்டு என்றொரு நிலையை ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் இந்த ‘உண்டு’. ‘நீ செய். உனக்கு எல்லா வகையிலும் நான் பக்கபலாமாக இருக்கிறேன். இந்த அரசை கவிழ்க்க வழியுண்டா என்று மீண்டும் மீண்டும் குழப்பிக்கொள்ளாதே. இதற்கு வழி உண்டு என்பதை மனதில் ஸ்த்தீரமாக இருத்திக்கொள். நான் இருக்கிறேன்.’ இதுதான் இந்த “உண்டு”ன் உள் அர்த்தம்.”

நபர்1 நடுங்குகிறான். மக்கள் நபர்1யை விரோதமாகப் பார்க்கிறார்கள். பின் அவர்களே ரிமிந்தகனிடம் வேறெதாவது கேள்வியுண்டா என்று எதிர்பார்க்கும் போது, ரிமிந்தகன் இரண்டு நபர்களின் அடுத்த சம்பாசனைக் கட்டை அவிழ்க்கிறான் இப்படியாக,

‘உண்மை தான். ஒருவன் நம்மை நோக்கிப் போருக்கு வருகிறான் என்றால் அவன் நம்மிடம் தோற்கத்தான் வருகிறான் என்று நாம் தெளிவாக இருக்கவேண்டும். அதெப்படி! அவன் தன் பலத்தை அறிந்து, நம் பலத்தையும் பலவீணத்தையும் கணக்கிட்டுத்தானே போருக்கு அழைக்கிறான்?’

என்பதை அவர்களின் சம்பாசனையாக மக்களிடம் சொல்லி, ‘இதைக் கேட்டுவிட்டு வாருங்கள்’ என்று ரிமிந்தகன் கேட்டமாத்திரத்தில் அதற்காகவே காத்திருந்தவன்போல் ஒருவன் ஓடிச் சென்று நபர்2விடம் பதிலை வாங்கிக் கொண்டு வருகிறான்.

வந்தவன் மூச்சிரைக்க மூச்சிரைக்க “அப்படி எதுவும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லையாம்.” என்கிறான். நபர்1ன் முகத்தில் கொஞ்சம் நிம்மதி குடியேறியது. மக்களோ குழம்பினார்கள். ஆனால் ரிமிந்தகன் இப்போதும், எந்த ஆரவாரமும் இல்லாமல்,

“சரி. இன்னொருவரை அனுப்பி இதே கேள்விக்கான பதிலைக் கேட்டுவரச் சொல்லுங்கள்” என்றதும் மக்களிடமிருந்து ஒரு குரல் வந்தது,

“தங்களுக்கு சாதகமான பதில் வரவில்லை என்பதால் வேறொருவனை அனுப்பி வேறொரு பதிலை எதிர்பார்க்கிறீர்களா?”

அதற்கு ரிமிந்தகன் “இதுவும் சரிதான். அப்படியானால் யாரும் போகவேண்டாம். அடுத்தக் கேள்வியைக் கேட்கிறேன்” என்று சொல்லிவிட்டு தன் புத்திக்குள் சேமித்து வைத்திருந்த அவர்கள் பேசிய வசனங்களில் அடுத்தக் கோப்பை தட்டிவிடுகிறான் இப்படியாக,

“‘உனக்குப் புரியாததால் தான் எந்தக் கேள்வியையும் கேட்காமல் ரிமிந்தகனோடு வரிசையில் சேர்ந்து கொண்டாய்.’

‘நீ மட்டும் என்னவாம்?’

‘நான் சேர்ந்ததிற்குக் காரணம் இருக்கிறது. நான் உள்நோக்கத்தோடுதான் இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது. நான் துப்பாக்கியைச்செய்து அதனால் ஏற்பட்டத் துன்பங்களின் உச்சத்தை அனுபவித்துவிட்டு வந்தவன். எனக்கு கழுகின் பார்வை பட்டிருக்கிறது. கழுகின் சூத்திரமும் புரியும். அதனால் இந்தக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன். நான் தூங்கும்போது உளறினதாக நினைத்துக்கொண்டு என் தாய், நான் பேசினது எதையும் யாரிடமும் சொல்லவில்லை. ஒருவேளை அவள் எல்லாவற்றையும் சொல்லியிருந்தால் இப்போது உயிரோடு இந்த வரிசைப் பயணத்தில் இருந்திருக்க மாட்டேன். நீயும் இந்த ரகசியத்தைக் கேட்டிருக்கமாட்டாய்.’ எனச் சொல்லி, ‘இதைக் கேட்டுவாருங்கள்.’ என்கிறான்.

அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்ட ஒருவன் பதிலைப் பெற்றுவரச் செல்கிறான். ஆனால் அவன் வருவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. வரும்போது கையில் ஒரு இறகோடு வருகிறான். வந்தவன், “ஆரம்பத்தில் அவனுக்கு எதுவும் புரியாததால் விளக்கச் சொல்லிக் கேட்டபோது நீங்கள் சொன்னது போல்தான் நபர்1 சொன்னானாம். மேலும் நபர்1ன் உடையிலிருந்து விழுந்த இந்த இறகையும் நபர்2, நபர்1க்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்தானாம். அதைத் தங்களிடம் கொடுக்கச் சொன்னான்” எனச் சொல்லி இறகை மக்களிடம் காட்டிவிட்டு ரிமிந்தகனிடம் கொடுக்கிறான்.

நபர்1க்கு மீண்டும் பயம் கவ்வத் தொடங்கியது. இரண்டாவது முறையாக நபர்2விடம் பதில் கேட்டுவிட்டு வந்தவனுக்கும் பயம் குடியேறியது. நடுங்கினான். விறுவிறென்று ஓடிவந்து ரிமிந்தகனின் காலில் விழுந்து,

“என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். இவன் ஏற்கனவே என்னிடம் பேசியிருக்கிறான். ‘எனக்கு ஆபத்து என்று வந்தால் உன்னால் முடிந்த உதவியைச் செய். நான் தப்பித்தாலும் தப்பிக்காவிட்டாலும் எனக்கு நீ செய்த உபகாரத்தின் தரத்திற்கேற்ப உனக்கு வெகுமதி கிடைத்துவிடும்’, என்று சொன்னான். எனக்கு எந்த உபகாரமும் வேண்டாம். பொய் செத்துவிடும். பொய்க்கு மதிப்பில்லை. எப்படியாவது உண்மை வெளிவந்தே தீரும். இப்போதே வந்துவிட்டது. இனி என்னால் மறைக்க முடியாது. என்னை எதுவும் செய்துவிடாதீர்கள்” எனக் கெஞ்சுகிறான்.

ரிமிந்தகனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. முன்பு போலவே இருந்தான். மெல்ல அவனை, தோளில் கைப்போட்டு அணைத்துக்கொண்டு. ‘நீ என்ன இருந்தாலும் என் மக்களில் ஒருவன். உன்னால் தவறு செய்ய முடியாது. கலைப்படாதே நான் ஒன்றும் செய்யமாட்டேன்’, உடனே மக்களைப் பார்த்து ‘இவனிடம் கோபித்துக்கொள்ளாதீர்கள். இவனால் எனக்கு எந்தத் தீங்கும் வரப் போதில்லை” என சொல்லிவிட்டு, மூன்றாவது பதிலைச் சொன்னவன் கொண்டுவந்த இறகை மக்களிடம் மீண்டும் காட்டி,

“இந்த இறகு சின்னம் யாருடையது. யாருடைய கிரீடத்தில் இருக்கும். இதைப் பற்றியெல்லாம் இப்போதைக்கு நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் எவனும் இப்போது உலகில் ஆட்சிப் புரிவதில்லை. நான் தான் இந்த ஒட்டுமொத்த உலகிற்கும் அதிபர். ஆனால் இந்த இறகு பற்றிய சில விசயங்களை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். சில நாட்களாகவே நம்மை ஒரு கழுகு சுற்றி சுற்றி வந்து பார்க்கிறது. பார்க்கிறதுதானே?”

எல்லோரும் “ஆமாம்”

“அது நமக்கு எதிரான சிந்தனை கொண்ட எதிரியின் வார்ப்பில் வளர்வது. அவனது ஏவலின் படி நம் இருப்பைக் கவனிக்க இங்கே வருகிறது.”

அப்போது மக்களிலிருந்து ஒருவன் முன்னேவந்து “அப்படியானால் கழுகு இங்கு வந்திருக்கிறது. அதனை இவன் சந்தித்திருக்கிறான். அது இவனுக்கு செய்திகொண்டுவந்திருக்கலாம் அல்லது இவன் அதனிடம் செய்தி கொடுத்து அனுப்பியிருக்கலாம்.... ஆ.....! ஆ......! ஆ.......! புரிந்துவிட்டது. புரிந்துவிட்டது” என சொல்லிக்கொண்டு நபர்1ன் மீது பாய்கிறான். எல்லோரும் சட்டென அவன் மீது பாய்ந்து எழுகிறார்கள்.

ஒரு புள்ளியை நோக்கி வந்த ஆயிரமாயிர ரப்பர் ரயில்கள் புள்ளியில் மோதி, புள்ளியைப் புழுதியாக்கியது. சில நொடிக்குள் வந்த வேளை நினைத்தபடி முடிந்துவிட்ட திருப்தியில், உடலைச் சிலிர்த்து வந்த வழியே திரும்பி, சிறுது தூரம் சென்று பிரேக் போட்டு நின்றுகொண்டு, புள்ளியிருந்த இடத்தையே உற்றுப் பார்த்தன. புள்ளியில் இருந்தவன் புழுதியாகி வானில் புகையாகப் பறப்பதைப் பார்த்து எல்லாம் கைக்கொட்டிச் சிரித்து மகிழ்ந்தன. பின் தன்னைச் சுதாரித்துக்கொண்டு உலுக்கி மீண்டும் உடைதரித்த மிருகங்களாகி எழுந்தன. எல்லோரும் எழுந்தபின் அங்கே அந்த இடத்தில் நபர்1ன் உடையும் சில எலும்புகளும் ரத்தக்கறையோடு இருந்தது. அவ்வளவுதான் நபர்1ஐ மக்கள் கொன்றுவிட்டார்கள்.

பின் ரிமிந்தகனை நோக்கி,

“பயணத்தைத் தொடர்வோம். இனி, கழுகைவிட்டு நம்மை வேவு பார்ப்பவனைக் கொன்றபின் தான் மற்றதெல்லாம்” என வீராவேசமாக அனைவரும் பேசிக்கொண்டு சற்றே புத்துணர்ச்சிப் பெற்றவர்களாக நடையைச் செலுத்தினர்.

அவர்கள் சென்றதும் அவர்களோடு பின்னால் நடந்துவருவதாகச் சொல்லி தொடர்ந்த ரிமிந்தகன் இரண்டாவது பதிலைக் கொண்டு வந்தவனை அழைத்து பேசிக்கொண்டே வந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் ரிமிந்தகன் மட்டும் தனியாகப் பேசுகிறான் பதில் தர அந்த நபர் இல்லை. அவன் அதுவாகி எல்லோரது மனதிலிருந்து அகண்டு வழியிலேயே மூச்சுமறந்து கிடந்த(ஆன்)து.

- அரியநாச்சி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It