அத்தியாயம்-5

மழையினால் நனைந்த மரங்களும் செடிகொடிகளும் அந்த விடியலுக்கு முன்பான இருட்காலத்தில் சொதசொதவென்று ஊறிப்போயிருந்த சருகுகளோடு, சூழலுக்கு ஒருவித பிசுபிசுப்புத் தன்மையை கொடுத்தாலும்; ரிமிந்தகன் பறையடித்து அனைவரையும் வரச்செய்ததும், குழுமிய அனைவரது மனமும் படபடப்போடு சூடேறி வறட்சியாகிக்கொண்டிருந்தது. காட்டின் இருளைவிட மனதுள் நிரம்பியிருந்த இருளிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தார்கள்.

காட்டிருளில் கண்திறந்தும் குருடர்களாக ரிமிந்தகனை நோக்கியப் பார்வையில் இருந்தவர்களை மின்மினிப்பூச்சிகளாக இண்டு இடுக்குகளில் இருந்தெல்லாம் நிறைய கேள்விகள் வெளிவந்து எட்டி எட்டிப்பார்த்தன. ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு தடிமத்தில். ஒவ்வொரு கேள்வியும் ஒவ்வொரு ஒளிவீச்சில். அவர்களையும் அவர்களை நோக்கியக் கேள்விகளையும் மரப்பொந்துகளிலிருந்தும், கிளையிடுக்குகளிலிருந்தும் பட்சிகள் கவனமாக கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தன. அவற்றிற்குத் தெரியும்: அந்தக் கேள்விகளையெல்லாம் யார் அங்கே புதைத்து வைத்தார் என்று. அவற்றிற்கு இன்னமும் தெரியும், கேள்விகள் எதைப்பற்றியது என்றும். ஆனால் எப்படி இந்த குருடர்களுக்குச் சொல்லிப் புரியவைப்பது என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தன. யோசனை செய்வதோடு நிறுத்திக்கொண்டன, செய்ய ஏதுவும் இல்லாமல் சும்மா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு. அது தான் இப்போதைக்கு அங்கிருந்தவற்றால் செய்யமுடிந்த ஒன்று.

Dictator ரிமிந்தகன் எல்லோரையும் ஒரு முறை ஒரு சுற்று சுற்றிப் பார்க்கிறான். எல்லோரும் வந்ததாகவோ அல்லது வந்தவர்களின் எண்ணிக்கை போதுமென்றோ தோன்றியிருக்கவேண்டும். பறையடிப்பதை நிறுத்துகிறான். அழைப்பு நின்றதுதான் தாமதம், எல்லோரும் தத்தமது எண்ணத்திலிருந்து அவனது எண்ணத்திற்கு இடமாறினர். அவனை நோக்கியான பார்வையோடு தம் எண்ணத்தையும் ஒருங்கிணைத்தனர்.

மெல்ல குரலைக் கணைத்துக்கொண்டு,

“விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். விடிவதாகத் தெரியவில்லை. விடிந்தாலுங்கூட தெரியப்போவது எதுவும் இல்லை. அதனால் விடிவதற்குள் விடியலைத் துரத்திக்கொண்டே வேகவேகமாக எழுந்துவிட்டேன். எனக்கும் விடியலின் முதற்காற்றுக்கும் நிறைய எதிர்மறை உண்டு. பெரும்பாலான மாற்றங்களை நான் விடிந்ததும் கேட்டு ஆச்சர்யத்துடன் எழுதிருந்திருக்கிறேன். பல சம்பவங்களை நான் சொல்ல முடியும். எல்லாம் நான் தூங்கிக்கொண்டிருந்த போது நிகழ்ந்தது. பகலில் கண்விழித்ததும் அதிர்ந்த குரலோடு செய்திகளை சடசடவென என்மீது பாய்ந்து பயமுறுத்தி இருக்கிறது. பல வெடிகுண்டு விபத்துகள், அணுஆயுதப் பிரயோகங்கள், திருட்டு, கொள்ளை, சுணாமி, புயல், பூகம்பம், காத்தரினா, வில்மா, ஆட்சிக்கலைப்பு, தலைவர்களின் மரணம், என் குழந்தையின் பிறப்பு..., எல்லாம், பெரும்பாலும் நான் தூங்கும்போது நிகழ்ந்து விடிந்ததும் செய்தியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் மிகவும் பயத்தில் தவித்திருக்கிறேன். ஒருவேளை “இந்த எல்லாமும்” எனக்கு நிகழ்ந்திருந்தால்! நான் தூங்கிக்கொண்டிருக்கும்போதே நிகழ்ந்திருந்தால்! எந்த பிரக்ஞையுமில்லாமல் இறந்துபோயிருப்பேன்!. அப்படியொரு நிலை இப்போது எனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் விடியலுக்குமுன் உங்கள் அனைவரையும் திரட்டியிருக்கிறேன். நான் பயப்படும் அந்த விபத்துகள் யாவும் உங்களுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களையும் என்னோடு இருக்க அழைத்திருக்கிறேன். நான் மட்டும் பிழைத்திருந்து என்ன பயன்? சொல்லுங்கள்.”

சிறிது மெளனம். பின் அவனே தொடர்கிறான்.

“அதனால்....”

சட்டென சுறுசுறுப்படைந்தவனாக,

“நம் எதிரியின் கொட்டத்தை அடக்கிடக் கிளம்பும் இந்த போர்ப் பயணத்தின் போது நிறைய அனுபவிக்க வேண்டிருக்கும். அனைத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன். எந்த துன்பத்தையும் நான் சந்திக்கத் தயாராகிவிட்டேன். எதையும் எதிர்கொள்ளத் துணிந்துவிட்டேன். இப்போது என் எல்லாமும் எதிரியினை நோக்கியே இருக்கிறது. அதனால் நான் பயணிக்கிறேன். என் மக்களாக, நீங்கள் என்னோடு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் நான் வெகுதொலைவில் எதிரியோடு போரிட்டுக்கொண்டிருக்கும் போது நீங்கள் இங்கே எந்த துன்பமும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள் என்று எப்படி மன அமைதியோடு இருக்க முடியும்? சொல்லுங்கள். என்னுடனே உங்களைக் கொண்டு சென்றால் ஒருவேளை என்னால் எதிர்க்க முடியாத எதிரியை நீங்கள் வெகுசுலபத்தில் வீழ்த்திடலாம் இல்லையா? அதனால் தான். உங்களை என்னால் எந்தவிதத்திலும் விட்டுச் செல்லமுடியாது. அப்படியொரு எண்ணமும் எனக்கு இல்லை. அதனால்தான் இந்தப் போரில் நான் அனைவரையும் அழைத்திருக்கிறேன்.

யாரும் நாட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அவர்கள் அனாதையாகிவிடுவார்கள். அனாதராவன ஒரு வாழ்க்கை வாழ்க்கையா? என்ன? யாராவது நகரில், தங்கியிருக்கிறார்களா? இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று. நான் சொல்லாமலேயே புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என் மக்கள். என் உலகம். ஆனால் எதிரி மட்டும் என்னை நம்ப மறுக்கிறான். எனக்கு எதிராக செயல்படுகிறான். எனக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உங்களுக்கும் எதிரிதானே. நம்முள் யாராவது அப்படி இருந்தாலும் கூட எதிரிதான் இல்லையா? அப்படியிருக்க எப்படி இங்கே வராமல் நகரத்தில் யார், தங்கியிருக்க முடியும்? அப்படியானால் எல்லோரும் இங்கே வந்து சேர்த்தாயிற்று. இல்லையா? சரி. இனி நாம் செய்ய வேண்டியதைப் பற்றிச் சொல்கிறேன்.?” எனச் சொல்லியவன் தன் பேச்சை சற்றே நிறுத்திவிட்டு மீண்டும் அனைவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு, அந்த பார்வைவிச்சில் தான் எதிர்பார்த்தது எல்லாமும் இருக்க, திருப்தி அடைந்தவனாக மீண்டும் தொடர்கிறான்.

“நான் அடையாளம் காட்டப்போகும் எதிரி எப்படிப்பட்டவன்? எங்கிருந்து என்னவிதமான தாக்குதலை நடத்துவான்? அது எனக்கேத் தெரியாது. அதனால் என்னை நீங்கள் கவனமாகப் பின்தொடருங்கள். என்னையே கவனியுங்கள். நான் எந்த பாதையில் செல்கிறேனோ, எப்படிச் செல்கிறேனோ அப்படியே என்னைத் தொடருங்கள். என்ன?....”

என தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தவன்..., தன் பேச்சை உண்மையாகக் கேட்கிறார்களா? கேட்டதை மனதுள் வைத்து அலசுகிறார்களா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ள இன்னும் அழுத்தமாக அவர்களை உற்றுப் பார்க்கிறான். ஒவ்வொருவராக அவனது பார்வை கடந்து செல்கிறது. அனைவரும் அவனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவன் சொல்வதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பார்வையும் உடலும் தவிர அனைவரது எண்ணமும் எங்கெங்கோ அலைந்துகொண்டிருந்தது. சாம்பல் புகையாக அந்த இருள் வனாந்திரத்தில் அவர்கள் கழுகுபோல் இறகை அகண்டு விரித்து பறந்துகொண்டே இருக்கிறார்கள் ஒருவித விநோத சப்தங்களைக் கொடுத்துக்கொண்டே.

“என்ன சொல்கிறார்கள்? ஏதாவது சொல்கிறார்களா?. ஏதோ சொல்வதுபோல் இருக்கிறது?. கீழே உடல் மேலே மனம். இங்கிருந்து அங்கே எப்படிச் சென்றார்கள். நான் அவர்களை அண்ட முடியவில்லையே. நான் மட்டும் இங்கே கீழே இருக்கிறேன். எல்லோரும் மேலே. எப்படி?”

குழம்பியவனாக மேலும் கீழும் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் மேலே ஆயிரமாயிரமான கழுகுகள் போல் புகையாக பறந்துகொண்டிருந்த அனைத்தும் மெல்ல கரைந்து ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய பெரிய புகைக்கழுகாளாகி பின் அதுவும் கரைந்து மிகப்பெரிய கழுகாகி இறுதியில் அந்த இருள்வானில் ஒரேயொரு கழுகு மட்டும் அடர்ந்த புகையால் ஆனதுபோல் தோன்றி அசையாமல் அப்படியே இருந்தது வெகுநேரம். பின் மெல்ல அதுவும் கரைந்து வானம் இருண்டது. வைத்தக்கண் வாங்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்த ரிமிந்தகன் கழுகுப்புகை கரைந்ததும் மெல்ல கணமேறிப்போன தன் கண்களை கீழே தன்னோடு தன்னைச் சுற்றி சூழ்ந்திருக்கும் மக்களைக் காண கொண்டுவந்தான்.

இந்த முறை அவனால் எல்லோரையும் புதுவகையில் பார்க்க முடிந்தது. புதிய பரிமாணத்தில் அவர்களைப் பற்றியான புரிதல் அவனுள் விதையுண்டது. அவர்களுக்கென்று ஒரு தனியிடம் அவனுள் தயாரானதை உணர்ந்தான். கூடவே, அவர்கள் இப்படித் தன்னை ஆக்கிரமிப்பதையும் எதிர்த்துக்கொண்டே. என்ன செய்வது? அவர்கள் வெற்றி கண்டபின். அவர்களுக்கு ‘அடிபணிய வேண்டிய சூழ்நிலையில் அடிபணிவது போன்ற பாவனையையாவது காட்டியாகவேண்டும்’ என்ற அரசியற் சூத்திரத்தைப் பயன்படுத்தினான் இப்படியாக,

“நான் எதிரியை அடையாளம் காட்டினது அவனை நாம் உடனே கொன்றுவிட அல்ல. நீங்கள் யோசித்து யோசித்து முடிவெடுத்து எதைச் செய்யலாம் என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்வோம். என்ன? அவசரப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நாம் உலகையே ஆண்டுகொண்டிருப்பவர்கள். உலகம் நம் கட்டளைக்காகக் காத்திருக்கின்ற இந்த கணத்தில் நாம் நம்முள், அதாவது நமது உலகுள் எங்கோ ஒளிந்துகொண்டு நம்மை அழிக்கத் திட்டம் போட்டிருப்பவனை வெகு சுலபத்தில் அழித்துவிடலாம். என்ன? சரிதானே. அதுவரையிலும் நீங்கள் என்னைத் தொடரலாம் தானே?”

மக்கள் அனைவருக்கும் ரிமிந்தகனின் இந்த திடீர்திடீர் மனமாற்றம் வேடிக்கையாக இருந்தாலும் அவன் மீதான நம்பிக்கை, ஒரு துளி அதிகமாகியிருந்ததைக் காணமுடிந்தது.

2.

ரிமிந்தகன் அவர்களது நம்பிக்கையைப் பெற்றுவிட்ட சந்தோசத்தில், பாதத்தை மெல்ல நகரத்திற்கு எதிராக அதாவது நகரைவிட்டு வெளியேறும் பாதையை நோக்கி எடுத்து வைத்தான். முதல் அடி. அவனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் தத்தமது முதல் அடியை வெளியேறுவதற்காக எடுத்து வைத்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமது முதல் அடியை ரசித்தனர். பயணம் தொடங்கிற்று.

செல்ல வேண்டிய பாதை ரிமிந்தகனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மற்றவர்களுக்கு ரிமிந்தகனே பாதை. அவனை அவர்கள் தொடர்கிறார்கள். அவன் மீது நடந்தார்கள். கப்பிக் கற்களில் கடகடத்து ஓடும் வண்டிகள் போல. சிவனேனென்று கிடக்கும் பாதையல்ல அவன். சும்மா வெகுகாலம் வந்துவந்து போகும் வண்டிகளுக்கு முதுகைக் கொடுத்து தேய்ந்துகொண்டிருக்கும் கப்பிக் கற்களல்ல ரிமிந்தகன். ஆனால் பாதை. மாயப் பாதை. நடக்க நடக்க விரிந்துகொண்டே இருக்கும் பாதை. நீண்டுகொண்டே இருக்கும் பாதை. அந்தப் பாதை கற்களால் ஆனதல்ல. அவனது எண்ணங்களால் ஆனது. பாதை நிஜத்தில் முள்ளும் பள்ளமும், சில இடங்களில் பாறைகளும் நிறைந்த ஒன்றுதான். அதெல்லாம் மக்களுக்குத் தெரியாது. ஏனெனில் அவர்கள் கண்களுக்கு ரிமிந்தகன் மட்டுமே தென்படுவதால். ரிமிந்தகப் பாதை இருளிலும், குருடர்களுக்கு விளக்காய் இருக்கும். அவனது மக்கள் அவனைப் போலவே... அவனது பாதையைப் போலவே, மாயமக்கள். ஒருகணம் அவனை நினைத்து உருகுவர் இன்னொரு கணத்தில் அவனுக்கு எதிராக ஏதாவது கிடைத்துவிட்டால் உடனே அவனுக்கு எதிராக செயல்படத் துடிப்பவர்கள். இது அவனுக்குத் தெரிந்ததால் தான் அவர்களுக்கான பாதையை அவன் வகுத்து அதற்குள்ளாகவே தட்டித் தட்டி வாத்து மேய்ப்பவன் போல் இந்தக் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறான்.

நேரம் வரும். அப்போது அவன் அவர்களின் தீர்மானத்திற்கு எதிராகச் செயல்பட முடியாமல் போகும். அப்போது அவர்களுக்கு அடிபணிந்து அவர்களின் தீர்ப்புக்கு தலைகுனிந்து தூக்கிலும் தொங்க நேரிடலாம். இதுவும் அவனுக்குத் தெரியும். முன்னே சொன்னதுபோல் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துதான் அவர்களை ஓட்டிக்கொண்டிருக்கிறான்......

அவர்களது பயணம் சலிப்பில்லாமல், வலியில்லாமல், போய்க்கொண்டே இருந்தது. அவர்களுக்கு எந்த ஞாபகமும் இல்லை. எந்த யோசனையும் இல்லை. வெறுமனே ரிமிந்தகனின் கவர்ச்சியான பேச்சிற்கு அடிபணிந்து அவனைத் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவுதான். இந்த போதை அவர்களை வெகுநேரம் இப்படியே வைத்துக் கொண்டது, விடியும் வரை.

விடிந்ததும் எல்லாம் வெளிச்சத்திற்கு அடிமையானது. அவர்களும்தான். வெளிச்சத்தில் ஒருவரையொருவர் பார்க்கநேரிட்டது. ஒரு மாபெரும் குழுவாக எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தார்கள். இதுவரையிலான பயணம் அவர்களுக்கு தூக்கத்தில் நடப்பதுபோன்றே இருந்தது. விடிந்தபின் எல்லாவற்றையும் பார்த்தார்கள். கூட்டத்தின் எண்ணிக்கை மிக அதிகம். அதிகமாகத்தானே இருக்கும்? நாடே வசிப்பிடத்தினை விட்டு மன்னனின் கட்டளைக்கு இணங்கி எல்லாமும் ஒரே பாதையில் பயணிக்க நேர்ந்தால்...... எறும்புக்கூட்டம் போல.... வானில் கூட்டங்கூட்டமாக இரவில் பறக்குமே வெள்ளைப் பறவைகள் அதுபோல.... அவர்கள் நீண்ட ஒரு பெரிய வரிசையாகப் போய்க்கொண்டே இருந்தார்கள். அந்த வரிசையின் ஆரம்பம் எது? முடிவு எது? என்பதை அறிய முடியாவண்ணம்.... ஒருவேளை அடிமுடி தேடல் போல யாராலும் அந்த வரிசையின் தொடக்கத்தையும் முடிவையும் காணமுடியாமல் போகலாம். அப்படியொரு நீண்ட வரிசை.

‘ரிமிந்தகன் எங்கே?’ என்று யாரும் தேடவில்லை. அனைவரும் அவர்களுக்கு “தம்முன் செல்பவர் ரிமிந்தகனோடு தொடர்புடையவர்.... அவருக்கு ரிமிந்தகன் சொல்லியிருக்கிறான். இப்படி வா.. அப்படிப் போ.. வலதுபுறமாகத் திரும்பு... இடது புறமாகத் திரும்பு.... என...” என்று நம்பி முன்னால் செல்பவனை ரிமிந்தகனாவே நம்பி, போய்க்கொண்டே இருந்தார்கள். அதனால் தான் இந்தப் பயணம் எங்கும் தடைபடாமல், உடையாமல், சிதையாமல், தொய்வுறாமல் போய்கொண்டே இருந்தது.

போய்க்கொண்டே இருந்த அந்த கூட்டம் மணிக்கணக்காக நடந்து நடந்து எப்படி நாட்கணக்கைத் தாண்டி, வாரக்கணக்கையும் தாண்டி, வருடக்கணக்கைத் தொட்டது என்று யாருக்கும் தெரியாது. எல்லோரது உடலமைப்பிலும் மாறுதல் ஏற்பட்டிருந்தது. தாடி வளர்ந்து மீசை வளர்ந்து உடைகள் அழுக்காகி, கந்தலாகி, பின் நூலாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் இப்போது, அப்போது இருந்ததுபோல் இல்லை. ஆனால் இந்த மாற்றமெல்லாம் வெளிப்புற மாற்றங்களே அன்றி அக மாற்றங்களாக எதுவும் நிகழவில்லை. ஏனெனில் அவர்கள் சிந்திக்கவே இல்லை. சதா நடந்துகொண்டே இருந்தார்களே ஒழிய, தாம் எங்கே செல்கிறோம் என்பதை குருட்டாம்போக்கில் ஒரு மயக்க நிலைப் புரிதலில் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு சென்றார்களே ஒழிய, பிணங்கள் நடந்து சென்றால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் அவர்கள் அனைவரும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

இது அவர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான் முதலாம் உலகப்போருக்கு முன்பே உலகப்போருக்கெல்லாம் மேலான பாதிப்புகளைத் தந்த பல பெரிய பெரிய போர்களை அவர்கள் வம்சவம்சமாக அனுபவித்து வந்தவர்கள் தானே. பிணங்களைத் தாண்டிச் சென்று சுள்ளி பொறுக்கி சோறாக்கித் திண்றவர்கள் தானே. அவர்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமில்லைதான். இருந்தாலும். வலி ‘தனக்கு’ என்று ஏற்பட்டுவிட்டதென்றால் ‘குய்யோ முய்யோ’வென்று அலறத்தானே செய்வார்கள். அதுதான் இப்போது இன்னும் சற்று நேரத்தில் நிகழப்போகிறது. அப்போது வெகுதூரத்திலிருந்து பறையொலி கேட்கிறது.

நடப்பவர்கள் நடக்கிறோம் என்பதை, அதைக் கேட்டதும் உணர்ந்தார்கள். கால்களை உணர்ந்தார்கள். பாதையில் தொப்தொப்பென்று கால்கள் தானாக பதிந்து பதிந்து நகர்ந்துகொண்டே இருந்தது, நிற்கலாம் என்று அவர்கள் நினைத்தும். பறையொலி வெகு அருகில் வருவதுபோல் கேட்டது. ஆனால் அவர்கள் நடந்துகொண்டே தான் இருந்தார்கள். நிச்சயமாக நின்றாகவேண்டும் என்று மனதில் சொல்லிக்கொண்டாலும். பறையொலி அவர்களுக்கு வெகு அருகே கேட்டது. உடனே நிற்கவேண்டும் என்று காலை கெட்டியாக இழுத்துப்பிடிக்க குனிந்தார்கள், குனியமுடியவில்லை. கால்கள் போய்க்கொண்டே இருந்தது. பறையொலி அவர்களைக் கடந்து அவர்களுக்கு பின்னே உள்ளவர்களுக்கு வெகுஅருகே கேட்பது போன்ற உணர்வைப் பெற்றார்கள். பின் ஒலி மெல்ல பின்வரிசைக்குச் சென்று அடங்கிப்போனது.

எல்லோரும் போனதும் வெறும் பாதையின் குறுக்கே வந்து அந்த பறையொலிக்கு காரணமான ரிமிந்தகன், முன்னே போய்க்கொண்டிருக்கும் கடைசி வரிசை மனிதர்களின் முதுகையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அதிர்வுக்கு அஞ்சி புதருக்குள் ஒளிந்த அரவம் அதிர்வு அடங்கியபின் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பிவந்து பார்ப்பதுபோல்.

-அரியநாச்சி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It