“என்ன இருந்தாலும் ஹெர்சிலியா பாவம் சார்.”

“ஆமா பாவம் தான். ஆனா வேற வழி இல்லியே.”

“எப்படி சார் அவளால அப்படி பண்ண முடிஞ்சது?”

“ஹெர்ஷிலியா என்னமா, நீயா இருந்தாக்கூட அப்படி தான் செஞ்சுருப்ப.”

“நானா? நான் என்ன நடந்தாலும் அப்படி செஞ்சுருக்க மாட்டேன் சார்.”

“இல்ல.. நீ கிடையாது எந்த பொண்ணாயிருந்தாலும் அப்படிதான் செஞ்சுருக்க முடியும். நீ பெண் அப்படிங்குற நிலையில இருந்து பாரு, அப்படிதான் செஞ்சுருப்ப. ஒரு பக்கம் அவ பிறந்து ஊரு அப்பா, அம்மா, சொந்தம், மக்கள். இன்னொரு பக்கம் அவளோட புது சொந்தம், ரோம், வாழ்க்கை. ஒருபக்கம் கையில இருக்குற நெல்லிக்கா, இன்னொரு பக்கம் என்னைக்கோ சாப்பிட்ட மாம்பழத்தோட அடிநாக்கு தித்திப்பு.”

“அவ அப்படி செய்யாமவிட்டிருந்தா என்ன சார் நடந்திருக்கும்?”

“அவ செய்யாம விட்டிருக்கமாட்டா. அவளோட பார்வையில ரோமும் சேபியனும் ஒண்ணுதான். அவ ரோம் மூலமா உருவாக்கப் போறது ஒரு புது நாகரீகத்த. அவ வெறும் ஹெர்சிலியா இல்ல, அவ அங்க நின்னது பெண்மையோட சாட்சியா. பிரபஞ்சத்தோட ஒரு துளியா. உயிரோட்டத்தோட ஒரு கீத்தா. ஒரு பொண்ணு பிறக்குறப்பையே சூல்காரிதான், கோடி உயிரை உதரத்துல சுமந்துக்கிட்டு தான் பிறக்குறா. ஹெர்சிலியா ஒரு பொண்ணு அது போதும், அப்படி செய்றதுக்கு. வேற காரணமே தேவையில்ல.

பெண். தேவி.தாட்சாயணி. ஜகத்காரணி.

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்

காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே! “

நீல சேலையில் ஆரஞ்சு ஜரிகை நூல் பிசிறினாற் போல் வானம் சிவந்து திரண்டு நின்றது. நீல சேலை ஆரஞ்சு ஜரிகை- கவிதாவின் முகூர்த்த சேலை.

“சந்தனம், எப்படி உன் பொண்ணு நீ சொன்ன சேலையவே எடுத்துக்கிட்டா?”

“அக்கா உன் பொண்ணு மாதிரி இல்ல என் பொண்ணு அவ அப்பா செல்லம்.”

ஹெர்சிலியா, ரோம், அபிராமி அந்தாதி, கவிதா என்று நினைவுகளுடன் பஸ் கோயில் நிறுத்தத்தை சேர்ந்தது. வீட்டிற்கு அணுக்கம் அடுத்த நிறுத்தம் தான். அங்கேயே இறங்கலாம் மூன்று ரூபாய் வித்தியாசம் இல்லையென்றால். சில நேரம் நான்கு ஐந்து வகுப்புகள் சேர்ந்தாற்போல் அமைகையில் அடுத்த நிறுத்தத்தில் இறங்குவது உண்டு, அந்த மூன்று ரூபாயை யாரும் கவனிப்பதில்லை.” என்ன சார் இந்த ஸ்டாப்லயே இறங்கிட்டீங்க?”, அவர்கள் பதில் எதிர்பார்ப்பவர்களல்லாதலால் பதில் சொல்வதில் அதிக சிரத்தை அவசியமில்லை.”சும்மா அப்படியே கோவில் பக்கமா..”

காமாட்சி; அம்மன், அம்மா.

நீறு பூசு மேனி, தலையறியா உன்மத்தம், கண்டத்தோடு உறவாடும் பாம்பு, ஆளைச் சூழும் எரி வீச்சம், சிவன். அழல் நிகர் மேனி, ஊறுகனி அதரம், சுழன்றாடும் மருள்விழி, பற்றுக்கொம்பிற்கு தவித்து காற்றில் ஆடும் கவுள்கேசம், அன்றலர் அரவிந்த வாசம், தேவி. எப்படியோ ஒரு இணை. இதுபோலும் பிரபஞ்சத்தின் துடி. அப்பா குடிகாரர், சூது, வீண்கோபம், பகை. அம்மா காமாட்சி, நிறை, நிறை, நிறை, நிறை. எப்படியோ ஒரு இணை. இதுபோலும் பிரபஞ்சத்தில் ஒரு துளி. சிவன் அண்டம் ரட்ஷிக்க, துடியாய் தேவி அவன் நயனம் மூடினாள். எரிதழல் ஈசன் அண்டம் மறக்க நிகழந்தன சில ஊழிகள். இறங்கினாள் தேவியும் அவ்விடம் விட்டு. போதைக் கணத்தில் அம்மா ஏதோ சொல்ல அப்பா செய்ததில் அம்மா அக்கா நான் நட்டாற்றில். காலங்கள் கடந்தன அம்மாவுடன், பின்பு மகள் கவிதாவுடன். இறங்கிய தேவி இயற்றிய தவம், வெள்ளம், மாரோடு அழுத்தி தழுவினால், வளைத் தழும்பும் முலைத் தழும்பும்.

நீறு பூசு மேனி நித்தம்
நீக்கமற கொண்ட பித்து
நெஞ்சோடு சுழன்று சுவடு
பதிக்கும் கரு நாகம்
சுழற்றி வீசும் மயான வீச்சம்
அவள் அறிவாள்.

நிலையின்றி ஆடும் கால்கள்
நேற்றைய குடியின் இன்றைய
கிரக்கம், இஸ்பேட் ராணி
கிளாவர் ஏஸ் என்றே முனகும்
கிறுக்கு.
அவள் அறிவாள்.

இமையவன் தாதை, இமைத்தால்
இயற்றிடும் சேனை இணையில்லா
வடிவு விரல் அசைவில் மூவுலகு
அவள் அறிவாள்.

அம்மா-
நிறை நிறை நிறை நிறை
அவள் அறிவாள்.

அழிப்பவன் நேத்திரம் துடியாய்
மூடினாள், அழிந்தது அண்டமும்
அதன் உள் உறையும் சைதன்னியமும்
அவள் அறிவாள்.

கோடி அண்டமும் நாதமும்
விந்தும் காலமும் கருத்தும்
வெளியும் பொருளும் அவள்
உதரத்துள்.
அவள் அறிவாள்.

செங்காந்தள் கொடி விரல் நீட்டி
சுவரோடு வேடிக்கை பல காட்டி
சிணுங்கல் மொழி பல பேசி
வலம்வரும் என் மகள்
அவள் அறிவாள்.

ஆகாயகங்கையது விரிசடையில் கொண்டான்
ஆலகாலமது நண்ணி மிடற்றில் கொண்டான்
ஆறுமது கரைமீறி மெய் தீண்டக் கொண்டான்
அபிராமி அவள் தழுவ முலைத் தழும்பும் கொண்டான்
ஆடாது ஆடி நின்று
அவனாடும் ஆட்டமெல்லாம் அவனடியார்
அழைப்பதேதோ திருவிளையாடல்.
நூல் பிடித்து ஆட்டுவிக்கும்
தேவி அவள் குறுநகைக்கோ
அவள் படைத்த ஈசனெல்லாம் உணர்வின்றி
ஆடும் ஆட்டமது திருவிளையாடல்!
அவள் அறிவாள்.

வெளி கேட்டின் அதே முகமன்னோடு, நுழைகையிலேயே தெரிந்தது கவிதாவின் வருகை.

“கவிதா வந்துருக்காளா?”

“ஆமா தூங்குறா.”

“மாப்பிள?”

“இல்ல அவ ஆட்டோல வந்தா.”

“என்ன சொன்னா?”

“அந்த பத்து லட்சம்தான்… அவங்க வீட்ல கேக்குறாங்கலாம்… மாப்பிள்ளைக்கு ப்ரோமோஷன் கிடைக்கனும்னா அவசியம் வேணுமாம்.”

“திடீர்னு கேட்டா என்ன செய்ய முடியும் இப்பதான் சின்னவனுக்கு சீட் கிடைச்சிருக்கு அவனுக்கு செலவு இருக்குல்ல..”

“...”

“கவிதா எப்படி இருக்கா?”

“நல்லாதான் இருக்கா”

“தம்பிக்கு செலவு இருக்கு இப்போ அவ்ளோ பணம் கொடுக்குறது கஷ்டம்னு சொன்னா அவளுக்கு தெரியும், அவ நம்ம வீட்டுப் பொண்ணு, அவ புரிஞ்சுக்கிட்டா போதும். அவ சந்தோசம்தான் முக்கியம். அவங்க ஏதாச்சும் நினச்சுகிட்டா நாம ஒன்னும் செய்ய முடியாது.”

போர்வை கடைசி மடிப்பு கலையாமல் பாதி போர்த்திக்கொண்டு கவிதா தூங்கிக் கொண்டிருந்தாள். பிறந்தகத்தில் தூங்கும்பொழுதுதான் கனவுகளில் மகள்கள் தங்களது பழைய வேர்களுடன் பிணைகிறார்கள். சிறகடிப்பில் தன்னிச்சையாக தப்பிய இறகொன்று மீண்டும் மிதந்து வந்து ஒட்டிக்கொள்ளும் தருணங்கள்.

அந்நியமான கொலுசு சத்தத்துடன் அவளது நடை எங்கோ கேட்டது. அவள் அம்மாவின் குரல் அடுத்த அறையிலிருந்து கேட்டது.

“கவிதா, வீட்ல ஏதாச்சும் சொன்னாங்களா?”

“அந்த பணத்த கொடுத்து தொலச்சா நான் நிம்மதியா இருப்பேன்ல.”

- சீரா

Pin It