“இதெல்லாம் மனுஷனுக்குள்ள கோடிக்கணக்கான வருசமா தலைமறைவா இருக்குற மிருகத்தோட வேலை சார்” என்ற மார்க்கண்டேயனின் குரல் என் காதில் விழுந்ததோ சிறகடிப்பின் அதிர்வுகளாகத்தான். இரைச்சலற்று இருந்தால் அவ்விடத்தில் பேசுவது கேட்கும் என்றொரு நியதியுமில்லை. இரைச்சலற்ற இமயமலையில் எனது மூன்று வயது மகன் அரைமணி நேரமாக அழுதது, கீழிறங்கிய பின் என் மனைவி சொன்னதால் தான் தெரிந்தது. வாழ்வின் சில தருணங்களிலே அவை வாய்க்கும். எல்லா புலன்களும் நெடுநேரம் முயன்று, தோற்றபின் ஒன்றாய் முயங்கும் தருணங்கள்; இமையம், இளையராஜா, அக்கார அடிசில் போன்ற தருணங்கள். சென்னையின் காலை ஏழரை மணி மின் இரயிலும் அப்படித்தான். சென்னை மின் இரயிலின் ஒரு பெட்டி எந்தவிதமான மருத்துவ, பொருளாதார, தத்துவ ஆய்விற்கும், அரசியல் கருத்துக்கணிப்பும் போதுமானது.

இரயிலின் தாளத்துடன் இசைந்து மெளனமாக பேசிக்கொண்டு போக அனைவருக்கும் ஏதோ இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இவற்றுக்கு இடையேயும் மார்க்கண்டேயன் பேசுவது எனக்கு கேட்கும். உண்மையில், பேசாவிடினும் எனக்கு கேட்கும். அவர் எனக்குள்ளிருந்து பேசத் தொடங்கி வெகுகாலம் ஆயிற்று. தொடக்கத்தில் இது ஏதோ அசாதாரண சக்தி, மற்றவர் பேசாமலே கேட்கிறதோ என்று பார்க்கையில் எல்லோர் பேசுவதும் மார்க்கண்டேயன் பேசுவதாக கேட்டதுடன் அப்பரிட்சை முடிந்தது. இவ்வளவிற்கும் மார்க்கண்டேயன் உறவோ, நட்போ இல்லை… வெறும் சகபயணி. ஒரு நாள் வில்லிவாக்கம் நடைமேடை வருவதற்கும் ரேஷன் அட்டை உறை விற்பவர் வருவதற்கும் சரியாக இருந்தது. பாக்கி நாணயத்தை பைக்குள் போடுவதற்கு அவகாசமின்றி குதிக்கையில் நாணயத்தின் சத்தம் எங்கோ கல்விழும் நீராய் கேட்டது. சற்று நேரத்தில் நடைபாதையில் “சார்” என்றதும் திரும்புகையில் மேல்மூச்சுடன் மார்க்கண்டேயன்.

“சார் பத்து ரூவா காய்ன் ட்ரைன்லயே விழுந்துருச்சு, இந்தாங்க”

“பத்து ரூவா தான சார் இதுக்காகவா?”

“சார் இது வெறும் காய்ன் இல்ல சார், இது அரசாங்கத்த நீங்க நம்புறதுக்கான ஆதாரம். இத நீங்க மறுத்தாலோ அவமதிச்சாலோ நீங்க அரசாங்கத்துக்கு எதிரா செயல்படறதா அர்த்தம்”

இதற்கு கேள்விதான் பதில் என்றாலும் வெறும் சிரிப்புடன் நாணயத்தை வாங்கிக் கொண்டேன்.

“நான் ஃபோர்ட் ஸ்டேஷன்ல தான் இறங்கணும். உங்களுக்காகத்தான் இங்க இறங்குனேன். பணம் அப்டிங்குறது லேசுல வந்தது இல்ல சார். இதுக்குப் பின்னாடி பல போராட்டம் இருந்துருக்கு, பொருள் முதல்வாதத்தோட அடிப்படையே இதான் சார். மார்க்ஸ் கண்டுபுடிச்சது என்ன?” என்று தொடங்கி ஃபோர்ட் நிலையம் போகும் அடுத்த இரயில் வரும்வரை ஒரு விரிவுரையை சுருக்கமாக நிகழ்த்திவிட்டுச் சென்றார்.

மறுநாள் ஒரு ஹாஸ்ய புன்னகையுடன் என் பக்கத்தில் அமர்ந்தவர்,

“சுந்தர ராமசாமி படிச்சதுண்டா சார்?”

பரிச்சயத்தின் எந்த ரேகையையும் என் முகத்தில் காணாது அவரே தொடங்கினார்

“அந்த நண்பன்

இன்றும் அன்றுபோல

துரதிருஷ்டவசமாக

நான் இல்லாதபோது

வந்திருக்கின்றான்" 

முழுவதையும் சொல்லி,

“அது என்னது சார் ‘எனக்கோ பெயர்கள் முக்கியம் முகங்கள் முக்கியம்’ ?

நான் ஒவ்வொரு முறை யோசிக்கும் போதும் ஒவ்வொரு பொருள்படுது”

“இந்த பூனையின் மியாவ் மியாவ்

வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து

வித்தியாசமானது” 

என்றவர் முடிக்கும் பொழுது ஓரளவு புரிந்த திருப்தியுடன் சிரித்தேன். அன்று முதல் இரயிலின் தாளத்துடன் இசைந்த பயணம் அவரது துள்ளல்களோடு நிகழ்ந்தது.

மற்றொருநாள் ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தவுடன்

“ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்

ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்

காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்

தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.”

“பாத்தீங்களா சார் கம்பன் மத்ததுக்கெல்லாம் அட்வெர்ப் வச்சி எழுதிட்டு ஈந்தே கடந்தானுக்கு மட்டும் ஒன்னும் எழுதல” என்றார்.

இப்படி ஒவ்வொரு நாளும் சுந்தர ராமசாமி, கம்பர், மார்க்ஸ், காம்யூஸ், ஹெகல் என்று புரிந்தும் புரியாமலும் கழியும் பயணம். இரயில் இரைச்சலுடன் ஒன்றுவதுடன் வார்த்தைகளுடன் ஒன்றுவது அவ்வளவாக களைப்பூட்டாது.

எனது பதிலுக்காக வெகுநேரம் அவர் காத்திருந்திருக்க வேண்டும், இப்போது நேரே கைகாட்டி மீண்டும் “இதெல்லாம் மனுஷனுக்குள்ள கோடிக்கணக்கான வருசமா தலைமறைவா இருக்குற மிருகத்தோட வேலை சார்” என்றார்.

அவர் எதை சுட்டிக்காட்டினார் என்பதை யூகித்திருந்தேன். இரயில் பெட்டியின் சுவற்றில் ‘தொடர்புக்கு 9434*0**2*’ என்று கரித்துண்டால் கிறுக்கியிருந்தது. அஷ்டகோணலான அதன் இருப்பே அதை எழுதியவரின் அவசர நிலைக்கு சாட்சி.

“சார் உண்மையிலேயே இதை எழுதுனவன்தான் சொல்லின் செல்வன். ஒரே வார்த்தைல மொத்த விஷயத்தையும் சொல்லிட்டான் பாருங்க” என்றபடியே பிளேடுடன் அதை நோக்கிச் சென்றார். மார்க்கண்டேயனின் நிவதிகளுள் ஒன்று இப்படி எழுதியவற்றை அழிப்பது, மற்றொன்று அதற்கொரு தத்துவார்த்த விரிவுரை அளிப்பது.

"கண்ட கல்மிசை காகுத்தான் கழல் துகள் கதுவ…

பண்டை வண்ணமாய் நின்றனள்” 

“அகலிகை கல்லா கிடந்ததுனா என்ன சார்? உணர்வில்லாம மனுஷிங்குற மதிப்பில்லாம இருந்தது. அதான் கல்லா கிடக்குறது. இன்னைக்கு இந்த கரித்துண்டால எழுதி கல்லா போட்டு வச்சிருக்காங்க. இந்த கரித்துண்டுக்குப் பின்னால ரத்தமும் சதையுமா ஒரு மனுஷி இருப்பா சார். அவளுக்கும் வேள வந்தா பசிக்கும், அடிச்சா வலிக்கும், அழுக வரும். அப்படி உணர்வோட இருக்குறவள இப்படி ஜடமா எழுதி வச்சுருக்காங்க. யாரு மேலயோ இருக்குற வெறுப்பை இப்படி புரிஞ்சுக்காம வெளிப்படுத்துறாங்க. இப்ப நாம நாய்னு ஒருத்தரத் திட்டுனா நம்ம நாயையும் சேத்துல திட்டுறோம். நாய் நம்மளப் பொருத்தவர கீழானது. அதான் நாய்னு திட்டுறோம். இத கிறுக்குனவனுக்கு பிராஸ்டிடியூட்னா கேவலமானவங்க. நம்ம வலிய போய் ஒன்னும் செய்ய முடியாது. மிதிலைக்குப் போறப்போ அகலிகை விமோசனம் நடந்த மாதிரி நம்மளும் போற போக்குல ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்மளால கல்ல மாத்த முடிலனாலும் ராமன் வரவரைக்கும் இந்திரன் கண்ணுல இருந்து மறச்சுவைக்கலாம்ல”

மார்க்கண்டேயன் சொல்வதும் சரிதான், இப்படி எழுதப்படுகின்றவற்றுள் பெரும்பாலானவை வட்டிக்கடை எண்ணாகவோ, வங்கிக் கடன் வசூலிப்பவர் எண்ணாகவோ சில சமயங்களில் சக மாணவியின் எண்ணாகவோ இருக்கும். ஆனால் இந்த ‘தொடர்புக்கு 9434*0**2*’ அக்மார்க் என்பது எனக்குத் தெரியும்.

******

அரசினர் விடுமுறை அன்றுகூட அலுவலகம் சென்று வந்த சலிப்பும் காலியான இரயில் பெட்டியின் நிச்சலனமும் கரைய, இந்த ‘தொடர்புக்கு 9434*0**2*’ அகஸ்மாத்தாக கண்ணில் பட்டது. அழைத்தேன்.

“ஹலோ”

மானிடக் குரலை எதிர்பார்த்திருப்பினும் அதில் யுவதியின் குரல் அந்நியம்தான். பொருளின்றி “ஹலோ” என்றேன்.

“யாரு”

“நான் நான் வந்து…”

“சுப்பிரமணியன் ஆறாவது தெரு பல்லாவரம் அடகு கடைக்கு எய்த்த மாடி வீடு”

இதற்கு மேல் சம்பாஷிக்க ஏதுமில்லை, சென்றேன். அவ்வீடு தனது வாழ்நாளின் கடைசி நாட்களை தன் செதில்களை நீரில் உதிர்த்தவாறே நீந்தும் முதிய ஆமையாய் நின்றிருந்தது. காம்பௌண்ட் சுவற்றில் தூக்கிட நிறுத்தினார்போல் பூந்தொட்டி ஆவளி. அவற்றின் நிணநீர் வழிந்து தரை தொடாவண்ணம் உறிஞ்சிய சுவர். ஏகபத்தினி விரதனாய் விரகத்துடன் படிக்கட்டுகள். கதவுகள் திறந்தே இருந்தன.

“உள்ள வாங்க”

யூகித்திருந்த வயதிருக்கும், இல்லை அப்படி தெரிந்திருக்க வேண்டும். வலப்பக்க வகிட்டிலிருந்து சரிந்து கருவளையத்தின் ரேகையுடன் சங்கமிக்கும் உதிர்கேசம்; அசைவுகளில் ஜிமிக்கி இடையில் சிக்கும் கவுள் கேசம் வலிக்காது என்று நம்ப மனம் மறுத்தது. பாகனுடன் சிறுஊடலாய் தும்பியசைக்கும் ஜடையின் அலைகள். நாற்காலி கவ்விக்கொள்ள ஒருவித நெருடலுடன் அமர்ந்தேன். அவளிடம் இதுவரை கடந்துவந்த பெண்களின் சாயலைத் தேடுகையில், ஏதோ ஒரு விழாவில் சந்திக்க நேர்ந்த உறவுப் பெண்ணின் சாயல்தான் தெரிந்தது. மறுநொடியே அது எவ்வளவு அபத்தம் என்று தோன்றிற்று. நெடுநேரமாக நகரும் மௌனத்தை விளக்க வேறு ஏதாவதொன்றை சொல்லி இருக்கலாம். ஆனால் அச்சமயத்தில் நினைவில் வந்ததோ மார்க்கண்டேயன் சொன்ன சுந்தர ராமசாமிதான்.

“சுந்தர ராமசாமி படிச்சதுண்டா?” இதைக் கேட்கும் முன்னரே அவளுக்குத் தெரியாது, அப்பொழுது நண்பன் கவிதையையும் மியாவ் மியாவ் கவிதையையும் சொல்லலாம் என்று தயாரானேன்.

“தெரியும் சார் படிச்சிருக்கேன் ரொம்ப பிடிக்கும். ஜே.ஜே. சில குறிப்புகள் மாதிரி தமிழ்ல இன்னொரு நாவல் வரவே முடியாது”

மார்க்கண்டேயன் ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றி சொல்லாதது ஏனென்று தெரியவில்லை. ஜே.ஜே. யாரென்றும் தெரியவில்லை. சுந்தர ராமசாமியே தெரியாதபோது ஜே.ஜே. பரிச்சயம் இல்லையென்றால் பாதகமொன்றுமில்லை. ஆயினும் பொதுவாக

“ம்.. நாவல் பிரபலமான நாவல்தான், ஆனால் கொஞ்சம் சுமாரான நாவல். கரு நல்ல கருதான், எழுதுன விதம் அவ்வளவா தோதுபடல. ஏதோ இருக்குனு சொல்லலாம். எனக்கு அவரோட கவிதைகள் தான் புடிக்கும்” என்று ஒருவழியாக மடைமாற்றி நண்பன் கவிதையையும் மியாவ் மியாவ் கவிதையையும் சொல்லி முடித்தேன்.

“பிரசாதம் சிறுகதை படிச்சதுண்டா சார்”

மார்க்கண்டேயன் இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.

“ம்.. ஆனா இன்னொரு கதை இருக்குமே பேர்கூட ஏதோ ....”

“கிடாரி சார்”

“ஆமா ஆமா அந்த கதை தான். அதான் இலக்கிய செவ்வியல் தரத்தோட இருக்கும்”

‘இலக்கிய செவ்வியல் தரம்’ மார்க்கண்டேயன் நிதம் சொல்லும் வார்த்தை. அர்த்தம் கேட்டுக்கொண்டதில்லை. பேச்சு அச்சிறுந்து மார்க்கண்டேயனின் நினைவுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாய் ரேழிக்கு கொண்டு வந்தேன்.

நகுலன், வள்ளுவன், கம்பன், மார்க்ஸ், எங்கல்ஸ் என்று நான் கடைவிரிக்க ஒவ்வொன்றுடனும் அவளுக்கு ஏற்கனவே பரிச்சயம் இருந்தது.

“நகுலன பத்தி நீங்க சொல்றதும் ஜெயமோகன் சொல்றதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு சார்”

“ ‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

 அதனின் அதனின் இலன்’ இத விட பெரிய பிலாஸபி உலகத்துல வேற என்ன சார் இருக்க முடியும்”

“கம்பனப் பத்தி பேசனும்னா டி.கே.சி மாதிரி ஒரு ஆளாலதான் முடியும்னு சொல்லுவாங்கா, இப்போ இலங்கை ஜெயராஜ் ரொம்ப நல்லா பேசுறாரு சார்”

“நீங்க என்னதான் சொன்னாலும் ஜென்னியும் எங்கல்சும் இல்லாமா மார்க்ஸ் இவ்வளவு பெரிய ஆளா வந்துருக்க முடியாது. திறமையான ஆள் சார், ஆனா உலகத்துல வாழறதுக்கு உலகத்தோடு கொஞ்சம் உருண்டு பிரண்டாதான் உண்டு”

அவள் சொன்னதில் பல மார்கண்டேயனின் விரிவுரையில் இல்லாததால், அவையெல்லாம் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதென்று சமாதானம் அடைந்தேன். அவளுக்குத் தெரியாத ஒன்று சோபென்ஹவர், ஒருவேளை உச்சரிப்பு பிழையோ என்று மீண்டும் சொன்னேன், தெரியவில்லை என்று ஸ்திரமானதும் தொடங்கினேன். இதில் சிக்கல் என்னவெனில் மார்க்கண்டேயன் சொன்னபோதே வில், ரெப்பிரசென்டேசன், சப்ஜெக்ட், ஆப்ஜெக்ட் என்றெல்லாம் புரியாதபடி பேசினார். நினைவில்லை, நானே எனது சோபென்ஹவரை உருவாக்கி முடித்தேன். பலகாலம் பாடம் சொல்லிக்கிட்டு அரங்கேற்றம் முடித்தாற்போல் இருந்தது.

நெடுநேரம் மௌனத்திற்குப் பின்,

“எங்க அம்மா சினிமால ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சார். கூட்டத்துல முன்வரிசைல நிக்க வப்பாங்க, எப்பயாச்சும் டயலாக் கொடுப்பாங்க. இறந்து நாலு மாசம் ஆச்சு. அப்பா இல்ல”

இதற்கு ஒன்றும் சொல்ல முடியாது என்று அவளே நினைத்து,

“எனக்கும் சினிமால சான்ஸ் கிடைச்சுடும் சார், முயற்சி பன்னிட்டு இருக்கேன். இன்னும் ஆறு மாசமோ ஒரு வருசமோதான்”

கைக்கடிகாரத்தை பார்த்தவாறே “அப்போ நான் வரேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன். வெளிச்சம் பசி தீர்ந்து தாமசத்தோடு ஒழுகிற்று.

*********

மாலை இரயிலில் வரும்போது காலையில் மார்க்கண்டேயன் சொன்ன அகலிகை சங்கதி மூளையின் இடைகழியில் எங்கோ உருண்டு கொண்டிருந்தது. மார்க்கண்டேயன் பிளேடால் சுரண்டிய ‘தொடர்புக்கு 9434*0**2*’ மிஞ்சிய சில சுவடுகள் மூலம் அதன் முந்தைய இருப்பை சுமந்து நின்றது. தாம்பரம் நிலையத்தில் அவள் இரயிலில் ஏறினாள். வேலை சலிப்பில் ஏதும் பேசும்நிலையில் நானில்லை. சில நேரங்களில் யோசித்துப் பார்க்கையில் அவளின்றி வேறு யாராவதாக இருந்திருந்தால் பேசியிருக்கக்கூடும் என்றொரு எண்ணம் வருவதுண்டு. சிரிக்க மட்டும் செய்தேன், மெல்லிய தலையசைப்புடன் சிரித்தாள். குரோம்பேட்டில் திரளாக வந்து ஏறியவர்களினால் அவளை கவனிக்கவில்லை. பல்லாவரத்தில் அந்தத் திரள் இறங்கியவுடன் அந்த ‘தொடர்புக்கு 9434*0**2*’ மீண்டும் புனரமைத்ததுபோல் கரித்துண்டால் எழுதியிருந்தது. நடைமேடையைப் பார்க்கையில் அவள் நின்றிந்தாள். பார்த்ததும் டாட்டா காட்டும் விதமாக கையசைத்தாள், கருப்பாக கரித்துண்டு கறை போல ஏதோ ஒட்டிக் கொண்டிருந்தது.

- சீரா

Pin It