படுக்கையறைக்குப் போன பவித்திரனுக்கு மனக்குழப்பமாகவே இருந்தது. எதுவும் பிடிபடவில்லை. மனைவி அகல்யா அழகாகத்தான் இருந்தாள். இரண்டு பெண் குழந்தைகள். பார்க்கவிக்கு எட்டு வயதும், நிஷாவிற்கு மூன்று வயதும் நிரம்பியிருந்தன. அகல்யாவின் அருகில் படுத்துக் கொள்ளும் பவித்திரனின் மனதில் ஒவ்வொரு இரவிலும் தேவிகா வந்து விடுகிறாள். அவளும் அருகில் படுத்துக் கொள்வதைப்போல இருந்தது. சமயங்களில் தன் அருகில் படுத்துக் கொண்டிருக்கும் தனது மனைவியை, தேவிகாவை போலவே நினைத்து விடுகிறான். தூக்கத்திற்கு முன்பான நேரங்களில் அகல்யா பேசிக்கொண்டே இருப்பாள். மனதில் ஓடவிட்டுக் கொண்டிருக்கும் தேவிகாவை நினைத்துக் கொண்டே அகல்யாவிற்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பான். செல்பேசியிலும், சந்திப்பின்போதிலும் தேவிகாவுடனான உரையாடல்களை தனக்குள்ளே பேசிப் பார்த்துக் கொள்வான். குழந்தைகள் தூங்கிவிட்டிருந்த பின்னிரவின் பொழுதுகளில், அகல்யாவுடனான அந்தரங்க நேரங்களின்போதுகூட அவள் நினைவுகளோடுதான் பவித்திரனுக்கு இரவின் சம்பவங்கள் நடந்தேறின. நாற்பது வயதினைக் கடந்திருந்த பவித்திரனுக்கு அகல்யாவுடனான படுக்கையில் இருந்த நெருக்கம் குறைந்திருந்த சமயத்தில்தான், தேவிகாவுடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது.

தேவிகாவுடனான உரையாடலின்போது புணர்ச்சியின் நெடி கமழும் வார்த்தைளை பவித்திரன் பேசுவான். தேவிகா கொல்லென சிரிப்பாள். வார்த்தைகளைப் பழகும் குழந்தையினைப்போல மென்மையாக தேவிகா அவற்றை உச்சரிப்பதையும், அதற்கு சமமான அவளது வெட்கம் கலந்த சிரிப்பும் அவனது நினைவுக்கு வரும். மனது துள்ளிக் குதிக்கும். மனைவி செல்போனில் அழைக்கும்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே பேசும் அவன், தேவிகாவிடம் மாலை நேரத்திலான உரையாடல்களில் சில மணி நேரங்களாவது அவனால் செலவிட முடியாமல் இருக்க முடிந்ததில்லை. தேவிகாவிற்கு சொல்லும்படியான முகவரி ஒன்றும் கிடையாது. அதுதான் பவித்திரனுக்கு அவளோடு நெருங்கிப் போவதற்கு வசதியாகி விட்டிருந்தது.

பவித்திரன் தன்னிச்சையாக படுக்கையறைக்குச் செல்வதில்லை. தேவிகாவின் நினைப்பு வந்துவிடும். தனது உடலுக்கு அடியிலும், சமயத்தில் தனது உடலுக்கு மேலும் கிடக்கும் அகல்யாவை தேவிகாதான் கிடப்பதாக நினைத்துக் கொள்வான். அகல்யாவுடனான ஆர்கசத்தின் நேரங்களில் கண்களை மூடிக்கொண்டு, தேவிகாவுடனான உரையாடல்களையும், அவளின் ஆடைகளற்ற உடலையும் மனதில் காட்சிகளாக வைத்துக் கொள்வான். சம்பாசனைகள் திவ்யமாய் நடந்தேறும்வரை கண்களை திறப்பதில்லை. அகல்யா இயல்பாக கண்களை மூடிக் கொள்வதும்கூட பவித்திரனுக்கு சாதகமாகத்தான் இருந்தது. தனது மூடியிருக்கும் கண்களைத் திறந்து அகல்யாவை பார்ப்பதில்லை. குற்றத்தினை மனதில் பூட்டி வைத்துக் கொண்டிருக்கும் பவித்திரனை, அகல்யாவினைத் திறந்து பார்ப்பதற்கு அவனது கண்கள் அனுமதிப்பதில்லை. படுக்கையில் பவித்திரன் கண்களை மூடியே கிடந்தான்.

திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்குப் பிறகும் பவித்திரன் தன்மீது இத்தனை பிரியங்களுடன் இருப்பதாக அகல்யாவிற்கு பவித்திரனின்மீது ஆசை வந்தபடியே இருந்தது. “முன்னவிட இப்போதாங் நீங்க பர்பெக்ட்” என்பாள் அகல்யா. அருகில் இழுத்து முத்தம் வைப்பாள். பவித்திரன் அருகில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பான். சமயத்தில் எழுந்து அமர்ந்து கொள்வான். பார்க்கவியும் நிஷாவும் உதட்டினை சுழித்துக் கொண்டு கிடப்பார்கள். ஒதுங்கிக் கிடக்கும் அவர்களின் ஆடையினை சரிசெய்துவிட்டு, அவர்களுக்கு முத்தமிடுவான். அன்பின் உந்துதலில் கொடுக்கப்பட்ட முத்தம் என்பதாக நினைத்துக்கொண்டு, அகல்யா அவனை இழுத்து தன்மீது சாய்த்துக் கொள்வாள். பவித்திரன் தனக்கானதையும் பெற்றுக் கொள்வான். அகல்யாவின் முத்தம், பவித்திரனுக்கு முதுகுத்தண்டின் கூட்டு நரம்புகளுக்குள் பனிக்கட்டிகள் உருகி தண்ணீராய் ஓடுவதாக இருக்கும்.

குழந்தைகளுக்கும், அகல்யாவிற்கும் பவித்திரன் கொடுக்கும் முத்தம், அன்பினால் கொடுக்கப்பட்டது இல்லை. பயத்தில்கூட முத்தம் கொடுக்கப்பட்டது என்பதை அவனுக்கு மட்மே தெரிந்திருந்தது. பயத்திற்கான தொடக்கப்புள்ளி தெரிந்திருந்தாலும், அதன் முகவரியினை அவனால் அடையாளம் காண முடியவில்லை. சமயங்களில் முகவரிகளின் முழுவடிவங்கள், விபச்சாரிகளின் உரையாடல்களைப் போன்றதுதான். ஒரு மாலைப்பொழுதில் மதுக்கடையில் அறிமுகமாகும் புதிய நண்பனைப்போல குற்றம் அவனோடு பேசிக் கொண்டே இருந்தது. குற்றம் தன்னோடு சமர் செய்வதற்கு எப்பொழுதும் ஒருவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறது. பவித்திரனின் மனதில் இருந்து முத்தம் பயந்து வெளியேறியது. குற்றத்திற்குள் முத்தம் தன்னை எப்பொழுதும் ஒளித்து வைத்திருக்க முடிவதில்லை. அவை ஆர்கசத்தின் இறுதியில் இந்திரியத்தினைப் போல வெளியேறி விடுகிறது. கட்டுப்படுத்த முடிவதில்லை. குற்றத்தின் வெள்ளோட்டமாக முத்தம் வெளியே வந்தவுடன், குற்றம் குரூரமாக தன்னை காட்சிப்படுத்தவும் தவறுவதில்லை.

தேவிகாவை நினைத்துக் கொண்டதும் அவளது நினைப்பு கொடுக்கும் கிளர்ச்சியில்தான், அகல்யாவுடனான சம்பவத்தினை தொடங்கியிருக்கிறான். பாவம் அகல்யா. அவளுக்கு எதுவும் தெரிவதில்லை. திருமணத்திற்குப் பிறகான பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் தன்மீது பவித்திரன் இத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்பதாக நினைத்துக் கொண்டாள். “உங்கள மாதிரி யாரு இருப்பா? இப்போ இருக்குற ஆம்பளங்கல்லாம் எவ்வளவு மோசமா இருக்குறாங்க. கொஞ்சம் பல்லக் காட்டிட்டாப் போதுங், வழிச்சலா வழியுவானுங்க, நான் ரொம்ப லக்கிங்க” ஒருக்களித்து படுத்துக் கொண்டிருக்கும் அவனை அருகில் இழுத்து முத்தம் வைப்பாள். பவித்திரனுக்குள் இருக்கும் குற்றம், அடுப்பில் பழுக்க காய்ச்சப்பட்ட கம்பி அடிவயிற்றுக்கு அடியில் சுட்டெரித்தது.

பவித்திரன் தேவிகாவுடன் ஓரல் செக்ஸில் ஒருமுறைதான் ஈடுபட்டிருந்தான். ஒரே ஒருமுறை மட்டும்தான். ஓரல் செக்ஸ் அப்படி ஒன்றும் குற்றமாகிவிடாது. கொஞ்சம் சிறிய தவறுதானே என்பதாக அவனது நினைப்பு. அவை தேவிகாவுடனான பெரிய நெருக்கத்தினை ஏற்படுத்தி விடாது என்றும், தன் மனைவிக்கு அதன்மூலம் பெரிய குற்றத்தினை செய்யப் போவதில்லை என்பதாகவும் பவித்திரனின் மனது கணக்கு போட்டிருந்தது. அதன்பிறகு தேவிகாவுடன் அதற்கான சந்தர்பங்கள் மலிவாகக் கிடைத்திருந்தும், அதனை தவிர்த்தே வந்திருந்தான். குற்றத்தின் நுழைவுவாயில் எப்பொழுதும் ஆழமான கடற்பரப்புத் தண்ணீரில் மறைந்திருக்கும் பனிப்பாறையின் முனையாகத்தான் இருக்கின்றன. சமயங்களில் கோட்டைச் சுவற்றுக்குள் தயக்கமின்றி நுழைந்துவிடும் எறும்புகள் போலத்தான் குற்றமும். தேவிகாவுடனான உறவு நடந்தேறுவதுவரை அது நடந்தேறுவதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு, அது முடிந்தபின், அது நடந்தேறியதின் குற்றம் அவனை சூழ்ந்து கொண்டது. குற்றத்தின் வெளிப்பாடுகூட அவனுக்கு முத்தமாகத்தான் இருந்தது. பவித்திரனின் குற்றமும், முதலில் தேவிகாவிடமிருந்து முத்தத்தில்தான் தொடங்கியதுதான். வெறுமை அவனை பற்றத் தொடங்கியது. அவனைச் சுற்றி நடக்கும் எதுவும் அவனது விருப்பத்தின் தொடரியாக நடந்தேறவில்லை.

அகல்யாவுடன் எப்பொழுதாவது நடந்தேறும் படுக்கைகூட அதன் இடைவெளியினை குறைத்துக் கொண்டதாக இருந்தது. தேவிகாவுடனான ஓரல் செக்ஸிற்குப் பிறகு அகல்யாவிடனுமான படுக்கையும் எப்படி தன் மனதிற்கு குற்றமாகிப் போனது? பவித்திரனுக்கு உரையாடல்கள் மனதோடு தொடர்ந்தபடியே இருந்தன. பவித்திரனின் உடற்குறி குற்றத்தின் திறவுகோலாக உருமாற்றம் அடைந்து கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குற்றம் அவனை முழுமையாகப் போர்த்தி அவனுக்குள்ளிருந்து புல்லுருவிகளாக முளைத்து வந்தன. அவனுள் செறிந்திருக்கும் ஒவ்வொன்றின் மீதும், அவை நீலம் பாய்ச்சத் தொடங்கின.

பகல் நேரத்தில் அவனுக்கு தேவிகாவின் நினைப்பு அவ்வளவாக இல்லாமல் போனாலும், இரவில் தேவிகா நினைப்பில் வந்துவிடுகிறாள். மனதிற்குள் அவளைப் பற்றிய உரையாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சமயத்தில் செய்து கொண்டிருக்கும் வேலையின் ஊடாக பவித்திரன் புன்னகைப்பதினை அகல்யா பார்த்துவிடுவாள்.

 “என்ன சிரிப்பு?” என்பாள்.

சமயோஜிதமாக அகல்யாவிடனுனான நெருக்கமான பொழுதுகளை சொல்லி வைப்பான். அகல்யா முத்தம் வைத்துவிட்டுப் போவாள். அகல்யா தான் வைத்திருக்கும் முத்தத்தினை கொடுப்பதின் மூலமாக அவன் முழ்கிக் கிடக்கும் குற்றத்தின் அடர்த்தியான பாதையொன்றில் அவனது கைகளைப் பற்றி அழைத்துக் கொண்டு செல்வதைப் போலவே இருந்தது. நிகழ்தேறிய குற்றம், பெரும் விலங்காக அவனது உடலை இரையாகக் கவ்வி அவற்றின் குட்டிகளுக்கு அவனை பங்கிட்டு அளிப்பதை போலத்தான் இருந்தது. மனதில் இருந்ததை பவித்திரன் தனது கண்களால் பார்க்க முடிகிறது. அவை காட்சிகளாகவும், நிகழ்வுகளாவும் நிதமும் அவனைச் சுற்றியே நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தன.

முத்தம் குற்றத்தின் தொடக்கப் புள்ளியாகி விடுகிறது. பவித்திரனுக்கு அதனை செய்முறையாக நிகழ்த்திப் பார்த்திருந்த ஆய்வுக்கூடங்களாகத்தான் தேவிகாவின் உடல் இருந்திருக்கிறது. அகல்யாவின் அருகில் படுத்துக் கொண்டு அவளுக்கான பங்கீட்டு முத்தங்களை கொடுக்கும்போதும், பவித்திரனின் குற்றம் விரிவாக்கமாகிக் கொண்டே இருந்தது. குற்றம் பாவித்திருந்த உடம்போடு சேரும் முத்தமும், குற்றமாக உருமாறி விடுகிறது. பவித்திரனின் குற்றத்திற்கு அகல்யா கொடுக்க இருக்கும் விலை எப்படிப்பட்டதாக இருக்கும்? பவித்திரனுக்குத் தெரியவில்லை. உதடுகள் தளிர்களாய் துடிக்க, அவை வெளிப்படுகின்றன. அகல்யாவிற்கும் முத்தம் வைத்து விட்டான். தேவிகாவுடனான உறவிற்குப் பின்பாக, அகல்யாவிற்கு முத்தம் வைக்கும்போது இப்பொழுதெல்லாம் அவனது மண்டைக்குள் அகல்யா, தேவிகா மற்றும் குழந்தைகள் என எல்லோரும் சூழ்ந்து கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெறுவதும் கொடுப்பதும் யார்மீது நிகழ்த்தப்படுகிறது என அவனுக்குத் தெரிவதில்லை. பெருங்குழப்பம். செய்திருந்த குற்றம் அவனது மனதினை, சாமான்களை அப்புறப்படுத்தி காலி செய்யப்பட்ட வெற்று வீடாக்கி வைத்திருந்தது.

நிஷாவும் பார்க்கவியும் ஓடிவந்து அப்பா என கட்டியணைப்பார்கள். அப்பா என்ற இருவரின் சொற்கள்தான் அவனுக்குள் இருக்கும் குற்றத்தின் மீது அமிலம் தொய்ந்து சுழற்றப்படும் சாட்டைகளாக இருந்தன. சுளீர் என இருந்தது. அகல்யாவிற்கு முன்பாக அவர்களுக்கு பிரியத்துடன் முத்தம் கொடுப்பதாக நடித்தான். குழந்தைகளுக்கும், அகல்யாவிற்கும் முத்தம் முத்தமாகத்தான் இருந்தது. ஆனால் பவித்திரனுக்கு மட்டும் அப்படியாக இல்லை.

பவித்திரனின் உடல் குற்றமாகவே மாறிவிட்டிருந்தது. அவனது குற்றம் அவன் செய்யும் அனைத்து செயல்பாடுகளிலும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவனது மனதிலிருந்து தேவிகா அகன்று போவதாகத் தெரியவில்லை. தான் நேசித்திருந்த அத்தனை விஷயங்களிலும் தேவிகாவின் நினைப்பு புகுந்து கொண்டது. குற்றத்தின் கால்கள் மரங்களின் பெரும் வேர்களாக அவனது மனதை அகழ்ந்து கொண்டே போனது. அமைதியாகவே இருந்தான். அகல்யாவின் கண்களுக்கு முன்னால், குற்றம் அகழ்ந்து கொண்டிருக்கும் பவித்திரனின் உடலும் மனதும் ஆர்ப்பரிப்பு இல்லாமல் பக்குவமடைந்ததாகத் தெரிந்தது. குற்றம்கூட நேர்மையின் எதிர்நிலை குறுக்குவெட்டுதான். பவித்திரனுக்கு அதனை ஊடுருவிப் பார்க்கும் ஆயுதமாக தேவிகா புகுந்து விட்டிருந்தாள்.

அகல்யா முத்தம் கொடுத்து வைத்தாள். அவைகூட தேவிகாவிற்கு தான் வைத்து விடுவதைப் போலவே இருந்தது. தேவிகாவின் நினைப்பில் இருந்து சன்னமாய் விலகி இருக்கும் சமயங்களில், அகல்யா கொடுக்கும் முத்தம் தேவிகாவுடனான குற்றத்தில் அவனை மீண்டும் கிடத்திப் போட்டு விடுகிறது. மனதின் பெருவெளியெங்கும் வெக்கையின் நீர்மமாக ததும்பிக் கொண்டிருக்கும் குற்றமும், அகல்யா கொடுக்கும் முத்தமும், படுக்கையில் துவண்டுபோகும் உடலும் பவித்திரனின் குற்றத்தினைப் போர்த்தி வைக்கும் போர்வைகளாக இருந்தன. அவனால் திறந்து பார்க்க முடியவில்லை. அகல்யாவும், குழந்தைகளும் அவனை சூழ்ந்து கொண்டு இருக்கும் நெருக்கம் நடந்தேறியிருந்த குற்றத்திற்கான தண்டனையாக மாறி விட்டிருந்தது. குற்றம் ஒவ்வொன்றிலும் தன்னை உருமாற்றிக் கொண்டே இருந்தது.

இரவு, தள்ளுவண்டிகாரனைப் போல தன்னை இழுத்துக் கொண்டு போனது. அறையில் மெல்லிய வெளிச்சம் தழுதழுத்தது. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் முள்கம்பியினை தலையில் சுற்றிக் கொண்டிருந்த யேசுவின் படத்தினை பவித்திரன் பார்த்துக் கொண்டே இருந்தான். யேசுவின் கன்னத்தில் பதிந்திருந்த முத்தக் கரையின் நிறம், முதன்முதலாக தேவிகா உதடுகளை சுழித்து தன் கன்னத்தில் கொடுத்து ஒட்டிவிட்டிருந்த உதட்டுச் சாயத்தினைப் போலவே இருந்தது. தொட்டு தடவிப் பார்த்தான். எந்த நிறமும் விரல்களில் ஒட்டிக்கொண்டு வரவில்லை. ஆனாலும் அவனது விரல்களில் தேவிகாவுடனான ஓரல் செக்ஸின்போது அவள் தடவி வைத்திருந்த லாக்மி உதட்டுச்சாயத்தின் வாசனை கமழ்ந்து வந்தது. குற்றத்திற்கும் வாசனை உண்டு. அவை எந்த சோப்புத் துண்டுகளினாலும் கழுவி சுத்தம் செய்துவிட முடிவதில்லை. பூக்களைப் போன்றிருக்கும் அவை, தங்களின் இதழ்களை விரித்து கமழ்த்தும் சுகந்தத்தால், பசித்திருக்கும் வண்டுகளை அழைத்து விடுகின்றன. பவித்திரன்கூட ஒருவகையில் வண்டுதான். யேசுவின் முகம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. ஆனாலும் பவித்திரன் முள்கம்பி சுற்றப்பட்டிருந்த யேசுவின் தலையினை பார்த்துக் கொண்டேதான் இருந்தான். பவித்திரனின் மனதில் வண்டுகளின் ரீங்காரம் உஸ்…ஸ்…ஸ்ஸ்ஸ்… என்றபடியே சுழன்றடித்தது.

ஜுடாஸிடம் முத்தம் பெற்றுக் கொண்ட யேசு என்ன குற்றம் செய்திருப்பான்? அன்பின் விளைச்சலில் செய்யப்படும் அறுவடைதான் முத்தம். அறுவடையினை மண்டியில் கிடக்கும் மூட்டைகளாய் பிடித்துப் போட்ட யேசுவிற்கு மட்டும், பதம் தவறிப்போனது எப்படி? பதம் தவறிப் போன அவனது குற்ற உடம்பில் நல்விளைச்சலுக்காகத்தான் முள்கம்பி வேலியினை தலையில் மாட்டி வைத்திருந்தான். பவித்திரனின் மனதில் குற்றம் சுதந்திரமாய் பேசிக்கொண்டிருந்தது. தேவாலயங்களில் யேசுவின் காதுகளில் அமைதியாக நிகழ்த்தப்படும் ‘பாவமன்னிப்பும்’ குற்றத்தின் தொடரிக்கான சுதந்திர பிரச்சாரம்தான். பவித்திரன் மனதோடு பேசிக்கொண்டே இருந்தான்.

இரவையும், குற்றத்ததையும் பவித்திரனால் பிரிக்க முடியவில்லை. இரவும் குற்றமும் ஒன்றைப் போலவே இருந்தன. உடலை போர்த்தியிருக்கும் இரவைப் போலவே, குற்றமும் அவனது மனதை போர்த்தியிருந்தது. நிறத்தாலும் இருண்டும் ஒன்றாகத்தான் இருந்தன. பவித்திரன் தேவிகாவை முதன்முதலில் சந்தித்ததும் ஒரு மாலைக்குப் பிந்தைய ஒற்றை நட்சத்திரம்கூட முளைக்காக இரவில்தான். இரண்டும் அதற்காக நேரத்தினை எடுத்துக் கொண்டு உடலையும் மனதையும் ஆட்கொண்டு விடுகிறது. இரவும் குற்றமும் அவனை செய்முறைகளுக்கான ஆய்வுகூடங்களாக மாற்றிக் கொண்டிருந்தன.

அகல்யா படுக்கையில் நிகழ்ந்தேறிய சம்பாஷனைகளை பவித்திரனோடு பேசிக் கொண்டே இருந்தாள். குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். நிஷாவும், பார்க்கவியும் ஆளுக்கு ஒருபுறமாக படுத்திருந்தார்கள். பவித்திரனின் அருகில் படுத்திருக்கும் பார்க்கவி, அவனை உதைத்துக் கொண்டே இருந்தாள். அகல்யாவின் அருகில் படுத்திருந்த நிஷா, படுக்கையினை நனைத்து விட்டிருந்தாள். சில்லிட்டுப்போனது. அகல்யா நனைந்த விரிப்பினை மட்டும் எடுத்து அப்புறப்படுத்தினாள். மெல்லிய வெளிச்சத்தில் அலமாரியினைத் திறந்த அகல்யா, கையில் கிடைத்த தனது இரண்டு நைட்டிகளை ஈரத்தில் மடித்தபடி விரித்துப் போட்டாள்.

அகல்யாவின் பக்கமும் ஈரம் பட்டிருந்தது. பவித்திரனின் பக்கம் அகல்யாவின் கால்கள் பொத்பொத்தென விழுந்துகொண்டே இருந்தன. இரவு நகர்ந்து கொண்டே இருந்தது. எப்பொழுதும் போலான இரவாக இல்லாமல், பார்க்கவி கால்களை நீட்டுவதும், மடக்கென குறுக்குவதுமாகவே இருந்தாள். அவனுக்கு கண்கள் சொடுக்குவதாக இருக்கும் சமயத்தில், பார்க்கவி கால்களை மடக்கி பொதக்கென உதை கொடுப்பாள். சீரான இடைவெளியில் பவித்திரனின்மீது பொத் பொத்தென விழும் அவளது கால்களுக்கும் மொழி தெரிந்திருந்தது.

பின்னிரவு கடந்து, பொழுது முளைத்து வரும் சமயமாக இருக்கும். பவித்திரனின் கண்கள் அப்பொழுதுதான் அயர்ந்திருந்தன. நன்றாக தூங்கி விட்டிருந்து எழுந்த அகல்யா, மல்லாந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பவித்திரனின் இடுப்பில் இருந்த ஆடை விலகிக் கிடந்ததை சரிசெய்து விட்டாள். அகல்யா படுக்கை அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த நைட் லேம்பினை அணைத்துவிட்டு கதவைத் திறந்து வெளியே போனதும், பார்க்கவி பவித்திரனின் உயிர்நிலையின்மீது தனது குதிக்காலை தூக்கிப் போட்டாள். தேள்கடி நெறியோடுவதைப்போல அடிவயிறு கலங்கி, வலி மண்டைக்குள் பாய்ந்து ஒடியது. திடுமென எழுந்து ‘ட’ வடிவத்தில் உட்கார்ந்தவன், தன்மீது கிடந்த பார்க்கவியின் வலதுகாலை எடுத்து படுக்கையில் வைத்துவிட்டு, தூக்கம் தேங்கியிருந்த கண்களோடு காலண்டரில் இருந்த யேசுவைப் பார்த்தான். அவரின் தலையில் வண்டுகளின் தொடரி முட்கிரீடமாக சுற்றியிருப்பதாகத் தெரிந்தது. பவித்திரனின் மீது மீண்டும் தொப்பென வந்து விழுந்த பார்க்கவியின் மற்றொரு காலுக்கு எதுவும் குற்றமாகத் தெரியவில்லை.

- க.மூர்த்தி

Pin It